பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 01, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’

புத்தகவாசிப்பு_2021 ‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’

தலைப்பு –‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’

வகை – கதைகள்

எழுத்து –தஸ்தயெவ்ஸ்கி

தமிழாக்கம் – எம்.ஏ.சுசீலா

வெளியீடு – நற்றிணை பதிப்பகம்

புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)

 

 


ரஷ்ய இலக்கியத்தில் மட்டுமின்றி உலக இலக்கியத்தின் மீது இன்றளவும் ஆதிக்கம்  செலுத்தும்  எழுத்தாளர்  பியோதர்-தஸ்தயெவ்ஸ்கி. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை  வாசிப்பவர்கள் நிச்சயம் தத்தம் வாசிப்பு தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள்.  அவரின்  அறிமுகங்கள் வழி நாம் அறிந்துக்கொள்வது அதிகம். எஸ்.ராவும் சரி ஜெயமோகனும் சரி தஸ்தயெவ்ஸ்கி பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்றார்கள். அவர்களின் அறிமுகங்களின் வழி தமிழ் வாசகர்கள் மத்தியில் ரஷ்ய இலக்கியம் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றது.

இவர்கள் வழி அல்லாமல், தஸ்தயெவ்ஸ்கி எவ்வாறு அரைகுறையாக எனக்கு அறிமுகமானார் என்பதை நினைவுக்கூறுகின்றேன்.

அரசியல் காரணங்களால், சில நபர்கள் கைதாகின்றார்கள். அவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகின்றது. வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவரையும் சுடுகின்றார்கள். தன்னுடன் நிற்கவைத்திருக்கும் மனிதர்கள் ஒவ்வொருவராய் சுடப்படுவதை அந்த மனிதன் பார்க்கின்றான். அடுத்ததாய் சுட வேண்டிய மனிதனை நோக்கி துப்பாக்கி குறிவைக்கப்படுகின்றது. சாகப்போகின்ற மனிதனுக்கு வாழ்வில் எல்லாம் முடிந்ததாய் தோன்றுகின்றது. கடைசி நொடியில் அந்த மனிதனுக்கு விடுதலை கிடைக்கின்றது. அந்நொடி அந்த மனிதனின் வாழ்வை புரட்டிப்போடுகின்றது. பின்னாளில் உலக இலக்கியத்தில் தனக்கென்ற அடையாளத்தை அடைந்த தஸ்தயெவ்ஸ்கிதான் அந்த மனிதன்.

இப்படித்தான் ரொம்பவும் மேலோட்டமாக தெரிந்துக் கொண்டேன். அப்போதிருந்தே அவரின் எழுத்துகளை வாசிக்க தேடினேன். கண்ணுக்கு கிட்டியதெல்லாம் மிகவும் தடித்த புத்தகங்கள். அதோடு அதிக பணம் கொடுத்து வாங்கும் சூழலிலும் நான் இல்லை.  வாசிப்பு வேறு பக்கம் நகர்ந்துக் கொண்டே இருந்தது. அதன் பிறகு எஸ்.ராவின் கட்டுரைகளில் டால்ஸ்டாய் மற்றும் தஸ்தயெவ்ஸ்கி பற்றி அதிகம் தெரிந்துக் கொள்ளவும் அவர்களின் படைப்புகளைப் பற்றி புரிந்துக் கொள்ளவும் முடிந்தது.

அவர்களின் படைப்புகளை தேட ஆரம்பித்தேன். அதற்காக சேமிக்கவும் ஆரம்பித்தேன். முதலில் அவர்களின் கதைகளை வாசிக்கத்தொடங்கினேன். ஆனால் மனம் என்னவோ தஸ்தயொவ்ஸ்கி மீதே மையம் கொள்ளத் தொடங்கியது. அந்த மனிதனிடம் என்னமோ இருப்பதாக மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

அப்போதுதான் தஸ்தயொவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’  நாவலை வாசித்தேன். அதில் உள்ள காதல் முதலில் பிடிபடவில்லை என்றாலும் அதற்கான இடைவெளியைக் கொடுத்த போது புரிந்துக்கொள்ள முடிந்தது. 1821-ல் பிறந்த தஸ்தயெவ்ஸ்கிக்கு இவ்வாண்டு 200ம் ஆண்டு பிறந்த நாள் வருவதை கனலி.காம் இணைய பக்கம் மூலம் அறிந்தேன். மேலும் அவரது படைப்புகளை தேட அச்செய்தி உற்சாகத்தைக் கொடுத்தது.

அப்படித்தான் ‘தஸ்தயெவ்ஸ்கி கதைகள்’ புத்தகத்தை எடுத்தேன். எம்.ஏ.சுசீலா அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இப்புத்தகம் மட்டுமல்லாது அவர், தஸ்தயெவ்ஸ்கியின் முக்கியமான இதர படைப்புகளை தமிழாக்கம் செய்துள்ளதை அறிந்து ஒவ்வொன்றையும் சேகரித்து வருகின்றேன்.

இனி வாசிப்பு அனுபவத்திற்கு செல்வோம். இந்த புத்தகத்தில் மூன்று கதைகள் உள்ளன. அவை,

 

1.    கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்

2.    நேர்மையான திருடன்

3.    ஒரு மெல்லிய ஜீவன்

 

முதல் கதை, ‘கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்’ அளவில் சிறியது. ஆனால் அது இன்றளவும் நாம் சந்திக்கும் சிக்கலை சுற்றியே வருகின்றது. பெண்ணின் எதிர்காலத்தை யார் நிர்ணயிக்கின்றார்கள். அவளின் எதிர்காலம் என்பது யாரை சார்ந்துள்ளது என்கிற அக கேள்வியைக் கொடுக்கின்ற கதை. பெற்றோர் கௌரவத்திற்காகவும் பணத்திற்காகவும் மகளை பணக்காரனுக்கு திருமணம் செய்துக் கொடுப்பதுதான் கதை. கதை சொல்லப்பட்ட விதம் அத்தனை நுணுக்கமாக இருந்தது. கதாப்பாத்திரங்களின் வடிவமைக்கு அவர்களின் குணநலன்களை காட்டிவிடுகின்றது. இறுதியாக அந்த பெண்ணின் வாழ்க்கையை நினைத்து நம்மை வருந்தமடையும் செய்கின்றது.

இரண்டாவது கதை, ‘நேர்மையான திருடன்.’ கதையின் தலைப்பு நீதி கதைகளுக்கு ஏற்றார் போல அமைந்திருப்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இன்று வாசிக்கையில்; வேறொரு பரிணாமத்தைக் கொடுக்கின்றது. ஒருவன் திருடனாக இருக்கும் போது நேர்மையாக இருக்க முடியுமா? ஒருவன் நேர்மையை கடைபிடித்தால் அவனால் திருட முடியுமா? என்கிற கேள்விகளுடந்தான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். கடைசி வரி வரை அந்த கேள்வி பின் தொடர்ந்து வரவும் செய்தது. எந்த குற்றவாளியும் முழுமையான குற்றவாளியாக இருப்பதில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டுதான் வாசித்து முடித்தேன். குடிகாரனாக அறிமுகம் ஆகி திருடனாக தெரிய வரும் மனிதனுக்கு நம்மை அழவும் செய்துவிடுகின்றார் ஆசிரியர்.

மூன்றாவது கதை, ‘ஒரு மெல்லிய ஜீவன்’ . புத்தகத்தில் சற்றே நீள்மான கதை. நீளமான கதை என சொல்வதைக் காட்டிலும் ஒரு மனிதன் நம்முடன் செய்யும் அக உரையாடல் என்பது பொருத்தமாக இருக்கும். நம்மையும் பல இடங்களில் குற்றவுணர்ச்சிக்கு தள்ளிவிடும் உரையாடல் அது. இக்கதையைப் பற்றி மேலும் பேசினால் என்னுள் இருக்கும் இன்னொரு நான் என்னும் குற்றவுணர்ச்சிகளின் உரு வெளிவந்துவிடும் என்கிற அச்சத்தையும்  அதனால் என்ன நானும் மனிதன் தானே, தவறுகள் செய்வதும் பின் வருந்துவதும் அத்தனை பெரிய குற்றமல்ல என சொல்லிக்கொள்ளவும் செய்கின்றேன்.

மனதின் இருளை கண்டுகொள்ளும் அதே சமயம் அதனை வெளிச்சம் நோக்கி அனுப்பி வைக்கும் தூதுவன் போலவே தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துகளைப்  பார்க்கிறேன்.  மனம் எப்படி சமாளிக்கும் எப்படியெல்லாம் சமாதானம் சொல்லிக்கொள்ளும் எங்கே பிடிபடும் என யாரும் கேள்வி கேட்டால், இந்தா பிடி என ‘ஒரு மெல்லிய ஜீவன்’ என்கிற கதையை கொடுத்துவிடுவேன்.

தஸ்தயெவ்ஸ்கியை வாசிக்க நினைப்பவர்கள் இந்த புத்தகத்தில் இருந்து தொடங்கலாம். மொழியாக்கம் செய்தது போல அல்லாமல், தஸ்தயெவ்ஸ்கி தமிழிலேயே எழுதியது போல சிரத்தை எடுத்து மொழியாக்கம் செய்துள்ளார் எம்.ஏ.சுசிலா. அவருக்கு நன்றியும் அன்பும்.


 #தயாஜி

#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்