பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

சனி, 12 டிசம்பர், 2015

குமட்டியாகி சிதறுங்கள் அல்லது புத்தனாகி சிரியுங்கள்
   குமட்டிக்கா என்றதும் வீட்டம்மா கொஞ்சம் அசூயையாகப் பார்த்தாள். ஒருவேளை அதை குமட்டிப்பழம் அல்லது குமிட்டிக்கா என சொல்லியிருந்தால் புரிந்திருக்குமோ என்னமோ? இயல்பாகவே எனது குரலில் ஒரு சுளீர் ஒரு பளீர் இருக்கும். பொது இடங்களில் பேசும் போது யாருக்கும் காது வலிக்கிறதோ இல்லையோ வீட்டம்மா சொல்லும் முதல் வார்த்தை ’சவுண்டை பாரேன்’. வழக்கமான அப்பாவி சிரிப்பை சிரித்துக் கொண்டேன். நாங்கல்லாம் இதை குமட்டிக்கா இல்லன்னா கொம்டிக்கான்னுதான் சொல்லுவோம். நீங்கதான் தர்பூசணின்னு பேரை மாத்தி வச்சி குழப்பறிங்க என்றேன். கெடா போன்ற இதர மாநிலங்களில் பயன்படுத்திய வார்த்தைகள் கோலாலும்பூர் போன்ற பட்டிணத்தில் இருப்பதில்லை. தவறி அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்திவிட்டால், கோலாலும்பூர்காரர்களுக்கு ஒருவித நமட்டுச்சிரிப்பு வருவதை தவிர்ப்பதிற்கில்லை. ஏதோ ஒன்றென நினைத்து ஒரு குமட்டிக்காவை வாங்கி வந்தேன்.

   இப்போது மாதிரி இல்லை, சிறு வயதில் வீட்டில் சீன படங்களைகூட பார்த்து பொழுதை போக்கி வந்தோம். அதிலும் குறிப்பாக எக்கி எக்கி குதித்து வரும் சீன பேய்கள் மீது அத்தனை ஆர்வம் இருந்தது. கூடவே சண்டைகள் நிறைந்த சீன படங்களும் அவ்வபோது வரும். 

    பெயர் நினைவில்லாத சீன படம் ஒன்றில் ஒரு காட்சி இவ்வாறு வந்தது; ஒரு அழகிய பெண் பல மாடி கட்டிடத்தின் கடைசி மாடியில் நின்று தற்கொலை செய்யப்போவதாய் சொல்கிறாள். கீழே தீயணைப்பு வீரர்கள் அவர்களின் வண்டிகள், காவல் துறையினர், வழக்கம் போல வேடிக்கை பார்க்க பொது மக்கள் என இருந்தார்கள். இதே காட்சியை இப்போது படமாக்கியிருந்தால், கூட்டத்தில் பாதி பேர் அந்த நேரடி காட்சியை கைபேசியில் படமாக்கிக் கொண்டிருப்பார்கள். 

    கீழே இருந்து ஒலிபெருக்கியில் அந்த பெண்ணுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் நபரின் பேச்சை அந்த பெண் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அந்த பெண் மேலிருந்து கத்துவதும் அழுது புலம்புவதும் கீழே யாருக்கும் விளங்கவில்லை. அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக தற்கொலையை உறுதி செய்யும் வகையில் கல்களை முன்னெடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

    சட்டென அவள் நின்றிருந்த இடத்தின் பக்கத்து ஜன்னல் கதவு திறந்து ஒருவன் எட்டி அவளை பார்த்தான். தன்னை அவனால் நிச்சயம் காப்பாற்ற முடியாது தான் சாகத்தான் போகிறேன் என்கிறாள். அவளை பார்த்து எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சயா, நீ சாகறதுன்னா செத்துப்போ உன்னை எதுக்கு நான் தடுக்கனும் என்கிறான். அவளுக்கு அது அதிர்ச்சியை கொடுக்கிறது. அதுவரை முன்னோக்கி அடிவைத்தவள் நிற்கிறாள். அவனையே பார்க்கிறாள்.

    அவன் கையில் குமட்டிப்பழம் இருக்கிறது. அவள் பார்க்கிறாள், அவன் அந்த குமட்டிப்பழத்தை நன்றாக துடைக்கிறான். சட்டென மாடியில் இருந்து போடுகின்றான். அது கீழே விழுந்து உடைந்து சிதறுகிறது. மீண்டும் தன்னிடம் இருக்கும் இன்னும் சில குமட்டிப்பழங்களை ஒவ்வொன்றாக கீழே போடுகின்றான். நான்காவது குமட்டிப்பழத்தை போடும்போது அவனை நிறுத்தச்சொல்கிறாள். இதென்ன பைத்தியக்காரத்தனம். குமட்டிப்பழங்கள் நல்லாத்தே இருக்கு எதுக்கு நாசப்படுத்தற என்கிறாள். அதற்கு அவன், நீயும்தான் இவ்வளவு அழகா இருக்க நீ மட்டும் குதிச்சி இப்படி அசிங்கமா சிதறி சாகலாமா என்கிறான். அவன் சொன்னதை கேட்டு அவள் அப்படியே உட்கார்ந்து அழுகிறாள். சில நொடிகளில் அவளின் பின்னால் இருக்கும் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்படுகின்றாள்.

    தானும் குமட்டிப்பழம் போல சிதறுவதை அந்த பெண் விரும்பவில்லை. தன் அழகை யாரும் கண்டுக்கொள்ளாததும், தொடர்ந்து உதாசினம் செய்யப்பட்டதும் அந்த அழகிய பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு காரணமாக இருக்கலாம்.  

      ஏன் தற்கொலை எண்ணங்கள் வருகின்றன என எப்போதாவது நாம் யோசித்திருக்கின்றோமா? அல்லது நாம் எப்போது தற்கொலைக்கு முயன்றிருக்கிறோம் என திரும்பி பார்த்திருக்கிறோமா? நான் முயன்றிருக்கிறேன். நான் ஏற்றுக்கொண்ட  தோல்வி எனது தற்கொலை மட்டும்தான்

      எல்லாம் கொஞ்சம் நேரத்தில் நடந்துவிட்டது போல இருந்தது. பார்த்திருந்த வேலையும் இல்லை, கையிலும் பத்து காசில்லை. நாலு பக்கங்களில் இருந்தும் வசைகளும் அறிவுரைகளும் வந்துக்கொண்டே இருந்தது. என்ன செய்வது ஏது செய்வது என எந்த வழியும் தெரியவில்லை. நம்பிக்கை கோட்டுக்கு அந்த பக்கம் ஒரு காலும் இந்த பக்கம் இன்னொரு காலும் இருந்தது. இவர்தான் காரணம், அவர்தான் காரணம் என நினைத்துப்பார்க்கும் நிலைமையில் நான் இல்லை. சாவது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்  என இரண்டு கால்களையும் கோட்டுக்கும் அந்த பக்கம் வைத்தேன்.  என்னென்ன வழிகளில் சாகலாம் என திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டேன். வீட்டம்மாவின் துப்பட்டாவை எடுத்து கழுத்தில் சுற்றினேன். கைகளால் முறுக்கினேன். இயல்பாகவே எனது தொண்டையில் குரல் வலை முட்டிக்கொண்டிருக்கும். ஆதாம் கடித்த ஆப்பிளின் ஒரு பகுதிதான் ஆண்களில் கழுத்தில் இப்படி முட்டிக்கொண்டிருக்கிறது என நண்பன் சொல்லியதை நம்பியிருந்தேன்.

       முடியவில்லை, இருமல் வந்ததே தவிர சாவு வரவில்லை. கத்திகளை ஒவ்வொன்றாக எடுத்த அதன் கூர்மையை பரிசோதித்தேன்.  எந்த கத்தியும் சரியாக வெட்டாது என தோன்றியது. காரை எடுத்துக் கொண்டு எதையாவது மோதி விபத்தில் சாகலாம் என்றால், காரை பழுது பார்க்கும் செலவும் இன்ன பிற அலைச்சலும் வீட்டம்மாவுக்கு வருமே என தயங்கினேன். தற்கொலை செய்ய வேண்டும் ஆனால் யாருக்கும் எந்த தொல்லையும் இருக்க கூடாது என ஒரே மூச்சில் சாகலாம் என மின்தூக்கியில் கடைசி மாடிக்கு சென்றேன். பால்கனியில் இருக்கும் தடுப்பு சுவர் என் நெஞ்சளவு இருந்தது. பக்கத்தில் இருந்த பூ ஜாடியை கொண்டு வந்து அதன் மேல் ஏறினேன். மேலிருந்து கீழே பார்க்க தலை சுத்த ஆரம்பித்தது. உயரம் என்றால் எனக்கு ஃபோபியா என்பதையே மறந்துவிட்டிருந்தேன். முன்னாடி விழாமல் பின்னாடி விழுந்துவிட்டேன். பூ ஜாடி உடைந்துவிட்டது.

      பூ ஜாடியின் சொந்தக்காரனுக்கு தெரிந்தால் அவனே கொன்றுவிடுவானே என படியில் வேகவேகமாக இறங்கினேன்.

     மூச்சு வாங்க ஓடி வந்ததால் மூச்சிச்ரைச்சல் அதிகமானது. இயல்பாகவே எனக்கு சுவாச பிரச்சனை இருக்கிறது. சுவாசிக்க சிரமமாகிவிட்டது. நெஞ்சில் வலியும் ஏற்பட்டது. அதிக சிரமப்பட்டே சுவாசித்தேன். வீட்டில் என் அறையில் வைத்திருந்த ஆஸ்துமா மருந்தை தேடி எடுத்து வாயில் அடித்துக் கொண்டேன். அப்படியே அசதியில் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொண்டேன். எதிரில் இருந்த மேஜையில் புத்தகங்களும் புத்தர் சிலையும் இருந்தது. உடலில் அதிர்வு இருந்தது. சுவாசிக்கும் போது உடம்பு மேலும் கீழும் வந்தது.

   அந்த தருணம் , புத்தனில் உதட்டில் சலனம் ஏற்பட்டது. சந்தன வண்ண புத்தன் உதட்டில் மட்டும் கொஞ்சம் சிவப்பை வைத்திருந்தான். அந்த சலனம் புத்தன் சிரிப்பதாய் காட்டியது நானும் சிரித்தேன். என் தற்கொலை முயற்சி தோல்வி கண்டதை நானும் புத்தனும் மாறிமாறி சிரித்து கொண்டாடினோம்.

     குமட்டிப்பழத்துக்கும் புத்தனின் சிவந்த இதழ் சிரிப்புக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்க முடியும். மன குழப்பத்தை , அதன் அழுத்தத்தை இரண்டுமே சட்டென ஒரு நொடியில் காணடித்திருக்கின்றன. நாம் சக மனிதர்களிடம் எத்தெனையெத்தனை நொடிகளை கடத்துகிறோம். என்றாவது நமது வார்த்தையோ நமது செயலோ ஒருவரின் மன அழுத்தத்தையாவது குறைத்திருக்கிறதா? ஒருவரின் மன குழப்பத்தையாவது மறக்கடித்திருக்கிறதா?

   ஆனால் யாராவது தற்கொலை என தெரிந்தால் முதலில் அனுதாபப்பட்டு பின்னர் வெட்டி நியாயங்களையும், வீர வசனங்களை பேசி நாம் கிழித்த கதைகளையும் வாழ்க்கையில் ஜெயித்த கதைகளையும் பேசி சுய திருப்தி அடைந்துக் கொள்கிறோம்.

   புத்தனை போல சிரிக்க வேண்டாம், அந்த சிதறிய குமட்டிப்பழம் செய்ததைக் கூடவா நம்மால் செய்ய முடியாமல் போய்விடும்.BE FRIENDERS எனும் இவ்வியக்கம் தற்கொலைகளை தடுக்க உதவுகிறது. இதனை சொடுக்கி தமிழிலும் படிக்கலாம். பலான அகப்பக்கங்களை தெரிந்தும் பகிர்ந்தும் வரும் நமக்கு இப்படியான அகப்பக்கங்களை படிக்கவும் பகிரவும் நேரமில்லாமல் இருக்காது. 

என்னைப்போல இன்னொருவனை  கப்பாற்றி, புத்தனாகி சிரியுங்கள். அன்புடன் தயாஜி.   

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்