பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 30, 2024

- கொடுக்கும் கணக்கு -

 


 

காலையில் நகைக்கடைக்கு சென்றிருந்தேன். என்னது நகைக்கடையா? விக்கற விலைவாசிக்கு நகை வாங்கும் அளவிற்கு பணம் இருக்கோ? அதுவும் மாசக்கடைசியில் எப்படி முடிகிறது? என நினைத்தீர்கள்தானே? பதற்றத்தைக் குறையுங்கள். நகைக்கடை பக்கத்தில்தான் வழக்கமாக செல்லும்  அடகுக்கடை இருக்கிறது.

            அடுத்த மாத முதல் வாரத்தில் சில நகைகளுக்கான கெடு முடிகிறது. அன்றைய தினம் எனக்கு வெளியில் செல்ல வேண்டிய வேலை இருப்பதால் சில நாட்களுக்கு முன்னமே அடகு வைத்திருக்கும் நகைகளுக்கான மாதாந்திர பணத்தைச் செலுத்த நினைத்தேன். நான் நினைத்தேன் என்பதைவிடவும் வீட்டம்மா நினைத்துவிட்டார். எனக்கு அதை மறுக்கும் அளவிற்கு துணிவில்லை .

            வீட்டு தேவைகளுக்கே பணம் பற்றாகுறையா இருக்கின்ற காலகட்டம்; இம்மாத கட்டணங்களையே இன்னும் முழுமையாக கட்ட முடியாத சூழலில் நகைகளுக்கான கட்டணத்தை எப்படி செலுத்துவது. ஏற்கனவே வைத்திருக்கும் நகைகளின் சீட்டை காட்டை மேற்கொண்டு அதில் பணத்தை கேட்கலாம். குறைத்த பட்சம் கெடு முடிகின்ற நகைக்காவது அதை கட்டிவிடலாம். அடுத்த ஆறு மாதங்களுக்கு சிக்கல் இல்லை. இருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களில் கெடு முடிய காத்திருக்கும் நகைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

            மாதக் கடைசி என்பதால் அடகுக்கடையில் ஆட்கள் அதிகம் இருந்தார்கள். நான்கு கவுண்டர்களிலும் பணியாளர்கள் மும்முரமாக இருந்தார்கள். அனைத்து முகங்களும் ஒரே அச்சில் வார்த்தது போல இருக்கும். பெரும்பாலும் சீனர்கள் நடத்தும் அடகுக்கடையை அவர்களின் குடும்பத்தினரே வேலை செய்பவர்களாக இருப்பார்கள். பணம் என்று வந்துவிட்டால் அவர்களைப் போல கறாரானவர்களைப் பார்க்க முடியாது.

            நாம் கொடுக்கும் நகைகளின் தரத்திற்கு அவர்கள் சொல்வதுதான் விலை. ஒரு நாள் தாமதமாக பணம் கட்ட வந்தாலும் வட்டியை அதிகப்படுத்திவிடுவார்கள். அதற்கு பயந்தே சில நட்களுக்கு முன்னதாகவே பணத்தைக் கட்டிவிடுவோம். 

            இன்று; எனக்கு முன்பாக சிலர் இருந்தார்கள். ஒருவர் பின் ஒருவராக பணத்தைப் பெற்றும்; கட்டணத்தைக் கொடுத்தும் வெளியேறி கொன்டிருந்தார்கள்.

            முன் வரிசையி ஒருவர் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்தார். நேற்றும் இங்கு வந்திருக்கின்றார். நகையை அடகு வைத்திருக்கிறார். இவர்களும் ஐம்பது வெள்ளித்தாட்களை கொடுத்திருக்கிறார்கள். அதில் சில தாட்களின் நடுவே வெள்ளையாக கோடு இருந்ததாம். அதாவது அது ஒரு வகையில் கள்ள நோட்டு. எங்கோ எப்படியே அடகுக்கடையில் நுழைந்து இவரிடம் சேர்ந்துவிட்டது.

            இதனைக் கேட்டதும் அங்கு பணத்தை எண்ணிக்கொண்டிருந்தவர், “ஐயோ…! அந்த பணத்தைக் கொண்டு வா.. நாங்க மாத்தி தறோம்… எங்கயோ மிஸ் ஆகிருச்சி போல..” என்றார்.

            இவரோ , அந்த பணத்தை அவராகவே மாற்றிவிட்டதாகவும் சொன்னார். “நல்லவேளையா வங்கியில் வாங்கியிருக்காங்க.. இல்லன்னா உங்களுக்கு எவ்வளவு சிரமமாயிருக்கும்..?” என்று சொல்லிய பணியாளர் மீண்டும் பணத்தை எண்ண ஆரம்பித்தார்.

            “யாரு… பேங்கு-க்கு எல்லாம் போனா… நான் எல்லாத்தையும் ஒவ்வொரு கடையில் ஜாமான்களை வாங்கி வாங்கி நாசுக்கா மாத்திட்டேன்ல…” என்று சிரிக்கலானார்.

            இதையெல்லாம் கேட்ட பக்கத்து கவுண்டரில் இருந்த வயதான சீனக்கிழவி எழுந்து, கொஞ்சம் கரகரப்பா குரலில்; “நீ மாற்றவில்லை… மற்றவர்களை ஏமாற்றியிருக்கிறாய்… இனி இப்படி செய்யாதே.. பணத்தை வாங்கியவுடன் இங்கயே ஒரு முறை சரி பார்த்துக்கோ… மறுபடியும் அப்படி இருந்தா இங்கயே கொண்டு வா.. நாங்களே மாத்தி தரோம்… மத்தவங்கள ஏமாத்தாதா…” என்றார்.

            அவர் பணத்தை வாங்கி கொண்டார். வெளியேறுவதற்கு முன்பாக என்னைப் பார்த்து “ஆமா.. ஊர்ல உள்ளவனுங்களையெல்லாம் இவனுங்க ஏமாத்துவானுங்கலாம்… நம்மல சொல்ல வந்துட்டானுங்க..” என்றார்.

இப்போது என் முறை மூன்றாம் கவுண்டரில் இருந்து அழைத்தார்கள்.

அப்போதுதான் கவனித்தேன் நான்காவது கவுண்டரில் ஒரு பெண் நீண்ட நேரமாகவே நின்று எதையோ கேட்டு கொண்டிருந்தார்.

அவரிடம் இருந்த நகைச்சீட்டைக் காட்டி, அதற்கு இன்னும் கொஞ்சம் பணம் கிடைக்குமா என கேட்டார். நானும் அதற்குத்தான் வந்திருக்கிறேன். ஒரு சீட்டில் காசை வாங்கி அதனை இன்னொரு சீட்டுக்கு கட்ட வேண்டும்.

ஆனால் அந்தப் பெண் கொண்டு வந்திருந்த நகைச்சீட்டில் வேறொருவர் பொயர் இருந்தது. சம்பந்தப்பட்டவர் வந்தால்தான் இப்படி கூடுதல் பணம் வாங்கவோ அல்லது முழு நகைக்கான பணத்தைக் கட்டி நகையை எடுக்கவோ முடியும்.

அந்த பெண்ணிடம் அங்குள்ள பணியாளர் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி கொண்டிருந்தார். இவருக்கு புரிகிறதா இல்லையா என தெரியவில்லை. அவர் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் கிடைக்கும் என கெஞ்ச தொடங்கிவிட்டார்.

இதை கவனித்த அந்தச் சீனக்கிழவி இந்தக் கவுண்டருக்கு வந்தார். அவரது கரகரப்பான குரலில் தெளிவாக ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லத் தொடங்கினார். யார் நகையை வைத்தார்களோ அவர்தான் வர வேண்டும். அல்லது அவரது அடையாள அட்டை இருந்தாலும் பரவாயில்லை என்றார்.

இது எதுவுமே சாத்தியமில்லை என்பதை அந்தப் பெண் புரிந்துகொண்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகின்றது. நகைச்சீட்டையும் தனது அடையாள அட்டையையும் வைத்து கொண்டு நூறு வெள்ளி இல்லாவிட்டாலும் ஐம்பது வெள்ளியாவது கொடுங்க என்றார்.

ஏறக்குறைய முப்பதை நெருங்காத வயதாக இருக்கலாம். ஆண்கள் அணியக்கூடிய சட்டையை அணிந்திருந்தார். அது அவரை விட பெரியதாக இருந்தது. மூச்சு வாங்கி மூச்சு வாங்கி பேசினார். கவுண்டரில் போடப்பட்டிருக்கும் மேஜையை தன் பிடிமானத்திற்காக பிடித்து நிற்பது நன்றாகவே தெரிகிறது.

சீனக்கிழவி மீண்டும் நிதானமான விளக்க முயன்றார். அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கிவிட்டன. “என் குழந்தைக்கு பால் வாங்க கூட காசு இல்ல… இதை வச்சிதான் நான் போய் பால் வாங்கனும்… என்னோட அடையாள அட்டையை வச்சிக்கோங்க.. கொஞ்ச காசா இருந்தாலும் பரவால..” என்று அந்தப் பெண் சொல்லவும் அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவரிடம் வந்து போனது.

எனக்கும் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. அவர் குழந்தைக்கு பால் வாங்க பணம் இல்லை என்பது என்னை ஏதோ செய்தது. நான் என் பொம்மியை நினைத்து கொண்டேன். குழந்தைக்கு எத்தனை வயது என சீனக்கிழவி விசாரிக்கவும், நான்கு மாதங்கள் என்றார்.

எனது கவுண்டரில் நான் வந்த வேலை முடிந்தது. அவர்களிடமே பணம் வாங்கி அவர்களிடமே கட்டணத்தைச் செலுத்தி மிச்ச பணத்தைச் சரி பார்த்தேன். பெரிதாக ஒன்றும் மிச்சமில்லை. குறைந்தது இரண்டு நாட்களுக்கு சமைப்பதற்கு சிலவற்றை வாங்கி போகிற அளவிற்குதான் இருந்தது.

அதிலிருந்து பதினைந்து வெள்ளியை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தேன். அந்தப் பெண் என்னை அதிர்ச்சியில் பார்த்தார். எனக்கும் என்ன சொல்வது என பிடிபடவில்லை. “இது உங்களுக்கு இல்ல.. உங்க குழந்தைக்கு பால் வாங்க… என் வீட்டுலயும் ஒரு குழந்தை இருக்கு… வச்சிக்கோங்க..” என்றேன்.

இதை கவனித்து கொண்டிருந்த சீனக்கிழவியை அலுவலகத்தின் உள்ளே யாரோ அழைத்தார்கள். உள்ளே சென்றவர் உடனே வெளியில் வந்தார். அந்தப் பெண்ணிடம் நூறு ரிங்கிட்டைக் கொடுத்தார். அந்தப் பெண்ணும் அதை வாங்கி கொண்டு தனது அடையாள அட்டையையும் நகைச்சீட்டையும் கொடுத்தார்.

சீனக்கிழவி அதனை வாங்கவில்லை. இது அவரது முதலாளி கொடுக்க சொன்னதாகவும், குழந்தைக்கு பால் வாங்க பயன்படுத்து என்றார். அந்தப் பெண்ணால் அழுகையை அடக்க முடியவில்லை. அந்தச் சீனக்கிழவிக்கும் நன்றி சொல்லி. அலுவலகத்தை எட்டி பார்க்க அங்கு வெறும் கறுப்பு கண்ணாடிகள்தான் தெரிந்தன. அங்கும் நன்றி சொல்லிவிட்டு என்னிடமும் நன்றி சொல்லிவிட்டு தாங்கி தாங்கி நடந்து வெளியேறினார்.

அந்தச் சீனக்கிழவி என்னைப் பார்த்து “பாஸ் உள்ள கூப்ட்டு  சொன்னாரு.. அவ உண்மையாவே குழந்தைக்கு பால் வாங்கதான் காசு கேட்டாள்ன்னு..  எப்படி கண்டுபிடிச்சாருன்னு தெரியல..”  என்றவர் அவரது கவுண்டருக்குச் சென்றார்.

நானும் வெளியேறினேன். என் காரில் அமர்ந்தேன். என்னை அறியாமல் கொஞ்ச நேரம் அழுது கொண்டிருந்தேன்.

இது என் இயலாமையை நினைத்து வந்த அழுகை அல்ல. எனக்கும் பண நெருக்கடிதான். கடன் தான். அடுத்த மாதத்தை எப்படி சமாளிக்க போகிறேன் என தெரியவில்லைதான். ஆனால் ஒரு குழந்தைக்கு பால் வாங்க என்னிடமிருந்து சிறிய தொகையை அந்த கடவுள் கொடுக்க வைத்திருக்கிறார் என்ற நன்றியுணர்வில் வந்தக் கண்ணீர்.

அழுதக் கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டு, கடவுளுக்கு நன்றி சொல்லிகொண்டேன். கண்களைத் திறந்தேன். தூரத்தில் அந்தப் பெண் கையில் குழந்தைக்கான பால்  பாக்கெட்டுகளை வாங்கி கொண்டு தாங்கித்தாங்கி போய்க்கொண்டிருக்கிறார்.

- தயாஜி

 

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்