பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 24, 2020

காலச்சுவடும் – கதைத்தடமும்





   இம்மாத காலச்சுவடு இதழ். திறக்கையில் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதும், தொடரும் என்பதுதான் அந்த அதிர்ச்சியின் இன்பம்.

    காலச்சுவடு இம்மாதம் தனது 25-வது ஆண்டை கொண்டாடுகிறது. அதனை முன்னிட்டு இம்மாதம் முதல், சிறப்பு பகுதியாக 'கதைத்தடம்' எனும் பகுதியை தொடங்கியுள்ளார்கள். முன்னோடி எழுத்தாளர்களின் தொகுக்கப்படாத சிறுகதைகளை இதில் வாசிக்கலாம். பின்னாளில் இந்த கதைகள் யாவும் புத்தகமாக்கும் திட்டமும் இருப்பதாக சொல்லியுள்ளார்கள். நிச்சயம் இது வாசகர்களுக்கு லாபகரமானதாக அமையும்.

   நம்மிடையே ஒரு பேச்சு  வழக்கம் இருக்கிறது. இந்த எழுத்தாளர் இத்தனைக் கதைகள்தான் எழுதியுள்ளார். அந்த நாவலைத்தவிர எதனையும் எழுதவில்லை என சொல்லிக்கொள்வோம். அவ்வாறான வழக்கம் இனி இல்லாமல் போகப்போகிறது. பல வழிகளில் இந்த முயற்சிக்கு உதவி அனைவருக்கும் புதையல் கிடைத்த சாமாண்யன் மனநிலையில் என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். இதுவரை இருநாவல்கள் மட்டுமே எழுதியவராக சொல்லப்பட்ட ப.சிங்காரத்தின் கதையை இதின் கண்டதும் என் உள்ளம் அதனை கொண்டாடியது. நாவலை படித்திருந்து அதில் லயித்துப்போய் அவர் குறித்துத் தேடிப்படிக்கும் முயற்சியில் எனக்கு எந்த கதையும் கிடைத்திருக்கவில்லை !.

     இந்த பகுதியில் கு.ப.ராஜகோபாலன், மௌனி, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, ப.சிங்காரம் போன்றோரின் கதைகள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக எந்த ஆண்டில், எந்த இதழில் இக்கதைகள் வெளிவந்துள்ள என குறிப்பிட்டிருக்கிறார்கள். ப.சிங்காரத்தின் கதைக்கு மட்டும் இதழ் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளன, வெளிவந்த ஆண்டு குறிப்பிடப்படவில்லை. இந்த பொக்கிஷங்களின் மத்தியில் அது ஒரு குறையாகவே தெரியவில்லை.

    25-ம் ஆண்டை தொட்டிருக்கும் காலச்சுவடு இதழுக்கு வாழ்த்துகளும், ‘கதைத்தடம்’ பகுதிக்கு ஆவளுடன் எனது நன்றி கலந்த எதிர்ப்பார்ப்புகளைச் சொல்லிக்கொள்கிறேன்.


- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்