பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 01, 2020

அன்பின் பேரொளிப் பரவசம்

எப்போதும் என்னை நேசிக்கும் நெஞ்சங்களுக்கு புத்தாண்டில் வாழ்த்துகளுடன் நன்றியாக எனது இந்த கவிதையைப் பரிமாறிக்கொள்கிறேன்...
உங்கள் அனைவருக்கும் எப்போதும் என் அன்பு ❤️


❤'அன்பின் பேரொளிப் பரவசம்'❤


எல்லோரும் அவனை 
விட்டு விலகலானார்கள்
விட்டு கடக்கலானார்கள்
மிக அருகில் இருந்தும்
தனியே நடக்கலானார்கள்
எஞ்சி இருப்பவர்களிடம் 
அவனொரு முறை கூறினான்
'என் நம்பிக்கை மனிதர்களே
எவ்வகையேனும் எம்முறையேனும்
பெற்று
நீங்களும் கடந்துவிடுங்கள்
என்னால் உங்கள் அன்பினை 
சுமந்து 
உங்கள் யாவரையும் 
சங்கடப்படுத்த முடியவில்லை
நான் இங்கேயே நின்றுவிடுகிறேன்
என் கால்கள் எனக்கு
ஒத்திசைக்கவில்லை
பூமையில் புதைந்து
என்மீது 
என் நம்பிக்கையே புற்றோன்றி கட்டிவிடட்டும்
உங்களை மென்மேலும் வலிக்கச்செய்து
அப்பாவங்களையும் என் இதயம் சுமக்கும்படி
செய்யாதீர்கள் அன்பர்களே
வேண்டாம் அன்பினைக்காட்டி 
என்னையும் கூட்டிச்செல்ல முயலாதீர்கள்
வேண்டாம்
ஒவ்வொருவரின் கைகளிலும் 
என்னை தாங்கிக்கொள்ளாதீர்கள்
நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்
புன்னகையோடு வழியனுப்புகிறேன்
சென்றுவிடுங்கள்
அவ்வாறான ஒற்றை புன்னகையின் 
புறமுதுகையாவது காட்டிவிட்டு
சென்றுவிடுங்கள்
அன்பினைச் சுமக்கும் வேதனை 
அத்தனை எளிதல்ல அன்பர்களே
நீங்களாவது பிழைத்துக்கொள்ளுங்கள்
காலமாகிறது
என் ஆசைக்கும்
என் நம்பிக்கைக்கும்
என் வாக்குகளுக்கும் கூட
காலமாகின்றன
தயைக்கூர்ந்து நடையைக் கட்டிவிடுங்கள்'

எந்த அசைவுமின்றி அவனருகையை 
அனைவரும் சூழந்துக்கொண்டார்கள் 
அவர்கள் அன்பின்
கண்ணீர்த்துளிகள் அவனை சுத்தப்படுத்தியது
அவன் தோல்விகளை சாந்தப்படுத்தியது
அவன் நம்பிக்கைகளுக்கு 
புத்துயிர் கொடுத்தன
கூட்டத்தில் இருந்த குழந்தை ஒன்று
அவனை எக்கி அணைத்தது
அவன் நெற்றிப்பொட்டில் 
முத்தமிட்டது
'நீ வரலயா நான் பறக்கப்போறேனே..?'
என சொல்லி முடித்ததும்
சீழ்பிடித்த முதுகு பக்கம் 
அவனுக்கு வலி எடுத்தது
உள்ளிருந்து ஏதோ உப்பிவந்தது
வாழ்வில் முதன் முறையாக 
ஒருவன்
ஒரு மனிதன்
ஒர் ஆண்
ஓரு ஏமாளி
தன் முதுகில்
வெண்சிறகொன்றை பிரசவித்தான்
அவன் சூழ்ந்த அனைவருக்கும் அது நிழல்கொடுத்தது
எப்படியோ எல்லோரையும் சுமந்துக்கொண்டு
கழுத்தின் அந்த குட்டி தேவதையைச் சுமந்துக் கொண்டே
எல்லைகள் அற்ற அன்பின் பேரொளியை நோக்கி 
அவனும் அவர்களும் பறக்கலானார்கள்...

#தயாஜி
#தயாஜி2020_2

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்