பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஞாயிறு, 31 ஜூலை, 2016

கதை வாசிப்பு 19 - 'கண்களை விற்றால் ஓவியம்'

கதை வாசிப்பு 19 – 'கண்களை விற்றால் ஓவியம்'


    இவ்வார (2016 ஜூலை 31 ) ஞாயிறு மக்கள் ஓசையில், டாக்டர்.முனீஸ்வரன் எழுதியிருக்கும் ’கண்களை விற்றால் ஓவியம்’ என்ற சிறுகதை வந்துள்ளது. கடிகாரக்கதை வரிசையில் ஜூலை மாதத்திற்கான கடைசி கதை.

கதை.
   கணவன் மனைவியை மையப்படுத்தியுள்ளது. மாமணிக்கு எந்த கெடுதலும் வரக்கூடாது என்றும் தங்களின் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்றும் பூஜைகளில் ஈடுபடுகிறாள் மனைவி வடிவுக்கரசி. மனைவியின் அச்செயலே கணவனுக்கு எரிச்சலை கொடுக்கிறது. பெரும்பாலும் பூஜைகளை  முடித்து வீட்டிற்கு வருவதற்கு தாமதமாகிறது. பலமுறை கணவன் சொல்லியும் எல்லாம் குடும்ப நன்மைக்குத்தானே என தன் பக்க நியாயத்தை சொல்லிச்செல்கிறாள். திருமணமாகி இரண்டாடுகள் ஆனப்பின்னரும் பூஜை ,தீட்டு, தோன்றவில்லை போன்ற காரணங்களைச்சொல்லி குழந்தை பெறுவதை தவிர்த்து வந்தாள். குழந்தையின் வருகை அவளது பூஜைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என உள்ளுக்குள் நினைக்கிறாள். மார்கழி மாதம் அம்மா வீட்டிற்கு சென்ற வடிவுக்கு ஒருமாத காலம் எந்த தொல்லைகளும் இன்றி பூஜைகளில் ஈடுபட முடிந்தது. மார்கழி முடிந்தும் அவள் வீடு திரும்பவில்லை. இப்போது மாமணி மனதில் அவளுக்கு இடமில்லை என்று தெரிகிறது . ‘வாழாவெட்டி’ என அம்மாவிடம் திட்டு வாங்குவதைவிட வடிவுக்கு எந்த தொல்லைகளும் இன்றி சுதந்திரமாக பூஜைகளில் கலந்துக்கொள்ள முடிகிறது.

கதையைக்குறித்து;
   பலர் இக்கருவை கொண்டு ஒரு பக்க கதைகளாக நிறைய எழுதியுள்ளார்கள். இம்மாதிரி கதைகளில் சுவாரஷ்யம் முக்கியம். அப்படியில்லாமல் இக்கதையை சிறுகதையாக்க முயல்கையில் சிலவற்றை கவனித்து கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. சுவாரஷ்யத்தையும் தாண்டி ஒரு தேடலோ ஒரு நிறைவோ இக்கதைகளில் இடம்பெற வேண்டும். 

    இக்கதையில் இரண்டு இடங்களில் மட்டுமே இந்தோனேசிய வீட்டுப்பணிப்பெண் வருகிறாள். வேலை முடிந்து வீட்டிற்கு வந்து மனைவி இல்லாததுக் குறித்து எரிச்சல் கொண்டிருப்பவனுக்கு சூடாக தேநீர் கொடுப்பதுதான் அவள் வேலை. அந்த பணிப்பெண் வடிவுக்கரசியின் இடத்தை பூர்த்தி செய்கிறாளா? கணவன் மனைவியிடம் ஏற்பட்டிருக்கும் இடைவெளியில் அவளுக்கான இடம் எதுவென கதையை கொண்டுச்சென்றிருந்தால் ஒருபக்க கதையாக இதனை கணிக்க முடியாதபடி அமைந்திருக்கும். இக்கதை சிறுகதையாக முழுமையடைந்திருக்கும் . இக்கதையினை வாசிக்கும் போதே கதையின் முடிவை கண்டுக்கொள்ள முடிவது பலவீனம். 

  திருப்பங்கள் இல்லாததும் சோர்வைக்கொடுக்கிறது. அதே சமயம் அச்சோர்வில் இருந்து வாசகர்களைக் காப்பாற்றுவது எழுத்தாளரின் வார்த்தை விளையாட்டுதான் . எள்ளல் நடையும் புதிய வார்த்தைகளும் வாகருக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.  உதாரணமாக, ‘காப்பி ஆறிக்கொண்டிருந்தது, மாமணி சூடேறிக்கொண்டிருந்தான்’, மாமணிக்கு வேலைப்பளு வடிவுக்கரசிக்கு பூஜைப்பளு போன்றதைச் சொல்லலாம்.

தலைப்பு,
     பலமுறை படிக்கவேண்டியதாக இருந்தது. அதெப்படி ’கண்களை விற்றால் ஓவியம்’ என வரும். ஒருவேளை கண்களை விற்றால்தான் ஓவியம் வாங்க முடியும் என சொல்கிறதோ ?. இக்கதைப்படிப் பார்த்தால் ‘கண்களை விற்று ஓவியம்…’ என்பதுதான் சரியாக வரலாம் என எண்ணத்தோன்றுகிறது. 

   இங்கு கதைகளுக்கு தலைப்பு வைப்பதில் சிலருக்கு அதிக சிக்கல் இல்லை. ஏதாவது ஒன்றை வைத்துவிடுகிறார்கள். சிலர் அதிகம் சிரத்தை எடுத்துக்கொண்டு தலைப்பை கெடுத்துவிடுகிறார்கள். ஒரு சிலருக்கே தலைப்புகளில் இருக்கும் சூட்சுமம் பிடிகொடுக்கிறது.

நிறைவாக,
   இது டாகடர். முனீஸ்வரின் சமீபத்திய கதையாகத் தெரியவில்லை. அவரின் பல கதைகளைப் படித்திருக்கும் வாசகன் என்ற முறையில் இது எப்போதோ எழுதி நான் படிக்கத்தவறிய கதையாக இருக்கலாம்.

-தயாஜி-


0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்