பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 01, 2016

கதை வாசிப்பு 20 - 'தொடாத எல்லை'

      இவ்வார மலேசிய நண்பன் (2016 ஜூலை 31) நாளேட்டில் ந.பச்சைபாலன் எழுதியிருக்கும் 'தொடாத எல்லை ' என்கிற சிறுகதை வெளிவந்துள்ளது.

   நா.பச்சைபாலனின் கவிதைகளில் பழக்கமுள்ள நான் முதலாவதாக அவரது சிறுகதையை வாசிப்பது இதுதான் முதன் முறை. என் நினைவில் அவரின் வேறெந்த சிறுகதையும் பதிந்திருக்கவில்லை.

    கவிஞர்கள் சிறுகதை எழுதும் போது வாசகர்களுக்கு ஓர் இனிய அனுபவம் ஏற்படும். வாக்கியங்கள் கவிதைகளாகவும் காட்சி விவரணை ரசிக்கும்படியும் அமைந்து வாசகர்களை குதூகலப்படுத்தும். புதிய சொற்கள் கிடைக்கும். படிப்பவரும்  தான் சிறுகதையை வாசிப்பதை மறந்து கதைக்குள்ளாகவே ஈர்க்கப்பட்டுவிடுவார்கள். அப்படி நினைக்கையில் கவிஞர் ந.பச்சைபாலனில் இக்கதை ஏமாற்றிவிட்டது. அவரின் கவிதைகளில் வந்துவிழும் அழகுச்சொற்களை இங்கு காண முடியவில்லை. அல்லது தான் எந்த தருணத்தில் கவிஞனாக இக்கதையில் தெரிந்துவிடக்கூடாது என. வெகு கவனமாக இதனை எழுதியிருக்கலாம்.

கதை.

    மாலனுக்கு தாத்தாவின் கையெழுத்தில் புத்தகம் ஒன்று கிடைக்கிறது.  சயாம் மரண ரயில் தண்டவாளத்தில் வேலை செய்ததை அதில் பதிவு செய்திருக்கிறார் . அதனை கண்டதும் மாலனுக்கும் கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் எழுகிறது. மகனும் தாத்தாவை போல கதை பத்திரிகை என வீணாகிவிடுவானோ என அப்பா தடை போடுகிறார். மாலன் படித்து டாக்டராக வேண்டும் என்கிறார். அம்மா மாலனுக்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுக்கிறார் . மாலன் டியூசனுக்கு செல்லாமல் எழுத்தாளர் ஒருவரின் உரைக்கு செல்கிறான். வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் சிக்கிக்கொள்கிறான். அம்மா வந்து காப்பாற்றுகிறார் . மீண்டும் மீண்டும் டாக்டராக வேண்டும் என அப்பா சொல்ல , தாத்தாவழி தனக்கு கிடைத்திருக்கும் எழுத்து என்பது சொத்து. அதனை இழக்க மாட்டேன். இலக்கியத்தில் படித்து டாக்டர் பட்டம் பெறுகிறேன் என மாலன் பதில் சொல்லிவிடுகிறான். மாலனின் தெளிவான பேச்சு அம்மாவையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. எது எப்படியோ படிப்பும் முக்கியம் அங்கிருந்துதான் லட்சியத்தை அடைய முடியும் என அம்மா தன் பங்குக்கு சொல்லிவிடுகிறார். தாத்தா தொடாத எல்லையை தான் தொடவேண்டும் என எண்ணுகிறான்.


கதைக்குறித்து

     மாணவர்களை கருத்தில் கொண்டே கதை சொல்லப்பட்டிருக்கிறது. கதைச் சொல்லியைவிடவும் ஆசிரியரைத்தான் இக்கதை முழுக்க பார்க்க நம்மால்  முடிகிறது. 

   நிகழ்கால கதையைவிட , தாத்தாவின் புத்தகத்தில் இருக்கும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். தாத்தாவின் அனுபவம் சரியாகச் சொல்லப்படாததால் மாலனின் செயல்கள் மீது நாடகத்தன்மை மேலோங்கிவிடுகிறது. மாலனின் அப்பாவிற்கு தாத்தா மீதான வருத்தமும் விரிவாக்கமின்றி சட்டென கடந்து செல்வதும் பலவீனம்தான்.

  தாத்தாவின் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் எழுத்து பாணிக்கும் கதைச்சொல்லியின் கதைச்சொல்லும் எழுத்து பாணிக்கும் கொஞ்சமும் வித்தியாசம் இல்லை. தாத்தாவின் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்தை அவரின் வலியை சொல்லும் விதம் வாசகர்களை கவர்ந்திருக்க வேண்டும். கிழிந்த ஏடுகளில் இருப்பதை வாசிக்கும் மாலனின் மனநிலையை வாசகர்களும் உணர்ந்து பதட்டமடைய வேண்டாம். அந்த பதட்டம்தான் இக்கதையை வெற்றியடைய வைத்திருக்கும். கதையின் ஆழத்தை காட்டவேண்டிய இடம் அது, ஆனால் தவறிவிட்டது.  ஒரே ஆள் கதையை சொல்லிச்செல்வது வாசகர்களை கதையில் இருந்து அந்நியப்படுத்திவிடுகிறது.


நிறைவாக,

    எழுத்தாளரின் உள்ளிருக்கும் ஆசிரியருக்கு பதில் கவிஞர் வெளிவந்திருந்தால் இக்கதை முக்கிய கதையாக வந்திருக்கும். வாசகர்கள் மனதிலும் இக்கதை வலியை பதிவு செய்திருக்கும்.


- தயாஜி 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்