பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 13, 2025

முடியாது என் கதை 2

(This is my personal story. You may read it if you wish)

தலையில் பட்ட அடி, பழைய வலியையும் அதனுடன் பழைய சிக்கல்களையும் கொண்டு வந்தது. புதிய வலி மறைய மறைய பழைய வலியும் வேதனையும் மெல்ல மெல்ல உள்ளே நுழைந்தன.

இரண்டாம் நாள் நடமாட முடியாத அளவிற்கு மயக்கம் அதிகமானதால் முதலில் வீட்டிற்கு அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கிற்கு சென்றோம்.

மருத்துவரிடம் என் பழைய மருத்துவ குறிப்புகளை இல்லாள் ஒவ்வொன்றாகச் சொன்னார்.

அதில் பலவற்றை நானே இன்று மறந்திருந்தேன்!

'இது கொஞ்சம் சிக்கலான கேஸ்... நீங்கள் மீண்டும் மருத்துவமனைக்கு தான் செல்லவேண்டும்' என்றவர், அவரின் கிளினிக் சார்பில் பரிந்துரை கடிதம் (referral letter) ஒன்றைக் கொடுத்தார். உடனே அரசாங்க மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்லும்படி கூறினார்.

வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் ஓய்வெடுக்கும்படி ஆனது. உடல் ரொம்பவும் சோர்ந்திருந்தது. பொம்மிக்கு தேவையான உணவை தயார் செய்து சாப்பிட வைத்தோம்.

பின் பொம்மியின் தாத்தாவிடம் குழந்தையைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொள்ளச் சொல்லி மருத்துவமனைக்கு புறப்பட்டோம்.

காரை ஓட்டுவதில் சிரமம் இருந்தது. இருந்தும், இல்லாளை பக்கத்தில் அமர வைத்து நானே காரை ஓட்டினேன்.

என்னிடம் இருந்து எல்லாமும் பறிபோயிருந்த காலகட்டத்தில் இருந்து இன்றுவரை என்னுடன் பயணித்து கொண்டிருக்கும் கார் அது. பலமுறை என்னைக் காப்பாற்றியுள்ளது. கோவிட் காலக்கட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அந்தக் காரை தெரிந்த ஒருவருக்கு கொடுத்திருந்தோம். ஐந்து மாதங்கள் வரை பயன்படுத்தினார். மூன்று மாதங்களுக்கு மட்டும் கார் லோனை கட்டினார்.

பள்ளி பயிற்சி புத்தக விற்பனையாளராக இருந்த சமயத்தில் மலேசியாவில் உள்ள பெரும்பாலான தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு ஏறக்குறைய ஐநூறு முதல் ஆயிரம் புத்தகங்கள்வரை இந்தக் காரிலேயே கொண்டு சென்றிருக்கிறேன்.

என் தூக்கமின்மைக்கு பல நாட்கள் தாலாட்டு பாடித நாற்காலிகள் அந்தக் காரில்தான் உள்ளன. எத்தனை நாட்கள் அந்தக் காரிலேயே கதறி அழுதிருப்பேன் என்பது எனக்கும் அந்தக் காருக்கும் மட்டுமே தெரியும்.

வேலை நிமித்தமாக இங்கிருந்து பல கிலோ மீட்டருக்கு சென்று தூக்க கலக்கத்தில் திரும்பும் போது பல தடவை அரை தூக்கத்தில் வந்திருக்கிறேன். சில சமயங்களில் எப்படி காரை ஓட்டினேன் என்று தெரியாத அளவிற்கு வீட்டிற்கு வந்திருக்கிறேன்.

அது இரும்போ இயந்திரமோ அல்ல என்னுடைய உண்மையான 'சகா'.

இப்போது கூட அந்தக் கார் கண்டிப்பாக ரிப்பேர் செய்யவேண்டிய நிலையில்தான் இருக்கிறது. ஆனாலும் செய்யவில்லை. கையில் காசிருக்கும் நேரத்திற்கு நானும் காத்திருக்கிறேன். நான்சொல்லும்வரை என் காரும் உயிரை பிடித்து உருண்டு கொண்டிருக்கிறது.

என்னைப்போலவே என் காரும் உள்ளுக்குள் உடைந்திருந்தாலும் உழைக்க தயாராய் இருக்கிறது. ஆனால் இப்படி சொல்வதை விடவும், 'உள்ளுக்குள் ஏதேதோ உடைந்திருந்தாலும் எப்போதும் உழைக்க தயாராய் இருக்கும் இந்தக் கார் போலத்தான் நானுமே இருக்கிறேன்' எனவே சொல்ல விரும்புகிறேன்.

இந்த நிலையில் மட்டுமல்ல வேறெந்த நிலையிலும் என் காரை இன்னொருவர் ஓட்டுவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன். என் அனுமதியை விட என் காரின் அனுமதிதான் இதற்கு முக்கியம்.

ஆகவே இல்லாளை அழைத்துக்கொண்டு என் சகாவுடன் பொது மருத்துவமனைக்குச் சென்றேன்.

ஆனால் அங்கு நடந்தது கொஞ்சமும் நாங்கள் எதிர்பார்க்காதது......


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்