பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஞாயிறு, 10 ஜூலை, 2016

கதை வாசிப்பு - 12 ' தரிசனம்'

கதை வாசிப்பு 12.

ஜூலை மாத மயில் இதழில் (2016) தரிசனம் என்னும் சிறுகதையை கோ.புண்ணியவான் எழுதியுள்ளார்.

கதை .

   அப்பாவின் இறப்பை ஏற்றுக்கொள்ளாத அம்மா. மகனும் மகளும் அம்மாவிற்கு புரியவைக்க முயன்று தோற்கிறார்கள். மனநல மருத்திவரிடம் அழைத்துச் செல்கிறார்கள். கொஞ்ச நாளில் தானாகவே சரியாகும் என மனநல மருத்துவரும் சொல்லிவிடுகிறார். மகனும் மகளும் அம்மாவை வீட்டில் விட்டு புறப்படுகிறார்கள்.

    சில நாட்கள் கழித்து விடுமுறைக்கு மீண்டும் வருகிறார்கள். அம்மாவிடம் மாற்றம் இல்லாதது கண்டு பிள்ளைகள் வருந்துகிறார்கள். மகனுக்கு வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைத்திருப்பதை அம்மாவிடம் சொல்ல அம்மாவோ வழக்கம் போல அப்பாவிடமே சொல்லச்சொல்கிறார். தங்கையும் அம்மாவின் திருப்திக்காக அண்ணனை அப்பாவின் புகைப்படத்தின் முன் நின்று அம்மாவிற்கு கேட்கும்படி அனுமதி கேட்க சொல்கிறார். அண்ணனும் அவ்வாறு செய்ய அம்மாவின் முகம் மலர்கின்றது.

   அன்று இரவு தங்கைக்கும் அண்ணனுக்கும் விசித்திர அனுபவம் ஏற்படுகிறது. தங்கை அதிர்ச்சியில் உறைந்துப்பார்க்கும் இடத்தில் அண்ணனும் பார்க்கிறார். அங்கு அப்பாவின் உருவம் தெரிவதாய் கதை முடிகிறது.

மேலும்,

   இக்கதை மகன் பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது. அது இன்னும் ஆழமாக சொல்லப்படவில்லையோ என தோன்றுகிறது. அப்படியல்லாமல் கதை சொல்லியின் பார்வையில் இருந்து இக்கதை சொல்லப்பட்டிருந்தால் கணவன் மனைவியிடையில் இருக்கும் உறவு உணர்வு பூர்வமாக அமைந்திருக்கும். மகன் பார்வையைவிட கதைசொல்லியின் பார்வை கணவன் மனைவியை குறித்த அன்னியோன்னியம் மேலும் வலு சேர்த்திருக்கும் .

   கணவன் இல்லாத போது மனைவி அச்சுழலை நம்பாமல் கணவன் இருப்பதாக நம்புவதற்கான காரணமும்  வாசகருக்கு கிடைத்திருக்கும்.

   இது வழக்கமான கதை, இப்பாணி கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. இனியும் சொல்லப்படும் ஆனால் இக்கதை சொல்லும் முறையிலும் அதன் அடர்த்தியிலுமே நிற்கும். இக்கதைகளில் திருப்பம் ஏற்படும் இடம், எப்படி ஏற்படுகிறது, யாருக்கு ஏற்படுகிறது என்பது இக்கதையை வெற்றியடைய வைக்கும்.
இங்கு வெற்றியென்பது வாசகர் மனதில் இக்கதை கொடுக்கும் சஞ்சலம் என்பதை புரிந்துகொள்க. அப்படிப்பார்க்கையில் இக்கதை தன்னை முழுமைப்படுத்திக்கொள்ள  தவறிவிட்டது.

அடுத்ததாக,

    ஓவியம் குறித்து சொல்லவேண்டும். சிறுகதைக்கு எதற்காக ஓவியம் தேவை? அதன் வேலை என்ன ?

   ஓவியம் கதையை சொல்ல வேண்டுமா அல்லது கதையை குறித்த ஆர்வத்தைக் கொடுக்க வேண்டுமா. போன்ற கேள்விகளை நமக்கு நாமே ஒருமுறை கேட்டுப்பார்க்க வேண்டும்.

   இக்கதையில் ஓவியம் எவ்வாறு அமைந்துள்ளது என்று பார்க்கலாம். ஆணும் பெண்ணும் பயந்து ஓரிடத்தை பார்க்கிறார்கள். அங்கு புகை மூட்டத்திற்கு நடுவில் ஓர் பெரியவரின் உருவம் தெரிகிறது. கண்ணும் உருவமும் பார்க்க யாருடைய ஆவியோ என பார்த்ததும் தெரிந்துவிடுகிறது.

   தலைப்பு தரிசனம். கதையின் முதல் பக்கத்திலேயே அப்பா இறந்ததை நம்பாமல் அவரின் வருகைக்காக காத்திருக்கும் அம்மா அவருக்கு மகளும் மகனும் இருப்பது தெரிந்துவிடுகிறது. ஓவியமே முழுகதையையும் சொல்லிவிட்டது. இனி வாசகர் எதற்கு கதையை வாசிக்க வேண்டும்.

   சில பேய் கதைகளுக்கு இப்படியான படங்கள் பயன்படுத்துவது உண்டு. கதையின் முக்கிய காட்சியை ஓவியமாக்கியிருப்பார்கள். ஆனாலும் மறைமுகமாக அது அமைந்திருக்கும். இக்கதையில் இருக்கும் ஓவியம் முக்கிய காட்சிக்கு மாறாக கதையின் ஆதாரத்தையே காட்டி நிற்கிறது.

   ஓவியம் ஏதோ ஒன்றை பார்க்கின்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கதையை படித்த வாசகருக்கே ஓவியத்தின் முழுமை புலப்பட வேண்டும். மாறாக சிறுகதையை வாசிக்க விடாமல் ஓவியம் தடையாக இருக்க கூடாது. சில இலக்கிய இதழ்களில் சிறுகதைகளுக்கு வரையப்படும் ஓவியங்களை ஓர் உதாரணமாக கொள்ளலாம்.

   இதற்கும் கதையை எழுதியவருக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் இதழாசிரியர்கள் கவனிக்க வேண்டிய விடயமாக இதனை இங்கு  எழுதவேண்டியுள்ளது. ஏனெனில் சிறுகதையை பிரசுரித்து அதே பக்கத்தில் பிரசுரமாக்கும் அர்த்தமற்ற துணுக்கு செய்திகள் கூட சிறுகதைகளை தோற்கடித்துவிடும்.

- தயாஜி

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்