பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 04, 2016

கதை வாசிப்பு 10 - ' நானும் மனைவியானேன்'

   ஞாயிறு மக்கள் ஓசையில் (3/7/2016) எம்.சேகர் எழுதியிருக்கும் 'நான் மனைவியானேன் !' என்கிற சிறுகதை வந்துள்ளது .

    தலைப்பை படித்ததும் மேற்கொண்டு கதையை வாசிக்கவில்லை. கொஞ்சம் யோசிக்கிறேன். கதைக்கு தலைப்பு எத்தனை அவசியம். ஒரு வரி தலைப்பில் ஒரு சிறுகதையை கணிக்க முடியுமெனில் அது கதைக்கான வாசகரை அழைக்குமா என சந்தேகிக்கிறேன்.

முதலில் எதற்கு தலைப்பு?

    தலைப்பு கதைக்கான வாசக ஆர்வத்தை கொடுக்கிறது. இதுதான் முதல் ஈர்ப்பு . இங்கிருந்துதான் கதை வாசிப்பிற்கான நுண்ணுணர்வு ஏற்படுகிறது. முழு கதையின் சாரத்தை எதிர் முனையில் இருந்து சொல்வதாலும் கதையின் உள்ளே ஊடாடும் கருவை மறைமுகமாகவோ அல்லது கவிதை தொனியில் சொல்வதாலும் தலைப்பு ஈர்ப்பை கொடுக்கும். ஆக, இக்கதையின் தலைப்பு அதனை வாசிக்க முதல் தடையாய் அமைந்தது.

    அடுத்து, படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை நானே எனக்குள்ளே வரவைத்துக்கொண்டு கதைக்கு சென்றேன்.இப்போது கதையின் தொடக்கத்திற்கு வருவோம்.
இப்படியாக கதை தொடங்குகின்றது ,

' நானும் மனைவியானேன். ஒரு நல்ல மனைவியானேன். கணவனை புரிந்து நடந்துக்கொள்ளக்கூடிய ஓர் அன்பான மனைவியானேன். கணவன் என்பவன் எப்படிப்பட்ட குணமுடியவனாக இருந்தாலும் அவனை மனதார ஏற்றுக்கொள்ளும் மனைவியானேன் '

    தலைப்பு ஒருவரியில் சொல்லிவிட்ட முழு கதைக்கும் விளக்க உரை கொடுப்பதாக கதையின் தொடக்கம் இருக்கிறது . இதுதான் கதை என மீண்டும் உறுதி செய்கிறது. அதாவது மனைவியாகிவிட்டவள் அவளுக்கான மனைவி என்னும் கட்டமைப்பில் மிகச்சரியாக தன்ன பொருத்திக்கொண்டுவிட்டாள். சொல்லப்போனால் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதை காட்டுகிறது, என வாசகனை நம்ப வைத்துவிடுகிறது.

    கதை தொடக்கம் எதிர்ப்பார்ப்பைகொடுக்க வேண்டும் . அதைவிட்டு எதிரே இதுதான் இருக்கிறது என கோடிட்டுக்காட்டினால் அதுவே அலுப்பை கொடுத்துவிடுகிறது.இது இக்கதையை வாசிக்க இரண்டாவது தடையை கொடுக்கிறது.
இவ்விரண்டு தடைகளைக் கடந்துதான் கதைக்கு செல்லவேண்டியுள்ளது.அதுவும் எழுதியவர் மீதான நம்பிக்கையும் நேரம் இருக்கிறதே என்கிற எண்ணமும்தான் காரணம்.

கதை.

    தனித்து வாழும் தாயின் அரவணைப்பில் வளரும் பெண்ணின் சுய புலம்பல்தான் கதை. புலம்பல் என்பதைவிட தனக்குத்தானே பேசும் ஒருபக்க உரையாடலாக கதை பயணிக்கிறது . இளம் வயதிலேயே தன் கணவன் தன்னை விட்டு மனைவியின் தோழியுடன் சென்றுவிடுகிறார். தான் உதவியாய் அடைக்கலம் கொடுத்த தோழியே தன் வாழ்வில் இப்படி ஒரு துன்பத்தை கொடுத்து சென்றது அவளுக்கு மேலும் வலியை கொடுத்தது. ஆனாலும் மகளை அத்தனை சிகரத்திலும் வளர்க்கிறாள். மகளுக்கு ஒவ்வொரு நாளும் தன் கஷ்டங்களை சொல்கிறாள். மற்றவரிடம் அம்மா புலம்புவதையும் கேட்டு, அம்மாவின் மனம் நோகாமல் அம்மாவின் சொற்களுக்கு கீழ்படிந்தவளாகவே ஆகிறாள்.

    மகள் வயதுக்கு வந்த பின் அம்மாவிற்கு பயம் ஏற்படுகிறது. அதனை மகள் புரிந்துக்கொள்கிறாள். அவ்வேளை அம்மா அவளுக்கு வயதான ஒரு டாக்ஸி டிரைவரை திருமணம் செய்து வைக்கிறாள்.அம்மாவுக்கு சில வேளைகளில் உதவி செய்த டிரைவர் அவர் . தூரப்பயணங்கள் செல்வதால் எப்போதாவது வீட்டுக்கு வருகிறார். அம்மாவும் துணி வியாபாரம் செய்ய அவ்வபோது வெளியூர் போகிறார்.இவ்வேளையில் மகள் கர்பமாகிறாள். வீட்டு வாசலில் கணவரின் வருகைக்காக காத்திருக்கும் மகளை அவளின் அம்மாவின் வயது உள்ள ஒரு பெண் பத்து வயது பையனுடன் சந்திக்கிறாள். கர்ப்பவதி அவளை விசாரிக்கிறாள். அதற்கு வந்தவர் சொல்கிறார் ,

"நா.....கண்ணன் டிரைவரோட மனைவி " .

கதை அத்துடன் முடிகிறது. ஏற்கனவே திருமணமாகியவரைத்தான் இவளுக்கு அம்மா திருமணம் செய்து விட்டிருக்கிறார். அம்மா எப்படி தவறு செய்தார் என வாசகரை சிந்திக்க வைப்பதாக வாசகர்கள் முன் முடிவுக்கு வருவார்களேயாயின் அவர்கள் கதையின் உள்ளிருக்கும் மர்மத்தை தவறவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

அவை,

1. வாழ்வில் எல்லா துன்பத்தையும் அனுபவித்த அம்மா அத்தனை சுலபத்தில் மகளின் திருமணத்தின் தவறு செய்திருக்க வாய்ப்பு குறைவு. ஆக அம்மாவின் செயலுக்கு என்ன காரணம்?

2. அம்மாவிற்கும் டிரைவருக்குமான உறவு எத்தகையது ?

3. அதுவரை சொந்த இடத்திலேயே வியாபாரம் செய்தவர் , பின் வெளியூருக்கு போகிறார் , அம்மாவும் மகளின் கணவன் போல பாதி நாள் வெளியூரிலேயே இருக்கிறார் ?

    வழக்கமான கதைகளில் இருந்து இக்கதை தனித்து நிற்கும் இடம் ஒன்று உள்ளது. தனது அம்மாவின் கஷ்டங்களை தினம் பார்த்து, அவரது புலம்பல்களை தினம் கேட்டு. அம்மாவின் வாழ்க்கையை மகள் வாழ ஆரம்பிக்கின்றாள். இவ்விடம் கவனமாக பார்க்கவேண்டிய இடம் ,தன் வாழ்வுக்கான எல்லா முடிவுகளையும் அம்மாவே எடுக்கிறார். அம்மாவின் மனம் நோகக்கூடாது என்றே மகளும் இருக்கிறாள். மகள் தனக்கான ஆசையை ஆளுமையை வாழ்க்கையை இழந்து அம்மாவின் வாழ்க்கையை தான் வாழத்தொடங்கிவிட்டாள்.

   உதாரணமாக, பெண் குழந்தைகள் பெரும்பாலும் குழந்தை பொம்மைகளையே விரும்பும். பொம்மைக்கு தலை வாரி தூங்க வைக்கும் பொம்மைக்கு பசிக்கிறது என சொல்லி விளையாட்டு சாமான்கள் கொண்டு சமைக்கும். மேலாக, அம்மா தன்னை எப்படி கண்டிப்பாரோ அதே மாதிரி அதே வார்த்தைகளைக் கொண்டு குழந்தைகள் பொம்மைகளை கண்டிக்கும்.
இதுதான் உளவியல் சிக்கல் இக்கதையில் ஒரே இடத்தில் மட்டும் இச்சிக்கல் சொல்லப்பட்டிருந்தாலும், இக்கதையின் அடிநாதம் அதுதான். ஒட்டுமொத்த கதையையும் காப்பாற்றி தனித்து காட்டுவதும் அந்த உள்வியல் சிக்கல்தான். மகள் தன் வாழ்க்கையை தனக்கான வாழ்க்கையை மறந்து இன்னொரு அம்மாவாக தன் அம்மாவின் பிம்பமாக ஆகிவிட்டிருக்கிறாள்.

ஒரு குழப்பம்;

தன் கணவரின் இரண்டாவது மனைவியையும் அவரது தாயையும் தேடிச்செல்லும் டிரைவரின் மூத்த மனைவி, அவளின் அம்மா தற்போது செய்துக்கொண்டிருக்கும் வேலையைத்தான் சொல்லி தேட வேண்டும்.கல்யாணத்துக்கு முன்னர் அவளது அம்மா செய்துக்கொண்டிருந்த பலகாரம் விற்கும் வேலையை சொல்லி கேட்டிருக்க வேண்டாம்.

நிறைவாக,

நல்ல நடை, தோய்வில்லாமல் கதை செல்கிறது. ஒன்றைம்காட்டி அதிலிருந்து வாசகர்களை தாங்களாகவே கதையின் சூட்சுமத்தை கண்டுகொள்ள வைக்கிறது. எழுதிய எம்.சேகருக்கு நன்றி.


- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்