(This is my personal story. You may read it if you wish)
சில நாட்களுக்கு முன் கழிவறையில் மயங்கி விழுந்துவிட்டேன். தலையிலும் தோள்பட்டையிலும் அடி. இடது கண்ணில் இரத்தக்கட்டு வீக்கம்.
ஏறக்குறைய 3-4 நிமிடங்களில் நினைவு திரும்பி நானே எழுந்துவிட்டேன். அன்று முழுக்க ஒருவித மயக்கத்திலேயே இருந்தேன். அடிபட்ட இடத்தில் மட்டுமே வலித்ததால் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இரண்டாம் நாளில் அடிபட்ட வலி குறையவும்தான் இன்னொரு விபரீதம் புரிந்தது.
ஐந்தாண்டுகளுக்கு முன் விபத்தில்! தலையில் ஏற்பட்ட காயம் கொடுத்த அதே வலி மறுபடியும் வந்துவிட்டது.
அந்த வலி ரொம்பவும் மோசமானது, சட்டென எல்லாவற்றையும் மறக்கடிக்கும், உடல் அசைவுகளையும் பேச்சையும் மந்தமாக்கும். நேராக நடக்கவோ ஒரு பொருளை எடுக்கவோ முடியாது.
இன்னமும் அதன் சிக்கல்கள் அதிகம் இருக்கின்றன.
நேற்று விடியவிடிய அரசாங்க மருத்துவமனை அவசரப் பிரிவில் இருந்து வீடு திரும்பினேன்.
அங்குமே இதுவரை சந்திக்காத அனுபவமே ஏற்பட்டது.
இன்று காலையும் மருத்துவமனை சென்று பழைய, ஐந்தாண்டு மருத்துவ சிகிச்சை விவர குறிப்புகளை மீண்டும் எடுத்தோம்.
அந்தக் குறிப்புகளைப் பார்த்தவர் சட்டென என்னைப் பார்க்கலானார் 'நீ இன்னும் இருக்கியா..? ' என்பது போல இருந்தது.
அடுத்த சந்திப்பு இரண்டு வாரத்தில் அதற்கிடையில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்கிற எச்சரிக்கையுடன் வீட்டிற்கு அனுப்பினார்கள்.
மனதில் பல குழப்பங்களுடன் வீட்டிற்கு வந்தேன். பொம்மி ஓடி வந்து கால்களைக் கட்டிக்கொண்டு கொண்டாடினாள்.
இன்று அப்பா என்ன கொண்டு வந்திருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பில் என் கைகளைப் பார்த்தாள்.
அப்பா இன்று பழைய நோயுடன் தான் வந்திருக்கிறேன் என எப்படி சொல்ல முடியும்!
அவளை வாரி அணைத்துக் கொண்டேன். கண்கள் கலங்கின. பால்கனிக்கு வந்து நின்றேன். சூரியன் உச்சந்தலையில் சுட்டது. என் முடிவு ஒரு போதும் இப்படியாக முடியவே முடியாது என்று சத்தமாகச் சொன்னேன். எங்கோ பறந்த பறவையின் நிழல் எங்கள் மீது பட்டுவிட்டு போனது.
சூரியன் கொடுத்த உஷ்ணத்துடன் பொம்மிக்கு மீண்டும் ஒரு முறை முத்தமிட்டேன்.
"என் கதை ஒருபோதும் இப்படியாக முடியாது. முடியவே முடியாது..." என்று எனக்கு நானே உறுதி எடுத்து கொண்டேன்
இயற்கை காரணமின்றி ஒருவனைக் காப்பாற்றிவிடாது.
அதே போல என்னைக் காப்பாற்றுவதற்கு இயற்கைக்கு ஒரு காரணத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எழுதும் பேனாவை இன்னும் நெருக்கமாகப் பிடித்துக்கொள்கிறேன்.
தொடருமான்னு தெரியல, தொடர்ந்தால் எழுதுகிறேன்....
- அதிகம் எழுத முடியவில்லை. நினைவில் பிழை வருவதற்குள் எழுதியுள்ளேன்.
- அதே போல நடந்த எல்லாவற்றையும் எழுதவில்லை.
0 comments:
கருத்துரையிடுக