பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

சனி, 2 ஜூலை, 2016

கதை வாசிப்பு 7 - ‘நீர்க்கோழி’


 வாசித்து முடித்த நீர்க்கோழி  மொழிப்பெயர்ப்பு சிறுகதை தொகுப்பை முன் வைத்து;

கதை 1 . அழகான ஓர் ஏப்ரல் மாத காலையில்

    இது ஒரு காதல் கதை. வெறுமனே காதல் கதையா என்றால் அங்குதான் சட்டென நின்று மீண்டும் ஒரு முறை கதையை கவனிக்க வேண்டியுள்ளது. தனக்கு 100% பொருத்தமான ஒருத்தியை கண்டுவிட்ட பிறகு அவளை தவறவிடுகிறான் நாயகன். அப்படி தவறவிட்டதை எதை கொண்டு ஈடு செய்கிறான் நாயகன் என்பது கதை.

நடந்து முடிந்ததை நடக்கவிருப்பதை எப்படி மாற்றலாம் எப்படி மாற்றியிருக்கலாம் என கற்பனையின் நிகழ்காலத்தில் இருந்து தப்பிக்கும் மனப்போக்கை சிறப்பான முறையில் கதையாடலாக்கியுள்ளார். கற்பனையிலேயே சுய திருப்தி அடையும் மனப்போக்கை சொல்லிச்செல்லும் கதை கவிதைக்கான வரிகளோடு மனதில் பதிவாகிறது. அதன் விமர்சனம் நம்மீதுதான் எனவும் மறுப்பதற்கில்லை.

கதை 2 - இரும்புத்துண்டுடன் ஒரு நிலக்காட்சி

மூன்று வெவ்வேறான பின்புலம் கொண்டவர்கள் பழக்கமாகின்றார்கள். வாழ்வின் கேள்விகளும் அதன் ஊடாக ஏற்படும் அச்சத்தை எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பது கதை. சில பக்கங்களிலேயே வேறொரு நிலத்தை காட்டிவிடும் எழுத்து நடை. குளிருக்காக கடற்கரையோரம் தீ மூட்டப்பட்டிருக்கிறது . மூன்று நண்பர்களும் சந்திக்கிறார்கள் . அவர்களின் உரையாடல் மரணத்தை நோக்கி செல்கையில் ஒரு வசனம் வருகிறது. "நெருப்பு அணைந்ததும் உனக்கு குளிரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீ எழுந்துவிடுவாய் " இதுவரை பிடிகொடுக்காத கதையின் மையம் தன்னை வெளிகாட்டுவதாய் படுகிறது .
நெருப்பு என்பது எதன் குறியீடு? நாம் உருவாக்கிய நெருப்பு முடியும்வரை ஏன் காத்திருக்க வேண்டும்? மீண்டும் அந்த வாசகம் யோசிக்க வைக்கிறது.நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன , எது நம்மை இயக்குகிறது. எது வெறுமையை விரட்டுகிறது. போன்ற கேள்விகளுக்கு பதிலாகத்தான் நெருப்பின் படிமத்தை காண நேருகின்றது. தொடங்கிய 'செயல்' என்பதுதான் அந்த படிமம் என யூகிக்கிறேன். பூமராங் போல நம்மால் தொடங்கிய செயல்களின் விளைவுகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியுள்ளது . வாழ்வின் வெறுமையை கடப்பதற்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கு எதையாவது ஒன்றை பற்றிக்கொண்டு பயணிக்கவும் பூமராங்கின் கேள்விகளுக்கும் பதில் சொல்லவும் வேண்டியுள்ளது . அந்த நெருப்பு அணையும்வரை நாம் வாழ்வதே அதன் நோக்கம் . நம் போன்றவர்களை வாழவைப்பதும் அதுதான்.


கதை  3- எதேச்சையின் பயணி

    25 பக்க கதை என்றாலும், சுவாரஷ்யம் குன்றாத மொழிநடை இலகுவாக வாசிக்க உதவுகின்றது. இக்கதையை எப்படி கணிப்பது என பிடிபடவில்லை. ஆனால் படித்து முடித்ததும் நமக்குள்ளே நம்பிக்கை துளிர்க்கிறது. வாழ்வு எப்போதும் அர்த்தமற்றதாகவே முடிந்துவிடாது என வாசர்களை நம்ப வைக்கிறது. கதை சொல்லும் முறையும் நன்றாக உள்ளது.
   ஒரு வேளை மூளைக்கு பிடிகொடுக்காத ஏதோ ஒன்றை இக்கதை மூலம் வாசக மனம் கண்டடைந்துவிடுகிறது போலும். ஒருவேளை அது யாருக்கோவான தரிசனமாக கூட அது இருக்கலாம்.


கதை 4. 'ஏழாவது மனிதன்

   இத்தொகுப்பில் இருக்கும் இதர கதைகள் போல அல்லாமல் மெல்லிய மர்மத்துடன் கதை தொடங்குகின்றது. கதைச்சொல்லி கதையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது போல கதையை நகர்ந்தியுள்ளார் எழுத்தாளர். இடையிடையில் கதை சோர்வை கொடுத்தாலும் அடுத்தடுத்து எதிர்ப்பார்ப்பையும் கூட்டுகின்றது.
பேரலையில் சிக்கி தன் கண் முன்னே நண்பன் இறப்பது கதைச்சொல்லிக்கு தீராத மன சஞ்சலத்தை கொடுக்கிறது. தன் உயிரை காப்பாற்ற முன்னேறிச்சென்றவன் திரும்பிப்பார்க்கிறான். அலையில் சிக்கி நண்பன் தலைக்கு மேலே உயர்ந்த பேரலையில் தெரிவது தொடர்ந்து மனதில் குற்ற உணர்ச்சியைக் கொடுக்கிறது.
    பல ஆண்டுகளாக மனதை வருத்திக்கொண்டிருக்கும் அக்குற்றவுணர்ச்சியால் கதைச்சொல்லி இழந்தது அனுபவித்தது ஒரு பக்கம் இருக்க, அவர் எப்படி இதிலிருந்து மீண்டு வருகிறார் என்பதுதான் கதையின் முடிவு.எதனையும் நேருக்கு நேர் சந்திக்க ஏற்படும் அச்சம்தான் எல்லா இழப்புகளுக்கும் காரணம்.
   எவன் ஒருவனின் வாழ்நாள் குற்றவுணர்ச்சி இன்றி உள்ளதோ அவன் அச்சமின்றி தன் தவறுகளையும் தன் இயலாமைகளையும் ஒப்புக்கொண்டு நேருக்கு நேர் சந்தித்தவனாக இருப்பான்.
ஹருகி சொல்லும் அந்த ஏழாவது மனிதன் அப்படியானவன் தான்.

கதை 5 – டோனி தகிதானி

   தனிமைதான் கதையின் முக்கிய பாத்திரம். பக்கத்துக்கு பக்கம் யூகங்களை தாண்டி கதை சென்றுக்கொண்டே இருக்கிறது.


கதை 6 - நீர்க்கோழி
 
    இக்கதையை அரசியல் சார்ந்தும் சமகால அரசாங்கம் சார்ந்தும் பார்க்கிறேன். உண்மையில் இக்கதையில் சொல்லப்படும் தன்மைகள் கொண்ட நீர்க்கோழி என்ற ஒன்று இல்லவேயில்லை. இல்லாத ஒன்றை திரும்ப திரும்ப சொல்லி, அதற்கான சான்றுகளை யாரும் கண்டிருக்காத போதும் தொடர்ந்து சொல்லும் தொனியின் காரணமாக நம்பவைக்கப்படுகிறது.
அங்கிருந்த விதிமுறைகள் எல்லாவற்றையும் அந்த இல்லாத ஒன்று உடைத்துக்காட்டுகிறது .
   நடைமுறை அரசாங்கம் தத்தம் இருத்தலை காப்பாற்றிக்கொள்ள தேர்தல் கால வாக்குறுதிகள் , ஒரு வேளை அது எதிர்க்கட்சியின் வாக்குறுதிகளாகவும் இருக்கலாம். தேர்தல் வெற்றிக்கு பின் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாகிறது என்று ஆழ்ந்து யோசிக்கையில் எல்லாமே நீர்க்கோழிகளாக குடிமக்களை ஏளனம் செய்கிறதும்.
   நாம் கூட நமக்கான காரியங்களை சாதிக்க எத்தனை நீர்க்கோழிகளை; இல்லாத நீர்க்கோழிகளை கண்டுபிடிக்கின்றோம். அவ்வாறான சுய விமர்சனத்தையும் கதையின் முடிவில் நாம் சுமக்கின்றோம். 

கதை 7 நேற்று

   சற்றே நீண்ட கதை. படித்து முடித்ததும் வாழ்வு என்ன அர்த்தமற்றதா இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தங்களை கொடுக்கின்றதா என சிந்திக்க வைக்கிறது. மூன்று வெவ்வேறான குணாதியசங்கள் கொண்டவர்களின் கதை. கதை எளிதாக பிடிக்கொடுக்கவில்லை. மீண்டும் வாசிக்க வைக்கிறது.

நிறைவாக;

   ஹரகி முரகாமியின் இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் மனித மனங்களின் விசித்திரத்தை காட்டுகிறது. பல சூட்சுமங்கள் நிறைந்த மனதின் போக்கு நம்மை நாளுக்கு நாள் அலைய வைத்துக்கொண்டுதானே இருக்கிறது. அதில் இருந்து விடுபட நினைக்கும் நமக்கு எதில் இருந்து விடுபட நினைக்கிறோம் என்கிற மெல்லிய கோடு சீக்கிரத்தில் அகப்படுவது இல்லை. ஆனாலும் நாம் அதன் போக்கில் கொஞ்ச நாளும் நம் போக்கில் கொஞ்ச நாளும் மாற்றி மாற்றி சென்றுக்கொண்டே இருக்கிறோம். அப்படியான நமக்கு ஆறுதல் சொல்வதாகவும் நாம் தனியாக இல்லை என்பதையும் இத்தொகுப்பு காட்டிக்கொடுக்கிறது. நல்லதொரு மொழிப்பெயர்ப்பை தேர்ந்தெடுத்து தொகுத்த மொழிப்பெயர்ப்பாளர் ஸ்ரீதர்ரங்கராஜ் மற்றும் வலசை பதிப்பகத்துக்கு நன்றி.


-    தயாஜி

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்