பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 13, 2025

- இன்றைய வாசிப்பில் -


'காதல் பால் போன்றது. நேரம் ஆக ஆகப் புளித்துப்போகும், திரிந்துபோகும், விஷமாகிவிடும். மாதவன் எனக்கு அந்த விஷத்தைக் கொடுத்தான். நான் சாகவில்லை, அதற்கு பதிலாக அவனைக் கொன்றுவிட்டேன்.............'

வாசிப்பில் கே.ஆர்.மீராவின் 'மீராசாது'. மோ.செந்தில்குமாரின் தமிழாக்கம்.
இன்றைய இரவு இந்த மீராசாதுவிற்கானது.....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 12, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் 12/20 -

 


பெருமாள்முருகன் சிறுகதை ‘ஆடு’ 12/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.


********************************************************************************************************

ஏன் போட்டி போடுகின்றோம். வெற்றி பெறுவதற்கும் சாதித்து முன்னணியில் இருப்பதற்கும். அப்படித்தானே சொல்லிக் கொடுத்தார்கள். நாம் அப்படித்தானே நம்பிக் கொண்டிருக்கின்றோம். இந்தப் போட்டி போடும் பழக்கம் ஒரு கட்டத்தில் பொறாமையாக மாறிவிடுவதை நாமும் அனுபவத்திருப்போம்.

உன்னை நான் வென்று காட்டுவேன் என்பதற்கும் என்னுடன் போட்டி போட நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்பதற்கும் சின்ன வித்தியாசம்தான். அது அவரவர் மனநிலைக்கு ஏற்றார் போல மாறிவிடுகின்றது. அதற்கு அடிப்படையில் இருப்பது  போட்டி போடும் குணத்தை எப்படி அவரவர் கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தது.

நாம் நேரடியாக போட்டியில் ஈடுபடாமல் நமக்கு விருப்பம் உள்ளவர்கள் போட்டி போடுவதையும் நாம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு இரசிக்கின்றோம். உலகமே போட்டிவிளையாட்டுகளை அதற்குத்தான் நடத்துகிறதோ என்னமோ.

இந்தப் போட்டிபோடும் குணம் இன்றைக்கோ நேற்றைக்கோ வந்ததல்ல. காமமும் பசியும் வேட்டையும் மனிதனின் ஆதி குணமாய் இருப்பது போல, இந்தப் போட்டியும் நமது ஆதிகுணம்தான். அவையெல்லாம் இல்லையென்றால் நாம் இவ்வளவு உற்சாகமாக இவ்வளவு உயரத்திற்கு சென்றிருப்போமா என தெரியாது.

இன்றைய நமது போட்டியைக் கொண்டாடும் மனம் என்னவாக இருக்கிறது என்பதை விமர்சிக்கும் ஒரு சிறுகதையாகத்தான் என்னால் பெருமாள்முருகனின் ‘ஆடு’ சிறுகதையைப் பார்க்க முடிகிறது.

பேருந்தை பிடிக்க நாயகன் ஓடுகிறான்; அவன் எப்படித்தான் ஏறுவான் பார்க்கலாம் என பேருந்தை வேகமாக ஓட்டும் ஓட்டுனர். இந்தக் காட்சியும் அதில் மறைந்திருக்கும் ‘நாயகன் & ஓட்டுனர்’ என்ற இரு தரப்புகளின் உதிக்கும் போட்டியையும் உற்சாகமாய்ப் பார்க்கத் தொடங்கும் சக பயணிகள். ஒருகட்டத்தில் பேருந்தில் ஏற முடியாமல் கீழே விழுகிறான் நாயகன். ஒருவன் கீழே விழுந்ததைவிடவும்; ஓட்டுனரின் வெற்றிதான் பயணிகளை உற்சாகமாக்கி கொண்டாட வைக்கிறது.

மனிதர்கள் போட்டி போடுவதில் ஒருபோதும் பின் வாங்கமாட்டார்கள். அது சக மனிதர்களிடமும் இருக்கலாம் உலநாடுகளிலும் இருக்கலாம்.

சரி இந்தக் கதைக்கு ஏன் ஆடு என பெயர் வைத்திருக்கிறார் எழுத்தாளர் என இந்நேரம் நீங்கள் யோசித்திருப்பீர்கள்.

அதுதான் மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என சொல்லாம் சொல்கிறாரோ என்ற  கேள்வி இக்கதையை வாசித்து முடிக்கையில் நமக்கு தோன்றுவதற்குத்தான்.

எந்தப் புத்தகத்தில் ஆரம்பிப்பீர்கள் ?



2026-ம் ஆண்டு ஜனவரி முதல்நாள், என்ன புத்தகம் வாசிக்கவுள்ளீர்கள்.

அதனை ரொம்பவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டியுள்ளது. ஒருவேளை தவறான புத்தகத்தை வாசிக்க எடுத்துவிட்டோம் என்றால் அது ஓராண்டு முழுக்க நம்மை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். சிலர் தங்களின் தவறான முதல் தேர்ந்தெடுப்பில் இருந்து சிக்கிரமே தப்பித்துவிடுவார்கள்.

ஆனால் எல்லோருக்கும் அது அத்தனை எளிதாக கடந்துவிடக் கூடியதாக இருக்கப் போவதில்லை.
தவறான முதல் வாசிப்பே நமது அடுத்தடுத்த வாசிப்புகளுக்கு சோம்பலைக் கொடுத்துவிடும். தடையாகி நின்றுவிடும்.

ஆகவே, அடுத்த ஆண்டு நீங்கள் வாசிக்கவுள்ள முதல் புத்தகம் எதுவென இப்போதே தேடலைத் தொடங்கிவிடுங்கள்.

நானும் அதனைத் தொடங்கிவிட்டேன். ஏனெனில் எனது அடுத்த  ஆண்டிற்கான வாசிப்பு உத்வேகத்தைக் கொடுக்கக் கூடிய புத்தகம் அதுவாகத்தான் இருக்கும்.

ஒரு வாசகன் அதை ஒருபோதும் தவறவிட மாட்டான்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 11, 2025

_ மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 11/20



பெருமாள்முருகன் சிறுகதை 11/20
முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
***************************************

    கதையை சுவாரஸ்யமாக எழுதலாம். அதேபோல சுவாரஸ்யத்தையே ஒரு கதையாக்கி எழுத முடியுமா? அப்படி எழுதுவதில் ஒரு சிக்கல் உண்டு. இது கதையே இல்லை என்று ஒதுக்கிவிடுவார்கள். அல்லது இது கதைதான் என ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

    அப்படியொரு சுவாரஸ்யத்தைதான் எழுத்தாளர் இங்கு கதையாக்கியிருக்கிறார். அதனை ரொம்பவும் இயல்பாக கொடுத்திருக்கின்றார். இது கதையா இல்லையா என்கிற குழப்பத்துடனேயே இக்கதையை நாம் வாசித்தும் முடித்துவிடுவோம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இக்கதையை வாசித்து முடித்த பின் நம்மால் இக்கதையை ஒதுக்கிட முடியாது. அதுதான் இக்கதையின் சுவாரஸ்யம்.

இன்றைய 11வது சிறுகதை ‘சிரிப்பு’.

    நாயகனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அதற்கு முன் பேச்சலர் பார்ட்டி போல நண்பர்களுக்கு விருந்து கொடுக்கவேண்டும். முடியாது என்றாலும் விடமாட்டார்கள்; மானப்பிரச்சனை ஆக்கிவிடுவார்கள் என நாயகனுக்கு தெரிகிறது. எப்படியோ நண்பர்களின் விருப்பப்படி தேவையான டாஸ்மார்க் பாட்டில்களை வாங்குகிறார்கள். அங்கேயே சாப்பிட முடியாததால் இன்னொரு நண்பனின் அறைக்கு செல்கிறார்கள்.

    அங்கு குடித்துக்கொண்டே இவர்கள் அடிக்கும் லூட்டி நம்மை சிரிக்க வைக்கும். இளைஞர்களின் வழக்கமான ‘18 ப்ளஸ்’ ஜோக்குகளும் வருகின்றன. திருமணம் செய்யவிருக்கும் நண்பனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்: அங்கு நடக்கும் கலாட்டாவின் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கதையும் அங்கு முடிகிறது.

        இந்த முடிவிற்கு நம்மை அழைத்துச் செல்வதற்கு முன்பாக நாயகன் குறித்து எழுத்தாளர் எழுதியிருப்பது ஒரு சாமன்ய இளைஞனின் இயல்பான வாழ்க்கையை. தன் வாழ்க்கையையும் தன் முன்னேற்றத்தை தானே உருவாக்க வேண்டும் என புரிந்து கொண்ட இளைஞனாக எழுத்தாளர் நாயகனைக் காட்டியிருப்பார். பாதியில் விட்ட அவனது கல்லூரி படிப்பு, காரவேலையில் அவனுக்கு இருந்து திறமை, அவன் சந்திக்கும் மனிதர்கள் என இக்கதையை வாசிக்கும் நாம் நாயகனுடன் நடப்பது போன்ற உணர்வைக் கொடுக்கின்றார்.
    நாம் என்ன தொழில் செய்கிறவர்களாக இருந்தாலும் நாம் நம்மை எப்படியாக நினைத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். இந்தக் கதையின் நாயகன் தன்னை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும் விதம்தான் அவனுக்கு பெண் கிடைக்கவும் திருமணம் நடக்கவும் முக்கியமான காரணம்.

    அப்படியென்ன செய்துவிட்டான் என நீங்கள் தெரிந்து கொள்ள சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாத சிரிப்பு சிறுகதையை வாசித்துவிடுங்கள். சுவாரஸ்யத்தையே ஒரு கதைபோல எழுதினாலும் அங்கும் ஒரு கதையை மறைத்து வைப்பதுதான் எழுத்தாளர்கள் நமக்கு கொடுக்கும் சுவாரஸ்யம் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

டிசம்பர் 10, 2025

- இன்னும் இருக்கின்றன 10 நாட்கள் 10 சிறுகதைகள் -

 


இன்று டிசம்பர் 10. வரும் டிசம்பர் 21க்கு எழுத்தாளர் பெருமாள்முருகனை ‘வல்லினம் விருது விழாவில்’ நண்பர்கள் சந்திக்கலாம். அவரின் வருகையை முன்னிட்டு எளிய வாசகனாய் என்னால் செய்ய முடிந்தது அவரது சிறுகதைகள் குறித்து எழுதுவதுதான்.

நாம் நம்பும் இலக்கியத்திற்கு நம்மால் செய்ய முடிந்ததை மனதார செய்வதில்  நமக்கு எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். நான் இப்படி செய்வது இனி வரவிருக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் பாராட்டு பெரும் எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொரு வாசகனும் செய்ய ஏதுவாய் இருக்கும் என நம்புகிறேன்.

எழுத்தாளர் பெருமாள்முருகனை முதன்முதலில் நான் வாசித்தது 2014-ஆம் ஆண்டுவாக்கில்தான். அதுவரையில் அங்கொன்றும் இங்கொன்றும் என நான்  வாசித்த அவரின் கதைகளை ஒரு புத்தகமாக வாங்கி வாசித்தது அப்போதுதான். அதுவும் எனக்கு கிடைத்த சிறுகதைத் தொகுப்பு ‘பீக்கதைகள்’. தலைப்பை வாசிக்கும் போதே எனக்கு என்னமோ போல் இருந்தது. அப்போது இருபது வயதைக் கடந்து முப்பதை நெருங்கியிருந்தேன். ‘பீ’ என்று சொல்லவோ எழுதவோ சிறு தயக்கம்  இருந்த காலக்கட்டம். ‘மலம்’ என்றும் ‘கக்கா’ என்றும் சொல்லிப் பழகிவிட்டதால் ‘பீ’ என்று சொல்வது  எனக்கு அந்நியமாகப் பட்டிருந்தது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிக்க வாசிக்க, அந்நியத்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையும் அவர்களின் பாசாங்கற்ற மொழியும் எனக்கு நெருக்கமாகியது. இந்தக் கதைகளை வாசிக்கும் போதே சந்திக்கும் நண்பர்களிடம் இந்தக் கதைகளை குறித்து பேசுவேன். தொடக்கத்தில் எனக்கு இருந்த அதே அந்நியத்தன்மை அவர்களுக்கு இருந்தது. மெல்ல மெல்ல அந்தக் கதைகளில் சொல்லப்பட்ட வாழ்க்கையை நானும் புரிந்து கொண்டு நண்பர்களுடன் பேசும்போது; அவர்களால் அந்தக் கதைகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பதினான்கு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு அது. ஒவ்வொரு சிறுகதையிலும் மலமோ கழிவறையோ வந்துவிடும். அதுவும் கதையில் ஒரு முக்கியமான அங்கமாகவோ திருப்பமாகவோ ஒரு பொறியாகவோ வரும்.

அன்றையச் சூழலில் நான் சந்திந்த இன்னல்களும் எனக்கு நிகழ்ந்த எதிர்ப்பாராத சம்பவங்களும் என் இருப்பை கேள்விக்குறியாக்கியதோடு என் வாசிப்பையும் மடைமாற்றியது.  

 இன்று இந்தக் கட்டுரையை எழுதும் பொருட்டு மீண்டும் பெருமாள்முருகன் கதைகளுக்குள் நுழைகிறேன்.  எந்த முன்முடிவுகளும் இல்லாமல் அவரின் ஒரு புத்தகத்தைத் திறந்து அதிலிருந்து ஒரு சிறுகதையை வாசித்து அதையொட்டிய என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன்.

அந்தச் சிறுகதை எனக்கு என்ன கொடுக்கின்றதோ அதையே வெளிப்படையாக எழுதுகிறேன். இது ஒருவகையில் சிறுகதைகளை விரும்பி வாசிக்கும் நமக்கும் ஒரு பயிற்சியாக இருக்கும்.

            இன்றுவரை பெருமாள்முருகனின் பத்து சிறுகதைகளைக் குறித்து தினம் ஒரு  சிறுகதை என எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையின் முடிவில் அந்தக் கட்டுரைகளுக்கான இணைபையும் இணைக்கின்றேன். வாசிக்காதவர்கள் அல்லது தவறவிட்டவர்கள் ஒருமுறை வாசிக்கலாம்.

            இன்னும் பத்து சிறுகதைகளை எழுதவுள்ளேன். அதனையும் நீங்கள் வாசிப்பீர்கள் என நம்புகிறேன். நான் நம்பும் இலக்கிய செயல்பாடு எங்கெல்லாம் இருக்கிறது என நான் நம்புகிறேனோ அங்கெல்லாம் செல்லவும் என் பங்களிப்பைக் கொடுக்கவும் எனக்கு நானே தடையாக இருக்க விரும்பவில்லை.

இதுவரை எழுதிய கட்டுரைகளின் இணைப்பை கமெண்ட் பாக்சில் கொடுத்துள்ளேன்.

1. ஆட்டம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/1.html

2. பொண்டாட்டி http://tayagvellairoja.blogspot.com/2025/12/blog-post_04.html

3. மாயம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/3.html

4. பசி http://tayagvellairoja.blogspot.com/2025/12/4.html

5. அருவி http://tayagvellairoja.blogspot.com/2025/12/520.html

6. நாய் http://tayagvellairoja.blogspot.com/2025/12/620.html

7. பந்தயம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/720.html

8. அபிசேகம் http://tayagvellairoja.blogspot.com/2025/12/820.html

9. தொடை http://tayagvellairoja.blogspot.com/2025/12/920.html

10. தொழில் http://tayagvellairoja.blogspot.com/2025/12/1020.html

வாய்ப்புள்ள நண்பர்கள் எனது இந்த வாசிப்பு அனுபவத்தை வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். இதன்வழி எழுத்தாளரை சந்திக்கும் முன் நீங்களும் அவரது சிறுகதைகளை வாசித்து வருவீர்கள் என நம்புகின்றேன்.

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 10/20

பெருமாள்முருகன் சிறுகதை 10/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

***************************************

எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருவதை முன்னிட்டு இருபது நாட்கள் இருபது சிறுகதைகள் என இந்தக் கட்டுரையை எழுதி வருகின்றேன். இன்று பத்தாவது சிறுகதையைக் குறித்து எழுதவுள்ளேன். தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இந்தக் கட்டுரைக்கும் பின் இன்னும் 10 சிறுகதைகள் இருக்கின்றன. அதில் எந்தெந்த சிறுகதைகள் வருமென எனக்கும் கூட தெரியவில்லைதான்.

இன்றைய பத்தாவது சிறுகதை ‘தொழில்’. இந்தக் கதையும் அப்பா மகனுக்கு இடையில் வரக்கூடிய சிக்கலைச் சொல்லும் சிறுகதைதான். இந்தத் தொடர் கட்டுரையின் முதன் கதையாக ‘ஆட்டம்’ என்னும் சிறுகதையும் அப்பா மகனின் சிக்கலைச் சொன்ன கதைதான். இரு சிறுகதைகளின் கதைக்கருவும் ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொன்றையும் தனித்து தெரியும்படி எழுத்தாளர் எழுதியிருக்கின்றார்.

தொழில் சிறுகதையில் அப்பாவின் முடிவெட்டும் தொழிலை மகனும் இணைந்து செய்யும்படி ஆகிறது. மகன் இளம் தலைமுறை என்பதால் அந்தத் தொழிலில் ஈடுபட்ட சில மாதங்களிலேயே பல புதிய கஷ்டமர்களைக் கவர்ந்துவிட்டார். இன்னொரு கடையையும் திறக்கலாம் என்று மகன் சொல்கிறான். அப்பா வேண்டாம் என்கிறார். இப்போது வரும் கஸ்டமர்களை நம்பி இன்னொரு கடையைத் திறப்பது நல்லதல்ல என்கிறார். சில நாட்களில் அப்பாவே மகனுக்கு தொழில் நன்றாக வருகிறது இனி அவனுக்கு தனியாக ஒரு கடையை வைத்துகொடுக்கலாம் என தன் மனைவியிடம் பேசுகின்றார். எழுத்தாளர் அங்கு ‘தொழில்’ சிறுகதையை முடிக்கின்றார்.

இன்னொரு கடை வேண்டாம் என்று சொன்ன அப்பா; சில நாட்களிலேயே மகன் தொழிலைக் கற்றுக்கொண்டான்; இனி தனியாக கடை நடத்தட்டும் என சொல்வதற்கான காரணத்தை எழுத்தாளர் வைத்திருக்கும் இடம்தான் கவனிக்கத்தக்கது.

தன் அப்பாவிடம் முடிவெட்டிக்கொண்டவர், இத்தனை ஆண்டுகளாக   தன்னிடம் முடிவெட்டிக்கொண்டவர் இன்று தன் மகனிடம் முடிவெட்ட விரும்புகிறார். அப்பா எவ்வளவு சொல்லியும் அவர் அப்பாவிடம் முடிவெட்ட விரும்பவில்லை. மகனின் தொழில் நேர்த்தியை ஊரில் உள்ளவர்கள் புகழ்வதையும் சொல்லிவிட்டு மகன் வந்ததும் வருவதாகச் சொல்லி புறப்படுகின்றார். அப்பாவிற்கு இப்போதுதான் சுருக்கென்கிறது.

தன் தொழிலுக்கு தன் மகனே போட்டி என நினைத்துவிட்டாரா? தன் மகனுக்கு தொழில் கைவந்துவிட்டது இனி அவன் தனியாக பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்துவிட்டதா? என்ற இருவேறு கேள்விகளில்  ஒன்றை வாசகர்கள் தேர்வு செய்யலாம்.

என்னதான் தன் மகனாக இருந்தாலுமே; தொழில் என்பது ஒவ்வொரு மனிதனுக்குமே அந்தரங்கமானது. மகனை மட்டுமல்ல எவனையும் தன் தொழிலில் தன்னை ஜெயிக்க எந்த மனிதனும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்தான் போல.

டிசம்பர் 08, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 9/20


-மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்-

பெருமாள்முருகன் சிறுகதை 9/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

**********************************************************************

ஒரு கதையை எழுத  என்னதான் தேவைப்படுகின்றது?  என அடிக்கடி நான் யோசிப்பது உண்டு. சிலசமயங்களில் ஒரு சிறு பொறிகூட பல பக்களுக்கான கதையைக் கொடுக்கும். சிலசமயங்களில் பல பக்கங்களில் நாம் வாசித்த கதையை ஒரே வரியில் சொல்லிவிடலாம். அப்படிச் சொல்வது அந்தக் கதையின் பலவீனத்தைக் காட்டுகிறதா பலத்தைக் காட்டுகிறதா? 
இன்று நாம் பெருமாள்முருகனின் ‘தொடை’ என்ற சிறுகதையைப் பார்ப்போம்.

  ‘காதலை மறைப்பது போல; காதலால் கிடைத்த காயத்தையும் மறைப்பது ஒரு வகையில் சுவாரஸ்யமானதுதான்’ இதுதான் ‘தொடை’என்னும் சிறுகதையின் சாரம்.  நாயகனின் தொடையில் அடிபட்டு அவ்விடம் புடைத்திருக்கிறது. தொடையில் ஏதோ கட்டிதான் முளைத்திருப்பதாக சொன்னாலும் தம்பி நம்பவில்லை எனும்போதே அந்தக் காயத்தின் பின்னணி மீது நமக்கும் ஆர்வம் எழுகின்றது.

 காயம் வந்தக் கதையைத் தெரிந்து கொள்ள நாயகனுக்கு காதல் வந்த கதையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அந்தக் காதல்தான் காயத்திற்கு காரணம், ஆனால் நேரடியாக இல்லை. 

 தன் நண்பன் விரும்புவதாக சொன்ன பெண்ணை நாயகன் காதலிக்கத் தொடங்குகிறான். நண்பனுக்கு மட்டுமல்ல அங்குள்ள பலருக்கு அந்தப் பெண் மீது விருப்பம் இருக்கிறது. ஆனால் காதலிக்கும் வாய்ப்போ நாயகனுக்குத்தான் வாய்க்கிறது.

 நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக குடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அங்குதான் அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்த நண்பனும் இருக்கிறான். எப்படியோ அந்தப் பெண்ணை மயக்கிவிட்டான் தன் நண்பன் என பாராட்டுகிறான். எப்படி தெரியுமா கையை மூடி இறுக்கி அவனது தொடையில் ஓங்கி குத்துவிட்டு.

 மேற்சொன்னது போலத்தான் காதலை மறைப்பது போல காதலால் வந்த காயத்தையும் நாயகன் மறைக்கிறான் என்கிற ஒருவரியை; எழுத்தாளர் சுவாரஸ்யம் குன்றாத கதைப்பின்னல் வழி சொல்லியிருக்கின்றார்.

கதையெழுத என்னதான் தேவைப்படுகின்றது என யோசிக்கையில் அனுபம் என்பதே முதன்மையானதோ என தோன்றுகின்றது. அதில் இரகசியம் என்னவென்றால் நாம் சந்தித்த அனுபவங்களை மட்டுமல்ல, யார்யாருக்கோ நடந்த அனுபவங்களை நம் அனுபவமாக மாற்றி அதனுள்ளிருந்து நமக்கான கதையை எழுதத் தொடங்கலாம். 

எவ்வளவுதான் கற்பனையைக் கொட்டினாலும் அதைத் தாங்கிப்பிடிக்க அனுபவம் என்னும் பிடி அதனால்தான் அவசியமாகிறது. 

காதலிப்பவர்களுக்கு காதலால் ஏற்படும் காயங்கள் இப்படி கூட எதிர்ப்பாராத வரவாக இருக்கலாம்தானே. ‘தொடை’ சிறுகதையில் நாயகனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைத் தெரிந்து கொண்டோம். அந்த அனுபவத்தில் இருந்தும் நமக்கான ஒரு கதையை நாம் கண்டுபிடித்து எழுதிவிட்டால் நாம்கூட நம் சட்டை காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.

#தயாஜி
#புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 8/20


-மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்-

பெருமாள்முருகன் சிறுகதை 8/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.

****************************

நீங்கள் பார்த்து வைத்து திருமணம் செய்தவரா? காதல் கீதல் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று சமத்து பிள்ளையாய் வீட்டில் பார்த்து வைத்து திருமணம் செய்தவர் என்றால் இந்தக் கதையை வாசித்துவிடாதீர்கள். உங்களின் வருங்கால கனவுகள் மீது பெரிய கல்லை போட்டுவிடக்கூடிய கதை இது.


ஒருவேளை காதல் திருமணம் செய்தவர்கள் இந்தக் கதையை வாசிக்கலாமா என்று கேட்கிறீர்களா? இதைவிட பெரிய கற்களெல்லாம் உங்களுக்கு காத்திருக்கும் போது இந்தக் கல் பெரிதாக உங்களை பாதிக்காது என்றும் சொல்ல ஆசைதான். ஆனால் உங்களுக்கும் வயிறு கலக்கத்தான் போகிறது.

இன்று பெருமாள்முருகனின் ஏழாவது சிறுதையாக 'அபிசேகம்' சிறுகதையைப் பார்ப்போம்.

புது மாப்பிள்ளைக்கு புதுப்பெண் கொடுக்கும் அதிர்ச்சிதான் கதை. சிறுகதையில் நடக்கும் அபிசேகத்திற்கு வாசகர்களை மெல்ல மெல்ல எழுத்தாளர் தயார் செய்வது சிறுகதை மீதான ஈர்ப்பையும் ஏதோ நடக்கவுள்ளதான அறிகுறியையும் கொடுத்துக் கொண்டே வருகிறது.

புது தம்பதிகள் அழைப்பின் பேரின் உறவினர் வீடுகளுக்கு விருந்திற்கு செல்கிறார்கள். அங்கு விடைபெறும் போது மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் மொய்ப்பணத்தைக் (விருந்து பணம்) கொடுக்கின்றார்கள்.

புதுப்பெண் அந்தப் பணத்தை கணவனிடம் கொடுக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை எப்படி கேட்கபது என புது மாப்பிள்ளையும் குழம்புகிறார். வண்டிக்கு பெட்ரோல் போடும் போது தன் பணம் பாக்கெட்டில் இருப்பதாகவும் எடுக்க சிரமமாக இருக்கிறது என்றும் அவளிடம் உள்ள விருந்து பணத்தை எடுத்து பெட்ரோலுக்கு கொடுக்க சொல்லி வீட்டிற்கு வந்ததும் கொடுக்கதாக சொல்கிறான். மனைவியோ ஒன்றும் அவசரமில்லை நீங்கள் நிதானமாக வண்டியில் இருந்து இறங்கி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுங்கள் என்கிறாள். அவனுக்கு அது அவமானமாகிறது.

இவள் பணத்தை கொடுப்பாளா மாட்டாளா அல்லது தன் அப்பா வீட்டிற்கு கொடுக்க எடுத்து வைக்கிறாளா என வாசிக்கின்றவர்களையும் கேட்க வைக்கிறது.

இரவு பணத்தைக் குறித்து கணவன் மேட்கிறான். அவள் ஆவேசம் வந்தவளைப் போல தனக்கு கிடைத்த பணத்தையெல்லாம் அவன் மீது வீசுகிறாள். அதோடு நிற்கவில்லை "இந்தா பிடிச்சிக்கோ.. பிசாசே இந்த புடிச்சிக்கோ... " என்று அடிக்குரலில் ஆங்காரமாகச் சொல்கிறாள் . அவன் மீது ரூபாய்த் தாள்கள் அபிசேகம் செய்யப்பட்டது போலானது என கதையை முடிக்கின்றார் ஆசிரியர்.

கணவன் மீது இப்படியொரு அபிப்பராயம் வருவதற்கான காரணத்தை கதையின் ஓரிடத்தில் கணவன் மனைவி சாப்பிட்ட விதத்தை எழுத்தாளர் சொல்லியிருப்பார். அவன் அவசர அவசரமாக சாப்பிட்டு அவளுக்காக காத்திருக்கவும் அதை கவனிக்காமல் அவள் மெதுவாக, நிதானமாக சாப்பிட்டதையும் , கணவன் அவளுக்கு காத்திருப்பதைப் பார்த்து அங்குள்ளவர்கள் சிரிப்பதையும் அவளோ உடனே இலையை மூடிவிட்டு எழுந்ததையும் எழுதியிரிப்பார். இதுதான் அந்த அபிப்பராயத்திற்கு முழுமையான காரணம் என்றும் சொல்வதற்கில்லை.

ஆண் பெண் உறவுகளில் விசித்திரமானது கணவன் மனைவி உறவு. எப்போதோ யாரோ ஏற்படுத்திய வலிகளுக்கு சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவர் இங்கு பாதிக்கப்படக்கூடும். அல்லது எல்லா வெறுப்புகளையும் கொட்டித்தீர்க்க ஓர் ஜீவன் யாரோ ஒருவரிடம் வந்து சிக்கி கொள்ளும்.

'அபிசேகம்' சிறுகதையில் அந்தப் பெண் ஏன் தன் கணவனைப் பார்த்து அப்படி சொல்லி ஆவேசம் கொள்கிறாள். அது அவன் மீதுள்ள கோவமா அல்லது இந்த திருமணத்தின் மீதுள்ள கோவமா அல்லது பெண்ணாய்ப் பிறந்ததில் இயலாமையின் விரக்தியா என்பதை நீங்கள் இந்தச் சிறுகதையை வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

டிசம்பர் 07, 2025

- மலேசியா வருகிறார் பெருமாள்முருகன் - 7/20


-மலேசியா வருகிறார் பெருமாள்முருகன்-

பெருமாள்முருகன் சிறுகதை 7/20

முன்குறிப்பு: டிசம்பர் 21-ம் நாள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மலேசியா வருகிறார். அதனை முன்னிட்டி அவரது 20வது சிறுகதைகளை தினம் ஒன்று என டிசம்பர் 20-ம் நாள்வரை என் வாசிப்பு அனுபவத்தை எழுதுகிறேன். அவரை சந்திக்கும் முன்பாக நீங்கள் அவரின் படைப்புகளில் ஒன்றையாவது வாசித்துவிட்டு வாருங்கள். அதுதான் நாம் எழுத்தாளருக்கு காட்டும் அன்பு.
****************************

ரொம்பவும் சுவாரஸ்யமானவர்கள் என்றால் நண்பர்களைச் சொல்லலாம். அவர் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள் ஏது செய்வார்கள் என்று அவர்களாலேயே கணிக்க முடியாது. ஒரே ஒரு நண்பனை வைத்து சிரமப்படும் நபர்களும் இருக்கிறார்கள். அதிகமான நண்பர்களை வைத்துகொண்டு சிரமமே இல்லாமல் வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.

'உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்' என்பதை வெறுமனே யாரும் சொல்லவில்லைம். அதற்கும் ஆயிரம் மர்மங்கள் அடங்கியிருக்கின்றன. நம்மை அதிகம் காப்பாற்றுவதும் நட்பியான் நம்மை அதிகம் காயப்படுத்துவதும் நட்புதான்.

நட்பு என்ற பெயரில் எந்த ஒழுக்கக்கேடுகளை செய்யவும் துணிகிறார்கள். ஒருபோதும் நட்பிற்கு 'கெட்ட பெயர்' வரகூடாது என காக்கின்றவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வளவு சொன்ன பிறகு இன்றைய கதைக்கரு என்னவென்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்.


இன்றைய சிறுகதை, பெருமாள்முருகனின் 'பந்தயம்'.

முருகேசும் வீரேஷும் நண்பர்கள். பலமுறை கொடுக்கல் வாங்கள் எல்லாம் செய்தவர்கள். திடீரென்று ஒருநாள், விரேஷ் அழைத்து தனக்கு அவசரமாக பத்தாயிரம் ருபாய் தேவைப்படுவதாக சொல்லி உடனே பணம் போட சொல்கிறான். எந்தக் காரணத்தை அவன் சொல்லவில்லை.

முருகேசுவிற்கு ஒரே குழப்பம். திடீரென எதற்கு இவ்வளவு பணம் கேட்கிறான். வழக்கமாக நூறு இருநூறுதான் கேட்பாம். அதுவும் வீட்டிலிருந்து பணம் போட்டதும், திருப்பி கொடுத்துவிடுவான். இப்படி அவசரமாக கேட்க என்ன காரணம். ஏதும் சிக்கலில் மாட்டிகொண்டானா, தவறான காரியத்திற்கு கேட்கிறானா, சூதாட்டத்தில் சிக்கி கொண்டானா என பலவாறு குழம்புகிறான் முருகேசு. விரோஷின் அப்பாவிடம் இதுபற்றி சொல்லலாமா, அப்படி சொன்னால் அவன் சங்கடப்படுவானோ, அல்லது அவனிடமே காரணம் கேட்டுவிடலாம், பணம் இல்லை என்று சொல்லிவிடலான் என மேலும் மேலும் தன்னை குழப்பிக்கொள்கிறான்.

குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தாமல், நண்பன் கேட்ட பணத்தை கொடுக்க முடிவு செய்கிறான். திருப்பி கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி. அந்தப் பணத்தை திரும்பி கொடுக்கும் வரையும் அவனும் பணம் கேட்க மாட்டான். இனியும் கொடுக்கலமா வேண்டாமா என யோசித்தால் மனம் இங்கும் அங்கும் தாவிக்கொண்டிருக்கும். அது நட்பையும் கெடுத்துவிடக்கூடும்
என முடிவெடுத்து அவன் கேட்ட பணத்தை கொடுக்கிறான்.

நண்பனுக்கு பணம் அனுப்பிய சில நிமிடங்களில் தன் வங்கிக்கே பணம் வந்துவிட்டதாக கைப்பேசியில் குறுஞ்செய்தி வரவும், குமரேசுவிற்கு ஒன்றும் புரவில்லை. ஒருவேளை பணம் போகவில்லையோ என நினைத்து நண்பனை அழைக்கின்றான்.

அப்போதுதான் அந்தப் பந்தயத்தைப் பற்றி நண்பன் சொல்கிறான். தனது பயிற்சி மையத்தில் உள்ள ஒருவனோடு நட்பு குறித்த பேச்சு எழுந்து அது விவாதமாக மாறி பந்தத்திற்கு இழுத்துவிட்டதாம். நண்பனிடம் காரணம் சொல்லாமல் பத்தாயிரம் ருபாய் கேட்கவேண்டும். நண்பன் கொடுக்கிறானா இல்லையா என்பதுதான் பந்தயம். முருகேசு கொடுத்த பணத்தால் பந்தயத்தில் நண்பன் வென்றுவிட்டான். அதுதான் பணத்தை திரும்ப கொடுத்துவிட்டேன் என்பதோடு பந்தயத்தில் கிடைத்த ஐநூறு ருபாயையும் சேர்த்து அனுப்பியுள்ளதான சொல்ல கதை முடிகிறது.

இது சாதாரண கதை போலத்தானே இருக்கிறது. நண்பன் ஒருவனிடம் பந்தயம் கட்டுகிறான். ஒரு சோதனையைச் செய்கிறான். கடைசியில் பந்தயத்தில் நண்பன் ஜெயிக்கிறான் அவ்வளவுதானே.

இல்லை இந்தக் கதையில் 'அந்த அவ்வளவு' இல்லை. இன்னொரு அளவு இருக்கிறது.

இந்தப் பந்தயம் வீரேஷ் தன் நண்பன் முருகேசுவிற்கு வைத்தது அல்ல. முருகேசு தன் நண்பன் வீரேஷ் மீதும் அவனது நட்பின் மீதும் தனக்கு இருக்கும் நட்பு எப்படிபட்டது எனக்கு தனக்குத்தானே நிரூபிக்க நடந்த பந்தயம்.

இதில் வென்றது வீரேஷ்தான் என்றாலும் உண்மையில் வென்றது முருகேசுதான். அதனால்தான் என்னவோ பந்தயத்தில் வென்ற பணம் முருகேசுவிற்கு வந்து சேர்ந்திருக்கிறது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்