ஆணொருவன் அழுகிறான்
அலாவுதின் விளக்கில்
அடைபட்டிருக்கும்
பூதமொன்று
அவனது அழுகை துளியின்
சிறு துகள் பட்டு
தூக்கம் கலைந்தது
இது சாத்தியமே
ஆகக்கூடாதென
அசரீகள் முழுக்க
பெண் குரல்களால்
ஒலிக்கத்தொடங்கின
ஆயிரத்து இரண்டாவது
நாளுக்கான
கதையை அரேபியர்கள்
தேடிப்போகலானார்கள்
அதிலவன் தனது
மார்புக்கூண்டிலிருந்து
இதயத்தை கழற்றி
அதற்கு
தங்க முலாம் பூசியதன்
தகுதியை உயர்த்திக்கொண்டிருந்தான்
விபரம் தெரிந்தவிட்ட
ஊர் பெண்கள்
ஒவ்வொருவராக சாலை
மின்சாரத்தை
துண்டிக்கத் தொடங்கினர்
நெற்றிக்கண்ணில்
பிறந்துவிட்ட முருகனை
வேறெப்படியெல்லாம்
கொன்றுவிடலாம் என
யோசனை கூட்டத்தின்
முதல் தீர்மானமாக
நெற்றிகண்களையெல்லாம்
தோண்டியெடுத்து
தீயிட்டு கொளுத்தலாம்
என்ற சாசனத்தில்
சக்திகள் கையொப்பமிட
வரிசைக்கு வரலானார்கள்
கன்னங்கள் வழி
இறங்கி வந்துக் கொண்டிருந்த
நீர்த்துளிகளுக்கு
பனித்துளிகளென
பெயரிட்டு ஊர் முழுக்க
தண்டோரா போட ஆளுக்கொரு
திசையாக
புறப்படுகிறார்கள்
ஆணொருவன் அழுத
கதை தெரியாததால்
அதன் விளைவுகள்
ஏதும்
இன்னும் முகங்காட்டாமலேயே
முடங்கிவிட்டிருக்கிறது….
தயாஜி
0 comments:
கருத்துரையிடுக