மீண்டும் வா முதலில் இருந்து…
2020-ல், எந்த காராவது வானில் பறக்கிறதா என வானத்தைப்
பார்த்துக் கெண்டே இருந்தேன். கார்களுக்கு மத்தியில் சில காகங்களே தெரிந்தன. “நிச்சயம்
ஒரு நாள் கார்கள் பறக்கும் அப்போது நான் இருக்க மாட்டேன், நீங்களும் உங்கள் பிள்ளைகளும்
இருப்பீர்கள்” என ஆரம்பப்பள்ளியில் சொல்லி மறைந்துப்போன ஆசிரியர் போல நானும் என் பிள்ளைகளுக்கு
சொல்லிவிடலாம்.
கைபேசி ஒலித்தது. ரொம்ப நாள் ஆகிவிட்டது கைபேசியைப்
பயன்படுத்தி. இப்போதும் அதற்கு முழு சுதந்திரம் இல்லை. உடல் நிலை சீராகும் வரை காதருகில்
எதனையும் கொண்டுப் போகக்கூடாது. கேட்கும் காதும் பின்னர் கேட்காதாகிவிடும். வாய்க்கருகில் கைபேசியை வைத்து பதிலளிக்கலானேன்.
“இல்ல.. எனக்கு ஒன்னும் வேண்டாம்…”
“நிஜமாதான்
சொல்றியா..?”
“நிஜமாதான்
சொல்றேன்.. நான் உன்னை கூப்டு என்ன வேணும்னு கேட்கனும்.. நீ என்னை கேட்கற மாதிரி ஆகிருச்சி…”
“இப்ப
எதுக்கு இப்படியெல்லாம் பேசற…. சீக்கிரமே நீ பழைய மாதிரியை விட ரொம்ப நல்லா வருவ… சரி
நிஜமா ஒன்னும் வேணாமா…”
“ம்..
ஏதோ சொல்ற.. நடக்கட்டும் நடக்கட்டும்.. எனக்கு ஒன்னும் வேணாம்..”
“சரி
சரி வா.. வந்து கதவை திற..”
“அடிப்பாவி
வாசலில் இருந்துதான் இவ்வளவு நேரம் ரம்பம் போட்டியா…”
“ரம்பமா…
பல தடவை கதவை தட்டினேன்.. உனக்கு கேட்கல.. அதான் போன் பண்ணேன்.. வா.. வா.. ”
எழுந்து நடக்கலானேன். உண்மையில் கதவை தட்டினாளா.?
நம்ம காது என்ன அத்தனை மந்தமாகிவிட்டதா? என்ற சந்தேகத்தில் காதிற்கு அருகில் ஒரு பலத்த
சொடுக்கைப் போட்டேன். சத்தம் காதில் நுழைந்து மூளைக்கு அருகில் வீங்கியுள்ளதாய் சொன்ன
நரம்பை ஒரு தட்டு தட்டியது. வலி.
கையில்
பரிசு பொட்டலத்துடன் வந்திருந்தாள்.
“எதுக்கு
இதெல்லாம்… நான் தான் வேணாம்னு சொன்னேன்ல…”
“உனக்குன்னு
யார் சொன்னா…? வழிவிடு குறுக்க நிக்காத குண்டா…”
“ம்ம்…
போ போ..”
உண்மையில் எனக்கு யாராவது பரிசு கொடுக்க மாட்டார்களா
என ஏங்கிதன இருக்கிறேன். இப்போதுகூட நண்பர்களை சந்தித்தால் நிச்சயம் எனக்கு பரிசுகள் கிடைக்கும்.
ஆனால் உடல் நிலை கருதி வெளியில் செல்வது இல்லை. வெளியில் செல்லும் போது யாராவது துணைக்கு
வரவேண்டியுள்ளது. மேலும் பிறருக்கு சிரமம் கொடுப்பது சரியல்ல.
“இந்தா
எனக்கு கையெல்லாம் வலிக்குது இந்த பொக்ஸை பிரிச்சுக் கொடு…”
சிரித்துக்கொண்டேன். எனக்கு தெரியும். அவள் எனக்காக
சாப்பிடுவதற்கு எதையோ வாங்கி வந்திருக்கிறாள். ஒரு வேளை லட்டாக இருக்கலாம். இன்னும் கூட
லட்டுகளைப் பார்த்தால் எனக்கு வாய் ஊறுகிறது.
கணமான பெட்டி. அப்படியென்றால் சாப்பிடும் பொருள்
இல்லை. நாலாபக்கத்தையும் சுற்றிப்பார்க்கும் போது அவள் பதட்டமாகவே இல்லை. பிரித்தேன்.
புத்தகங்கள். அத்தனை புத்தகங்கள். அத்தனையும் புத்தகங்கள். கவிதைகளை எழுதுவதற்காகவே ஒரு குறிப்பு புத்தகம் வேறு இருந்தது.
அதுவும் வண்ணங்களிலும் ஒவ்வொரு பக்கத்திலும் புகழ்பெற்ற கவிதைகளுடன். அதனுடன் ஐந்து
நாவல்கள். அத்தனையும் ஆங்கில நாவல்கள். எழுத்தாளர் பாவ்லோ கோய்லோ (Paulo Coelho) எழுதிய ஐந்து நாவல்கள்.
“ஐ புக்ஸ்”
“ஆமா.. ஆமா.. புக்ஸ்தான்.. உனக்குத்தான்”
“ஏன் இங்லிஸ்…?”
“ஏன் தமிழ்..?”
“இல்ல நான் இங்லீஸ் படிப்பேன். ஆனா நாவல் படிச்சதில்லையே..”
“சரி
இனி படி…”
“சரி”
“புக்ஸெல்லாம்
பிடிச்சிருக்கா…”
அதிர்ச்சியானேன்.
“என்னப்பா….
Veronica decides to die- இனு புக்கை கொடுத்திருக்க…. ??”
“பாரு
பாரு.. புத்தி எங்க போகுதுன்னு…இந்தா இதை படி..”
“ஐக்…
The Winner Stands Alone….. இது நல்லாருக்கே…”
“ஆமா.
நல்லாருக்குல்ல.. அதனாலதான் வாங்கனேன். உனக்கு ஞாபகம் இல்லையா.. உனக்கு பாவ்லோ கோய்லோ-ன்னா
புடிக்கும்.. அவரோட புக்கு ஒன்னைசாச்சும் இங்லீஸ்ல படிக்கனும்னு சொல்லிகிட்டே இருந்த…”
“ம்…
தெரியல… சொல்லியிருப்பேன் தான் போல..”
“உனக்கு
அது ஞாபகம் இல்லையா டா…”
“சாரிப்பா…
இல்ல..”
“சரி
நம்ம காதல் கதையெல்லாம் கூட மறந்துட்டயா…?”
“ஆமா…
ஆனா.. கொஞ்ச நாள்ல பழைய நினைவுகள் எல்லாம் வந்துடும் கவலப்படாத.. டாக்டர் சொல்லிருக்காரு”
கொஞ்சம்
யோசிக்கலானாள். எனக்கு ஒரு பயம். எல்லாம் நினைவுக்கு வந்த பிறகு புத்தகங்களை வந்து
வாங்கிக்கோ என சொல்லிவிட்டால் என்ன செய்வேன். ஆனால் அவள்;
“பரவால
உனக்கு நினைவு எப்ப வேணும்னாலும் வந்துட்டு போகட்டும் .. வா மறுபடியும் முதலில் இருந்து
காதலிப்போம்..”
சிரித்தாள். சிரித்தேன். சிரித்தோம்.
என்
காதில் மீண்டும் கேட்டது “வா மறுபடியும் முதலில் இருந்து காதலிப்போம்”
2020-ல்
நல்லதொரு தொடக்கம்…..
#தயாஜி
#தயாஜி2020_3
0 comments:
கருத்துரையிடுக