பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நவம்பர் 17, 2022

- யாரின் நிழலாய் நாம் -


ஒரே மொழி
ஆனால் அது உன் மொழியல்ல
என் மொழியுமல்ல
பின் யாரின் மொழி

ஒரே இனம்
ஆனால் அது உன் இனமல்ல
என் இனமுமல்ல
பின் யாரின் இனம்

ஒரே மதம்
ஆனால் அது உன் மதமல்ல
என் மதமுமல்ல
பின் யாரின் மதம்

ஒரே  நாடு
ஆனால் அது உன் நாடல்ல
என் நாடுமல்ல
பின் யாரின் நாடு

நீ கூட்டத்தில் ஒருவன்
நான் கூட்டத்திற்குள் ஒருவன்
ஆனால்  நாம் இருவருமே
கூட்டத்திற்கானவர்கள் அல்ல

நவம்பர் 13, 2022

என்செய்வோம் மாமழையே


முன்னெப்போதுமான
மழையல்ல நீ
உன்னோடிப்போது
விளையாட முடிவதில்லை

கொஞ்சமே மழையென்று
கொஞ்சினால்
அஞ்சி விலகும்படி
அலையடிக்க வைக்கிறாய்
சாலைக் குழிகளை
மறைக்கிறாய்
சாக்கடையை வீட்டிற்குள்
நிறைக்கிறாய்

எப்போதோ வீசிய குப்பைகளை
வட்டியுடன் வந்திறக்கி
வைக்கிறாய்
ஆறுகள் மீது கோடுகள்
போட்டு
வீடுகள் கட்டினால்
ஏழரையாய் கூரையில்
எங்களை கூட்டம் போட வைக்கிறாய்

இனி உன்னை நம்பி
நனைந்தாடவோ
முழுக்க குளித்து
விளையாடவோ முடியாது

எங்கள் அலட்சியங்களை எப்போது
நீ கணக்கிட ஆரம்பித்தாயோ
எங்கள் குப்பைகளை எப்போது
உனக்கு அஜீரணம் என கண்டாயோ

இனி நாங்கள் வேறெங்கும்
செல்ல முடியாது
எங்களாலான கழிவுகளுக்கு
நாங்களே பொறுப்பேற்க வேண்டும்
என சொல்வதற்கா
இப்படி பாடம் புகட்டுகிறாய்

தூறு
பொழி
நனை
சொல்
நாங்கள் வேறு
என் செய்ய வேண்டும்
மாமழையே


நவம்பர் 10, 2022

வேறென்ன செய்ய முடியும்


யாரோ சொல்லிய உன்
பெயரில்
ஏதோ மெல்லிய ஓர்
உணர்வு

அந்த யாரோ
அழைத்த எவரோ
நிச்சயம் நீயாக இருக்கக்கூடாது

நீ என் முன்னே
வரவே கூடாதென்று
வாசலிலேயே காத்திருப்பவனால்
வேறென்ன செய்ய முடியும்...

நவம்பர் 02, 2022

- உனக்கென்ன வேணும் சொல்லு -


உனக்கு பரிசளிக்க
விரும்புகிறேன்
எதுவாக இருப்பினும் கேள்
தயக்கம் கொள்ளாதே
தயங்கி நிற்காதே

கைக்கு எட்டா தூரம் என்றாலும்
நீ ஏன் கலங்க வேண்டும்
கொடுக்க வேண்டியவன்
நானல்லவா

எத்துணை தூரம் என்றாலும்
நீ ஏன் கலங்க வேண்டும்
கடக்க வேண்டியவன்
நானல்லவா

பரிசுகள் என்றால் கேட்பவளுக்கு
மட்டுமல்ல
கொடுப்பவனுக்கும் மகிழ்ச்சிதானே

பெற்றுக்கொள்
நீ
கற்றுக்கொடுக்கும் காதலுக்கு
ஈடாக எதுவேண்டுமென்றாலும்
கொடுக்கலாம்

ஒரு விண்ணப்பம் மட்டுமே
கம்பெனியின் போனஸ் போடும்வரை
கொஞ்சம் காத்திரு

சம்பளத்திற்கு செலவிருக்கிறது....

#தயாஜி

அக்டோபர் 07, 2022

கண்ணீர்க்குடி நாகங்கள்


கண்ணீரைச் சுமக்க கைக்குட்டையொன்று எப்போதும் வேண்டுமோ நமக்கு

இங்கு காரணங்களின்றி கண்ணீர் வருவதில்லை
சிலரின் காரியங்களில்லாமல் நாம் அழுதிடுவதுமில்லை

நம்மை அழவைப்பதில் அப்படியென்ன ஆனந்தத்தைக் கண்டிடப்போகிறார்கள்
சொல்ல முடியாது
அவர்கள் தின்ற சோறு செரிக்க
யாரும் அழத்தான் வேண்டும் போல

கண்களில் என்ன அட்ச்சயப்பாதிரத்தையா வைத்திருக்கிறோம்
அழ அழ கண்ணீர் வர வர
வறட்சியின்றி வருகை தருகிறது த(க)ண்ணீர்

ஒருத்தனுக்கு அழது சாவதா
இல்லை
ஒவ்வொருவருக்குமாகச் சிரித்து வாழ்வதா என்ற
சுயவிசாரனையே நம் சுயத்தின் விசாரணை

கண்ணீர்ப்பட்ட ஈர
கைக்குட்டையைப்
புன்னகையென்னும் குளிர்நெருப்பில் உலர வைப்போம்
கண்ணீரை விட பலம் கொண்ட ஆயுதம்
புன்னகை என
உணர வைப்போம்

கண்ணீர்க்குடி நாகங்களை இன்றுமுதல்
பசியில் வைப்போம்....

#தயாஜி

பிப்ரவரி 25, 2022

- ஒற்றைச்சாபம் -


யாரோ இடும் கையெழுத்து
எங்கோ செல்கிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ வீசும் குண்டு
எங்கோ வெடிக்கிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ சுடும் துப்பாக்கி
எங்கோ சுடுகிறது
யாரோ சாகிறார்கள்

யாரோ யுத்தம் செய்கிறார்கள்
எங்கோ நடக்கிறது
யார்யாரோ சாகிறார்கள்

ஏனோ நம் கையிலும்
இரத்தம் படிகிறது
நம் மனதும் துடித்து
அழுகிறது

நாமும் சாகத்தான் போகிறோம்
அதற்குள்
எத்தனை மரண ஓலங்களை 
கேட்டு பைத்தியமாகப் போகிறோமோ

ஏன் வாழ்கிறோம் 
என்பதை விடவும்
ஏன் சாகிறோம்
எனத் தெரியாதது 
உலக உயிர்களின் 
ஒற்றைச் சாபம் போல....



ஜூலை 31, 2021

அப்போதும் இப்போதும்

- அப்போதும் இப்போதும் -

அப்போது
அங்கு ஒரு குழந்தை
பால் குடித்துக் கொண்டிருந்தது

அப்போது
அங்கு ஒரு சிறுமி
படம் வரைந்துக் கொண்டிருந்தாள்

அப்போது
அங்கு ஒரு சிறுவன்
விளையாடிக் கொண்டிருந்தான்

அப்போது
அங்கு ஓர் அம்மா
சமைத்துக் கொண்டிருந்தார்

அப்போது
அங்கு ஓர் அப்பா
வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்

அப்போது
அங்கு ஒரு பள்ளிக்கூடம்
நடந்துக் கொண்டிருந்தது

அப்போது
அங்கு ஒர் ஓடை
ஓடிக் கொண்டிருந்தது

அப்போது
அங்குச் சில பாட்டிகள்
வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தார்கள்

அப்போது
அங்குச் சில தாத்தாக்கள்
கலந்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்

இப்போது
இங்கு ஒரேயொரு
நட்சத்திர நீச்சல் குளம்
இருக்கிறது
டிக்கட் உள்ளவர்களுக்கு
அனுமதியுடன்


#தயாஜி

ஜூலை 30, 2021

- முகவரியற்ற கடிதம் -

 - முகவரியற்ற கடிதம் -


ஏன் எழுதுகிறேன்
என்கிற கேள்வியின்
நுனியில் அமர்ந்துக் கொண்டே
எழுதவேண்டி உள்ளது

பதில் கிடைக்காத
எத்தனையோ கேள்விகள்
இதனையும் இணைத்துவிட
தோன்றவில்லை
விட்டு விலகவும்
முடியவில்லை

உலகின் ஏதோ ஒரு
மூலையில்
அழுபவனுக்கு அருகில்
நானும்தான் அழுதேன்
என ஆறுதல் செல்வதற்கு

பெயர் தெரியாத
மனிதனொருவனின்
சொல்ல முடியாத துயரில்
பங்கு கொள்வதற்கு

அழுது அழுது
ஆவப்போவது ஒன்றுமில்லை
என்கிற அனுபவத்தைச்
சொல்லிச் செல்வதற்காவது
ஒருவன் எழுத வேண்டாமா
சொல்லுங்கள்

#தயாஜி

- யாராக பிறக்கலாம் -


- யாராக பிறக்கலாம் -

நிசப்தத்தின் பேரிரைச்சலைத் 
தனிமையில்
கேட்பதென்பது
கண்களைக் கட்டி கடலில்
தள்ளிவிடுவது போலானது

உதவிக்கு அழைக்கவும் முடியாது
உடன்
குதித்தவர்கள் யாரென்றும் தெரியாது

மங்கிப்போன மின்விளக்கின்
கீழ்
அழுவது
வேறு யாரோ அல்ல
நிச்சயம் என் கனவுதான்

அதோ நிழலாக தன்னை
நினைத்துக் கொண்ட
நாயின் வாலொன்று
வெளிச்சம் வரும் வரை
அசைமாட்டேன் என்கிறது

நீ நிழலல்ல
நிஜமென
யார்தான் சென்று சொல்வது

எதிர்கால ஆசை
தலைப்பில் எழுதிவைத்த நேரத்தில்
எதையாவது பூசி
தோளை வெளுத்திருந்தால்
கறுப்பாக இல்லாமல்
கல்லூரியில் இடம் பெற்றிருப்பேன்

படித்ததை
எழுதி பெற்ற
மதிப்பெண்களைவிட
யார் வீட்டில் என்னவாக பிறந்தோம்
என்ற அடையாளமே
போதுமானதாக இருக்கும் போது
எதற்கு இத்தனைச் சிரமங்களில்
பரிட்சைக்கு பழகுகின்றோம்

ஆனால் ஒன்று
நாயாகக்கூட பிறக்கலாம்
நாடற்வனாக பிறக்கவே கூடாது

- நேசத்திற்குரிய இரவுகளே -

 - நேசத்திற்குரிய இரவுகளே -


இரவுகள் சுதந்திரமானவை
கண்ணைச் சூழ்ந்த
இருளில் திரையில்
யாரை வேண்டுமானாலும்
வரச்சொல்லி அழைக்கலாம்
எந்த வாசத்தையும்
முகர்ந்துக் காட்டலாம்
எந்த உணர்விலும்
வாழ்ந்துப் பார்க்கலாம்

எப்போதோ செய்த தவறுக்கு
வருந்தி அழலாம்
நண்பர்கள் செய்த துரோகத்தை
மீண்டும் காணலாம்

அமைதியின் பேரிரைச்சல்
காதுகளை கிழித்தாலும்
சிரித்துக் கொள்ளலாம்

இரவுகள் எப்போதும்
தெய்வீகமானவை
அதன் ஆழம் அறிய
இருளின் இருளாக
கரையவேண்டும்
நம் நிழலாக நாமே
பிறக்க வேண்டும்
ஒட்டிக் கொண்டிருக்கும் உடலை
ஒதுக்கி
சுவர்களில் பிரதிபலிக்க வேண்டும்
நிழலானப் பின்பும்
நிச்சயம் நினைவுகள்
வந்தேத்தீரும்
சமாளிக்க கொஞ்சம்
தைரியமும் கொஞ்சமேனும்
அழுகையும்
வேண்டும்...

- தயாஜி

- பகல்கள் விற்பனைக்கு -

 - பகல்கள் விற்பனைக்கு -

உங்கள் இரவுகளை
எனக்களிக்க இயலுமா
பதிலாக என் பல பகல்களைத்
தந்துவிடுகிறேன்
எனக்கு இரவுகள் போதும்
எல்லார்க்கும் உறக்கம்
உண்டானப்பின்னேதான்
ஏதோ கொஞ்சம்
அழ முடிகிறது
அழ அழ மட்டுமே
மனம் லேசாகிறது
அழுதப்பின்னே அதன்
பாரம் இரட்டிப்பாகிவிடுகிறது
எத்தனைக் கனவுகளுடன்
கால்தடம் வைத்தோம்
அத்தனையுமா அடைந்துவிடுகிறோம்
பித்தனைப் போல் அலையவும்
முடியவில்லை
புத்தனைப் போல் அமரவும்
இயலவில்லை
அழும் கண்ணீரோசையில்
காதுகள் கொஞ்சமேனும்
அடைத்துக் கொள்கின்றன
தேம்பித் தேம்பி அழவும்
விம்மி விம்மி ஆழவும்
காரணங்களா இல்லை
ஏதோ ஒன்று
காத்திருப்பதாக
நமக்கு நாமே சொல்லிக்
கொள்ளும் ஆறுதல்களுக்கு
பஞ்சமில்லாத பகல்களை
எடுத்துக் கொண்டு
நிசப்தமான இரவுகளை
கொடுத்து உதவுங்கள்
தூரத்து நட்ச்சத்திரங்களுடனாவது
பேசிவிட்டு வருகிறேன்
அவை போலியாய் புன்னகிக்க
கற்றுக்கொள்ளாதவை....

ஜூலை 08, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’

 புத்தகவாசிப்பு_2021 ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’

தலைப்பு –‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’
வகை – கவிதை தொகுப்பு
எழுத்து – கவிஞர் சுபா செந்தில்குமார்
வெளியீடு – யாவரும் பதிப்பகம்
புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)



            கவிதை வாசித்தல் என்பது மனநிலையைத் தன்நிலை மறக்கச் செய்யும் வழிமுறை. வைரம் தன் மீது படும் காட்சியை ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு வடிவமாக காட்டுவது போல கவிதைகள் வாசிக்கும் பொழுது அது ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கின்றது. நான் வாசித்த கவிதையிலும் நீங்கள் வாசித்த கவிதையிலும் இருவேறு அனுபவங்களும் பயணங்களும் நமக்கு அமைந்திருக்கும். அது கவிதையின் வித்தையா அல்ல நம் மனநிலையில் வெளிப்பாடா என்பது தேடிக் கண்டறிய வேண்டியக் கேள்வி. கவிதை வாசிக்கும் மனநிலைக்கு ஒப்பானதுதான் அதனை வரிசைப்படுத்தி எழுதுவதும். வாசிக்கும் போது கண்ட திறப்பும், அதனை எழுதும் போது காணும் திறப்பும் சமயங்களில் வெவ்வேறாக இருக்கும். ஆனால் அது சென்றடையும் இடம் ஒன்றாக இருக்கும்.

            சமீபத்தில் வாசித்து முடித்த கவிதை தொகுப்பு ‘கடனெலும் வசீகர மீன் தொட்டி’. கவிஞர் சுபா செந்தில்குமார் எழுதியுள்ளார். தலைப்பைப் போலவே உள்ளிருக்கும் கவிதைகளும் வசீகரிக்கவேச் செய்தன.


            புத்தகத்தை எடுத்ததும், தலைப்பில் கொஞ்ச நேரம் மனதை அலையவிட்டேன். கடலை எப்படி மீன் தொட்டியாக்குவது? மீன் தொட்டியை எப்படி வசீகரிக்க வைப்பது? இந்தக் கவிஞர், உண்மையில் கடலை கண்ணாடி மீன் தொட்டியில் பார்க்கிறாரா அல்லது கண்ணாடி மீன் தொட்டியைக் கடலாகப் பார்க்கிறாரா?

            ஏழு முதன்மை தலைப்புகளில் மொத்தம் 64 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஏழு கவிதைத் தொகுப்புகளை வாசித்தது போன்ற வெவ்வேறான அனுபவத்தை இக்கவிதைத் தொகுப்பு கொடுக்கின்றது. சில இடங்களில் முதன்மைத் தலைப்புகளுக்கு ஏற்றதாய் கவிதைகள் ஒரே நேர்க்கோட்டில் செல்கிறது. சில இடங்களில் வழி மாறிய கவிதைகள் அம்முதன்மைத் தலைப்பில் அமைந்துவிட்டதாகவும் தோன்றுகின்றது.

            அம்மாவை இழந்த அப்பாவைச் சொல்கிறது ‘மனமுதிர் காலம்’ (ப-13). அம்மாக்களை இழந்த நாட்களை அப்பாக்கள் கழிப்பது மிகவும் துயரமானது. மீண்டும் அவர்கள் குழந்தையாகின்றார்களாக மனம் உடைந்து பித்து பிடித்துவிடுகின்றதா என்கிற கேள்வி எழவைக்கும் அவர்களின் நகரும் நாட்களை ஆழமாக கவிதையில் பதிவு செய்துள்ளார் கவிஞர். பூரான் கடித்துவிட்டதால் திண்டு திண்டாய் தெரியும் அப்பாவின் கால்களில் அம்மாதான் பூத்திருப்பதாக அப்பா சொல்லிச் சிரிப்பதை வேறெப்படிச் சொல்வது.

            கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, அவர்களின் இயல்பு குணம் மாறாது. இதனை மீண்டும் நினைக்க வைக்கும் கவிதை, ‘ஊற்றுக்கண்ணில் வழியும் ஈரம்’ (ப-14). தன் அப்பா ஊற்றுக்கண்ணைக் கட்டெடுத்தக் கதையை கிணற்று நீர் எடுக்கவரும் எல்லோரிடமும் சொல்லும் அம்மா இன்று தண்ணீர் சுமந்து வரும் அரசாங்கக் குழாய்க்காக காத்திருக்கின்றார். அப்போதும் அவர் வெயிலில் ஓய்வெடுக்கும் ஊழியர்களின் தாகத்தை இளநீர் கொடுத்து தீர்க்கின்றார். தான் யார் என்று முழுமையாக உணர்ந்தவர்கள் எல்லா நேரத்திலும் அவர்களாகவே இருப்பார்கள். இக்கவிதையில் வரும் அம்மாவை அப்படியாகத்தான் பார்க்கின்றேன். தான் இழந்துவிட்டது குறித்த வருத்தம் இருந்தாலும், இதுநாள் வரை தான் வைத்திருந்ததின் பெருமிதத்தை அதிகமாகவே அம்மா சுமந்துக் கொண்டிருக்கின்றார்.

‘பரிட்சயம் இல்லாத ஆட்டுக்குட்டி போல
தபால்காரரிடம் முகம் உயர்த்தும் என்னிடம்….’

            என்கிற வரி ‘விலாசம் தொலைந்த வீடுகள்’ (ப-16) என்கிற கவிதையில் வருகின்றது. வார்த்தைகள் ஒரே பாய்ச்சலாக காட்சிகளாவதாக நான் உணர்ந்தேன். இங்கு மட்டுமல்ல தொகுப்பில் பல இடங்களில் வார்த்தைகள் சில அடிகளில் காட்சிகளாக பரிணாமம் பெற்று கண்முன்னே நிழலாடுகின்றன. இக்கவிதை வீடு என்பது பிறருக்கு என்னவாக தெரிகின்றது என ஆரம்பமாகின்றது. ஒரு வீடு யாருக்கு எப்படியாக இருக்கிறது என்பது சாதாரணம்தான். ஆனால் அதனை கவிதையாக்கி, அக்கவிதையை இன்னொரு இடத்திற்கு கவிஞர் எடுத்துச் செல்கிறார்.

            ‘பொன்மஞ்சள் வாசம்’ என்னும் கவிதை (ப-17) அம்மாவை இழந்த அப்பாவைச் சொல்கிறது. அம்மா இருக்கும் வரை வீட்டில் யாராக இருந்தார் என்பது அவர் இல்லாத போதுதான் தெரிகிறது.

            எல்லோரும் ஒரு காட்சியைப் பார்க்கிறார்கள். ஆனால் பார்ப்பவர் யாராக இருந்துப் பார்க்கிறார் என்பதைப் பொறுத்து அக்காட்சி தன்னை விரிவு செய்துக் கொள்கிறது. ‘தினசரி’ (ப-18) என்னும் கவிதையில் வீடுகளுக்கு நாளிதழ் போடும் சிறுவனைப் பேசுகின்றது. எத்தனை வகையான மனிதர்கள் எத்தனை வகையாக அச்சிறுவனை அணுகுகின்றார்கள் என சொல்லும் கவிதையில் நாம் இதில் யாராக இருக்கின்றோம் என்கிற கேள்வியைக் கேட்கிறது.

            ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’ என்னும் தலைப்பிலான கவிதைபக்கம் 20-ல் உள்ளது. இங்கு வசீகரமானதாக இருப்பது கடலா அல்லது மீன் தொட்டியா என்கிற எனது தொடக்கக் கேள்விக்கு பதில் சொல்லும் கவிதை. இரு வேறு தேசத்தில் வசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கையை அந்த வசீகர மீன் தொட்டியாக கவிஞர் சொல்லியுள்ளது வசீகரிக்கச் செய்யும் அதே வேலையில் வருந்தவும் வைக்கின்றது. இக்கவிதை ‘கடலைச் சேராத நதிகள்’ என்கிற முதன்மைத் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறே ‘நிலம் பூத்த நதி’, ‘பெருள்வயுற் பிரிதல்’, ‘சரளைக் கற்கள் விளையும் வயல்’, போன்ற கவிதைகள் புலம் பெயர்ந்து, நாடுவிட்டு நாடு சென்றவர்கள், சொந்த நிலத்தை காப்ரெட் கரங்களுக்கு தாரை வார்த்தவர்களைப் பேசுகிறது.

            தன்னைப் போன்றே துன்பத்தில் துவண்டிருக்கும் மனிதனைக் காணும் இன்னொரு மனிதன் என்ன செய்வான். நாம் என்ன செய்வோம். இக்கேள்வியை எழவைக்கும் கவிதையாக ‘பியானோ என்பதொரு நீண்ட சவப்பெட்டி’ (ப-31). பியானோ எப்படி சவப்பெட்டியாகிறது என்பதுதான் கவிதை. ஆனால் அதனிலும் இசை வாசிக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்தான்.

            வாழ்க்கையை எப்படி புரிந்துக் கொள்வது. இங்கு எது நியாயம் எது அநியாயம் என யார் முடிவெடுக்கின்றார்கள். இக்கேள்விக்கு என்ன பதில் கொடுத்தாலும் அதற்கு ஈடாக இன்னொரு கேள்வியை நம்மால் கேட்க முடியும். ‘மழைக்கரம்’ (பக்கம்-45) என்னும் கவிதை இப்படியாக வருகிறது;

ஆதரிக்கப்படாத
சாலை ஓவியமொன்றை
தன் நிறமற்ற விரல்கள் நீட்டி
வழித்துச் சேகரிக்கிறது மழை

            சாலை ஓவியத்தை அழித்ததற்காக மழை மீது கோவம் வருகின்றது. ஆதரிக்கப்படாத சாலை ஓவியம் தானே என சமாதானம் ஆகிறது. மழை நீருக்கு நிறமில்லாததால்தான் ஓவியத்தின் அருமை தெரியவில்லை என சொல்லலாம். ஆனால் தனக்கு நிறமில்லாவிட்டாலும் சாலை ஓவியத்தை வழித்து தன்னகத்தே சேகரிக்கும் மழையை எப்படி திட்டுவது. இப்படி பல கேள்விகளையும் பல பதில்களையும் சுழற்கின்னம் போல சுற்றி வர வைக்கிறது கவிதை. இதில் எந்த ஒரு வார்த்தையை எடுத்தாலும் கவிதை அதன் இயல்பை இழந்துவிடும் என்பதுதான் இக்கவிதை தரும் ஆச்சர்யம்.

            ‘வளர்சிதை’ (ப-55) பாலியல் வன்கொடுமைக்கு பலியான மகளைச் சொல்லும் கவிதை. கண்களைக் கலங்க வைக்கிறது.


            ‘பேராண்மையின் பலன்’ (ப-54) என்னும் கவிதை சமகால சமூக அவலத்தைப் பேசுகின்றது. ‘பொன்னகரம்’ சிறுகதையின் கடைசி வரிகளின் வருவது போல; ஆண்மை ஆண் என் பீத்திக்கொள்கிறாயே இதுதானடா உன் பேராண்மையின் பலன் என்பதுபோல முகத்தில் அறைகிறது.

            ‘வேறு வழி இல்லை. காலம் முழுக்க இச்சுமையை நான் தான் சுமக்க வேண்டும்’ சொல்லி ஏதோ ஒன்றை தன் வாழ்நாள் முழுக்க சுமப்பவர்களைப் பார்த்திருக்கின்றீர்களா? அவர்களால் அதிலிருந்து மீளவே முடியாது. அப்படியான மனிதர்கள் பற்றி கவிதையாக ‘உயிர்த்தெழல்’ (ப-60) என்கிற கவிதையைப் பார்க்கின்றேன்.

சிலுவை சுமப்பவர்க்கெல்லாம்
சாத்தியமில்லை
மூன்றாம் நாள்
உயிர்த்தெழல்

            இக்கவிதை நம்பிக்கையை சிதைக்கின்றதா அல்லது உயிர்த்தெழுத்து மீண்டும் வதைபடுவதை விட உயிர்த்தெழாமல் இருந்துவிடு என அன்பு செய்கிறதா?

            இன்னும் பல கவிதைகள் , அதன் வழி பல பார்வைகளுக்கு வழி சொல்லும் அனுபவங்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளது. மீண்டும் மீண்டும் வாசித்து வெவ்வேறான அனுபவங்களைப் பெறலாம்.

            சொல்லப்போனால் கவிஞரின் கவிதைகளில், ஒரு கவிதை மூன்று கவிதைகளாக பிரிந்து பின் பிரிந்த மூன்றும் ஒரு கோட்டில் வந்து சேர்கின்றது. சில கவிதைகளில் வேண்டுமென்றே கவிஞர் நம்மை குழப்புகின்றாரா என தோன்றுகிறது. அதற்கு பதில் மறூவாசிப்பிலோ அல்லது அதற்கான உரையாடல் வழியாகவோ நமக்கு கிடைக்கலாம். சில இடங்களில் வழிந்து சில சம்பங்களைச் சேர்த்திருப்பது போல தோன்றினாலும் கவிதை தரும் அனுபவத்தில் அவ்வரிகள் காணாமல் போய்விடுகின்றன.

            சமீபத்தில் நான் வாசித்து எனக்கு பிடித்தமான கவிதை புத்தகமாக இத்தொகுப்பு இருக்கின்றது.

- அழுகை -


 - அழுகை -


அழுவதற்கே ஆசைப்படுகிறேன்
கண்ணீரில் ஏதோவொன்று
இருந்திடவேச் செய்கிறது
சிலவற்றை நினைக்க
இனித்திடவும் செய்கிறது
ஏதோ ஒன்றை
வெறித்துப்பார்த்து அழட்டுமா
ஏதுமில்லாதததை
நினைத்துக்கொண்டே அழட்டுமா
கண்களில் வழியும்
நீர்மட்டுமா அழுகை
கண்களுக்கேத் தெரியாமல்
வலிப்பதுதானே அழுகை
அழுதுவிட்ட பொழுதில்
பாரம் குறைந்து லேசாகிறேன்
இத்தனைப் பாரத்தை எங்குதான்
பதுக்கியிருந்தேன்
மூச்சு வாங்கிக்கொண்டு அழுகிறேன்
மூச்சு விடுவதற்காகவாவது அழ வேண்டாமா
அழுத கண்ணில் மங்கலாய்த் தெரியும்
உருவங்களின்
உள்ளத்தை எப்படி தெளிவாகக் காண்கிறேன்
சின்ன வயதின் பிடிவாத அழுகை
சிதைத்துப்போன வாழ்விற்கான அழுகை
என அழுவதற்கான
கண்ணீர்த்துளிகளின்
அட்சயப்பாத்திரம் எங்குதான் மறைந்திருக்கிறதோ
எப்போது கலங்கினாலும்
கண்ணீரை வழியவிடுகின்றது
அழுவது ஒன்றும்
அற்பச்செயல் அல்ல
அது ஆன்மாவைச்
சுத்தம் செய்யும் ஆசீர்வாதம்
மனசை லேசாக்கும் மார்க்கம்..

          #தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்