#கதைவாசிப்பு_2020_5 ‘ரசவாதியின் எலி’
#கதைவாசிப்பு_2020_5
கதை – ரசவாதியின் எலி
எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
புத்தகம் – அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது
மொத்தம் இருபது பக்கங்கள் கொண்டிருந்த சிறுகதை.
சில பக்கங்களில் கதையின் போக்கு பிடிபட ஆரம்பிக்கும் போது, பக்கங்கள் முடிந்துவிடக்கூடாது
என எண்ண வைக்கிறது.
சிறுவயதில் மிகவும் துடுக்கான பையனாக இருந்தேன்
என்பார் அம்மா. சமயங்களில் துடுக்கு அதிகமாகி அடியும் வாங்கியுள்ளது நினைவில் இருக்கிறது.
முக்கியமாக சாப்பிட்டவுடன் ஓடுவது குதிப்பது போன்ற சூப்பர்மேன் சாகசங்களை முயன்றிருக்கிறேன்.
அப்படியான சாகச செயல்களுக்கு பரிசாக குடலாத்தம் விழுந்து விடுவதும் உண்டு.
குடலாத்தாம்!. இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிகிறதா.
தோட்டங்களில் வாழ்ந்தவர்களுக்கு நன்கு பரிட்சையமான சொல்தான்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகே நானும்கூட குடலாத்தம் என்னு சொல்லைப் பயன்படுத்துகிறேன்.
இச்சொல் மூளைக்குள் ஏதோ ஒரு குறுக்குச்சந்தில் இந்தனை நாட்களாய் தன்னை மறைத்து வைத்திருந்ததோ.?
சிறுகுடல்
வடிவம் வளைந்து வளைந்து இருக்கும், அது ஒன்றோடு ஒன்று மாட்டிக்கொள்வதைதான் குடலாத்தம்
விழுந்துவிட்டது என்பார்கள். இப்படி மாட்டிக்கொண்டால் வயிற்று வலியும் வயிற்றுப்போக்கும்
சொல்லமுடியாத அளவுக்கு இம்சை படுத்தும். அதனை சரிபடுத்துவதற்கு ‘குடலாத்தம் உருவுதல்’ என்று சொல்லுவார்கள். வயிற்றுப் பகுதியில் சில இடங்களில் தட்டிப் பார்ப்பார்கள்.
அப்படி தட்டும் பொழுது அதன் சத்தத்தை வைத்தும் சில விபரங்களைச் சொல்லுவார்கள். வயிற்றில்
தட்டிய இடங்களில் கட்டைவிரலால் நீவி விடுவார்கள்.
பெயருக்குத்தான் நீவி என சொல்வார்கள். ஆனால் அது குடலை பிழிந்து எடுப்பது போல
வலிக்கும். நீவி முடித்தப்பின் நாற்காலி மேல் நின்று மூன்று முறை குதிக்கச் சொல்லுவார்கள்.
மூன்றாவது குதியில் உடல் பழைய படி உற்சாகமாகிவிடும். மீண்டும் சூப்பர்மேன் சாகசங்களுக்கு
நாம் தயாராகலாம்.
எங்கள் தோட்டத்தில் ஒரு சில பாட்டிகளுக்கு மட்டுமே
குடலாத்தம் உருவத்தெரியும். எண்ணிக்கைக் குறைந்து குறைந்து இப்போது அச்சொல்லே வழக்கில்
இல்லாமல் ஆகிவிட்டவர்களின் மத்தியில் வாழ ஆரம்பித்துவிட்டோம். இப்போதும் வயிற்றில்
வலியும் வயிற்றுப்போக்கும் இல்லாமல் இல்லை. முடிந்தவர்கள் மருத்துவரிடம் செல்கிறார்கள்.
முடியாதவர்கள் மருந்துக்கடைக்குச் செல்கிறார்கள். ஒரு முறை மருந்து உள்ளே சென்றுவிட்டால்
அடிக்கடி வந்துபோவதற்கான ஏற்பாடுகளை அது செவ்வனே செய்துவிடும்.
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம். ஐந்து நிமிடங்கள்
கூட ஆகாது. குடலாத்தத்தை உருவி விடலாம். எந்த கட்டணமும் இல்லை. வீட்டில் ஒருவர் அதை
கற்று வைத்திருந்தாலே போதும். ஆனால் இல்லை. யாரும் கற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதில்
ஆர்வமும் இல்லை. அது அவர்களுக்கு கௌரவமாகவும் இல்லை.
இந்த
மாற்றத்திற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? விஞ்ஞான வளர்ச்சியா அல்லது மரபு மருத்துவத்தின்
வீழ்ச்சியா? விஞ்ஞானத்தில் வணிகம் புகுந்துவிட்டதா? அல்லது தன்னைத்தானே குணமாக்கிக்கொள்ள
மதம் வழிவிடவில்லையா?
கதையின் நெடுக்க இந்த கேள்விகளே வாசிக்கின்றவர்
மனதில் நிழலாடும். ஒரு பக்கம் இதுதான் சரியென நினைக்கும் பொழுது அதை உடைத்து மறுபக்கத்திலும்
நியாயம் இருப்பதை எஸ்.ரா சொல்லும் பொழுது என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. மீண்டும்
சில பக்கங்களை பின்னோக்கி வந்து நான் எதைவைத்து
சரியென முடிவெடுத்தேன் என மீண்டும் நினைக்கிறேன். சூன்யக்காரிகள் விஞ்ஞானிகள் மதபோதகர்கள்
என்ற இந்த மூன்று முக்கோணங்கள் ஒன்றையொன்று எப்படி மற்றதைவிட முன்னனி வகிக்க முயல்கின்றன
என்கிற விவாதம் கதையின் நாயகனின் கேள்விகளாக எழுந்துக்கொண்டே வருகின்றன. ஏன் இந்த மூன்றும்
ஒன்றாக பயணிக்க இயலவில்லை என்பதுதான் வாசகர்கள்
மனதில் ஆசிரியர் எழுப்ப முயலும் கேள்வி.
‘ரசவாதியில் எலி’, எலியை வைத்து ஆராய்ச்சி செய்கினற
விஞ்ஞானி எப்படி ஒரு கட்டத்தில் தன்னையே ரசவாதியாக மாற்றிக்கொண்டு அதற்கான நியாங்களை
தேடுகிறார் என்பதுதான் கதை. அதுமட்டுமா கதை. இல்லை. அதனையும் தாண்டி தன்னையே பரிசோதனை
எலியாக மாற்றி, என்ன காரணத்திற்காக பயணிக்கிறார் என யோசிக்க வைப்பதுவும் கதைதான். சொல்லப்போனால்
அந்த கேள்வி நம் மனதில் நம்முடைய பல நினைவுகளை மீட்டெடுக்கும்.
-
தயாஜி
0 comments:
கருத்துரையிடுக