பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

தயாஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தயாஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிசம்பர் 27, 2021

- உயர்திணையும் அஃறிணையும் -

   "நாய்ங்களுக்கு இடமில்ல......" என சொல்லிவிட்டார்கள். குமாருக்கும் அவனது அம்மாவிற்குமே இடம் போதுமானதாக இருப்பதாக சொன்னார்கள். அந்த நாயை தான் கையிலேயே பிடித்துக் கொள்வதாக குமார் கேட்டாலும்,  சொன்னாலும், கெஞ்சினாலும், கண்ணீர் மல்கினாலும் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.

    தன் வீட்டு நாயைத்தான் காப்பாற்ற முடியவில்லை. இந்த நாயையாவது காப்பாற்றலாம் என்கிற முயற்சியும் வீண். இந்த திடீர் வெள்ளம் பல எதிர்ப்பாராதவற்றை ஏற்படுத்திவிட்டது. எதை இழந்தோம் எதை மறந்தோம் என்கிற பிரக்ஞை இன்றியே உயிர் பயத்தில் பலரும் பலவாறு ஆகிப்போனார்கள். 


    வரலாறு காணாத வெள்ளம், வீட்டுக்கூரை வறை உயர்ந்து கொண்டுக்கிறது. அவசரகால உதவிகளை அரசாங்கத்தை எதிர்ப்பார்க்காமல் அரசியல்வாதிகள் தூங்கி விழிப்பதற்கு முன்னமே மக்கள் தாங்களாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 


       இரண்டாவது முறையாக வந்த படகில் சென்றுக்கொண்டிருக்கும் போதுதான் குமாருக்கு அந்த நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.  அது ஒரு பாவப்பட்ட குரலாக இனி என்னால் முடியவே முடியாது என்கிற ஒலியாக அது கேட்பதை குமார் மட்டுமே உணர்ந்தான்.


     உடல் முழுக்க வெள்ளத்தில் நனைந்த மனிதர்களின் வெறும் கைகளின் தங்களின் உயிரை பிடித்துக் கொண்ட இந்தப் பயணத்தில் அஃறிணைகளுக்கு இடமிருக்கவில்லை.


     தூரத்தில் அந்நாய் மெல்ல மெல்ல மூழ்கத்தொடங்குகிறது, அதன் அருகில் குழந்தையொன்று மெத்தையோடு மிதந்தவண்ணம் மெல்லியக்குரலில் கத்திக்கொண்டிருக்கிறது.


     எப்படியாவது அந்த உயர்திணையை  இந்த அஃறிணை காப்பாற்றியப் பிறகே  முழுவதுமாக மூழ்கும்; அதுவரை அது குரைத்துக்கொண்டுதானே இருக்கும். 

 

ஜூன் 14, 2020

சீ.முத்துசாமியின் 'மண்புழுக்கள்'

சீ.முத்துசாமியின் மண்புழுக்கள் (மலேசிய) நாவல் குறித்து..



வழக்கமாக நம் நாட்டு படைப்பாளிகளால்  எழுதப்படும் படைப்புகளில், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்காலக்கட்ட தமிழக தாக்கங்கள் ஓரளவேனும் இருந்துவிடுகிறது. திராவிட எழுத்தின் எழுச்சி மொழி, மு.வ மொழி என ஒப்பிட்டுப்பார்த்து இந்த நிலைப்பாட்டை அறிய முடியும். அதற்கான காரணம் வாசிப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு படைப்பாளி இயங்குவதாகவும் இருக்கலாம். ஒருபடைப்பு அதன் அசல் தன்மை குன்றாமல் இருக்க அதனை எழுதுகின்ற படைப்பாளியிடம் அவர் மண் சார்ந்த அனுபவம் இருக்க வேண்டும் எனதான் தோன்றுகிறது. அது அனுபவமாகவும் இருக்கலாம்; மண் மீதான பிடிப்பாகவும் இருக்கலாம். அந்த பிரியம் படைப்பாளியின் மொழியின் ஊடே தன்னை காட்டிக்கொள்ள தவறுவதில்லை. அதனால்தான் நூல்கள் மூலம் மட்டுமே இலக்கியம் கற்று அதை எழுதுகின்ற படைப்பாளிகளின் ஆக்கங்கள் பாடநூல்களை ஒத்து திட்டமிடப்பட்ட கட்டுச்செட்டான படைப்புகளாக தங்கிவிடுகின்றன. வாழ்விலிருந்து உருவி இலக்கியமாக எழுதப்பட்ட படைப்புகள்தான் தனித்துவமான இடங்களைத் தொடுகின்றன.

மண்புழுக்கள், சீ.முத்துசாமியின் தன் மண் மீதான பிரியத்துடன், தோட்ட வாழ் மக்கள் மீதான அக்கறையுடன், அவர்களின் எதிர்காலம் குறித்த ஐயப்பாடுகளுடன்  மண்ணுள் நுழைந்து அலையும் ஒரு மண்புழுவைப்போலவே தோட்டத்தில் அலைந்து திரிந்த பச்சை மணம் மாறாமல் எழுதியுள்ளார்.

கோழிகளை கே.எஃ.சியிலும், மீன்களை சீன சாப்பாட்டு கடைகளிலும் பார்த்துத் தெரிந்து கொள்கின்ற நவநாகரீக சமூகத்தினராக நாம் ஆகிவிட்ட நிலையில், ஒன்று – இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் சென்று பார்த்து, நாம் வாழ்ந்த வாழ்வை தெரிந்துக்கொள்ள இப்படைப்பு ஒரு ஆவணம். மலேசிய தோட்டத்தின் பாட்டாளிகளின் கதைகள் அவர்களின் வாழ்வியல் முறைகள் அவர்களின் மொழி அவர்களின் நம்பிக்கை அவர்களின் மனித நேயம், அவர்கள் மிருக குணம் என ஒரு முழுமையான படைப்பாக மண்புழுக்கள் நாவல் தன்னை வெளிக்காட்டுகிறது.

ஆட்டுக்காரன் வீட்டில் ஆட்டோடு ஆடுகளாக வளரும் ஒரு ஆட்டுக்குப் பெயர் சாமி கெடா. ஆடுகள் வழக்கமாக இலை தழைகளைச் சாப்பிடும். இந்த சாமி கெடா  தோட்டத்தில் திறந்திருக்கும்  வீடுகளில் நுழைகிறது. சமையல் அறைவரை சென்று அங்கிருக்கும் உணவுகள் அத்தனையையும் தின்றுவிட்டு ஏப்பாம் விடாத குறையாக மிடுக்காக உலா வருகிறது. அதனை விரட்டவும் முடியாமல் திட்டவும் முடியாமல் மறக்காமல் வீட்டை பூட்டிவிட்டு அங்குள்ளவர்கள் தத்தம் வேலைகளைச் செய்கிறார்கள். இவ்வாறு தோட்ட மக்களின் இயல்பான வாழ்வியலை விலங்குகளின் வழியும் இந்நாவல் விளக்கிச் செல்கிறது.

இந்நாவலில் தனித்து தெரிவது சீ.முத்துசாமியின் மொழி. மண்ணின் மணம் கொண்ட மொழி அது.  அந்தந்த கதாப்பாத்திரங்கள் போலியற்ற உணர்ச்சிகளால் தங்கள் மொழியைப் பேசிச்செல்கின்றார்கள். அவை தமிழ்தான் என்றாலும் அந்த வகை தோட்ட மொழியில் இருந்து  நாம் நம்மை  எவ்வளவு தூரம் துண்டிந்துக்கொண்டு வந்துவிட்டோம் என நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர் தமிழ், திருநெல்வெலி தமிழ், மெட்ராஸ் மொழி என்று பேச முடிகின்ற- அப்படி பேசினாலும் புரிந்துகொள்கிற- நாம்தான் நம் முன்னோர்கள் பேசிய தோட்ட மொழியில் உருவான ‘மண்புழுக்களை’ சிக்கலான மொழிநடை என்கிறோம்.  நாம் நமது வட்டார மொழியில் இருந்து அந்நியமாகிவிடவில்லை; நமது வேரில் இருந்தே நம்மை துண்டித்துக்கொண்டு எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறோம். மூச்சுவாங்க நின்று பார்க்கும் போது கடந்துவிட்ட தூரத்திலும் நமக்கு ஒன்றும் தெரியாது; கடந்துப்போக வேண்டிய தூரமும் கண்ணுக்குத் தெரியாது அந்தரத்தில் அந்நியனாக நிற்கிறோம். இந்நாவல் நாம் இழந்துவிட்ட மொழியினூடாக இறந்தகாலத்தில் பயணிக்க கொஞ்ச நேரத்தில் நம்மையும் உள்ளே இழுத்துவிடுகிறது. மூதாதையரின் உயிரணுக்களின் வேலை போல அது. நாவல் வாசிக்கையில் சாத்தியமாகிவிடுகிறது. இன்னும் சில காலம் கழித்து தோட்ட மொழிகள் குறித்து யாராவது தெரிந்துக் கொள்ள முயன்றால் மண்புழுக்கள் முதன்மையாக தரவாக இருக்கும். உதாரணமாக தீம்பார், பாசா, ஆம்பர், வங்குசா, தாசா கத்தி, குசினி, மணக்கட்டை, தக்கர், ச்சின்னாங்கு, ஜின்னு என அடுக்கிக்கொண்டு செல்லலாம்.  இவை  தமிழும் ஆங்கிலமும் மலாயும் கலந்துவிட்ட புதிவித வட்டார மொழியாக நாவல் முழுக்க பின்னிக்கிடக்கின்றன. இவை அசல் தோட்ட மக்கள் பயன்படுத்தி அவர்களின் வாழ்வியல் மொழி.

ஆட்டுக்காரன் சின்னக்கருப்பன் குறித்த அறிமுகத்தோடு நாவல் தொடங்குகின்றது. நாவலில் நிறைவு அத்தியாயத்தில் ஆட்டுக்காரன் தற்கொலை செய்துக்கொள்கிறான். ஆனால் நாவலில் கதாநாயகன் அவனில்லை; வேறு எவரைச் சொல்வதென்றும் தெரியவில்லை. ஆட்டுக்காரனில் தொடங்கி ஒவ்வொரு கிளையாக நாவல் தன்னை வளர்த்துக்கொண்டே போகிறது. ஒருமுறை நாவலில் வந்தவர்கள் மீண்டும் வருவது அறிதாகவே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் யாரென்றும் எப்படியானவர்கள் என்றும் அவர்களின் வாழ்வையும் நாவலாசிரியர் சொல்லிவிடுகின்றார்.

அதில் ஒருவர் சாலபலத்தார். வெற்றிலை கொள்ளை வைத்திருப்பவர். இன்றும் கூட வெற்றிலை கொடி வைப்பதற்கு கைராசிக்காரராக இருக்க வேண்டும் என சொல்வது உண்டு. ஒருபடி மேலே போய், ஒத்துக்கொள்ளாதவர்கள் யாரும் வெற்றிலை கொடி நட்டால் அது அவர்களுக்கே பாதகமாக அமைந்துவிடும் என்ற அதீத கற்பனை கதைகளும் தோட்டங்களில் உண்டு. தோட்டங்களில் முக்கியக் கதாபாத்திரமாக இருக்கும் இதுபோன்ற வெற்றிலைக்காரர்கள் வழி சீ.முத்துசாமி நாவலை உயிர்ப்பாக்குகிறார். அதேபோல முனியனின் மனைவி.

பாகவதர் திரைப்படத்தை லயித்து ரசித்து பார்க்கக்கூடியவள். வேறெந்த தேவையும் எதிர்ப்பார்ப்பும் அவளிடம் இல்லை. ஒரு முறை எரிச்சல் கொண்ட கணவன் இப்படி பைத்தியமாக பாகவதர் படம் பார்க்கிறயே, அதில் என்னதான் இருக்கு என கேட்க, “ஆமாண்டா  நா அவர புருஷனாதான் நெனக்கறேன்… நீ குடிச்சிட்டு வந்து அடிச்சி தொவச்சி நாயா உளுந்து பொரள்ரப்ப நா அவரதான்டா நெனைச்சி படுத்து கெடக்கறேன்… ஏன்டா அதுல என்ன குத்தம் ? பொம்பளங்க மேல அவருக்கு எத்தன மதுப்பு. அன்னக்கு பார்த்தயே படம்.. கட்டன பொண்டாட்டிய கண்ணு கலங்காம பார்த்துக்க எத்தன கஷ்டப்பட்டாரு அதில…நீ செய்வியாடா..?” என மனதில் பேசி முடிக்கின்றார். இந்நாவலில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வாறு உள்ளத்தில் உள்ளதை பேசியிருப்பது இவ்விடத்தில் மட்டும்தான் . ஒருவகையில் இந்தக் கதாபாத்திரம் தோட்டத்தின் பல பெண்களின் கூட்டு மனமாக வருகிறாள்.

மூன்றாவது பாத்திரம் புட்டுக்காரன். தமிழகத்தில் இருந்து சஞ்சிக்கூலியாக வந்த கதையை தொப்புளானிடம் பேசுவது நமக்கு எளிய வரலாற்றுச்சித்திரத்தைக் கொடுக்கிறது. வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருந்த நிலமையும் அதன் பின் நாட்டை கைப்பற்றவிருக்கும் ஜப்பான்காரர்களின் அராஜாகம் வரைக்கும் அவர் சொல்லிச்செல்கிறார். இவ்வாறு தோட்ட மக்களின் பிரதிநிதிகளாக அறிமுகமாக இவர்களுக்கு நாவலின் மையத்தில் முக்கிய இடம் இல்லாவிட்டாலும் தோட்டம் எனும் நிலத்தின் வரலாற்றில் முக்கிய இடம் உண்டு.

தோட்டத்தில் வாழ்தவர்களுக்கென்றே பிரித்தியேகமான ஆமானுஷ்ய அனுபவங்கள் இருக்கும். செழிப்பாக இருந்து, பின் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர்களாலும் ஜப்பானியர்களாலும் தன் சொந்த இனத்தாலும் கொல்லப்பட்ட மனிதர்களின் ஆன்மா அவ்வளவு சீக்கிரத்தில் அம்மண்ணை விட்டு விலகிடாது எனும் நம்பிக்கை ஆழமானது. சமயங்களில் தோட்டத்தில் ஏற்பட்ட அமானுஷ்யமோ அல்லது பேய் பற்றிய அனுபவத்தையோ இப்போது பகிர்ந்தால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இவ்வனுபவங்கள்தான் தோட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பச்சையம். ஆட்டுக்காரனின் தங்கை அஞ்சலை தற்கொலை செய்துக்கொள்கிறாள். அவளே பேயாக வருவதாக நாவலில் வருகிறது. சமயத்தில் இருளாண்டி மனைவிக்குப் பேய் பிடிக்க, பூசாரியை அழைக்க ஓடுகிறார்கள். ஆனால் பூசாரியையும் பேய்கள் விட்டுவைப்பதில்லை. இருட்டில் யாருக்கோ காத்துக்கொண்டிருக்க வேப்பில்லையை ஒடிக்கச்சென்ற வயித்தன் வருவதாக புசாரி குரல் கொடுத்திருக்கிறார். சலனமின்றி அரிக்கேன் விளக்கை யாரோ தூக்கிகொண்டு பூசாரியை நோக்கி வருகிறார்கள். சற்று அருகில் வந்ததும் தன் கையில் பிடித்திருந்த அரிக்கேன் விளக்கில் தனது முகத்துக்கு அருகில் வைத்து கண்களை சுருக்கிப் பார்க்கிறார்கள். பூசாரி யாரோ தூக்கிக்கொண்டு வந்தது போல தெரிந்த அரிக்கோன் விளக்கு அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. அந்தரத்தில் இருந்த அரிக்கேன் விளக்கு சற்று நேரத்தில் அப்படியே தீப்பந்தம் போல மரத்தின் உயரத்தின் எரியத்தொடங்குகிறது. மயங்கி விழுகிறார் பூசாரி. தோட்ட பின் புலத்தில் உள்ளவர்களால் இந்த மாதிரியான அரிக்கேன் விளக்குகள் மாதிரியான சம்பவங்களை உள்வாங்கிவிட முடியும். உச்சி நேரத்தில் தன்னந்தனியாக தீம்பாருக்கு போகின்ற சமயத்தில் கடவுள் பெயரை சொல்வார்களோ இல்லையோ எப்போதொ இறந்து அங்கு ஆவியாக நடமாடுவதாக சொல்லப்படும் காத்துகருப்புகளிடம் “தோ பாரு நான் பாட்டுக்கு இப்படியா வேலையா போறேன்.. நீ பாட்டுக்கு நீ இரு… நான் உன்னை தொந்தரவு செய்யல நீயும் என்னை தொந்தரவு செய்யாத” என பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.

தோட்டத்து கோவிலில் எதையோ பாறிகொடுத்தது போல புதியவர் ஒருவர் அமர்ந்திருக்கின்றார்.  யாரென்றே அறிமுகம் இல்லாதவர். பிரம்மை பிடித்தவர் போல இருக்கிறவர். ஆனாலும் ஆட்டுகாரனின் கண்களில் பட்டதும் அவரை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். பத்து நாட்களாக ஏதும் பேசாமல் அந்த புதியவரும் ஆட்டுக்காரன் கொடுப்பதைச் சாப்பிட்டு வாசலிலேயே கிடக்கிறார். ஒரு நாள் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்க்கிறார்கள். கடைசியில் மாட்டு கொட்டகையில் மாடுகளுடன் பேசிக்கொண்டிருக்கிறார். மாடுகளும் புதியவர் என்று முரண்டு பிடிக்காமல் சகஜமாகவே இருக்கின்றன.

ஆட்டுக்காரனின் மூத்த மகள், மனிதர்களை விட பிற உயிர்கள் மீது பாசமிகுதியாய் இருக்கிறாள். அவள் இருக்கும் சமயத்தில் மட்டும் வந்து போகின்ற பசி எடுத்த கோழிகள், அவள் மீது அன்பை காட்டும் ஆடு மாடுகள் என அவளைச்சுற்றிலும் அன்பு மயத்தை ஏற்படுத்திக்கொள்கின்றாள். அறுந்துவிட்ட செருப்புடன் காடுகளுக்கு ஆடு மேய்க்க செல்வதும் முகத்தில் எப்போதும் சிரிப்பை சுமந்தவளாகவும் இருக்கிறாள். நாவலாசிரியர் அவள் குறித்து சொல்லும் போதெல்லாம் தோட்டத்தில் நமது தோழி ஒருத்தியை நம்மால் நினைவுக்கூராமல் இருக்க முடியாது. அப்படியானவள் ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக ஆடுகளுடன் வீடு திரும்பவில்லை. வீடும் தோட்டமும் கலவரமடைகிறது.
ஆட்டுக்காரனின் மகள் பிணமாக கண்டெடுக்கப்படுகிறாள். வன்புணர்வு செய்யப்பட்டு கித்தப்பாலை சேமிக்கும் குவளையால் தலையில் அடிக்கப்பட்டு மண்டை உடைந்து கண்டெடுக்கப்படுகிறாள். கொஞ்ச நேரத்தில் அந்த மிருகச்செயலை செய்தவன் கசியடி முனியன் என சந்தேகத்தின் பேரில் கைதாகிறான். ஆட்டுக்காரன் மீதிருந்த கோவத்தை அவனை பழிவாங்குவதற்காகவே இவ்வாறு செய்திருப்பதாக அவனுக்குள்ளாகவே அவன் பேசிக்கொள்கிறான். முதலில் கசியடி முனியன் மீது நமக்கு கோவம் வருகிறது. அந்த மிருகத்தை தண்டிக்க வேண்டும் என நினைக்கின்றோம். பாதிக்கப்பட்டவர் குரலாக மட்டும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தியவரின் குரலாகவும் நாவலாசிரியர் பேசுகிறார். மான்குட்டியின் நியாயம் அதற்கு என்றால், ஓநாயின் நியாயம் அதற்கு என்பதாக இன்னொரு தரப்பில் இருந்து, கசியடி முனியன் தரப்பில் இருந்து கதை சொல்லப்படுகிறது. இங்குதான் முத்துசாமி அசல் கலைஞராகிறார். இங்குதான் மண்புழுக்கள் நவீன இலக்கியத்தரத்தை அடைகிறது. அது கறுப்பு வெள்ளை, நல்லது கெட்டது எனும் நீதிகளை முன்வைத்து எழுதப்பட்ட இலக்கியமாக இல்லாமல் நம் முன் வாழ்வின் அந்தரங்கமான தருணங்களை சீண்டிவிடுகிறது. அதன் உச்சமாக  கொலைகாரனாக தெரிந்த கசியடி முனியன் கம்யூனிஸ்டுகளுடன் சேர்வதும் தோட்டத்தில் யார் கண்ணிலும் பட்டுவிடாத தெய்வத்திற்கு நிகராக பேசப்படும் ராஜ நாகமாக மாறுவதும் இந்நாவல் தொடும் உச்சங்களில் சில.

ஆட்டுக்காரனுக்கு காலில் காயம்பட்டு காலை எடுக்கும்படி ஆகிறது. காலை எடுத்தது ஒரே வரியில் சொல்லப்பட்டாலும் அதன் பிறகு ஆட்டுக்காரன் வாழ்வு ஆட்டம் காண்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. ஏற்கனவே மகள் இறந்ததற்கு கணவன் தான் காரணம் என பழி சுமத்திய மனைவி இப்போது கால் இன்றி கையாலாகாதவனாக ஆகிவிட்ட ஆட்டுக்காரனை மொத்தமாகவே ஒதுக்கு வார்த்தைகள் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறாள். ஆட்டுக்காரனின் இளைய மகள் மட்டுமே தந்தைக்கு உணவு தருவதும் பேசுவதுமாக இருக்கின்றாள். ஆட்டுக்காரன் தன் நிலை அறிந்து தினம் வேதனையில் தூக்கம் இன்றி தவிக்கின்றான். சமயங்களில் வாழ்வு நமக்கு துரோகம் செய்துவிடும். நம் மீதே நமக்கு வெறுப்பு வரும்படி சதி செய்துவிடும். நம்மை சுற்றியிருந்த நமக்கானவர்கள் என நம்பிக்கொண்டிருந்த எல்லாரையும் நமக்கு எதிராக திருப்பி விடும். வாழ்வின் மீது நம்பிக்கையற்ற ஒரு முடிவைத்தான் நாவலில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனாலும் இப்படியெல்லாம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது என சொல்லிவிடுவதும் படைப்பாளியின் வேலை.ஒரு தோட்டப்பாட்டாளியின் எழுச்சியும் அவனது வாழ்வின் வீழ்ச்சியும்தான் இந்நாவல். இதன் ஊடே அசலான தோட்டத்தையும் அம்மக்களின் வாழ்வையும் கண்முன்னே எந்த பாசாங்கும் இன்றி காட்டியுள்ளார் நாவலாசிரியர்.

நிறைவாக இந்நாவல் நல்ல நாவல் என சொல்வதற்கு இந்நாவல் இவர் நல்லவர் என்றும் இவர் கெட்டவர் என்றும் தீர்பினை சொல்லாமல் இருப்பதுதான் காரணம்.மனிதர்களுடன் அவர்கள் வாழும் நிலத்தினையும் நம் கண்முன்னே காட்டி ஒரு வாழ்வை அதன் போக்கில் பாசாங்கு இன்றி சொல்கிறது.

அடுத்ததாக, இந்நாவலில் இருக்கும் வட்டார மொழி ஒவ்வொன்றும் தோட்டத்தை மீட்டுணர வைக்கிறது.மீண்டும் அவ்வாழ்விடம் நோக்கி நாம் செல்லவோ வாழவோ முடியாது ஆனால் அதன் பதிவுகளை அதன் வரலாற்றை நிதர்சனமாக மீண்டும் அடுத்த தலைமுறை தெரிந்துக்கொள்ளமுடியும்.

இறுதியாக சீ.முத்துசாமியின் இந்நாவல் சில இடங்களில் சொல்லும் யூ.பி தோட்டத்தில் பிறந்தவன் நான். இருபத்தியோரு வயதுவரை அங்கு வாழந்தவன். மண்புழுக்கள் நாவலில் சொல்லிய நிலமும் , மனிதர்களும் நான் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவந்தன. பால் மரங்கள் எல்லாம் அகற்றப்பட்டு தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. பால் சீவ அதிகாலை சேவல் கூவி எழுந்தவர்கள் தற்போது அலாரம் அடிக்க எழுத்து தொழிற்சாலை செல்கிறார்கள். நான்கு சுவர் தடுப்பில் இயந்திரங்களுடன் இயந்திரமாக மாறிவிட்டார்கள்.கோவில் திருவிழாக்கள், ஒன்று கூடும் தோட்டப்பாட்டாளிகள்  இப்போது இல்லை, மஞ்சள் நீர் விளையாட்டில் யார் யார் மீதோ மஞ்சள் நீரை ஊற்றி விளையாடும் வெகுளித்தனம் இப்போது இல்லை, ஒன்றாக அமர்ந்து கதை பேசி இரவு உணவு சாப்பிட்ட உறவுகள் இல்லை.

எல்லார் வீடுகளிலும் வாசலைத்தாண்டி சாலை வரை வேலி போடப்பட்டு கட்டாயம் பூட்டு பூட்டப்பட்டது.காலை முதல் மாலை வரையும் இரவு வரையும் தொழிற்சாலைகளில் வேலை செய்தவர்கள் வேலை முடிந்ததும் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் வீடியோ கேசட்டுகளில் ஐக்கியமானார்கள். ஞாயிறு விடுமுறை நாளில் மட்டுமே ஒருவரை ஒருவர் பார்த்து கொஞ்சமாக புன்னகைக்க முடிந்தது.

என் வாழ்வில் ஏற்படும் அனுபவத்திற்கு ஏற்றார்போல வாழ்வு மீது எனக்கு  இருக்கும் நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது.என் வாழ்வின் அனுபவத்தின் ஒரு பகுதி வாசிப்பின் ஊடாகவும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. மண்புழுக்கள் நாவல்  மனிதர்கள் மீது ஈரம் கொண்ட என் மூதாதையரின் உயிரணுக்கள் என்னுள்ளும் இருப்பதை நினைவுப்படுத்துகிறது.

- தயாஜி



ஜனவரி 29, 2020

சைக்கோ- உன்னை நினைச்சி நினைச்சி



     சில நாட்களாக தொடர்ந்துக் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல். இதன் பின்னனியில் இருக்கும்  ஆழமான காரணத்தை தேடுவதற்கு மனதில் தைரியம் இல்லை. இசை, பாடல் வரி, குரல், காட்சி என எதைச்  சொல்லி மனதிடம் இருந்து தப்பிக்கலாம் என்றாலும் பயனில்லை. இசை ராசரின் பக்தனென்றால் அவர்தான் காரணம் என்றிருப்பேன். பாடலின் வரிகளை தேடுபவனென்றால் கவிஞர் கபிலனைச் சொல்லியிருப்பேன், பாடகரின் விரும்பியென்றால் சிட் ஶ்ரீராம் என நினைத்திருப்பேன், காட்சிக்கும் கதைக்கும் ரசிகனென்றால் இயக்குனர் மிஷ்கினை சொல்லியிருப்பேன். ஆனால் எதுவும் முடியவில்லை. எந்த காரணத்திற்கும் அடங்கிவிடாத ஏதோ ஒன்று மேற்சொன்ன எல்லாவற்றிலும் இருந்துக் கொண்டு என்னுள் ஏதோ செய்கிறது.

      பார்வையற்ற ஒருவன் தன் காதலிக்குப் பாடும் பாடலாக இதனைப் படமாக்கியிருப்பார்கள். பார்வையற்ற காதலனுக்கு மட்டுமல்ல தன்னால் எதுவும் இயலாத எந்த ஒரு ஆணுக்கும் இப்பாடல் பொருந்திவிடுகிறது.

‘பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை’


     இவ்வரிகள் அப்படியே என்னை ஸ்தம்பிக்க வைத்துவிட்டன. மீண்டும் மீண்டும் இவ்வரிகளை சொல்லிப்பார்க்கிறேன். பார்வையில்லாதவனுக்கு பாதையா இருப்பவள்; எப்படியானவளாக இருக்க வேண்டும். அப்படி ஒருத்திக்கு தன்னிடம் கொடுக்க இருப்பது காதல் மட்டுமே என ஆண் நினைக்கிறான். அது அவனது வாழ்வில்  வரமா சாபமா என எனக்கு பிடிபடவில்லை.

     தன்  இயலாமையை முழுவதும் ஆண் ஒப்புக்கொள்கிறான். அவனிடம் மேல் பூச்சுக்கான எந்த பொய்மைகளும் இல்லை. இப்படியானவர்களின் காதல் நம்பிக்கையைக் கொடுக்குமா? ஆனால் அவன் தான் நம்பும் ஒற்றைக்காதலை பற்றி படர்கிறான்.

     காதலில் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் கடந்துவிட்டவன் என்பதாலோ என்னமோ; ஆழ்மனம் மூடிவைத்திருக்கும் எதையும் திறந்துப்பார்க்க தைரியம் அற்றவனாய் இரவுகள் முழுதும் இதனை திரும்ப திரும்பக் கேட்கிறேன். எந்த முகமும் என்னிடம் தங்களின் முகவரி காட்டிவிடாதபடி கண்கள் கலங்கி நிற்கிறேன்.

     அழுவதற்கு காரணமும் காயமும் தேவையா என்ன? நம்மை நாமே அழவைக்க நினைவுகளின் சிறு அதிர்வு போதாதா?


பாடல்-



 உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
வாசம் ஓசை இவைதானே எந்தன் உறவே ஓ..
உலகின் நீண்ட இரவென்றால் எந்தன் இரவே
கண்ணே உன்னால் என்னை கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்
பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
ஏழு வண்ணம் அறியாத ஏழை இவனோ
உள்ளம் திறந்து போசாத ஊமை இவனோ
காதில் கேட்ட வேதம் நீயே
தெய்வம் தந்த தீபம் நீயே
கையில் நான் ஏந்தும் காதல் நீதானே
நீயில்லாமல் கண்ணீருக்குள் மூழ்கி போவேன்
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா
யாரோ அவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா
நெஞ்ச உதெச்சி உதெச்சி பறந்து போனா அழகா







ஜனவரி 27, 2020

பூங்குழலியின் கவிதைகள்


     முதலில் கவிதையை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன். அறிவிற்கும் மனதிற்குமான இடைவெளியை வார்த்தைகள் மூலம் நிரப்புவது கவிதை. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பாதிப்பில் உழன்று கொண்டிருக்கும் மனிதனின் வாழ்வில் விடுபட்ட பக்கங்களை நினைக்க வைப்பதும், அவன் விட்டுவிட்ட இடங்களை நிரப்ப வைப்பதும் கவிதையின் செயல்பாடாகப் பார்க்கிறேன். இன்னொன்றையும் இங்கு சொல்லிவிட நினைக்கிறேன். அறிவார்ந்த கவிதைகளையோ தத்தம் தமிழ்ப் புலமையைப் பறைசாற்ற நினைக்கும் கவிதைகளோ என் வாழ்வின் விடுபட்ட இடத்தை நிரப்பவோ மீண்டும் நினைவுகூரவோ உதவவில்லை. அதன் சொல்லாடல்களை கொஞ்சநேரம் ரசிக்கலாம். இன்னும் போனால் ‘அட’ என பிரமிக்கலாம். வெறுமனே அத்தகைய பிரமிப்புகளைச் சிலாகித்து ஏமாற்றமடையும் வாசகன் மீது பாவப்படாமல் இருக்க முடியவில்லை.
           
    இப்போது பூங்குழலியின் கவிதைத் தொகுப்பிற்கு வருகிறேன்.‘நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்’ என்பது தலைப்பு. நடந்துக் கொண்டிருக்கும் ஒன்றிற்கும் அதற்கான காரணங்களும் என இதனை புரிந்து கொள்ளலாம். பெரும்பாலானவை நிகழ்காலத்தையே மையமிட்டுள்ளன.

    பூங்குழலியின் கவிதையுலகை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். (‘உயிர் வேட்டை’ என்கிற கவிதைத் தொகுப்பில் ஈழப்போர் குறித்து இவர் எழுதியிருப்பதை நான் இன்னும் படிக்காததால், இத்தொகுப்பின் கவிதைகள் மற்றும் அவரது இன்னபிற கவிதைகளை வைத்துச் சொல்கிறேன்.) ஒன்று குழந்தைகளால் சூழ்ந்திருப்பது இன்னொன்று காதலில் தொடங்கி எல்லாவற்றிலும் ஏமாந்து நிற்பது. ஒன்று அக உலகம் இன்னொன்று புற உலகம். அக உலகம் குழந்தைகள் காதல் சார்ந்தும். புற உலகம் போர் சார்ந்தும் இருக்கிறது.

    ஒருபக்கம் குழந்தைகளின் குதூகலம் இன்னொரு பக்கம் விரக்தி ஏமாற்றம் என இருக்கிறது. இரண்டுக்குமான இடைவெளியை எப்படி புரிந்து கொள்வது. அந்த இடைவெளியை குழலி எதனைக் கொண்டு நிரப்பிக்கொள்கிறார் என யோசிக்கவிடாமல் இரு பக்கங்களிலும் கவிதைகள் அடர்த்தியாக வளர்ந்து நிற்கின்றன.

     ’மிகப்பிடித்த ஒருவனின் புகைப்படம்’ என்ற கவிதை. அண்ணனின் புகைப்படம் குறித்து சொல்கிறார். பின்னர் நாமும் நமது புகைப்படமாக அதனை நினைத்துக் கொள்கிறோம். அதனையொட்டி அவர் எழுதியிருப்பதெல்லாம் நம்மையும் புகைப்படத்தில் ஒரு பகுதியாக ஆக்கிவிடுகிறது. நிறைவாக, ‘அவன் இறந்து  போன அன்றும்’ என்ற வரிகளுக்கு பின் சட்டென நம்மை அந்த புகைப்படத்தில் இருந்து அந்நியப்படுத்திக் கொள்ள வைக்கிறார். இதுவரையும் குழந்தைபோல கொண்டாட்டம் கொண்ட மனது பாரமாகிறது. இறந்து போய் புகைப்படங்களாக இருப்பவர்கள் வளர்வதை நிறுத்திவிட்ட செய்தி எத்தனை துக்ககரமானது.

     அடுத்த இரண்டு கவிதைகளில் ஜென் பாணி இருப்பதைப் பார்க்கிறேன். குழலிக்குத் தத்துவம் கைகூடியுள்ளது. அதற்கு அவர் விரும்பும் குழந்தைகள் உதவியிருக்கிறார்கள். ‘நாயொன்று இறந்தது குறித்த கதை’ எனும் கவிதைதான் அது. இறந்துவிடுவதை அல்லது மரணத்தைக் கொஞ்சமும் புரிந்துக்கொள்ளாத குழந்தை இறந்த நாய் குறித்து சொல்கிறது. குழந்தைகள் நம்பும் பொய்யான உலகத்தை நாம் நம்புவது அத்தனை சாதாரணமல்ல அதற்கு குழந்தைக்கு இணையான மனம் வாய்க்க வேண்டும். அந்த மனம் கள்ளம் கபடமின்றிச் சிரித்திட வேண்டும். இல்லாத நாய் குறித்தும் அதன் இறப்பு குறித்தும் சொல்லிய குழந்தை தூங்கிவிட்டது. ஆனால், இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு அந்த நாயைத் தேடி அலைவதென்பது ஜென் நிலையாக அல்லாமல் என்னவாக இருக்க முடியும்.

     இன்னொன்று, ‘எறும்பு’ என்னும் கவிதை. அன்றாட வாழ்வில் பட்டும்படாமலும் இருக்க நினைக்கும் மனிதன்தான் தன் மீது அனைத்து ஆசாபாசங்களையும் போட்டுக்கொண்டு புலம்பிக்கொண்டிருக்கிறான். இக்கவிதையில் சொல்லப்படும் எறும்பைப் போல நிகழ்காலத்தில் வாழ்வை ரசிக்கும் மனம் கொண்டவர்களைச் சந்திப்பது அத்தனை சாதாரணமல்ல

    ‘அது ஒரு தற்கொலை’ என்னும் கவிதை, வாழ்வு குறித்த அர்த்தங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது. குழந்தைகளை ரசித்த பின்பு இவ்வாறான கவிதைகளைப் படிக்கையில் பதட்டமும் பயமுமே மனதில் தேங்கி நிற்கிறது.

    மரணம் மீது குழலிக்கு இருக்கும் ஈடுபாடு வியப்பைக் கொடுக்கிறது. ‘மரணத்தின் கோப்பை’ என்பதில் இரு மரணித்தவர்கள் குறித்துப் பதிவு செய்கிறார். மரணத்துக்குப் பின்பான வாழ்வு இறந்தவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ அவர்களை இழந்த நமக்கு அவர்களுக்கு பின்பான வாழ்வு இருப்பதைக் காட்டுகிறது.

   ‘பயணிக்கிறேன்’ என்ற கவிதையை வைத்து நல்லதொரு சிறுகதையை எழுதிவிடலாம். ஆனால் ஏனோ கவிஞர் இன்னும் சிறுகதை எழுதவில்லையென்றே நினைக்கிறேன். நமது அனைத்துவிதமான ரகசியங்களையும் நம்மைவிட அதிகம் தெரிந்திருப்பது நமது அறைதான். அப்படியான அறைக்குள்ளே நாம் வர பயப்படுகிறோமெனில் ஆகக் கடைசியாக நமக்கே நாம் துரோகம் செய்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ‘அவனைச் சுற்றி யாருமில்லை’ என்ற கவிதையில் தன்னையே கவிஞர் வரைந்திருப்பதாக நினைக்கிறேன். ஒருபக்கம் பொருளாதாரம் இன்னொரு பக்கம் அதற்கான ஓட்டம் என இருந்தும் தன் வாழ்வின் பக்கங்களைக் கவிதைகளாக குழலியால் எப்படி நிரப்ப முடிகிறது என இக்கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் புகைப்படக்காரன் காட்டிவிடுகிறான். காரணங்கள் எத்தனை சொன்னாலும் நாம் விரும்பினால் எத்தகையக் காரியங்களைச் செய்துவிட முடியும் என்பதை நினைவூட்டும் கவிதை இது.


    குழலி சொல்லி வரும் கவிதைகளில் இருக்கும் காதலில் ஏக்கமும் ஏமாற்றமும் தெரிகிறது. ஒருபோதும் வெற்றியடைந்த மகிழ்ச்சியை, அவரது காதலைச் சொல்லும் கவிதைகளில் காண முடிவதில்லை. இது பலவீனமா என்றால் அப்படியும் இருக்கலாம். ஆனால் அந்த நிலையைக் கவிதைகளாக்குவது அவரது பலமே.

 குழந்தைகளுக்கான கவிதைகள் கடினமின்றி எழுதிவிடலாம். அதனை குழந்தைகள் வாசிக்க இலகுவாக எழுதுவது அத்தனை சிரமமான காரியமல்ல. ஆனால் கவிதைகளில் குழந்தைகளை எழுதுவது சுலபமல்ல. மனதில் எப்போதும் வாழும் குழந்தை இருந்தால் மட்டுமே அப்படியான கவிதைகள் சாத்தியம். பலர் பல காரணங்களைச் சொல்லித் தங்களுக்குள்ளே கொன்றுவிட்ட குழந்தை, குழலியின் மனதில் குழந்தையாகவே இருப்பது வாசகனாக எனக்கு மகிழ்ச்சிதான். நானும் எனது குழந்தைப் பருவத்திற்கு அவரின் உதவியுடன் சென்று வருவேன். சொல்லப்போனால் குழந்தைகளுடன் எப்படி பேச வேண்டுமெனவும் தொடர்ந்து கற்றுக்கொள்வேன்.

   இவ்வாறு பல கவிதைகள் கொண்ட தொகுப்புதான் ‘நிகழ்தலும் நிகழ்தலின் நிமித்தமும்’
நிறைவாக சொல்வது என்னவெனில்;

    கவிதையுலகில் பூங்குழலிக்கும் ஓரிடம் கிடைக்க அதிக நாட்கள் ஆகப்போவதில்லை என்று நம்புகிறேன் அதற்கான உழைப்பை கொடுத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், காதலிக்க வேறு குறுக்கு வழி இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

- தயாஜி

மருந்தென்னும் மாயப்புள்ளி



மனப்பிணிக்கு மருந்துகொடுக்கக் கூடியவரிடம்
வாங்கிவந்த மருந்துச்சீட்டுகள் அவை
நோய்க்கூறுகளை துல்லியமாக
உடல்புள்ளிகளில் கண்டறிந்தார்

ஒவ்வொரு புள்ளிகளிலும்
ஒரு கதையை செருகச்சொல்லி
தீவிரமாக வேறெதையோ தேடலானார்

உடன்பாடில்லையென்றாலும்
கதைகளை கண்டறிந்துக்கொண்டிருந்தேன்

முதல்புள்ளி என் நெற்றிப்பொட்டில் இருப்பதாக
எழுதிக்கொடுத்தார்
சின்ன வயதில் யாரையோ
கல்லெறிந்துவிட்டு ஓடிய கதையை
அங்குச் செருகினேன்
நெற்றிப் பொட்டு வலித்தது

இரண்டாவது புள்ளி என் கண்களில் இருப்பதாக
எழுதிக் கொடுத்தார்
ஒரு முறை தோழி தன் காதலனுக்கு
முத்தம் கொடுத்தகதையை அங்குச் செருகினேன்
என் இதழ் எச்சிலானது

மூன்றாவது புள்ளி என் கட்டை விரலில் இருப்பதாக
எழுதிக் கொடுத்தார்
அப்பாவின் கையெழுத்தை ஏமாற்றி போட்டுவிட்ட
கதையை அங்குச் செருகினேன்
நகத்தின் முனை உடைந்தது

நான்காவது புள்ளி என் நாவின் நுனியில் இருப்பதாக
எழுதிக் கொடுத்தார்
இதுதான் முதல் முறையென
சொல்லி அணைத்தக் காதலியின்
கதையை அங்குச் செருகினேன்
நாவு கடிபட்டது

இப்படியாகப் பல புள்ளிகளைக் கண்டறிந்து
அதற்கான கதைகளை செருகியும்
நிம்மதியை முழுமையாக அடைய முடியாதபடி

மனைவியை வன்கலவி செய்த கனவினை
செருகிவைக்கவேண்டிய புள்ளியை மட்டும்
கண்டுபிடிக்கவே முடியாதபடி கண்கலங்கி தோல்வி கண்டார்...

- தயாஜி

(நன்றி வல்லினம்)

ஆணொருவன் அழுகிறான்

அலாவுதின் விளக்கில் அடைபட்டிருக்கும்
பூதமொன்று
அவனது அழுகை துளியின்
சிறு துகள் பட்டு தூக்கம் கலைந்தது
இது சாத்தியமே ஆகக்கூடாதென
அசரீகள் முழுக்க
பெண் குரல்களால் ஒலிக்கத்தொடங்கின

ஆயிரத்து இரண்டாவது நாளுக்கான
கதையை அரேபியர்கள் தேடிப்போகலானார்கள்
அதிலவன் தனது மார்புக்கூண்டிலிருந்து
இதயத்தை கழற்றி அதற்கு
தங்க முலாம் பூசியதன்
தகுதியை உயர்த்திக்கொண்டிருந்தான்
விபரம் தெரிந்தவிட்ட ஊர் பெண்கள்
ஒவ்வொருவராக சாலை மின்சாரத்தை
துண்டிக்கத் தொடங்கினர்

நெற்றிக்கண்ணில் பிறந்துவிட்ட முருகனை
வேறெப்படியெல்லாம் கொன்றுவிடலாம் என
யோசனை கூட்டத்தின்
முதல் தீர்மானமாக
நெற்றிகண்களையெல்லாம்
தோண்டியெடுத்து தீயிட்டு கொளுத்தலாம்
என்ற சாசனத்தில் சக்திகள் கையொப்பமிட
வரிசைக்கு வரலானார்கள்

கன்னங்கள் வழி இறங்கி வந்துக் கொண்டிருந்த
நீர்த்துளிகளுக்கு
பனித்துளிகளென பெயரிட்டு ஊர் முழுக்க
தண்டோரா போட ஆளுக்கொரு திசையாக
புறப்படுகிறார்கள்

ஆணொருவன் அழுத கதை தெரியாததால்
அதன் விளைவுகள் ஏதும்
இன்னும் முகங்காட்டாமலேயே
முடங்கிவிட்டிருக்கிறது….

தயாஜி

ஜனவரி 07, 2020

#கதைவாசிப்பு_2020_4 'மிருகத்தனம்'


#கதைவாசிப்பு_2020_4
கதைமிருகத்தனம்
எழுத்துஎஸ்.ராமகிருஷ்ணன்
புத்தகம்அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது



    ‘நாம் எப்போது வேண்டுமானாலும் நம்மை நேசிக்கின்றவர்களுக்கு  தேவையில்லாதவர்களாக மாறிவிடலாம்…….!!!.’

     இப்படியான ஒரு வார்த்தை இக்கதையில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் கதையை வாசிக்கையில் நம் காதுகளுக்கு யாரோ இதனைச் சொல்லிக்கொண்டே போகிறார்கள். இப்போதும் அதனை யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ‘உன்னை மாதிரி திறமைசாலி இல்ல’ ‘எதை கொடுத்தாலும் பேசியே வித்துடற’, ‘உன்னை மாதிரி ஒரு நண்பன் யாருக்கும் கிடைகாது’ ‘நீ என்னோட பாக்கியம்’, போன்ற வார்த்தைகளை தினமும் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மாறிக்கொண்டே வந்தது. ஒரு நாள் ஏதுமில்லாமல் தூக்கியெறியப்பட்டேன்.

     இக்கதையில் ஒரு வாக்கியத்தை எஸ்.ரா எழுதுயிருப்பார். ‘ஆனால் கடந்த சில வாரங்களாக  நோவா குரைப்பதில்லை என்பதை அவள் ஒரு நாளில் கண்டுபிடித்தாள். அப்படித்தான் ஒரு நாளில் நாம் எல்லாவற்றையும் கண்டு பிடித்துக்கொண்டிருக்கிறோம். இனியும் கண்டுபிடிப்போம். பலருக்கு அதில் காலதாமதம் ஆகிவிடுவதுதான் வேதனை.
 ‘மிருகத்தனம்’ என்னும் இக்கதை மூன்று பேரைப் பற்றியது. மனைவி சியாமளா, கணவன் ராஜன்,  நோவா என்னும் ஜெர்மன் ஷெப்பர்ட்.

    நாய்கள் வளர்பதில் ஆர்வமும் அவை மீது பாசமும் உள்ளவன் ராஜன். அப்படி இல்லாவிட்டாலும் ஏதோ பார்த்துக்கொள்கிறாள் சியாமளா. நோவாவும் ராஜனும் எப்போது சினேகமாக இருப்பதை அவள் விரும்பதில்லை. அதன் பொருட்டு நோவாவை சமயங்களில் திட்டவும் செய்கிறாள்.

   கணவன் மனைவி பிரிந்து விடுகிறார்கள். அவளால்தான் அவனுடன் வாழ முடியவில்லை. ஆனால், நோவாவை தானே வைத்துக் கோள்கிறேன் என்கிறாள். இவ்விடத்தை வாசிக்கும் பொழுது மனம் குழம்பாமல் இல்லை. பிரிவின் பின் எந்த நினைவுகளும் கூடாது என்பதுதான் எழுதப்படாத மனசட்டம். அப்படி வந்து நிற்கும் நினைவுகள் ஏற்படுத்தும் வலி கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் தன்னாள் ராஜனிடம் வாழ முடியாது என்று முடிவெடுத்தப்பிறகு அவனை நேசிக்கும் அவனால் நேசிக்கப்படும் நோவாவை தான் வைத்துக்கொள்ள நினைப்பது தனக்கான வலியை விட அவனுக்கு வலி அதிகம் வேண்டும் என்பதாலோ.

     கதையின் அடுத்த கட்டம் நம் மனத்திரையில் மெல்லிய கீறல்களைப் போடுகிறது. அடுத்தடுத்து அந்த கீறல்கள் எல்லாம் சேர்ந்து மனத்திரையை மொத்தமாக கிழித்துவிடுகிறது.

      பிரிவிற்கான காரணம் மெல்ல தெரியவருகிறது. சாப்பாடு, பணம், அதிகாரம், இந்த மூன்றையும் தவிர வேறெதிலும் ராஜனுக்கு  நாட்டமில்லை. தன் தங்கை திருமணம் முடித்து தான் தனியாக இருக்கும் சூழலை அவளால் எதிர்க்கொள்ள முடியாமல் காதல் போன்ற ஏதோ ஒன்றால் ராஜனை ஆயிரம் ஆயிரம் கனவுகள் கொண்டு திருமணம் செய்துக்கொள்கிறாள். அவளின்  கனவுகள் என்ன ஆனது என்பதை ஆசிரியர் இப்படியாக சொல்கிறார்; அப்போதுதான் அவர்களுக்கு தேனிலவு முடிந்தது. வேலை முடிந்ததும் கனிணி முன் அமர்கிறார் ராஜன், அந்த கடற்கரை நட்சத்திர விடுதி கதவை திறந்து வெளியில் வந்து அமர்கிறாள். ‘அவள் நட்சத்திரங்களைப் பார்த்தபடியே அவன் தன்னை  முத்தமிட்டானா என்று யோசித்துக்கொண்டிருந்தாள். ஒரேயொரு முறை முத்தமிட்டான். ஆனால் அந்த முத்தம் உணவுப்பொட்டலத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட நூலை அவிழ்ப்பவனின் அவசரம் போன்றே இருந்தது…….’

   இன்னொரு வருமானம் தேவை என்பதால்தன அவளை திருமணம் செய்துக் கொண்டதாக அவன் சொல்லியும் விடுகிறான். மெல்ல  மெல்ல இருவரும் மனவிலக்கு பெறுகிறார்கள். ராஜன் பக்கத்திலேயே வேறு இடத்திற்கு வேலைக்குப் போகிறான்.

     நோவாவை மட்டும் தான் வைத்துக்கொள்ளவதாக சொல்லிவிட்டாள். சாமயங்களில் நோவாவைப் பார்க்கையில் அவளை அறியாமலேயே அதன் மீது துக்கம் வந்து விடுகிறது. மனிதனுக்கு தேவையான போது அவனுக்கு போர் அடிக்கும் போது பயன்படும் வளர்ப்பு பிராணிகல் போல தானும் ஆகிவிட்டாலோ என்கிற துக்கமாகக்கூட இருக்கலாம்.

     நோவா குரைக்காததைக் கண்டுபிடித்தவள் அதனை குரைக்க வைக்க பலவகையில் முயல்கிறாள். ஒரு முறை ராஜனிடமும் அழைத்துச் சென்று ஆலோசனைக் கேட்கிறாள். கடைசியாக மருத்துவரை நாடுகிறாகள். அவருக்கும் சட்டென காரணம் பிடிபடவில்லை. ஒரு யூகமாக , பெட்டைநாயுடன் சேராததும் கூட காரணமாக இருக்கலாம் என்றுசொல்கிறார். அதற்கு உதவ ஒருவரை எண்களைக்கொடுக்கிறார். அப்போதே அவள் தொடர்புக்கொண்டு செல்வதற்கா நாளை முன்பதிவு செய்கிறாள்.

மறுநாள் அங்கு செல்கிறாள். சிறிது நேரத்தில் அங்கு நோவாவிற்கு இணையான பெண் நாயை ஒருவர் கொண்டுவருகிறார். அரைமணிநேரம் முயன்றும். ஏதும் நடக்கவில்லை. பெண் நாய்தான் குரைத்ததே தவிர நோவா அதனைக் குரைக்கவில்லை. பெண் நாயுடன் அதன் உரிமையாளர் புறப்படுகிறார். நோவாவின் வலிமையான மௌனத்தை மீண்டும் சுமந்துக் கொண்டு அவர்கள் புறப்படுகிறார்கள்.

    அவளுக்கு வேறு வழி இல்லை. நோவாவை விட்டு பிரிவதுதான் சரியென முடிவெடுக்கிறாள். அதன் இருப்பு தனை மட்டுமல்ல தனது திருமண ரணத்தையும் நினைவுப்படுத்தை தன் இயல்பையும் மாற்றிவிடுமோ என அஞ்சிகிறாள். மாறுநாள் முகவர்களிடம் பேசி நோவாவை விற்பதற்கு ஏற்பாடு செய்கிறாள்.

    நோவாவை வாங்குவதற்கு ஒரு வருகிறார். சியாமளா அவரை மறுநாள் வந்து நோவாவை எடுத்துக் கொள்ளச்சொல்கிறாள்.

    அன்று காலைமுதல் நோவாவுடன் ஊரைச் சுற்றுகிறாள். இரவு வீடு திரும்பியதும் வழக்கமான இடத்தில் நோவா படுத்துக்கொள்கிறது. சிறிது நேரத்தில் விசும்பியப்படி நோவாவைக் கட்டியணைக்கிறாள். “என்னை நானே ஏமாத்திகிட்டு இருக்கேன். அது உனக்கு தெரியுதுடா….” எனவும் புலம்புகிறாள். நோவா தன் நாக்கு ஈரத்துடன் அவள் கைகளைத் தடவியது. அவள் உடைந்து அழுகிறாள். ஆனால் அப்போது நோவா மௌனமாகக் காதுகளை அசைக்கிறது.

     அப்போதும் கூட நோவா குரைக்கவோ மெல்லமாய் சத்தமிடவோ இல்லை? என்கிற கேள்விகள் எனக்குள் பன நினைவுகளை தூண்டிவிடுகிறது. வாசர்களைக் இக்கதை தங்களில் செயல்பாடுகள் மீதான பாதிப்புகளை திரும்பிப்பார்க்க வைக்கும் என நம்புகிறேன்.

      தொடக்கத்தில் இக்கதையில் இல்லாத ஒரு வாக்கியத்தை எழுதியிருப்பதாகச் சொல்லியிருப்பேன் அதனை இவ்வாறு முடிக்க நினைக்கிறேன்.

    ‘நாம் எப்போது வேண்டுமானாலும் நம்மை நேசிக்கின்றவர்களுக்கு  தேவையில்லாதவர்களாக மாறிவிடலாம்… அவ்வாறே நாம் விரோதித்த யாரோ ஒருவர்  நம்முடன் சேர்ந்து நம் துக்கத்தை பறிமாறிக்கொள்ளலாம்…’

-          தயாஜி


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்