பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணிப்பவனின் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணிப்பவனின் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜனவரி 01, 2014

2014 - பயணியாக


ஐந்தாண்டுகால (2008 - 20013) மின்னல்fm  வானொலி அறிவிப்பு பணியில் இருந்து, அடுத்த பரிணாமத்தை நோக்கி நகரவிருக்கிறேன்.
 ( வானொலி அனுபவங்களை குறித்து எழுதவெண்டும்..!)

அதே சமயம் 'புத்தகச்சிறகுகள் புத்தகடை'யையும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்..
எல்லா சமயத்திலும் சூழலிலும் உடன் இருக்கும் நண்பர்களுக்கு எனது அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கொண்டு சொல்வதற்கும்; எழுதுவதற்கும் அதிகம் இருக்கின்றன; இயற்கையே அதற்கான களத்தினை எனக்கு கொடுத்திருப்பதாக உணர்கிறேன்.....தொடர்ந்து வாசிக்கவும் பயணிக்கவும் எழுதுவதும் சுகம்தானே என்ற போதும் பொருளாதாரத்தையும் உயர்த்தவேண்டியுள்ளது. இதுவரையில் நடந்ததையெல்லாம் நல்லதெனவே நினைக்கிறேன்... இனி நடப்பதையும் அவ்வாறே உணர்கிறேன்....


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்...... நடத்துவோம்... :)
அன்புடன் தயாஜி

ஜூலை 05, 2012

பயணிப்பவனி பக்கம் 19

பிடித்த ரஜினியும் பிடிக்காத காதலும்;  ஒன்றால்தான் இணைக்கப்பட்டிருக்கிறது





ரஜினியை பிடித்திருந்தது. ஏன் பிடித்திருந்தது. யோசிக்கையில்; பைத்தியமாகத்தான் இருந்திருக்கிறேன். எனக்கு எந்த ஒரு வகையிலும் நன்மை செய்திடாத எங்கோ இருக்கும் ரஜினி என்ற சினிமா பிம்பத்தை என் தூக்கி தலையில் வைத்து கொண்டாடியிருந்தேன். படிக்கும் அறையில், மேஜையின் மேல் ரஜினியின் படம். தலை முடியும் ரஜினியின் பாணி. பணப் பையிலும் என் படத்திற்கு அருகில், ரஜினியின் படம்.

இப்போது அவை எதுவுமே என்னிடம் இல்லை. ரஜினி மீது இருந்த கண்மூடித்தனமான ஈடுபாடும் இல்லை. முன்பு போல கேள்விகளுக்கு இல்லாத இடம் இப்போது இருக்கிறது.

இப்போது எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்கும் போது இருக்கும் கேள்விகள் இன்னமும் ஆழமாகிறது. ஒருவேளை ரஜினிக்கும் என்னைப்போல மூக்கு பெரிதாக இருப்பதோ, தப்புத்தப்பாய் ஆங்கிலம் பேசுவதோ, அகல நெற்றியோ, பரட்டை தலை முடியோ கூட காரணமாய் இருக்கலாம். ஆனால் ஏன் ரஜினி.

பதின்ம வயதில் ரஜினி என்பது என்னை இயக்கிய ஆளூமையாகவே எண்ணி வந்திருக்கிறேன். அதே விறுவிறு நடை. சத்தமாக சிரிப்பது. சினிமாவில் ரஜினி பேசிய வசனங்களை பேசிச் கண்ணாடி முன் என் முகத்தையே உற்றுப் பார்ப்பது. இதுவெல்லாம் இப்போது நினைக்கையில் கேலிக் கூத்தாக இருக்கிறது. ஆனால் அப்போது அதைத்தான் நான் அன்றாட வாழ்வின் அடிப்படையென்றே நம்பி வந்திருக்கிறேன்.

ரஜினி போலவே நெற்றியில் பட்டையெல்லாம் அடித்த காலம் அது. அந்த பிம்பம்தான் எனக்கு கடவுள்கள் மீது பற்றிக் கொண்டது. அவ்வபோது ரஜினியின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு அதிசயங்களும் என் வாழ்விலும் நடக்க வேண்டும். நானும் ஒரு ரஜினியாக வேண்டும் என்பதே லட்சியம் . அந்த எண்ணமே பக்தியாக மாறியது.

காலண்டரில் இருக்கும் சாமி படங்களை எல்லாம் வெட்டி வெட்டி புத்தகங்களில் ஒட்டிவைப்பது. தூங்கும் போது சாமி படத்தை சட்டைப் பையில் வைத்து படுப்பது. பள்ளியிலும் நண்பர்களிடம் இருந்து சாமி படங்களை காசு கொடுத்து வாங்குவது. பத்திரிகையில் வரும் கடவுள் சம்பந்தமான விபரங்களை சேகரித்து வைத்திருந்தேன். இந்த விந்தை செயலுக்கு என்ன காரணம் இருக்கும்.

இந்த வகை செயல்களில் என் காதலையும் நான் வைக்க நினைக்கிறேன், உடன் நண்பர்களையும்.

படிக்கும் போதினில் எனக்கு பல நண்பர்கள் இருந்தார்கள் அதிலும் நண்பிகள் அதிகம். போதாதற்கு பேய்க்கதை சொல்வதின் நான் மன்னனாக இருந்த நேரம் அது. ஆண்களை பேய்க்கதை சொல்லியும் பெண்களை கவிதைகள் சொல்லியும் சுலபமாக நம்வழிக்கு கொண்டு வந்துவிடலாம். கொண்டும் வந்தேன்.

இப்போது அந்த காதலும் இல்லை, எந்த நண்பனும் நம்பியும் உடன் இல்லை. ஒவ்வொன்றையும் யோசிக்கும் போது நடந்து வந்த ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு மெல்லிய சம்பந்தம் இருப்பதாகவே படுகிறது. ஏன் சேர்ந்தோம் பிரிவதற்குத்தானோ. ஏன் காதலித்தோம் வெறுப்பதற்குத்தானோ.

அது எப்படி நண்பர்களும் பகைவர்களாகி விடுகிறார்கள். காதலிகள் துரோகிகளாகி விடுகின்றார்கள்.

எத்தனை நண்பர்கள் இருந்தாலும் நாம் மனம் வந்து பேசும் நண்பன் ஒருவனாகத்தான் இருப்பான். எனக்கும் இருந்தான். அவன் இளவரசன். நண்பர்கள் நாங்கள் தனி ஆளுமைகளாக வளர நேரிட்டது. கோவமும் சண்டையுமே உருவானவனாக அவன் ஆனான். கோவமும் சமாதானமும் சேர்ந்தே நான் ஆனேன். நான் அப்படியே என் அப்பா. அவன் அப்படியே அவன் அப்பா.

எங்களுக்குள் இயற்கையாகவே பிளவு ஏற்பட்டது. காரண காரியம் இல்லாதது போல அப்போது தோன்றினாலும் இப்போது அதன் காரணம் விளங்கும் நேரம் நெருங்குவதை உணர முடிகிறது.

தனியாளுமை வளர காரணமாய் அமைவதே கருத்துகள்தானே. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். இல்லாவிட்டாலும் தங்களுக்கு பிடித்த கருத்துகளுக்கு தலையாட்டிவிடுவார்கள். அப்படி அமையும் கருத்துகளுக்கு தங்களை இயற்கையாகவும் செயற்கையாகவும் தயாராகிறார்கள். கருத்துகளின் வலிமையே ஆளுமையாக உருமாறுகிறது. அப்படித்தான் நண்பர்கள் நாங்கள் பிரிந்தோம்.

தனித்தனி கருத்துகள் வழியே நாங்கள் அறிய விரும்பியிருக்கிறோம். எங்கள் அடையாளமே அதுதான் என நினைத்திருந்தோம். பெரிய புரட்சியெல்லாம் இல்லை. ‘‘நான் சொல்வதை நீ கேள்’’, என்ற வாசகம்தான் இலைமறைக்காயாக எங்களை இயக்கிக் கொண்டிருந்தது.

எத்தனை பிளவுகள் எத்தனை பிரிவுகள். எல்லாமே நாங்கள் எங்களுக்கு என தேடிக் கொண்ட கருத்துகளும், காட்ட நினைத்த எங்கள் ஆளுமைகளும்தான். ஆனால் அவை எல்லாமே ரஜினி படங்கள் போல விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் நிறைந்தவை ஆனால் போலியானவை. ரஜினியைப்போலவே மிகைப்படுத்தபட்ட கருத்துகள் அவை. ஆனால் ஏன் அதிலேயே தேங்கியிருந்தோம்.

அப்படித்தான் எங்கள் காதலும் இருந்தது. எனக்குத் தெரிந்து உடன் படித்த தோழனும் தோழியும் சமீபத்தில்தான் திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்கள் காதலிக்கும் போது தோழி குறித்து தோழனும், தோழன் குறித்து தோழியும் மற்றவரிடம் குறை சொல்லாமல் இருந்திருக்கவில்லை.

பெரிய பெரிய பிரச்சனைகளையெல்லாம் சந்தித்தார்கள். எல்லாம் அவர்களுக்கும் இருக்கும் ஈகோ பிரச்சனைகள்தான். இப்போது கணவன் மனைவியாகி விட்டார்கள். எப்படி சாத்தியம் என விசாரித்தால் புரிகிறது. அவர்களின் திருமணம் கூட ஈகோவால்தான் நடந்தேறியதாம்.

பிரிய நினைத்த சமயம், ஊரென்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும் என்ற காரணத்தால் இணைந்திருக்கிறார்கள். தனக்காக வாழாமல் ஊருக்காக வாழ வைக்கும் காதல் இப்போது வேண்டுமானால் இனிக்கலாம். நாளையும் இனிக்குமா?

ரஜினி ஏற்படுத்திய மாயை போலவே எனக்கு ஒரு காதலி ஏற்படுத்திய மாயையும் இருந்தது. எந்த எதிர்வினையோ தெரியவில்லை. நான் தூக்கியெறிந்துவிட்டேன். நண்பர்களும் சுற்றமும், இதனை பெரும் குற்றமாகவே கருதி என்னை ஒதுக்கினர்.

இப்படி ஒதுக்கி தள்ளுகிறவர்களெல்லாம் ஒரு குணத்தின் அடிப்படையில் சேர்க்கலாம். எப்படி கெட்டவனை அடையாளம் காட்டுகிறவன் மற்றவர் கண்களுக்கு நல்லவனாக தெரிகிறானோ அப்படித்தான். உண்மையில் இவர்கள் இப்படிக் காட்டிக் கொடுப்பது கூட தாங்கள் நல்லவர்கள் என்று பிரகடணப்படுத்தத்தான். இது அரசியலுக்கும் பொருந்திவருகிறது. ஒரு ஊழலை இன்னொரு ஊழல் ஊருக்குக் காட்டி ஓட்டுக் கேட்கிறது!

காதல் என்ற மாயையில் நான் விழித்தது ஓர் ஆச்சர்யம்தாம். எந்த பொழுதில் என யூகிக்க முடியவில்லை. நிச்சயம் நடந்திருந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும் என் முடிவிற்கும் சம்பந்தம் இருந்திருக்க வேண்டும். இப்படி ஒன்றின் பின் ஒன்றாக நடக்கும் ஒவ்வொன்றும் அதன் விளைவை நோக்கி நாம்மை நகர்த்திக் கொண்டே இருக்கிறது. எந்த நொடியில் எந்த பொழுதில் அது நமக்கு விழிப்பைக் கொடுக்கும் என தெரியவில்லை. எல்லோர்க்கும் விழிப்பு வருவதும் இல்லை.


நன்றி
 http://www.vallinam.com.my/issue43/thayaji.html
இதழ் 43
ஜூலை 2012

ஜூன் 20, 2012

பயணிப்பவனின் பக்கம் 18

சொந்த மூக்கைவிட நாற்றமெடுப்பது ஏதுமுண்டா..?



மலையாலத்தில் தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதி, தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த ‘தோட்டியின் மகன்’ படித்தேன். வாங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. நாவலை வாங்குவதற்கு முன்பாக, வெறும் கேள்விபட்டு, நண்பர் நவீனிடம் இந்நாவல் குறித்து விசாரிக்கும் போதுதான் தெரிந்தது. தோட்டி என மலம் அள்ளுகின்றவர்களை அழைப்பார்களாம்.

ஏறக்குறைய ஒரு வாரத்தில் படித்து விட்டேன். தோட்டியின் மூன்று தலைமுறையை சொல்லியது நாவல். தோட்டியின் அன்றாட வேலையான மலம் அள்ளி அதனை சேமித்து, மல கிடங்கில் கொட்டும் வரை மிக எதார்த்தமாக, ஏறக்குறைய காணாத ஒரு வாழ்க்கையை வாசிக்க நேர்ந்தது. அது என்ன ஏறக்குறைய வாழ்க்கை.?

“குருசாமி எங்கள் ஊர்த்தெம்பர்களில் ஒருவன் . பறையன்களை விடவும் தாழ்ந்தவர்களாய்க் கருதப்படும் இவர்களின் தொழில் மலம் அள்ளுதல்”- மிக சமீபத்தில் படித்த சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிடென்சியலிசமும் பேன்ஸி பனியனும்’ என்ற நாவலில் அவ்வாறு வருகிறது.

அடுத்தடுத்து படித்த இரண்டு நாவல்களும் ஏதோ ஒரு வகையில் மனதை அலைக்கழித்தாலும் ஏனோ கடந்த நாள்களில் நடந்தவற்றை நினைத்துப் பார்க்கிறேன்.

மலையகத்தில் மிக பிரபலமான ஆறுமுகம் பிள்ளை தோட்டம் அல்லது யு.பி தோட்டம். அதுதான் பிறந்தகம் எனக்கு. என் அம்மாவின் அப்பாவும் அம்மாவும், என் அப்பாவின் அம்மாவும் அப்பாவும்தான் எங்களுக்கு நினைவு தெரிந்தவரை எங்கள் முன்னோடி / மூதாதையர். இரண்டு புறத்திலும் குடி கூத்தாடியதால் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எங்கள் முழுமையான வரலாறு தெரிந்திருக்கவில்லை.

எனக்கும் அதன் அவசியம் அவ்வளவாய் தெரிந்திருக்கவில்லை. இன்னும் சொன்னால் எங்கள் வம்ச வழிகளில் நானும் என அண்ணனும்தான் முதலில் தலை எடுத்திருக்கிறோம்.

அப்போது சொல்ல கேள்விப்பட்ட ஒன்றைத்தான் ‘தோட்டியின் மகனும்’, ‘எக்ஸிடென்சியலிசமும் பேன்சி பனியனும்’ நினைவுப்படுத்தியது.

மலம். இந்த சொல்லை நாங்கள் யாரும் சொல்லமாட்டோம். நாங்கள் என்பது எங்கள் தோட்டத்தில் இருந்த எல்லோரையும் சேர்த்துதான். ஆனால் ‘பீ’ என்ற வார்த்தை மட்டும் மிக இலகுவாக எல்லார் வாயிலும் நுழைந்துச் சென்றது. தேவைப்படும் இடங்கள் நகைச்சுவைக்காகவும், கோவப்படும் இடத்தில் அவமானப்படுத்துவதற்கும் இதை தவிர உபயோகமான வார்த்தையை யாரும் தெரிந்திருகவில்லை.

எங்கள் தாத்தா காலத்தில், தோட்டத்தில் இருப்பவர்களுக்கு என்றே கழிவறை இருந்ததான். ‘ஜாமகொட்டாய்’ அல்லது ‘ஜாமகொட்டகை’ அதன் பெயர். ஜாமத்தில் அதாவது விடியும் முன்பு, விடிந்து கொண்டிருக்கும் பொழுதை ஜாமம் என்றே சொல்லி பழையவர்கள் நாங்கள்.

ஒவ்வொரு நாள் இரவிலும் சீனர் ஒருவர் அந்த கழிவறையில் நாங்கள் சேமித்த மலங்களை அள்ளிக்கொண்டு போவாராம். மலேசியாவில் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, இப்போது இதை சொன்னால் நம்பமாட்டார்கள்.

ஜாமகொட்டகையில் இருக்கும் பெரிய குழியில் கொட்டிக்கிடக்கும் மலத்தையும் கைகளாலேயே அள்ளும் சீனனை நான் பார்த்ததே இல்லை. எனக்கு நினைவு தெரிந்த பொழுதினில் வீட்டிற்கு ஒரு கழிவறை வந்துவிட்டது. ஆனாலும் வீட்டில் உள்ளேயே இருக்கும் கழிவறைக்கு பல பாட்டி தாத்தாக்கள் செல்வதில்லை. “பீயை, போய் வீட்டில் வைச்சிருந்தா லெட்சுமி எப்படி வரும் கருமம் கருகம்...” இது அவர்களின் கவலை. இருந்த போதிலும் வீட்டில் எந்த லட்சுமியும் வந்து ஆடிவிடவில்லை.

பதினேழு பதினெட்டு வயதில் தனியார் கல்லூரியில் படிக்க நேர்ந்தது. வேறு வழியில்லை. வேலைச் செய்து கொண்டே படிக்க வேண்டும். அப்போதெல்லாம் ‘சாமி’ என்று அழைக்கப்படுபவரின் நெருங்கிய நண்பனாகவும் மாணவனாகவும் இருந்தேன். வீடுகளில், கோயில்களில் பூஜை செய்வது. அவர் ஓர் ஓவியர் என்பதால் கோவில் சிலைகளுக்கும் கோவில் கோபுரங்களுக்கும் வண்ணம் பூசும் வேலையும் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

அதோடில்லாமல், அவரது தம்பி தனியாக துப்புரவு செய்ய சில பேரை வைத்திருந்தார். தினமும் ஐந்து தொழிற்சாலைகளுக்கு சென்று துப்புரவு வேலைகளைச் செய்து மாலை வீடு திரும்ப வேண்டும்.

பெற்றோர் எதிர்ப்பையும் தாண்டி பகுதி நேரமாக துப்புரவு தொழிலுக்கு சென்றேன். “செக்கிலிதாண்டா இந்த வேலையெல்லாம் செய்வோன்”- என உறவினர்கள் திட்டினார்கள். ஒருவேளை தோட்டிகளைத்தான் அவர்கள் ‘செக்கிலி’ என சொன்னார்கள் போலும்.

முதல் நாள் துப்புரவு வேலையில் என்னை சந்தித்தவர்கள், என்னைப் பார்த்த பார்வையை இன்றளவும் என்னால் மறக்க இயலவில்லை. அப்படி ஒரு பார்வை. என்னிடம் பேசுவதென்றால் பொதுப்படையாக கொஞ்சம் கத்தி யாருடனோ பேசுவது போல பேசுவார்கள். நானே அதை புரிந்து கொள்ளவேண்டும். இதற்கு மேலும் உண்டு. பக்கத்தில் இருக்கும் என்னிடம் எதையும் சொல்லாமல், கைபேசியில் என் முதலாளிக்கு அழைத்து என்ன வேலையை நான் செய்யவேண்டும் என சொல்வார்கள். பிறகு முதலாளி என்னை அழைத்து செய்ய வேண்டிய வேலையைச் சொல்லி செய்ய சொல்லுவார். இதற்காகத்தான் நான் முதன் முதலாக கைபேசியை வாங்கினேன். அதையும் ஐந்து மாத தவணையாய் முதலாளியிடம் பணம் செலுத்தினேன்.

படித்தவர்களும் அந்தப் பார்வையை செலுத்தினர். இத்தனைக்கும் அந்த அளவுக்கு நாற்றமெடுத்த உடலுடன் நான் நடந்ததில்லை. பின்னர் நான் பகுதி நேரமாக படித்துக் கொண்டிருப்பதை தெரிந்ததும்தான் என்னுடன் பேச ஆரம்பித்தார்கள்.

தொடக்கத்தில் இவர்கள் என்னை ஒதுக்கியதன் காரணம் ஒன்றுதான். நான் அசுத்தமானவன், அவர்கள் வாசனையானவர்கள்.

அவர்களின் சுத்தம் உடம்பிலும் வாசனை திரவியத்திலும் மட்டுமே இருப்பதை உணர்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது. அந்த வயதில் வந்தும் வராத மீசையில் உடல் முழுக்க மறைக்கபட்ட நீல நிற ஆடையுடன், பெரிய காலணியுடன் இருந்த நான், பார்ப்பதற்கு இந்தோனியா மாதிரி இருப்பேன்.

அப்படி ஒருநாள் ஒரு மருந்து தொழிற்சாலையி இருக்க கூடிய கண்ணாடிகளைத் துடைத்துக் கொண்டிருந்தேன். மொத்தமே ஐந்து பேர்தான் அந்த தொழிற்சாலையில் இருந்தார்கள். மூன்று பேர் மலாய்காரர்கள். இரண்டு தமிழர்கள். முறையே ஆண் பெண்.

எனக்கு தமிழ் தெரியாது என நினைத்து அந்த ஆணும் பெண்ணும் பேசியபோது எனக்கேக் கூட உணர்ச்சி ஏற்பட்டது. இத்தனைக்கும் அவர்கள் இருவரும் திருமணமானவர்கள். அந்த பெண்ணுக்கு ஒரு பையனும் அந்த ஆணுக்கு இரண்டு பிள்ளைகளும் இருப்பதை என் சக துப்புரவு தொழிலாளிகளிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.

தத்தம் முதலிரவில் நடந்தையெல்லாம் இருவரும் மாறி மாறி பகிர்ந்துக் கொண்டார்கள். உடன், புதிய புதிய உடலுறவு முறைகளையும் அலசி ஆராய்ந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேல், இவர்கள் இருவரின் இடையின் நடந்திருந்த உடலுறவுகள் குறித்தும் கேலியாக பேசினார்கள்.

ஆணின் பலவீனத்தையும் பலத்தையும், தனக்கு ஏற்பட்ட சுகத்தையும் இப்போதுதான் அனுபவித்தது போல அந்த பெண் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் பார்த்து அந்த அறைக்குள் வந்த, என் சக தோழர், என்னை அழைத்தார். நானும் அவருடன் பேசிக்கொண்டே அறைக் கதவு வரை வந்து திரும்பி பார்த்தேன். நான் பேசிய தமிழ் அவர்கள் இருவர் முகத்திலும் பீதியாய் எதிர்வினையாற்றியது.

இன்னும் நான் வேலை செய்து மற்ற தொழிற்சாலைகளிலும் இதே போல சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்போது அதையெல்லாம் நினைக்கையில் எதைத்தான் நாம் வாழ்வின் லட்சியம் எனவும் பண்பாடு எனவும் வாழ்வின் தரிசனம் எனவும் காட்டி வருகிறோம் என புரியவில்லை, காட்ட முயல்கிறோம் எனவும் தெரிவில்லை.

அடிமட்டத்தில் மட்டுமல்ல, மேல்மட்டத்திலும்தான். உயர்நிலையில் வைத்திருக்கும் தத்தம் இருத்தலைக் காக்கவும் தொடர்ந்து மேலேறி செல்லவும் எதற்கும் தயாராகவே இருக்கிறார்கள்.

ஒரு முறை கண்ணதாசனின் தத்துவ மொழிகள் என்ற புத்தகத்தில் படித்ததாக நினைவு,

‘எந்த பெண்ணும் நடிகனை, கட்டிலில் சந்திக்கும்வரை புகழ்ந்துக் கொண்டுதான் இருப்பாள்’



நன்றி
இதழ் 42
ஜூன் 2012

பயணிப்பவனின் பக்கம் 17

பேய்





தொடர்ந்து, ஜெயமோகனின் புத்தகங்களை வாசித்து வருகிறேன். அவை, ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ , ‘புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள்’, ‘மேற்குச்சாளரம் - சில இலக்கிய நூல்கள்’, ‘ஆழ்நதியைத் தேடி’, ‘வாழ்விலே ஒரு முறை - அனுபவக் கதைகள்’.

சமகால எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளும் அவர்களின் படைப்புகளையும் அறிய முடிந்தது. அதோடு நில்லாமல், என்னால் சிலரிடம் விவாதிக்கவும் முடிகிறது. இன்னும் சொல்லப் போனால் எதிர்வினையாற்றுகிறேன். வெறுமனே ஜெமோ-வின் புத்தகங்கள்தான காரணம் என சொல்லவில்லை. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் குழுவும் தொடரும் என் வாசிப்பும்தான்.

இப்போது வாசிக்க ஆரம்பித்திருப்பது, ஜெயமோகனின் ‘நிழல்வெளிக் கதைகள்’. இவை பத்து பேய்க்கதைகளின் தொகுப்பு. இதனை படிக்கும் முன்பே இதுநாள் வரை நான் படித்துவந்த ஆவி, அமானுஷ்ய,பேய்கதைகள் என்னை சூழ ஆரம்பித்தன. ஏன் படித்தேன் என தெரியாமலேயே படித்தக் கதைகள். புத்தகத்தில் வெட்டி ஒட்டியக் கதைகள். வரிசையாக இப்படி பேய் கதைகளைப் படித்ததின் வழி, அதன் உள்ளடக்கம் தெரியவந்தன.

வெள்ளை நிற பெண் பேய். எப்போதும் தப்புத்தவறுகள் செய்யும் ஆண். பலிவாங்கும் படலம், வேப்பில்லை, விபூதி, நம்பூதிரி, இரவு பன்னிரெண்டு மணி இப்படி வழக்கமானதாகவே இருக்கின்றன. இவையெல்லாம் மிகைப்படுத்தபட்டதாகவே தெரிகிறது. பாவம் பேய்கள்!

பேய் இருக்கிறதா இல்லையா என்கிற வாதத்திற்கு எனக்கு நேரமில்லை, கடவுள் கொள்கை போல அதுவும் கேள்விக்குட்பட்டவைதான். பதின்ம வயதில் கேட்ட, ஒருவகையில் நான் அனுபவைத்த சில அமானுஷ்ய சம்பவங்கள் இன்னமும் என்னிடம் எதையோ சொல்ல முயற்சிக்கின்றன. எப்போது அவை எனக்கு பிடிபடும் என தெரியவில்லை. அப்படித்தான் இறந்து போன என் சித்தியின் மரணம் என்னை துரத்திக் கொண்டே வருகிறது. எத்தனையோ ஆண்டுகளாக!

பேய் பிடித்ததாகக் கூறி ஆளுக்கு ஆள் அடித்த வேப்பிலை, துடைப்ப அடியை வாங்கியும் என் சித்தி சிரித்துக்கொண்டிருந்தது, திகில்-தான் அப்போது. வயிற்றில் கரு இருந்ததும் தெரியவில்லை அவருக்கும் சித்தப்பாவிற்கும். மரணத்தின் காரணம் தெளிவில்லாமல் இருந்தாலும் வயிற்று கருவும் இறந்திருந்தது தெளிவானது.

எப்போதும் என்னை கிண்டல் செய்பவர் அவர். பேய்பிடித்ததாகக் கூறப்பட்ட தினங்களும் பள்ளி விடுமுறையும் ஒன்றாய் அமைந்ததால், நான் அவர் வீட்டில் தங்கினேன். வழக்கமான செயல்களில் எந்த பாதிப்பும் இருக்கவில்லை. ஜோக் சொல்வது, கோவப்படுவது, சமைப்பது எதிலும் சித்தி, அவராகவே இருந்தார். ஆனால், அவர் தனிமையில் அமர்ந்திருக்கும் சமயத்தில் மட்டும், யாருடனோ அவர் பேசுவதாக இருந்தது. வானைத்தைப் பார்ப்பது, விரல் நீட்டி அழைப்பது, தானே சிரிப்பது.

எதிரில் யாரும் இல்லாமல் இருக்கும் போது யாருடன் சித்தி பேசியிருப்பார். அதற்கு ஏன் பேய் பிடித்ததாய் பெயர்.

ஒருவேளை அவர் எழுத்தாளராக இருந்திருந்தால், எல்லாவற்றையும் எழுதியிருப்பாரோ என சந்தேகிக்கிறேன். நானும் அப்படித்தான். சித்தி ஏன் யாருமில்லாத பொழுதை தேர்ந்தெடுத்திருந்தார். யாருடன் சிரிக்கிறார். யாராக தன்னை நினைக்கிறார் என்பதே யாருக்கும் புரியவில்லை. இந்த யாருக்கும் என்பது மருத்துவர்களுக்கும்.

எத்தனையோ மாத்திரைகள். பயனில்லை. தொடர்வதற்கு பணமும் இல்லை.

முதல் நாள் ஏதேதோ எண்ணங்களுடனும் எதிர்ப்பார்ப்புகளுடனும்தான் சித்தியுடன் தங்கினேன். சித்தப்பாவிற்கு இரவு வேலை. என்னை வீரனாக நினைத்து என்னுடனே தானும் இருக்கும் சித்தியின் மகன். கால் சட்டைப்பையில் எப்போதும் இருக்கும் விபூதி பொட்டலம் யாருக்கும் தெரியவில்லை.

மருந்தாலும் மருத்துவராலும் ஆகாதென முடிவானது. சாமியார்கள் அழைக்கப்பட்டார்கள். தமிழ் சாமி முதல் மலாய் போமோ வரை சித்தியுடன் உரையாடிச் சென்றார்கள். ஒருமுறை போமோ சித்தியை அடைப்பதற்கு துடைப்பத்தை கேட்டபோது, சித்தப்பாவே எடுத்துக் கொடுத்தார். ஆனாலும் சித்தி பட்ட சித்திரவதைக்கு எல்லாம் சாமிகளும் ஆசாமிகளும்தான் காரணம். நிச்சயம் சித்தியின் மரணம் கேள்விக்குட்பட்டதுதான். யாரைத்தான் கேட்பது?

தோட்டத்தில், இருக்கின்ற பொழுதுகளில் ஒவ்வொரு வெள்ளியும் பூஜைக்கு செல்வது வழக்கம். அங்கே கடவுள் முதல் கண்டகண்ட விசயங்களை பேச முடியும் என்பதால் செல்வதை வழக்கமாக்கியிருந்தேன். அந்த வீடு முழுவதும் ஆன்மிக புத்தகங்கள், சொற்பொழிவு கேசட்டுகள் என இருக்கும். அதனாலேயே அவரை எனக்கு பிடித்துப்போனது. அவரை நான் ‘சாமி’ என்றே அழைத்தேன். ஆரம்பத்தில் இருந்து சடை முடியும், முகம் முழுக்க விபூதியும் இருந்ததால் அவரை எல்லோரும் ‘சாமியார்’ என்றே அழைத்தார்கள். அழைக்கப்பட்டாரா அல்லது கேலிக்குட்பட்டாரா என தெரியவில்லை. சமய கேள்வியை முன்வைக்கும் சமயத்தில் அதற்கான பதிலும் மேற்கோளாக சில புத்தகங்களையும் காட்டுவார். பெறும்பாலும் அவர் வீட்டிலேயே இருப்பது வழக்கம்.

அப்படி ஒருமுறை பூஜையில் இருக்கும் போது சிலரால் அழைக்கப்பட்டார். நானும் வெற்று உடம்பில் வேட்டியுடன் சில நண்பர்கள் படை சூல அவருடன் வெளியில் சென்றேன். பதட்டமான குரலில் ஆணும் பெண்ணும் எங்கள் முன் நின்றார்கள். உடன் எதையோ வெறித்துப் பார்த்தவாரு ஒரு இளைஞன்.

விசயம் இதுதான். இளைஞனுக்கு பேய் பிடித்துவிட்டதாம். அடுத்த வாரம் கல்யாணமாம். தட்டில் விபூதியுடன் ‘சாமி’ அந்த இளைஞனின் தலைமுடியை இடக்கையால் பிடித்தார். தட்டு கைமாறியது. ஏதோ முனங்கினார் அல்லது ஜெபித்தார். அப்போதுதான் தெரிந்தது, ‘சாமி’-க்கு பேய் ஓட்டுவதும் ஆன்மிக ஈடுபாட்டில் ஒன்றுதான்.

அந்த இளைஞன் பெண் குரலில் பேசினான். பசிப்பதாகவும், இந்த இளைஞன் அழகன் எனவும் குரலில் ஒலித்தது. பலகுரலில் பேசிப்பழகிய என்னாலும் இது நாள் வரை அப்படி சுதிசுத்தமாக பெண்குரலில் பேசுவதென்பது இயலாத ஒன்று.

பேயும் காத்து சேட்டையும் தத்தம் இருப்பை என் மனதில் உறுதி செய்தன. அந்த வயதில் கேள்விகளைவிட பதில்களே குழப்பமாக இருந்தன எனக்கு.

சில நாள்களின் இடைவேளையில், அடிக்கடி பேய் பிடித்து மயங்கி விழும் மாணவன் ஒருவனை சந்தித்தேன் உடன் ‘சாமி’யும். ஆனால் அவரால் அந்த மாணவனை குணமாக்க முடியவில்லை. ஒரு முறை விபூதி அடிக்கப்பட்ட அந்த மாணவன் அவரையே வெறுத்துப் பார்த்தான். நான் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தேன். மாணவனைப் பார்த்து அவர் சிரித்தார். மாணவனும் சிரித்தான். இது பேயெல்லாம் கிடையாது ஏதாவது மருத்துவரைப் பாருங்கள் என்றான்.

இரண்டுக்கும் இடைபட்ட நூலிழை எனக்கு பிடிபடவில்லை. அதன் சூட்சுமம் தெரிந்தும் தெரியாமலும் பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். இவர்களைப் போலவே இன்னொரு சாராரும் இருப்பதை கோலாலும்பூருக்கு வந்த பின்னர் தெரிந்துக் கொண்டேன். உண்மையில் எங்கெங்கிருந்தோ தலைநகர் வரும் எங்களுக்கு எத்தனையெத்தனை பாடங்கள் படிப்பினைகள் உடன் ஏமாற்றங்கள்!

அப்படியொருவரை அறிமுகம் செய்யவா...?

ஏன் இந்த வேலை என நானே என்னைக் கேட்கிறேன். யாராது இப்படி செய்துதான் ஆகவேண்டும். இல்லையென்றால், ஜெயமோகனையும், எஸ்.ராமகிருஷ்ணனையும் சேரன் என்கிற சினிமா பிம்பத்தில் வைத்து பார்ப்பவர்கள் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்.

கடவுள் கொள்கை என்பது கேலிக்கூத்து. சமயம் என்பது சாப்பாட்டிற்கு வழியற்றது. இப்படியாகக் கூறிக் கொண்டு வீட்டு மூலையில் படிக கல் சிவலிங்கத்தை வைத்திருக்கிறார்கள். யாருமற்ற பொழுதில் பூஜிக்கிறார்கள். இவர்களின் கொள்கை என்பது, ‘ஊர் மெச்ச ஓட்டுவோம் தேரை’ என்பதுதான். ஆனால் இவர் பின்னால் விபரம் தெரியாதவர்கள் இருப்பதுதான் பாவம்.

இன்னொரு உதாரணமும் உண்டு, எழுத்தாளர்கள் என்ற போர்வையில் ஊரைச்சுற்றி, போட்டோ பிடித்து, பேஸ்புக்கில் பகிர்ந்து, ஊரை ஏமாற்றுகின்றவர்கள். இவர்களுக்கு தெரிந்த நவீன எழுத்தாளர்கள் பட்டியலில் புதிதாக வந்திருப்பவர் இயக்குனர் சேரன். இப்போதே இப்படியென்றான் இதற்கு முன் குறித்து ஏன் சொல்ல வேண்டும். பேய் உண்டா இல்லையா என்ற கேள்வியை சற்று நேரம் ஒதுக்கி விட்டு, இந்த வகையினரை எழுத்து வேப்பிலையால் வேட்டையாடும் களம் இங்கே ஆரம்பமாகியுள்ளது.


நன்றி
இதழ் 41
மே 2012

பயணிப்பவனின் பக்கம் 16

முகமறியாதோராய் ஆறுதல் சொல்லிகள்





குட்டிகதை.
முதியவர் ஒருவரிடம் தாய் ஒருத்தி குழந்தையுடன் வருகிறாள். அவள் மகனின் அதிகமாய் சீனி சாப்பிடும் பழக்கத்திற்கு தீர்வு கிடைக்கவே அந்தச் சந்திப்பு. செய்தியைக் கேட்டறிகிறார் முதியவர். யோசிக்கிறார். அவர்களை அடுத்த வாரம் வரசொல்லி வழியனுப்புகிறார். மறுவாரம், தாயும் மகனும் வருகிறார்கள். முதியவர் அறிவுரை சொல்கிறார்.

“தம்பி, அதிகம் சீனி சாப்பிடுவது உடம்புக்கு நல்லதல்ல, இனி சீனி சாப்பிடாதே சரியா....”.

தாய்க்கு கொஞ்சம் அதிர்ச்சி.

“ஐயா இதை முதல் நாள் வந்தபோதே சொல்லியிருக்கலாமே.”

“இல்லையம்மா சொல்லியிருக்கலாம்தான். ஆனால். அது நாள் வரை எனக்கும் அதிகமாய் சீனி சாப்பிடும் பழக்கம் இருந்தது. இந்த ஒரு வாரத்தில் சீனி சாப்பிடும் பழக்கத்தை விட்டிருந்தேன்.”

அறிவுரை சொல்வதற்கு முன், நாம் அதை கடைபிடிக்க வேண்டும் எனும் மேலோட்டமான கருத்து மட்டும் இதில் இருப்பதாக எனக்குப் படவில்லை. அதற்கான காரணம் இந்தக் கதை எனக்கு அறிமுகங்கள் ஆனதுதான். ஆம் அறிமுகங்கள்.

இந்தக் கதையே முதன் முதலில் எனக்கு அறிமுமானது. அப்போது, எங்கள் தோட்டப்புரத்தில் ஓவியர் ஒருவருக்கு உதவியாளராக இருந்தேன். உதவியென்றால், அவர் வரைவார் நான் அவருடன் உட்கார்ந்து கதை பேசுவேன். அவ்வபோது வரையவேண்டிய பலகையை சுத்தம் செய்து வெள்ளை சாயம் பூசுவேன். ஆன்மிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் அது சம்பந்தமான பல புத்தகங்களை வைத்திருப்பார். அப்போது படித்த ஒரு புத்தகத்தில்தான் இந்த முதியவர் எனக்கு, ராமகிருஷ்ண பரமஹம்சராக இருந்தார்.

பின்னர் ஒரு நாளில் வானம்பாடி பத்திரிகை என நினைக்கிறேன். அதில்தான் குட்டிக்கதைகள் வரும். அப்படிப் படித்து கதை ஒன்றில்தான் அந்த முதியவர் புத்தராக என் வாசிப்பில் வந்தார்.

சில ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு, நண்பன் வீட்டிற்கு நானும் என் சில நண்பர்களும் சென்றிருந்த சமயம். வீடு முழுக்க ஏசுவின் படங்களாகவும் தொலைக்காட்சிக்கு அருகில் தோத்திரப் பாடல்கள் சீடியாகவும் இருந்ததன. மதமாற்று வேலையின் நண்பனும் அவனது அண்ணனும் மும்முரமாக இருந்த நொடி அது. அப்போது சொன்ன கதைகள் இந்த கதையும் வந்தது. அதில் இந்த முதியவர் ஏசு என்றே ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

தற்சமயம் வானொலிப் பணியின் போது, இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் அந்த முதியவர் நபிகள் நாயமாக என் மனதில் மாற்றப்பட்டார்.

இப்படியாக எனக்குத் தெரிந்த எல்லா மதத்திலும் எல்லா நம்பிக்கைகளிலும் இந்த கதை இருக்கிறது. பாத்திரங்கள் மட்டுமே மாறியிருக்கின்றன.

அறிவுரைகள் எல்லோருக்கும் தேவை, அதை சொல்வர் யாராக இருந்தாலும் பரவாயில்லை என்பதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். சொல்பவர் கடைபிடிக்க அவசியம் கூட இப்போதெல்லாம் இல்லை. ஏனெனில், சொல்பவரின் முகம் கூட தேவையில்லாமால் போயிற்று.

போக்கெட் நாவல்கள் விற்பதற்கு இதுவும் ஒரு காரண்மதான். யாரோ ஒருவர் யாரோ ஒருவருக்கு சொல்லும் அறிவுரை இவர்களுக்குத் தேவைப்படுகிறது. இவர்களை அடையாளம் காண்பது பெரிய கடினம் அல்ல.

“சார், என்ன கதை எழுதியிருக்கிங்க ஒன்னுமே புரியலை...”

“என்ன கவிதை இது , வார்த்தைகளை அப்படியும் இப்படியும் திருப்பி போட்டது போல இருக்கு”

“அவரா, புரியாத மாதிரிதான் எழுதுவார்.”

இப்படியாக வாசிப்பை முனுமுனுப்பவர்கள் ஏறக்குறைய அந்த ரகம்தான். இவர்கள் படிப்பது கதையாக இருந்தாலும் சரி கவிதையாக இருந்தாலும் சரி, அதில் யாரும் யாருக்கும் அறிவுரை சொல்லாத பட்சத்தில் அந்த எழுத்துகள் புரிவதில்லை. ஒவ்வொரு கதையிலும் நீதி போதனைகளையும் நன்னேறி அறிவுறைகளையுமே தேடிப்பார்க்கிறார்கள்.

இயல்புவாதம் என இருந்தாலும் மிகை கற்பனை ஆக வந்தாலும் சரி, அதன் பண்புக்கூறு அறிவுரையில் இருக்க வேண்டியுள்ளது. எழுத்துகள் மட்டுமல்ல குரலில் மூலம் கூட இவர்கள் அதைத்தான் கேட்கிறார்கள்.

வானொலிப் பணியில் அப்படியாகச் சிலரை சந்தித்திருக்கின்றேன். தொலைக்காட்சி முகத்தால் எற்பட்ட வசிகரமல்ல. குரலால். அதில் இனிமையை விட சொல்லும் பாணிதான் இவர்களை வசீகரிக்கிறது.

ஒவ்வொரு வானொலி நிகழ்ச்சியின் போது, படித்த ஏதாவது பொன்மொழிகளை சொல்வது எங்கள் வழக்கம். அரசாங்க வானொலியில் வேலை என்பதால் கட்டுப்படுத்தப்பட்ட பேச்சு மட்டும் வெளிப்படும். அதில் நையாண்டிகள் இருப்பதில்லை. கருத்துகள், கருத்துகள் ,கருத்துகள்தான். வெளியின் இருந்து கேட்பவர்களின் மனதில் எங்களை குறித்த மேன்மையான பிம்பம் வருவதில் ஆச்சரியமல்ல.

எங்களுக்கு வரும் அழைப்புகள் பாடல்களை கேட்பதற்காக மட்டும் அல்ல. அதில் சராசரி முகங்களோடு பகிரமுடியாத ஆழ்மனக் கேள்விகளும் அடங்கியிருக்கும். அதும் எல்லா அறிவிப்பாளர்களையும் அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. குறிப்பிட்டவர்களையே அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். கோவம், காமம், ஏக்கம், வருத்தம், ஆசை என அவர்களில் எதிர்ப்பார்ப்பை பட்டியலிடலாம்.

மருத்துவ நிகழ்ச்சியில் மருத்துவரை பேட்டி கண்டு ஒலிரப்பினாலும், நாங்களே மருத்துவர்களாக அவர்களுக்கு தெரிவோம். எங்களுக்கு வரும் அழைப்புகளின் கேள்விகளில் இருந்து அதனை உணரலாம்.

நான் பணியில் இருக்கும் ஒவ்வொரு சமயமும் நடுத்தர வயது பெண் அழைப்பார். படிப்பதில் ஆர்வம் உள்ளவர் என நினைக்கிறேன். எதாவது ஒரு தத்துவத்தை சொல்லி, அதை தான் படித்ததாகவும், அடுத்தமுறை நிகழ்ச்சி தொடக்கத்தில் சொல்ல சொல்வார். ஒருமுறை கூட அவர் சொன்னதை சொன்னதில்லை, அவரும் விடுவதாக இல்லை. சில சமயம் விடுகதை என்று குழப்பிவிட்டு சிரிப்பார்.

ஆரம்பத்தில் எரிச்சலாக இருந்தாலும், இப்போது பழகிவிட்டது. பழக்கம் வேறெப்படி இருக்கும். பகல் வேளையில் மட்டும் அழைப்பவரல்ல அவர். எனக்கு இரவு வேலையென்றாலும், அழைப்பு வந்துவிடும். இப்படியாக ஒருமுறை அவரின் பின்புலம் தெரியவந்தது. தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்காத மருமகள். சாப்பிட்டாரா எனக் கேட்காத பிள்ளை. துணையாய் இருப்பது வானொலியும் தனியறையும். நல்ல வேலையாக கைக்கு எட்டிய தூரத்தில் தொலைபேசி. தொலைபேசி கட்டணம் குறித்து மகன் ஏதும் கேட்காதவரை அழைத்துக் கொண்டேதான் இருப்பாராம்.

தன்னிடம் பேச யாரும் இல்லாத போது, எழுத்துகளையும் வானொலி குரல்களையும் நாடுகின்றார்கள். எழுத்துகளைக்கு உடனடி எதிர்வினை செய்தல் இயலாது. ஆனால் வானொலிக்கு அது சாத்தியம். தொலைபேசி இருந்தால் போதும். அப்படியாக வந்துக் கொண்டிருக்கும் தொலைபேசி அழைப்புகளில் ஒன்றுதான்.

“சார், நான் தான் பேசறேன். எப்போ சந்திக்கலாம். ம். அவரு இருக்கமாட்டாரு. இருந்து மட்டும் என்னத்தை செய்யராரு. அவருக்கு அவரோட சுகம்தான் முக்கியம். ஒரு தடவை, ஒரே ஒரு தடவை உங்களை பார்த்தாலே போதும். உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் இருக்கற காந்ததுக்கு என்னோட பரிசு இது. மறுக்காதிங்க.”

பாவம் அந்த பெண்ணா? அவளது கணவனா? இல்லை, எழுத்தாலும் குரலாலும் இயங்கிக் கொண்டிருப்பவர்களா?


நன்றி
இதழ் 40
ஏப்ரல் 2012

பயணிப்பவனின் பக்கம் 15


“தீ” சொல்லும் நா சுடும்; சுட வேண்டும்





‘ஒரு கோப்பை தேநீர்’. கே.பாலமுருகன் ஏற்பாடு செய்திருந்த இலக்கியவாதிகளுடனான கலந்துரையாடல். ஒருமுறைதான் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் எதிர்ப்பார்த்திருந்த மாதாந்திர கலந்துரையாடல். தொடர முடியவில்லை.

அதிஷ்டவசமாக நான் கலந்துக்கொண்ட போது டாக்டர்.சண்முகசிவா வந்திருந்தார். அந்த சந்திப்பிற்கு முன்பு வரை அவரைப் பற்றி பெரிதாக புரிதல் இல்லாமல்தான் இருந்தேன். அவ்வப்போது தொலைக்காட்சியிலும் சில சமயம் எனக்கும் என் தந்தைக்குமான உரையாடலிலும் அவர் வெளிப்படுவார். ஓரளவிற்கு அவரைத் தெரிந்துக்கொண்டேன்.

வானொலி அறிவிப்பாளராக மாதாந்திர நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்த சமயம். ‘கண்ணாடித் துண்டுகள்’ எனும் தலைப்பில் சமுதாய அவலங்களை, உண்மை சம்பவங்களை , பாதிக்கப்பட்டவரே நேயர்களுடன் பகிரும் நிகழ்ச்சி. பல தரப்பினரை பேட்டி எடுத்திருக்கிறேன். மிகுந்த யோசனைக்குப் பின் திருநங்கைகளைப் பேட்டி எடுத்தேன். வழக்கம் போல நிகழ்ச்சியின் நிறைவில் உளவியல் அடிப்படையிலும் சமுதாயக் கண்ணோட்டத்திலும் ஒருவர் பேசவேண்டும்.

டாக்டரின் சமுகப் பார்வை எதார்த்தமாகவும் நடைமுறை சாத்தியமாகவும் இருக்குமென்பதால் டாக்டரை பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரையில் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த முகத்தையும் கேட்ட குரலையும் அருகில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தரிசனம் என்பது மிகையான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் எனக்கிருந்த எதிர்ப்பார்ப்பு அத்தகைய ஒரு மனநிலையைத்தான் வழங்கியது.

எதிர்ப்பார்த்தததற்கு ஏற்றார்போலவே டாக்டரின் பேச்சும் அமைந்திருந்தது. பேட்டி முடிந்தது. கிளம்பினோம். பேட்டியும் எடிட்டிங் வேலையெல்லாம் முடிந்து ‘கண்ணாடித் துண்டுகள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. நல்ல வரவேற்பையும் பெற்றது.

மீண்டும் டாக்டரைச் சந்திக்கும் வாய்ப்பை எதிர்ப்பார்த்திருந்த சமயம்தான், ‘ஒரு கோப்பை தேநீர்’ கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முறை சண்முகசிவாவுடன் கலந்துரையாடல்.

சந்திப்பில் ஆவலுடன் கலந்துக் கொண்டோம். சதுர மேஜையினை சுற்றி அமர்ந்திருக்க உரையாடல் ஆரம்பமாகியது. பேச்சில் இடையில் டாக்டர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்;

“நீங்க ஏன் கவிதை எழுதறிங்க...?”

ஆளுக்கு ஒரு பதிலாய் வந்தவை;

“இலகுவாக சொல்லுவதற்கு இதுதான் வழி”, “இந்த வடிவம் பிடிச்சிருக்கு”, “இதில் சொன்னாதான் நல்லா இருக்கும்னு தோணுது”, “சிக்கனமா சொல்லலாம்”.

எல்லா பதில்களையும் உன்னிப்பாகக் கேட்டதற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், ஆழமாக கவனித்ததை தொடர்ந்த அவரின் பேச்சில் காண முடிந்தது. ஓர் ஆங்கில கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டு தொடர்ந்தார்,

“அவர் சொல்றாரு, எனக்கு வார்த்தைகளை பிடிக்கும். ஒரு வார்த்தையை முன்னுக்கும் இன்னொரு வார்த்தையை பின்னுக்கும் போட்டு பார்க்கறேன்... அப்பறம் இப்படியும் அப்படியும் மாத்தி மாத்தி போட்டு பார்க்கறேன்... வார்த்தைகள் அவ்வளவு அற்புதமாக இருக்குது”.

சொல்லும் போதே மிகையற்ற ஒரு தன்மையுடன் தனது அனுபவத்தை சொல்வதாய் இருந்தது டாக்டரின் குரல். வார்த்தைக் கொடுக்கும் அனுபவங்கள் எனக்குப் புரியத்தொடங்க புதிது அது.

அன்றைய நாள் முடிந்தது. ஒரு வருடத்திற்கு மேலாகியிருக்கும். சமீபகாலமாக அவர் சொன்ன அந்த வார்த்தைகளை அடிக்கடி சந்திக்கிறேன். சக நண்பர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வார்த்தைகள் எனக்கு விளையாட்டாய் இருக்கிறது. இப்பொதெல்லாம் வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக மட்டுமே பார்க்கவோ படிக்கவோ முடியவில்லை.

வார்த்தைகளில் சொற்களையும் தாண்டி எழுதியவருக்கும் நமக்குமான ஒரு தொடர்பு நிலையை உருவாக்கும் அற்புதம் அடங்கியிருக்கிறது. மனதில் வலியுடன் சில வார்த்தைகள் கண்ணில் படும்போது, வலியை குறைக்கிறது.

“'தீ'ன்னு சொன்னா நாக்கு சுடவா போகுதுன்னு, சொல்லிச்சொல்லி வார்த்தைகளுடன் நமக்கு நாம் இடைவேளியை போட்டு தப்பித்ததாய் நினைக்கிறோம். நாம் நம்மை காப்பாற்ற நினைப்பது வார்த்தைகளிடம் இருந்து இல்லை; வாழ்விலிருந்து.

தீ சொல்லி சுடாதா நாக்கும்; ஒருவரின் நடத்தையை குறித்து சொல்லும் வார்த்தையில் ரத்தம் கொதிக்கிறது. ஆக வார்த்தைகளுக்கு உணர்ச்சி கொடுக்கவும், உயிரை எடுக்கவும் தெரிந்திருக்கிறது.

வெறும் வார்த்தைதானே என நாம் ஒதுங்கும் ஒவ்வொரு சமயமும் சுரண்டப்படுகின்றோம். அரசியல் சூட்சுமமும், ஆன்மீக ஜிகினா வலைகளும் வார்த்தைகள் குறித்த பிரக்ஞையின்றியே நடந்தேருகிறது. சல்லாப வீடியோவில் சிக்கிய சாமியார் ஒருவர் சொல்கிறார், “நான் என்னை பிரம்மச்சாரி என்று எப்போதும் சொல்லாத பட்சத்தில் நான் எந்த பெண்ணிடமும் இருக்கலாம் இணையலாம்......”

“நீங்கள் எங்களை நம்புங்கள்; நாங்கள் உங்களை நம்புகிறோம். நாங்கள் உங்களுக்கு நம்பிக்கையை தருகிறோம்” என சொல்லி வணங்கும் ஒரு சாரார்.

“எங்களுக்கு தேவை நம்பிக்கையல்ல; உரிமை, அதை கொடுங்கள்” என மறுசாரார் கை உயர்த்துவதும் வார்த்தைகளின் மாயம்.

நம்பிக்கைக்கும் உரிமைக்கும் உள்ளே மறைந்துக் கிடைக்கும் வாழ்வை நாம் எப்போது புரிந்துக் கொள்ளப்போகிறோம்.

ஒவ்வொருவரின் வார்த்தைகளும் பேச்சிலும் எழுத்திலும் வலையினைப் பின்னி காத்திருக்கின்றன. எச்சரிக்கையாக இருப்போம். மனிதர்களைவிடவும் வார்த்தைகள் வலிமையுள்ளவை. வாழ்வை கொடுப்பவை.


நன்றி
இதழ் 39
மார்ச் 2012

பயணிப்பவனின் பக்கம் 14

கலீல் ஜிப்ரான் : வார்த்தைகளின் மாயச்சேர்ப்பு




‘படித்த ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படைக்காதீர்கள்; படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படையுங்கள்’ - கலீல் ஜிப்ரான்.’

சமீபத்தில் படித்த கலீல் ஜிப்ரானின் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இருந்து படித்தேன். கலீல் ஜிப்ரானுக்கு எனக்கும் ஏற்பட்ட தொடர்பு எப்படியென்று இப்போதுவரை என்னால் முழுமையாக சொல்லமுடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் என கேட்க கிடைத்த பெயர். அவரின் எழுத்துகளில் எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் தெரிந்துக் கொண்டேன். வழக்கம் போல புத்தகக் கடையில் இருந்த சமயம் கலீல் ஜிப்ரானின் மொழிபெயர்ப்பு கிடைக்க வாங்கினேன்.

கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளைப் படிக்க படிக்க ; வார்த்தைகளின் உள்ளேயேப் பயணிக்கலானேன். சில வார்த்தைகளின் சேர்க்கை கன்னத்தில் அறைந்தது போல வலி. சில வார்த்தைகளின் கூட்டு, என்னை அரவணைத்தது போல இன்பம். இருக்கும் இடத்தில் இருந்து எண்ணங்கள் என் பால்ய வயதிற்குள் சென்றதை விடவும் எதிர்கால கணக்குகளில் நான் சஞ்சாரம் செய்துக் கொண்டிருந்தேன். எனக்கு இன்பமாக இருந்த இந்த கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள், என் மனைவிக்கும் என் குடும்பத்திற்கும் பெரிய தொல்லையைக் கொடுத்தது.

தொழில் இடத்திலும் அது தொடர்ந்தது. யாரும் என்னுடைய பேசிய வார்த்தையை விடவும் அவர்கள் எண்ணங்களின் உண்மையான வார்த்தைகளே என் காதில் கேட்டது. இதனால் பல பிரச்னைகள். எந்த ஒரு படைப்பையும் படித்தாலும்; சினிமா படத்தினைப் பார்த்தாலும் எனக்கும் மற்றவர்க்கும் வேறுவேறான புரிந்துணர்வு கிடைத்தை சொன்னதால் எனக்கும் மிகவும் ‘நல்ல பெயர்’.

கலீல் ஜிப்ரான் - னின் வார்த்தைகளில் இருக்கும் மாய கற்பனை ஊற்று படிக்கப்படும் போது எனக்கு முளைத்த சிறகுகளில் சில மின்னல் முகங்கள் எனக்கு தோன்றின. மீண்டும் நான் எனது அரைக் கால் சட்டையுடனும் வெள்ளை நிற சட்டையுடன் என் பால்ய வயதில் நுழைந்தேன். அப்போதுதான் ஆரம்ப பள்ளிக்கூடம் நுழைகிறோம். யாரும் யாரையும் அறிந்திருக்கவில்லை. யாவர்க்கும் ஒரே நிற ஆடைகள்.

எங்களுக்கே எங்களை சரியாக அடையாளம் தெரியாத அந்த பொழுதில் சில ஆசிரியர்களால் நாங்கள் இருப்பிடங்கள் பெற்றோம்.

கறுப்பாய் உள்ள மாணவர்கள் ஒரு வரிசையிலும், சிகப்பாகவும் பற்கள் அழகாகவும் உள்ள மாணவர்கள் ஒரு வரிசையிலும் நாற்காலி பெற்றோம். அப்போது அது வெறும் நாற்காலிகளாகவும் இருப்பிடங்களாகவும்தான் தெரிந்தது. கலீல் ஜிப்ரானின் மாய வார்த்தைகளை நான் உள்வாங்கிய போதுதான் என் கடந்தகால இடங்கள் கொடுக்கப்பட்டதின் சூட்சுமம் புரிந்தது.

மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். இருந்த தோட்டத்தில் பள்ளி விடுமுறைகளில் கூட்டமாய் சேர்ந்து விளையாடும் போதுதான் எதார்த்தமாக ஏதோ பேச நடிகர் நம்பியார் குரல் வந்தது. உடன் இருந்தவர்களுக்கு ஒரே ஆச்சிரியம்.

மறுநாள் பள்ளிக்கூடத்தில் ஓர் ஆசிரியரிடம் என் நண்பன் இதனை சொல்ல; ஆசிர்யர்க்கும் எனக்கும் ஏற்பட்ட உரையாடல் மீண்டும் என் கண்முன் படமாக ஓடத்தொடங்கியது.

“ஓ, அய்யாவுக்கு அதெல்லாம் வருதா..? படிப்புல ஒன்னையும் காணோம்... இங்க வாயேன்”

“சார்”

“எங்க பேசு கேட்கறேன்.”

“சார்.. (சிரிக்கிறேன்)”

“வெளங்கலையா... பேசு, நம்பியாரை நானும் கேட்கறேன்.”

என் காதை அந்த ஆசிரியர் திருக; இப்போதும் வலிக்கிறது.

“பேசுடான்னா...”

நம்பியார் மாதிரி பேச ஆரம்பித்தேன்;

“எல்லாருக்கும் வணக்கம். நான் தான் நம்பியார் பேசறேன்.. எல்லாரும் எப்படி இருக்கிங்க”

“எண்டா இது நம்பியாரா.... யார் சொன்னா உன்கிட்ட இது நம்பியாருன்னு”

“படத்துல பார்த்திருக்கேன் சார்; இப்படித்தான் நம்பியார் பேசுவாரு..”

அறை இப்போதும் வலிக்கிறது.

“ஒழுங்க படிப்பு ஏறலை, ஆனா படம் கேக்குதா உனக்கு; நீயெல்லாம் எதுக்குடா லாய்க்கு, இந்த நம்பியார் மாதிரி பேசறேன், எம்.ஜிஆர் மாதிரி பேசறேன் சொன்னா அடுத்த கன்னமும் வீங்கிடும். அதை பேசதான் அவங்க இருக்காங்களே...”

ஆசிரியரின் அந்த கடைசி நகைச்சுவைக்கு என் வகுப்பில் இருந்த அனைவரும் சிரித்தார்கள். என்னை அடையாளப் படுத்திய நண்பனும் சிரித்தான். அப்போது அவன் மீது கோவம் வந்தது. இன்று புரிகிறது. அவனுக்கு அப்போது சிரிப்பதை விட வேறு வழி இருந்திருக்கவில்லை.

சமீப மேடை நிகழ்ச்சி வரை பலகுரலில் என்னதான் சிறப்பாய் பேசினாலும்; சட்டென அந்த ஆசிரியரின் முகம் வந்து சில வினாடிகள் என்னை மௌனப்படுத்தும்.

நல்லவேளையாக புஸ்பா என்கிற பெண் ஆசிரியர் கண்ணுக்கு நான் தெரிய ஆரம்பித்தேன். அவர் என்னை அடையாளம் கண்டார். நான் அடையப்போவதையும் கண்டார் என்றே சொல்ல நினைக்கிறேன். வகுப்புக்கு வந்ததும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் தைரியமாக பதில் சொல்ல முடிந்தது. பதில் தவறாக இருந்தாலும் நான் அதனை பொருட்படுத்தவில்லை. அந்த ஆசிரியரும் அதனை பொருட்படுத்தவில்லை. அவருக்கு தேவை தைரியமாக பேசும் மாணவர்கள். சரியான பதிலோ மிகச்சரியான பதிலோ அல்ல.

இந்த ஆசிரியரின், என் அடையாளப் படலத்திற்கு பிறகு; பள்ளி இறுதி ஆண்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு முதன் முறையாக என் பெயர் முன்மொழியப்பட்டது. அதுவரை கவனிக்கப்படாத பெயரை பலரும் வகுப்பில் தேட ஆரம்பித்தார்கள். ஆசிரியர் புஸ்பாவின் பொறுப்பில் ஒரு நாடகம் ஏற்பாடு செய்யவேண்டும். எங்கள் வகுப்பு சார்பாக அதனை அந்த ஆசிரியர் செய்தார். நான் அதில் முக்கிய கதாப்பாத்திரம். தொடக்கத்தில் நவின திருவிளையாடலாக யோசித்து எழுதுக் கொடுத்தார் அவர். சக நண்பர்களுடன் - இந்த சக நண்பர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள். என்னால் அவர்களுடன் எந்த ஒரு பய உணர்வும் இன்றி பேச முடிந்தது எனக்கே ஆச்சரியம்.

எங்கள் நடிப்பைப் பார்த்து ஆசிரியர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நகைச்சுவையாக ஒரு நாடகத்தை எழுதும் பொறுப்பை எங்களுக்கு கொடுத்தார். அதுவும் இரண்டே நாள் இடைவேளையில். எழுதினோம். ஒத்திகையிட்டோம். நடித்தோம்.

நான் நடித்த முதல் நாடகம் அதுதான். அதைப் பார்த்த பலரும் எனக்கு நல்ல நடிப்பாற்றல் இருப்பதாக பாராட்டியது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. இதில் நான் பேசிய பெரும்பாலான வசனங்களை நானே எழுதியிருந்தேன்.

அந்த ஆசிரியரின் பிள்ளையார் சுழியால், இன்று வானொலி அறிவிப்பாளர் வரை நான் வந்திருக்கிறேன். இந்த கடந்தகால சாட்சியினை என் முன் மீள்பார்வை காட்சிகளாக வரவைத்த கலீல் ஜிப்ரானின் மாய வார்த்தைகள் இது;

‘நாம் வாழ்ந்தது வெறுமனே இல்லை. நம்முடைய எலும்புகளைச் சேர்த்து வைத்துதானே அவர்கள் கோபுரங்கள் கட்டினார்கள்.!’
.......
வாய்ப்புகள் எப்போதும் வருவதில்லை. வரும் சமயம் தவறவிட்டால், மீண்டும் அந்த வாய்ப்பு நமக்கு வாய்க்காது என எல்லாரும்தான் சொல்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கபெறும் நமக்குத்தான் அந்த வாய்ப்பின் உட்பூசல் தெரிந்திருக்கும். என் சக நண்பர்களைப் போல எனக்கு வெளி நிகழ்ச்சிகளுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் என்னால் முகம் காட்ட இயலாது.

அதன் காரணத்தை தேடிக்கொண்டிருந்தேன் கலில் ஜிப்ரானின் மாய வார்த்தை கண்ணில் பட்டது;

‘தன்னுடைய கைவிரல் அழுக்கை உங்களுடைய வேட்டியில் துடைப்பவனுக்கு உங்களின் வேட்டியை அவிழ்த்துக் கொடுங்கள். அது அவனுக்குத் திரும்பவும் தேவைப்படலாம். உங்களுக்கு அதன் தேவை இருக்கப் போவதில்லை.’

இந்த வாய்ப்பு கொடுக்கிறேன் பேர்விழிகள், தாங்கள் செய்யும் ஊழலில் நம்மையும் சேர்க்கவே வாய்ப்பு என்னும் சொல்லில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருமுறை அந்த அழுக்கு கை என் வேட்டியில் பட்டுவிட்டால் நான் காலாகாலத்துக்கும் அவர்களின் ஆஸ்த்தான அறிவிப்பாளனாக இருந்திடுவேன் ஆனால் என் சுயத்தை இழந்திருப்பேன்.

சமீபகாலமாக என்னால் தொடர்ந்து கலீல் ஜிப்ரானின் மாய வார்த்தைகளுக்குள் மூழ்க முடியவில்லை. வாங்கிய புத்தகங்களை மூடி வைத்து பத்திரப்படுத்தியிருக்கிறேன். இந்த நொடியின் கூட என் மனம் சஞ்சலத்திற்கு திறக்கும் மந்திர புத்தகம் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள் அடங்கிய புத்தகங்கள்தான்.

அவரின் மாய வார்த்தைகளால் முன்னோக்கியும் பின்னோக்கியும் நான் பயணிக்கும் போது, வந்த சாட்சியும் வரப்போகும் காட்சியும் மறுபரிசீலனை செய்யப்படுகிறது.

கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள் எனக்கு காட்டியதில் சிலவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறேன். அவர் குறித்த குறிப்போ, அவரின் புத்தகங்கள் குறித்தோ என்னால் எழுத முடியவில்லை. இதற்கு கூட கலீல் ஜிப்ரானின் மாய வார்த்தைகள் காரணமாக இருக்கலாம்.

இதனை படித்த பிறகு, உங்கள் யாருக்கும் கலீல் ஜிப்ரான் மீது தேடல் ஏற்பட்டால்; உங்களாலும் முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாய் அர்த்தம்.

சில சமயம் என் கதைகளிலும் என் கருத்துகளில் என்/நான் சார்ந்த உண்மைகளை எழுதிவிடுவதும் உண்டு. பலருக்கு அதில் விருப்பம் இருப்பதில்லை. ஆனாலும், அந்த அனுபவம் சார்ந்த வார்த்தைகளையே என்னால் என் எழுத்தில் வெளிக்கொணர முடிகிறது. எனக்கு இது விந்தையாகத் தெரிந்தது. நானே என்னை அவமானப்படுத்துவதுபோலவும், மற்றவர்கள் மத்தியில் என் உத்தம அடையாள அழிந்திடுமோ என பயம் வருவதற்கு முன் கலீல் ஜிப்ரானின் மாய/ விந்தை/ ஆச்சர்ய/ அவசிய/ ஆரோக்கிய வாத்தைகளின் கூட்டு கண்ணில் பட்டது;

‘இரவின் பாதையைப் பாதுகாத்து விடியலை அடைந்துவிட முடியாது’



நன்றி
இதழ் 38
பிப்ரவரி 2012

பயணிப்பவனின் பக்கம் 13


கட்டில் இரவுகளும் புரளும் உருவங்களும்





“எத்தனையோ பேர் ஆசைப்பட்டு வெளிய காத்திருக்காங்க; ஆனா உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்குன்னா, அது உங்கள் படிப்பினால் மட்டும் இல்லை, இயற்கையோ கடவுளே உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதே உண்மை”

கூறியவர் ‘இளசை சுந்தரம்’. 1976-ல் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பில் எழுத்தாளராகப் பணியேற்றவர். அதோடு ஐம்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட உரைச்சித்திரங்கள் அளித்துள்ளார். தற்போது சொற்பொழிவுகளிலும்; வானொலி பணியாளர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.

அவருடன் ஏற்பட்ட சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு கூறினார். மனதில் இன்னமும் நிற்கும் வார்த்தைகள் அவை.

இதற்கென்று பிரித்தியேக தகுதியோ, படிப்பறிவோ இல்லாமல் எப்படியோ வானொலி துறைக்குள் நுழைந்துவிட்டேன். நம்பிக்கையும் அதுவரை படித்த புத்தகங்களே மூலம். ஒவ்வொரு அடியாக என்னை வளர்த்து வருகிறேன். பிறகு ஏற்பட்ட சந்திப்புகள், எதிர்ப்பார்ப்புகள், எதிரொலிகள், கைகுலுக்கல்கள், தொடக்கத்தில் விசித்திரமாகத் தோன்றின.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் ஒரு தொடர் சந்திப்பு இருந்தது. உண்மை சம்பவங்களை, தொகுத்து சம்பந்தப்படவர்களை பேட்டி கண்டேன். அதனை ‘கண்ணாடி துண்டுகள்’ எனும் தலைப்பில் வாராந்திர நிகழ்ச்சியாக தயாரித்து நடந்தினேன்.

வழக்கமான பேட்டிகள்; இரு நாற்காலிகளுக்கு இடையில் ஒலிபெருக்கியுடன் இடம்பெறும். எனது ஒலிப்பதிவு ஒலிப்பதிவு பெட்டியுடன் முன்பின் அறிமுகமில்லாத இடம், மனிதர்கள் இடையில் நடைபெற்றது.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அந்நிய தொழிலாளர்கள், போதை பித்தர்கள், தூக்கு தண்டனை கைதி, கர்ப்பத்துடன் சிறைக்கைதிகள், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். முக்கியமானவற்றை நினைவிலும் பலவற்றை கோப்பிலும் வைத்துள்ளேன்.

ஒருமுறை பாலியல் தொழிலாளி ஒருவரை பேட்டிகான யோசித்தேன். முதலில் எதிர்ப்பு வழக்கம் போல் வந்தது. பேட்டியின் காரண காரியங்களை விளக்கி அனுமதி பெற்றேன்.

பேட்டிக்காக தேர்ந்தெடுத்த இடம் ‘லிட்டல் இந்தியா’ என பெருமை பட்டுக் கொள்ளும், பிரிக்பீல்டின் (bricfield) பின்புறம். மனிதனுக்கு மட்டுமல்ல “முடித்தோம்”, “கிழிந்தோம்” என குதிக்கும் குதிப்புகளுக்கும், பின்புறம் என்பது முகச்சுழிப்பையும் மூச்சுத் திணறலையும் கொடுக்கிறது.

தேர்ந்தெடுத்த நேரம் உணர்ச்சிகள் உரிமை கேட்கும் இரவை.

பேட்டியில் ஒரு பிரச்சனை. போகும் இடம் சிகப்பு விளக்கு பகுதி. போவது பேட்டிக்கு. விளக்கில் ஒளியில் உள் நுழையும் போதோ வெளியேறும் போதோ யார் கண்ணில் பட்டாலும், என் உத்தம பிம்பம் உடைந்துவிடும். நின்று, வந்த விபரத்தை விளக்கிக் கொண்டிருக்க முடியாது. முகத்தை மறைத்தேன். தலைக்கவத்தில் கறுப்பு கண்ணாடி. அளவுக்கு பெரிய ஜீன்ஸ் சட்டை. மோட்டரை தூரத்தில் நிறுத்தி, நண்பனுடன் நடக்கத் தொடங்கினேன்.

எந்த ஒரு முகபாவமும் இன்றி ஆண்களும் பெண்களும் திருநங்கைகளும் எதிர்ப்படத்தொடங்கினர். எதிர்ப்படல் தொடர்ந்தது. வேகமாகும் ஆமை நடையுமாய் என்னை அவர்கள் கடந்துப் போகும் எந்த நேரத்திலும் என் முகம் அவர்களுக்கு தெரிந்திருக்காது என்பது நிச்சயம் தெரிந்திருந்தது.

நான் அங்கே சுற்றிக் கொண்டிருப்பதை யார் பார்த்து பேசத் தொடங்கினாலும் அந்தப் பேச்சி தொடந்து என் வேலைக்கே ஆபத்தை விளைவிக்க கூடியது என்பதால், பேட்டியும் முக்கியம் எனக்கு நானும் முக்கியம்.

சாப்பாட்டுக் கடைகள் சாலையோரத்தில் இருந்தன. நல்ல வியாபாரம்தான் போலும். பரபரப்பை பார்க்கும் போது தெரிந்தது. ஜோடிக்காகவும் சிலர் ஜோடிகளுடனும் இருந்தார்கள். மொழிகள் கடந்த, நிறங்கள் கடந்த, மதங்கள் கடந்த, வயதுகள் கடந்த, உடல்கள் உடல்கள் ஒன்றிணைய ஒத்திகையை அந்த நேரத்தில் பார்க்கலாம்.

மார்பு குழி தெரிய மதுவின் துணையுடன் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வார்கள். யாதொரு இருப்பையும் கூட சட்டை செய்யாமல் ஒருவரை ஒருவர் முத்தமிடுவர். அந்தச் சத்தமே பக்கத்து மேஜைக்காரர்களைத் தூண்டிவிடும்.

இரு கடைகளுக்கு மத்தியில் வாசல்கள் இருக்கும். இரண்டு மாடி. வாசலில் ஒற்றை நாற்காலி. பன்றி முகமாய் ஒருவன் இருப்பான். ஒவ்வொரு வாசலிலும் அப்படியே இருக்கும். வெளியில் ஒரு பன்றியென்றால் ஒவ்வொரு அறைக்குச் செல்லும் வழியிலும் சில பன்றிகள் நடமாடிக்கொண்டிருக்கும்.

உள்ளே நுழைந்தோம். எங்களைப் போலவே தலைக்கவசம், கறுப்பு கண்ணாடிகளுடன் இளைய உருவங்களும் தொங்கிப் போன தொப்பைகளும் வெளிவந்தன / உள்புகுந்தன.

அறைகளின் வாசல்களில் அரைகுறை ஆடையுடன் நின்றுக் கொண்டு வழியில் நடக்கும் ஒவ்வொருவரையும் அழைக்கும் அழகிகள். அழைக்கும் குரல்கள்...

“50 வெள்ளி”

“100 வெள்ளிதான்”

“சாயாங், இங்க வா 50 வெள்ளி கொடுக்கமாட்டியா”

“ஹேய், 30 வெள்ளிதான், வேணும்னா ரெண்டு தடவை செய்யி... வா...”

சில முகங்கள் இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது, அவர்களின் முகத்தை பார்க்கமுடிவதில்லை.

சிலர் எங்கள் சாட்டையையும் கால்சட்டையையும் பிடித்து உரிமையுடன் இழுக்கிறார்கள். ஒருத்தி என் ஜீன்ஸையே அவிழ்க்க முயன்றாள்...!வயதானவர்கள், இளம் பெண்கள் வயதுக்கு ஏற்றார்போல தேர்ந்தெடுக்க வசதியும் செய்து தர ஒரு பன்றிமுகம் சுற்றிக் கொண்டே இருந்தது. இப்படியே அந்தப் பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அறைகளும் எண்ணிக்கைச் சொல்ல விரும்பாத பெண்களும் இருந்தார்கள்.

ஆளுக்கு 50 வெள்ளி கட்டி, அறைகளில் நுழைந்தோம். ஆள் நடமாடக்கூடிய ஓர் அறை. தண்ணீர் குழாய். அமிக்கிப் போன மெத்தை. துணிகளை மாட்ட இரண்டு ஆணிகள். ‘வலிக்காமல் இருக்கவும் வேலையை சுலபமாக்கவும் தொடர்ந்து வேலை செய்யவும்’ அவர்களுக்கு பிரத்தியேக தைலம். (அவர்களே சொன்னார்கள்).

பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களின் உதவியுடன் வேறொரு நாள் பேட்டியை ஒதுக்கினேன். அவர்களின் ஒவ்வொரு அசைவும் பெரிய ‘பன்றி’ ஒன்றால் கவனிக்கப்படுவதாகக் கூறியப் பிறகு உடன் படுக்கவோ பேட்டி எடுக்கவோ முடியவில்லை. ஆனாலும் ஆடை கலைந்த நிலையில்தான் அந்த கொஞ்ச நேர உரையாடல் இருந்தது.

பிறகொரு நாள் பேட்டியை போலிஸ்காரார்கள், நிருபர் ஒருவர் உதவியுடன் எடுத்து முடித்தோம்.

சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் நிர்ணயிக்கப்பட்ட தொகை 500 வெள்ளிக்கும் மேல். இன்று 20 வெள்ளி வரை இறங்கி வர காரணம் எண்ணிக்கைதான்.

ஒருத்தியாய் இருக்கும் போது அவள் தனக்கு 500 வெள்ளியை நிர்ணயிக்கிறாள். வேறு வழி இல்லை. சென்றுதான் ஆக வேண்டும். ஆனால் இன்று ‘ஒருத்தி’, ‘ஒருத்தி-களாய்’ அதிகரிக்கவும் வேறு வழியின்றி தங்களின் தொகையை 20 வெள்ளிவரை குறைத்து வருவதை விடாமல் இருக்க செய்கிறார்கள். இவர்கள் இருப்பது குற்றம் அல்ல. இவர்களை அதிகரிக்க வைப்பதுதான் குற்றம். ஊர் மெச்சிக்கொள்ள ஒரு முறை இந்த கடைகளை மூடி ‘சீல்’ வைந்தார்கள்.

இன்னமும் அந்த ‘சீல்’கள் இருக்கின்றன. ஆனால் திறந்த கதவுகளில்.

இதுவெல்லாம் எங்கோ ஒரு மூலையில், ஆள் நடமாட்டம் அற்ற இடத்தில் நடக்கவில்லை.

லிட்டல் இந்தியா என பெருமைப்படும் Brickfields-ன் பின்புறம். முன்புறத்திற்கும் பின்புறத்திற்கும் நடந்தால் பத்து வினாடிகள்தான் வித்தியாசம்.


நன்றி
இதழ் 37
ஜனவரி 2012

பயணிப்பவனின் பக்கம் 12


விடுபடும் அன்பின் பரிணாமம்




காலை. நடைபாதை ஓரம். சிலர் நடை பயிற்சியில்; சிலர் இடை பயிற்சியில். ஒவ்வொரு சத்தத்திற்கு எதிர் சத்ததுடன் பறந்தன புறாக்கள். அதையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவர்.

கார் சத்தம். அதைவிட சத்தமாய் பறந்தன இறகுகள். இறங்கி வருகிறாள் இளம் பெண். கையில் புறாவுக்கான தீனி. பறந்த புறாக்களின் இடத்தில் தீனியை கொஞ்சம் கொஞ்சமாக வீசுகிறாள். பறந்த புறாக்கள் அதிகரித்தன இரைக்காக.

அதுவரை கவனித்து வந்த முதியவர் எழுந்து நடக்கிறார். அந்த பெண்ணின் அருகில் வந்து நிற்கிறார். தீனி திண்ணும் புறாக்களை கண்கொட்டாமல் பார்த்து சிரிக்கிறார்.

அந்நேரம் அந்த பெண்ணுக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. கையில் இருந்த தீனி பொட்டலத்தை முதியவரிடம் கொடுத்து தன் கைபேசியை எடுக்கிறாள். காதில் கைபேசியுடன் திரும்புகையில் அந்த முதியவரைக் காணவில்லை.

தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார் அவர்!.

ஆள் நடமாட்டம் அற்ற ஒரு இடம். கையில் தீனி பொட்டலத்துடன் நிற்கிறார். மூச்சிரைக்க மூச்சிரைக்க பொட்டலத்தில் உள்ள தீனியை சாப்பிடுகிறார்.

அவரின் பசியும் பரிதாம முகமும் அருகில் காட்டப்படுகிறது - உடன் ‘முதியோர்களைக் கைவிடாதீர்கள்’ விளம்பர வாசகம், முகத்தில் அறைகிறது.

வீடியோ காட்சி அத்துடன் முடிகிறது.

வரிசையாய் வீடுகள். ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் சின்னதாய் பூந்தோட்டம். தாராளம். அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். திருமணமானவள். ஒரு வயதானவரை வீட்டின் பின்புறம் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறாள். அந்த வயதானவர் உடல் கண்ணைத் தவிர மற்றவையெல்லாம் கறுப்பாக இருந்தது.

தோல் சுருங்கி ஒரு கையும் காலும் அசைவற்று இருந்தார். ஆடை ஏதும் இல்லை. உடல் முழுவதும் சவர்க்கார நுரையுடன், அந்த பெண் அவரைக் குளிப்பாடிக் கொண்டிருக்கிறாள். துளியும் முகச்சுழிப்பின்றி அந்த முதியவரின் ஆண்குறியையும் விதையையும் தன் கையாலே தேய்த்து கழுவிக் கொண்டிருந்தாள்.

கொஞ்சம் அழுத்தி தேய்த்தாலும்; வலிக்கும். வலித்தால் சொல்லும் நிலையிலும் அந்த முதியவர் இருக்கவில்லை. முதியவருக்கு பழகிவிட்டதா அல்லது அந்த பெண்ணுக்கு அதன் தன்மை புரிந்துவிட்டதா..? அந்த முதியவர் அவளது தந்தை.

முன்னது போல இங்கு முகத்தில் அறையும் விளம்பர வாசகம் வரவில்லை. ஏனேனில் இது வீடியோ கட்சி அல்ல. எனது ஒன்பது அல்லது பத்து வயதில் பார்த்துப் பழகிய ‘செல்லும் வழி காட்சி’.

வலிக்காமல், இருக்க ஒன்று மரத்துபோயிருக்க வேண்டும் அல்லது கைக்கு பக்குவம் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி பக்குவமென்றால், அதன் மூலம் எங்கே இருக்கிறது?

அன்பில்;
அக்கரையில்;
கடுப்பில்;
வருத்ததில்;
வெறுப்பில்;

தன் மூலம் எங்கே இருந்தாலும், கைக்கும் குறிக்கும் நன்மையைத் செய்திருந்தது.

இன்று;

அப்படி வீட்டு ஓரங்களில் நடக்கும் வசதி தற்போது இல்லை. அந்த மனிதர்களும் இல்லை. தந்தையின் குறியையும் விதையையும் வலிக்காமல் பிடித்துத் சுத்தப்படுத்தத் தெரிந்த பிள்ளைகளும் காணவில்லை.

இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்..?

நான் இருந்த தோட்டத்தில், பிறந்த நாள் என்றால் போதும். யாரையும் அழைக்கவேண்டிய அவசியமே இருக்காது. அப்படித்தான் ஒவ்வொருவரின் திருமணமும். இன்னமும் நினைவில் இருக்கிறது. எனது 10 வயது வரை, ஒவ்வொரு பிறந்த நாள் இரவும். கேக்கு முதல் பிறந்த நாளுக்காக செய்த பலகாரங்கள் வாங்கிய மிட்டாய்கள் எல்லாம் தட்டில் வைப்போம். எங்கள் வீட்டில் வருசையில் இருப்பவர்கள் வீட்டிற்கு சென்று கொடுப்போம். பதிலுக்கு அவர்கள் ஒரு ரிங்கிடேனும் கொடுத்து நல்லா படிக்கனும் என தெரிந்த அறிவுரைகளைக் கூறுவார்கள்.

காசு கிடைக்காது என தெரிந்தும் சிலர்வீட்டில் தட்டுகளைக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்வோம்.

வயது ஏற ஏற அந்த செயல்கள் மாறவும் மறையவும் தொடங்கின. இன்று ஒவ்வொரு வருட பிறந்த நாளையும் சிலர் முதியோர் இல்லங்களிலும் ஆதரவற்ற இல்லங்களிலும் கொண்டாடுகின்றார்கள். கவனித்துப் பார்த்தால்; அவர்களின் தாய் தந்தையில் ஒருவர் வேறொரு ஆசிரமத்தில் வேறு ஒரு பிரமுகர் கொடுக்கும் பிறந்த நாள் அன்பளிப்புக்கு வரிசையில் நின்றுக் கொண்டிருப்பார்.

சில சமயங்களில் நிகழ்ச்சிகளுக்காக முதியோர் இல்லங்களுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் சென்றிருக்கிறேன். தற்போது முதியோர்களின் எண்ணிக்கையும் சுறுவர்களின் எண்ணிக்கையும் சம அளவில் வந்துவிட்டதாய் ஓர் உணர்வு.

சமீபத்தில் அப்படி ஓர் ஆசிரமத்தில் சந்தித்த ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணுடன் ஏற்பட்ட உரையாடல்;

“நீங்க இங்கதான் இருக்கிங்களா..?”

“இல்லங்க, அப்பப்போ வந்துட்டுப் போவேன். வேலை செய்றேன்.”

“பரவாலையே, வெளிய வேலை செஞ்சாலும். அப்பப்போ ஆசரமத்துக்கு வந்து வேலை செய்றிங்க பாருங்க...”

“இல்லைங்க வேலை செய்றதுக்கு வரமாட்டேன். என்னோட பிள்ளைங்க நாலும் இங்கதான் இருக்குங்க, அதான் வந்து பாத்துட்டு போவேன்.”

“உங்க பிள்ளைங்களுமா..?”

“ஆமாங்க, புருசன் விட்டு போய் ரொம்ப வருசம் ஆச்சி... பிள்ளைங்களை வளர்க்கனுமே... அதான் இங்க இருக்குங்க..”

“பிள்ளைங்க படிக்கறாங்களா...?”

“என்னங்க நீங்க, சாப்பாட்டுக்கே இல்லாமதான் இங்க விட்டுருக்கேன்... இதுல படிக்கறது வேறயா...”

என்னால் அந்த உரையாடலை மேற்கொண்டு தொடர முடியவில்லை.

உரையாடலுக்கு பிறகு; தனது நான்கு பிள்ளைகளையும் அறிமுகம் செய்தார். அவருக்கு வேண்டுமானால் அது பெருமையாக இருக்கலாம். ஆனால் அந்த நான்கு பிள்ளைகளின் மனம்?

நன்றி
இதழ் 36
டிசம்பர் 2011

பயணிப்பவனின் பக்கம் 11


“முகம் காட்டாத நுகர்வு உருவங்கள்”






இம்மாத இறுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வருங்கால மனைவிக்கு இப்போதே செவி சாய்த்து புகைப்படம் எடுக்க சென்றோம். பல விதமான ஆடைகளில் பல விதமாக நிழல்படம் எடுக்கப்பட்டோம். காலை ஆரம்பித்த படப்பிடிப்பு மாலைதான் முடிந்தது. எடுத்தப் படங்களில் ஆல்பம் தயாரிக்க சில படங்களைத் தேர்ந்தெடுக்க சொன்னார்கள். நாங்கள் இருவரும் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டே வரும் வேலை; ஒரு படம் என்னை அப்படியே நிறுத்தியது. அதில் என் முகம் எனது பழைய முகமாகத் தெரிந்தது. என் துணைவி என் தோளில் கை வைத்தவண்ணம் பின்னால் நிற்க நாங்கள் சிரிக்கும் படம் அது.

பல படங்களை சட் சட் என தேர்வு செய்த நான் இந்தப் படத்தில் மட்டும் சற்று நிறுத்தியது இளைப்பாற அல்ல. உண்மையில் அது என் பழைய முகமாகத்தான் இருந்தது.என் பள்ளிப்பருவ, கண்ணாடி முன் தோன்றும் முகம் அது என்பது மட்டும் உறுதி.

புகைப்படங்கள் என்பதில் காலத்தையும் காட்சிகளையும் நிறுத்துகிறோம். அதனை திரும்ப திரும்பப் பார்க்கிறோம். சிலர் காரணத்துடன் சில கண்ணீருடன் இன்னும் சிலர் வெறுமையில்.

பள்ளியில் பிடித்துக் கொடுத்த புகைப்படங்களின் மறக்காமல் சொல்லும் நண்பர்களின் பெயரில் இருக்கும் மகிழ்ச்சி, அந்த நட்பின் தொடர்ச்சியில் இருப்பதில்லை. நிழல் படங்களில் ஒருவர் இன்னமும் குளித்துக் கொண்டுதான் இருக்கிறார். எப்போது முடிப்பார் எனத் தெரியாமல். இன்னொருவர் வெட்கப்பட்டு குனிந்த தலைதான் நிமிரவே இல்லை. இப்படி நிழல்படங்களில் பலரை பலவகையில் நிறுத்தி வைத்திருக்கிறோம்.

ஆனால், இப்படி எந்த ஒரு ‘நிறுத்தலிலும்’ நில்லாமல், யார் என்றே தெரியாமல் ஒரு பெண் இன்னமும் என் நினைவுப் பதிவில் உலாவிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளின் நினைவின் ஊடே என் பால்ய வயதின் ஒரு மாலை முதல் சில இரவுகள் கலந்திருக்கின்றன. இப்போது நாங்கள் எடுத்த படத்தில் எனக்குத் தெரிந்த எனது பழைய முகம்தான் இதுவரை என்னுள் எங்கோ விலாசம் இல்லாமல் உலவிய அந்தப் பெண்ணையும் அவளுடன் என் சில பொழுதுகளையும் வெளிக் கொணர்ந்திருக்கின்றது. சம்பந்தமில்லாத நேரங்களில் சம்பந்தமில்லாத கணங்கள் சம்பந்தமே இல்லாத நினைவை மீட்டெடுப்பதுதான் ஆச்சரியம்.

லாடாங் பெர்படானான் யு.பி தமிழ்பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்து தாமான் ரியா ஜெயா இடைநிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்த நேரம் அது. அதுவரை உடன் படித்த சில நண்பர்கள் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார்கள். ஒரே தோட்டத்தில் இருந்துக் கொண்டு ஒரே வயது நண்பர்கள் வேறுவேறு பள்ளியில் படிப்பை தொடர்வதில் கவலையும் கொஞ்சம் சுவாரஸ்யக் கதைகளும் இருக்கவே செய்யும். அதிலும் சிலர் காலை பள்ளி இன்னும் சிலர் மதியப் பள்ளி.

கவலையையும் சுவாரஸ்ய கதைகளையும் பகிர்வதற்காகப் பள்ளிக்கு மட்டம் போட திட்டமிட்டோம். ஒரு நாள்தானே யாருக்குத் தெரியப் போகிறது என்ற எண்ணத்தில் தொடங்கியது பின்னர் ஒரு வருடத்தில் முப்பது நாள்களுக்கு மேலாகிப் போனது.

முதல் நாள் நாங்கள் சந்திக்கும் இடம் தீர்மானம் செய்யப்பட்டது. யு.பி தோட்டத்தில் இருக்கும் ஆறுமுகம் பிள்ளையின் பழைய பெரிய பங்களா வீடு. யாரும் அங்கே உட்பிரவேசிக்க கூடாது. ஆகவே அந்த பங்களாவிற்கு அருகில் இருந்த பெரிய தண்ணீர் தொட்டிக்கு சில அடிகளில் உட்கார்ந்து பேச தாராள இடம் என நண்பர்களில் ஒருவன் சொன்னதால் அங்கே செனறோம். அங்குள்ள பழத்தோட்டத்தில் பழம் திருட செல்லும் வழக்கமுடைய நண்பன் வழிகாட்ட நாங்கள் சைக்கிளில் பின் தொடர்ந்தோம்.

இடம் வந்தது. அந்த பெரிய தண்ணீர் தொட்டியை அபோதுதான் அருகில் பார்த்தேன். பெரியது என்று சொல்ல முடியாது. உண்மையில் ரொம்ப பெரிய தொட்டி அது. மேலே ஏறி உள்ளே எட்டிப் பார்த்தால் இதயத்தில் லேசாக சுருக் என சத்தம் கேட்கும். இதில் ஆச்சர்யம் எனவென்றால் நமக்கும் மட்டும் கேட்க வேண்டிய சத்தம் அருகில் உள்ளவர்க்கும் கேட்கும்.

உட்கார மட்டுமல்ல, புரண்டு படுக்கவும் வசதியான இடம். மினரல் வாட்டர் போத்தல்கள், கிழிந்த பாய்கள், படுக்க வசதி செய்யப்பட்ட நாளிதழ்கள், சிகிரெட் தூண்டுகள், ஆணுறை பொட்டலங்கள் (அப்போது ஆச்சர்யமாக இருந்தது).

ஒவ்வொரு கூட்டத்திலும் எல்லாம் தெரிந்த அல்லது எல்லாம் தெரிந்தது போல யாராவது ஒருவர் இருப்பார்கள். அப்படி எங்களுடன் இருந்த நண்பன் அந்த பொருள்களின் பயன்பாட்டை உணர்ச்சிப் பூர்வமாகச் சொன்னான். அப்போது எங்கள் பீதியை கிளப்பியது மோட்டர் சத்தம். அந்த இடத்தை காவல் காக்கின்றவர்கள்தான் என எண்ணி ஆளுக்கு ஒரு திசையாக ஓடினோம். பின்னர்தான் அது எங்கள் நண்பன் ஒருவனுக்கு தெரிந்தவர் என தெரிந்தது. பயம் குறைந்து நாங்கள் ஒவ்வொருவராக அவர் முன் வந்து எங்களை அறிமுகம் செய்தோம். அவருடன் எங்கள் உரையாடல் வழிதான் முகமறியாத ஒரு பெண் என்னுள் நுழைந்தாள். அந்த நபரைச் சுற்றி நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு கேள்வி கேட்க அவரிடமிருந்து பதில்கள் வந்துக்கொண்டிருந்தன.

“அடச்சே நீங்களா டா.... நானும் எவனோ எவளையோ கூட்டி வந்திருக்கான்... வந்து பார்க்கலாம்னு நெனைச்சி வந்தேன்.... பழம் திருட வந்திங்களாடா...”

“இல்லன்னே.... இன்னிக்கு ஸ்கூலு லீவு அதான் இங்க அப்படியே சைக்கிள் எடுத்து ஒரு ரவுண்டு வந்தோம்...”

“ஓ... இங்க அடிக்கடி வராதிங்கடா.. கெட்டு போய்டுவிங்க... தெரிதா..?”

“ஏன் அண்ணே”

“சொன்னாலும் உங்களுக்கெல்லாம் புரியாதுடா..”

“சொல்லுங்கண்ணே புரிஞ்சிக்கறோம்...”

“அப்படியா சொல்ற... சரி யார்கிட்டயும் இதை சொல்லக்கூடாது தெரிதா..?”
எல்லோரும் ஆர்வமாய் “ம்” சொல்ல; அவர் தொடர்ந்தார்.

“இங்க அடிக்கடி பசங்களும் பொண்ணுங்களும் வருவாங்க. அதுங்க இங்க பண்ற கசாமுசா இருக்கே.... அதுக்குன்னே நானும் என்னோட கூட்டாளியும் இங்க வந்து ரகசியமா பார்ப்போம். ஒரு வேளை ஆள் புதுசா இருந்தா அப்படியே அதுங்களை மிரட்டி நாங்களும் கொஞ்ச நேரம் விளையாடுவோம்னு வச்சிங்கோங்களேன்... என்னடா இப்படி பார்க்கறிங்க; இதுதான் நீங்க இங்க வர்ரது முதலும் கடைசியுமா இருக்கட்டும்....அப்பறம் ஒரு நாள், நானும் கூட்டாளியும் வந்தோம். ஒரு தமிழச்சியும் ஒரு இந்தோனேசியாக்காரனும் பாதி துணியில்லாம... கட்டிப் பொரண்டுகிட்டு இருந்துச்சுங்க... விடுவோமா... அந்த இண்டோனை அடிச்சி தோச்சிட்டோம்ல.... அந்தப் பொம்பள எங்களையே எதுத்துகிட்டு வருது...... ஏண்டி எங்களையெல்லாம் உங்கண்ணுக்கு தெரியாதான்னு கேட்டா...... என்னோட விருப்பம். எனக்கு இவரை புடிச்சிருக்கு. நான் இவருக்கு கொடுப்பேன் உனக்கு எந்த மயிருக்கு நான் கொடுக்கனும்... நீ என்ன என் புருசனா... அவரை அடிக்கற வேலையெல்லாம் வேணாம்...னு கத்துது”

“யார் அண்ணே அவங்க...?” நண்பர்களில் ஒருவன் கேட்க.

“ஏண்டா நீ போய் அவ வீட்டுக் கதவைத் தட்டப்போறியா.... அவளோட புருசன் உன்னை தட்டிப்புடுவான் தெரிஞ்சிக்கோ.... அவளே பாவம் புருசனுக்கு தெரியாம இங்க அப்பப்ப வந்துட்டு போறா... ?”

புரிந்தது போலவே எல்லோரும் சிரித்தோம். ஏனோ தெரியவில்லை அந்த முகமறியாத பெண்ணும் அவள் பேசியதாகச் சொல்லப்படும் வார்த்தைகளும் இன்னமும் நான் பயன்படுத்தும் வார்த்தைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கவே செய்கின்றன.

உடலின் புரிதலும் மனதில் புரிதலும் புரியாத வயதில் கேள்விபட்ட அதே சம்பவத்தை மீண்டும் நான் சந்தித்தேன். என் நண்பனின் குரலில்.....

“நீ வேற டா... அவளுக்கு ரெண்டு பிள்ளை இருக்கு தெரியுமா... எத்தனை தடவை sms பண்ணி கூப்டுருக்கா தெரியுமா...? எல்லாம் நம்ப பழகறத பொருத்துதான் இருக்கு...”


நன்றி
இதழ் 35
நவம்பர் 2011

பயணிப்பவனின் பக்கம் 10





நன்றி
இதழ் 34
அக்டோபர் 2011
கதைக்கு காதுண்டு; கதைக்கத்தான் வாயில்லை...!





விக்ரமாதித்தன்;
தெனாலி ராமன்;
மரியாதை ராமன்;
ஜானகி ராமன்;
வாண்டு மாமா;
அக்பர்;
பீர்பால்;
முல்லா நசுருதின்;

என் பள்ளிக்கூட நாட்களில் இவர்கள் எனக்கு மிக நெருக்கமானவர்கள்; என் நாயகர்கள் என்றே சொல்லலாம். நூல்நிலையத்திலும் இவர்கள் கதைகளே அதிகமிருக்கும். வகுப்பிற்கு வரும் புது ஆசிரியர்கள்; இவர்கள் குறித்து பேசிதான் எங்களுடன் நெருக்கமாவார்கள். பாடம் ஏதுமில்லாத நேரத்திலும் நாங்கள் ஒவ்வொருவராக இவர்கள் குறித்துதான் பேசிக்கொள்வோம். அவ்வளவு பிடிக்கும் இவர்களை.

படித்த கதையோடு எங்கள் சொந்த கதைகளிலும் ‘இவர்கள்’ உலா வருவார்கள். அப்போது வந்து கொண்டிருந்த நாளிதழ்களிலும், வாரா மாத இதழ்களிலும் இவர்கள் பற்றிய கதைகள் நிச்சயம் இருக்கும். அதனை வெட்டி அதற்கென்ற ஒரு புத்தகத்தை வாங்கி ஒட்டுவோம். ஒவ்வொரு பக்கமாக இவர்கள் ஒவ்வொருவரும் கதைகளாக இருப்பார்கள். இதில் சக மாணவர்களுக்குள் போட்டியும் உண்டு. எங்கள் வகுப்பாசிரியரின் துணையோடு மாதம் ஒருமுறை வகுப்பு மாணவர்கள் முன் கௌரவிக்கப்படுவோம்.

இப்படியாக, நான் வளர்ந்த பின்னாலும் ‘அவர்கள்’ பற்றிய புத்தகங்களை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அன்று தெரிந்த கதைகள் இன்று வேறுமாதிரி புரிகிறது. தெரிவதற்கும் புரிவதற்கும் வயது முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு இன்னொரு காரணம் உண்டு. அப்போது கடவுள்கள் குறித்த சித்திரக்கதைகள் வந்திருக்கவில்லை. கடவுளைக் கடவுளாக பார்த்து பழகியவன் நான். கார்டூனின் கடவுள்களின் பந்து விளையாட்டு, வாய் சண்டை, பறப்பது, பஞ்ச் பேசுவது, ஊர் சுற்றுவதையெல்லாம் உட்கார்ந்து பார்க்க மனமில்லை.

கடவுள்களை கேலிச்சித்திரத்திரங்களில் நாம் அனுமதிக்கிறோம். பின்னர் இதனையே ஆடைகளில் வரும் போதும், காலணிகளில் வரும்போது எதிர்வினை செய்கிறோம். ஏன்..? கார்டூனாக வந்து கடவுள்கள் செய்யும் லூட்டிக்கும் இதற்கும் அப்படியென்ன பெரிய வித்தியாசம்.

கடவுள்களின் சாகசங்களைக் கார்டூனாக பார்க்காமல்; வீட்டில் உள்ளவர்கள் சொல்ல கேட்டு வளர்ந்தேன். சொல்ல கேட்கும் போது எனக்கு நானே அதனை என் கற்பனையில் பார்க்க ஆரம்பிப்பேன். இப்படிக் கார்டூனாக பார்க்கும் குழந்தைகளின் மனதில் மேற்கொண்டு கற்பனை செய்ய வேண்டிய அவசியமின்றி முழுவதும் காட்சியாக வந்துவிடுகிறது. பின்னாளில் கடவுள்கள் குறித்து பயங்களும் மறைந்துவிடுகிறது. கார்டூனில் பார்த்த தோமுக்கும் ஜெர்ரிக்கும் பயப்படுகிறோமா என்ன..?

கார்டூனாக காட்டும் போது பெற்றோருக்கும் சரி மற்றோருக்கும் சரி குழந்தைகளிடம் சொல்வதற்கு கதைகள் இல்லாமல் போகிறது. இவர்கள் நான் மேற்சொன்ன மனிதர்கள் குறித்து நன்னெறி கதைகளைப் பார்ப்பதில்லை, பால ஹனுமனும், பால கணேசாவும் இப்படிப் பல பால கடவுள்கள் போதும் என்று நிறுத்திவிடுகின்றார்கள். மனிதன் கடைபிடிக்க வேண்டிய நன்னெறிகளைப் பார்த்தால் குழந்தைகளுக்குத் தாங்கள் கடைபிடிக்க வேண்டிய பண்புகள் தெரிகிறது. கணேசனும் ஹனுமனும் நன்னெறி கடைபிடித்தால் என்ன; பெற்றோரை மதித்தால் என்ன..? இவர்களை போல எப்படிக் குழந்தைகளால் பறந்து சாகசங்கள் செய்ய முடியாதோ அவ்வாறே கார்டூனில் கடவுள்கள் கடைபிடிக்கும் நன்னெறிகளும் குழந்தைகளுக்கு அன்னியமாகிவிடுகின்றன.

“தோ, பார்த்தியா ஹனுமன் கூட அம்மா பேச்சை கேட்காம போனதாலதானே பிரச்சனை”

“ம்... அப்பயும் ஹனுமனாலே பறக்க முடியுதே அது போதாதா...?”

அம்மா பேச்சைக் கேட்பதைவிட பறப்பதே குழந்தைகளுக்கு முக்கியமாக தெரிகிறது. இவை வெறும் உரையாடல் அல்ல. உரையாடலாகவும் இருக்கப் போவதில்லை. குழந்தைகளிடம் எந்தக் கதையாக இருந்தாலும் பெற்றோர் சொன்னால் சுவாரஸ்யமாகக் கேட்பார்கள். தாங்கள் தப்பிக்க; பகலில் குழந்தைகளில் தொலைக்காட்சியில் கட்டிபோட்டு இரவில் அவர்கள் மெகா நாடகங்களின் அடிமையாகிவிடுகின்றனர்.

சமீபத்தில் நவீன் அழைப்பில் அவர் பணியாற்றும் பள்ளிக்கூடத்திற்கு கதை குறித்து பேச சென்றிருந்தோம். நான், யோகி, மணி மொழி ஆகியோர். அங்கே தொடங்கியது கதை சொல்ல செல்லும் பயணங்கள்.

அதனை அடுத்து மற்றொரு பள்ளிக்கும் நான் பணியாற்றும் மின்னல் பண்பலை மூலமாக மாணவர்களிடம் கதை சொல்ல சென்றிருந்தேன். இனி ஒவ்வொரு பள்ளியாக மாணவர்களுக்குக் கதை சொல்ல செல்லும் யோசனையும் முளைத்திருக்கிறது. இதற்கு விதையாக எனக்கு அழைப்பை கொடுத்த நவீனுக்கு நன்றி.

குழந்தைகளிடம் கதை சொல்வது சாவல் என்ற எண்ணம் மாறி சந்தோஷம் என்பதை உணர்ந்தேன். இரண்டு மணிநேரம் முடிந்து நவீன் மீண்டும் கூப்பிடும் போதுதான் தெரிந்தது இன்னும் சொல்ல வேண்டிய கதைகள் ஏங்கி தவிப்பது.

ஒவ்வொருவரிடமும் கதை இருப்பது என்னவோ உண்மைதான். அதில் எத்தனை பேருக்கு குழந்தைகளுக்கு சொல்ல கதைகள் இருக்கின்றன என்பதுதான் கேள்வி. இனியும் குழந்தைகளுக்குக் கடவுள்களின் கார்டூன்களே போதும் என்று நினைத்தால்.... கடவுள்கள் எல்லா நாளும் கேலிச்சித்திரங்கள்தான்.

பாவம் கடவுள்கள் அல்ல குழந்தைகள்.

பயணிப்பவனின் பக்கம் 9

பண இலை



நம்மை மீறிய ஏதோ ஒன்று நடக்கிறது. அதுநாள் வரையில் நாம் பிடித்திருந்த கொள்கையை புரட்டிப் போடுகிறது. அப்படி ஒரு நம்பிக்கை எனது பணப்பையிலும் இருந்தது.

இலை வடிவில் ஒரு சின்னப் பளிங்கை நண்பன் ஒருவன் கொடுத்தான். அப்போது பதிமூன்று வயது. இடைநிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் நாங்கள். தமிழ் பள்ளியிலிருந்து இடைநிலை பள்ளிக்கு சென்றிருந்தோம். தமிழை தவிர்த்து சுமாராக ஆங்கிலம் வருமே தவிர சுட்டு போட்டாலும் வாய் திக்காமல் மலாய் மொழி வந்திடாது. ஆசிரியர்கள் கேள்விக்கு பயந்து வகுப்பில் இந்திய மாணவர்கள் கடைசியில் அமர்ந்தோம்.

வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்தாலும் நாங்கள் பின்னால் எங்கள் வேலையில் கண்ணாய் இருப்போம். நடந்த, பார்த்த, கேள்விபட்ட பலவற்றை பேசி எங்கள் அறிவை வளர்த்தோம். பேச்சு சுவாரஸ்யத்திற்காக நண்பன் ‘பண இலை’ குறித்து பேசினான். அது அதிசய இலையாம். பெரும்பாலும் பணக்கார சீனர்கள் வீட்டில் இருக்கும் ஒருவகை செடி அது. அந்த செடியில் முளைக்கும் இலைக்குத்தான் ‘பண இலை’ என்று பெயர்.

அந்த ‘பண இலை’-யை பறித்து பணப்பையில் வைத்துக் கொண்டால் பணப்பிரச்சனை வராதாம். எப்படிச் செடியில் பளிங்கு இலை வரும் என்ற கேள்விக்கு இடமில்லாத வயது எனக்கு. கெஞ்சி கேட்ட பிறகு ஓர் இலையைக் கொடுத்திருந்தான். பச்சை பளிங்கினாலான கல் அது.

பதிமூன்று வயதில் நண்பன் ஒருவன் ஏற்படுத்திய நம்பிக்கை. ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருந்தது. பல பணப்பைகள் மாறியது. கொடுத்த நண்பனிடம் மனக்கசப்பு வந்தது. பல மாதங்கள் பேசாதிருந்திருக்கின்றோம். ஆனாலும் அவன் கொடுத்த பண இலை மட்டும் எனக்கு பணத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. நிச்சயம் ஆச்சர்யம்தான். வயது ஏற ஏற அனுபவம் சேர சேர, அந்த பண இலையை நானே சந்தேகித்திருக்கிறேன்.

இப்படி சந்தேகித்த ஒரு நாள் வளைக்க முயன்றேன். இலையாக மட்டும் இருந்திருந்தால் வளைந்திருக்கும். ஆனால் அது பளிங்கு இலை. வளைக்க முயன்றதும் உடைந்தது. உடனே அதனை மீண்டும் ஒட்டி பணப்பையிலேயே வைத்துவிட்டேன். பண இலை கையில் இருக்கும் வரையில் பணத்தட்டுபாடு இருக்கவில்லை. தற்போது அந்த நண்பனும் இல்லை. இறந்து அடக்கம் செய்யும் வரை இறப்பை குறித்து யாருக்கும் சொல்லவில்லை. மிகுந்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டான். அவன் வீட்டார் அனைவரையும் இரத்த பரிசோதனை செய்தார்கள். அவன் வியாதி அவர்களுக்கு பரவியிருக்கலாம் என்ற பயம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் ‘பண இலை’ இல்லாமல் இருந்தாலும் பண பற்றாகுறை வரவில்லை. அறிவிப்பு வேலையை முடித்துக்கொண்டு அதிகாலை 6மணிக்கு அருகில் இருக்கும் உணவகத்திற்குச் சென்றேன். உடன் நண்பன் ஒருவன். ஆளுக்கு ஒரு மோட்டார். வேகமாக சென்றவனைப் பின் தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்தேன். எதிரில் நான்கு மோட்டர். வலது இடதும் தள்ளாடியபடி சிலர் சென்றுக் கொண்டிருந்தார்கள். நண்பன் அவர்களைக் கடந்துவிட்டதால்; அவன் போல் ஒதுங்கிப்போகாமல் அவர்களை வழிவிடக்கோறி ‘ஹோர்ன்’-ஐ அழுத்தினேன்.

தள்ளாடிய நான்கு மோட்டர்களும் ஒதுங்கின. அப்போதே நான் யோசித்திருக்கலாம். வழிவிட்ட மகிழ்ச்சியில் அவர்களுக்கு இடையில் சென்றேன். கண் இமைக்கும் நேரத்தில் என் மோட்டாரை வழிமறைத்து நின்றார்கள். தமிழில்தான் பேசினார்கள்; போதையின் வாடை நன்றாகவே தெரிந்தது. என்னை முந்திச்சென்ற நண்பன் வருவதற்குள். என்னை சுற்றி வளைத்தவர்கள், தலைக்கவசத்தால் ஓங்கி அடித்ததில் விழுந்தேன். எழுவதற்குள் எல்லார் கால்களும் என்னை பதம்பார்த்தது.

பெரிய மூக்கு உடைபட்டு ரத்தம் கசிய, மேலும் வீங்கியது. பெயர் பதித்த சங்கிலி, கைபேசி, பணப்பை எல்லாம் அவர்கள் கையில். நல்லவேலையாக போலிஸ்காரர்கள் வந்தார். ரத்தம் வழியப் பேசினேன். உன்னை எப்படி நம்புவது என கேட்டார்களே பார்க்கலாம்.

அதெல்லாம் இப்போது வேண்டாம். பணப்பை. அதில்தான் பண இலை இருந்தது. இத்தனை ஆண்டுகளாக எனக்கு பணத்தைக் கொடுத்ததாய் நம்பிய பண இலை இனி இல்லை. ஆனால் இன்றுவரை பணத்தில் குறைபாடு இல்லை. அதே சமயம் பெரிய அளவில் நிறைபாடும் இல்லை.

நாம் நம்பும் ஒன்றை; நம்மை மீறிய ஏதாவது ஒன்றுதான் மாற்றியமைக்கும். பண இலை மட்டுமல்ல, இலக்கிய உலகில் இருக்கும் வணிக மற்றும் தீவிர இலக்கியத்திற்கும் இது பொருந்தும்.

“என்னப்பா வணிக இலக்கியம் தீவிரம்னு பேசர... இப்படி பேசிப்பேசித்தானெ எழுத்தாளர்கள் எல்லாம் காசுக்கு கையேந்தும் படி ஆகியிருக்கோம். வணிக எழுத்தில் என்ன தப்பு..?”

சில வருடங்களாக இரண்டிற்கும் வித்தியாசம் இல்லாமல்தான் சுற்றியும் புத்தகங்களை வாசித்தும் வந்தேன். படித்த பத்து புத்தகங்களில் ஏற்படாத நெஞ்சடைப்பு ஒரே ஒரு சிறுகதை தொகுப்பில் ஒரே ஒரு சிறுகதையில் வந்ததென்றால் எப்படிச் சாத்தியம். எச்சிலை முழுங்கும் போது தொண்டை வலிக்கிறது. நேற்றுவரை என் தோலில் கைபோட்டவர்களிடம் இருந்து அறுக்க நினைத்தக் கழுத்தைக் காப்பாற்றியுள்ளேன்.

வணிகம் தீவிரம். சிற்றின்பம் பேரின்பம். இதற்குமிடையில் இலக்கியத்தைக் காப்பாற்றுகிறேன் என சுயஇன்பம் காண்பவர்களும் உண்டு. இவர்கள்தான் பெரும்பாலும் வணிக, தீவிர எழுத்தாளர்கள் இடையில் மூட்டிவிடும் மொழிப்பற்றாளர்கள்.

தீவிர எழுத்தில் வணிகமும், வணிக எழுத்தில் தீவிரமும் வரலாம். வராமலும் போகலாம். ஆனால் மேற்சொன்ன சுயஇன்பம் காண்போரிடம் கவனம் அவசியம்.


நன்றி
இதழ் 33
செப்டம்பர் 2011

பயணிப்பவனின் பக்கம் 8

பொம்மைகளின் வன்முறை




மூன்றாண்டு காலமாக வானொயில் அறிவிப்பு செய்துக் கொண்டிருக்கின்றேன். இவ்வேளையில் பலதரபட்ட மக்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. வாழ்வில் உயர்ந்த நிலையில் இருபவர் முதல் அதபாதாளத்தில் இருப்பவர்கள் வரை பல முகங்கள். அத்தகைய சந்திப்புகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. சமீபத்தில் தந்தையர் தினத்தையொட்டி வானொலி நேயர்களுக்கு நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்தோம். சக நண்பர்களிடம் ஆளுக்கு ஒரு பணி எனக் கொடுக்கப்பட்டது.

எப்போதும் பல குரலில் பேசி ஆர்பாட்டம் செய்யும் எனக்கு இம்முறை; என்னை அடையாளம் காட்டாதப் பணி. முகமெல்லாம் சாயம் பூசி உடல் முழுக்க வண்ணக்கலவையில் ஆடை அணிந்து வழக்கத்திற்கு மாறாக குதித்தும் ஆடிக்கொண்டும் இருக்கும் கோமாளி வேடம். சக கோமாளியைத் தொடர்பு கொண்டு அவரையும் உதவிக்கு அழைத்தேன். கோமாளியாவதற்கு முதல் தேவை மீசை தாடி எல்லாம் மளித்து; வளவள முகத்தோடு இருத்தல் வேண்டுமாம். அதுதான் அரிதாரம் பூச அவசியமாம். மளிக்கப்பட்ட அவரின் முகத்திற்குப் பின்னால் இருக்கும் தொடர் வியாபாரம் அப்போதுதான் புரிந்தது.

சில வாரங்களில் எனக்கு பதிவு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரம் அது. மீசை இல்லாமல் போனால் பொண்ணுக்கே என்னை அடையாளம் தெரியாமல் போய்விடும். ஆதலால் மாற்று வழியை யோசிக்கலானேன். கோமாளியின் வேலை என்ன? சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சிப்படுத்துவதுதானே. அதை செய்துவிட்டால் முகத்தில் முடி எடுப்பதும் அவசியமற்றதாகிவிடும்.

யோசித்ததில் ஒரு சிந்தனைத் தோன்றியது. முகத்தில் சாயாம் பூசாமல்; சாயம் பூசப்பட்ட ஒரு பொம்மை முகமூடியும் அதன் உடையையும் அணிய முடிவெடுத்தேன். வாத்து உருவில் இருந்த பொம்மை உருவத்தினுள் என்னை புகுத்தவேண்டும். எப்படியும் என் அடையாளம் என நான் கருதும் என் குரலுக்கும் என் உணர்ச்சிகளைக் காட்டும் முகத்திற்கும் வேலை இல்லை. முழுக்க முழுக்க வாத்தாக நான் மாறி இடுப்பை ஆட்டியபடி நடந்து; கால்களை அகல விரித்து நடந்து; கைகளை அடிக்கடி தூக்கி காட்ட வேண்டும். மீசையும் தாடியும் தப்பித்தது.

எல்லாம் தயார். வழக்கம் போல் நிகழ்ச்சி தொடங்கியது. என்னை மறைத்த நான், வாத்தாக மாறி தயாராகி வந்திருந்தேன்.

வாத்து நடந்து வரும்போது சிறுவர் முதல் பெரியவர் வரை குதூகலப் பார்வைப் பார்க்கத் தவறவில்லை. அதன் பிறகு அந்தக் குதூகல பார்வைக்கு பின் இருந்த வன்முறையை நான் நினைத்தும் பார்க்கவில்லை.

எப்போதும் போல குழந்தைகளில் செயல்கள் விசித்திரமாகத்தான் இருந்தன. வழக்கமாக அவர்கள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் உருவம் கண் முன்னே வந்ததும் சிலர் அழுதனர் ; சிலர் பிரமித்து ரசித்தனர். இதையெல்லாம் தாண்டி சிறுவர்கள் பயன்படுத்திய வன்முறை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தாங்கள் ரசித்து சிரித்து பார்த்த கார்ட்டூன் கதாபாத்திரத்தை அடிப்பதும்; வயிற்றில் பலம் கொண்டு குத்துவதும்; பின்னால் உதைப்பதும் எந்த வகை ரசிப்புத்தன்மை. இந்த வன்முறையை யாரிடமிருந்து அந்தச் சிறுவர்கள் கற்றிருப்பார்கள். வீட்டில் இருந்தா...? பள்ளிக்கூடத்தில் இருந்தா...? சக மாணவர்களிடம் இருந்தா..? அல்லது கர்ட்டூனின் இருந்தா..?

‘ஆளவந்தான்’ திரையில் ஒரு காட்சி. புதுவிதமாக சண்டையிட்ட மனவளர்ச்சி குன்றிய நந்து பாத்திரத்திடம் “எப்படிச் சண்டை போட கற்றுக்கொண்டாய்” என மருத்துவர் கேள்வி கேட்பார். அதற்கு நந்து சொல்லும் பதில் இது “எல்லா குழந்தைகள் போலவும் கார்ட்டூனின் இருந்துதான் டாக்டர்”. ஆக; கேலிச்சித்திரம் என நாம் நம் குழந்தைகளுடன் கைத்தட்டி சிரித்துப் பார்க்கும் கார்ட்டூன்; குழந்தைகள் மனதில் வன்முறையையும் விதைக்கிறது.

‘மனிதர்கள் எப்போதும் தாங்கள் நேசிக்கும் ஒன்றின் மீது வன்முறையக் காட்ட தயங்கமாட்டார்கள்’ என எஸ்.ரா சொன்னது அந்த வலியிலும் நினைவுக்கு வந்தது. இத்தகைய மனப்பாங்கு கொண்ட சிறுவர்கள் நாளை இளைஞர்கள் ஆனதும் எப்படிச் செயல்படுவார்கள். நேற்று கோவப்பட்டு இன்று கையில் கத்தியோ கட்டையோ இவர்கள் எடுக்கவில்லை. ஆழ்மனதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த ஒன்றுதான் நேரம் வரும்வரைக் காத்திருந்து கையில் ஆயுதம் எடுக்கின்றது.

அத்தனை வலியிலும் என்னை சிரிக்கவைத்தது அந்த முகமுடி. என் இயல்பை மீறி அடையாளம் தொலைத்து நான் அணிந்திருந்த முகமுடிதான் என் உணர்வுகளை வெளிகாட்டாமல் சிரித்தவாரு இருந்தது. அடையாளம் தொலைத்தால் மட்டுமே உணர்ச்சிவசப்படுவதிலிருந்து மீள முடியுமோ என்னமோ?

குறிப்பு : வலிகளுக்கு இடையில் கொஞ்சம் நிம்மதிக்குக் காரணம் சில பெண்கள். பெண்கள் மட்டுமே கடைசிவரை குதூகலத்துடன் இருந்தார்கள். என்னுடன் புகைப்படம் எடுப்பதும் கைகொடுப்பதும் என தொடர்ந்தார்கள். இளவயது பெண்கள் மட்டுமல்ல வயோதிகப் பெண்களும் அதில் அடக்கம். என்ன செய்வது சில பெண்கள் பொம்மையை உயிருக்கு உயிராய் நேசிப்பார்கள். உண்மையை ஏற்றுக் கொள்ளுவதில் அவர்களுக்கு அவ்வளவாக மனம் வாய்த்திடாது.


நன்றி
இதழ் 32
ஆகஸ்ட் 2011

பயணிப்பவனின் பக்கம் 7


‘வரலாற்றை மீட்டுணர்தல்’





கடந்த மாதம் வல்லினத்தின் மூன்றாம் ஆண்டு விழா ‘வரலாற்றை மீட்டுணர்தல்’ என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது. முதல் வல்லினக் கலை இலக்கிய விழாவில் ஓவியம் மற்றும் நிழல் படக் கண்காட்சி இடம்பெற்றது. இரண்டாம் விழாவில் மலேசிய சிங்கை இலக்கியவாதிகளை இளையவர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையில் புத்தகம் தொகுத்து வெளியிடப்பட்டது. மூன்றாம் ஆண்டில் இந்த ‘வரலாற்றை மீட்டுணர்தல்’. இதில் எழுத்தாளர் அ. ரெங்கசாமி, எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி மற்றும் மலேசிய தமிழர்களின் இக்கட்டான நிலை என்ற நூலின் ஆசிரியர் ஜானகி ராமன் ஆகிய மூவரும் முக்கிய பிரமுகர்களாக அழைக்கப்பட்டு அவர்களின் வரலாற்றுப் பார்வை குறித்தும் அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்ளும் களமாக அமைந்தது.

இதைச் சொல்ல காரணம் உண்டு. வல்லினம் போன்ற இளம் படைப்பாளிகளால் நடத்தப்படும் இதழ் சார்ந்தவர்கள் மரபுகளைப் படிப்பதில்லை மூத்த இலக்கியவாதிகளையும் மதிப்பதில்லை எனப் பலரும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். குற்றம் சொல்பவர் யாரும் இதில் வந்து கலந்துகொள்ளவில்லை. வரலாற்று பிரக்ஞை ஏதுமின்றி ‘மரபும் மரபு சார்ந்த உறவும்’ என வேறு வேலையாகச் சென்றிருக்கலாம். (அப்படி சொன்னவர்களின் ஒருவரை அந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தது என் சாமர்த்தியம்...)

மேற்சொன்னதில் என் மீதும் கோவம் கூட வரலாம்...? எனக்கும் கோவம் வந்தது...! வாய்க்கிழிய பேசி தமிழ்தான் தாய் என சொன்னவர்கள் கண்ணில் மதிக்கத்தக தமிழர் வரலாற்றினைப் பதிவு செய்திருக்கும் அ. ரெங்கசாமியும் முத்தம்மாள் பழனிசாமியும் தெரியாததை வேறு எப்படி சொல்வது...?

இந்நிகழ்வின் நோக்கம் குறித்து வல்லின ஆசிரியர் ம. நவீன் பேசியதை வாய்ப்பிருப்பின் விடியோவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு நிகழ்வையும்; சந்திப்புகளையும் பதிவு செய்யும் சிவா பெரியண்ணனின் செயல் நிச்சயம் கவனிக்கத்தக்கது.

“அப்போ அப்படி ஒருத்தர் இருந்தாரு தெரியுமா...?”

இப்படிச் சில ‘பெரிசுகள்’ பேசுவதை கேட்டிருக்கின்றீர்கள்தானே. இது போன்ற பதிவுகளால் இளம் தலைமுறையினருக்குச் சம்பந்தப்பட்டவரின் குரல் முதல் கொண்டு அவரை அறிமுகம் செய்ய இந்தப் பதிவுகள் அவசியம். இதனை செய்பவர்களும் இளையத் தலைமுறைகள்தான்.

இன்னும் சொல்லப்போனால் நாங்கள் (இளம் தலைமுறை) மு.வ-வைப் படித்திருக்கின்றோம், புதுமைப் பித்தனைப் படித்திருக்கின்றோம், சுஜாதாவைப் படிக்கின்றோம், எஸ். ரா-வை படிக்கின்றோம், சாரு-வை படிக்கின்றோம். ஆனால் நீங்கள் ஏன் மு.வ-வைத் தாண்டி வரமாட்டேன் என்கின்றீர்கள் எனக் கேட்டால் அவ்வளவுதான். நமக்கு தமிழ் துரோகி என பட்டம் கொடுத்திடுவார்கள்.

வல்லின நிகழ்வில் அ. ரெங்கசாமி, தான் எழுத்தில் பிற மொழி சொற்கள் கலப்பில்லாமல்தான் தான் எழுதிவருவதாகவும் எழுதப் போவதாகவும் சொன்னதற்கு கூட்டத்தில் ஒருவரிடம் இருந்து பலத்த கைத்தட்டல் வந்தது. இது மொழி பற்றா... மொழி வெறியா... என புரிய எனக்கு சில காலம் ஆகலாம். ஆனால் ஏன் இவர் மலேசிய இலக்கியவாதிகளால் பெரிதாகக் கவனிக்கப்படவில்லை..? கைத் தட்டியவரிடம் இதனைக் கேட்கலாம்தாம். பதில் வராது என தெரிந்த பிறகும் கேட்பது எனக்கு ஒரு மாதிரியாக இருக்குமே...

அதே கூட்டத்தில் ஒருவர் வந்திருந்தார். வார இதழ் ஒன்றிற்கு தொடர் எழுதிவருகின்றார். அதே இதழில் தொடர்ந்து என் படைப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. மலேசிய இலக்கியவாதிகளில் மிக முக்கியமானவர் அவர். அவருடன் எனக்கு ஏற்பட்ட உரையாடல்;

“அப்பறம்; உங்க படைப்புகள் தொடர்ந்து வந்துகிட்டு இருக்கே...?”

“ஆமாம்... (சிரித்தேன்)”

“என்னோட தொடர் வருதே படிகிறிங்கதானே...?”

“படிச்சிருக்கேன்... சில இதழ்களை தவற விட்டுட்டேன்...”

“ஐ... படிச்சா மட்டும் போதுமா... உங்க கருத்தை எழுதி அனுப்ப வேண்டாமா...?”

“ம்... (சிரித்தேன் வேற என்ன செய்ய)”

நல்ல வேலையாக நவீன் என்னை அழைக்க, தப்பித்தேன். என்னையும் மதித்து அவரின் தொடர் குறித்து கருத்து சொல்ல சொன்னது மனதுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் இன்னமும் அடுத்தவர் தன் படைப்பிற்கு கருத்து சொல்ல வேண்டும் என எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் நியாயம். அதிலும் நீங்கள் எந்த இளைய படைப்பாளிக்கும் கருத்தோ ஊக்கமோ தெரிவிக்காத போது...?

எனது கோவம் அவசியமா என என்னை நானே கேட்டேன். என்னிடம் கேட்டால் மூத்த எழுத்தாளர்கள் பெயரில் பத்து பெயரையாவது சொல்ல முடியும், அவர் போன்றோரால் ஐந்து இளம் படைப்பாளர்களின் பெயரையாது சொல்ல முடியுமா என யோசித்தேன். என் கோவம் அவசியம்தான் என புரிந்தது.

நன்றி
இதழ் 31
ஜுலை 2011

பயணிப்பவனின் பக்கம் 6

சாரு நிவேதிதா எனும் பெண்...





அந்தப் புத்தகக்கடை முழுவதும் கண்ணாடிகளால் ஆனது. வெளியிலிருந்து பார்க்கும் போதே கண்ணைக் கவரும் வகையில் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. காலணியினைக் கழற்றி வைக்க வேண்டும். உள் நுழையும் போதே வாசனையுடன் இருவர் வரவேற்றார்கள். புத்தகங்கள் எழுத்தாளர்களின் அகர வரிசைபடி அடுக்கப்பட்டிருந்தன. அதோடு அந்தந்த எழுத்தாளர்கள் குறித்த சின்னச்சின்னத் தகவல்கள் அங்கே ஒட்டப்பட்டிருந்தன. இதுவரை படித்திராத எந்த ஒரு புது படைப்பாளி குறித்தும் அந்த விபரங்கள் வழி ஓரளவிற்கு தெரிந்து கொள்ளலாம். பின் அவர் எழுதிய புத்தகத்தை வாங்கலாம். அதோடு நீங்கள் எந்த புத்தகம் குறித்து விசாரித்தாலும் சிரித்த முகமாய் சொல்வதற்கு அங்கே தயாராக சிலர் இருந்தனர். புதிய வரவாக இருந்தாலும் சரி பழைய புத்தகமாக இருந்தாலும் சரி அதற்கேற்ற விபரங்கள் சொல்லும் ஆட்கள் இருப்பது அந்த புத்தக்கடையின் சிறப்பு. போதுமான வெளிச்சம். அரிய பெரிய புத்தகங்கள். அதோடு புதிதாகச் சந்தையில் வந்திருக்கும் புத்தகங்கள் குறித்த விபரங்களைத் தனியே வைத்திருக்கின்றார்கள். மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்ற புத்தகங்கள் அங்கே வரிசையாய் இருக்கும்.

இந்தப் புத்தகக்கடை எங்கே இருக்கிறது...?

- ஒவ்வொரு புத்தக விரும்பி மனதிலும் (மட்டும்) இருக்கின்றது!

இப்படி ஒரு புத்தகக்கடை சாத்தியமா...?

- சாத்தியம்தான் புத்தகம் என்பது வெறும் வியாபாரப்பொருளாகப் பார்க்காவிட்டால்.!

புத்தகங்களை வாசிக்கின்றவர்கள் குறைவு.... குறைவு.... என கோஷம் போடுகின்றவர்கள் மத்தியில் புத்தகக்கடைகளின் தரத்தைப் பற்றி யார் பேசுகின்றார்கள். புத்தகங்களை விற்கின்றவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாக இருக்கின்றார்களே தவிர புத்தகங்களை நேசிப்பவர்களாகவோ வாசிப்பவர்களாகவோ இருப்பது கிடையாது.

புத்தகக்கடைகளில் வேலை செய்கின்றவர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். எந்தப் புத்தகம் குறித்து கேட்டாலும் அமர்ந்தவாரே; “அங்கதான் இருக்கும்... ஒருவேளை யாராவது வாங்கியிருப்பாங்க, வேணும்னா வேற புத்தகம் பாருங்களேன்.” என்ற பதில்தான் தருவார்கள். சமீபத்தில் ஒரு புத்தகக்கடையில் இது போன்ற உரையாடலுக்குப் பிறகு நானே தேடிப்பார்த்து அவர்கள் இல்லை என சொன்ன புத்தகத்தைக் கண்டுபிடித்து வாங்கினேன். (அப்போதும் அதே விலைதான் - என்ன கொடுமை இதெல்லாம்...!) மாதம் ஒரு முறையோ அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறையோ புத்தக்கடைக்கு செல்கின்ற என் கண்ணுக்குத் தெரிந்த புத்தகம் ஏன் அங்கேயே காலை முதல் மாலை வரை வேலை செய்யும் அவர்களுக்குத் தெரியவில்லை?

அவர்கள் அங்கேதான் வேலை செய்கின்றார்கள். அவர்களைச் சுற்றிலும் புத்தகங்கள்தான் இருக்கின்றன. ஆனாலும் இந்த அளவுக்கா பிரக்ஞை இல்லாமல் இருப்பது. அதிலும் சிலரைப் பொருத்தவரை பத்திலிருந்து இருபது நிமிடத்திற்குள் புத்தகங்களை நாம் வாங்கிவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்களில் முகத்தை கொஞ்சம் கவனித்தால் போதும் நாம் வாங்க வந்திருக்கும் புத்த்கங்களையே மறந்துவிடுவோம். அந்த அளவுக்கு ‘ஜொலிக்கும்..!’

சில கடைகளில் வாடிக்கையாளர்கள் சொன்ன பிறகுதான் அங்குள்ள புத்தகங்களைக் கரையான் தின்றதே தெரியும். புத்தகங்களில் பூச்சி ஏறாமல் இருக்கவும் கரையான் திண்ணாமல் இருக்கவும், புத்தக அலமாரி ஓரத்தில் காய்ந்த வேப்பிலை இலையைப் போடலாம். அப்படிப் போட்டுதான், பல புத்தகங்களை காப்பாற்றி வைத்திருக்கின்றேன்.

புத்தகக்கடைகளில் வேலை செய்கின்றவர்கள் வாரம் ஒரு முறையேனும் புத்தகங்களை அடுக்கிலிருந்து எடுத்து தூசிதட்டி வைத்தாலே பெரிய விசயம். இன்னும் கூட பல புத்தகக்கடைகளில் புதிய வரவு குறித்து அறிந்திருக்கவில்லை. பல ஆண்டுகளாக அதே புத்தகம் அதே இடம் அவ்வளவுதான். சில புத்தகங்கள் வெயில் பட்டு நிஜ நிறம் மாறி புது நிறம் ஏற்றிருக்கும். இவர்களுக்கு மட்டும் தலைக்குமேல் காத்தாடி சுற்றிக் கொண்டிருக்கும்.

இன்று இலக்கியம் பேசும் மிக முக்கிய சிலர் தொடக்கத்தில் புத்தகக்கடைகளில் வேலை செய்தவர்கள்தான். அவர்களில் இலக்கியத் தாகத்துக்கு அந்தப் புத்தகக்கடைகள் பெரும் பங்கு வகித்தது. இன்றும் பலர் புத்தகக்கடைகளில் வேலை செய்கின்றார்கள். ஆமாம்; அவர்கள் வேலை மட்டும்தான் செய்கின்றார்கள். இவர்களுக்கும் பழமை பேசும் சிலருக்கும் ஓர் ஒற்றுமை; அவர்களுக்குப் புதியதை ஏற்க மனமில்லை இவர்களுக்கு பழையதைத் தவிர வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை.

ஒரு புத்தக்கடையில் “சாரு நிவேதிதா எழுதிய புத்தகம் ஏதும் இருக்கா” என கேட்ட பாவம்தான்; பதில் வந்தது, “அந்தப் பெண் எழுதிய புத்தகம் இப்பதான் முடிஞ்சது. வேணும்னா ஆர்டர் பண்ணவா...?”

இப்படித்தான் இருக்கின்றது இன்றைய நிலை.

புத்தகக்கடைகள் இலக்கியத்திற்கு செய்யும் நல்ல காரியம் என்ன தெரியுமா..? புத்தக அலமாரியில் முதல் வரிசையிலேயே பலவித செக்ஸ் புத்தகங்களை வைத்திருப்பதுதான். இதை கடைசியில் வைத்திருந்தாலும் பராவாயில்லை கொஞ்ச தூரமாவது புத்தகங்களைப் பார்த்தவாறு நடப்பார்கள். அதற்கும் வழியில்லை. முதல் வரிசையைத் தாண்டி செல்லும் வாய்ப்பும் சிலருக்கு இல்லாமல் போகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது வருங்காலத்தில் நாம்தான் புத்தகக்கடைகளை திறக்கவேண்டும் போல் எண்ணம் எழுகின்றது.

அது நடக்கும் என ஆழ்மனம் நம்புகின்றது.


நன்றி
இதழ் 30
ஜூன் 2011

பயணிப்பவனின் பக்கம் 5

என் மீதான சமீபத்தியக் குற்றச்சாட்டுகள்


 

  • எப்போதும் கையில் புத்தகத்துடன் இருந்து; என்னை புத்தகப்புழுவாகக் காட்டுகின்றேனாம்.
  • இந்திரா சௌந்திரராஜன், சுஜாதா, எஸ்.ரா, பிரபஞ்சன் என வந்து தற்போது கலீல் ஜிப்ரானைப் புகழ்வது என் வாசிப்பின் பலவீனத்தைக் காட்டுகின்றதாம்.
  • தற்போது நான் பழகிக் கொண்டிருக்கும் இலக்கிய வட்டம் ரொம்ப குறுகியதாம், இந்த சின்ன வட்டத்தை தாண்டினால்தான் என் சின்னப்பையன் புத்தி மாறுமாம்.
  • இப்போதுப் படித்துக் கொண்டிருக்கும் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ‘பெண் வாசனை’ என்ற புத்தகத்திலிருந்து எதையும் கற்க முடியாதாம், அதோடு அதில் இருப்பவை எல்லாம் அருவருக்கத்தக்க கவிதைகளாம்.
ஒவ்வொரு முறையும் நான் கடந்து செல்லும் இந்த குற்றச்சாட்டுகள் இவை. ஏன் என யோசிக்கையில் சொன்னவர்கள் மீது கேள்வியினைக் தொடுக்கின்றேன்.

இயலாமையா..?

அக்கரையா..?

பயமா..?

உண்மையா..?

இன்னும்கூட கேள்விகளை அடுக்கலாம்தான்; ஆனால் அவசியம் இல்லையென ஆனபோது கேள்விகளை வீண்செய்ய வேண்டாம். பதிலை யோசிக்கின்றேன்.

குற்றச்சாட்டு 1

எப்போதும் கையில் புத்தகம் இருப்பது என்ன அவ்வளவு பாவச்செயலா..? கையில் மடிக்கணினியுடன் சென்றால் கௌரவம், புத்தகத்துடன் சென்றால் ‘அ’கௌரவம் இது எந்த வகை நியாயம். புத்தகத்தை வெறும் படிக்க மட்டும் பயன்படுத்துகின்றவர்களுக்கு அதன் மதிப்புத் தெரியப்போவதில்லை. ஆரம்பப்பள்ளி படிக்கும் சமயம் என்னுடன் படித்த சக மாணவர்கள் கையில் கலர்கலர் கார்டூன் புத்தகங்களை பார்க்க மட்டும் முடிந்த எனக்கு இரவல் தரவும் யாருமில்லை வாங்கிக் கொடுக்கவும் வழியில்லை. அப்பாவும் அவ்வபோது எழுதுவது எனக்கு 4ம் வகுப்பு படிக்கும் போதுதான் தெரிந்தது. அதுவும் தற்காலிகப் பெண் ஆசிரியர் ஒருவர் மூலம். வீட்டில் அவர் வைந்திருந்த புத்தகங்களை திருட்டுத்தனமாகப் படித்து, பள்ளி நூல்நிலைய புத்தங்களைத் திருடிவந்து, கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து தைப்பூசத் தின புத்தகக் கடைகளில் தேடித் தேடி புத்தகம் வாங்கிப் பழகிய எனக்கு மனித உறவுகளை விட புத்தக வரவுகள்தான் பிடிந்திருந்தது. பல சமயம் புத்தக்கடைகளில் நுழைந்தால் கடையில் வேலை செய்கின்றவர் “என்ன மாதிரி புத்தகங்கள் வேணும்” என்றுக் கேட்பதையும் அவரின் உதவியையும் பிடிப்பதில்லை. தேடித்தேடி வாங்கி பணம் கட்டும் நேரத்தில் கடைக்காரருக்கே அந்தப் புத்தகம் இருந்த இடம் தெரிந்திருக்காது. அம்மாவும் குறைபட்டுக் கொள்வார் “இப்படி புத்தகம் வாங்கும் பணத்திற்கு வேற எதையும் வாங்கினா சாமி கோவிச்சுக்குமா..?” ஒரே பதில்தான் கொடுப்பேன். “அம்மா... இன்னிக்கு வாங்கின புத்தகம் எனக்கு இந்த இடத்தைக் கொடுத்தது. நான் இன்னிக்கு வாங்கும் புத்தகம் நாளைக்கு இன்னோரு இடம் கொடுக்கும்”. அன்றிலிருந்து புத்தகம் குறித்து அம்மா பேசுவதில்லை. அப்பாவும் என்னுடையப் புத்தகங்களை இரவல் வாங்குவதால், என்னை குறைசொன்னால் ஆபத்து அவருக்குத்தான் என்று அமைதி காப்பார்.

பள்ளியில் ஒரு முறை; ஆசிரியர் ஒருவர் கேட்டார்

“ஜப்பான்காரனுங்க கழிவறை போகும் போது கூட கையில் பேப்பர் இருக்கும் ஏன் தெரியுமா..?”

“அவங்க நாட்டில் தண்ணி பஞ்சம் சார்..”

அடிவிழுந்தது சொன்னவனுக்கு. இப்படியாக ஒவ்வொரு முறையும் என்னுடன் வந்திருந்த புத்தகங்களை நேசிப்பது ஒன்றும் தவறில்லையே. ‘கற்றதும் பெற்றதும்’-ல் சுஜாதாவிடம் எப்படிப் பல புத்தங்களைப் படித்துவிடுகின்றீர்கள் என்ற கேள்விக்கு அவர் சொல்லியிருப்பார். வரிசை நிற்கும் போதும் யாருக்காவது காத்திருக்கும் போதும் பேருந்து பயணங்களின் போதும் கையில் புத்தகம் இருக்கும். அதிலும் குறிப்பாக எல்லா இடங்களுக்கு ஒரே புத்தகத்தை எடுத்துச் செல்வதில்லை. வீட்டில் ஒரு புத்தகம் ; படுக்கை அறையில் ஒரு புத்தகம்; வெளியேச் சென்றால் ஒரு புத்தகம் என இருப்பதாக.... அந்த பதிலைப் படித்ததிலிருந்து நான் செல்லும் வழி சரியெனத்தான் நினைத்திருந்தேன். சிலருக்காக என் பழக்கத்தை மாற்றப்போவதில்லை.

குற்றச்சாட்டு 2
பலவகை புத்தகங்களைப் படித்துவந்த எனக்கு ஒரு காலக்கட்டத்தில் ஆவிகள் குறித்து ஆய்வு செய்யலாம் என்ற எண்ணத்தில் உந்துதலால் ஆவிகள் குறித்த புத்தகங்களை வாங்கினேன். 1999-ல் முதன்முறையாக ஆவிகள் உலகம் என்ற மாத இதழை தைப்பூசத் தினத்தன்று வாங்கினேன். அதில் தொடங்கி ஆய்வுகள் பல ஆவிகள் பற்றியப் பல புத்தகங்களை என்னிடம் கொண்டுவந்தது. அதிலும் குறிப்பாக விக்கிரவண்டி வீ.ரவிச்சந்திரன் என்பவர் எழுதிய புத்தகங்களே அதிகம். அதிலிருந்து அவர் எழுதிய ஆவிகள், அமானுஷ்யங்கள்,மறுபிறவி, ஆவி மூலம் நோய் தீர்க்கும் முறைகள் மற்றும் ஆவிகளுடன் பேசுவது எப்படி? என்ற புத்தகம் வரை படித்து அவரைக் கொண்டாடினேன் . அப்பாவிடம் தொடங்கி என்னுடன் படிக்கும் சக தோழதோழியரிடம் அவரைப் பற்றி பேசி, அவர் குறித்த அறிமுகம் செய்தேன். அதனை அடுத்து தனியார் தொலைக்காட்சியில் ஒலியேறிய ‘விடாது கறுப்பு’ நாடகத்தை விடாது பார்த்து அதன் கதையை எழுதிய இந்திரா சௌந்திர்ராஜன் குறிந்து அறிந்துக் கோண்டேன். தொடர்ந்து இவர் எழுதிய அமானுஷ்ய ஆன்மீக நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். வழக்கம் போல நண்பர்களிடம் அவரைப் பற்றியும் அவர் எழுதி வரும் அமானுஷ்ய கதைகள் குறித்தும் பேசி அவர்களுக்கும் அவர் எழுத்தின் மீது ஆர்வத்தை கொண்டுவந்தேன்.

சில ஆண்டுகள் கழித்து என் வாசிப்பில் வந்தவர்தான் சுஜாதா. தலைநகருக்கு வருவதற்கு முன்பாகவே அவரைப் பற்றித் தெரிந்துக் கொண்டேன். பின்னர் தலைநகரில் சுஜாதாவால் ஈர்க்கப்பட்டேன். அவரை மானாசீக ஆசானாக் கொண்டாடினேன். என வலைப்பூவிலும் அவரை பற்றி பதிவுகளைச் செய்தேன். அதன் பிறகு வந்தவர் எஸ்.ரா. இவர்கள் இருவரைக் குறித்தும் கடந்த கட்டுரைகளான ‘இரு ஆளுமைகள்’-லில் எழுதியிருக்கின்றேன். அதிலேயே பிரபஞ்சனின் புத்தகம் குறித்தும் எழுதிவிட்டேன். ‘நாளைய மனிதர்கள்’ என்ற அவரது சிறுகதை தொகுப்பையும் நான் பார்ப்பவர்களிடமெல்லாம் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

மூன்றாம் மாதம்; வானொலி நிகழ்ச்சி மூலம் அறிந்த ‘கலீல் ஜிப்ரான்’ என்ற பெயர் கொண்ட புத்தகத்தை வாங்கினேன். அந்த சமயம் என் வீட்டிற்குச் சென்றிருந்தேன். கையில் பணம் இருந்ததால் கலீல் ஜிப்ரானின் ‘மனலும் நுரையும்’ என்ற புத்தகத்தை வாங்கினேன். வீட்டில் கால் மேல் கால் போட்டு வாங்கிய சில புத்தகங்களில் தேதியையும் என் பெயரையும் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது தங்கையை சந்திக்க ஒரு சிறுமி வந்தாள். தங்கை அந்த சிறுமியை எனக்கு அறிமுகம் செய்தாள். தங்கையில் செயலில் காரணம் இருப்பதைப் புரிந்து அந்த பெண்ணுடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே கலீல் ஜிப்ரான் புத்தகத்தில் என் பெயரை எழுதிவிட்டு ஒவ்வொருப் பக்கமாகத் திருப்பிக்கொண்டிருந்தேன். சட்டென ஒரு பக்கத்தை திருப்பியது அந்த சிறுமியை நிமிர்ந்துப் பார்த்தேன். உரையாடல் தொடர்ந்தது;

“உண்மையா உங்களுக்கு வயது பத்தா..?”

“ம்”

“ஸ்கூலுக்கு போகலையா..?”

“ம்”

“ஏன்”

“அப்பாகிட்ட காசில்லை”

“அம்மா..?”

“அம்மா இல்லை. எங்கயோ போய்ட்டாங்க..”

“வீட்டில் மொத்தம் எத்தனை பேரு..?”

“நானும் ரெண்டு தங்கச்சியும் இருக்கோம்.”

“அப்பா என்ன வேலை செய்ராரு..?”

“தெரியலையே..”

அந்த சிறுமி வந்த வேலை முடிந்து கிளம்பினாள். தலையை குனிந்தேன் .பக்கத்தில் எழுதியிருந்தது. ‘நாம் வாழ்ந்தது வெறுமனே இல்லை. நமது எலும்புகளைக் கொண்டுதானே அவர்கள் கோபுரங்கள் கட்டினார்கள்’ கலீல் ஜிப்ராலின் இந்த வார்த்தை என்னை மீண்டும் அந்த சிறுமியை நினைக்க வைத்தது. இறந்து போனர்வகளில் உழைப்பே கட்டிடங்களாகவும் சுவர்களாகவும் கோபுரங்களாகவும் இருக்கின்றபோது... உயிரோடிருக்கும் என் உழைப்பு எங்கே உள்ளது என யோசிக்களானேன். அன்று முதல் கலீல் ஜிப்ரான் எழுதியவைகளைத் தேடிப்படிக்க ஆரம்பித்தேன். ஏதோ உள்ளுணர்வில் அவரின் ஒவ்வொரு வரிகளும் செல்வதாக உணர்கின்றேன். அவர் குறித்தும் அவரின் மொழிபெயர்ப்பு குறித்தும் சில நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த சமயம்தான் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளானேன்.

படித்தையும் பிடித்தவர்களையும் கொண்டாடுவது என்ன தவறா..? கடந்த மாதம் இணையத்தில் ‘ஆயிஷா’ என்ற குறுநாவலைப் படித்தேன். மனம் கணத்தது. உடனே சில பிரதி எழுத்து நண்பர்களுக்குக் கொடுத்தேன். நவீனுக்கு போன் செய்து அது குறித்துப் பேசி அந்த கதையை மின்னஞ்சலில் அனுப்பினேன். முகநூலிலும் அந்த கதையை பலர் கவனிக்கச் செய்தேன். படித்தவர்களும் தங்கள் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்கள். ஒரு படைப்பிற்கும் படைப்பாளிக்கும் நாம் கொடுக்கும் இந்த கொண்டாட்டத்தை விட வேற என்ன ஈடாகும். அதைத்தான் நான் செய்துக் கொண்டிருக்கின்றேன். புதியவர் வந்ததும் பழையவரை மறக்கவில்லை. ஒவ்வொரு படைப்பாளரையும் அவரின் படைப்பையும் அறியும் போது அடுத்தக்கட்டத்திற்கு நான் தயாராவதை வேறு எப்படி அறிய..?

குற்றச்சாட்டு 3

இதற்கு இப்போது பதில் வேண்டாம்.......

குற்றச்சாட்டு 4

டிரகுலா என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நாவலை (நூறாண்டு பழமையான புத்தகத்தின் மொழிபெயர்ப்பு) படித்து முடித்ததும் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ‘பெண் வாசனை’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கின்றேன். சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்களை எப்படி பாடுகின்றார்கள்; பார்க்கின்றார்கள், பெண்கள் எப்படி எதனைப் படைக்கின்றார்கள் என்பதை குறித்து எழுத பட்ட தொகுப்பு இந்த பெண் வாசனை. ஒரு பெண், என் கையில் இந்த புத்தகத்தை பார்த்ததும் நான் ஏதோ பலானக் கதைகள் படிப்பது போல பார்த்தப் பார்வை இன்னமும் என் நினைவில் இருக்கின்றது. இவர் பரவாயில்லை புத்தகத்தின் தலைப்பும் அதன் முகப்பும் வைத்து புத்தகத்தை கணித்திருந்தார். அடுத்து சிலரிடம் இதில் உள்ள கவிதைகள் குறித்து பேசினேன். எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“முத்தத்தில் துவங்கி
முத்தத்தில் முடியும்
தாம்பத்திய உறவு
எத்தனைப் பேருக்கு வாய்க்கிறது
யாரும் சொல்லாமலேயே
கற்றுக் கொள்கின்றார்கள்
அலுத்துத் தூங்குவதற்கான
உடற்பயிற்சியாய்........”

(வெண்ணிலா - நீரில்லையும் முகம்)

இந்த கவிதையினைப் படித்ததும்; சொல்லப்படும் கருத்து என்னை பாதித்தது. காதலும் காமமும் மாறுபடும் விதத்தை இதன் வழி என்னால் உணர முடிந்தது. இதை சில நண்பர்களுடன் பகிரும் போது உடனே முகம் சுழித்துவிட்டார்கள். ஏன் இது என்ன அவ்வளவு இழிவானக் கருத்தா..? இதற்கே இப்படியென்றால் ‘பெண் வாசனை’ உள்ள மற்றொரு கவிதையின் நிலையை நான் சொல்லவேண்டாம். இன்னொரு பெண்ணுடன் இல்லறம் செய்பவராக தன் உணர்வுகளை கவிதையாய் எழுதியிருந்தார் தோமியோ இசிதா ‘சிவப்பு நிறம்’ கலப்பு ஆசியக் கவிஞர்.

இந்த பெண் வாசனைக்கு பின் பெண்கள் மீதான மதிப்பும் அக்கரையும் அதிகரித்திருக்கின்றதே தவிர குறையவில்லை. ஆனாலும் என் மீது குற்றாச்சாட்டு . இந்த மாதிரி புத்தகங்கள் என் இலக்கியத்தை வளர்க்காதாம். இப்படி சொல்கின்றவர்கள். எதையெல்லாம் படிக்கின்றார்கள் என கேட்டால்; ஒரே பதில் “நீங்க பரவாயில்லை...நேரம் இருக்கு படிக்கறிங்க... எனக்கு அப்படியா...” உடனே “போதும் வாயை மூடுங்க” எனச் சொல்லத்தான் ஆசை என்ன செய்வது, வயது வித்தியாசப்படுகின்றதே... ஆனால் எல்லா நேரமும் வயது வித்தியாசப்படும் என நான் உறுதி கூற முடியாது.


நன்றி
இதழ் 29
மே 2011

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்