பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிப்ரவரி 18, 2014

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்: சிறுகதை விமர்சனம்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து மஹாத்மன் எழுதியிருக்கும் கட்டுரை)

பத்திரிகைகளில் இக்கதைக்கான விமர்சனங்களைப் பார்த்தேன்.மிகக் கடுமையான கண்டனத்திற்கும் உட்ச பட்ச தாக்குதலுக்கும் இழிவிற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகி இருந்தது. இதற்குப் பின்னால் பழிவாங்கும் நுண்ணிய அரசியல் இருந்தாலும் அதனை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து இக்கதைக்கான விமர்சனத்தை உண்மையான வார்த்தைகளோடு பதிவு செய்கிறேன்.
இதுவொரு மனப்பிறழ்வுக்கானவனின் கதை என்பதை ஒரு முறை வாசித்து முடியும் போது புரிந்துவிடக்கூடிய விஷயம். அடுத்து இதுவொரு பலான – ஆபாசம் நிறைந்த கதையோ என்ற எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க இயலாத ஒன்றுதான்.
 
என் 20-23 வயது வரை கிள்ளான் பட்டணத்தின் மத்தியில் குளிரூட்டி உணவகத்தில் வேலைசெய்யும்போது ‘கண்டதையும் படிக்க வேண்டும்’ என்று முற்பட்டதினால் எதிர்ப்புற பெட்டிக்கடையில் ‘மஞ்சள்’ புத்தகக் கதைகளை வாங்கிப் படித்தேன். ஆங்கிலம் கலந்த தமிழ் நடையோடு இருக்கும் இச்சிறுகதையானது ஏறக்குறைய அந்தப் புத்தகங்களின் சாயலைக் கொண்டிருக்கின்றது.
 
கவனிக்க: சாயல் மட்டும் தான்.
 
மிகவும் வெளிப்படையானத் தன்மை, மிகச் சாதாரணமான சொல்லாடல், உத்திகளுக்கும் வாக்கிய இறுக்கங்களுக்கும் மெனக்கெடல் இல்லாத கதையமைப்பு ஆகியவை இக்கதையானது ‘பண்பாட்டுச் சீரழிவு’ என்ற முத்திரையை பெற்றுவிட்டது.
 
சரி,போகட்டும்.
மனப்பிறழ்வு அல்லது மனநோய் என்பது பலவகையானது. நமது அன்றாட வாழ்க்கையில் லூசு என்று அரை லூசு என்றும் முழு லூசு என்றும் ஒரு நட்டு கழன்றுவிட்டது என்றும் ஒருவருக்கொருவர் சொல்வதைப் பார்க்கின்றோம். பில்லி சூனியம்,செய்வினை, ஏவுதல் என்பது மந்திர தந்திரங்களிலும் நடு ஜாம சுடுகாடு பூசையிலும் கல்லறைகளின் மீதும் மண்டையோடு-நரபலி –செத்த ஆவிகளோடு செய்யபடுவதின் மூலம் உண்டாகும் மனப்பிறழ்வு ஒரு வகை

*தஞ்சோங் ரம்புத்தான் மனநல காப்பகத்தில் இவ்வகையான மன நோயாளிகளே 1987 வரை அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வந்தனர். அதன் பிறகு மனநல பாதிப்பின் தடம் மாறியது. கணக்கு வழக்கில்லாமல் விகிதாச்சாரம் எகிறியது.
 
குடும்பத்தால் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுபோய் மனநல சிகிச்சைப் பெற்றுக்கொண்டவர்கள் வெகு சிலரே.பெரும்பான்மையோர் வீட்டில் உள்ளோரை ஏமாற்றி அல்லது ஒருவித நாடகமாடி வீட்டை விட்டு வெளியேறி வேறொரு மாநிலத்திற்கு மாற்றலாகி {குறிப்பாக தலைநகருக்கு}வந்து தங்களின் மனப்பாதிப்பினால் நிலையான ஒரு வேலையில் இருக்க முடியாமலும் கீழ்ப்படிந்திருக்க இயலாமையினாலும் வீடற்றவர்களாக நாதியற்றவர்களாக கடைவீதி ஐந்தடிகளிலும் ‘மேபெங்க்’ படிக்கட்டுகளிலும் டத்தாரன் மெர்டெக்கா சதுக்கத்திலும் இரவு நேரத்தை கழிக்கும் இவர்களில் சிலர் போதை வஸ்துகளுக்கு அடிமையாவதால் வாழ்வு சிதிலமடைந்திருக்கின்றது.
 
ஒரு காரியத்தை குறித்தும் தீவிரமாய் ஈடுப்படுகிறார்கள். இதனால் பல முக்கியக் காரியங்களை கவனிக்க முடிவதில்லை. ஈர்ப்பில் வந்த இலயிப்பும் திளைப்பும் அதிகமாகி மாற்றம் ஏற்படுகிறது. மனத்தடுமாற்றம் தீவிரமாகி ஒரு கட்டத்தில் மனப்பிறழ்வை உண்டாக்கி விடுகின்றது.
இந்த மனப்பிறழ்வை தாங்கிக்கொள்ள முடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றார்கள். சிலர் தாங்களாகவே வெளியேறுகிறார்கள். சிலர் தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார்கள். ஒரு லாபத்திற்காகவோ சுயநலத்திற்காகவோ அவமானத்திற்குள்ளாவோம் என்ற பயத்தினாலோ அடிஉதை கிடைக்க நேரிடும் என்பதாலோ மவுனிகளாகிவிடுவோரும் உண்டு.சொந்த வீட்டில் உள்ளோரே சமயத்தின் பேரில் ஒருவரை நிர்ப்பந்தித்து செய்யச் சொன்ன காரியங்கள் நிமித்தம் மனப்பிறழ்வுக்குள்ளான கதை எனக்குத் தெரியும்.அவர் ஒரு பெண்.
 
தயாஜியின் கதையில் வரும் கதாநாயகனின் மனப்பிறழ்வு யாரும் அறியாதது.இது ஒரு விதம்.இந்த விதம் இப்போதுள்ள காலக்கட்டத்தில் இனமத வேறுப்பாடின்றி எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது. பத்திரிகை செய்திகளே இதற்கு ஆதாரம்.ஆனால் நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். ‘என் வீட்டில் இப்படி கிடையாது’ என்று அடித்துப் பேசி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ‘உவே?’ என்று வாந்தியெடுத்த நபரின் வீட்டிலும் அவருக்குத் தெரியாமல் இது நடக்கலாம்.நாம் நமது பிள்ளைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க முடியுமா என்ன? மகாத்மா காந்தியே தன் பிள்ளை விஷயத்தில் இடறியிருக்க நாம் எம்மாத்திரம்?

எல்லா மத வேதங்களிலும் இந்த இடறல்கள் உண்டு .ஆழமான விவரிப்பு இல்லையெனும் ஒரு வரி அல்லது ஒரு வாக்கியம் போதுமே,யூகித்தறிய.
 
இணையத்தளம் வழி ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஆபாச அவலங்களுக்குள்ளாகி சிக்கி வெளிவரத் தெரியாமல் தடுமாறி தடம் மாறிபோய் தங்களத் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் வணங்கும் தெய்வம்/கடவுள் கூட காப்பாற்ற முடியாமல் போகிறது.

ஒரு வெளிப்படையான,அப்பட்டமான கதை இது என்ற போதிலும் கதாநாயகனின் மனப்பிறழ்வுக்கான முதன்மை காரணமாக பாலியல் சினிமா திகழ்கிறது.சிறுவயது முதலே இதிலேயே நாட்டம் கொண்டி இலயித்து திளைக்கிறான்.அடிக்கடி கழிவறைக்குப் போகிறான். கழிவறையே கதியென ஆகிறான். மனதளவில் கழிவறை இவனை சிறைப்படுத்தி விடுகிறது. இதிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.கழிவறையின் அசுத்தங்கள், துர்நாற்றம் இவன் மனதிற்குள் புகுந்து மனப்பிரம்மையின் முரண்பட்ட வெளிப்பாடுகளை இவனுக்கு காட்டுகின்றன. விடுபட முடியாத கருந்துளை இருளுக்குள் அகப்பட்டவனின் இயலாமை அடையாளமாக தன்னை மீறி சிறுநீர் கழித்து நொந்துக்கொள்கிறான். மனநோயாளிகள் இடம் பொருள் ஏவல் என்று எதனையும் பார்க்கமால் நடந்துக்கொண்டிருக்கும் போதே சிறுநீரை கழித்துவிடுவார்கள்.
 
தன்னை விடுவிப்பதற்கு எட்டுபேரை அடையாளங்கண்டு அழைக்கின்றான். கதை முழுக்க தனக்குத் தானே பேசிக்கொள்ளும் ஒரு மனநோயாளியின் வாக்குமூலங்கள் ஆகும். முதலில் அழைத்த நபர் அம்மா. அம்மாவிடம் தனது தப்பிதங்களுக்காக மனதார மன்னிப்பு கேட்கிறான்.பிறகு வரிசையாய் நண்பர்கள், ஆசிரியர், நண்பனின் தங்கை, நண்பனின் காதலி என்று போய் காளியிடம் வந்து நிற்கிறது.
நான் எதிர்ப்பார்க்காதது. மனம் திக்கென்றது.
 
தமிழ் சினிமாவையும் மலேசிய சிறுகதையும் உள்வாங்கிய மனம் இப்போதெல்லாம் கதையோட்டத்தையும் முடிவையும் சுலபமாக யூகிக்க முடிந்ததினால் காளி வந்தவுடன் திக்பிரமை உண்டானது.வேறு தெய்வங்கள் என்றால் பரவாயில்லை. ஏன் காளி? யோசித்தது மனம். எல்லா தெய்வங்களும் கைவிட்ட பிறகு இறுதியாய் போய் நிற்பது காளியிடம். காளிக்கு ‘மாயா’ என்றொரு பெயரும் உண்டு. எல்லா மாய கிரியைகளையும் நிர்மூலமாக்கும் வல்லமை படைத்தவள். மனப்பிறழ்வு என்பது ஒரு மாயை உலகம்.
 
வீட்டிற்கு அருகில் இருந்த ஒரே கோயில் காளி கோயில். விபரம் தெரிந்த நாற்முதற்கொண்டு அத்தெய்வத்தை வணங்கிய பக்தன். வளர்ந்து மீசை முளைத்த காலத்தில் காளியை காதலியாக பார்த்தவன். பக்தி கசிந்துருகி காதலாகியிருக்கிறது. எல்லாம் சரிதான். இடையில் வந்த பாலியல் சினிமா பழக்கம் பக்தனுக்கு காமக்கண்களைக் கொடுத்துவிட்டதால் காமவிகாரமாகிவிட்டது. காளி கொல்லுவாள் என்ற பய உணர்ச்சியே இல்லாத பக்தன். அல்லது, பாலியல் சினிமாவில் தீவிரமாய் இருக்கும் போது குற்றவுணர்ச்சியின் கரணமாக கோயிலுக்குச் செல்லுவதை நிறுத்திவிட்டிருக்கிறான். மனப்பிறழ்விலிருந்து காப்பாற்றப்பட தன்னுடைய தெய்வமான காளியை நினைந்து வேண்டும்போது காளியை மயான சூலியாகப் பார்க்காமல் தனக்கே முழு உரிமையும் உண்டென்ற உறுதிமனப்பான்மையில் “காளி !என் காதலி!…இங்கே வாடி” என்கின்ற அழைப்பு எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. பெண் பக்தைகளான ஆண்டாளுக்கும் ராதைக்கும் ஓர் ஆண் தெய்வம் காதலனாக எப்படி அமைந்ததோ அப்படியே இவனுக்கும் பெண் தெய்வமான காளி காதலியாகிறாள்.
“உன்னை நான் உனக்கே வேறுமாதிரி காட்டுகிறேன்” என்ற இவனின் துடிப்பு எனக்கு பிரமிப்பை கொடுத்தது. ஆங்காரி,பயங்கரப் பார்வை ,நாக்கை வெளியே நீட்டி சூலத்தை ஆத்திரத்தோடு ஏந்தியிருப்பவள், மண்டையோடுகளை கழுத்தில் அணிந்திருப்பவள் காளி என்ற உருவகத்தை மாற்றி அன்பே வடிவமாய் அன்பைப் பொழியும் காதலியாய் மாற்றும் முயற்சியில் மனம் ஏங்கித் தவிக்கிறது. இவன் தன்னுடைய பலவீனங்களை, மனத்தடுமாற்றத்தை, மனப்பிறழ்வை ஏந்திக்கொண்டு காளியிடம் சரண் அடைகிறான். என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. மனம் நடுங்குகிறது. அதன் விளைவாக சிறுநீர் வெளியேறுகிறது.
 
பிரமாதம்!!
 
இறுதியில் யார் யாரை பழிவாங்கியது என்ற கேள்வி தனியாய் கேட்டு நிற்கிறது. காளி அருகில் வருகிறாள் என்றதோடு கதை முடிகிறது. காளி பழிவாங்குவதற்கு வருகிறாளா அல்லது காதலியாக வருகிறாளா என்பது தெரியாமல் போகிறது. சிறுகதை இலக்கணத்திற்கேற்ப முடிக்கப்படுகிறது கதை.
இறுதியாக, இப்படி அப்பட்டமான – வெளிப்படையான – எதிர்மறையான – முகஞ்சுளிக்க வைக்கும் சிறுகதை நமக்குத் தேவைதானா என்பது தான்.சமூகத்தில் இப்போதுள்ள காலக்கட்டத்தில் இதைவிட மிக மிக மோசமான சம்பவங்கள் நம் கண் முன்னே கொட்டிக்கிடக்கின்றன. பாலியல் ரீதியான வக்கிரம் ,வன்கொடுமைகள் நம் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் நடக்கின்றன. பத்திரிகை செய்திகளோடு நாம் நம்மை கோடு தாண்டாதவர்களாக தமிழ் இலக்கியத்தில் இருத்திக் கொள்ளப் போகிறோமா என்ற கேள்வியை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.
 
தயாஜி செய்த மூன்று தவறுகள்:
 
1} புத்தக உரிமத்திற்காக எழுத்தாளர் சங்கத்தை எதிர்த்து கலகக் குரல் எழுப்பியது.

2}ஆர்.டி.எம்- யில் இருந்து கொண்டு இப்படிப்பட்டக் கதையை எழுதியது

3}மலேசியா நாட்டில் இக்கதையை வெளியிட்டது.
 
 
- மஹாத்மன்
 
நன்றி வல்லினம்

எளிய கேள்விகளும் எளிய பதில்களும்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து கே.பாலமுருகன்)
 
 
புனைவுகள் குறித்த அபத்தமான கருத்துகள் பல்வேறு தரப்பிடம் இருந்து வருகின்ற சூழலில் வல்லினத்தின் சிறுகதை பொறுப்பாசிரியர் கே.பாலமுருகன் பொதுவாக எழும் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார்.
 
ஒரு இலக்கிய படைப்பில் கூறப்படும் கருத்தை ஒட்டியே அதை படைத்த படைப்பாளின் குணமும் இருக்கும் என்று கூறப்படுகிறதே, இது சரியா? உதாரணமாக போதை பழக்கத்துக்கு அடிமையானவனின் வாழ்க்கையை கூற முனையும் படைப்பாளியும் ஒரு போதைபித்தனாக இருப்பான் என்று கூற முடியுமா?
 
எப்பொழுதுமே கலை மீதான ஆதிக்கம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருந்து வந்துள்ளன. மேட்டுகுடி மக்கள் இதுதான் கலை என பொதுப்பரப்பில் அளவீடு செய்வதும் அதை விளிம்புநிலை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டும் என்பதற்கான கலை என்பது உயரிய விசயங்களை மட்டும் பேசுவது எனத் தீர்மானிக்கிறார்கள். ஆகவே அதனை எதிர்த்து எழுதத் துவங்கும் படைப்பாளி அதுவரை இலக்கியம் கண்டிராத நிலப்பரப்பிற்குள் நுழைகிறான். சமூகம் கண்டுக்கொள்ளாமல் விட்ட மனிதர்களை அதாவது சொல்லப்படாத மனிதர்களை நோக்கி தன் படைப்புகளைக் கவனப்படுத்துகிறான். இதுவரை சென்றிறாத இடத்தைத் தேடிச்செல்லும் பயணியைப் போலத்தான் இலக்கியவாதியும். மேடையில் இராவணன் வேடத்தை அணிந்து நடிக்கும் நடிகரின் தீவிரமான கலை ஈடுபாடு இறுதியில் அவனுக்கு எதைக் கொடுக்கின்றது? பார்வையாளர்கள் அவனுடைய இராவணன் வேடத்தின் மீது அதிக வெறுப்பும் கோபமும் கொண்டு அவனை நோக்கி சப்பாத்துகளை எறிகிறார்கள். அவன் உண்மையில் இராவணன் கிடையாது, ஆனால் அவனுடைய ஈடுபாடான நடிப்பு மக்களை நம்ப வைக்கின்றது. அது மேடை என்பதன் இடைவேளியைத் தகர்க்கின்றது. ஆகவே, போதைப்பித்தர்கள் பற்றி எழுதும் ஒரு படைப்பாளியின் கூர்மையான எழுத்து அவனும் அப்படிப்பட்டவன்தான் என வாசகனை நம்ப வைத்து அவன் மீது கோபம் வர வைப்பது என்பது வெற்றியே. எம்.ஏ இளஞ்செல்வனின் கதைகளைப் படித்துவிட்டு அவரை அடிப்பதற்காக வீடுவரை சென்றவர்களும் இருக்கிறார்கள். இது வாசகனின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. எது போலி எது உண்மை என கலையில் பிரித்தறிய முடியாமல் போகிறது? இதுதான் இலக்கியம் எனத் தீர்மானிக்க முயலும் அனைவருமே கலையின் முதலாளிகளாகத் தங்களை நிறுவிக்கொள்ளவே நினைக்கிறார்கள்.
 
மேலும் போதைப்பித்தன் மெனக்கெட்டு தன் வாழ்வை இலக்கியமாகப் படைப்பான் என்றெல்லாம் எதிர்ப்பார்ப்பது வேடிக்கையானது. அதையும் தாண்டி ஒரு காலக்கட்டத்தில் அவன் தன் வாழ்வை எழுதினாலும் அது கண்டனத்திற்குரியதோ அல்லது தீண்டத்தகாத இலக்கியமும் அல்ல.
ஓர் இலக்கிய படைப்பு எளிய வாசகர்களாலும் புரிந்து கொள்ளப்படவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும் அப்படி அமைந்தாலே அது நல்ல இலக்கியம் என்று கூறுவதும் சரியா?
 
யார் அந்த எளிய வாசகர்கள் எனக் கூற முடியுமா? எந்தவகையில் அவர்கள் எளிய வாசகர்கள் என அடையாளப்படுத்தப்படுகிறார்கள்? எளிமை என்பதற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. இப்படி எடுத்துக்கொள்ளலாம், வாசிப்பை விரிவுப்படுத்தாமல் ஒரே இடத்திலேயே தேங்கிவிட்டவர்களை எளிய வாசகர்கள் எனச் சொல்லலாமா? அல்லது அம்புலிமாமா, பீர்பால் கதைகள் எனச் சிறுவர்களுக்கான எளிய கதைகளை மட்டுமே வாசித்து அங்கேயே தங்கிவிடும் பெரியவர்களா? இரண்டு தரப்பினரும் சமூகத்தில் ஆரோக்கியமானவர்களா? வாசிப்பு என்பது அடுத்தக்கட்ட தேடல்களை நோக்கி வளர வேண்டும் என்பதே ஆரோக்கியம். புதுமைப்பித்தனை நான் படிக்க மாட்டேன் காரணம் என்னால் நா.பார்த்தசாரதியை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என ஒரு வாசகன் தன்னைப் பூட்டிக்கொள்வது நியாயமானதா? இல்லையென்றால் அதுபோன்ற எளிய வாசகர்கள் பற்றி ஒரு படைப்பாளனும் சரி இலக்கியமும் சரி அக்கறைக்கொள்வதில்லை.
 
இன்னொன்று முக்கியமான விசயம், எல்லாம் மனிதர்களின் அறிவுநிலையும், புரிதலும், ஆர்வமும், கல்வியறிவும், ஈடுபாடும் மொழியறிவும் ஒரே மாதிரி இருக்கின்றனவா? அப்படி இல்லாதபோது எப்படி அவர்களை எல்லோரையும் ‘எளிய வாசகர்கள்’ எனும் ஒரே அடையாளத்திற்குள் வைத்துத் திணிக்க முடியும். அம்புலிமாமாவைத் தாண்டாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு அம்புலிமாமா இரகத்திலான இலக்கியத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் ஏதும் உண்டா? அவர்களை வளரவிடுவதில் யாருக்கு என்ன பிரச்சனை? அவர்களுக்காகக் கவலைப்படுகிறோம் என்கிற பெயரில் அவர்களைத் தத்துக்குட்டியாக்கி வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. நாம் இன்னும் பகுத்தறிவை இழந்துவிடவில்லை. அல்லது ஒரு பக்க மூளையோடு பிறப்பதில்லை.
 
இன்னும் எளிமையாகச் சொல்வதானால், ஒரு தீவிர வாசகனுக்கு பல்கலைக்கழகத்தில் மட்டுமே இலக்கியம் படித்தவன் எளிய வாசகன்தான். பல்கலைக்கழகத்தில் படித்தவனுக்கு படிவம் ஐந்தில் தமிழ் இலக்கியம் படிப்பவன் எளிய வாசகன், படிவம் ஐந்தில் தமிழ் இலக்கியம் படித்தவனுக்கு நாளிதழில் மட்டுமே சிறுகதைகளையும் கவிதைகளையும் வாசிப்பவன் எளிய வாசகனாகத்தான் இருப்பான். இதில் எந்த நிலை எளிய வாசகர்களுக்கு ஓர் எழுத்தாளன் இயங்க வேண்டும். யாரை மனதில் கொண்டு எழுத வேண்டும். அப்படி ஒருவன் இந்த ரக மக்களுக்கு எழுதுகிறேன் என புனைவு செய்தால், அவன் நல்ல ஆசிரியராக இருக்கலாம்; எழுத்தாளனாக முடியாது.
 
ஓர் இலக்கிய படைப்பு குடும்பத்தில் அனைவராலும் ஒன்றாக வாசித்து மகிழத்தக்கதாக அமைவது அவசியம் என்றும் அதுவே தமிழ் இலக்கிய கோட்பாடு என்றும் கூறுவது சரியா?
 
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சினிமாவில் குழந்தைகள் சினிமா, ஆய்வு சினிமா, சிறுவர் சினிமா, அரசியல் சினிமா, கலை சினிமா, பிராந்திய சினிமா என இன்னும் பல வகைகள் இருப்பதைப் போல இலக்கியத்திலும் பலவகைகள் உள்ளன. சிறுவர் சிறுகதைகளைப் பெரியவர்கள் விரும்பி வாசிக்க இயலாது. அவர்களால் அதிக ஈடுபாட்டுடன் அதில் இலயிக்க முடியாது. அவர்களின் வயதிற்கும் அனுபவத்திற்குமேற்ற பெரியோர் கதைகளையே அவர்களால் மகிழ்ச்சியுடன் வாசிக்க முடியும். அதே போல ஒரு வண்ணதாசனின் சிறுகதையையோ அல்லது ஜெயகாந்தனின் நாவலையோ ஒரு 12 வயது சிறுவன் வாசித்தால் அவனால் அதற்குள் நுழையவே முடியாது. இந்த வேறுபாடுகூட தெரியாவிட்டால் என்ன தலைமைத்துவப்பண்பு நம்மிடம் இருக்கிறதாக நாம் நம்புகின்றோம்? இன்றைய நிலையில் ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்ட தமிழ்ச்சினிமாவை முதலில் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடிகிறதா? அதிலுள்ள இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் ஆபத்தானது இல்லை என்று யார் முடிவு செய்கிறார்கள்? அடுத்ததாக நடிகைகளின் தொப்புளையும் தொடையையும் காட்டும் ஞாயிறு தமிழ்ப்பத்திரிகைகள் இன்று பள்ளிகளில்கூட வாசிக்க வைக்கிறார்கள். இதை அவர்கள் பார்த்துப் பாதிப்படைய மாட்டார்கள் என எந்த மனநல மருத்துவர் உத்தரவு அளித்துள்ளார்? குடும்பத்துடன் அமர்ந்து செய்யக்கூடிய வேலையையும் இலக்கியத்தையும் ஒன்றாக்கி பார்க்க முனைவதே என்னைப் பொறுத்தவரையில் தவறுத்தான்.
 
ஒரு இலக்கிய விமர்சனம் எப்படி இருக்கவேண்டும் அல்லது இலக்கிய விமர்சனத்தின் நோக்கம் என்ன?
 
எந்தவொரு கலை விமர்சனமும் படைத்தவனின் சொந்த வாழ்வைப் புண்படுத்தாத வகையிலே அமைந்திருக்க வேண்டும். அவனுடைய வாழ்வாதாரத்தைப் பறிக்கும் அளவிற்கு அவன் ஆபத்தானவன் அல்ல. தன் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவன். அவனுடைய தர்க்கத்தில் குழப்பங்கள் இருப்பின் அதனை விவாதத்தின் மூலம் முன்வைப்பதே ஆரோக்கியமான விமர்சனம், அவனைத் தண்டித்து அவமானப்படுத்தி குற்றவாளியாகக் காட்ட வேண்டும் எனும் வகையில் முயன்றால் அது விமர்சனமல்ல, பழிவாங்கல் ஆகும்.
 
 தமிழ் இலக்கியத்திற்கு என்று எல்லைகளை வகுத்துக் கொண்டு எழுத முடியுமா?
 
அப்படி இதற்கு முன் நினைத்திருந்தால் தமிழ் இலக்கியம் இத்தனை தூரம் உலகம் கவனிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்காது. தமிழில் இத்தனை நாவல்கள் படைப்புகள் தோன்றியிருக்காது. கலைக்கு ஏது வரையறை, அளவீடு, கணம், நீளம், பரப்பளவு? அது என்ன திடப்பொருளா?
 
சமுதாய / பண்பாட்டு விழுமியங்களை தன் எழுத்தில் ஒரு படைப்பாளி விமர்சிக்கவோ மாற்று கருத்தை முன்வைக்கவோ கூடாதா?
 
அதை விழுமியங்கள் என யார் தீர்மானித்தது? பரதம் உயர்ந்த கலை என்றால் நரிகுறவர்களின் தெருக்கூத்து தாழ்ந்த கலையா? ஏன் மேட்டுகுடி மக்கள் ஆர்வம் கொண்டு ஈடுபடும் கலைகளை பண்பாட்டு நிறுவனங்கள் வளர்த்தெடுத்து அதனைக் கொண்டாடுவதற்கு முனைகிறப்போது, தெருக்கூத்தும், பாவைக்கூத்தும் அழிந்து வருகின்றன? அப்படியென்றால் ஒரு சமூகத்தில் எது விழுமியங்களாக இதற்கு முன் தீர்மானிக்கப்பட்டுள்ளது? அதனை மறுபரீசீலனை செய்வதும் அதனை மீள்மதிப்பீடு செய்வதும் எப்படிக் குற்றமாகும்?
 
-கே.பாலமுருகன்
 
நன்றி வல்லினம்

கண்றாவிகளைச் சுமக்கும் கலாச்சாரம்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை ஒட்டி , எழுதிய கட்டுரை )

நேற்று முன்தினம் முக நூலில் என் அன்புக்கினிய தோழி மாலா ஒரு கேள்வியை முன்வைத்தாள்.
” மலேசிய நாட்டில் இதுபோன்ற கலாச்சாரங்களை வரவேற்கலாமா?” என்பது அக்கேள்வியின் சாரமாக இருந்தது. தாயாஜியின் சிறுகதையே இவரின் கேள்விக்குப் பின்னணியாக இருந்தது.
 
இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதற்குப் பதிலாக அவளிடம் நான் கேள்வியை எழுப்பினேன்.
“மலேசியா நாட்டில் ஏய்ட்ஸ் நோய் இல்லையா? விபச்சார விடுதிகள் இல்லையா?”
 
கலாச்சாரம் கட்டிக் காக்கும் மலேசியா என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கலாம். உளவியல் அடிப்படையில் பல மன சிக்கல்கள் நம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தாய்மைக்கு மதிப்பளிக்கும் சமுதாயமாக நாம் இருகின்றோம் என்றால் ஏன் கண் முன் தெரியும் விபச்சார விடுதிகளுக்கு எதிராக கோஷம் போடுவதில்லை.
 
தாய்மை உன்னதமானது என்று போற்றுகிறோம். ஆனால் சிசு கொலையைப் புரிவதும் தாய்மைதானே? லெஸ்பியன் எனும் பெண்களோடு பெண்கள் உறவு, ஹோமோ எனும் ஆண்களோடு ஆண்கள் உறவு, குறைந்த வயது கொண்டவர்களோடு உறவு, மிருகங்களோடு உறவு என்று கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் மலேசியாவில் இது போன்ற உறவுகள் நடந்துள்ளது என்பதை நாம் அறிந்திருக்கவில்லையா என்ன?
 
சமீபத்தில் தகப்பனும் மகளும் காதலன் காதலியாக இருந்தார்கள் என்ற செய்தி நாளேடுகளில் பிரசுரமானதைக் கலாச்சார சிதைவு என்று ஏன் அதனைக் கட்டிக் காப்பவர்கள் கூச்சலிடவில்லை. இது போன்ற செய்திகளை பிரசுரம் செய்யாதீர்கள். இது நமது கலாசாரத்துக்கு எதிரானது என்று ஏன் நல்லவர்கள் பத்திரிகைகளுக்கு எதிராக அறிக்கை விடவில்லை.
 
நடந்த சம்பவத்தைப் பதிவாக்குவது நாளேட்டின் கடமை. சமூகச் சிக்கல்களில் உழன்று தவிக்கும் உள்ளங்களின் அலைக்கழிப்பை பொதுவுக்கு கொண்டுவருவது எழுத்தாளனின் கடமை. அதனை வாசித்து விமர்சனங்களை முன் வைப்பது வாசகனின் கடமை.
 
கடவுள் முதன் முதலில் ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்பதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் அறிவு, அடுத்தடுத்து மனிதனின் இனப்பெருக்கம் அவர்களுக்குள்ளேயே நடந்த உறவில் பெருகியது என்பதை சொல்லப்போவோமானால் நம்மை மனநோயாளி என்றும், கலாச்சாரத்தை சிதைக்க வந்தவன் என்றும் பெயர் சூட்டிவிடுவார்கள் “நல்லவர்கள்”
 
மகளைக் கெடுக்கும் தந்தை, தாயை கொலை செய்யும் மகன்,மாணவனை வல்லுறவுக்கு ஈடுபடுத்திய ஆசிரியை, பேத்தியை வாய்வழி உறவுக்கு ஈடுபடுத்திய தாத்தா என்றெல்லாம் பல சம்பவங்களை நாளிதழில் படித்துப் பழகிப் போன நமக்கு, தாய் குளிக்கும் போது எட்டிப்பார்த்த மனசிக்கல் கொண்ட மகன் என்று புனைவு மொழியில் ஒரு சம்பவம் அச்சில் ஏற்றிவிடும்போது மனம் ஏற்றுக் கொள்ளாமல் வாந்தி எடுக்கிறது. நாம் வாந்தி எடுப்பதால் அந்தச் சம்பவம் அசிங்கமான கற்பனை என்றும் ஒதுக்கிவிடவும் முடியாது. இதை மனச் சிக்கலின் ஒரு கூறாகவும், பாதிக்கப்பட்டவனை ஒரு நோயாளியாகவும் நாம் கவனிக்கவேண்டியது அவசியம்.
 
கோலாலம்பூரிலிருந்து வந்த ஒரு சிநேகிதி என்னிடம் ஒரு சம்பவத்தைச் சொன்னாள். அதாவது உடன் பிறந்த அண்ணனும், தங்கையும் திருமணம் செய்து கணவன், மனைவியாக வாழ்கிறார்கள் என்று. இந்த கதையைக் கேட்டதும் எனக்கு வாந்தி வருவதுபோல்தான் இருந்தது. ஆனால் இந்தச் சம்பவம் உண்மையாக இந்த மலேசிய மண்ணில் நடந்துள்ளதே! எப்படி?
 
சிறுவயதில் அவர்கள் அனுபவித்த, பார்த்த சில நேரடிச் சம்பவங்கள் அவர்களின் பழக்கத்துக்கு வந்து பிறகு அதுவே அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் திருமணம் செய்யும் கட்டாயத்துக்கு வந்துவிட்டது என்று அந்த சிநேகிதி என்னிடம் சொன்னாள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து பிள்ளையையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள. இரவு நேரத்தில் முகத்தைப் பார்க்கக் கூடாது என்பதால் விளக்குகளை அனைத்துவிட்டுத்தான் கூடுவார்களாம். இதனை அந்தப் பெண்ணே என் சிநேகிதியிடம் கூறியுள்ளதாக எனக்கு கூறப்பட்டது.
 
அவர்கள் யார் என்று அவர்களைத் தேடுவதைவிட இதுபோன்ற பல மன சிக்கல்கள் நமது சமூகத்தில் உள்ளன என்பதை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். கலாச்சாரம் என்று பேசி நடப்பதை ஒதுக்கி வைப்பதற்கு முன், ஆதிகால மனிதனாக இருந்தவனுக்குக் காட்டுமிராண்டித்தனம் உடலில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் நடக்கமுடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத, வரம்புக்கு மீறிய பல சம்பவங்கள் உலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். சமயம் மனிதனை தெய்வமாக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், சில சமயங்களில் சமய வாதிகளும் காவிகளை காமத்துக்கு காவு கொடுத்திருப்பதையும் நாம் படித்திருக்கிறோம், காணொளியிலும் கண் வலிக்கப் பார்த்திருக்கிறோம். ஆலய கர்ப்பக் கிரகத்தில் உடலுறவு, எத்தனயோ “ஆனந்த” சாமியார்களின் உல்லாச நேரங்கள் ஒளிப்பதிவு, என்று பல “கச முசா” செய்திகளை நாம் கசக்கி கசக்கி படிக்கவில்லையா?
 
அன்று பார்த்த நிர்வாணப் படங்கள், கேட்ட நிர்வாணக் கதைகள், யாவற்றையும் மனதில் ஒளித்துவைத்துக் கொண்டு மணி அடிப்பதில் தப்பு கிடையாது. ஆனால் மணி அடிப்பவர்கள் தங்களை புனிதமாக நினைத்துக் கொண்டு அவர்கள் செய்ததை பிறர் செய்யும் போது உடனே உத்தம நீதிமன்றத்தில் ஆயுட்கால நீதிபதியாக அமர்ந்து கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதைத்தான் பொறுக்கமுடியவில்லை.
 
மனதாலே ஒரு பெண்ணை தவறாக நினைத்தாலே அவன் மனதால் விபச்சாரம் செய்கிறான் என்று ஏசுநாதர் கூறி இருக்கிறாராம். இதன் அடிப்படையில் “நீங்கள் அத்தனைப் பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது என்னையும் சேர்த்து.
 
 
-இரா.சரவணதீர்த்தா
 
நன்றி வல்லினம்

படைப்பாளி தண்டிக்கப்படலாகாது


(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து ஸ்ரீவிஜயா எழுதியிருக்கும் கட்டுரை)


கடந்த சில வாரங்களாக, தமிழ் பத்திரிகைகளை அலங்கரித்த வல்லினத்தின் சிறுகதை ஒன்றின் கண்டன எழுத்துகளை அனைவரும் அறிந்ததுதான். கதையில் என்ன உள்ளது என்கிற விலாவரியான விளக்கங்களையெல்லாம் பலர் சொல்லியாகிவிட்டது. புதிதாக விமர்சனம் என்கிற பெயரில் அதை மீண்டும் நான் கிழித்துத்தொங்கப் போடுவதால் சீர்கெட்ட சமூதாயம் திருந்தி நல்லவர்களாக மாறிவிடப்போவதில்லை.
 
ஒரு சிந்தனை எழுத்து வடிவம் பெறுகிறபோது அது வாசிப்போரை கலவரமடையச்செய்யும் என்பதனைப் பல பிரபல எழுத்தாளர்கள் சொல்லியிருந்ததை வாசித்துள்ளேன். இருப்பினும், அதை இன்று உணர்கிறேன்.
 
பாதிப்புகள் வரும் என்பதால் பாதித்த விஷயத்தைத் தொட்டு ஒரு படைப்பாளி எழுதக்கூடாதா என்ன? உண்மையைச் சொல்வதில்தான் ஓர் படைப்பு வெற்றியடைய முடியும். உண்மைக்கு அரிதாரம் பூசி நாசுக்காகச் சொல்லாமல் அதை அப்படியே சொல்லிச்சென்றவிதம் பலரை பதற்றங்கொள்ளவைத்துள்ளது. சமூதாயத்தில் நடக்காத அவலமா இது? எங்கோ ஒரு மூளையில் எவனோ ஒருவன் செய்தான் என்பதனை இனி யாரும் இதுபோல் செய்துவிடக்கூடாது என்கிற சிந்தனையில் எழுதப்படுகிற பாடம்தான் இலக்கியப்பணி. இன்னமும் ஒழுக்கச்சீல பாடம் நடத்துவதற்கு இலக்கியத்துறை ஒன்றும் பாலர் பாடசலையல்ல. அந்த நோக்கோடு நாம் இந்தச் சிறுகதையை நோக்கியிருந்தோமென்றால் இவ்வளவு பதட்டநிலை வந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த எழுத்துப்பாணி தமிழ்நாட்டு பிரபல எழுத்தாளர்களின் பாணி. அந்த பாணியை இலக்கியத்தில் குறைந்த ஞானமுள்ள ஓர் இளைஞன் கையாள்கிறபோது இதுபோன்ற இக்கட்டான சூழல் வருவது சகஜமே. வாசகர்களை விடுங்கள். பத்திரிகை ஆசிரியர்கள் என்கிற முறையில் பரந்த வாசிப்பு அனுபவம் இருக்கின்ற பட்சத்தில், இதுபோன்ற படைப்புகள் உலக அளவில் ஆங்கிலம் தமிழ் மலாய் என பல மொழிகளில் அதிக அளவில் வந்துள்ளதை உணராமல், உலகத்தில் யாருமே இப்படிச்சொல்லவில்லை என்கிற ரீதியில் தனிநபர் தாக்குதல் நடத்துவது சரியா? இந்தச் சமூதாயத்தின் பார்வை எந்த அளவிற்கு கேவலமாக உள்ளது பார்த்தீர்களா?
 
நான் எழுதினேன். எனது சிந்தனை சரியில்லை. எனக்கு எழுதுவதற்கு தடை என்று எதாவதொரு சட்டதிட்டங்களைக் கொண்டுவாருங்களேன். அதை விடுத்து வேலை இடத்தில் வேட்டு வைக்கப்பட்டு, அதையும் கருத்தில் கொண்டு ஒரு நிறுவனம் அவனின் வேலையைப் பறிக்கின்ற பணியை செம்மையாகச் செய்துள்ளார்களே… ஓர் இலக்கியப் படைப்பை இலக்கியப்படைப்பாகவே விமர்சித்து கருத்து மோதல்களைச் செய்வதைவிடுத்து, அதை எழுதியவருக்கு வேலை போகின்ற அளவிற்கா செயல்படுவது!
 
ஓர் இலக்கியப் படைப்பாகப்பட்டது களிமண் போன்றது. எழுதுகிறவர் என்ன சொல்லி எந்த சிந்தனையில் எழுதினாலும் வாசகன் என்பவன் அதை நல்ல நோக்கோடு நல்ல சிந்தனையோடு வாசித்துப் பழகவேண்டும். சிலவேளைகளில் படைப்பில் சொல்லப்பட்ட விஷயம் நம் வாழ்வோடு எப்படி பின்னிப்பிணைந்துள்ளது என்று வாசகனாகப்பட்டவன் யோசிக்கவேண்டும். சினிமா பார்க்கின்றோம், நல்லதை ஏற்போம் கெட்டதை விட்டுவிடுவோம் என்கிற ரீதியில்தானே திரையறங்குகளிலோ அல்லது தொலைக்காட்சியின் முன்னிலையிலோ அமர்கிறோம். குலுக்கல் நடனமோ அல்லது முதலிரவு காட்சிகள் வருகின்றபோது கண்களையா மூடிக்கொள்கிறோம்! சரி சினிமாவை விடுங்கள், பத்திரிகைகளில் வரும் அந்தரங்கம் என்கிற கேள்விபதில் அங்கத்தில் (எல்லா பத்திரிகைகளிலும் பெரும்பாலும் இந்த அங்கம் இருக்கும்) சில கேள்விகளை சென்சார் செய்கிறேன் என்று சொல்லிய பின்பும் வரும் சில கிளுகிளுப்பு விஷயங்கள், அப்போது மட்டும் எழுத்துகளையும் கருத்துகளையும் மனோத்தத்துவ ரீதியில் நோக்கவேண்டும் என்று வாசனுக்கு அறிவிப்பு செய்கின்ற பத்திரிகை ஆசிரியர்கள் தனி ஒரு எழுத்தாளரின் படைப்புகளை மட்டும் ஏன் இவ்வளவு கொடூரமாக ஆட்களைத் திரட்டி விமர்சித்து கொண்டிருக்கிறது என்கிற வினாவிற்குத்தான் பதில் இல்லை.
நல்ல விஷயங்கள் எவ்வளவோ எழுதியுள்ளோம். ஒருவர் வாசித்திருக்கமாட்டார். விமர்சனம் என்று வரும்போது, வருகிறவர்கள் போகிறவருகிறவர்கள், அறவே இலக்கிய வாசிப்பில் பரிச்சயம் இல்லாதவர்கள் கூட கருத்து சொல்கிறேன் பேர்வழி என புழுதிவாரிக்கொண்டிருப்பது இந்த சமூதாயத்தின் சாபக்கேடு.
 
`நீ எத்தனை முறை நல்ல எழுத்துகளை நல்லமுறையில் வாசித்து விமர்சித்துள்ளாய்? இப்போது மட்டும் மோசமான எழுத்து என்று உன் கருத்தைக் கூறவந்துவிட்டாய்? என்று பத்திரிகை ஆசிரியர்களே அந்த கடிதத்தின் கீழ் சூடுகொடுப்பதைப்போல் ஓரிருவரிகள் எழுதி, கருத்து எழுதியவரை கேள்விகேட்டால்தான், அறவே இலக்கிய வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் கருத்துச்சொல்ல வந்துள்ளேன், என்று இலக்கிய வட்டத்திற்குள் மூக்கை நுழைக்க முன்வரமாட்டார்கள். எல்லோரும் இஷடம்போல் கருத்து கூறுவதால்தான் நமது சமூகத்தில் நல்ல படைப்புகள் இன்னமும் வரவில்லை. இனியும் வராது. தி.ஜா எழுதிய `அம்மா வந்தாள்’ என்கிற நாவலை வாசித்தவர்கள், தாய்மை களங்கப்படுத்தப்பட்டது என்கிற வெட்டி வியாக்கியானமெல்லாம் செய்துகொண்டிருக்கமாட்டார்கள்.
எழுத்தாளன் மனப்பிறழ்வு நிலையில் படைப்புகளைக் கொடுப்பான். வாசகன் தான் சீர்தூக்கிப்பார்த்து வாசித்து சல்லடை செய்துகொள்ளல் வேண்டும்.
 
எழுத்தாளர்களுக்கு சமூதாயத்தின் மூலமாக எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஓர் எழுத்தாளனை இவ்வளவு மோசமான நிலைக்குத்தள்ளுவதற்கு இந்த சமூதாயமும் பத்திரிகையும் துணைபோனதை நினைத்து மனம் வேதனைப்படுகிறது.
 
இலக்கியத்தால் வாழ்ந்தான் என்பதைவிட இலக்கியத்தால் வீழ்ந்தான் என்கிற சரித்திரத்தை நம் நாட்டு வருங்கால இலக்கியம் சொல்லும்.
 
வானொலி தொலைக்காட்சிகளைப்பற்றிய விமர்சனங்கள் ஒன்று இரண்டல்ல, அப்போதெல்லாம் எந்த அறிவிப்பாளரும் பணி இடைநீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் வானொலிக்கே சம்பந்தமில்லாத ஓர் விஷயத்தால் அங்கே பணிபுரியும் அறிவிப்பாளருக்குப் பணி நீக்கம்.! காரணம் அவர் எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் இச்சமூகத்திற்கு இளக்காரம்.
 
இலக்கியத்தில் எவ்வளவோ போராட்டங்கள் வந்திருப்பினும் சம்பந்தமேயில்லாமல் வேலை நீக்கம் ஏற்பட்டதாக இதுவரையிலும் கேள்விப்படவில்லை. அந்தப் படைப்பாளியின் வேலைக்கு பிரச்சனை வரவேண்டிய அளவிற்கு என்ன அவமானம் நிகழ்ந்துவிட்ட்தென்றுதான் இன்னமும் புரியாத புதிர். செவிசாய்க்கவேண்டிய விவரங்களுக்குப் பாராமுகமாக இருந்துவிட்டு, எங்கேயோ தேள்கொட்டினால் எங்கேயோ நெரிகட்டிக்கொள்ளும் என்பதைப்போல கேழ்விரகில் நெய்வடிகிறதென்று மதிகெட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவை நினைத்து நிலைகுலைந்துபோனேன்.
இலக்கியம் – போதிப்பது சித்தாந்தம் சொல்வது அல்ல. அது வாசிக்கப்படுகிற தனிமனிதனை சிலநொடி சிந்திக்கவைப்பது.
 
ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற வறைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்களால் ஒரு போதும் சிறந்த படைப்புகளைக் கொடுக்கமுடியாது.
 
அதற்காக தயாஜி எழுதியது சிறப்பான சிறுகதை என்று நான் சொல்லமாட்டேன். அம்மாதிரியான கருவைத்தொட்டு எழுதுவதற்கு `தில்’ வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பித்த விதம் கவர்கிறது,சொல்லப்பட்ட அவலம் நெருடுகிறது.
 
ஒரு வாசகன் எந்நிலையில் இப்படைப்பினை ஏற்பான், எப்படி இப்படைப்பாகப்பட்டது மனித அவலங்களை அகற்றி வாசகனின் அக இருளைப்போக்கும், என்கிற ரீதியில் மிக மிகத்தெளிவாக படைப்பினை நகர்த்திச்செல்வது ஒரு படைப்பாளியின் கடமை. அதாவது, படைப்பு போதனையாகவும் இல்லாமல், அனுபவித்ததை அக்கு அக்காக மனதில் அல்லாடும் ஆசைகளோடும் இச்சைகளோடும் சொல்வது போலவும் இல்லாமல் கவனமாகப் பார்த்து நகர்த்துவது படைப்பாளியின் புத்திகூர்மையில் இருக்கின்றது.
 
எல்லா எழுத்தாளர்களாலும்… அதாவது எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பேர்போடுபவர்களாலும் இதுபோன்ற கருவைத்தொட்டு அவ்வளவு எளிதாக எழுதிவிடமுடியாது. அதற்கென்று சில கோட்பாடுகள் தெரிந்தவர்கள், கொள்கைப் பிடிப்பாளர்களால் மட்டுமே எழுதி அவலங்களை வெளியே சொல்ல முடியும். அதில் ரசனையும் ஊடாட வேண்டும்?
ஒரு படைப்பாளி இக்கருவை கையில் எடுக்கின்றபோது, படைப்பாளியின் பார்வையாகப் பட்டது, முதிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அந்த முதிர்ச்சி தயாஜியின் படைப்பில் இல்லை. முதிர்ச்சி என்றால்? என்று கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம்.
 
இலக்கியம் படைப்பது சுலபமானதல்ல என்கிற சிந்தனை நம்மைக் குடைந்துகொண்டே இருப்பது அவசியம்.
படைப்பு விமர்சனத்திற்கு உட்பட்டதுதான். இருப்பினும் படைப்பாளி தண்டிக்கப்படலாகாது.
 
-ஸ்ரீவிஜயா
 
நன்றி வல்லினம்

வாயில் விழைச்சு - பெருமாள் முருகன்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதை, சிலரால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டபோது படித்த கட்டுரை. இக்கதை குறித்த கேள்விகளுக்கும் இது போன்ற புனைவுகளுக்கும் ஏற்றதாய் அமையும் என்று இக்கட்டுரையை இங்கே மீண்டும் பதிகிறேன்.)


ஒவ்வோர் ஆண்டும் பெரும் நிறுவனங்களில் ஜனவரி தொடங்கி மார்ச் வரை நிதிக் கணக்குகள் முடிக்கப்படும் காலம் என்பதால் முசுவாக இருப்பார்கள். அதுபோலக் கல்வி நிறுவனங்களில் இது கருத்தரங்கக் காலம். முன்பு பல்கலைக்கழகங்களில்தான் கருத்தரங்குகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெறும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல பயிலரங்குகளுக்கும் கருத்தரங்குகளுக்கும் நிதி உதவி செய்வதால் கல்லூரிகளிலும் இன்று ஆய்வுகள் பெருகிவிட்டன. ஆகவே எங்கு நோக்கினும் கருத்தரங்க ஆரவாரங்கள். 
 
இப்போதெல்லாம் கல்வி நிறுவனங்களில் நவீன இலக்கியம் பற்றிய பேச்சுகள் நடப்பது அரிது. எப்போதுமே அப்படித்தான் என்பது நம் வரலாறு என்றாலும் இப்போது சுத்தமாக இல்லை. தொல்காப்பியம் தொடங்கி ஆறாம் நூற்றாண்டு வரையான பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கே அந்நிறுவனம் நிதி உதவி செய்கிறது. ஆகவே எல்லா ஆய்வாளர்களும் பழந்தமிழ் இலக்கிய விற்பன்னர்களாகி வருகின்றனர். நானும்கூட. சமீபத்தில் நான் கவனம் எடுத்துக்கொண்டு வாசித்த நூல் ‘ஆசாரக்கோவை.’ இந்நூல் பற்றிக் கவனம் உருவாக இரண்டு நண்பர்கள் காரணம். திருச்சி, ஈவெரா அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராரசிரியராகப் பணியாற்றும் முனைவர் க.காசிமாரியப்பன் ஒருவர்.
 
சென்னை, நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் இரா.இராமன் மற்றொருவர். இருவரும் ஆசாரக்கோவை பற்றி வெவ்வேறு கோணங்களில் கட்டுரை எழுதியுள்ளனர். அவர்களது கோணம் பற்றி இப்போது விவாதிக்கப் போவதில்லை. ஆசாரக்கோவையில் நமக்குத் தேவையான செய்திகள் சில உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை. பன்னிரண்டு நீதிநூல்களுள் ஒன்றாக ஆசாரக்கோவையையும் சேர்க்கிறார்கள். ஆனால் நீதி சொல்லும் நூலல்ல இது. ஆசாரம் என்னும் சொல்லுக்குப் பல பொருள்களை அகராதிகள் தருகின்றன. தமிழ் லெக்சிகன் தரும் பொருள்களுள் சில: சாஸ்திர முறைப்படி ஒழுகுகை, நன்னடை, வழக்கம், தூய்மை ஆகியன. இன்றைய வழக்கிலும் ஆசாரம் பயன்படுகிறது. ‘அவுங்க ரொம்ப ஆசாரமானவிங்க’ என்றும் ‘அது ஆசாரமான குடும்பம்’ என்றும் சொல்லும் வழக்கம் இருக்கிறது. பழமைப் பிடிப்பு அல்லது பழைய முறைகளைக் கடைபிடிப்பவர்கள் என்னும் அர்த்தம் இங்கு வருகிறது. நம் அன்றாட நடவடிக்கைகளை சாஸ்திர முறைப்படி அமைத்துக்கொள்வதற்குப் பெயரே ஆசாரம். சாஸ்திரம் என்றால் எது? சமஸ்கிருதத்தில் பலவகைச் சாஸ்திரங்கள் இருக்கின்றன என்று அறிகிறோம். தமிழிலும் ‘சைவ சித்தாந்த சாத்திரங்கள்’ உள்ளன.
 
சாஸ்திரம் என்பது குறிப்பிட்ட விஷயம் பற்றிய விதிமுறைகளைத் தரும் நூல். தினசரி வாழ்வில் உடலைத் தூய்மையாக வைத்திருப்பது தொடங்கி பல்வேறு ஒழுங்கு முறைகளின் தொகுப்புக்கு ஆசாரம் என்று பெயர். ‘ஆசாரக்கோவை என்னும் தொடர்க்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம்’ என்று மர்ரே ராஜம் பதிப்பின் முன்னுரை கூறுகின்றது. அது ஆசாரக்கோவையின் பொருள் பற்றிக் கூறுவதாவது: பொதுவகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டும் கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார். அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகளும் பலவாம். வைகறைத் துயில் எழுதல் முதல் காலைக்கடன் கழித்தல், நீராடல், உடுத்தல், உண்ணல், உறங்குதல் முதலிய பல நிகழ்ச்சிகளிலும் ஒழுகும் நெறிகள் வற்புறுத்தப்படுகின்றன. மேற்கொள்ளத் தக்கன இவை, விலக்கத்தக்கன இவை எனச் சில ஆசாரங்களை விதித்தும் சிலவற்றை விலக்கியும் செல்லும் முறை கவனிக்கத்தக்கது. (ப.273) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலேயே காலத்தால் பிற்பட்டது ஆசாரக்கோவை. சமஸ்கிருத சாஸ்திரங்கள் சிலவற்றின் கருத்துத் தாக்கங்கள் இதில் இருக்கின்றன என்றும் இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்றும் கூறுவோர் உள்ளனர். சுக்ரஸ்மிருதிக் கருத்துக்களின் தொகுப்பே ஆசாரக்கோவை என்பது செல்வகேசவராய முதலியாரின் கருத்து. ‘இந்நூல் வடமொழி நூலின் வழித் தோன்றியது என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை’ என்பார் வையாபுரிப்பிள்ளை.
 
இவற்றைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் இன்னும் நடைபெறவில்லை என்றே சொல்லலாம். நீராடல், பல் துலக்குதல் உள்ளிட்டவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் இந்நூல் கூறுகின்றது. எந்தெந்தச் சமயங்களில் நீராட வேண்டும்? தெய்வ வழிபாடு, தீக்கனா காணல், தூய்மை குன்றல், வாந்தி எடுத்தல், மயிர் களைதல், உண்ணல், அதிக நேரம் தூங்கல், உடல் உறவு, கீழ்மக்களைத் தீண்டல், மலசலம் கழித்தல் ஆகிய பத்துச் சந்தர்ப்பங்களிலும் அவசியம் நீராட வேண்டும். அம்மணமாக நீராடக் கூடாது. ஓராடை உடுத்தே நீராட வேண்டும். ஈராடை அணிந்தே உண்ண வேண்டும். உடுத்த ஆடையை நீருள் பிழியக் கூடாது. ஓராடையோடு அவைக்குச் செல்லக்கூடாது என்றெல்லாம் ஆடை உடுப்பது பற்றிச் சொல்கிறது. இப்படிப் பல ஆசாரங்கள். அவற்றைக் கடைபிடித்தவர் ஒருகாலத்தில் இருந்திருக்கக்கூடும். இன்றும் அப்படியான ஆசார சீலர்கள் இருக்கலாம். சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இத்தகைய ஒழுங்கு முறைகள் பொருந்தலாம். அல்லது நாள் முழுக்க இவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பின்பற்றுவது எளிதாகலாம்.
 
அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடுபவர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட இயலாது. கீழ்மக்கள், புலையர் ஆகியோரைத் தீண்டக் கூடாது என்பது பற்றிச் சொல்வதோடு பார்ப்பாரின் உயர்வுகளைத் தொடர்ந்து பேசுவதையும் காணலாம். சுவாரசியமான பல பதிவுகளும் அக்காலச் சமூகப் படிநிலைகள் பற்றிய பதிவுகளும் காணப்படும் நூல் இது. எத்தகைய இடத்தில் வசிக்கலாம்? இதற்குப் பதிலை எதிர்மறையாக இந்நூல் சொல்கிறது. ‘வண்ண மகளிர் இடத்தொடு தம்மிடம் இடங்கொள்ளார் ஒள்ளியம் என்பார்’ என்பது பாடல். அறிவுடையவர்கள் ‘தன் மேனி மினுக்குதல்’ செய்து அலங்கரித்துக்கொள்ளும் ‘வண்ண மகளிராகிய’ விலைமகளிர் வசிக்கும் பகுதியில் தம் வாழிடத்தை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார் என்பது பொருள். ஏற்படுத்திக் கொண்டால் ஆணுக்குச் சபலம் தோன்றிவிடுமா? அப்படித் தோன்றுவதைப் பற்றித் தவறில்லை. விலைமகளிரோடு கூடியிருத்தலை ஆணுக்கு முழுமையாக அனுமதித்த சமூகம் நமது. ஆகவே பெண்ணுக்குச் சபலம் ஏற்பட்டுவிட்டால் என்னாவது? ‘பெண்டிர்க்கு உவப்பன வேறாய் விடும்’ என்கிறது கோவை. விலைமகளிரைப் பார்த்து அலங்காரத்திலும் மேனி மினுக்குதலிலும் குடும்பப் பெண்களுக்கும் ஆசை தோன்றிவிடும். அவற்றிற்காகக் குடும்பப் பெண்ணும் சோரம் போக விருப்பம் கொள்வாள் என்பது அதன் உட்கருத்து. ‘புகத் தகா இடங்கள்’ என்று சொல்லும் பாடலொன்றில் ‘சூதர் கழகம்’ குறிப்பிடப்படுகின்றது.
 
சூதாடுவதற்கு என்று தனியிடம் இருந்திருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இப்படிப் பல. அவை ஒருபக்கம் இருக்கட்டும். எப்பேர்ப்பட்ட நூலும் தம் காலத்தின் மீறல்கள் சிலவற்றையேனும் ஆவணமாக்கியிருக்கும். ஆசாரக்கோவையிலும் அத்தகைய பதிவுகள் உள்ளன. ‘எச்சிலுடன் தீண்டலாகாதவை’, ‘எச்சிலுடன் காணலாகாதவை’, ‘எச்சிலுடன் செய்யத்தகாதவை’ எனச் சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றது. எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர் உச்சந் தலையோடு இவையென்ப யாவரும் திட்பத்தால் தீண்டாப் பொருள். பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை எச்சிலோடு தீண்டலாகாது என்பது இதன் பொருள். எச்சிலுடன் காணத் தகாதவை எவை? எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் நாயிறுநாய் அத்தக வீழ்மீனோடு இவ்வைந்தும் தெற்றென நன்குஅறிவார் நாளும் விரைந்து. புலையர், நிலா, சூரியன், நாய், வீழும் நட்சத்திரம் ஆகியவற்றை எச்சிலோடு காணக்கூடாது என்பது இப்பாடலின் பொருள். எச்சிலோடு ஒன்றனையும் ஓதக் கூடாது, வாயால் ஒன்றனையும் சொல்லக்கூடாது, தூங்கக் கூடாது என்று சொல்லும் பாடல் ஒன்றும் உள்ளது.
இந்தப் பாடல்களில் எல்லாம் எச்சில் என்று சொல்லப்படுபவை எவை? எச்சில் பலவகைப்படும் என்கிறது ஆசாரக்கோவை. அவற்றுள் நான்கு எச்சில்கள் முக்கியம். அவற்றைக் கூறும் செய்யுள்: எச்சில் பலவும் உளமற்று அவற்றுள் இயக்கம் இரண்டு இணைவிழைச்சு வாயில் விழைச்சுஇவை எச்சில்இந் நான்கு. இயக்கம் இரண்டு என்று குறிப்பிடுவது மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை ஆகும். மலம் கழித்த பின்னும் சிறுநீர் கழித்த பின்னும் நீராட வேண்டும். அப்போதுதான் எச்சில் நீங்கும். மலம் கழித்த பின் நீராட சொல்வதேனும் சரி. சிறுநீர் கழித்த பின் நீராட வேண்டும் என்றால் எத்தனை முறை தினம் நீராடுவது? இணைவிழைச்சு என்பது புணர்ச்சி. அதாவது உடலுறவு. உடலுறவு கொண்டால் அது எச்சில். நீராடி எச்சிலை நீக்கலாம். நான்காவதாகச் சொல்லப்படுவது ‘வாயில் விழைச்சு’ என்பதாகும். அது என்ன வாயில் விழைச்சு? இதற்குப் பழையவுரை ‘வாயினால் வழங்கிய விழைச்சு’ என்று குறிப்பிடுகிறது. புன்னைவனநாத முதலியார் எழுதியுள்ள உரையில் அவர் பழையவுரையைப் பின்பற்றி ‘வாயினால் வழங்கிய விழைச்சும்’ என்று எழுதியுள்ளார். கருத்துரையில் ‘பலவகை எச்சில்களில் மலசலங் கழித்தல் புணர்ச்சி அதரபானம் இந்நான்கையும் காக்க’ என்று கூறுகிறார்.
 
சொற்பொருள் தரும்போது ‘இணைவிழைச்சு – புணர்ச்சி’ என்று எழுதுபவர் ‘விழைச்சு – விருப்பம்’ என்று பொருள் தருகிறார். ‘வாயில் விழைச்சு’ என்பதற்குத் தனியாகப் பொருள் எழுதவில்லை. ‘இணைவிழைச்சு’ என்பதற்கு ‘உடலுறவு’ என்று வெளிப்படையாகவும் தெளிவாகவும் பொருள் எழுதுபவர் ‘வாயில் விழைச்சு’ என்பதற்குப் பொருள் தரத் தடுமாறுகிறார். விருப்பம் என்பது எவ்விதம் பொருந்தும்? தமிழ் லெக்சிகன் ‘விழைச்சு’ என்னும் சொல்லுக்குப் ‘புணர்ச்சி’ என்று தெளிவாகப் பொருள் (தொகுதி 6, ப.3724) தருகிறது. விழைச்சு என்பதற்கே புணர்ச்சி என்று பொருள் இருக்கிறது. அப்படியானால் இணைவிழைச்சு, வாயில்விழைச்சு ஆகியவை விழைச்சின் வகைகள் என்று கொள்வதுதான் பொருத்தம். மேலும் இணைவிழைச்சு என்பது போல வாயில்விழைச்சு என்பதையும் ஒற்றைச் சொல்லாகக் கருத வேண்டும். ‘அதரபானம்’ என்றால் எவ்விதம் பொருள் உணர்வது? முத்தம் என்னும் பொருளில் அப்படிச் சொல்கிறாரா? முத்தம் என்றால் தெளிவாக அந்தச் சொல்லையே பயன்படுத்தலாமே. உரையாசியருக்குப் பொருள் புரியாமலில்லை. சொல்லத் தயக்கம். சரி, அகராதிகள் என்ன பொருள் சொல்கின்றன என்று பார்த்தால் பல அகராதிகள் இந்தச் சொல்லையே தலைச்சொல்லாகத் தரவில்லை.
 
சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் சொற்களுக்குப் பொருள்தரும் ‘பாட்டும் தொகையும்’ அகராதியில் இச்சொல்லே இல்லை. தமிழ் லெக்சிகன் ‘வாயில்விழைச்சு – உமிழ்நீர்’ எனப் பொருள் (தொகுதி 6, ப.3602) கொடுத்து அதற்கு உதாரணமாக ஆசாரக்கோவையின் இந்தச் சொல்லையே தந்துள்ளது. உமிழ்நீர் என்பது எவ்வகையில் பாடற்பொருளுக்குப் பொருந்தும்? அகராதியின் பதிப்பாசிரியர் வையாபுரிப்பிள்ளை. அவர் எதையும் மறைக்க வேண்டும் , மாற்ற வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர். அவர் பார்வையில் படாமல் இந்தப் பொருள் கொடுக்கப்பட்டிருக்கக் கூடுமோ? வாயில்விழைச்சு என்பது எல்லாருக்கும் தெரிந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம். ஆசாரக்கோவையின் ஆசிரியருக்கு அந்தத் தயக்கம் இல்லை. வாயில்விழைச்சு என்பது வாய்வழிப் புணர்ச்சி அதாவது வாய்வழி உறவு கொள்ளுதல் ஆகும். பேச்சு வழக்கில் இதைக் குறிக்கும் நேரடிச் சொல் ‘ஊம்புதல்’ என்று நினைக்கிறேன்.
 
வேறு சொல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வாய்வழிப் புணர்ச்சி பழமையானது என்பதற்கு ஆசாரக்கோவையே சான்று. அதைத் தவறென அந்நூல் சுட்டவில்லை. அதை ஏற்றுக்கொள்கிறது. அப்புணர்ச்சியை எச்சிலில் ஒன்றாகச் சுட்டுகிறது. எச்சில் என்பதற்கு இங்கு அசுத்தம் எனப் பொருள் கொள்ள வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொன்னால் தீட்டு என்னும் அசுத்தம் எனக் குறிப்பிடலாம். இத்தகைய அசுத்தத்திற்குப் பரிகாரம் நீராடல். வாயில்விழைச்சு முடிந்ததும் நீராடிவிட்டால் தீட்டு கழிந்துவிடும். முதன்மைத் தீட்டுக்களில் ஒன்றாக வாயில்விழைச்சு கருதப்பட்டுள்ளது என்றால் அவ்வழக்கம் பரவலாக இருந்துள்ளது என்றே பொருள். வாயில்விழைச்சில் ஈடுபட்டோர் யார் என எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருபால் புணர்ச்சி, ஒருபால் புணர்ச்சி ஆகிய இரண்டிலுமே வாயில்விழைச்சு நடந்திருக்க வாய்ப்புண்டு. அதை அக்காலச் சமூகம் ஏற்றுக் கொண்டிருந்தது என்பதையே ஆசாரக்கோவை காட்டுகின்றது. இந்நூலில் இன்னொரு குறிப்பிடத்தக்க பதிவும் காணப்படுகின்றது. யார் யாருடன் தனித்திருக்கக் கூடாது என்று ஒரு பாடல் கூறுகின்றது. வருமாறு: ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும் சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனும் தாங்கற் கரிதாக லான். இதற்குப் பழையவுரைகாரர் ‘தாயுடனாயினும் மகளுடனாயினும் தம் உடன் பிறந்தாளுடனாயினும் சான்றோர் தனித்து உறையார், ஐம்புலன்களையுந் தடுக்கல் அரிதாகலான்’ என்று எழுதுகின்றார்.
 
புன்னைவனநாத முதலியார் கருத்துரையாக ‘ஐம்புலன்களையும் அடக்கி நடத்த லருமையாதலின் தாய் முதலியவர்களுடனும் தனித்திருத்தல் தகாது’ என்று கூறுகின்றார். அவர் ‘உறையற்க’ என்பதற்குத் ‘தங்காதிருக்கக் கடவர்’ என்று பொருள் கூறுகிறார். ‘உரையற்க’ என்பதைப் பாட வேறுபாடாகக் கொள்ளலாம் என்பதும் அவர் எண்ணம். அப்படி எடுத்துக் கொண்டால் எவ்வாறு பொருள் கொள்வது? ‘உரையற்க என்ற பாடங்கொண்டு மேற்குறித்தவர்களுடன் தனித்திருந்து உரையாடாதிருக்க எனலுமாம்’ என்கிறார். இது ஒருவகைச் சமாதானம். அப்படிப் பாடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவரே எடுத்துக் காட்டும் காசிகண்டச் செய்யுளடிகள் ஆசாரக்கோவையின் கருத்தைத் தெளிவுபடுத்துகிறது. அது: நற்றாய் புதல்வியுடன் றோன்றிய நங்கையேனும் உற்றோருழியிற் றனியெய்தியுறை தலாகா. இப்பாடலில் ‘உறைதல்’ எனத் தெளிவாகவே குறிப்பிடப்படுகின்றது. தாயுடன் மகன் தனித்திருக்கக் கூடாது. மகளுடன் தந்தை தனித்திருக்கக் கூடாது. உடன்பிறந்தவளுடன் (அக்கா அல்லது தங்கை) சகோதரன் தனித்திருக்கக் கூடாது.
 
தனித்திருந்தால் என்னவாகி விடும்? ஐந்து புலன்களையும் அடக்கி வைத்தல் அரிது. ஆகவே புணர்ச்சி நிகழ்ந்துவிட வாய்ப்புள்ளது என்பது கருத்து. இப்பாடல் அக்காலத்தில் இருந்த இத்தகைய வழக்கங்களை எதிர்மறையாகப் பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம். தாயுடன் நிகழும் புணர்ச்சியைக் குறிக்கும் வசையாக இன்றைக்கும் பயன்படுவது ‘தாயோலி’ என்பது. அதேபோல சகோதரியோடு நிகழும் புணர்ச்சியைக் குறிக்க ‘ங்கொக்காலோலி’ என்பது பயன்படுகிறது. இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது. இதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவேதான் தனித்திருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஆசாரக்கோவை கூறுகின்றது. இன்றைக்கு அது வசையாக இருப்பதற்கும் அதுதான் காரணம். மனிதன் நாகரிகம் அடையாத காலத்தில் அது வழக்காக இருந்திருக்கலாம். பின்னர் அத்தகைய புணர்ச்சிகள் விலக்கப்பட்டிருக்கின்றன. எனினும் விதிவிலக்காகச் சில நடப்பதுண்டு. அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாகத் தனித்திருக்கக் கூடாது என்பதை ஆசாரக்கோவை வலியுறுத்துகிறது. மகளுக்கும் தந்தைக்குமான புணர்ச்சி பற்றி வசைச்சொல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் அத்தகைய புணர்ச்சிகளும் நடந்திருக்கக் கூடும். இன்றும் அப்படிப்பட்ட செய்திகள் வருகின்றன. மகளைப் புணர்ந்த தந்தையைக் கொன்ற தாய் பற்றிய செய்தியும் உண்டு.
 
அப்படியான தந்தைகளைக் கைது செய்யும் காட்சிகள் ஆண்டுக்கு ஒன்றிரண்டேனும் அரங்கேறுகின்றன. திருமண வயது கடந்தும் மணமாகாமல் முதிர்கன்னியாகிய மகளும் இளம் வயதிலேயே மனைவியை இழந்துவிட்ட தந்தையும் தாம் பார்த்த திரைப்படக் காட்சியின் தூண்டுதலால் உறவு கொள்வதாகக் கதை எழுதிய பிரபலம் இருக்கிறார். இத்தகைய முறையற்ற உறவுகளையே மூலதனமாக்கி எழுதப்படும் ‘காமக்கதைகள்’ இணையத்தில் அநேகம். புத்தகங்களும் பல. இவற்றுக்கெல்லாம் வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. அதற்குரிய பழஞ்சான்றுதான் ஆசாரக்கோவை.
————-
பயன்பட்ட நூல்கள்: 1. பு.சி.புன்னைவனநாத முதலியார் (உ.ஆ.), ஆசாரக்கோவை, 1971, சென்னை, கழக வெளியீடு, மறுபதிப்பு. 2. மர்ரே எஸ்.ராஜம் (ப.ஆ.), பதினெண் கீழ்க்கணக்கு, 1981, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இரண்டாம் பதிப்பு. 3. ச.வையாபுரிப்பிள்ளை, இலக்கியச் சிந்தனைகள், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம் முதல் தொகுதி, 1989, சென்னை, வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம். 4. ச.வையாபுரிப்பிள்ளை (ப.ஆ.), தமிழ் லெக்சிகன் தொகுதி 6, 1981, சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம், இரண்டாம் பதிப்பு.

நன்றி: மணல்வீடு
 
 
நன்றி வல்லினம்

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் – எனது பார்வை


(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதை குறித்து கங்காதுரை எழுதிய கட்டுரை)



முதலில் இந்தச் சிறுகதையை எழுதிய நண்பர் தயாஜியை மனதார பாராட்டுகிறேன். மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறுகதை அதிகம் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது இதுவே முதன் முறை. இம்மாதிரியான கருவை கையில் எடுத்துக்கொண்டு எழுதுவது என்பது சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்ள ஒரு ‘தில்’ வேண்டும். அது தயாஜிடம் இருப்பதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
 
“கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” என்ற இந்தச் சிறுகதையை வாசித்தபோது எனக்குள் எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. அதற்கான காரணம் இம்மாதிரியான படைப்புகளை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன். மலேசிய இலக்கியச் சூழலில் இம்மாதிரியான கருப்பொருளில் கதைகள் வந்திருப்பது மிகக் குறைவு. அதைவிட இங்கு வாசிப்புப் பழக்கம் என்பது மிகக் குறைவு. ஆக இம்மாதிரியான சிறுகதையை வாசித்திறாத பெரும்பாலோருக்கும் முதலில் ஏற்பட்டது அதிர்ச்சி மட்டுமே. அந்த அதிர்ச்சியில் அவரவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் இச்சிறுகதைக்கு எதிராக பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டன. சிலரின் விமர்சனங்கள் அறிவுநிலையிலிருந்து முன்வைக்கப்பட்டன. சிலரின் விமர்சனங்கள் அடித்து வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் வைக்கப்பட்டன. இன்னும் சிலர் காழ்ப்புணர்ச்சியில் மேற்கொண்ட கீழறுப்பு நடவடிக்கைகள் கழிவறையில் கிடக்கும் மலத்தை விட மோசமாக இருந்தன. முதலில் நம்மவர்கள் ஒரு விசயத்தை எதிர்கொள்ள முறையான அணுகுமுறையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இச்சிறுகதை குறித்து சில எழுத்தாளர் நண்பர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் முன்வைத்தது பின்வருமாறு:
 
“நமக்கு அறிமுகமாகாத இன்னொரு வாழ்வை நுட்பமாக பேசும் மிக முக்கியமான கதை இது. பொருளாதார ரீதியில் தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் தனிமனித உறவுகளில் எத்தனை பலவீனமானது என்பதை அழுத்தமாக நமக்கு உணர்த்தும் கதையிது”
 
இனி, என் பார்வையில் சிறுகதையின் முக்கிய அம்சம் ஒரு மனப்பிறழ்வாளன் தான் கழிவறையில் சிக்குண்டதாக சொல்லி கதையைத் தொடங்குகிறான். கழிவறையில் நடந்தேறிய அவலங்களை நினைத்துப்பார்த்து அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சம்மந்தப்பட்டவர்களிடம் கெஞ்சி போராடுவதாக கதை அமைகிறது. கதையைப் படித்துவிட்டு பெரும்பாலோர் இச்சிறுகதை கலாச்சாரம் பண்பாட்டு கட்டமைப்பை மீறியுள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் இரண்டு. ஒன்று தாய்மையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகவும், மற்றொன்று தெய்வத்தை இழிவுப்படுத்தியதாகவும் என்பதேயாகும்.
 
எங்கிருந்து வந்தது கலாச்சாரமும் இந்த பண்பாடும்? மனிதன் முதலில் வாழத்தொடங்கியதே காட்டுமிராண்டியாகத்தானே? வரையறையின்றி கிடந்த வாழ்க்கை முறை ஒழுங்குபடுத்தி பின்னர் கலாச்சாரம் பண்பாடு என கட்டமைக்கப் பட்டபோது அதிலிருந்து சிதறிய உதிரி மனிதர்களின் பாலியல் சிக்கல்களைப் பற்றி இச்சிறுகதை பேசுகிறது.
 
சம்பவங்களே இச்சிறுகதையை வளர்க்கின்றன. முதல் சம்பவத்தில் சிறுவன் தான் பார்த்த ஆபாசப் படத்தின் உந்துதலால் தன் தாயை குளிப்பதை எட்டிபார்க்க முயற்சி செய்ததாகக் காட்டப்பட்டிருக்கும். இந்தக் காட்சியைப் பலரும் வன்மையாக கண்டித்தனர். தாய்மையின் புனிதத்தை கெடுத்துவிட்டதாக புலம்பினர். ஆனால் இச்சம்பவமே கதையின் முக்கிய காட்சியாக நான் கருதுகிறேன். இந்தக் காட்சியில் முக்கிய விடயமொன்று வைக்கப்பட்டுள்ளதாக கருதுகின்றேன்.
 
சங்க இலக்கிய பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “ஆசாரக்கோவை” மனித வாழ்க்கையில் பேணப்படவேண்டிய ஆச்சாரங்களைப் பற்றி பேசுகிறது. அதில் தாயுடன் மகன் தனித்திருக்கக் கூடாது. மகளுடன் தந்தை தனித்திருக்கக் கூடாது. உடன்பிறந்தவளுடன் (அக்கா அல்லது தங்கை) சகோதரன் தனித்திருக்கக் கூடாது. தனித்திருந்தால் என்னவாகி விடும்? ஐந்து புலன்களையும் அடக்கி வைத்தல் அரிது. ஆகவே புணர்ச்சி நிகழ்ந்துவிட வாய்ப்புள்ளது என்று சொல்லபட்டிருக்கும். தாயுடன் நிகழும் புணர்ச்சியைக் குறிக்கும் வசையாக இன்றைக்கும் பயன்படுவது ‘தாயோலி’ என்பது. அதேபோல சகோதரியோடு நிகழும் புணர்ச்சியைக் குறிக்க ‘ங்கொக்காலோலி’ எனும் வசைச்சொல் பொதுவாக பயன்படுகிறது. இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது. இதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவேதான் தனித்திருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஆசாரக்கோவை கூறுகின்றது.

இதையே இச்சிறுகதையின் முதல் காட்சி உணர்த்துவதாக நான் கருதுகின்றேன். சிறுவன் தனித்திருக்கும் வேளையில் ஆபாசப்படங்களைப் பார்க்கிறான். அதன் கிளர்ச்சியில் தன் தாயை குளிப்பதை எட்டிப்பார்க்க நினைக்கிறான். இங்கே இன்னொரு விடயமும் பதிவு செய்யப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அல்லது ஒடுக்குமுறைகள் தொடங்கும் முதல் இடம் குடும்பம். இக்கருத்தை ஒருமுறை கவிஞர் குட்டி ரேவதி “நீயா நானா” நிகழ்ச்சியில் முன்வைத்திருந்தார். நானும் அக்கருத்தை ஆதரிக்கிறேன். பாலியல் சார்ந்த வன்முறைகள் அல்லது ஒடுக்குமுறைகள் சிலருக்கு நேரிடையாகவே நிகழலாம் அல்லது அவர்கள் அறியாதும் நிகழலாம். இக்கதையில் தாய் தனக்கு நிகழ்ந்ததை அறியாதிருந்தாள். அவள் மகனிடம் வெளிப்படுத்திய அன்பும் அதையடுத்து சிறுவன் அடைந்திருந்த மனநிலையும் இச்சிறுகதையில் யதார்த்தமாக காட்டப்பட்டுள்ளது.
 
இச்சிறுகதையில் தொடர்ந்து காட்டப்பட்ட சம்பவங்கள் எல்லாமே நம் கண் முன் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பங்களே. காதல் பெயரில் காமத்தை விதைத்து கலவி கொள்வதும், அதை மறைந்திருந்து வேடிக்கை பார்ப்பதும், பதிவு செய்வதும், ஓரினப்புணர்ச்சி கொள்வதும் என எல்லாமே நம் சமூகத்தில் மட்டுமில்லாது எல்லா சமூகங்களிலும் அரங்கேறிக் கொண்டிருக்கும் அவலங்கள். இதை பற்றி எந்த சமூக இயக்கங்களும் அக்கறை கொண்டதுமில்லை ஆய்வுக்கு உட்படுத்தியதும் இல்லை. எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் சமூகத்தின் ஓர் அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதை எழுத்தாளன் தன் கதைக்குள் கொண்டுவரும்போது சமூகத்தின் உன்னத வாழ்விற்கு களங்கம் விளைவித்ததுபோல கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்ததாக இக்கதையில் தெய்வத்தை இழிவுப்படுத்தியதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. இச்சிறுகதையின் இறுதி சம்பவத்தில் காளியைக் கடவுளாக பாராமல் தன் காதலியாக பார்க்கிறான் மனப்பிறழ்வாளன். காளியால் மட்டுமே அவனை கழிவறையிலிருந்து மீட்க முடியுமென நம்புகிறான். காளியை உரிமையோடு அழைக்கிறான். அழைத்தவன் காமத்தை விதைக்கிறான். காளியைக் காதலியாக நினைத்து அவளோடு காமம் கொள்ள அழைக்கிறான்.

 ///காளி. என் காதலி. மண்டையோட்டு சூளி. இங்கே வாடி. காதலனை இப்படி பழிவாங்குதல் முறையோ சொல்லு. இத்தனை காலம் உன்னை மறந்திருந்தது தவறுதான். இனி நீதான் எனக்கு எல்லாம் வாயேன் காளி. சீக்கிரம் வாயேன். உன் மார்பில் சூழ்ந்திருக்கும் மண்டையோடுகளை கழட்டு. என் முகத்தினை அதில் பதிக்கிறேன். உன் திறந்த மார்புகளை என் தோளால் போர்த்துகிறேன். கையில் இருப்பதையெல்லாம் தூக்கியெறிந்துவிடு. காதலை தாங்கிப்பிடி. கண்ணில் இருக்கும் குரோதங்களை தூக்கியெறியலாம். காமத்தை விதைக்களாம்.///
 
எப்படி இந்து கடவுளான காளியை இவ்வளவு ஆபாசமாக சித்தரிக்கலாமென பலர் கொதித்தெழுந்தனர். இதில் வேடிக்கை யாதெனில் ஒரு பெண் தெய்வமான காளியை ஆதி முதல் திறந்திருக்கும் மார்புகளோடு மேற்சட்டை அணிவிக்காமல் பொதுவில் தெய்வமாக வைத்து வழிபடுதலில் உள்ள ஆபாசத்தை விட வேறென்ன ஆபாசமாக இருக்கமுடியும்?இருந்தபோதிலும் எனக்கும், தயாஜி கதையின் முடிவில் சறுக்கியிருப்பதாகவே தோன்றுகிறது.
 
இச்சிறுகதையில் கழிவறை பிரதான இடத்தைப் பெற்றிருக்கிறது. கழிவுகளை வெளியேற்றும் இடமான கழிவறையில்தான் எல்லா சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அல்லது ஒவ்வொரு சம்பங்களுக்குப் பின்னும் அவன் ஒளிந்துகொள்ளும் இடமாக கழிவறை அமைகிறது. தயாஜி ஏன் கழிவறையைத் தேர்ந்தெடுத்தார் என்று யோசிக்கும்போது அவர் அதை ஒரு குறியீடாக பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
 
வியர்வை, சிறுநீர், மலம் என உடல் வெளிப்படுத்தும் மலங்கள் வெளியேற்றப்படும் இடம் கழிவறை. அதுபோல் உள்ளத்து உணர்வு வெளிப்படுத்தும் மலங்கள் மூன்று. அவற்றைப் பொதுநெறியில் காமம், வெகுளி, மயக்கம் என சொல்லப்படுகிறது. சமயநெறியில் ஆணவம், கன்மம், மாயை என சொல்லப்படுகிறது. இவை வெளியேற்றப்படும் கழிவறை உடல். இப்போது கதை முழுக்க பயன்படுத்தப்பட்ட கழிவறை எனுமிடத்தில் உடலைப் பொறுத்திப் பார்த்தால் இச்சிறுகதை வெறொரு கோணத்தில் பயணிக்கும்.
 
சிறுகதையின் சறுக்கல்
 
தயாஜி எடுத்துகொண்ட கரு கத்தி மேல் நடப்பது போன்றது. கத்தி மேல் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் மிக கவனமாக எடுத்துவைக்க வேண்டும். அதைபோல இச்சிறுகதைக்கான சொற்பிரயோகம். தயாஜியின் அநாவசியமற்ற சொற்பிரயோகம் இக்கதையின் மீதான முத்திரையை மாற்றியமைத்துவிட்டது. சிறுகதையில் சில இடங்களில் புகுத்தப்பட்டிருக்கும் தேவையற்ற விவரிப்பு வாசகர்களை முகம் சுளிக்க வைக்கிறது. எல்லாவற்றையும் யதார்த்தமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு அப்பட்டமாக எழுதுவதை தவிர்த்திருக்க வேண்டும். சில இடங்களில் நாசுக்கான சொல்முறை அவசியம் என கருதுகிறேன். அதோடு இச்சிறுகதையில் வடிவமைதி தேவைப்படுவதாகவும் கருதுகிறேன். தயாஜி ஒட்டுமொத்தமாக சறுக்கிய இடம் கதையின் முடிவுதான். தெளிவற்ற ஒரு முடிவு அல்லது முரணான ஒரு முடிவு வாசகர்களை குழப்பிவிடுகிறது.
ஆனால், சிறுகதையின் வடிவம் குறித்து பேசாமல் பெரும்பாலோர் அதை கருத்து ரீதியாக மோதி வீழ்த்த முனைவதுதான் இலக்கியம் எதிர்க்கொள்ளும் பெரிய சவாலாக இருக்கிறது நம் நாட்டில்.
 
-கங்காதுரை
 
நன்றி வல்லினம்

கலைக்கு மரியாதை செய்யத் தெரிந்தவர்கள்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை குறித்து ஷோபா சக்தி எழுதிய கட்டுரை)



கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’  என்ற கதையை எழுதியதற்காக தயாஜி மீது கலாசார போலிஸ்களால் தொடுக்கப்படும் தாக்குதலும் தயாஜியை அவர் பணியாற்றிய அரசு நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்ததும் கடுமையான கண்டனத்திற்குரியது. 
கடவுள் மீதும், பெற்றவர்கள் மீதும், பெற்ற பிள்ளைகள் மீதும் காமுறுவது இலக்கியத்திற்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் புதியதல்ல. இல்லாதவொன்றை தாயாஜி சொல்லிவிடவில்லை. அவ்வாறு இல்லையென்றே வைத்துக்கொண்டாலும் இல்லாததைத் சொல்ல இலக்கியத்தில் அனுமதியுண்டு. சூரியனோடு புணர்ந்தது மகாபாரதம். சிங்கத்தோடு புணர்ந்து கருவுற்றது மகாவம்சம். தாயை மகன் புணர்ந்தது விவிலியம். இந்த மூன்று இலக்கிய நூல்களும் மூன்று மிகப் பெரிய மத நிறுவனங்களின் வேதநூல்கள்.
 
ஒவியர் எம். எப். உசைன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தது, ‘த டாவின்ஸி கோட்’  நாவலில் ஏசுக் கிறீஸ்துவுக்கு மரிய மதலேனாளோடு உறவிருந்ததாகச் சித்தரித்தது, டென்மார்க் பத்திரிகையொன்று  இஸ்லாத்தின்  இறைவனின் பிரதிமையை வெளியிட்டது, புத்தரின் உருவத்தை சட்டையில் பொறித்தது போன்ற சம்பவங்கள் மத அடிப்படைவாதிகளை மட்டுமே கொதிப்படைய வைத்ததேயல்லாமல் வெகுசனங்களை கலவரப்படுத்தவில்லை. அவர்களிற்கு கலைக்கு மரியாதை செய்யத் தெரியும்.
கடவுளைக் காதலானாகவும் காதலியாகவும் கொண்டாடிய இலக்கிய மரபுதான் நமது. திருவரங்கனை காதலனாக வரித்து நாச்சியார் பல நூற்றாண்டுகளிற்கு முன்பு பாடியதிலிருந்து, இன்றைய கவி வசுமித்ர
‘ஆகச்சிறந்த புணர்ச்சியை நிறைவேற்ற வேண்டுமாயின் காளியைத்தான் புணரவேண்டும் அவளுக்குத்தான் ஆயிரம் கைகள்..’
 
என எழுதியதுவரை ஏராளம் பெறுமதிமிக்க பெட்டகங்கள் நம்மிடமுண்டு.
 
இராமனைத் தெருத்தெருவாகச் செருப்பாலடித்தார் தந்தை பெரியார். கடந்த ஏப்ரல் மாதம் கத்தோலிக்க ஆர்ச் பிஷப் முன்பு திறந்த மார்பகங்களோடு தோன்றிய பெமன் (FEMEN) போராட்டக் குழுப் பெண்கள் ‘இந்தா வாங்கிக்கொள் இயேசுவின் விந்தை’ எனத் தண்ணீரை அவர்மீது ஊற்றினார்கள். இவற்றோடு ஒப்பிடுகையில் தயாஜி செய்தது காளிக்குச் சாதகமானதே. கலவியிலே மானுடற்கு கவலை தீரும் என்றான் பாரதி. காளிக்கும் தீரும்.
 
நமது முன்னோடி ஜி. நாகராஜன் சொன்னதை இங்கு குறிப்பிடலாம்:
‘நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இது  உங்களிற்குப் பிடிக்காதிருந்தால் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால்முழுமையும்தான் சொல்லியாக வேண்டும்.’

-ஷோபா சக்தி

நன்றி வல்லினம்

‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ : தீர்ப்பு உங்கள் கையில்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து அ.பாணியன் எழுதிய கட்டுரை)

கடந்த சில வாரங்களை மிகவும் முக்கியமான நாட்களாக உணர்கிறேன். எனக்கு மட்டும் அல்ல. மலேசிய இலக்கிய வாசகர்கள் பலருக்கும் இவை முக்கியமான நாட்கள்தான். காரணம் வல்லினத்தில் வெளிவந்த தாயாஜியின் சிறுகதை தான். ஒரு மலேசிய படைப்பாளி எழுதிய இலக்கிய படைப்பை முன்வைத்து பரவரலான கருத்தாடல்கள் இடம்பெருவது என்பது இந்நாட்டு இலக்கிய பரப்பில் அபூர்வமானது. வாசித்தோம் வாயை மூடிக்கொண்டிருந்தோம் என்பதே இங்குள்ள இலக்கிய வெளிப்பாடாக இருக்கும் போது பலர் இக்கதையை பற்றி (நல்ல மாதிரியோ வேறு மாதிரியோ) எழுதிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நாளிதழ்களிலும் அறிக்கைகள் வந்துள்ளதால் இச்சிறுகதை கூடிய விரைவில் ‘வெள்ளிவிழா’ கொண்டாடக் கூடும். அந்த அபூர்வத்தை நிகழ்த்தி காட்டிய அளவில் ‘கழிறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ (க.ப.வ) வை மனதார பாரட்டலாம். அதோடு மலேசிய வாசகர்களை ஒரு வாரத்திற்கேனும் இலக்கியம் குறித்த தீவிர கலந்துரையாடலுக்குள் தள்ளிவிட்ட வல்லினத்திற்கும் நன்றி பாராட்டத்தான் வேண்டும் 
இச்சிறுகதை குறித்த என் தனிப்பட்ட கருத்துகள் சில உள்ளன. ஆனால் அதற்கு முன் க.ப.வ மீது பல்வேறு சாடல்களை தொடுப்பவர்களின் கருத்தை மதித்து மீள்பார்வை செய்ய வேண்டியது அவசியம். அவர்களின் இலக்கிய ரசனை, எதிர்ப்பார்ப்பு, அவர்கள் வடித்துக்கொண்ட இலக்கிய நோக்கம் போன்ற பல்வேறு கூறுகளை இச்சிறுகதை களைத்துப் போட்டு விட்டது என்றே நான் நினைக்கிறேன். தமிழர் வாழ்வியல், பண்பாடு, ஆன்மீகம் போன்ற பல்வேறு விழுமியங்களின் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக உணரும் பலரின் ஆவேச குரலை நான் மதிக்கிறேன். அது அவர்களின் உரிமை. மலேசிய சூழலுக்கு இப்படிப்பட்ட கதை தேவையா இல்லையா என்று முடிவு செய்யும் அதிகாரம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு. நான் அணிந்திருக்கும் ஆடையை திடீரென உருவி என்னை கோவணாண்டியாக்கி விட்டு, பண்டை தமிழர் கோவணம் உடுத்தி வாழ்ந்தவர்களாவர் ஆகவே நான் அதை சினம் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூற முடியாது. நான் நிச்சயம் கோபப்படுவேன். அது தார்மீக கோபம்.
அந்த அன்பர்களுக்கு, வல்லினம் ஆசிரியர் என்ற நிலையில் நவீன் பொறுப்புடன் கொடுத்த நீண்ட விளக்கம் ஓரளவேணும் புரிதலை கொடுத்திருந்தால் மகிழ்ச்சி. அந்த விளக்கமும் அவர்களுக்கு ஒம்பாமல் போகலாம். அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் ஒரு இலக்கிய பிரதியின் தரத்தையும் தேவையையும் முடிவு செய்யக்கூடியவர்கள் உண்மையான வாசகர்கள்தான். வெளிச் சக்திகளின் தூண்டுதல் காரணமாக ஒரு வாசகன் தன் மனதுக்கு ஒவ்வாத ஒன்றை இலக்கியமாக அங்கீகரிக்க மாட்டான்.
அடுத்து இன்னொரு சாரார் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்று தங்கள் பழிவாங்கும் அரசியலை நிறைவேற்ற இச்சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. வல்லினத்தில் வந்த ஒரு சிறுகதை சர்ச்சைக்குள்ளாவதை காரணம் காட்டி இதுநாள் வரை வல்லினம் முன்னெடுத்த எல்லா போராட்டங்களையும் சிறுமைபடுத்தி ஒரு நாளிதழில் செய்தி போடும் கோழை தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு பொதுவான போராட்டம் நடந்து கொண்டிருந்த போது வாயை மூடிக் கொண்டு யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன; நமக்கு எல்லாரும் வேண்டும், என்று இருந்தவர்கள் இப்போது வல்லினத்தின் யோக்கியதையை பதம் பார்ப்பது கீழ்த்தரமான அரசியல் அன்றி வேறில்லை. நீண்ட காலமாக வல்லினத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி கொண்டிருந்த பலரின் குள்ளநரித்தனம் இப்போது வெளிப்படுவது ஆச்சரியம் இல்லை. அவர்களுக்கு இக்கதை குறித்த எந்த விளக்கமும் தேவை இல்லை. அவர்களிடம் நம் சொல் எடுபடாது. அதைவிட அவர்களுக்கு இலக்கியம் பற்றியோ சமுதாயம் பற்றியோ எந்த வித உண்மை அக்கரையும் இல்லை.
அவர்களின் நோக்கம் வல்லினத்தையும் அதன் குழுவினரையும் சமுதாய அசிங்கங்களாக காட்டி தங்கள் அசிங்கங்களை மறைத்துக் கொள்வது மட்டும்தான். ஆகவே அவர்களின் முயற்சிகளுக்கு அவர்களிடம் ‘அப்படியே செய்க!’ என்று மட்டும்தான் கூற முடியும்.
சரி இனி க.ப.வ குறித்த எனது கருத்துகள். முதலாவதாக இது ஒரு பின்நவீனத்துவ கதை அன்று. நோன் லீனியராக கதை சொல்லும் உத்தியும் இல்லை. ஆக இது வழக்கமான நேர்கோட்டு எதார்த்தவியல் கதை. ஆனால் கதையில் களம் இல்லை. கதை முழுதும் ஓரங்கவுரை புலம்பலாக அமைந்துள்ளது. கதை எடுத்துக் கொண்ட கருவும் மிகவும் பழமையானது. செயலுக்கு ஏற்ற பலாபலன்களே நமக்கு கிட்டும் என்பதையே இக்கதையும் கூறுகிறது. அதாவது இருவிணை தத்துவத்தையே இக்கதையும் வழிமொழிகிறது.
அடுத்து, இக்கதை காமத்தை வலியுறுத்துகிறது என்று சொல்வது அடிப்படையிலேயே பிழையான கருத்து. உண்மையில் இக்கதை காமத்திற்கு எதிரானது. காம உணர்வை அருவருப்பானதாக காட்டும் பழம்போக்கை மீறாத பழமைவாத கதை. காமத்தை மலத்தோடு ஒப்பிடும் ‘சமண மத’ கொள்கையை வலியுறுத்தும் இக்கதை ‘மலரினும் மெலியது காமம்’ என்ற தமிழ் சூழலை புறக்கணிக்கிறது என்பதே உண்மை. காம வலையில் சிக்குதலும் கழிப்பறையில் சிக்குதலும் ஒன்றே என்னும் போதனையையே இக்கதை செய்கிறது. எளிமையாக சொல்வதென்றால் புகழ் பெற்ற பழைய ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்பட பாணியை ஒத்த கதையே இச்சிறுகதை. அப்படத்தை இக்கதையின் ‘தெளிந்த’ முன்மாதிரியாக கூறலாம். காமத்தின் தூண்டுதலால் முறையற்று செயல்பட்டவன் இறுதியில் “கொண்டவளைத் துறந்தேன்; கண்டவள் பின் சென்றேன்; இன்று கண்களையும் இழந்தேன்” என்று புலம்புவதன் நவீன விரிவாக்கமாகவே இக்கதை போக்கு உள்ளது. புலம்பலின் வெளிப்பாடே கழிப்பறையில் சிக்கியவனின் பேச்சும் செயலும். ஆக இது நிச்சயம் காமக் கதை அன்று.
இப்படி காமத்தை இழிவானதாக கூறும் இக்கதையை காமக் கதை என்று (தவறுதலாக) குற்றஞ்சாட்டி பலரும் கடுமையாக தாக்குவதன் காரணம் என்ன என்று சிந்திக்கும் போது, அதன் விவரிப்பு மொழியும் கதை சொல்லும் பாங்குமே காரணம் என்று நாம் கண்டடைய முடியும். அதை தொட்டே வேறு பல சிக்கல்களும் பண்பாட்டு விழுமியங்களை உரசிப்பார்க்கும் தன்மையும் தெரிகிறது.
முதலாவதாக, கதையின் காட்சி விவரிப்புகள் மிக அதிகம். வாசகனின் கற்பனைக்கு வேலை வைக்காமல் படைப்பாளனே வலிந்து சொல்லுதல் தேவை இல்லாதது. சொல்லியும் சொல்லாமலும் செல்லவேண்டிய பகுதிகள் இக்கதையில் நிறைய இருந்தும் படைப்பாளி எல்லாவற்றையும் தானே சொல்ல முன்வந்தது முதல் தவறு. வாசகனுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கும் போக்கே இக்கதையில் குழப்பம் ஏற்பட காரணமாகிறது. உதாரணமாக கதைநாயகனின் பாலியல் மனப்பிறழ்வு தன் தாயின் மேல் காமம் கொள்ளச் செய்கிறது என்பதை வாசகர்களால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். தாய்மை புனிதமானது என்பது இக்கதையில் எந்த இடத்திலும் மீறப்படவில்லை. தன் மகனின் கண்ணில் விழுந்த தூசை பரிவுடன் நோக்கும் தாயின் அன்பே முதன்மையாகிறது. ஆனால் அதை மறக்கடிக்கும் படியாக நீலப்படம் குறித்த தெளிவான விவரிப்பு கதைக்கு சற்றும் தேவை இல்லாதது. இதை வெறும் ஆபாச திணிப்பு என்றுதான் வாசகர்கள் உணர்வார்கள்.
கதையின் பல்வேறு இடங்களில் கதையின் முக்கியத்துவத்தை சிதைக்கும் காட்சி விவரிப்புகளால் இக்கதை நிரம்பி இருக்கிறது. காட்சி விவரிப்புகள் கூடும் போது தேவையற்ற பாலியல் காட்சிகள் தவிர்க்க முடியாமல் போயிருப்பதை உணரமுடிகிறது.
இறுதியாக, கதையின் முடிவும் கதை போக்கை சிதைத்து விடுகிறது. சிறு வயது முதல் பல்வேறு காம அவலங்களில் கழித்திருந்த ஒருவன் தன் இறுதி நாளில் (தன் செயலால்) மனம் வருந்தி அரற்றுவதாகவே கதையை தயாஜி வடிவமைத்து இருக்கிறார். அந்த அரற்றலின் உச்சம்தான் தன் இஷ்ட தெய்வம் காளியிடம் முறையிடுதல். காளியை தன் காதலியாக கதைநாயகன் நோக்குவது இந்து ஞான மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல. கடவுளை குருவாக, தந்தையாக, தாயாக, நண்பனாக, காதலி அல்லது காதலனாக நேசிக்கும் மாண்பை இந்து ஞானம் போதிக்கிறது. ஆகவே இக்கதைநாயகனின் போக்கு விந்தையானது அல்ல. ஆனால் காளியை காதலியாக கண்டவன் அவளுடன் ஐக்கியமாதலை முதன்மையாக கொள்வதை (சரணாகதி நிலையை) படைப்பாளரால் தெளிவாக கொடுக்க முடியவில்லை என்பதே என் கருத்து. மேலும் ஆரம்பம் முதல் தன் காமத்தை வெறுத்து இம்மை வாழ்வில் இருந்து விடுதலை வேண்டும் என்று புலம்பியவன் இறுதியில் காளியிடம் ‘காதலை உயர்த்திப்பிடி, காமத்தை விதைப்போம்’ என்று கூறுவது மிகப்பெரிய முரண். இந்த முரணே தெய்வ அவமதிப்பாக தோற்றம் தருகிறது. மொத்த கதையும் இவ்விடத்தில் தான் திசை மாறிப் போவதாக நான் கருதுகிறேன்.
ஆகவே தயாஜியின் க.ப.வ வை சாடுவதும் பாராட்டுவதும் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்ட நிலை. ஆனால் சாடுவதாக இருந்தாலும் பாராட்டுவதாக இருந்தாலும் – மற்றவர்கள் சொல்கிறார்களே என்று செயல்படாமல் – இக்கதையின் உட்கிடங்கை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். சரியான புரிதலின் வழி மட்டுமே சரியான தீர்ப்பை உங்களால் வழங்க முடியும். நன்றி.
 
அ.பாண்டியன்
 
நன்றி வல்லினம்

தயாஜியின் சிறுகதை நிற்கும் – கருணாகரன்.

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து கருணாகரன் எழுதிய கட்டுரை)

தயாஜியின் சிறுகதை – “கழிவழியும் பழிவாங்கும் வழிமுறையும்“ ஒரு நல்ல இலக்கியப்பிரதி. எந்த இலக்கியப்பிரதியும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதுண்டு. அதன் கலைப்பெறுமானம், கருத்தியல் என்ற இரண்டு பிரதான விசயங்களில் பெரும்பாலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் “ கருத்தியல்ரீதியாக விவாதிக்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது. இதுகூட ஒன்றும் புதியதல்ல. இலக்கியத்திலும் மனித வரலாற்றிலும் இத்தகைய வினைகளுக்கெதிரான மறுப்புகள் இருந்து வந்துள்ளன.
 
இன்று பன்முக வாசிப்பும் அறிவு விசாலிப்பும் தாராளமாக உருவாகிய பின்னும் பினோக்கிய பார்வைகள் இருப்பது கொஞ்சம் நெருடலாதே தவிர, புதியதல்ல. தமிழ்ச்சமூகத்தின் மனதில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் புனிதப்பிம்பங்களின் மீது தயாஜின் கதை உடைப்புகளை நிகழ்த்துகிறது. புனித பிம்பங்களை தமது நம்பிக்கைகளாகக் கொண்டிருப்போருக்கு இது பேரதிர்ச்சியை அளிக்கிறது. ஆனால், இலக்கியத்திலும் சமூகத்திலும் புனிதங்களுக்கெதிரான நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. கடவுளைக் காமுறுவதிலிருந்து இந்தக் கட்டுடைப்பைக் காணலாம்.
 
எம்.வி. வெங்கட்ராம் தன்னுடைய சிறுகதை ஒன்றில் தாய் மிகக் கொடுமைக்காரியாகச் சித்திரிக்கிறார். இந்தக் கதை வந்த காலத்தில் இப்பொழுது தயாஜி எதிர்கொள்ளும் நெருக்கடியைப்போல, கண்டனங்களைப் போல எம்.வி. வியும் நெருக்கடிகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதுதான் கடந்த சில ஆண்டுகளுக்க முன்னர் ஓவியர் ஹசேய்னுக்கு நடந்தது. தஸ்லிமா நஸ்ரீன். சல்மான் ருஷ்டி போன்றவர்களுக்கு நிகழ்ந்ததும் இதுதான். அந்தந்தச் சமூகம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் அது கட்டமைத்திருக்கும் புனிதத்துக்கும் எதிராக கலைப்பைச் செய்யும்போதும் கேள்விகளை உருவாக்கும்போதும் அவற்றின் நம்பிக்கையாளர்கள் கொதிப்புறுகிறார்கள். நம் சமூகத்தில் கடவுளும் மத நம்பிக்கைகளும் மட்டுமல்ல, ஆசிரியர்கள், மதகுருக்கள், தாய், தந்தையர் போன்றவர்களும் மதிப்புக்குரியவர்களே. சமூக யதார்த்தத்தில் எத்தனை ஆசிரியர்கள் மன்னிக்கவே முடியாத தவறுகளைச் செய்கிறார்கள். தங்களில் மதிப்பும் பற்றும் வைத்திருக்கும் மாணவர்களையே பாலியல் ரீதியாக மீறல் செய்திருக்கும் சம்பவங்கள் பலதுண்டு. ஒருவருக்குத் தாயாக இருப்பவர் இன்னொருவரின் வைப்பாட்டியாக இருப்பதுண்டு. நமக்கு அக்காவாக இருப்பவள், இன்னொருத்தரால் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவளாக இருக்கிறாள். தந்தையரால் வன்புணர்வுக்கும் அறியாப்பருவப்புணர்வுக்கும் உள்ளாக்கப்படும் சிறுமிகளின் கதைகள் இன்னும் நீள்கின்றன.
 
இப்படி புனிதப் பாத்திரங்களின் நிஜச் சீரழிவுகள் ஏராளமுண்டு. எனவே எது புனிதம்? என்ற யதார்த்தமான கேள்வியே எப்பொழுதும் ஒவ்வொன்றின் மீதும் எழுப்பப்படுகிறது. எல்லாப் புனிதங்களையும் உருவாக்கிய மனிதர்களாலேயே புனித மீறல்களும் நிகழ்கின்றன. இவற்றைத் தன்பார்வையில் தயாஜி முன்வைக்கிறார். ஆனால், என்னதான் யதார்த்த நிலைமைகள் இருந்தாலும் இந்த மாதிரியான புனிதக்கட்டுடைப்புகளை நிகழ்த்துவது எளியகாரியமில்லை. அதுதான் இங்கே தயாஜிக்கும் அவருடைய கதைக்கும் வல்லினத்திற்கும் நடந்திருக்கிறது. ஆனால், அதை மீறி தயாஜியின் கதை நிற்கும். இந்தக் கதை கலாச்சார ரீதியிலும் உளவியல் ரீதியிலும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்றாக உள்ளது – அது சுட்ட முனையும் வேறுபட்டதன்மைகைளினூடாக.
 
 
-கருணாகரன்
 
நன்றி வல்லினம்

புனிதத்தை உடைக்கலாமா..?

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை குறித்து ம.நவீன் எழுதிய கட்டுரை)
 
புனிதத்தை உடைக்கலாமா?
 
 
கருத்து ரீதியாக வாதிடுதல் என்பது என்ன? உங்களிடம் ஒரு கருத்து உண்டு. அதை முன்வைக்கிறீர்கள். அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் அந்தக் கருத்து நீங்கள் வாதிடும் சூழலில் இதற்கு முன் அக்கருத்து எவ்வாறான விவாதங்களுக்கு உட்பட்டுள்ளது எனும் முன்னறிவு நமக்கு அவசியமாகிறது. அந்த நகர்வின் சாதக பாதகத்தில் நின்றே நாம் அறிவு ரீதியான விவாதத்தைத் தொடர வேண்டியுள்ளது. அடுத்து, உங்கள் கருத்துக்கு வலு சேர்க்க எவ்வாறான ஆராய்ச்சி, உளவியல், அறிவியல், வரலாறு சார்ந்த ஆதாரங்களை இணைக்கப்போகிறீர்கள் என்பது முக்கியமாகிறது. அவ்வாறு எதுவும் இல்லாமல் அது உங்கள் கருத்தாக மட்டுமே இருக்கும் போது அதை நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். ஆனால் அறிவு தளத்தில் அதற்கான இடம் இல்லை. அதை பொருட்படுத்தி விவாதிக்கவும் வேண்டியதில்லை.
 
தயாஜியின் சிறுகதையில் நடந்ததும் இதுதான். ஆளாளுக்கு கருத்து கூறுகிறேன் என தத்தம் முக நூலில் தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்தனர். கொஞ்சம் கூட இலக்கியப் புரிதல் இல்லாமல் விமர்சனம் செய்கிறேன் என மொண்ணையான கருத்துகளை வெளியிட்டனர். இதனால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதிகபட்சம் ஒருவாரத்துக்குப் பிறகு அவையெல்லாம் வெறும் குப்பைகளாக மட்டுமே குவிந்திருக்கும். வருங்கால குப்பைகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும். அதனால் தொடக்கத்திலேயே நிராகரித்துவிட வேண்டியதுதான். இதில் பெரிய நகைச்சுவை, நேருக்கு நேர் நின்று வாதாட முடியாதவர்கள், வாதாடினால் அவர்களின் கல்வி / இலக்கியப் பின்புலம் அனைத்தும் நார் நாராகக் கிழித்து வீசி அறிவையே சந்தேகிக்கும் நிலைக்கு வர நேரிடும் என பயந்து ‘லைக்’ போடுவதும் கோழைத்தனமாக குத்தல் பேசுவதும் என தங்கள் போலி பிம்பத்தைத் தக்க வைத்துக்கொள்கின்றனர். பயந்தவர்களை நோகடிப்பது நமக்கு பழக்கம் இல்லை என்ற படியால் அவர்களை மன்னித்துவிடுவோம்.
 
தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதையில் என்னதான் சிக்கல் என முதலில் பார்ப்போம். கதையின் முதல் பகுதியும் இறுதி பகுதியும்தான் அதிக விமர்சனத்துக்கு!? உள்ளாகியுள்ளது. முதல் பகுதியில் ஒரு சிறுவன் (வயது குறிப்பிடப்படாததால் அவன் மொழி மூலம் சிறுவன் என எடுத்துக்கொள்ளலாம்) தன் தாயார் குளிப்பதைப் பார்க்க நினைக்கிறான். குளியலறையில் இருக்கும் தாயை கழிவறையில் இருந்தபடி நாற்காலி போட்டு எக்கிப்பார்க்க நினைக்கையில் அவன் கண்ணில் தூசு விழுந்துவிடுகிறான். கண்களைத் தேய்தபடி போய்விடுகிறான். வெளியே வந்த அம்மா, கண் சிவந்திருக்கும் மகனைக் கண்டு “என்னடா கண்ணு” எனக் கலங்குகிறாள். கண்களை அவ்வாறு தேய்க்கக்கூடாது என செல்லமாகத் திட்டி செல்கிறாள்.
 
ஒருவேளை இந்த இடத்தில் அந்தச் சிறுவன் தன் தாயின் காலில் விழுந்து “அம்மா… என்னை மன்னித்துவிடு” எனக் கதறியிருந்தால் அனைவருக்கும் கதைப் பிடித்திருக்கும். ஆனால் தயாஜின் கதையில் வரும் சிறுவன் அதைச் செய்யவில்லை. ஒரே நேரத்தில் தன்னை நிர்வாணமாகப் பார்க்க முயன்ற மகனின் காமத்தை அறியாத தாயின் அன்பையும், தப்பித்தப் பின் ஏற்படும் மகனின் பயத்தையும் தயாஜி காட்டியுள்ளார். கதையின் வடிவமைதியில் பல இடங்களில் எனக்கு விமர்சனம் இருந்தாலும் இந்த இடத்தில் தயாஜி சரியாகவே எழுதியுள்ளதாகத் தோன்றுகிறது.
இப்பகுதியைப் படித்தப் பலரும் இது சமுதாயத்தைக் கெடுக்கும் கதை என புலம்பினர். இதுவரை இல்லாத ஓர் விடயத்தை தயாஜி சொல்லிவிட்டது போல கோபப்பட்டனர். ஹீரோவாக ஒரு சந்தர்ப்பம் என ரஜினி வசனமெல்லாம் பேசினர். ஆனால் அறிவு தளத்தில் நின்று ஆராய யாருக்கும் பொறுமையோ தேடலோ இல்லாமல் இருபதுதான் வருத்தம்.
 
ஒடிபெல் சிக்கல் (Oedipal Complex)
பல்கலைக்கழகத்தில் ஓவியத்தை ஒரு பாடமாக பயிலுகையில் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) குறித்து அறிய நேர்ந்தது. படைப்பாளர்களுக்குச் சிக்மண்ட் பிராய்டின் ‘உளவியல்’ அணுகுமுறைகளின் தேவையை அறிந்தபோது ஓரளவு அவரைத் தேடி வாசித்தேன். தமிழில் ஒரு பேராசிரியரின் முதுகலைப் பட்டத்துக்காக எழுதிய ‘சிக்மண்ட் பிராய்ட் ‘ குறித்த ஆய்வு நூல் மட்டுமே கிடைத்தது. அதுவும் கல்வித்துறை ரீதியானது. ஆங்கிலத்தில் நிறைய கிடைக்கின்றன.
 
Wikipediaவில் ‘ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிக்மண்ட் பிராய்ட் முன்னிறுத்தும் கோட்பாடுகளில் ஒன்று Oedipal Complex. பிராட்டின் கோட்பாட்டின்படி, தனது தந்தையின் இடத்தில் தன்னை வைக்க விரும்பும் சிறுவன் தாயை உடல் மூலமாகவும் உடைமையாக்க விரும்புகிறான். தாயின் அன்புக்குப் போட்டியாக தந்தையைக் கருதுகிறான். உளவியல் – பாலினம் சார்ந்த வளர்ச்சி பிள்ளையின் மூன்று முதல் ஐந்து வயதுக்கு இடையே ஏற்படுகிறது. இந்தப் பருவம் பாலினம் சார்ந்த அடையாளம் உருவாதற்கான முக்கிய காலகட்டமாகத் திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் ஒடிபெல் சிக்கல் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. ஒடிபெல் சிக்கல் என்பது உள்மனதுக்குள் மறைந்திருக்கும் உணர்வுககளையும் எண்ணங்களையும் சார்ந்த உளப் பகுப்பாய்வுக் கோட்பாடு ஆகும் . உளவியல் துறையில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் இவரின் இந்தக் கூற்று பலருக்கும் அதிருப்தியைக் கொடுக்கலாம். ஆனால் பிராய்டின் இந்த ஆய்வை இன்று பலரும் ஒப்புக்கொண்டே உள்ளனர். அதை மையப்படுத்து ஏராளமான ஆய்வு நூல்களும் வந்த வண்ணம்தான் உள்ளன.
 
நாம் தாய் வழி சமூகம்
 
சரி இதே விடயத்தைக் கொஞ்சம் வரலாறு சார்ந்தும் பார்க்கலாம். நாம் தாய் வழி சமூகத்தினர் என்பது பலரும் அறிந்த விடயம். மனித நாகரீகம் தொடங்கிய காலத்தில் பெண்கள்தான் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். தங்கள் குழந்தைகளைப் பாதுக்காக்க பெண்களே வேட்டையாடுவதில் முதன்மை வகித்தனர். இதை தாய் வழி சமூகம் என்கின்றனர். தாய் வழி சமூகத்தில் பெண்ணே மையம். அவளுக்கு பல ஆண்கள் துணை இருப்பர். தொன்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளது மற்றுமொரு உதாரணம். இந்த வரலாற்று உண்மையை ஒரு புனைவின் அடிப்படையில் சொல்லிச்செல்லும் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை ராகுல் சாங்கிருத்யாயன் என்பவர் எழுதியுள்ளார். தமிழில் கண .முத்தையா மொழிப்பெயர்த்துள்ளார். அதில் தாய் வழி சமூகத்தின் இயக்கம் குறித்து ஒரு காட்சி வரும்.
ஒரு தாய் (தலைமை தாங்குபவள்) குழந்தையை ஈன்றெடுப்பாள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் . தான் ஈன்ற மகன்களின் வலுவான ஒருவனை தேர்ந்தெடுத்து அவனுடன் தாய் உறவு கொள்வாள். அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்கும். இது பல்வேறு நிலைகளில் தொடரும். பல்வேறு ஆய்வாளர்களாலும் முக்கியமாகக் கருதப்படும் இந்த நூலை ஆபாசக் குப்பை என தூக்கிப் போட்டுவிடலாமா? வரலாற்றில் ஒரு காலத்தில் இயல்பாக இருந்த விடயம் மற்றொரு சந்தர்ப்பத்தில் அபத்தமாகவும் அருவருப்பானதாகவும் ஆகிவிடுகிறது. இந்த உணர்வை ஏற்படுத்துவது எது? இது மனிதனின் ஆதி உணர்வா? இல்லை ! இது தந்தை வழி சமூகம் ஆனப்பிறகு ஏற்பட்ட பழக்கத்தில் விளைவு மட்டுமே. உறவுகளின் புனிதம் என்பது காலங்களுக்கு ஏற்ப மாறக்கூடியது.
 
உறவு முறைகள்
அவ்வளவு ஏன்? நமது தென்கிழக்காசியாவிலேயே உறவுகள் குறித்த மாற்று முறைமைகள் உள்ளனவே. தாய்லாந்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட சொத்துகளைப் பாதுகாக்க இரத்த உறவுள்ள சகோதரனுக்கும் சகோதரிக்கும் திருமணம் செய்துவைக்கும் முறை இருந்தது. நமது நாட்டில் மலாய்க்காரர்கள் சகோதர உறவு முறை கொண்டவர்களைத் திருமணம் செய்துக்கொள்ளவில்லையா? ஆக! காதல், காமம், திருமணம் என்பதெல்லாம் காலத்துக்கு ஏற்பவும் இனங்களுக்கு ஏற்பவும் பழக்கங்களுக்கு ஏற்பவும் மாறுபடுகிறது.
 
தமிழ் இலக்கியத்தில் தாய்மை
சரி, அப்படியென்ன தயாஜி அப்படியென்ன தமிழ் இலக்கியத்தில் இல்லாததைப் புதிதாகக் கூறிவிட்டார் என ஆராய்ந்தாலும் சொல்லும் அளவுக்கும் விடயம் புதிதில்லை. ஜெயகாந்தனின் ‘ரிஷிமூலம்’ எனும் பாலியல் சிக்கலை மையமாக வைத்த படைப்பு அக்காலத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது. தாய் மீதான பாலியல் சிக்கலை எழுதி 1966 வாக்கில் வெளிவந்த இந்நாவல் எதிர்ப்புகளைச் சந்தித்தது. தாய் மீதான பாலியல் எண்ணங்களால் ஒருவன் அலைக் கழிக்கப்படுகின்றான் என்பதை விளக்குகிறது இவ்வுளவியல் நாவல். அதே போல இன்று தமிழில் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷோபா சக்தியின் ‘ம்’ நாவலும் மகள் – அப்பாவுக்கிடையிலான காதலை, காமத்தைப் பேசுகிறது. மிக அண்மையில் அமைப்பியலில் மிக முன்னோடியாகவும் தமிழின் மிக முக்கிய விமர்சகராகவும் கருதப்படும் தமிழவன் நடத்தும் சிற்றிதழில் ஒரு சிறுகதை இவ்வாறு இருக்கும். தனது தாய் நடித்த நீலப்படத்தைத் தற்செயலாகப் பார்த்து ஓர் இளைஞனுக்கு ஏற்படும் வெறுப்பு பின்னர் காமமாக மாறும்.
முதலில் இது போன்ற சம்பவங்கள் இலக்கியப் பிரதிகள் வெளிவரக் காரணம் என்ன? அவை இந்தச் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முதல் காரணம். நமது நாட்டில்கூட விரும்பத்துடனோ வல்லுறவாகவோ இது போன்ற சம்பவங்கள் நடப்பது பதிவாகியுள்ளன. சில நீதிமன்றம் வரை சென்றுள்ளன. இலக்கியம் ஒரு சமூக நிகழ்வின் ஆழ்மனதைப் படம்பிடித்துக்காட்டுகிறது. மாறாக அது ஒரு தினசரி நாளிதழின் வேலையைச் செய்யவில்லை. தினசரிகள் பெரும்பாலான மக்கள் விரும்பும் தகவல்களை பிரசுரிக்கின்றன. இலக்கியம் யாரின் விருப்பம் பொருட்டும் இயங்குவதில்லை. தினசரிகளுக்கு எதை வெளியிட வேண்டும் / கூடாது என்ற விருப்பு வெறுப்புகள் உண்டு. இலக்கியத்துக்கு அது கிடையாது. இலக்கியத்தின் வேலை சமூகத்தை தூக்கி நிறுத்துவது என நம்பிக்கொண்டிருப்பவர்கள் உலக இலக்கியப் போக்கை கவனிக்கவில்லை எனப் பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை.
 
உளவியல் என்ன செய்கிறதோ அதையே இலக்கியம் தன் வழியில் செய்கிறது. பிராய்ட் சொல்லும் போது ஏற்றுக்கொள்ளும் உலகம் ஓர் இலக்கியவாதி அவ்வாய்வை தனது புனைவில் சுதந்திரம் வழி செய்யும் போது ஏற்பதில்லை என்பதே வருத்தம். ஜெயகாந்தன் தொடங்கி இன்றைய இளம் இலக்கியவாதிவரை பேச முயலும் உளவியலை ஓர் மலேசிய இளைஞன் பேசினால் குற்றமாகிவிடுகிறது.
 
புராணமும் இதிகாசமும்
 
இந்து மத புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் எல்லயற்ற மனித உறவுமுறைகள் பற்றி எக்கச்சக்கமாக எழுதப்பட்டுள்ளன. சொல்லப்போனால் மகாபாரத்தில் இல்லாத கருவோ, கற்பனையோ, கதையோ இல்லை என்றே சொல்லலாம். இன்றைக்குப் புதிய சிந்தனைகளாகவும் போக்குகளாகவும் கொள்ளப்படும் எல்லாமே பாரதக் கதைகளில் உள்ளன. ஆண் பெண்ணாவது, பெண் ஆணாவது, திருமணத்துக்கு முன்பே குழந்தை பெறுவது, பிற ஆண்கள் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்வது, பெண் – ஆண் இருபாலருமே பல தார மணம் புரிவது என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அதைவிட்டு நம் ஒழுக்க சீலர்கள் வருவதில்லை. மகாபாரதத்தை ஒழுக்கக் கேடான நூல் என எரிக்கவும் தயாராக இல்லை. மாறாக இந்து மதத்துக்கு ஒரு அவப்பெயரென்றால் கொதித்து எழுகிறார்கள். இது என்ன நியாயம்?
 
ரிக்வேதத்தில் அண்ணன் தங்கையரான யமன், யமி ஆகியோரைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையின் படி யமி தன் அண்ணன் யமனைத் தன்னுடன் வருமாறு அழைக்கின்றாள். இதற்கு மறுக்கும் யமன்மீது அவள் கோபம் கொள்கிறாள். .. அக்காலத்தில் தந்தை மகளை மணப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. வசிட்டர் தன் மகள் சத்ரூபை பருவமெய்திய போது அவளை மணந்தார். மனு தன் மகள் இளையை மணந்தார். ஜானு தன் மகள் ஜானவியை மணந்தார். சூரியன் தன் மகள் உஷையை மணந்தான். …. தஹா பிரசெத்னியும் அவனுடைய மகன் சோமனும் சோமனின் மகள் மரீஷையைக் கூடினர். … தஷன் தம் மகளைத் தனது தந்தை பிரமனுக்கு மணம் முடித்தான்….” (ரிக்வேதம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து)
 
உலக இலக்கியத்தில்
 
Haruki Murakami என்ற உலகப் பிரபலமான ஜப்பானிய எழுத்தாளர் Kafka on the Shore என்ற நாவலில் ஒரு சிறுவன் தனது தாயையும் சகோதரியையும் புணர்வது பற்றி எழுதியிருப்பார். அந்த நாவல் மில்லியன் கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டது. ஏராளமான விருதுகளை வென்றது. 2005ல் இந்நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நியூ யார்க் டைம்ஸிஸ் தலைசிறந்த 10 நூல்களில் ஒன்றாக இடம்பெற்றது. அப்படியானால், வாசித்தவர்கள் அனைவரும் ஒழுக்கக் கேடானவர்களா? விருது கொடுத்த அமைப்புகள் ஒழுங்கை நாசப்படுத்த நினைக்கின்றதா?
 
கடவுளும் காதலும்
 
புணர்ச்சியை வெளிப்படையாக காட்சிப்படுத்தும் சிற்பங்கள் கஜுராஹோ,கோனார்க் போன்ற இந்து கோயில்களில் காணக் கிடைக்கின்றன. அது மத்திய பிரதேசத்தில்தானே என நீங்கள் சொல்லலாம். ஆனால், இது மிக முக்கியச் சுற்றுலா தளமாகவும் இந்தியாவில் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. கடவுளை வணங்கச் செல்லும் கோயிலுக்கு வெளிப்புறம் இப்படிப் பல சிற்பங்கள் இருக்கும் போது அதைப் பார்க்கும் இளைஞர்களின் மனம் கெட்டுப்போகாதா என ஏன் யாரும் கேட்பதில்லை. சிற்பத்தில் இருந்தால் அது கலை , எழுத்தில் இருந்தால் அது கொலை என்கிறார்கள்.
நமக்குத் தெரிந்து எல்லா கோயில்களிலும் பல பெண் சிலைகள் அரை நிர்வாணத்தோடுதான் நிர்க்கின்றன. ஏன் அவை ஆபாசம் என்று நாம் யாருமே போர் கொடி பிடிக்கவில்லை. மாறாக மதத்தைப் பற்றி பேசினால் கோபம் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறது. உடனே அவற்றுக்கு அறிவியல் காரணங்கள் கூற தொடங்கிவிடுகிறோம்.
 
இப்படி நம் முன் கோயில்களில் இருக்கும் அரை நிர்வாணச் சிலைகளைப் பார்த்து குழந்தைகளுக்கு ஒரு திகைப்பு வராது என நம்மால் உறுதி கூற முடியுமா? வீட்டில் எதை மறைக்கிறோமோ அதை கோயில்களில் தடையில்லாமல் காட்டுவது நமக்கே முரண்நகையாக இல்லையா? அப்படியானால் நாம் எதை மறைத்து எதை காட்ட நினைக்கிறோம். ஏன் இந்த நடிப்பு? யாருக்காக இந்த வேடம் ?
கடவுள் சிற்பங்களுக்கு நமது கோயில் ஆடை அணிவிக்காமல் கலை என வைத்திருப்பது சரியென்றால், அதைக் கண்டு முதிர்ச்சியடையாத மனம் காமம் கொள்வதும் சரிதான். அவளைக் காதலிப்பதும் சரிதான். ஒருவேளை தயாஜி தன் கதையில் அம்மனுக்குச் சாற்றிய சேலையை நீக்கிப்பார்த்து காமம் கொண்டான் எனச் சொல்லியிருந்தால் மதவாதிகள் கோபப்படலாம். இங்கு அப்படி ஒன்றுமே இல்லை. திறந்த மார்புடன் இருக்கும் காளியின் கவர்ச்சி முதிரா மனம் கொண்ட ஒரு இளைஞனை காமத்தில் குழப்புகிறது.
 
அதோடு, கடவுளின் உடலை வர்ணிப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? அப்படியானால் அந்தக் குற்றத்தை சௌந்தர லஹரியில் ஆதிசங்கரரும் செய்துள்ளார்.
‘மேகலை பொங்க மதாசல கும்பமெ னாமுலை கண்டு இடை சோரா ‘ என்கிறார்.
பொருள் : யானையின் மத்தகத்தைப் போன்ற பெரிய தனங்களைக் (மார்பு)கொண்டு சற்று வணங்கிய வடிவுடையவள்; மெலிந்த இடையையுடையவள்.
காம சக்தியை வசமாக்கிக்கொள்ள ஆதி சங்கரர் அம்மையை வணங்கச் சொல்லும் பாடலெல்லாம் உண்டு. அதற்கான மந்திரங்களும் உண்டு. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். கடவுளின் மேல் காமம் கொள்ளுதல் தமிழ் இலக்கியத்திலும் புதிதில்லை. ஆண்டாளின் பாடல்களை எடுத்துக்கொள்ளலாம்.
அதாவது ஆண்டால் கண்ணனைப் பார்த்து பாடும் பாடல்கள்.
 
‘அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்…’ என்கிறாள். பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள் ஆண்டாள். அப்படியானால், இது ஆபாசம் இல்லையா? மேலும் ஒரு வரியைப் பார்க்கலாம்,
‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
ஆண்டாளுக்குதான் என்ன ஆசை . மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்!
உடனே நம்ம ஒழுக்க வாதிகள்..”அட..அவுய்ங்க பக்தியால தடவ சொல்றாங்கப்பா” என இழுக்கலாம். அப்படியானால் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
‘பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்…
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ’
 
கடவுளுடன் உடல் உறவு கொள்ள வேண்டுமாம் ஆண்டாளுக்கு. அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று ஆண்டாள் கேட்கிறாள்.
 
தயாஜி, இந்த அளவுக்கெல்லாம் போகவில்லை. பெண் கவி ஆண் கடவுளைப் புணர நினைப்பதை எட்டாம் நூற்றாண்டிலிருந்து பொறுத்துக்கொள்ளும் நாம், ஒரு நவீன எழுத்தாளன் காளியின் மீது காமம் கொள்வதைப் பொறுத்துக்கொள்ள மறுக்கிறோம். துடிக்கிறோம். இது நல்ல நடிப்பு இல்லையா? இப்படித்தானே தான் அறச்சீற்றம் உள்ளவன் என காட்டிக்கொள்ள வசதியாகும். ஆக, ஏற்கனவே உள்ள ஆபசங்களைப் பொறுத்துக்கொண்டு தொழுகிறோம். ஏற்கனவே உள்ள ஆபசங்களை பக்தி என பாடுகிறோம். ஆனால் ஒரு இளம் எழுத்தாளன் எழுதினால் கலாச்சாரம் கெட்டுவிட்டது இல்லையா?
முடிவாக…
 
நான் தயாஜி எழுதியது மலேசியாவில் முக்கியமாக சிறுகதை எனச் சொல்ல வரவில்லை தோழர். கதையில் சில பலவீனங்கள் உண்டு. சில இடங்களில் வடிவமைதி தேவைப்படுகிறது. சில இடங்களில் நாசுக்கான சொல்முறை அவசியமாகிறது. ஆனால், இங்கு அதுவல்ல பிரச்னை. தயாஜி புனைவின் மூலம் ஆராய அல்லது உடைத்துப் பார்க்க நினைக்கும் சில சமூக புனிதங்களைத் தொடாதே எனக்கூற யாருக்கும் உரிமையில்லை. அது குறித்து பேசினால் நான் விவாதிக்கவே செய்வேன். காரணம் அது காலாகாலமாக உலகம் முழுதும் உள்ள பல படைப்பாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டே வந்துள்ளது. ஏன் அது குறித்தெல்லாம் நம் ஒழுக்கவாதிகள் வாய் திறக்கவில்லை. காரணம் அவர்கள் எதையுமே படிப்பதில்லை. இதை மட்டுமல்ல எதையுமே வாசிப்பதில்லை. ஆனால் பெரிய ஆராய்ச்சி மன்னர்கள் போல பிதற்றுவார்கள். ஒரு அடிப்படையான கேள்விக்கு ஓடி ஒளிவார்கள். அப்புறம் வேறு எவனாவது தைரியசாலி இருக்கிறானா எனப்பார்த்து, அவன் பின் நின்று நாக்கை நீட்டுவார்கள். இன்னும் நான் குறிப்பிட ஏராளமாக இலக்கியங்களும் ஆய்வுகளும் தமிழில் உண்டு.
 
மலேசியாவில் இது போன்ற சில முயற்சிகள் தேவை என்றே நான் நினைக்கிறேன். அது முதிராமல் இருந்தாலும் ஒரு தொடக்கத்துக்காகவாவது இது போன்ற இலக்கிய முயற்சிகள் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.
 
- ம.நவீன்
 
நன்றி வல்லினம்

ஜனவரி 01, 2014

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்

( இக்கதை பொது வாசிப்பிற்கு ஏற்றதல்ல; சில உண்மை சம்பவங்களையும் சிலரின் அனுவங்களையும் இணைத்து உளவியல் அடிப்படையில்  எழுதப்பட்ட கதை. 
மலேசியாவில் மிகுந்த சர்ச்சையினை கிளப்பிய கதை என்றும் சொல்லலாம். இக்கதை குறித்து எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரையிகளையும் இணைப்பதில் மகிழ்ச்சி.  http://vallinam.com.my/version2/?m=201401  இங்கும் இக்கதத குறித்த கட்டுரைகளை வாசிக்கலாம். நன்றி வல்லினம்.
வாசித்தவர்களும் தத்தம் கருத்துகளை பகிரலாம் அல்லது tayag17@gmail.com   -க்கு மின்னஞ்சல் அனுப்பலாம், )


கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்

    ஜீன்ஸிலேயே சிறுநீர் கழித்திருக்கிறேன். அதன் ஈரம்தான் என்னை எழுப்பியிருக்கவேண்டும். இல்லை நான் எழுந்திருக்கவில்லை. முனகுகிறேன். என்னால் அசைய முடியவில்லை. கண்களைக் கட்டியிருக்கிறார்கள். கை கால்களும் கட்டியிருக்கிறது. என்ன இது இப்படி ஒரு வாடை. குமட்டுகிறது. இது நிச்சயம் கழிவறையாகத்தான் இருக்கவேண்டும். என் முகமும் கழிவறைக்குழியில் தொங்கிக்கொண்டிருக்க வேண்டும். என் குமட்டலின் போது வெளிவந்த காற்று  துர்வாடையாக  என் முகத்தில் அறைந்தது. அவ்வளவு அருகில் என் முக இருக்கிறது.

என்ன நடந்தது. யார் இப்படி செய்தார்கள். கடைசியாக நான் எங்கிருந்தேன். எதற்காக நான். இது உண்மையிலேயே கழிவறைதானா..?

பேச்சு சத்தம் கேட்கிறது. இவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள் புரியவில்லையே. சிரிக்கிறார்கள். என்னைத்தான் பார்த்து பேசுகிறார்கள். அப்படித்தான் நினைக்கிறேன். இவர்கள் மனிதர்கள்தானா..? நான் உதவிக்கு  சத்தமிட வேண்டும். ம்...ம்...ம்..ம்ம்ம். வாய்க்கு நடுவில் துணி கட்டப்பட்டிருக்கிறது. முனக முடிகிறதே தவிர கதற முடியவில்லை.

புரிந்துவிட்டது. இது கழிவறையென்றால், நான்  பழிவாங்கப்படுகிறேன். ஆமாம். இது பழிவாங்கள்தான். அதற்கான சரியான காரணம் என்னவென்று நான் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த பழிவாங்களில் இருந்து நான் வெளிவர முடியும். நான் தப்பிக்கவேண்டும்.

யோசிக்கவேண்டும். எதற்காக இந்த பழிவாங்கள்.

 அம்மா முதலில் நான் உன்னிடம்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். என்னை மன்னித்துவிடு.  நாள் நினைவில்லாத அன்று நீயும் நானும் மட்டும்தான் வீட்டில் இருந்தோம். மழையாக இருந்தது. என்னால் டி.வி பார்க்க முடியவில்லை. ஹாலில் தனியே திறக்கப்படாத டி.வியை பார்த்துக் கொண்டிருந்தேன். நீ குளிக்கச்சென்றாய். அந்த டி.வியின் கறுப்பு திரையில் முதல் நாள் பார்த்திருந்த ப்ளூ பிலிம் எனக்கு தெரியத்தொடங்கியது.

கண்ணாடியணிந்திருந்த பெண் ஒருத்தி, அவளது வாயில் லோலிபப்பை வைத்துக் கொண்டு நடந்து வந்துக் கொண்டிருக்கிறாள். அவளை பின்னால் இருந்து பார்க்கிறேன். ரோஸ் நிற உள்ளாடையை அணிந்திருக்கிறார். அந்த உள்ளாடை  ; கயிராடையாக இருந்தது. இடது பக்கமும் வலது பக்கம் ரிப்பன் போல கட்டப்பட்டிருக்கிறது. எனக்கு தெரிந்திருந்தது; வலது கையால் வலது புற ரிப்பனையும், இடது கையால் இடது புற ரிப்பனையும் நொடிப்பொழுதில் இழுத்து அவிழ்க்கலாம்.

காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்கிறது. பிட்டத்தை அப்படியும் இப்படியும் அசைத்தவாறு அவள் கதவுக்கு செல்கிறாள். கதவை திறக்கிறாள். கோட்டு சூட்டு அணிந்த ஒருவன் அவளுக்கு பூங்கொத்தை கொடுக்கிறான். அவள் அவனை உள்ளே இழுத்து இறுக்கி அணைக்கிறாள். எப்படியோ கதவு சாத்தப்படுகிறது.

அவள் அவனிடம் என்னமோ சொல்கிறாள். அவன் சில நிமிடம் அப்படியே ஸ்தம்பித்து எதையோ யோசிக்கிறான். பின், என்னை திரும்பிப் பார்க்கிறான். எழுகிறான் . நேரே எழுந்து வந்து என்னை நோக்கி கையசைக்கிறான். டி.வி திரை மீண்டும் கறுப்பாகிப்போனது.

அம்மா அப்போதுதான் குளிக்கும் அறையில் இருந்து சத்தம் எனக்கு கேட்டது. என் சிலுவாருக்குள் ஒன்று பலவந்தமாக  என்னையும் எழுந்து நிற்க வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக குளியலறைக்கு வந்துக் கொண்டிருந்தேன். அம்மா நீ குளிக்கிறாய். அந்த சத்தம் இப்போது நின்றுவிட்டது. நானும் நின்றுவிட்டேன். உன்னிப்பாக கேட்டேன். இப்போது நீ மீண்டும் குளிக்கிறாய். கொஞ்ச நேரத்தில் நீ வந்துவிடுவாய் என தெரியும். இப்போது கழிவறையில் இருக்கிறேன். கழிவறையில் ஒரு நாற்காலியை வைத்து அதன் மேல் நின்று இன்னும் எக்கினால் குளியல் அறையை பார்க்கலாம். நாற்காலியை சத்தமில்லாமல் எடுத்து வைத்துவிட்டேன். அப்பாவுக்கு வேலை முடிய தாமதமாகும்.

 நாற்காலியின் மேல் நின்று, சுவரை லாவகமாக பிடித்துக் கொண்டேன். தண்ணீர் சத்தம் வேகமாக கேட்கிறது. இப்போதுதுதான் நான் எக்கி உன்னை பார்க்க வேண்டும். உன்னால் என்னை கவனிக்க முடியாது. எக்கினேன்.

 கழிவறை சுவரில் இருந்து தூசி கண்ணில் விழுந்தது. கீழே இறங்கிவிட்டேன். கண்களை திறக்க முடியவில்லை. கைகளால் கண்களை தேய்துக் கொண்டே நாற்காலியை சத்தமில்லாம் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன்.

 அம்மா நீ வருவதற்குள் பழையபடி ஹாலில் போய் அமர்ந்து கொண்டேன். முழங்கால் தெரியும் படி நீ கைலி கட்டி நடந்துவந்து கொண்டிருந்தாய். என்ன நினைத்தாயோ தெரியவில்லை. நேரே என் அருகில் வந்தாய். என் கண்களை கவனித்தாய். என்னடா கண்ணு இப்படி சிவந்து போயிருக்கு என்று நீ கேட்டது எனக்கு பீதியை கொடுத்தது.  கழிவறை உனக்கு ஏதும் சொல்லிவிட்டதா..?

ஒன்னுமில்ல, அரிச்சது, அதான் தேய்ச்சேன் என்றேன். அதுக்குன்னு இப்படியா தேய்க்கிறது என திட்டிக் கொண்டே நீ திரும்பினாய். நேத்துல இருந்து ஒரு மாதிரிதான் இருக்க என்று நடந்து கொண்டே நீ சொன்னாய். நிச்சயம் கழிவறைதான் இதனை உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும் எனப்பட்டது எனக்கு.

அம்மா என்னை மன்னித்துவிடு. என்னை கழிவறையிடம் இருந்து காப்பாற்றேன். எனக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. ஏதேதோ செய்கிறது எனக்கு.

இல்லை இது அம்மாவாக இல்லாவிட்டால்.. வேறு யார்.. ஆமாம் குமார் இருக்கிறான்.  இது அவன் வேலையாக இருக்குமோ..? குமார் வாயேன்.

 நீதான் கழிவறை மூலமாக என்னை பலிவாங்குகிறாய். எனக்கு தெரிந்துவிட்டது. சீக்கிரம் வந்து என்னைக் கூட்டிட்டு போ.. இல்லையென்றால் அந்த வீடியோ காட்சியை எல்லோரும் அனுப்பிவிடுவேன்.

 உனக்கு அந்த யோசனையை கொடுத்தது நான் தான். அது உனக்கான யோசனை அல்ல எனக்கான யோசனை. நீயும் ரீத்தாவும் காதலிக்கிறீர்கள்தான் ஆனால், நீங்கள் செய்த கருமத்தையெல்லாம் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமே. அதனால்தான் அப்படி செய்தேன். எனக்கும் ஆசை இருக்காதா சொல்லு குமார். எத்தனை ப்ளு பிலிம்ப்களை நாம் ஒன்றாக பார்த்திருப்போம். எத்தனை தோழிகளின் உடல்களை வர்ணித்திருப்போம். எத்தனை முறை உன் வீட்டு கழிவறையில் ஆளுக்கு ஒரு கையால் சுய இன்பம் செய்திருப்போம். ஆனால் காதல் என்று வந்ததும் காமத்திற்கு என்னைக் கூட்டுச் சேர்க்காதது உன் தவறுதான். நான் உன்னை மன்னித்துவிடுகிறேன். சீக்கிரம் வந்து என்னை அழைத்துப்போ. ப்ளூ பிளிம்களில் பார்த்ததையெல்லாம் ஒரு முறையாவது நேரடியாக பார்க்க தோன்றியது எனக்கு. பேசிப்பேசி உன்னை சம்மதிக்க வைக்க எனக்கு அதிக செலவானது ஐம்பது வெள்ளிதான். ‘கொண்டோம்’ உனது வழக்கமான செலவு என்பதால், அடுத்த நாளுக்கான பீருக்கும் அதனை தொடர்ந்து இரண்டு நாளுக்கான சிகிரெட்டுக்கும் நான் பொறுப்பு எடுத்திருந்தேன்.

ரீத்தாவை நீ அழைத்திருந்தாய். உன் வீட்டிலும் அவள் வீட்டிலும் ஆட்கள் வர மதியமாகும் என இருவரும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தீர்கள்.

ரீத்தா வந்தாள். நீயும் அவளும் தனியே வீட்டில் இருந்தீர்கள். நாம் திட்டமிட்டபடி உன் வீட்டு கழிவறையில் நான் காத்திருந்தேன். வழக்கம் போலவே ரீத்தாவிடம் நீ பேசிப் பேசி மூட் வந்ததும் அவளை படுக்கைக்கு அழைத்து போவாய். அப்போது நீ ஏதாவது பாடல் பாடுவாய். அதுதான் நான் தயாராகும் நேரம்.

நீ பாடினாய். நான் தயாரானேன். 

ரீத்தாவிப் முனகல் சத்தம் கழிவறைவரை கேட்டது. இப்போது நான் லாவகமாக கழிவறை கதவை திறந்து மெல்ல நடந்து நீங்கள் இருவரும் இருக்கும் அறைக்கு வந்தேன். வாசலை நோக்கி அவளின் உச்சந்தலை இருக்கிறது. அவள் மேல் நீ படுந்திருக்கிறாய். உன் கவனம் முழுக்க அவள் மீதே இருக்கும் படிதான் இருக்க வேண்டும். கொஞ்சமேகூட நீ தலை நிமிர்ந்து வாசலை பார்ப்பதை ரீத்தா கவனித்தால் சந்தேகம் கூட ஏற்படலாம் அவளுக்கு. எல்லாமே நாம் திட்டமிட்டது படிதான் நடந்தது. ஆனால், குமார் நான் திட்டமிட்டபடியும் ஒன்றை நடத்தினேன். எனது கைபேசியில் உங்கள் இருவரையும் மறைந்திருந்து ரசித்தவாறு பதிவு செய்தேன். இருவரும் நிர்வாணமாக ஒருவரை ஒருவர் இயக்கியும் ஒருவரால் ஒருவர் இயங்கியும் இருக்கிறீர்கள். ஆடைகள் அற்ற ரீத்தா என்னையும் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள்.

எனக்கும் இது போன்ற காதலி தேவை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இருந்தும் அதற்கு முன்பாகவே அவளை கைபேசியில் பதிவு செய்ய முடிவெடுதிருந்தேன். நிறைய நேரம் என் வீட்டிலும் ஆட்கள் இல்லாத பொழுதுகள் உள்ளன.  ‘கொண்டோம்’ வாங்கும் கடையில் தமிழர்கள் இருப்பதில்லை. அந்த இந்தோனிசியாக்காரனுக்கு என்னையும் தெரியாது என் பொருட்டு யாரையும் தெரியாது. ரீத்தாவை வீடியோ எடுத்து உனக்கு தெரியாமல் அவளை அணுகலாம். அவளை என் வீட்டுக்கு வர வைக்கலாம். நீ என்ன குமார் செய்கிறாய். அவளை இதைவிட இன்னமும் கூட அனுபவிக்கலாம். அப்பறம் அவளுக்கு குமார் தேவையில்லை. நான் போதும். அவளின் கறுத்த மேனியில் சாம்பல் நிற அங்கங்களை இதைவிட இன்னும் ஈரமாக்கலாம்.

எனக்கும் ஒரு காதலி கிடைக்கும் வரை ரீத்தாவை பயன்படுத்தலாம்.

பத்து நிமிடம் வரை கூட உன்னால் நீடிக்க முடியவில்லை.  என்ன ஆண் நீ. சுயஇன்பத்தின் போது என்னை தோற்கடித்தவனா நீ. நான் சந்தேகிக்கிறேன்.

 இருவரும் மூச்சிரைக்க ஒருவர் மீது ஒருவர் இன்னமும் படுத்திருக்கிறீர்கள். இது நான் புறப்படும் நேரம். கைபேசியில் உங்கள் வீடியோவை  ‘சேவ்’ செய்தவாரு மீண்டும் கழிவறைக்கு ஒழியச்சென்றேன்.

எப்போதும் உங்கள் உறவுக்கு பிறகு அவள் குளியல் அறைக்குத்தான் செல்வாள் இன்று மட்டும் என்ன ஆனதோ தெரியவில்லை. கழிவறைக்கு வருகிறாள். நீ அவளை தடுத்திருக்கவேண்டும். தவறவிட்டாய். அது உன் தவறுதான்.

  அல்லது,

 நிச்சயம் இது உங்கள் வீட்டு கழிவறையின் சூழ்ச்சியாகத்தான் இருக்கும். கழிவறைதான் அவளை சூட்சுமமாக அழைத்திருக்கிறது. இல்லையென்றால் நான் பதிவு செய்த வீடியோவை மீண்டும் விளையாடவிட்டு பார்க்கும் நேரம் அவள் கழிவறை கதவுக்கு அருகில் வந்திருக்க வாய்ப்பே இல்லை. கழிவறையின் கதவை அவள் திறக்கிறாள்; உங்கள் வீடியோவில் உங்கள் முனகல் கேட்கிறது. ரீத்தாதான் ஆக்ரோஷமாக சத்தமிட்டாள்.

 என்னைப் பார்த்தவள் கத்தியதில்; பயந்து கைபேசியை கீழே போட்டுவிட்டேன். நீயும் நிர்வாணமாய் வந்து நிற்கிறாய். நீங்கள் இருவரும் நிர்வாணமாய் வந்தும் நான்தான் அப்போது கூனிக்குறுகிப்போனேன்.

குமார் நீயெல்லாம் ஒரு மனுஷனா..ச்சே.. உன்னையா நான் காதலிச்சேன்.. ச்சீ... என்று கூறியவள் உன்னை தள்ளிவிட்டு படுக்கையறைக்கு சென்றாள். நீயும் நானும் செய்வதறியாது நிற்கிறோம். கொஞ்ச நேரத்தில் அவள் ஆடையுடன் வெளியேறியிருக்கிறாள்.

நீதான் குமார், அந்த சம்பவத்தை மனதில் வைத்து இப்படி கழிவறையில் என்னை பழிவாங்குகிறாய். அந்த வீடியோவை பரப்பியது நான் இல்லை குமார் நம்பு. உடைந்த கைபேசியை கடையில் சரி செய்ய கொடுத்தேன். அந்த கடைக்காரன்தான் உங்கள் வீடியோவை பரப்பியிருக்கின்றான். அதனால்தான் ரீத்தா காணாமல் போனாள். உன் காதல் தேவ காதல் என்றால் நீ இந்நேரம் அவளை தேடி கண்டுப்பிடித்திருக்க வேண்டும். இல்லை, நீயும் எங்கேயாவது ஓடியிருக்க வேண்டும். இப்படி நீ என்னை பழிவாங்குவது முறையில்லை குமார். சீக்கிரம் வா. என்னை கூட்டிக்கிட்டு போ. ஒரு வாரத்திற்கு உனக்கு பீர் செலவும் சிகிரெட்டு செலவும் என் பொறுப்பு. வா குமார். இந்த வாடை எனக்கு குமட்டுகிறது.

 என் முகம் எதன் மீதோ உரசுகிறது. இது நிச்சயம் மலமாகத்தான் இருக்கும். காய்ந்த மலம். கழிவறையில் இதைகூடவா கழுவாமல் என்னை பழிவாங்குவாய் குமார்.

 ஒருவேளை இது மோகன் சாரின் வேலையோ.

 பள்ளிக்கழிவறையில் அவரை அசிங்கமாக வரைந்தவன் நான் தானே. பல ஆண்டுகளுக்கு முன்பு செய்தது இப்போது அவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. எவனோ ஒருவன், மோகன் சாருக்கு இதனை சொல்லியிருக்க வேண்டும். அவர்தான் இந்த கழிவறையில் என்னை பழிவாங்குகிறார். யார் சொல்லியிருக்க வேண்டும்.

ஆறுமுகம்;

இந்த மூஞ்சிக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை. ஆனாலும் சந்தேகிக்கப்பட வேண்டியவன்தான் இவன்.  கட்டிலில் இவனும் நானும்  விளையாடும் போது விதையை அழுத்தமாக நசுக்கிவிட்டதால் , ஓங்கி அறைந்திருக்கிறேன். அன்று முதல் இவன் என்னிடம் ஒட்டி நடப்பதில்லை. அவ்வபோது பாடம் படிக்க என் வீட்டுக்கும் வருவதில்லை.நானாக மூட் வந்து அவனை அழைத்தாலும், என்னமோ தெரியாதவன் போல போய்விட ஆரம்பித்தான். இவனுக்கும் மோகன் சார் மீது கோவம் இருந்தது. அதனால்தான் நான் செய்ததை இவனுக்கு சொல்லி; இவனையும் கழிவறைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். இப்போது அவன் என்னை பழிவாங்குகிறான். ஆறுமுகம் ப்ளீஸ். வந்து  என்னை அழைத்து போ. இனி நீ எத்தனை அழுத்தமாக நசுக்கினாலும் உன்னை அடிக்க மாட்டேன். பொறுத்துக் கொள்கிறேன். சீக்கிரம் வா.

ஆறுமுகமாக இல்லாவிட்டால்...கேசவனாகத்தான் இருப்பான்.

இவனது தங்கை மீது நான் கைவைத்தது, அவளது தப்பு. நானாக சென்று அவளை தொடவில்லை. நானாக அவளை ஹோட்டலுக்கு அழைக்கவில்லை. நானாக அவள் ஆடைகளை அவிழ்க்கவில்லை. அவள்தான் வந்தாள்; அவள்தான் அழைத்தாள்; அவள்தான் அவிழ்த்தாள்; அவள்தான் ஆரம்பித்தாள். நான் அவளுக்கு இணங்கினேன் அவ்வளவுதான். அதற்குத்தான் கேசவன் பழிவாங்குகிறானோ. இது என்ன நியாயம் கேசவன். உன் தங்கையை நீ என்ன செய்தாய். எத்தனை பேரின் தங்கையை நீ செய்தாய். உன் தங்கை என்பதும், என்னை பழி வாங்கலாமா..? வேணி வேண்டுமானால் பழிவாங்கலாம்.

 ஆமாம் வேணி;

அவளைத்தான் நானே அழைத்தேன். பல கடிதங்களை கொடுத்திருக்கிறேன். இரவு முழுவதும் காதல் கவிதைகளை காமம் கலந்து அவளின் மேனியெங்கும் தூவி அவளை உச்சமடைய செய்தேன். வழக்கமாக என் வீட்டுக்குத்தான் அழைப்பேன். அவள் கொஞ்சம் விஷேசம்;வெட்கம் என்பதால், நானே அவள் வீட்டுக்கு செல்லத் தொடங்கினேன். அதிக நாட்கள் எல்லாம் இல்லை. ஒரு வாரம் கூட முழுதாக ஆகவில்லை. அவளால் எனக்கு இரண்டு லாபம் கிடைத்தது.

லாபம் ஒன்று. கவிதைகளில் காமத்தை கலக்கும் கலை தெரிந்தது.

லாபம் இரண்டு. தொலைபெசியில் வெறும் சொற்கள் மூலமே கூட பேசிப்பேசி சுகத்தினை பகிரலாம்.

இரண்டு முறைக்கு மேல் அவளை தாங்க முடியவில்லை. முதல் உறவில் இருந்தே காதல், தெய்வீகம், கல்யாணம், முதல் குழந்தையின் பெயர், என நச்சரித்துவிட்டாள். விலகிவிட்டேன். அவள்தான் கல்யாணமாகி இரண்டு குழந்தை பெற்றுக் கொண்டாளே. இப்போது போய் அவள் எதற்காக என்னை பழிவாங்க வேண்டும். வேணி, உன்னை குறித்துதான் நான் யாரிடமும் பேசுவதில்லையே; பிறகு எதற்கு என்னை இப்படி பழிவாங்குகிறாய். வேண்டுமென்றால் ஒரு முறை உன்னை காம கவிதைகள் வழி அர்ச்சிக்கிறேன். என்னை காப்பாற்று.

மறுபடியும் எனக்கு மூத்திரம் வருகிறது. நனைந்து போன ஜீன்ஸை மீண்டும் நனைக்கிறேன்.

என்னால் மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை. யாரால் நான் பழிவாங்கப்படுகிறேன் புரியவில்லை. இப்படிப் பலிவாங்க முடியும் ஒருவர் சக்தி மிக்கவராகவே இருக்க வேண்டும். சக்தி மிக்கவர் என்றால்...

 ஆமாம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறாள் காளி.

 காளி. ஆடையற்று நின்றிருக்கும் கோர பற்கள் கொண்டவள். அவள் மீது அதிக பக்தி கொண்டவன் நான்.  வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில்தான் காளி மீது பக்திக் கொள்ளத்தொடங்கினேன். முதலில் அவளது திறந்த மார்பகங்களால் நான் ஈர்க்கப்பட்டாலும் பின்னாலில் அவள் எனது இஷ்ட தெய்வமாகிப்போனாள். ஒவ்வொரு முறையும் காளிக்கு மாலை போடும் போது  அவளின் மார்புகளை உரசுமாறுதான் பூக்களை வைப்பேன். இது என்னமோ பார்ப்பவர்களுக்கு அவளின் மார்பகங்களை நான் மறைப்பதாகத் தெரிந்தாலும். அதனை தொடும் சுகம் பூக்களைவிட மென்மையான உணர்வை எனக்கு கொடுத்தது.

 அப்போதுதான் கோவிலுக்கு ஒருவர் பெரிய காளி ஓவியத்தை அன்பளிப்பாக கொடுத்தார். கண் திறக்கப்படாத ஓவியம். பூஜைகள் சில செய்த பிறகுதான் காளிக்கு கண் வைக்க வேண்டுமாம். அதுவரை சீன நாளிதழில் அந்த ஆளுயர ஓவியம் சுற்றப்பட்டிருந்தது. பூஜைக்கு ஏற்ற நாள் வர இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. என்னால் பொறுமை காக்க முடியவில்லை. ஆளுயர காளி சிலையும் ஆடையின்றிதானே இருக்கும். முட்டிப்போட்டுக் கொண்டு நான் பார்த்து; தொட்டு; ரசித்த அந்த மார்பகங்களை எனக்கு சரி நிகராக நான் பார்க்க வேண்டும். நான் தான் முதலில் பார்க்க வேண்டும்.

 நான் காளியின் குழந்தை என்று தொடங்கி பக்தன் என்று வளர்ந்து இப்போது காதலனாகியிருக்கிறேன். நான் காளியின் காதலன் ஆனேன். காளி உன் மீது உன் உடல் மீது எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. நான் உன் காதலன். என்ன செய்தாலும் நீ என்னை மன்னிக்கவேண்டும். நீயும் என்னை காதலிக்கிறாய் தானே..

மயான காளியாகவும்; பயங்கர சூலியாகவும் பார்க்கப்பட்டு பழக்கிய உன்னை உனக்கே வேறு மாதிரி காட்டிய காதலன் நான். உன் பெண்மையை உனக்கு புரியவைத்த காதலன் நான். எத்தனை முறை உன்னை அர்ச்சிக்கும்போது  நீ மயங்கி வெட்கியிருக்கிறாய். உன் வெட்கத்தை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் காளி. சொல். நீதான் யாரிடமாவது காட்டியிருக்கிறாயா..? இல்லை. காதலன் வேண்டும் காளி. என் போன்று காதலன் வேண்டும் காளி.

கணவனை விட காதலனுக்குத்தானே பெண்ணுடம்பில் உரிமை அதிகம். என் உரிமை. காதலி காளியின் மார்பகங்களை நான் பார்க்க வேண்டும்.

யாரும் இல்லை. கோவிலில் காளிகள் மட்டும் இருக்கிறார்கள். ஒருத்தி நான் தொட்டு தொட்டு ரசித்தவள். தன் மார்புக்கு போட்டியாக பூக்களை சுமப்பவள் .இன்னொருத்தி புதியவள். ஆளுயரமானவள். யாரும் பார்த்திடாதவள்.

புதியவளை இப்பொழுதான் பார்க்க சரியான நேரம். சுவரோரத்தில் தலைக்குப்புற  சாய்ந்திருந்தாள்.

அருகே செல்கிறேன். பழைய காளியையும் ஒரு முறை பார்க்கிறேன். அவளுக்கு இதில் பொறாமை ஏதும் இல்லையென்பதை உறுதி செய்தேன். அவள் மட்டும் மறுத்திருந்தால் உயர்ந்த காளியை பார்த்திருக்கமாட்டேன். சாய்ந்துக் கிடக்கும் காளியை நிமிர்த்தினேன். ஒரு கையால் காளியை சாய்த்து; மறு கையால் நாளிதழ் காதிகங்களை கிழிக்கிறேன்.

நீல வண்ணத்தில் மார்பு, வெள்ளை நிற மண்டையோடுகளைத்தாங்கி ஜொலித்தன. ஒரு கையில் தாங்கியிந்த காளியை பாரம் தாங்காமல் கீழே போட்டுவிட்டேன். சத்தமாகியது. பயந்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கழிவறைக்குள் ஒழிந்து கொண்டேன். கோவிலில் சிலர் வந்திருப்பது எனக்கு புரிந்தது. சந்தேகம் வராமல் இருக்க ; வராத மூத்திரத்தை முக்கி முக்கி வர வைத்தேன். பின் வெளியேறினேன். நினைத்தது போலவே என் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பாரேன் சாமி படமே சொந்தமா சாய்ந்திருக்கு சீக்கிரமே பூஜையை ஆரம்பிக்கனும்னு சாமி சொல்லாம சொல்லறா.. என்றார்கள். காளீ நீ என்னிடம் சொல்லாததையா அவர்களிடம் சொல்லிடப்போகிறாய். எனக்கு சிரிக்கத்தோன்றியது.

ஆனால்;

அன்று முதல் காளியுடன் எனக்கு முறிவு ஏற்பட்டது. ஒருவேளை சின்ன மார்பில் இருந்த ஈர்ப்பும் கிளர்ச்சியும் ஆளுயர மார்பில் இல்லாமல் போனதாலோ.

 இப்போது அதற்கான சரியான நேரம் பார்த்திருந்து காளிதான் பழிவாங்குகிறாள். என் சந்தேகமெல்லாம் அவளை நோக்கிதான் மையமிடுகின்றன.

  காளி. என் காதலி. மண்டையோட்டு சூளி. இங்கே வாடி.

  காதலனை இப்படி பழிவாங்குதல் முறையோ சொல்லு. இத்தனை காலம் உன்னை மறந்திருந்தது தவறுதான். இனி நீதான் எனக்கு எல்லாம் வாயேன் காளி. சீக்கிரம் வாயேன். உன் மார்பில் சூழ்ந்திருக்கும் மண்டையோடுகளை கழட்டு. என் முகத்தினை அதில் பதிக்கிறேன். உன் திறந்த மார்புகளை என் தோளால் போர்த்துகிறேன். கையில் இருப்பதையெல்லாம் தூக்கியெறிந்துவிடு. காதலை தாங்கிப்பிடி. கண்ணில் இருக்கும் குரோதங்களை தூக்கியெறியலாம். காமத்தை விதைக்களாம்.
வருகிறாள்.

காளி வருகிறாள். எனக்கு மீண்டும் மூத்திரம் வருகிறது.

 

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்