'அகிலம் நீ' அகன்ற பார்வை
‘அகிலம் நீ’ – நூல் அறிமுகம்
நாம் எல்லோர் மனதிலும் ஒரு நாவல் இருப்பதாக
சொல்லுவார்கள். அதனால்தான் என்னவோ முதல் நாவலில் வெற்றி கண்டவர்கள் இரண்டாம் நாவலில்
தடுமாறிவிடுகிறார்கள். அதே போலதான் நாம் ஒவ்வொருவரிடமும்
பல கதைகள் இருக்கின்றன. நமக்கு தெரிந்த கதைகள், நமக்கு தெரியாத கதைகள், சொல்லக்கூடிய
கதைகள், சொல்லக்கூடாத கதைகள், சொல்லியும் சொல்லாமலும் விட்டுவிடக்கூடிய கதைகள் என ஏராளம்.
இன்னும் சொல்லப்போனால் ஒருவரின் டைரி குறிப்புகள் இன்னொருவருக்கு மிகப்பெரிய கதையாடலுக்கு
வழிவகுக்கும்.
இதில் ஏதோ ஒரு வகையில் தன் சக மனிதர்களுக்கு
பகிர வேண்டியவற்றை எழுத்தின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறார் பொன் கோகிலம். நம் நாட்டை பொறுத்தவரை, சிலருக்கு அறிமுகங்கள் அவசியமில்லை.
இவரும் அதில் ஒருவர் என்பதில் மிகையில்லை. ‘அகிலம் நீ’ நூல் வெளியீட்டிற்கு பிறகு அவரின்
இன்னொரு பரிணாமத்தை நாம் பார்த்து வாழ்த்தி மகிழலாம்.
‘அகிலம் நீ’ நூல், பிப்ரவரி இரண்டில் வெளியீட்டு
காணவுள்ளது. நூல் வெளியீடு என்பது நம் நாட்டில் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது.
இது ஆரோக்கியமான ஒன்று. அந்த ஆரோக்கியம் தரத்தைச் சொல்கிறதா இல்லையா என்பது கேள்விக்குறிதான்.
‘
அகிலம் நீ – க்கு வரலாம்’.
இந்நூலில் இருந்து எனக்கு வாசிக்கக்கிடைத்த
சில கதைகளின் ஊடே உங்களோடு உரையாட விரும்புகிறேன். இந்த ஒற்றை உரையாடல், எழுத்துகள்
மூலம் தொடங்கி உரையாடல்கள் வழி பயணமாகும் என நம்புகிறேன். கதைகளுக்குச் செல்வோம்.
வாத்து - கனடாவின் தேசியப் பறவை
முதலில்
என்னை யோசிக்க வைத்தது இதன் தலைப்புதான். பிடித்தும் இருந்தது. வாழ்வில் எப்படியாவது
முன்னேறிவிடுவோம். நாமும் நான்கு பேர் மெச்சும்படி வாழ்வோம் என்ற சராசரி ஆசைகளைக் கொண்டிருக்கிறாள்
நாயகி. கனடா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. மலேசியாவில் கனடா தூதகரம் இல்லை என்பதால்
அவளுக்கு அலைச்சல்கள் ஏற்படுகிறது.
இருந்தும் தன் வருங்கால கணவன் தன் மீது கொண்ட
அன்பும் அக்கறையும் அவளைத் தொடர்ந்து முன்னேற்றம் காண ஊக்கம் கொடுக்கிறது. கடப்பிதழ்
எடுக்க முற்படும் போது இணையம் வழி பணம் செலுத்த வேண்டும் என்பதைக் கூட நாயகி அறிந்திருக்கவில்லை.
கையில் பணத்தை வைத்துக்கொண்டு அவனை அழைத்து விபரம் சொல்கிறாள். உடனுக்குடன் குறிப்பிட்ட
எண்களுக்கு அவன் பணம் செலுத்துகிறான். அவளின் ஒவ்வொரு சிக்கலிலும் அவன் உடன் இருப்பது
அவன் மீதான காதலை அதிகப்படுத்துகிறது.
இரவு இருவரும் சந்திக்கின்றார்கள். அவன் வங்கியில் செலுத்திய பணத்தை நாயகி கொடுத்தும் அதனை பெற்றுக்கொள்ள
அவன் விரும்பவில்லை. அன்பு, கொடுக்கல் வாங்களை கவனித்து எதனையும் செய்வதில்லை என அவன்
நம்புகிறான். இருந்தும் கட்டாயத்தின் பெயரில் பெற்றுக்கொள்கிறான்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் திருமணம் என அம்மா
சொல்லியிருந்தாலும். தங்களுக்காக அழகிய வீடு
வாங்கிவிட்டுதான் நாயகியை மணம் முடிப்பதான அவனது சபதம் அவனையும் உழைக்க வைக்கிறது.
கனடாவில் நடக்கும் ‘அனைத்துல இந்திய அழகி போட்டி’யில்
நிச்சயம் வெற்றி பெறுவாள் என அவர்கள் இருவரும் நம்புகிறார்கள்.
பயணத்திற்கான ‘விசா’ தயார் என மின்னஞ்சல் வருகிறது.
அப்போதே அவள் வென்றுவிட்டதாக உணர்கிறாள். மறுநாள் தன் வேண்டுதலை நிறைவேற்றிய பிள்ளையாருக்கு
தேங்காய் உடைத்து விசாவை பெற்றுக்கொள்ள செல்கிறாள்.
கையில்
கிடைத்துவிட்ட கடப்பதிழை திறந்து தனது விசாவை பார்க்கிறாள். அதிலுள்ள புகைப்படத்தில்
அவள் தலையில் வெற்றி கிடீடம் இருப்பது அவளது மனக்கண்களுக்கு தெரிகிறது. உடனே நன் வாழ்நாள்
காதலனுக்கு படமெடுத்து அனுப்புகிறாள். ஆச்சர்யம் அவனது கண்களுக்கு அந்த கிரீடம் தெரிகிறது.
அதுவும் தங்க கிரீடமாக தெரிகிறது. காதலியின் கனவு, வருங்கால மனைவியின் கனவு அவளது கணவனுக்கும்
காதலனுக்கும் இப்படியாக தெரிந்துவிடுவது யார் செய்த புண்ணியமாக இருக்கும் என வாசிக்கின்றவர்களை
யோசிக்க வைக்கிறார் கதாசிரியர்.
எல்லா ஏ ற்பாடுகளையும் மிகவும் சிரத்தையுடன்
ஏற்பாடு செய்கிறான் காதலன். கனடாவில் கூட இவளை பார்த்துக்கொள்ள நண்பனை தயார் செய்திருந்தான். வீட்டில் இருந்து அம்மாவிற்கு
விடைகொடுத்த நாயகியின் கண்கள் அழுவதை காண விரும்பாது வாகனத்தற்கு செல்கிறான் நாயகன்.
விமான
நிலையத்தில் இருவரும் சுயமி எடுத்துக் கொள்கிறார்கள். விடைபெறுகிறாள் நாயகி. அந்த சுயமி-யை
காதலுக்கு அனுப்பி பதிலுக்கு காத்திருக்க ஏனோ பதில் வரவில்லை. இணைய வசதி கோளாறாக இருக்கும்
என விமானத்திற்கு செல்கிறாள்.
விமானத்தில் ‘அமண்டா’ என்பவள் தெய்வம் போல
வருகிறாள் என கதாசிரியர் குறிப்பிடுவதற்கான காரணம் மிக முக்கியமாக இருக்கிறது. அதுவும்
அதையொட்டிதான் கதையும் அடுத்த கட்டம் செல்கிறது.
விமானத்தைவிட்டு இறங்கியவளுக்கு பல அதிர்ச்சிகள்
காத்திருக்கின்றன. வாசிக்கின்றவர்களுக்கு நிச்சயம் அடுத்தடுத்து அதிர்ச்சியும் படபடப்பும்
உண்டு. கதை நெடுக்க ஆங்காங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக விபரங்களுக்கு மொத்தமாய்
ஒரு பதிலை சொல்லியுள்ளார் கதாசிரியர்.
தலைப்பை மீண்டும் வாசிக்கிறேன். வாத்து – கனடாவின்
தேசிய பறவை. என்னதான் நாட்டின் தேசிய பறவையாக இருந்தாலும் பல இடங்களில் அது இறைச்சிக்காகத்தானே
வளர்க்கப்படுகிறது என்பது புலப்படுகிறது.
வாசகர் மனதில் முன்முடிவை கொடுத்து
ஆனால் அதுவல்ல என கதையை முடித்திருப்பது கதாசிரியரில் முதல் தொகுப்பு கதையா என யோசிக்க வைக்கிறது.
ஃபினிக்ஸ்
பறவை
நாயகி எழுகிறாள். அங்கிருந்து கதையும் எழுகிறது.
இதிலென்ன இருக்கிறது என யோசிக்கையில் அவள் எழுந்தது மதியம் மணி 12 என தெரிகிறது. கைபேசியில்
பல ‘தவறிய அழைப்புகள்’. அவள் பதட்டமாகிறாள். மீண்டும் அழைப்பு வருகிறது. எந்த வகையிலும்
இடைவேளி இல்லாமல் வெறும் திட்டுகளாகவே வந்து விழுகிறது. சின்ன இடைவேளியை கண்டறிந்து
தன்நிலை விளக்கம் கொடுக்கிறாள் நாயகி. ஆனால் கைபேசி துண்டிக்கப்பட்டு பத்து நிமிடங்கள்
ஆகிவிட்டன.
இவற்றை சரிசெய்யும் முறை அறிந்தவள்தான். ஆனாலும்
அதன் ஆரம்பம் எப்போதுபோல அவளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்தானே. இப்போது எதுவும் பேச
வேண்டாம் என நினைக்கிறாள். தனக்கு பிடித்த முட்டை ரொட்டியை, தானே கலக்கிய தேநீரில்
முக்கி எடுக்கிறாள். ருசித்து சாப்பிடுகிறாள். மீண்டும் அழைப்பு வருகிறது. இப்போதைக்கு
சாப்பிடும் முட்டை ரொட்டியும் தேநீரும்தான் முக்கியம் என முடிவு எடுக்கிறாள்.
இன்று அவளுக்கு வயலின் வகுப்பு. தாமதமாக சென்று
அங்கும் திட்டு வாங்க விரும்பவில்லை. வகுப்பிற்கு செல்ல இருபது நிமிடங்கள் வரை ஆகும்.
அந்நேரத்தை பயன்படுத்தி அவருக்கு அழைத்து பேசி, சமாதானம் செய்துவிடலாமென நினைத்து முடிக்கவுமில்லை.
அவரிடமிருந்து 20 புலனச்செய்திகள் வந்துவிட்டன. அதில் நான்கைந்து ஸ்கிரீன் ஷோர்ட்கள்.
பல காட்டமான செய்திகளும் இருந்தன.
மீண்டும் அழைப்பு வருகிறது. ‘நானா வயலின் வகுப்பா
? ’ என்ற வாதத்தில் அவர் தோல்வியை ஒப்புக்கொண்டு அவளை திட்டிவிட்டு கைபேசியை முடக்குகிறார்.
இன்றைய நாள் இப்படியாக தொடங்கியுள்ளது அவளுக்கு புதில்லை போலும். இத்தனை நடந்தும்,
காரை விட்டு இறங்குவதற்கு முன் கண் மையை சரி செய்துக் கொள்கிறாள். அவளுக்கு இதுவெல்லாம்
எப்படி சாத்தியமாகிறது. எல்லா திட்டுகளையும் வாங்கிக்கொண்டு முட்டை ரொட்டியையும் தேநீரிலும்
லயிக்கிறாள். எல்லாம் முடிந்ததாக மறைமுக செய்தி வந்தாலும் கண்களின் மையை சரிசெய்கிறாள்.
அழக்கூட தோன்றாதவளா? இல்லை அழுது அழுது கண்ணீர் வற்றிப்போனவளா? என யோசிக்க வைக்கிறது.
அவரிடம் இருந்து அந்நேரம் இன்னொரு புலனச்செய்தி
வருகிறது. இச்செய்தி அவளைவிட வாசிக்கின்றவர்களைப் பதட்டமடைய வைக்கிறது. நம்மில் பலரின்
செயலைத்தான் அச்செய்தி தாங்கியுள்ளது. நிச்சயம் எது மன்னிப்பு அல்ல. எத்தனை பேர் மன்னிப்பு
கேட்க தயாராய் இருக்கிறோம்?. பிறகு என்னதான் செய்தி அது? புத்தகத்தில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதில் யார் ஃபீனிக்ஸ் பறவை. நாயகியா அல்லது
நாயகனா ? கிரேக்க புராணத்தில் ஃபீனிக்ஸ் பறவையின் தன்மை குறித்துச் சொல்லப்படுவதை கண்டுபிடித்தால்
இதற்கான பதிலையும் கண்டுபிடித்துவிடலாம். அது கதைக்கான பதிலாக மட்டும் இருக்காது.
வெள்ளைக்கழுகு
நகைச்சுவை வசனம். நாம் அனைவரும் கைத்தட்டி ரசிக்கிறோம்.
கண்களில் நீர் வரவும் சிரிக்கிறோம். ஆனால் நம்பிடையே இருக்கும் ஒருவரால் இதற்கு சிரிக்க
முடியாததை நாம் அறிந்திருப்போமா? சிரித்து வந்த கண்ணீருக்கும் ரணத்தின் உந்துதலால்
வந்திருக்கும் கண்ணீருக்கும் வித்தியாசத்தை நாம்
அறிந்திருப்போமா?
நகைச்சுவைகள் நான்கு வகையாக இருக்கின்றன என நம்புகிறேன். தன்னைத் தாழ்த்தி மற்றவரை உயர்த்துவது, தன்னை உயர்த்தி
மற்றவரை தாழ்த்துவது, தன்னையும் தாழ்த்தி மற்றவரையும் தாழ்த்துவது, இன்னொன்று தன்னையும்
உயர்த்தி மற்றவரையும் உயர்த்துவது. ஊடகங்கள் எந்த வகையை பின்பற்றுகின்றன என கவனித்தால்
தெரிந்துவிடும்.
சமீபத்தில் திரைகண்டது ‘96’ என்னும் திரைப்படம்.
பலருக்கும் பிடித்த படங்களின் ஒன்று. பழைய நினைவுகள் பழைய பள்ளிக்கூடங்கள் என எண்ணங்களை
எங்கேங்கோ அழைத்துச் சென்ற திரைப்படம்.
பலரும் சிலாகித்துப் பேசிய திரைப்படம்தான் ஆனால்
அதில் வரும் ஒரு வசனம் நாயகியை பலமாகவே காயப்படுத்திவிடுகிறது. தன் பலவீனத்தை தன் கண்ணீரை
தான் கண்டுவரும் அவமானகளை எல்லாம் மீண்டும் அவளை நினைக்க வைக்கிறது. அவளால் அதிலிருந்து
மீண்டு வர முடியவில்லை.
அழகி. நடிகை. ஆனால் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்க
வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டவள் என அவள் குறித்துச் சொல்ல ஆரம்பிக்கிறார் கதைச்சொல்லி. தன் திருமண தடைக்கு ஏதோ தோஷம்தான் காரணம் என சொல்லி, தன்னைத்தானே சமாதானம் செய்துக்கொள்கிறாள்.
வாசிக்கையில் நம் மனம் சமாதானம் ஆகாதபடி கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.
ஆமாம் ஏன் அந்த வெள்ளைக்கழுகு? கதையின் தொடக்கத்தையே
அங்குதான் வைத்திருக்கிறார் கதாசிரியர்.
கிவி
இன்றைய சூழலில் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு
ஆளாவதை ஆங்காங்கு காண்கின்றோம். இது எங்கிருந்து தொடங்குகின்றது என்கிற கேள்வி நாம்
ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டிய ஒன்று.
“பெண்கள் ஆடைகளில் கவனம் வைங்க” என ஒரு பக்கம்
“ஆண்கள் அவர்கள் கண்களை சரி செய்யுங்கள் ” என
இன்னொரு பக்கம் போட்டிக்கு போட்டியாக ஏதேதோ செய்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில்
இந்த ஆணும் பெண்ணும் சந்திரனில் இருந்தா குதித்துவிட்டார்கள். நம் வீட்டில்தானே இருக்கிறார்கள்.
அப்படியிருக்க நாம் யாரை ஒழுங்கு செய்ய கூப்பாடு போடுகிறோம்?. முகநூலில் புரட்சி செய்கிறோம்?.
யாரிடம் கோவத்தைக் காட்டுகிறோம்? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
பாலியல் கல்வி பள்ளிக்கூடங்களுக்கு தேவையா? இல்லையா?
என்கின்ற பட்டிமன்றங்கள் ஒரு பக்கம் . பாலியல் கொடுமைகளுக்கு இரையாகிறவர்கள் இன்னொரு
பக்கம்.
கதையில் ஒரு சிறுமி வருகிறாள். கதாசிரியரின்
வருணனைகள் அவள் சிறுமியா குழந்தையா என நம்மை சிந்திக்க வைக்கிறது. அவள் ஒரு நடமாடும்
‘டெடி பேர்’ போலவே தெரிகிறாள்.
பள்ளிக்கூடங்களில் ‘குட் டச், பேட் டச்’ குறிந்து
தெரிந்துக்கொண்ட சிறுமி. எதார்த்தமாக தனக்கு தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கும் சம்பவத்தை
வீட்டில் சொல்கிறாள். வாசிக்கையில் அந்த அதிர்ச்சியை நாம் எதிர்க்கொள்வது மன அழுத்தத்தைக்
கொடுக்கிறது. கதையில் சொல்லப்படும் சம்பவம் அவ்வாறான இடங்களில் மட்டும்தான் நடக்கின்றனவா?
‘கிவி’ போன்ற அப்பாவி குழந்தைகளை எப்படி கழுகுகள் வாழும் சமூகத்தில் இருந்து காப்பாற்றுவது?
என்ற கேள்வி நம்மிடம் எழுகிறது.
அன்றில்
நமது அன்றாட சம்பவங்களில் இக்கதை தொடங்குகின்றது.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மகிழ்வான தருணங்கள் பார்ப்பவர்களுக்கு மன நெருக்கடியை
கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்று. உதாரணமாக கல்யாண ஜோடிகளின் புகைப்படங்கள், இன்னமும்
கல்யாணம் செய்யாதவர்களுக்கு பெரிய அழுத்ததைக் கொடுக்கும். குழந்தைகளின் புகைப்படங்கள்,
புதிய வாகனங்கள், வீட்டு கிரகபிரவேஷங்கள்.. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
அடுத்தவர்கள் சங்கடப்படுவார்கள் என்பதற்காக நாம்
எதனையும் பகிராமல் இருக்கலாமா?. சமூக ஊடகங்களே இதற்குத்தானே இருக்கின்றன. என நமக்கான
சமாதானங்கள் இருக்கவே செய்கின்றன.
இப்படி பகிரப்படும் புகைப்படங்களுக்கு பல விருப்பக்குறிகள்
வந்தாலும், வராத வெறுப்புக்குறிகளும் உண்டு என்பதை மறுக்க இயலாது.
இப்படியாக அதிஷ்டம் நம் வாழ்வில் இல்லையே என
நாயகி வருந்துகிறாள். கல்யாணத்திற்கு செல்வதற்குக்கூட கணவனிடம் கெஞ்சி கூத்தாட வேண்டிய
சூழலில் அவளால் வேறு என்ன செய்ய முடியும்.
சில நாட்கள் கழித்து முன்னால் மாணவர்கள் சந்திப்பு
கூட்டம் நடக்கிறது. அதற்கென புலனக்குழு ஒன்று தொடங்கபடுகிறது. வழக்கம் போலவே பல தகவல்கள்
அதில் வருகின்றன. கூட்டத்திற்கு செல்லும் போது அதிலுள்ள செய்தியை நாயகி கவனிக்கின்றாள்.
பதிவிரக்கம் செய்கிறாள். தங்கம் கடத்திய குற்றத்திற்காக
ஒரு தம்பதி இலண்டனில் கைதி செய்யப்படுகிறார்கள். நாடு நாடாக பயணம் செய்ததெல்லாம் தங்கங்களை
கடத்துவதற்காகத்தான் என தெரிந்துக் கொள்கிறார்கள். அவர்களின் முகம் அவளுக்கு நன்கு
பரிட்சையமாக இருந்தது. அந்த தம்பதியின் கணவன் நிரபராதியாகிறார். மனைவி கைதாகிறாள்.
என்ன நடந்திருக்கும். இருவரில், கணவன் மட்டும்
எப்படி தப்பித்தார் என்ற கேள்வியை விடவும் மனைவி எப்படி கைதாகிறாள் என்று சொல்லப்படும்
காரணம்தான் இந்த ‘அன்றில்’ பறவையின் காரணம்.
நிறைவாக,
அகிலம் நீ – சிறுகதை தொகுப்பில் எனக்கு கிடைத்த
ஐந்து கதைகளை வாசகர்களுக்கு இதன் வழி அறிமுகம் செய்திருக்கிறேன்.
படித்தவரை, இதில் எந்த கதைகளிலும் பெண் பாத்திரங்களுக்கு
பெயர் இல்லை? ஐந்து கதைகளுக்கும் வைக்கப்பட்டிருக்கும் தலைப்புகள் எல்லாம் பறவைகளையே
சொல்லுகின்றன. ஒவ்வொரு பறவைகளின் தன்மைகளுக்கு ஏற்றார் போல மனிதர்கள் கதையில் முக்கிய
பாத்திரங்களாக வந்துப்போகிறார்கள். மீதமிருக்கும் கதைகளிலும் இந்த யுக்தி தொடர்கிறதா
என புத்தகம் கைக்கு வந்தப்பின் தெரிந்துக்கொல்ளலாம். இதற்கெல்லாம் கதாசிரியர் ஏதாவது
சூட்சுமம் வைத்திருக்க வேண்டும் என நம்புகிறேன்.
இவை வெறும் கதைகளா என்பதுதான் வாசகர்கள் மத்தியில்
கதாசிரியர் விட்டுவைக்கப்போகும் கேள்வி. நம்
நாட்டில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகளில் ஒவ்வொருவரும் ஒரு வகை பாணியை பின்பற்றுகிறார்கள்.
சில கதைகள் யோசிக்க வைக்கின்றன. சில கதைகள் ஏன் வாசித்தோம் என நினைக்க வைத்துவிடுகின்றன.
எழுதியவர்களே இது உங்களுக்கான கதை அல்ல எனவும் கூட சொல்லக்கேட்டிருகிறோம்.
சிறுகதை ஆசிரியராக தனது முதல் புத்தகத்தில்
அடிவைக்கும் பொன் கோகிலம் அதற்கான உழைப்பை செய்திருக்கிறார். அவரின் மொழியும் நம்ம
மொழி என சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கிறது.
இயல்பாகவே தனது முதல் சிறுகதை தொகுப்பில் பலர்
வெற்றியடைந்துவிடுவார்கள். அடுத்தடுத்த கதைகளில்தான் உண்மையில் அவர்களுக்கு சிக்கல்
ஏற்படும். உதாரணமாக பந்து விளையாட்டு திடலில் அதன் சட்டத்திட்டங்கள் தெரிந்தவர்களைவிட
தெரியாத புதியவர்கள்தான் அதிக உற்சாகத்துடன் மிகவும் பரவசமாக விளையடுவர்கள். அப்படியே
அவர்கள் ‘கோல்’ அடித்துவிடுவதும் உண்டு. அகிலம் நீ-யின் கதாசிரியர் இத்துறையில் கற்றுத்தேர்ந்து
மேலும் பல கோல்களை அடிப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.
நிச்சயம்
இத்தொகுப்பு இங்கு பெரிய கவனத்தை ஈர்க்கும் என்பதனை வாசகனாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நன்றி.
- தயாஜி
இதனை பிரசுரம் செய்த மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பு ஆசிரியர்க்கும், தமிழ் மலர் ஞாயிறு பதிப்பு ஆசிரியர்க்கும் நமது நன்றி.
0 comments:
கருத்துரையிடுக