நண்பர்களே எனக்கு ஒரு சந்தேகம். குறிப்பாக ஆசிரியர்களிடம். அதிலும் குறிப்பாக மாணவர்கள் மீது அக்கறையுள்ள ஆசிரியர்களிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்க நினைக்கிறேன்.
ஒருவேளை என் சந்தேகம் தவறாக இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன். அதற்கு நான் எப்பவும் தயார்தான்.
கணக்கு பாடம் குறித்த அறிவு இல்லாத, இதுவரையில் கணக்கு பாடத்தில் தேர்ச்சி அடையாத யாரையும், குறைந்த பட்சம் கணக்கில் தேர்ந்தவர்கள் யார் எது அவர்களின் சாதனை என தெரியாத தெரிந்து கொள்ளும் உழைப்பைப் போடாத எவரையும் நம் பள்ளி மாணவர்களுக்கு கணக்கு பாடமோ அல்லது கணக்கு பட்டறையோ எடுப்பதற்கு நாம் அனுமதிப்போமா?
ஒருவேளை ஏதோ ஒரு வகையில் அவர் பிரபலமானவர் என்றாலும் கூட அவருக்கே கைவராத ஒன்றை, அவரே முயலாத ஒன்றை அல்லது அவரே பலவீனமாக இருக்கும் ஒன்றை குறித்து நம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த நாம் அனுமதிப்போமா?
பெரும்பாலான பள்ளிகளில் எழுத்தாளர்கள் அழைக்கப்படுகின்றார்கள். கதைகள் குறித்தும் இலக்கியம் குறித்தும் மாணவர்களுக்கு நால்லதொரு அறிமுகத்தைக் அவர்கள் கொடுக்கிறார்கள். நம்மைப் போன்ற எழுத்தை நேசிக்கின்றவர்களுக்கு அது பெரிய மகிழ்ச்சி. ஏனெனில் மாணவ சமூகத்திடம் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. ஒருவகையில் அது தொடக்கப்புள்ளியும் கூட.
நாளை அம்மாணவர்கள்தான்
வாசகர்களாக எழுத்தாளர்களாக விமர்சகர்களாக உருவாகப் போகிறார்கள். அவர்கள் இத்தமிழ்ச் சமூகத்திற்கு ரொம்பவும் முக்கியமானவர்கள்.
அவர்களிடமே போலியான முன்னுதாரணங்களை நாம் காட்டலாமா? இளம் வயதிலே இப்படியான தவறான போதனைகளைக் கொடுப்பது நாளை அவர்களிடம் இருந்து வரவிருக்கும் எழுத்தாற்றாலுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடாதா?
மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய எழுத்தாளர்கள் எவ்வளவோ பேர் இங்கு இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுகிறவர்கள். இலக்கிய வெளிச்சம் தவிர மற்ற எந்த வெளிச்சத்தையும் அவர்கள் தங்கள் மீது சுமந்து திரிகிறவர்கள் அல்ல. அவர்களை அடையாளம் காணுவது அவ்வளவு சிரமமா?
'படித்த ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படைக்காதீர்கள்; படித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களிடம் உங்கள் பிள்ளைகளை ஒப்படையுங்கள்’ என்கிறார் தத்துவவாதி கலீல் ஜிப்ரான். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தவர்.
அப்படி நீங்கள் உங்கள் பள்ளிக்கு அழைக்கும் எழுத்தாளர்கள் என சொல்லப்படுகின்றவர்களின் எழுத்துகளை இதுவரை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?
நிற்க,
நாம் அவர்களை வாசித்துதான் நம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்துங்கள் பட்டறை நடத்துங்கள் அடுத்த ஆண்டு புத்தகம் வெளியிடுங்கள் என சொல்கிறோமா?
சரி,
எதை முன்வைத்து 'எளிய முறையில் குறுங்கதை பட்டறைகளை' மாணவர்களுக்கு வழிநடத்த அந்த எழுத்து வகையில் எதையுமே செய்திடாதவர்களை அழைக்கிறோம். சரி, யார் அவர்களை அழைக்கச்சொல்கிறார்கள். அப்படி அழைக்கச்சொல்கிறவர்கள் அழைத்தவர்களின் எந்தப் படைப்பை எந்த எழுத்தை வாசித்து ரசித்து உள்வாங்கி, " அடடே என்ன மாதிரியான படைப்பை/ குறுங்கதையை இவர் எழுதியிருக்கிறார்... இவரல்லவா நம் மாணவர்களுக்கு கதை எழுதுவதற்கான பட்டறையை நடத்த வேண்டும்.." என சொன்னார் என தெரிந்து கொள்ள விரும்புகிறோம். ஒருவேளை எங்கள் வாசிப்பில் நாங்கள் அதனைத் தவற விட்டிருக்கலாம். நீங்கள் எங்களுக்கு வழி காட்டுங்கள். நாங்களும் வாசிக்கின்றோம்.
சரி பள்ளி பாடத்திட்டத்தில் இல்லதா ஒன்றான குறுங்கதைப் பட்டறையைத்தான் நடத்துவதாக முடிவெடுத்தால் அதற்கு இங்கு பலர் இருக்கிறார்கள். குறிப்பாக எழுத்தாளர் மணிராமுவை சொல்லலாம். முகநூலில் தொடர்ந்து குறுங்கதைகளை எழுதிவருகின்றார். எழுத்தாளர் வனிதா ராமகிருஷ்ணன், மாணவர்களுக்கு கதை எழுதுவது குறித்து பேசிவருகின்றார். தொடர்ந்து எழுதுகின்றார். அல்லது நாடறிந்த (ஆசிரியர்) எழுத்தாளர் கே.பாலமுருகன் இருக்கிறார். மாணவர்களும் இலக்கியத்தில் ஈடுபட வேண்டும் என பல முன்னெடுப்புகளை செய்துவருகின்றார்; அது கூடுதலான வேலையாக இருந்தாலும். (போலியானவர்கள் பள்ளிகளில் நுழைந்து மாணவர்களுக்கு கதை எழுத கற்றுக்கொடுக்கின்றோம் என சொல்வதை எவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என தெரியவில்லை). இப்படி பல எழுத்தாளர்கள், உண்மையில் எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். மேலே சொன்னது மாதிரி அவர்கள் எழுத்து வெளிச்சம் தவிர வேறெந்த வெளிச்சத்தையும் சுமந்து திரிபவர்கள் அல்ல. இவர்களைத்தானே நாம் நம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்?
நிற்க, குறுங்கதை வடிவம் என்பது, (நான் இந்த வடிவம் குறித்து தொடர்ந்து வாசித்தும் பேசியும் எழுதியும் வருகிறேன் என்பதால்...!) அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது; கூடாது.
தற்சமயம் இவ்வடிவம் கவனம் ஈர்ப்பதாக தேரிந்தாலும், குறுங்கத்தைகளுக்கென பெரிய வரலாறு இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் இருந்தும் கூட அதற்கான சாத்தியக்கூறுகளை நாம் எடுத்துரைக்கலாம். பல முக்கியமான படைப்பாளிகள் குறுங்கதைகளை எழுதி அதன் வழி இன்றளவும் பேசப்படுகின்றார்கள்.
தமிழ் மொழியிலேயே முன்னணி எழுத்தாளர்கள் சிறந்த குறுங்கதைகளை எழுதியிருக்கிறார்கள். இப்படி குறுங்கதைகள் குறித்து நாம் அதிகம் பேசலாம். அதனால்தான் நாங்கள் நண்பர்களுடன் இணைந்து தனியே குறுங்கதை வகுப்புகளையும் நடத்தி வருகின்றோம்.
நிற்க,
யாரையும் காயப்படுத்தவோ குறைத்து மதிப்பிடவோ இதனை எழுதவில்லை. அவரவர் திறமையில் அவரவர் உழைப்பில் அவரவர் மிளிர வேண்டும் எனதான் கேட்டுக்கொள்கிறோம். வாசியுங்கள். எழுதுங்கள். உங்களுக்கு எழுத்தாளர் என்கிற அசல் அடையாளம் தானாய் உருவாகும். அதைவிடுத்து இப்படியான செயல்பாடுகள் குறைந்த ஆயுளுக்கான பிரபலத்தை மட்டுமே கொடுக்கும். நாளை நீங்கள் கற்றுக்கொடுத்த மணவனே வளர்ந்து வந்து உங்களை விமர்சித்து புறக்கணிப்பான். அந்த துரதிஷ்டம் உங்களுக்கு வரக்கூடாது எனபதற்காகவே இதனை நாங்கள் எழுத வேண்டியுள்ளது.
உதாரணாமாக,
நாம் நாட்டு கலைஞர்களில் கே.எஸ். மணியம் ரொம்ப முக்கியமான கலைஞர். அவரைத் தெரியாதவர்கள் ரொம்பவும் குறைவு. இன்றைய இளம் இயக்குனர்கள் உருவாக்கும் கதாப்பாத்திரங்களுக்கும் இயல்பாக உயிர் கொடுத்து அசத்திவிடுகின்றார். கலைத்துறையில் பலருக்கும் அவர் வழிகாட்டி; ஆசான்.
இன்னொரு பக்கம் , டிக்டாக்கில் மோசமான செயல்களால் 'வைரல்' ஆன ஒருவர் இருக்கிறார்.
ஆனால் கே.எஸ்.மணியத்தை புறக்கணித்து அந்த 'வைரல்' மனிதனை கலைத்தாயின் தவப்புதல்வன் என பாராட்டி மேடை ஏற்றி விருது வழங்கினால் நாம் அதனை ஏற்றுக்கொள்வோமா? அல்லது கைத்தட்டி கலைஞனை வாழ்த்துங்கள் என கூட்டம் சேர்ப்போமா?
நிறைவாக,
மீண்டும் இப்பதிவின் முதல் பத்தியை வாசித்துவீடுங்கள்.
'ஒருவேளை என் சந்தேகம் தவறாக இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன்.'
வக்கீல் நோட்டிஸ்கள் எதையும் அனுப்பாதீர்கள். நாங்கள் எழுத்தாளர்கள். தினமும் எழுதுகிறவர்கள், எங்களுக்கு எழுதத் தெரியும் அவ்வளவே...
#தயாஜி