பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

வல்லினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வல்லினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏப்ரல் 21, 2017

அரு.சு.ஜீவானந்தனும் நானும்

எப்போதோ கேள்விப்பட்ட நாவல். ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம். புத்தகத்தின் முகப்பை விளம்பரமொன்றின் பார்த்த போதே மனதில் பதிந்தது.
யார் சொன்ன நாவல் என்ன உள்ளடக்கம் போன்றவை நிழலாக தெரிந்தாலும் புத்தகம் தேடிக்கண்டடைய முடியவில்லை.
சமீபத்தில் எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தனை பணி நிமித்தமாக சந்திந்தேன். அவர் குறித்து கொஞ்சம் பகிர வேண்டும்.

இயல்பாகவே அவர் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடவடிக்கையில் ஒரு தோரணை இருக்கும். மிடுக்காக தெரிவார்.
இருவருமே வானொலி (ஆர்.டி.எம்) பணியைச் சார்த்தவர்களாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

அவர் எனக்கு அறிமுகமானதே சுவாரஷ்யமான ஒன்று.
எனது பதின்ம வயதில் கெடா சுங்கை பட்டாணியில் இருந்தேன். அப்பாவும் எழுத்தாளர் என்பதால் பல புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வைத்து சிலவற்றை அவ்வபோது கொடுத்து படிக்கச்சொல்வார். இப்போது எழுத்தாளராக நினைப்பவர் தான் எழுதியதையே படிக்க நேரமில்லாமல் இருக்கிறார்கள் என்பது வேறு கதை.

அப்படி அப்பா படிக்கச்சொல்லிக் கொடுத்த ஒரு புத்தகம் 'ஜீவானந்தன் கதைகள்'.
முகப்பில் மீசைக்கார எழுத்தாளரின் வரைந்த முக ஓவியம். சில கதைகளைப் படிக்கையில் தமிழக எழுத்தாளர் எனதான் நினைத்திருந்தேன். முழுமையாக புத்தகத்தை படிக்க முடியாதபடி பரிட்சை வந்தது. சில கதைகளிலேயே புத்தகத்தை அப்பாவின் அலமாரியில் வைத்துவிட்டேன்.

மிக சமீபத்தில்தான் அந்த எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் என்றும் அவர் மலேசியர் என்றும் வல்லினம் எழுத்தாளர் கலந்துரையாடலில் தெருந்தது. வானொலி பணியில் உள்ளவரென்பதும் அப்போதுதான் தெரிந்துக்கொண்டேன்.
முதலில் அவருடன் பேசுவதில் ஏனோ தயக்கம் இருந்தது, பின்னர் "தயா..." என அவர் குரலில் அழைத்துப்பேசும் மிடுக்கு அவருடன் கொஞ்சம் நெருக்கத்தைக் கொடுத்தது.

சிலரின் முகமோ, குரலோ, குறுஞ்செய்தியோ , பேச்சோ , எனக்கு உள்ளுக்குள் ஒரு உந்துதலைக் கொடுக்கும். அரு.சு.ஜீவானந்தனையும் அந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அவரின் ஆரம்பகால புகைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. இன்றைய இளைஞர்கள் கொடுக்கக்கூட புகைப்பட போஸ்களை அப்போதே கொடுத்திருப்பது எனக்குள் குதூகலத்தைக் கொடுத்தது.

அந்த புகைப்படங்களில் ஒன்று ஷேப்பியரின் வீட்டின் முன்பு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம். வழக்கமாக எழுத்தாளர் வீட்டில் படமெடுப்பவர்கள் அவரது படிக்கும் மேஜை, புத்தக அலமாரி, நாற்காலி போன்றவற்றிக்கு அருகில் நின்று படமெடுப்பார்கள். இவரோ அந்த காலத்திலேயே ஷேஸ்பியரின் கட்டிலின் அருகில் படமெடுத்திருக்கின்றார். இதை குறித்து அவரிடம் கேட்டுவிட்டு இருவரும் வெகுளியாய் சிரித்தோம். எழுத்தாளனை நமக்குள்ளாக சிரிக்க வைத்தால்தான் உண்டு போல என்ற எண்ணம் பகீரென மனதை உலுக்கியது.

அதையடுத்து எங்களின் உரையாடல் எழுத்தாளன் குறித்தும் அவனது குடும்பம் குறித்தும் விரிந்தது.  என் வாசிப்புகளைக் கேட்டுவிட்டு எழுந்துச்சென்றவர் எனக்கு அவரின் பரிசாக 'சிலுவைராஜ் சரித்திரம்' நாவலைக் கொடுத்தார். அவரின் கையொப்பத்தை கேட்டு வாங்கிக்கொண்டேன்.

அன்று தேடிய புத்தகம் இன்று கிடைத்ததில் மகிழ்ச்சி அதோடு அரு.சு.ஜீவானந்தன் கைகளில் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. கூடவே அவர் கலக்கிக் கொடுத்த தேநீரும் தனி ருசியாகவே தெரிந்தது. நல்லவேளையாக எனது பையில் நான் எழுதிய , ' ஒளிபுகா இடங்களின் ஒலி' என்ற பத்திகள் தொகுப்பு நூல் இருந்தது. அவரிடம் கொடுத்தேன். தற்போது மீண்டும் அவர் சிறுகதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார் என்பதையும் உடன் பகிர்கின்றேன்.

இருவருக்கும் வயதில் வித்தியாசம் இருந்தாலும் இளமை ததும்ப விடைபெற்றேன் .

ஜனவரி 02, 2016

கலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை (2015)

கலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை

(வல்லினம் கலை இலக்கிய விழா 7-லில் எனது புத்தகமான ஒளி புகா இடங்களின் ஒலி குறித்து எழுத்தாளர் ஸ்ரீதர் ஆற்றிய உரை)
எழுத்தாளர் ஸ்ரீதர்

இந்தப்பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும், உங்களோடு எழுத்து குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதிலும் மகிழ்ச்சி. வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர் தயாஜி அவர்கள் எழுதிய ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ – கவித்துவமான தலைப்பு – வல்லினம் இணைய இதழில் அவர் தொடர்ந்து எழுதிவந்த பத்திகளில் சிறந்தவற்றைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார்கள். இது அவருடைய முதல் புத்தகம், பொதுவாக முதல் முயற்சி என்கிறபோது அதன் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் பாராட்டுவதே வழக்கம். என்றாலும் இவர் எழுத்துக்குப் புதியவரல்ல என்பதாலும் விமர்சனங்களை வரவேற்பவர் என்பதாலும் அதுகுறித்து சில விஷயங்கள் பேசலாம் என்று நினைக்கிறேன்.

பத்தி எழுத்துகளை நானும் விரும்பிப் படிப்பவன்தான். காரணம் அது சுருக்கமாக மற்றும் சுவாரசியமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறது. இன்று பத்திரிகைகளில் கட்டுரை என்று குறிப்பிடப்படுபவற்றில் பெரும்பாலானவை பத்திகள்தான். ஆனால் அதைப் ’பத்தி’ என்று குறிப்பிட மாட்டார்கள். அப்படிச் சொல்வதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. கட்டுரையாளர் என்று சொல்லிக் கொள்வதில் இருக்கும் மரியாதை பத்தி எழுத்தாளர் என்று சொல்வதில் இல்லை என்று நினைக்கிறார்களோ என்னவோ. ஆனால் உண்மையில் பத்தி எழுதுவதற்கு அதிகம் உழைப்பு தேவை. ஏனெனில் கட்டுரையை நீங்கள் எத்தனை பக்கம் வேண்டுமானாலும் நீட்டிக்கலாம், ஆனால் பத்திகளுக்கு மிகவும் குறைவான இடமே ஒதுக்கப்படும் என்கிறபோது அதற்குள் விஷயத்தைச் சொல்லிமுடிக்க நீங்கள் அதிகம் யோசிக்கவேண்டிய தேவையுள்ளது. எனவே பத்தி எழுத்துகளின் வீச்சு குறித்து உணர்ந்திருப்பவர்கள், அது என்னவென்று தெரிந்தவர்கள் தம்மைப் பெருமையாகத்தான் சொல்லிக் கொள்வார்கள். ஆங்கிலத்தில் Columnist என்ற சொல்வது இழிவானதல்ல. ஆனால் தமிழ் இலக்கியச்சூழலில் யாரையாவது நீங்கள் பத்தி எழுத்தாளர் என்று சொன்னால்… அதை அவர்கள் விரும்புவதில்லை. எழுத்தாளர், கட்டுரையாளர் என்று திருத்துவார்கள். அல்லது குறைந்தபட்சம் இன்னாருடைய Non-Ffiction writing என்று சொல்லச்சொல்வார்கள். இந்தப் புத்தகத்துக்கான முன்னுரை எழுதும்போது, இந்தப் பத்தியெழுத்து என்பதற்கு இலக்கணம், வரைமுறை என்று ஏதாவது உண்டா என சிறிது ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாயிற்று.

அந்தவகையில் இதன் வரலாறு 1920-களில் தொடங்குகிறது. இன்றைக்கு, பத்தி எழுத்து என்ற இந்த எழுத்துவகைதான், ஊடக உலகில் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமுதாய விஷயங்களைப் பேசுகிற, குரல் கொடுக்கிற எழுத்தாக உலகெங்கும் மாறியுள்ளது. பத்திகள் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் பத்திகள் உண்டு என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. மேலைநாடுகளில் பத்தி எழுதுபவர்களை Columnist என்பார்கள். அவர்களை
  • Advice columnist
  • Critic
  • Editorial opinion columnist
  • Gossip columnist
  • Humor columnist
  • Food columnist
என்று பிரிப்பது வழக்கம்
Advice columnist – என்பது கேள்வி பதில்களாக சமகால வாழ்வில் உண்டாகும் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது பிரசித்தமான ஒரு எழுத்துமுறை. உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினையை நீங்கள் கடிதமாக எழுதினால் தீர்வு சொல்வார்கள்.

Critic – என்பவர்கள் விமர்சகர்கள், கலை, இலக்கியம், கட்டுமானம், உணவு போன்ற துறைகளில் விமர்சிப்பவர்கள்.

Editorial opinion columnist – சமகால அரசியல் சமூக நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனம் அடங்கிய பத்திரிக்கைத் தலையங்கம் எழுதுபவர்கள்.

Gossip columnist – பிரபலங்களைப் பற்றி, அவர்களது படைப்புகள் குறித்த விமர்சனங்களை பெயர் குறிப்பிடாமல் எழுதுபவர்கள். (கிசுகிசு)

Humor columnist – சமகால நிகழ்வுகளை, அரசியலை, நபர்களை பகடியாக விமர்சிப்பது. இதில் நகைச்சுவை ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும்.

Food columnist – உணவகங்கள், உணவுமுறைகள் குறித்த எழுத்து.

இதுபோக இன்று பங்குவர்த்தகம் மற்றும் அதன் போக்கு குறித்த பத்திகளும் வெளிவருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் குஷ்வந்த் சிங், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, குல்தீப் நாயர், ஷோபா டே, கன்வால் பார்தி போன்றவர்கள் பத்தி எழுத்துகளில் உலகளவில் அறியப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாமரன், ஞாநிசங்கரன் போன்றவர்களைப் பத்தி எழுத்தாளர்களாகக் குறிப்பிடலாம். சாரு நிவேதிதா, எஸ்.ரா, சுஜாதா போன்ற எழுத்தாளர்களும் கூடப் பத்திகளை எழுதியிருக்கிறார்கள். இன்றைக்கு இணையத்தில் Blog, Facebook போன்றவற்றில் எழுதப்படுகிற எழுத்துகளைக்கூடப் பத்தி எழுத்துகளாகவே அடையாளம் காட்டுகிறார்கள்.

பத்தி என்பதன் விளக்கம் என்னவென்று பார்ப்போமானால்:
An article on a particular subject or by a particular writer that appears regularly in a newspaper or magazine. அதாவது ஒரு குறிப்பிட்ட பொருள் சார்ந்து அல்லது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரால் செய்தித்தாள் அல்லது பத்திரிகையில் தொடர்ந்து எழுதப்படும் எழுத்து. அந்த வகையில் யோசிக்கும்போது பத்தி எழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கணத்துக்குள் இல்லாமல் free form போலத் தோன்றினாலும் ஒரு எளிமையான Formula பத்திகளுக்கு உண்டு. அதை 4S என்று சொல்வார்கள்.
  1. Make it short – அளவு – பொதுவாக ஒரு 1000 வார்த்தைகளுக்குள் சொல்லி முடிக்கவேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் இன்னமும் சிறப்பு.
  2. Make it simple – எளிமை – வாசகனின் அறிவுப்பரப்பு குறித்த தெளிவுடன் இருத்தல், அவனுக்குப் புரிகிற மொழியில், புரியக்கூடிய விஷயங்களை மட்டுமே பேசுவது.
  3. Make it sound – தெளிவு – உங்கள் எழுத்து உங்களுடைய தரப்பைத் தெளிவாகப் பேசவேண்டும். உங்களுடைய கருத்துகளை தெளிவாக எடுத்து வையுங்கள்.
  4. Make it sing – தனித்தன்மை – பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவது, தனித்தன்மையான வாக்கிய அமைப்புகளை உருவாக்குவது. உங்கள் எழுத்து மற்றவர்களிடமிருந்து தனியாகத் தெரியும்படி அமைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு நல்ல பத்தியை எழுதவும் அடையாளம் காணவும் இக்குறிப்புகள் உதவும். பத்திகள் கட்டுரையைப் போலவே ஒரு ஆரம்பம் அதாவது முன்னுரை மற்றும் உடல்பகுதி, முடிவுரை என்று மூன்று விதமாக பகுக்கக் கூடியதாக இருக்கும். பத்திகளில் தன்னிலை வாக்கியங்கள் குறைவாக இருக்கவேண்டும், அடிக்கடி எழுதப்படக்கூடாது, அப்படி எழுதினால் அது சுயஅனுபவக் கட்டுரைகள் அதாவது Anecdote என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள், அந்த வகைமைக்குள் வந்துவிடும். எனவே சுய அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுவோமானால் அதைப் பத்திகள் என்று சொல்லக்கூடாது. ஒரு நிகழ்வில் ஏதேனும் ஒரு சார்புநிலையில் இருந்து எழுதப்பட வேண்டும். இவ்வளவுதான் பத்தி என்பதன் இலக்கணம்.

மேலும் பத்தி எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்…
  1. பத்தி எழுதுபவர்கள் ஒரு நிகழ்வில் ஏதேனும் தரப்பைத் தேர்ந்தெடுத்து   எழுதுவது அவசியம், மதில்மேல் பூனை நிலை உதவாது.
  2. தம்முடைய தரப்பில் கவனம் செலுத்தவேண்டும்.
  3. அதேசமயம் எதிர்தரப்பினர் வைக்கக்கூடிய வாதங்கள் குறித்தும் யோசிக்க வேண்டும்.
  4. ஒப்பீடுகளோடு கருத்தை விளக்குவது எளிதில் புரியவைக்கும்.
  5. தனி மனிதரையோ, அரசியல் சமூக நிகழ்வுகளையோ அல்லது சூழலையோ   விமர்சிப்பதில் தவறில்லை, தைரியமாக விமர்சிக்கவேண்டும்.
  6. எழுத்தில் எப்போதேனும் சுய அனுபவம் சேர்வதும், உள்ளூர் சமாச்சாரங்களும் பத்தியை சுவாரசியமாக்கும்.
  7. உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்கும் உண்மை நிகழ்வுகளைக் குறிப்பிடுங்கள்.
  8. களத்தில் இறங்கிச் செய்திகளை சேகரித்து அவற்றைத் தெரியப்படுத்துவது நல்ல உத்தி.
  9. உங்கள் கருத்தில் அழுத்தம் திருத்தமாக இருங்கள், மேம்போக்கான கருத்துகளை யாரும் ஒருபோதும் விரும்புவதில்லை.
  10. ஒரு சிக்கலில் வெறுமனே அதைக்குறை சொல்வதை விட்டுவிட்டு அதற்குத் தீர்வு சொல்ல முயலுங்கள். அதுதான் தேவை, குறை சொல்வது என்பது யாராலும் முடியக்கூடியதே.
இப்போது இந்த நூலைப்பற்றி…

உள்ளே இருப்பதைப் பேசுவதற்குமுன், வெளித்தோற்றத்தைப் பற்றிச் சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். வல்லினம் பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தும் 70-80 பக்கங்கள் மட்டுமே இருப்பது என்னைப் போன்ற கனத்த புத்தகங்களைப் பார்த்தவுடன் ஆயாசமடைபவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய விஷயம், சிறந்த கட்டுமானத்தோடு புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள், முன்னட்டை ஓவியங்கள் ஆகட்டும், பெரிய எழுத்துருவாகட்டும், இது வல்லினத்தின் புத்தகம் என்று தனித்த அடையாளத்துடன் பதிப்பிக்கிறார்கள். அது பாராட்டப்படவேண்டிய விஷயம்தான். வல்லினம் தொடர்ந்து இதேபோன்று தனித்தன்மையுடன் இப்பணியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மலேசிய இலக்கியத்தில் பத்தி எழுத்துகளை முன்பே ரெ.கார்த்திகேசு எழுதியிருப்பதாக அறிகிறேன், நான் அதை வாசித்ததில்லை. வல்லினம் வெளியீடாக வந்துள்ள, ம.நவீனின் ‘கடக்க முடியாத காலம்’, யோகியின் ‘துடைக்கப்படாத ரத்தக்கறைகள்’ ஆகிய தொகுப்புகளை வாசிக்க முடிந்தது. அடுத்ததாக, தற்போது தயாஜியின் இந்தத் தொகுப்பு.

தயாஜியின் இந்தத் தொகுப்பிற்கான முன்னுரையில் சொன்னது போல இத்தொகுப்பின் மொழி, ஒரு கிராமத்துச் சொலவடை போல எளிமையைத் தன்னுள்ளே வைத்திருக்கிற மொழி. அது அவருடைய இயல்பும் கூட. அவரோடு பழகியவர்களுக்கு அது தெரியும். ஒரு கிராமத்திலிருந்து பெருநகரத்திற்கு வரநேர்ந்த சிறுவன் ஒருவனின் குதூகலமும், ஆச்சரியமும், பயமும் ஒருங்கே கலந்த அந்த உணர்வு அவருடைய மொழியில் தெரியும். கூடவே ஒரு மெல்லிய அங்கதமும் அவருடைய மொழியில் இழையோடியிருப்பது சிறப்பானது.

நகரத்திற்கு வந்து இத்தனை வருடங்களாகியும், இந்நகரத்தோடு பல தளங்களில் தொழிற்பட்டும் தயாஜி தன்னுள் இருக்கும் அச்சிறுவனை இன்னமும் தொலைக்காமல் இருப்பதை அவருடைய அனுபவங்களை அவர் விவரிக்கும்போது தெரிந்து கொள்ளமுடிகிறது. அவருடைய எழுத்துகளை வாசிக்கையில் முதல் ஈர்ப்பு இதுவாகத்தான் இருக்கும். வெள்ளந்தியான மனதுடன் அதாவது வெகுளித்தனமாகக் கேட்கப்படும் எளிமையான கேள்விகளே எப்போதும், பதிலளிக்க முடியாத கேள்விகளாக இருக்கும். ஒரு குழந்தையின் எல்லாக் கேள்விகளுக்கும் உங்களால் நேர்மையாகப் பதிலளித்துவிட முடியாது. தயாஜியின் கேள்விகளும் அத்தகையதுதான்.

ஊரிலிருந்து வந்து உங்களுக்காக உழைக்கிற தமிழர்களை வெறுத்து ஒதுக்குகிறீர்கள், ஆனால் ஊரிலிருக்கிற, உங்களுக்காக எதுவுமே செய்யாத நடிகர்களை மட்டும் உறவென்று கொண்டாடுகிறீர்களே, ஏன்?

ஏன் இன்றைய வீடுகள் முதுபெற்றோர்கள் இல்லாமல் ஆகிவிட்டன? அவ்வீட்டிலுள்ள குழந்தைகளுக்கெல்லாம் யார் கதை சொல்வார்கள்?

விவேகானந்தரைப் பார்த்து வணங்குகின்ற உங்கள் கண்களுக்கு அதனை அடுத்துள்ள ஒரு பிரதேசமும் அங்கு போராடிக்கொண்டிருக்கும் மக்களின் நிலையும் தெரிவதில்லையே ஏன்?

வெட்டி வீசப்படும் முடியைத் திருத்திக் கொள்வதில்கூட சாதி பார்க்கும் நீங்கள் அது இல்லாதது போல் நடிக்கிறீர்களே ஏன்?

இந்தக் கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்வதை மறந்து நாம் ஒரு சௌகரியமான மனநிலையில் இருக்கிறோம். அவர் அதை ஞாபகப்படுத்தும் விதமும் அதிலிருக்கும் நியாயமும் நமக்குச் சற்று எரிச்சலூட்டும் என்றாலும் அவை கேட்கப்படவேண்டிய கேள்விகள்தான். வெளியிலிருந்து நகரங்களுக்குப் பெயர்பவர்கள் வெகுசீக்கிரமே ஒரு மனிதமற்ற விநோத குணத்துக்குள் தங்களைத் திணித்துக் கொள்வதும் – ஒட்டுமொத்த நகரமும் ஒரு கூட்டுமனம் போல ஒரேமாதிரி சிந்திப்பதையும் கவனித்து வியந்திருக்கிறேன். நகரம் மனிதர்களை இப்படி ஆக்குகிறதா? இல்லை மனிதர்கள்தான் நகரத்தை இப்படியாக்கி விட்டார்களா? எனக்குத் தெரியவில்லை. நான் நகரங்களிலிருந்து வீடு திரும்புகையில் நினைத்துக்கொள்வது; நகரம் என்பது ஒரு தனி உயிரி. அவ்விலங்கிடம் சிலரால் இணக்கமாக முடிகிறது, சிலர் வெருண்டு ஒதுங்குகிறார்கள், சிலர் வேறு வழியில்லாமல் அதனோடு உண்டு உறங்குகிறார்கள். தயாஜியும் அப்படியான சிந்தனைகளைத்தான் இக்கட்டுரைகள் மூலமாக முன்வைக்கிறார். ஒரு கிராமத்து இளைஞனான அவரால் இந்நகரத்து நியாங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தயாஜியைப் போன்ற இன்னமும் மனிதம் மிச்சமுள்ள இளைஞர்களாலேயே நகரம் முழுமையாக நரகமாகாமல் இருக்கிறது என்பேன்.

இந்தத் தொகுப்பில் சில பெண்கள் வருகிறார்கள். ‘ஊர்க்காரர்கள்’ கட்டுரையில் வரும் பூக்காரப்பெண், சன்னிலியோன் கட்டுரையில் வரும் குழந்தைகளின் தாய், பாவக்கணக்கு என்ற தலைப்பில் ஒரு திருமணமான ஆணை நம்பி வரும் விடலைப்பெண், வாசனையுள்ள அறைகள் தலைப்பில் வரும் விலைமாது. இவர்களிடத்தில் என்னால் ஒரு ஒற்றுமையைப் பார்க்க முடிந்தது. எல்லோருமே நகரத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது கையறுநிலையில் உள்ளவர்கள். நகரம்தான் அவர்களை மறைமுகமாக ஆட்டுவிக்கிறது. உங்களால் ஒருபோதும் நகரத்தை ஜெயிக்க முடியாது. இதுதான் நகரங்களுக்கான நியாயம்.

தொகுப்பிலுள்ள முக்கியமான கட்டுரையாக ‘ஒளிபுகா இடங்களின் ஒலி,’ ‘விவேகானந்தரும் விலைமாதர்களும்,’ ‘கேலிச்சித்திரமெனும் ஆயுதம்,’ ஆகிய கட்டுரைகளைக் குறிப்பிடலாம். குறிப்பாக விவேகானந்தரும் விலைமாதர்களும் என்கிற அக்கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக வரும் கடைசிக்கட்டுரையும் ஒரு சிறுகதைக்குண்டான சுவாரசியத்துடன் உள்ளதைக் கவனிக்க முடிகிறது. அவர் சிறுகதை எழுதக்கூடியவர் என்பது அறிந்த ஒன்றே. கல்குதிரையில் அவர் எழுதிய ’இன்னொரு கிளை முளைக்கிறது’ என்ற சிறுகதை நிச்சயமாக மலேசிய இலக்கியத்தில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளில் ஒன்று. அந்தவகையில் அவர் Onetime wonder ஆக இல்லாமல் அதுமாதிரியான சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே என் ஆசை.

சாமி யார்? என்ற கட்டுரையில் சிறு வயதில் அவர் சாமியாராக ஆசைப்பட்ட விஷயத்தைக் குறிப்பிடுகிறார். இன்றைய தேதியில் மரத்தடி முதல் கார்ப்பரேட் வரை சாமியார்களுக்கு இருக்கக்கூடிய செல்வாக்கும் சொல்வாக்கும் நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. இதை 15-20 வருடங்களுக்கு முன்பே உணர்ந்திருக்கும் தயாஜியிடம் ஏதோவொரு சக்தி இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே எனக்கும் தோன்றுகிறது. எனக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரிந்துகொள்ள எனக்கும் ஆசைதான். அதேசமயம் ’வெறும் செருப்பு’ சொல்லும் தத்துவார்த்தநிலை, அதாவது மாளாத சோகத்திலும் ‘மர்லின் மன்றோ’வை நினைக்கும் அந்தத் தத்துவார்த்த மனநிலை எத்தனை பேருக்கு வாய்க்கும் என்ற கேள்வியும் எனக்கு வருகிறது. துறவறம் மேற்கொள்வதற்கான அடிப்படைத்தகுதி அவரிடம் வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

தொகுப்பில் வெகுசில இடங்களில் தயாஜியின் எளிமையான மொழி ஒரு போதாமையாக இருக்கிறது. அதாவது அவருடைய பலமே பலவீனமாகவும் இருக்கிறது. தொடர்ந்து ஒரேகுரலில் ஒரேவிதமாக விஷயங்களைச் சொல்லிக்கொண்டு போவது Monotonous ஆகத்தோன்றுகிறதுதான். குறிப்பாக பண இலை, சாதி மயிர், கலீல் ஜிப்ரான் போன்ற கட்டுரைகளில். ஆனால் நிச்சயமாக அடுத்த தொகுப்பில் அது மாறுமென்பதும் எனக்குத் தெரியும். ஏனென்றால் தொடர்ந்து வாசித்து, தொடர்ந்து எழுதுகிறார். ஆரோக்கியமான விவாதங்களில் பங்கெடுக்கிறார் என்பதால், விரைவில் அவர் மொழி இன்னமும் வலுவானதாக மாறும். அதற்கு கல்குதிரையில் வந்த சிறுகதையே ஒரு உதாரணம். முன்னம் சொன்னது போல சொலவடை போன்ற அவருடைய எளியமொழி அதைப்போன்றே புரிந்துகொள்ள பல திறப்புகள் உள்ளதாகவும் மாறும்நாள் வெகு தொலைவில் இல்லை.


நன்றி வல்லினம் ஜனவரி 2015
வாசிக்க ; http://vallinam.com.my/version2/?p=2547

வல்லினம் நேர்காணல்

“என்னையடுத்து வேறோரு வாசகனுக்காக சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.” – தயாஜி 


 கேள்வி : சிறுகதை, கவிதை, தொடர்கதை என எழுதிக்கொண்டிருந்த நீங்கள், உங்களின் முதல் நூலாகப் பத்திகளின் தொகுப்பை வெளியிடக்காரணம் என்ன?


தயாஜி : மிகச்சரியாக நான் சொல்லவந்ததை எந்த வடிவத்தில் சொல்ல முடியுமோ, என் சக வாசகனுடன் என்னால் சுலபமாக பேச முடியுமோ அந்த வடிவில்தான் என் முதல் நூல் வரவேண்டும் என நினைக்கிறேன். பத்திகள் மூலம் என்னை அடையாளம் காட்ட நான் ஆசைப்படுகிறேன். நம் நாட்டு தமிழ்ச்சூழலில் பத்திகள் எழுதுவது குறைவு. முதன்முதலாக, பத்திகள் தொகுப்பு நூலாக வந்தது ம.நவீன் எழுதிய ‘கடக்க முடியாத காலம்’, அதனைத் தொடர்ந்து யோகியின் ‘துடைக்கப்படாத ரத்தக்கறைகள்’ தொகுப்பைச் சொல்லலாம்.

கேள்வி :  இந்நூல் குறித்து கொஞ்சம் கூறுங்கள்.

தயாஜி : தொடர்ந்து ஐந்தாண்டுகள் வல்லினம் இணைய இதழில் எழுதிய எனது பத்திகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். ஒருவேளை புத்தகத்தில் உள்ளதை இணையத்திலேயே படித்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டால், அது சாத்தியமில்லை. ஐந்தாண்டுகளில் எழுதிய 60 பத்திகளுக்குள் தேர்ந்தெடுத்ததைச் செறிவு செய்த பிறகே புத்தகமாக்குகிறோம். சில சமயம் நமது கருத்து காலத்தைத் தாண்டி நிற்பதில்லை. எழுதப்பட்ட காலத்தில் சிலாகிக்கப்பட்ட பத்திகள் இப்போது நீர்த்துப் போயுள்ளதைப் பார்க்கையில் அப்போதைக்கான மிகை உணர்ச்சி மட்டுமே அதில் இருந்தததாக உணர்கிறேன். இது தோல்வி என்றாலும் அதனைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. தேர்ந்தெடுந்த பத்திகளைச் செம்மைப்படுத்த வல்லினம் ஆசிரியர் ம.நவீன் பெரிதும் உதவினார். எழுதுகிறவருக்கு இணையாக அதனை செறிவாக்குகிறவர் உழைக்க வேண்டியுள்ளதை உணர்ந்தேன். ஒரு கருத்தை இன்னும் எவ்வளவு துல்லியமாக்கலாம்; எதனை இக்கருத்துடன் இணைத்தால் எளிமையாகும் என்பது போன்ற விபரங்களை, பத்திகளைச் செறிவாக்கும் போது கற்றுக்கொண்டேன்.

மனிதர்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஒவ்வொரு மனிதரிடம் பழகுவது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். என்னைப் பொருத்தவரை, என்னுடைய உலகம் என் வீட்டு வாசலைத் தாண்டியே இருக்கிறது. அந்த இயல்புடையவன் என்பதால்தான் நான் கலையைத் தேர்ந்தெடுக்கும்படி ஆனது. என் வயது நண்பர்களைவிட, என் வயதுக்கு மீறிய நண்பர்கள்தான் எனது பட்டியலில் அதிகம். பி.எம்.டபள்யு-க்களில் போகின்றவர்களைவிட சாலையோரத்தில் சோர்ந்துபோய் நடந்து போகிறவர்கள்தான் எனக்கு நெருக்கமானவர்களாகத் தெரிந்தார்கள். என்னால் மிகவும் சகஜமாக அவர்களுடன் பழக முடிந்தது. அவர்களுக்காகப் பேசுவதும் அவர்களிடம் பேசுவதும்தான் கலையின் வெளிப்பாடாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

ஐந்தாண்டுகள் மின்னல் பண்பலையில் அறிவிப்பாளராகப் பணியாற்றினேன். அப்போது எனது தொடர்புகள் இன்னும்  அதிகமானது. போதைப் பித்தர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், சிவப்பு விளக்குப் பெண்கள், கொலைக் குற்றவாளிகள் என சமூகக் கட்டமைப்பால் ஒதுக்கப்பட்டவர்களுடன் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். அவர்களின் வாழ்வு குறித்துப் பதிவு செய்யவே வானொலியில் ’கண்ணாடித்துண்டுகள்’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து ஒலிபரப்பினேன். அதற்காக என்மீது காவல்துறையில் புகார்கூடக் கொடுத்தார்கள். இருப்பினும் சரியான நோக்கமும் தெளிவான விளக்கமும் இருந்ததாலும், வானொலி நிர்வாகத்தின் துணையிருந்ததாலும் அதனைச் சமாளிக்க முடிந்தது. அரசாங்க வானொலிக்கு என சில வரையறைகளும் விதிமுறைகளும் உண்டு. அதற்கேற்றவாறு சிலவற்றைக் குறைத்தும் சிலவற்றைச் சொல்லாமலும் விட்டோம். பின்னர் அதனை எழுதும் சூழலை உருவாக்கி மீண்டும் அந்த அனுபவத்தைப் பெற்று எழுதிய பத்திகள் இந்நூலில் உள்ளன.

நாம் வாழும் சமூகத்தில் இருட்டான பகுதிகளைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொள்வது போல பாசாங்கு செய்வதால் நிலமை ஒரு போதும் மாறப்போவதில்லை. அதற்கான காரணத்தைக் கண்டறிவதும் அதனோடு விவாதிப்பதும் அதைப் பதிவு செய்வதுமே எழுத்தாளனின் பணி.




கேள்வி :  ஓர் எழுத்தாளராக உங்களுக்கு உவப்பான வடிவம் எது?

தயாஜி : எனக்கு உவப்பான வடிவம் எதுவென்று என்னால் கூறிவிட முடியாது. ஏனெனில் சிறுகதை என நினைத்து எழுத ஆரம்பித்து கவிதையில் முடிந்துள்ளன. கவிதை என நினைத்து ஆரம்பித்தவை சிறுகதையில் முடிந்துள்ளன. நகைச்சுவைத் துணுக்காக நினைத்தவை பத்திகளாக வளர்ந்துள்ளன. இப்படி, வடிவங்களை முன்னமே முடிவு செய்து எழுதும் வழக்கத்தின் மீது எனக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இல்லை. ஏதோ ஒன்றுதான் முன்முடிவுக்கு ஏற்றார்போல அமைகிறது.

கேள்வி : துடிப்பான இளம் எழுத்தாளர்கள் பலர் வல்லினத்தில் இணைந்து பயணிக்கின்றனர். நீங்கள் வல்லினத்துடன் இணைந்து செயல்பட காரணம் என்ன?


தயாஜி : இளம் எழுத்தாளர் பழம் எழுத்தாளர் என்கிற பேதமெல்லாம் வல்லினத்தில் இல்லை. இது ஓர் இயக்கமோ நிறுவனமோ அல்ல; ஒரு குழு அவ்வளவே. அதிலும் வயதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அ.பாண்டியன், சந்துரு, சரவண தீர்த்தா, ஸ்ரீதர்ரங்கராஜ் போன்றவர்கள் நடுத்தர வயதுள்ளவர்கள் என்றாலும் அவர்களின் சிந்தனையாற்றல் தற்போதைய இளம் சமூகத்தைவிட துடிப்பாக இருக்கிறது. எழுதுகிறவர்கள் மட்டுமின்றி, மாற்றுச்சிந்தனையின் தேவை உணர்ந்தவர்கள் அனைவருமே வல்லினத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் எண்பது வயதை நெருங்கும் ஒருவர் என்னை அழைத்திருந்தார். அம்மாத வல்லின இணையப் பக்கத்தில் வந்திருக்கும் கட்டுரைகள் நன்றாக இருப்பதைக் குறித்துப் பேசினார். தொடர்ந்து, வல்லினம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்குத் தவறாது கலந்துகொள்ளப் போவதாகவும் கூறினார். வல்லினம் வயது பேதங்களுக்கு அப்பால் சென்று நாட்களாகிவிட்டது.
ூலை பெற்றுக்கொள்கிறார் எழத்ாளர் ஸ்ரீதர்

என்னிடம் சில கேள்விகளும் சில குழப்பங்களும் இருக்கின்றன. நான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சமூகம் எனக்கு ஒரு விதத்தில் அச்சமூட்டுவதாக இருக்கிறது. அதிகாரத்தின் கால்கள் எப்போது வேண்டுமானாலும் சாமான்யனின் தலையை அழுத்தலாம். ஊடகங்கள் நினைத்தால், ஒன்றை சாகும்வரை நம்பவைக்கலாம். பத்திரிகைகள் நடப்புச் சூழலை மறைத்துவிடலாம். இப்படி என்னை சுற்றிலும் நடந்துக் கொண்டிருக்கும் குழப்பங்களுக்குக் கேட்கவேண்டிய கேள்விகளிலிருந்து என் குரல் ஒரு எல்லையைத் தாண்டி செல்லவில்லை. காரணம் என்னமோ எளிமையானதுதான். ஆடையற்றவன் ஊரில் ஆடையணிந்தவன் பைத்தியம். அப்படி, ஒற்றை மனிதனாகக் குரலெழுப்பி, விரக்திக்குட்பட்டு ஊமையானவர்களின் எண்ணிக்கை எனக்கும் நன்றாகவே தெரியும். ‘அட போப்பா நம்ம சொன்னா எவன் கேட்கறான், பட்டாதான் திருந்துவானுங்க நம்ம செத்த பிறகுதான் அன்னிக்கே சொன்னாரேன்னு வருந்துவானுங்க..’ இப்படி நானும் விரக்தியிலேயே மடிந்து போக விரும்பவில்லை. என்னுடைய கேள்விகளுக்கு அறிவு சார்ந்த பதில்கள் போதவில்லை. என் குழப்பங்களுக்கு என் படிப்பறிவில் இருந்தும் என் அனுபவங்களில் இருந்தும் தெளிவு சரியாக அமையவில்லை. குழு என்பதன் பலம் அப்போதுதான் புரிந்தது. வெவ்வேறு துறை சார்த்தவர்கள். வெவ்வேறு அனுபவங்கள் கொண்டவர்கள். அவர்களின் வெவ்வேறான பார்வை. ஆனாலும் அவர்கள் நேர்மையும் மாற்றுசிந்தனையும் என்னை அவர்களுடன் இணைக்க வழிவகுத்தது.

கேள்வி : உங்கள் நூல் தமிழகப் பதிப்பகத்துடன் இணைந்து உருவாகியுள்ளதாக அறிகிறோம். ஏன் இந்த முயற்சி?

தயாஜி : இதுபோன்ற முயற்சிகள் முக்கியமானவை. எத்தனை நாள்தான் தமிழகத்தில் இருந்து இலக்கியங்களை இறக்குமதி மட்டும் செய்வது. ஏற்றுமதிகளைச் செய்ய வேண்டாமா? நம் நாட்டிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். இங்கும் படைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனை நாம்தான் வெளிக்கொணர வேண்டும். ஒரு சமயத்தில் அம்மாவின் கைபிடித்து நடந்த நாம், பின் நமக்கான நடையைக் கண்டறிந்து  நடந்துகாட்டுவது போலத்தான். ஒரு சமயத்தில் நமக்கு தமிழகத்தில் இருந்து இறக்குமதிகள் தேவையாக இருந்தன. இப்போது நாம் நமக்கான நடையைக் கற்றுக்கொண்டு விட்டோம். நாம் நடந்து காட்டவேண்டும். உடனே தமிழகத்தையோ அங்கிருக்கும் படைப்பாளர்களையோ குறைத்துப் பேசுவதாகப் பொருள் கொள்ளக்கூடாது. தமிழகப் பதிப்பகத்துடன் இணைந்து, புத்தகம் வெளியிடப்படுவதால், தமிழகத்தில் இருக்கும் வாசகர்களுக்கும் நமது புத்தகம் சென்று சேர்வதற்கான சூழல் அமைகிறது. இப்பகிர்வு இப்போது அவசியம் எனக் கருதுகிறேன். இந்த இணைவால் வல்லினம் பதிப்பக நூல்கள் அங்கு நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளிலும் இடம்பெறும். பரந்த வாசகப் பரப்பை அடைவதற்கான வல்லினத்தின் முயற்சி இது.


கேள்வி : தொடர்ந்து எவ்வகையான ஆக்கங்களைத் தர ஆர்வம் கொண்டுள்ளீர்கள்?

தயாஜி : புத்தகம் வெளியீடு செய்வது எனது நீண்ட நாளைய கனவு. காந்தி சொன்னதாகச் சொல்லுவார்கள். இவ்வுலகில் நிலைத்து நிற்க வேண்டுமானால், மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும். ஒன்று, வீடு கட்டிவைப்பது. இரண்டு, வாரிசுகளை உருவாக்கிவிடுவது. மூன்று, புத்தகம் எழுதுவது. முதல் இரண்டின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.  அவ்வப்போது செத்துவிடுவோமா என்ற பயம் இருந்தாலும், நான் சாகாமல் இருக்கவே விரும்புகிறேன். அதற்கும் சேர்த்துதான் எழுதுகிறேன். என்னிடம் சொல்லவேண்டிய கதைகள் ஏராளமாக உள்ளன. இம்முறை நாவல் ஒன்றை முயற்சிக்கலாம் என ஆசை உள்ளது. அதனுடன் இங்குள்ள திரைப்படங்களுக்குக் கதை வசனம், பாடல் எழுதுவதும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி : இன்று உங்கள் வாசிப்பு எவ்வகையில் உள்ளது. அதன் பரிணாமம் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள்?

தயாஜி : ஆச்சர்யமாக உள்ளது. எப்படியெல்லாம் கதைகள் சொல்லப்படுகின்றன. எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். எதையெல்லாம் சகித்து, சக மனிதனால் மிதிபட்டு வாழவேண்டியுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள முதல் படியாக இருப்பது வாசிப்புதான். தொடக்கத்தில் என் தனிமையின் சுவாரஷ்யத்துக்காகப் படிக்கத்தொடங்கியவன் இன்று என் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே வாசிப்பை ஏற்றுக்கொண்டேன். நல்ல புத்தகமாக படுவதை உடனே வாங்கி வைத்துவிடுவது பழக்கமாகிவிட்டது. என்னால் வாசித்து முடிக்கமுடியாமல் போகலாம். என்னையடுத்து வேறோரு வாசகனுக்காகவாவது சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.

கேள்வி : அறிவிப்பாளர் தயாஜி; எழுத்தாளர் தயாஜி யார் உங்களுக்குப் பிடித்தவர்?

யாழின் இரண்டாவது வெளியீடு 2016
தயாஜி : இன்னும் நினைவு இருக்கிறது. ஒருமுறை இப்படி எழுதியிருந்தேன். ’அறிவிப்பு பணத்திற்கு; எழுத்து மனத்திற்கு’; உடனே விசாரிக்கப்பட்டேன். தொழில் என்பது வேறு. விருப்பம் என்பது வேறு. அறிவிப்புத் துறை எனக்குப் பிடித்தமான துறையாக இருந்தாலும் அப்போதைக்கு எனக்கு வாழ்வாதாரமாக இருந்தது அறிவிப்பு ஒன்றுதான். அதன் மூலம்தான் வருவாய் வந்தது. இப்படி நினைத்துப் பார்க்கிறேன். அறிவிப்பாளர் தயாஜியை எல்லோருக்கும் பிடிக்கும். எழுத்தாளர் தயாஜியை பலருக்கும் பிடிப்பதில்லை. அறிவிப்பாளர் சமூகம் விரும்புவதைப் பேசுபவர். எழுத்தாளர் தான் விரும்புவதைப் பேசுபவர்.

கேள்வி : செயல்பாட்டு ரீதியில் உங்கள் அடுத்தடுத்த முயற்சிகள் என்ன?
 

யாழின் மல் வெளியு 2015

 
தயாஜி :’யாழ்’ பதிப்பகத்தின் மூலம் மாணவ சமூகத்துடனான தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். இப்போதைய சூழலில், தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் இருந்துதான் எதையும் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அவர்கள்தான் நாளை வாசகர்களாக எழுத்தாளர்களாக சிந்தனையாளர்களாக இச்சமூகத்தில் வெளிவரப்போகிறார்கள். அவர்களை கவனிக்கவேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும், அவர்களைத் தொடர்ந்து தமிழ்ச்சூழலைப் புரிந்துக்கொள்ள வைக்கவேண்டும். வல்லினத்தின் இணை நிறுவனமாக ‘யாழ் பதிப்பகம்’ தொடங்கப்பட்டுள்ளது. அது வல்லினத்தின், மாணவர்களுக்கான முயற்சி.. அதில் நானும் ஒருவனாக இணைந்து என் பங்குக்குச் செய்யவேண்டியதை செய்வதையே எனது செயல்பாடாக நினைக்கிறேன். மிக விரைவில் அதன் புதிய திட்டங்களை அறிவிப்பேன்.

ன்றி 2016 ஜி வல்லினம் 

http://vallinam.com.my/version2/?p=2479

 

 

டிசம்பர் 20, 2015

வாசனைபூசிய வாழ்வு



மொழிப்பெயர்ப்பாளர் எழுத்தாளர் ஸ்ரீதர் ரங்கராஜன்


   இந்தக் கட்டுரைத்தொகுப்பில் என்னை மட்டுமன்றி எவரையும் முதலில் ஈர்க்கக் கூடியது அதன் பாசாங்கற்ற குரல்தான். வலிந்து சொற்களைத் தேடி அலங்காரமாக எந்த விஷயத்தையும் சொல்வதில்லை. தனக்கு நடந்த சம்பவங்களை, தனக்குள் எழுந்த கேள்விகளை, நிகழ்ந்த புரிதல்களை அதிகம் மெனக்கெடாமல் செய்தபதிவு இக்கட்டுரைகள். குறிப்பாக, ‘ஊர்க்காரர்கள்’, ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’, ‘பொம்மைகளின் வன்முறை’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம். ‘பாட்டியில்லா வீடுகள்’ மலேசிய மண்ணுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் பொருந்தக்கூடியது. தயாஜியின் கேள்விகள் எளிமையானவை, இயல்பானவை, உள்ளார்ந்த அக்கறையிலிருந்து எழுபவை. ஆனாலும் சிலசமயங்களில் எளிமை, சொல்லவந்த விஷயத்துக்கு ஈடுகொடுக்கவில்லை என்பதும் உண்மை, உதாரணமாக சாதிமயிர், விவேகானந்தரும் விலைமாதர்களும் போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம். 

  சிலவிஷயங்களைப் பேசும்போது மொழியில் வேகமும் அழுத்தமும் தேவைப்படுகிறது என்பதை தயாஜி கவனிக்கவேண்டும்.
ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை, அது நடித்துக் கொண்டிருக்கின்ற இடங்களை,
புத்தகத்தின் பின் அட்டை
வாசனைபூசி மறைத்து வைத்துள்ள விஷயங்களை கேள்விக்கு உட்படுத்துவதே இலக்கியத்தின் வேலை. தயாஜி அப்படிப்பட்ட கேள்விகளைத்தான் முன்வைக்கிறார். சமூகம் என்கிற இக்கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு அதைக் கேள்விக்குட்படுத்துவது மட்டுமல்லாது தன்னையும் சுயவிசாரணை செய்துகொள்கிற எழுத்துகளே உண்மையில் ‘படைப்பு’ எனப்படும். அதுதான் ஒரு எழுத்தாளனின் எழுத்து நேர்மைக்கான சாட்சியமும் கூட. எழுத்தாளன் என்பவன் பீடத்தில் அமர்ந்து பரிபாலன நோக்கோடு ஆசிர்வதிப்பவனாகவோ அல்லது சமூகம் ’இதுதான் ஒழுங்கு’ என்று சொல்வதை ஏற்று, மந்தையாடு போலப் பின்சென்று, யாருக்கும் வலிக்காமல் எழுதி, கால் கழுவியதற்காகக் கழுத்தில் இடப்படும் மாலையைப் பெருமையாகப் பல்லிளித்துத் தாங்கியபடி இருப்பவனாகவோ இருக்க முடியாது.
எனது பெற்றோர் நூலை வெளியிட ஸ்ரீதர் பெற்றுக்கொள்கிறார்
   ஒரு நல்ல எழுத்தாளன் உங்கள் மனசாட்சியைப் போல, நீங்கள் அவனிடமிருந்து தப்பிக்கவே விரும்புவீர்கள். நல்ல எழுத்தாளனின் படைப்பு (மேற்சொன்னது போன்ற)  ஒரு சமூகத்துக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுக்கும். ஆடைகழற்றிப் பொதுவில் நிற்கவைத்த பதைப்பை ஏற்படுத்தும். அவன் இருப்பும் கேள்விகளும் உங்களின் பண்பட்ட, நாகரீகமான, வேறுபாடுகளற்ற, இணக்கமான, பரிபூரணமான, தேவைகளற்ற சமூகம் என்ற ஆழ்ந்த, சுகமான நித்திரைக் கனவுகளை உங்களிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும். அது எவ்வளவு கொடூரமானது என்று எனக்குத் தெரியும். உங்களின் ஆழ்மனதிலிருந்து அவன்மீதான வெறுப்பு அவ்வளவு கசப்போடு வழியும், இன்னும் ஒருவீச்சு, பலமான, முடித்துவிடக் கூடியதான வீச்சு, நீங்கள் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி கைகளைப் பின்னுக்கு மறைத்து, முகத்தில் புன்னகையோடு விரும்பிக் காத்திருப்பீர்கள். 

நூல்

    அதையும் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. சொல்லப்போனால் அது அவ்வளவு சரியானதும் கூட. அது கிடைத்தபின் நீங்கள் மீண்டும், அவன் கேள்விகளால் எழுந்த இப்போது உங்களை அரித்துக் கொண்டிருக்கும் இக்குற்றவுணர்வின்றி, பல்லிளித்தபடி மாலையணிந்து, வாசனைபூசி மறைத்துக்கொண்டு உங்கள் ஆழ்ந்த, நம்பிக்கையான கனவுகளைக் காணத் தொடங்கலாம். அப்போதுதான் உங்கள் உலகம் சமநிலையில் இயங்க ஆரம்பிக்கும்.

தயாஜி,
நூல் குறித்து பேசும் போது
இது நல்லதொரு ஆரம்பம், வாழ்த்துகள் உங்களுக்கு. இன்னுமின்னும் உங்களை மெருகேற்றிக் கொள்ளுங்கள், வாசியுங்கள், கேள்வி கேளுங்கள், எழுதுங்கள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல…
உங்களுக்கும் வல்லினத்திற்கும் என் அன்பு.

(1.11.2015-ல் வல்லினம் பதிப்பகம்  வெளியீடு செய்த ‘ஒளி புகா இடங்களின் ஒலி’ என்ற எனது முதல் நூலுக்கு நண்பர், மொழிப்பெயர்ப்பாளர், எழுத்தாளர் ஸ்ரீதர் ரங்கராஜன் கொடுத்த நூல் முன்னுரை)


வல்லினத்தில் வாசிக்க இங்கு சொடுக்கவும்
http://vallinam.com.my/version2/?p=2401

கேள்விகளிலிருந்து பதிலுக்கு




   என் முதல் புத்தகம் இது. ஐந்தாண்டுகள் வல்லினத்தில் நான் எழுதிய பத்திகளை தேர்ந்தெடுத்து புத்தகமாக்கப்பட்டுள்ளது. பெயருக்குத்தான் பல ஆண்டுகள் எழுதியதாகச் சொல்லிக்கொண்டாலும் அந்தந்த காலக்கட்டத்தோடு சில படைப்புகள் காலாவதியாகிவிடுவதை இந்த நூலுக்காகக் கட்டுரைகளைத் தொகுக்கும் போது உணர்ந்தேன். இது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. 

  எழுத்தென்பது கருத்து ரீதியில் முரண்பட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் காலம் கடந்தும் நிற்கவேண்டும். அப்படியான பயத்தையும் பொறுப்பையும்தான் இத்தொகுப்பு வெளிவரும் வேலையில் நான் சுமக்கிறேன்.

   எனக்குள் இருக்கும் அனுபவங்களுக்கும் என் கேள்விகளுக்கும் வடிக்காலாக என்னுடைய பத்திகளை நான் அணுகினேன். அவற்றை வாசித்து எப்போதும் கருத்து கூறி, அகச்சுழலில் இருந்தும் புறச்சூழலில் இருந்தும் தப்பிக்க உதவியாக இருந்த வல்லினம் நண்பர்களுக்கு எப்போதும் என் அன்பு.

   “எழுத்தென்ற ஒன்று இருக்கிறது உனக்கும் வந்தால் எழுதலாம்” என தொடக்கப்புள்ளி வைத்த என் அப்பா வெள்ளைரோஜா என்ற குணசேகரனுக்கும், இந்த பத்திகளை எழுதவும் இத்தொகுப்பு வெளிவர காரணமாகவும்  இருக்கும் வல்லினம் இணைய இதழ் ஆசிரியர் ம.நவீனுக்கும் எனது நன்றி.

   எழுத்தென்னும் பெரும்பசிக்கு தன்னையே தின்ன கொடுப்பதும் கலையில் வெளிப்பாடுதான் என்பதை நானே புரிந்துக்கொள்வதாகத்தான் இத்தொகுப்பைக் கண்டுச் சிரிக்கிறேன்.

அன்புடன் தயாஜி


(1.11.2015-ல் வல்லினம் பதிப்பகம் மூலம் வெளியீடு கண்ட எனது முதல் புத்தகத்தில் எனது முன்னுரை)

பிப்ரவரி 18, 2014

கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்: சிறுகதை விமர்சனம்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து மஹாத்மன் எழுதியிருக்கும் கட்டுரை)

பத்திரிகைகளில் இக்கதைக்கான விமர்சனங்களைப் பார்த்தேன்.மிகக் கடுமையான கண்டனத்திற்கும் உட்ச பட்ச தாக்குதலுக்கும் இழிவிற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகி இருந்தது. இதற்குப் பின்னால் பழிவாங்கும் நுண்ணிய அரசியல் இருந்தாலும் அதனை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து இக்கதைக்கான விமர்சனத்தை உண்மையான வார்த்தைகளோடு பதிவு செய்கிறேன்.
இதுவொரு மனப்பிறழ்வுக்கானவனின் கதை என்பதை ஒரு முறை வாசித்து முடியும் போது புரிந்துவிடக்கூடிய விஷயம். அடுத்து இதுவொரு பலான – ஆபாசம் நிறைந்த கதையோ என்ற எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க இயலாத ஒன்றுதான்.
 
என் 20-23 வயது வரை கிள்ளான் பட்டணத்தின் மத்தியில் குளிரூட்டி உணவகத்தில் வேலைசெய்யும்போது ‘கண்டதையும் படிக்க வேண்டும்’ என்று முற்பட்டதினால் எதிர்ப்புற பெட்டிக்கடையில் ‘மஞ்சள்’ புத்தகக் கதைகளை வாங்கிப் படித்தேன். ஆங்கிலம் கலந்த தமிழ் நடையோடு இருக்கும் இச்சிறுகதையானது ஏறக்குறைய அந்தப் புத்தகங்களின் சாயலைக் கொண்டிருக்கின்றது.
 
கவனிக்க: சாயல் மட்டும் தான்.
 
மிகவும் வெளிப்படையானத் தன்மை, மிகச் சாதாரணமான சொல்லாடல், உத்திகளுக்கும் வாக்கிய இறுக்கங்களுக்கும் மெனக்கெடல் இல்லாத கதையமைப்பு ஆகியவை இக்கதையானது ‘பண்பாட்டுச் சீரழிவு’ என்ற முத்திரையை பெற்றுவிட்டது.
 
சரி,போகட்டும்.
மனப்பிறழ்வு அல்லது மனநோய் என்பது பலவகையானது. நமது அன்றாட வாழ்க்கையில் லூசு என்று அரை லூசு என்றும் முழு லூசு என்றும் ஒரு நட்டு கழன்றுவிட்டது என்றும் ஒருவருக்கொருவர் சொல்வதைப் பார்க்கின்றோம். பில்லி சூனியம்,செய்வினை, ஏவுதல் என்பது மந்திர தந்திரங்களிலும் நடு ஜாம சுடுகாடு பூசையிலும் கல்லறைகளின் மீதும் மண்டையோடு-நரபலி –செத்த ஆவிகளோடு செய்யபடுவதின் மூலம் உண்டாகும் மனப்பிறழ்வு ஒரு வகை

*தஞ்சோங் ரம்புத்தான் மனநல காப்பகத்தில் இவ்வகையான மன நோயாளிகளே 1987 வரை அதிகமானோர் சிகிச்சைப் பெற்று வந்தனர். அதன் பிறகு மனநல பாதிப்பின் தடம் மாறியது. கணக்கு வழக்கில்லாமல் விகிதாச்சாரம் எகிறியது.
 
குடும்பத்தால் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுபோய் மனநல சிகிச்சைப் பெற்றுக்கொண்டவர்கள் வெகு சிலரே.பெரும்பான்மையோர் வீட்டில் உள்ளோரை ஏமாற்றி அல்லது ஒருவித நாடகமாடி வீட்டை விட்டு வெளியேறி வேறொரு மாநிலத்திற்கு மாற்றலாகி {குறிப்பாக தலைநகருக்கு}வந்து தங்களின் மனப்பாதிப்பினால் நிலையான ஒரு வேலையில் இருக்க முடியாமலும் கீழ்ப்படிந்திருக்க இயலாமையினாலும் வீடற்றவர்களாக நாதியற்றவர்களாக கடைவீதி ஐந்தடிகளிலும் ‘மேபெங்க்’ படிக்கட்டுகளிலும் டத்தாரன் மெர்டெக்கா சதுக்கத்திலும் இரவு நேரத்தை கழிக்கும் இவர்களில் சிலர் போதை வஸ்துகளுக்கு அடிமையாவதால் வாழ்வு சிதிலமடைந்திருக்கின்றது.
 
ஒரு காரியத்தை குறித்தும் தீவிரமாய் ஈடுப்படுகிறார்கள். இதனால் பல முக்கியக் காரியங்களை கவனிக்க முடிவதில்லை. ஈர்ப்பில் வந்த இலயிப்பும் திளைப்பும் அதிகமாகி மாற்றம் ஏற்படுகிறது. மனத்தடுமாற்றம் தீவிரமாகி ஒரு கட்டத்தில் மனப்பிறழ்வை உண்டாக்கி விடுகின்றது.
இந்த மனப்பிறழ்வை தாங்கிக்கொள்ள முடியாததால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றார்கள். சிலர் தாங்களாகவே வெளியேறுகிறார்கள். சிலர் தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார்கள். ஒரு லாபத்திற்காகவோ சுயநலத்திற்காகவோ அவமானத்திற்குள்ளாவோம் என்ற பயத்தினாலோ அடிஉதை கிடைக்க நேரிடும் என்பதாலோ மவுனிகளாகிவிடுவோரும் உண்டு.சொந்த வீட்டில் உள்ளோரே சமயத்தின் பேரில் ஒருவரை நிர்ப்பந்தித்து செய்யச் சொன்ன காரியங்கள் நிமித்தம் மனப்பிறழ்வுக்குள்ளான கதை எனக்குத் தெரியும்.அவர் ஒரு பெண்.
 
தயாஜியின் கதையில் வரும் கதாநாயகனின் மனப்பிறழ்வு யாரும் அறியாதது.இது ஒரு விதம்.இந்த விதம் இப்போதுள்ள காலக்கட்டத்தில் இனமத வேறுப்பாடின்றி எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது. பத்திரிகை செய்திகளே இதற்கு ஆதாரம்.ஆனால் நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். ‘என் வீட்டில் இப்படி கிடையாது’ என்று அடித்துப் பேசி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். ‘உவே?’ என்று வாந்தியெடுத்த நபரின் வீட்டிலும் அவருக்குத் தெரியாமல் இது நடக்கலாம்.நாம் நமது பிள்ளைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க முடியுமா என்ன? மகாத்மா காந்தியே தன் பிள்ளை விஷயத்தில் இடறியிருக்க நாம் எம்மாத்திரம்?

எல்லா மத வேதங்களிலும் இந்த இடறல்கள் உண்டு .ஆழமான விவரிப்பு இல்லையெனும் ஒரு வரி அல்லது ஒரு வாக்கியம் போதுமே,யூகித்தறிய.
 
இணையத்தளம் வழி ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஆபாச அவலங்களுக்குள்ளாகி சிக்கி வெளிவரத் தெரியாமல் தடுமாறி தடம் மாறிபோய் தங்களத் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் வணங்கும் தெய்வம்/கடவுள் கூட காப்பாற்ற முடியாமல் போகிறது.

ஒரு வெளிப்படையான,அப்பட்டமான கதை இது என்ற போதிலும் கதாநாயகனின் மனப்பிறழ்வுக்கான முதன்மை காரணமாக பாலியல் சினிமா திகழ்கிறது.சிறுவயது முதலே இதிலேயே நாட்டம் கொண்டி இலயித்து திளைக்கிறான்.அடிக்கடி கழிவறைக்குப் போகிறான். கழிவறையே கதியென ஆகிறான். மனதளவில் கழிவறை இவனை சிறைப்படுத்தி விடுகிறது. இதிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.கழிவறையின் அசுத்தங்கள், துர்நாற்றம் இவன் மனதிற்குள் புகுந்து மனப்பிரம்மையின் முரண்பட்ட வெளிப்பாடுகளை இவனுக்கு காட்டுகின்றன. விடுபட முடியாத கருந்துளை இருளுக்குள் அகப்பட்டவனின் இயலாமை அடையாளமாக தன்னை மீறி சிறுநீர் கழித்து நொந்துக்கொள்கிறான். மனநோயாளிகள் இடம் பொருள் ஏவல் என்று எதனையும் பார்க்கமால் நடந்துக்கொண்டிருக்கும் போதே சிறுநீரை கழித்துவிடுவார்கள்.
 
தன்னை விடுவிப்பதற்கு எட்டுபேரை அடையாளங்கண்டு அழைக்கின்றான். கதை முழுக்க தனக்குத் தானே பேசிக்கொள்ளும் ஒரு மனநோயாளியின் வாக்குமூலங்கள் ஆகும். முதலில் அழைத்த நபர் அம்மா. அம்மாவிடம் தனது தப்பிதங்களுக்காக மனதார மன்னிப்பு கேட்கிறான்.பிறகு வரிசையாய் நண்பர்கள், ஆசிரியர், நண்பனின் தங்கை, நண்பனின் காதலி என்று போய் காளியிடம் வந்து நிற்கிறது.
நான் எதிர்ப்பார்க்காதது. மனம் திக்கென்றது.
 
தமிழ் சினிமாவையும் மலேசிய சிறுகதையும் உள்வாங்கிய மனம் இப்போதெல்லாம் கதையோட்டத்தையும் முடிவையும் சுலபமாக யூகிக்க முடிந்ததினால் காளி வந்தவுடன் திக்பிரமை உண்டானது.வேறு தெய்வங்கள் என்றால் பரவாயில்லை. ஏன் காளி? யோசித்தது மனம். எல்லா தெய்வங்களும் கைவிட்ட பிறகு இறுதியாய் போய் நிற்பது காளியிடம். காளிக்கு ‘மாயா’ என்றொரு பெயரும் உண்டு. எல்லா மாய கிரியைகளையும் நிர்மூலமாக்கும் வல்லமை படைத்தவள். மனப்பிறழ்வு என்பது ஒரு மாயை உலகம்.
 
வீட்டிற்கு அருகில் இருந்த ஒரே கோயில் காளி கோயில். விபரம் தெரிந்த நாற்முதற்கொண்டு அத்தெய்வத்தை வணங்கிய பக்தன். வளர்ந்து மீசை முளைத்த காலத்தில் காளியை காதலியாக பார்த்தவன். பக்தி கசிந்துருகி காதலாகியிருக்கிறது. எல்லாம் சரிதான். இடையில் வந்த பாலியல் சினிமா பழக்கம் பக்தனுக்கு காமக்கண்களைக் கொடுத்துவிட்டதால் காமவிகாரமாகிவிட்டது. காளி கொல்லுவாள் என்ற பய உணர்ச்சியே இல்லாத பக்தன். அல்லது, பாலியல் சினிமாவில் தீவிரமாய் இருக்கும் போது குற்றவுணர்ச்சியின் கரணமாக கோயிலுக்குச் செல்லுவதை நிறுத்திவிட்டிருக்கிறான். மனப்பிறழ்விலிருந்து காப்பாற்றப்பட தன்னுடைய தெய்வமான காளியை நினைந்து வேண்டும்போது காளியை மயான சூலியாகப் பார்க்காமல் தனக்கே முழு உரிமையும் உண்டென்ற உறுதிமனப்பான்மையில் “காளி !என் காதலி!…இங்கே வாடி” என்கின்ற அழைப்பு எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. பெண் பக்தைகளான ஆண்டாளுக்கும் ராதைக்கும் ஓர் ஆண் தெய்வம் காதலனாக எப்படி அமைந்ததோ அப்படியே இவனுக்கும் பெண் தெய்வமான காளி காதலியாகிறாள்.
“உன்னை நான் உனக்கே வேறுமாதிரி காட்டுகிறேன்” என்ற இவனின் துடிப்பு எனக்கு பிரமிப்பை கொடுத்தது. ஆங்காரி,பயங்கரப் பார்வை ,நாக்கை வெளியே நீட்டி சூலத்தை ஆத்திரத்தோடு ஏந்தியிருப்பவள், மண்டையோடுகளை கழுத்தில் அணிந்திருப்பவள் காளி என்ற உருவகத்தை மாற்றி அன்பே வடிவமாய் அன்பைப் பொழியும் காதலியாய் மாற்றும் முயற்சியில் மனம் ஏங்கித் தவிக்கிறது. இவன் தன்னுடைய பலவீனங்களை, மனத்தடுமாற்றத்தை, மனப்பிறழ்வை ஏந்திக்கொண்டு காளியிடம் சரண் அடைகிறான். என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. மனம் நடுங்குகிறது. அதன் விளைவாக சிறுநீர் வெளியேறுகிறது.
 
பிரமாதம்!!
 
இறுதியில் யார் யாரை பழிவாங்கியது என்ற கேள்வி தனியாய் கேட்டு நிற்கிறது. காளி அருகில் வருகிறாள் என்றதோடு கதை முடிகிறது. காளி பழிவாங்குவதற்கு வருகிறாளா அல்லது காதலியாக வருகிறாளா என்பது தெரியாமல் போகிறது. சிறுகதை இலக்கணத்திற்கேற்ப முடிக்கப்படுகிறது கதை.
இறுதியாக, இப்படி அப்பட்டமான – வெளிப்படையான – எதிர்மறையான – முகஞ்சுளிக்க வைக்கும் சிறுகதை நமக்குத் தேவைதானா என்பது தான்.சமூகத்தில் இப்போதுள்ள காலக்கட்டத்தில் இதைவிட மிக மிக மோசமான சம்பவங்கள் நம் கண் முன்னே கொட்டிக்கிடக்கின்றன. பாலியல் ரீதியான வக்கிரம் ,வன்கொடுமைகள் நம் வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் நடக்கின்றன. பத்திரிகை செய்திகளோடு நாம் நம்மை கோடு தாண்டாதவர்களாக தமிழ் இலக்கியத்தில் இருத்திக் கொள்ளப் போகிறோமா என்ற கேள்வியை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.
 
தயாஜி செய்த மூன்று தவறுகள்:
 
1} புத்தக உரிமத்திற்காக எழுத்தாளர் சங்கத்தை எதிர்த்து கலகக் குரல் எழுப்பியது.

2}ஆர்.டி.எம்- யில் இருந்து கொண்டு இப்படிப்பட்டக் கதையை எழுதியது

3}மலேசியா நாட்டில் இக்கதையை வெளியிட்டது.
 
 
- மஹாத்மன்
 
நன்றி வல்லினம்

கண்றாவிகளைச் சுமக்கும் கலாச்சாரம்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை ஒட்டி , எழுதிய கட்டுரை )

நேற்று முன்தினம் முக நூலில் என் அன்புக்கினிய தோழி மாலா ஒரு கேள்வியை முன்வைத்தாள்.
” மலேசிய நாட்டில் இதுபோன்ற கலாச்சாரங்களை வரவேற்கலாமா?” என்பது அக்கேள்வியின் சாரமாக இருந்தது. தாயாஜியின் சிறுகதையே இவரின் கேள்விக்குப் பின்னணியாக இருந்தது.
 
இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதற்குப் பதிலாக அவளிடம் நான் கேள்வியை எழுப்பினேன்.
“மலேசியா நாட்டில் ஏய்ட்ஸ் நோய் இல்லையா? விபச்சார விடுதிகள் இல்லையா?”
 
கலாச்சாரம் கட்டிக் காக்கும் மலேசியா என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கலாம். உளவியல் அடிப்படையில் பல மன சிக்கல்கள் நம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தாய்மைக்கு மதிப்பளிக்கும் சமுதாயமாக நாம் இருகின்றோம் என்றால் ஏன் கண் முன் தெரியும் விபச்சார விடுதிகளுக்கு எதிராக கோஷம் போடுவதில்லை.
 
தாய்மை உன்னதமானது என்று போற்றுகிறோம். ஆனால் சிசு கொலையைப் புரிவதும் தாய்மைதானே? லெஸ்பியன் எனும் பெண்களோடு பெண்கள் உறவு, ஹோமோ எனும் ஆண்களோடு ஆண்கள் உறவு, குறைந்த வயது கொண்டவர்களோடு உறவு, மிருகங்களோடு உறவு என்று கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் மலேசியாவில் இது போன்ற உறவுகள் நடந்துள்ளது என்பதை நாம் அறிந்திருக்கவில்லையா என்ன?
 
சமீபத்தில் தகப்பனும் மகளும் காதலன் காதலியாக இருந்தார்கள் என்ற செய்தி நாளேடுகளில் பிரசுரமானதைக் கலாச்சார சிதைவு என்று ஏன் அதனைக் கட்டிக் காப்பவர்கள் கூச்சலிடவில்லை. இது போன்ற செய்திகளை பிரசுரம் செய்யாதீர்கள். இது நமது கலாசாரத்துக்கு எதிரானது என்று ஏன் நல்லவர்கள் பத்திரிகைகளுக்கு எதிராக அறிக்கை விடவில்லை.
 
நடந்த சம்பவத்தைப் பதிவாக்குவது நாளேட்டின் கடமை. சமூகச் சிக்கல்களில் உழன்று தவிக்கும் உள்ளங்களின் அலைக்கழிப்பை பொதுவுக்கு கொண்டுவருவது எழுத்தாளனின் கடமை. அதனை வாசித்து விமர்சனங்களை முன் வைப்பது வாசகனின் கடமை.
 
கடவுள் முதன் முதலில் ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்பதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் அறிவு, அடுத்தடுத்து மனிதனின் இனப்பெருக்கம் அவர்களுக்குள்ளேயே நடந்த உறவில் பெருகியது என்பதை சொல்லப்போவோமானால் நம்மை மனநோயாளி என்றும், கலாச்சாரத்தை சிதைக்க வந்தவன் என்றும் பெயர் சூட்டிவிடுவார்கள் “நல்லவர்கள்”
 
மகளைக் கெடுக்கும் தந்தை, தாயை கொலை செய்யும் மகன்,மாணவனை வல்லுறவுக்கு ஈடுபடுத்திய ஆசிரியை, பேத்தியை வாய்வழி உறவுக்கு ஈடுபடுத்திய தாத்தா என்றெல்லாம் பல சம்பவங்களை நாளிதழில் படித்துப் பழகிப் போன நமக்கு, தாய் குளிக்கும் போது எட்டிப்பார்த்த மனசிக்கல் கொண்ட மகன் என்று புனைவு மொழியில் ஒரு சம்பவம் அச்சில் ஏற்றிவிடும்போது மனம் ஏற்றுக் கொள்ளாமல் வாந்தி எடுக்கிறது. நாம் வாந்தி எடுப்பதால் அந்தச் சம்பவம் அசிங்கமான கற்பனை என்றும் ஒதுக்கிவிடவும் முடியாது. இதை மனச் சிக்கலின் ஒரு கூறாகவும், பாதிக்கப்பட்டவனை ஒரு நோயாளியாகவும் நாம் கவனிக்கவேண்டியது அவசியம்.
 
கோலாலம்பூரிலிருந்து வந்த ஒரு சிநேகிதி என்னிடம் ஒரு சம்பவத்தைச் சொன்னாள். அதாவது உடன் பிறந்த அண்ணனும், தங்கையும் திருமணம் செய்து கணவன், மனைவியாக வாழ்கிறார்கள் என்று. இந்த கதையைக் கேட்டதும் எனக்கு வாந்தி வருவதுபோல்தான் இருந்தது. ஆனால் இந்தச் சம்பவம் உண்மையாக இந்த மலேசிய மண்ணில் நடந்துள்ளதே! எப்படி?
 
சிறுவயதில் அவர்கள் அனுபவித்த, பார்த்த சில நேரடிச் சம்பவங்கள் அவர்களின் பழக்கத்துக்கு வந்து பிறகு அதுவே அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் திருமணம் செய்யும் கட்டாயத்துக்கு வந்துவிட்டது என்று அந்த சிநேகிதி என்னிடம் சொன்னாள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து பிள்ளையையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள. இரவு நேரத்தில் முகத்தைப் பார்க்கக் கூடாது என்பதால் விளக்குகளை அனைத்துவிட்டுத்தான் கூடுவார்களாம். இதனை அந்தப் பெண்ணே என் சிநேகிதியிடம் கூறியுள்ளதாக எனக்கு கூறப்பட்டது.
 
அவர்கள் யார் என்று அவர்களைத் தேடுவதைவிட இதுபோன்ற பல மன சிக்கல்கள் நமது சமூகத்தில் உள்ளன என்பதை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். கலாச்சாரம் என்று பேசி நடப்பதை ஒதுக்கி வைப்பதற்கு முன், ஆதிகால மனிதனாக இருந்தவனுக்குக் காட்டுமிராண்டித்தனம் உடலில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் நடக்கமுடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத, வரம்புக்கு மீறிய பல சம்பவங்கள் உலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். சமயம் மனிதனை தெய்வமாக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், சில சமயங்களில் சமய வாதிகளும் காவிகளை காமத்துக்கு காவு கொடுத்திருப்பதையும் நாம் படித்திருக்கிறோம், காணொளியிலும் கண் வலிக்கப் பார்த்திருக்கிறோம். ஆலய கர்ப்பக் கிரகத்தில் உடலுறவு, எத்தனயோ “ஆனந்த” சாமியார்களின் உல்லாச நேரங்கள் ஒளிப்பதிவு, என்று பல “கச முசா” செய்திகளை நாம் கசக்கி கசக்கி படிக்கவில்லையா?
 
அன்று பார்த்த நிர்வாணப் படங்கள், கேட்ட நிர்வாணக் கதைகள், யாவற்றையும் மனதில் ஒளித்துவைத்துக் கொண்டு மணி அடிப்பதில் தப்பு கிடையாது. ஆனால் மணி அடிப்பவர்கள் தங்களை புனிதமாக நினைத்துக் கொண்டு அவர்கள் செய்ததை பிறர் செய்யும் போது உடனே உத்தம நீதிமன்றத்தில் ஆயுட்கால நீதிபதியாக அமர்ந்து கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதைத்தான் பொறுக்கமுடியவில்லை.
 
மனதாலே ஒரு பெண்ணை தவறாக நினைத்தாலே அவன் மனதால் விபச்சாரம் செய்கிறான் என்று ஏசுநாதர் கூறி இருக்கிறாராம். இதன் அடிப்படையில் “நீங்கள் அத்தனைப் பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது என்னையும் சேர்த்து.
 
 
-இரா.சரவணதீர்த்தா
 
நன்றி வல்லினம்

வாயில் விழைச்சு - பெருமாள் முருகன்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதை, சிலரால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டபோது படித்த கட்டுரை. இக்கதை குறித்த கேள்விகளுக்கும் இது போன்ற புனைவுகளுக்கும் ஏற்றதாய் அமையும் என்று இக்கட்டுரையை இங்கே மீண்டும் பதிகிறேன்.)


ஒவ்வோர் ஆண்டும் பெரும் நிறுவனங்களில் ஜனவரி தொடங்கி மார்ச் வரை நிதிக் கணக்குகள் முடிக்கப்படும் காலம் என்பதால் முசுவாக இருப்பார்கள். அதுபோலக் கல்வி நிறுவனங்களில் இது கருத்தரங்கக் காலம். முன்பு பல்கலைக்கழகங்களில்தான் கருத்தரங்குகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெறும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல பயிலரங்குகளுக்கும் கருத்தரங்குகளுக்கும் நிதி உதவி செய்வதால் கல்லூரிகளிலும் இன்று ஆய்வுகள் பெருகிவிட்டன. ஆகவே எங்கு நோக்கினும் கருத்தரங்க ஆரவாரங்கள். 
 
இப்போதெல்லாம் கல்வி நிறுவனங்களில் நவீன இலக்கியம் பற்றிய பேச்சுகள் நடப்பது அரிது. எப்போதுமே அப்படித்தான் என்பது நம் வரலாறு என்றாலும் இப்போது சுத்தமாக இல்லை. தொல்காப்பியம் தொடங்கி ஆறாம் நூற்றாண்டு வரையான பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கே அந்நிறுவனம் நிதி உதவி செய்கிறது. ஆகவே எல்லா ஆய்வாளர்களும் பழந்தமிழ் இலக்கிய விற்பன்னர்களாகி வருகின்றனர். நானும்கூட. சமீபத்தில் நான் கவனம் எடுத்துக்கொண்டு வாசித்த நூல் ‘ஆசாரக்கோவை.’ இந்நூல் பற்றிக் கவனம் உருவாக இரண்டு நண்பர்கள் காரணம். திருச்சி, ஈவெரா அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராரசிரியராகப் பணியாற்றும் முனைவர் க.காசிமாரியப்பன் ஒருவர்.
 
சென்னை, நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் இரா.இராமன் மற்றொருவர். இருவரும் ஆசாரக்கோவை பற்றி வெவ்வேறு கோணங்களில் கட்டுரை எழுதியுள்ளனர். அவர்களது கோணம் பற்றி இப்போது விவாதிக்கப் போவதில்லை. ஆசாரக்கோவையில் நமக்குத் தேவையான செய்திகள் சில உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை. பன்னிரண்டு நீதிநூல்களுள் ஒன்றாக ஆசாரக்கோவையையும் சேர்க்கிறார்கள். ஆனால் நீதி சொல்லும் நூலல்ல இது. ஆசாரம் என்னும் சொல்லுக்குப் பல பொருள்களை அகராதிகள் தருகின்றன. தமிழ் லெக்சிகன் தரும் பொருள்களுள் சில: சாஸ்திர முறைப்படி ஒழுகுகை, நன்னடை, வழக்கம், தூய்மை ஆகியன. இன்றைய வழக்கிலும் ஆசாரம் பயன்படுகிறது. ‘அவுங்க ரொம்ப ஆசாரமானவிங்க’ என்றும் ‘அது ஆசாரமான குடும்பம்’ என்றும் சொல்லும் வழக்கம் இருக்கிறது. பழமைப் பிடிப்பு அல்லது பழைய முறைகளைக் கடைபிடிப்பவர்கள் என்னும் அர்த்தம் இங்கு வருகிறது. நம் அன்றாட நடவடிக்கைகளை சாஸ்திர முறைப்படி அமைத்துக்கொள்வதற்குப் பெயரே ஆசாரம். சாஸ்திரம் என்றால் எது? சமஸ்கிருதத்தில் பலவகைச் சாஸ்திரங்கள் இருக்கின்றன என்று அறிகிறோம். தமிழிலும் ‘சைவ சித்தாந்த சாத்திரங்கள்’ உள்ளன.
 
சாஸ்திரம் என்பது குறிப்பிட்ட விஷயம் பற்றிய விதிமுறைகளைத் தரும் நூல். தினசரி வாழ்வில் உடலைத் தூய்மையாக வைத்திருப்பது தொடங்கி பல்வேறு ஒழுங்கு முறைகளின் தொகுப்புக்கு ஆசாரம் என்று பெயர். ‘ஆசாரக்கோவை என்னும் தொடர்க்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம்’ என்று மர்ரே ராஜம் பதிப்பின் முன்னுரை கூறுகின்றது. அது ஆசாரக்கோவையின் பொருள் பற்றிக் கூறுவதாவது: பொதுவகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டும் கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார். அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகளும் பலவாம். வைகறைத் துயில் எழுதல் முதல் காலைக்கடன் கழித்தல், நீராடல், உடுத்தல், உண்ணல், உறங்குதல் முதலிய பல நிகழ்ச்சிகளிலும் ஒழுகும் நெறிகள் வற்புறுத்தப்படுகின்றன. மேற்கொள்ளத் தக்கன இவை, விலக்கத்தக்கன இவை எனச் சில ஆசாரங்களை விதித்தும் சிலவற்றை விலக்கியும் செல்லும் முறை கவனிக்கத்தக்கது. (ப.273) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலேயே காலத்தால் பிற்பட்டது ஆசாரக்கோவை. சமஸ்கிருத சாஸ்திரங்கள் சிலவற்றின் கருத்துத் தாக்கங்கள் இதில் இருக்கின்றன என்றும் இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்றும் கூறுவோர் உள்ளனர். சுக்ரஸ்மிருதிக் கருத்துக்களின் தொகுப்பே ஆசாரக்கோவை என்பது செல்வகேசவராய முதலியாரின் கருத்து. ‘இந்நூல் வடமொழி நூலின் வழித் தோன்றியது என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை’ என்பார் வையாபுரிப்பிள்ளை.
 
இவற்றைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் இன்னும் நடைபெறவில்லை என்றே சொல்லலாம். நீராடல், பல் துலக்குதல் உள்ளிட்டவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் இந்நூல் கூறுகின்றது. எந்தெந்தச் சமயங்களில் நீராட வேண்டும்? தெய்வ வழிபாடு, தீக்கனா காணல், தூய்மை குன்றல், வாந்தி எடுத்தல், மயிர் களைதல், உண்ணல், அதிக நேரம் தூங்கல், உடல் உறவு, கீழ்மக்களைத் தீண்டல், மலசலம் கழித்தல் ஆகிய பத்துச் சந்தர்ப்பங்களிலும் அவசியம் நீராட வேண்டும். அம்மணமாக நீராடக் கூடாது. ஓராடை உடுத்தே நீராட வேண்டும். ஈராடை அணிந்தே உண்ண வேண்டும். உடுத்த ஆடையை நீருள் பிழியக் கூடாது. ஓராடையோடு அவைக்குச் செல்லக்கூடாது என்றெல்லாம் ஆடை உடுப்பது பற்றிச் சொல்கிறது. இப்படிப் பல ஆசாரங்கள். அவற்றைக் கடைபிடித்தவர் ஒருகாலத்தில் இருந்திருக்கக்கூடும். இன்றும் அப்படியான ஆசார சீலர்கள் இருக்கலாம். சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இத்தகைய ஒழுங்கு முறைகள் பொருந்தலாம். அல்லது நாள் முழுக்க இவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பின்பற்றுவது எளிதாகலாம்.
 
அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடுபவர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட இயலாது. கீழ்மக்கள், புலையர் ஆகியோரைத் தீண்டக் கூடாது என்பது பற்றிச் சொல்வதோடு பார்ப்பாரின் உயர்வுகளைத் தொடர்ந்து பேசுவதையும் காணலாம். சுவாரசியமான பல பதிவுகளும் அக்காலச் சமூகப் படிநிலைகள் பற்றிய பதிவுகளும் காணப்படும் நூல் இது. எத்தகைய இடத்தில் வசிக்கலாம்? இதற்குப் பதிலை எதிர்மறையாக இந்நூல் சொல்கிறது. ‘வண்ண மகளிர் இடத்தொடு தம்மிடம் இடங்கொள்ளார் ஒள்ளியம் என்பார்’ என்பது பாடல். அறிவுடையவர்கள் ‘தன் மேனி மினுக்குதல்’ செய்து அலங்கரித்துக்கொள்ளும் ‘வண்ண மகளிராகிய’ விலைமகளிர் வசிக்கும் பகுதியில் தம் வாழிடத்தை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார் என்பது பொருள். ஏற்படுத்திக் கொண்டால் ஆணுக்குச் சபலம் தோன்றிவிடுமா? அப்படித் தோன்றுவதைப் பற்றித் தவறில்லை. விலைமகளிரோடு கூடியிருத்தலை ஆணுக்கு முழுமையாக அனுமதித்த சமூகம் நமது. ஆகவே பெண்ணுக்குச் சபலம் ஏற்பட்டுவிட்டால் என்னாவது? ‘பெண்டிர்க்கு உவப்பன வேறாய் விடும்’ என்கிறது கோவை. விலைமகளிரைப் பார்த்து அலங்காரத்திலும் மேனி மினுக்குதலிலும் குடும்பப் பெண்களுக்கும் ஆசை தோன்றிவிடும். அவற்றிற்காகக் குடும்பப் பெண்ணும் சோரம் போக விருப்பம் கொள்வாள் என்பது அதன் உட்கருத்து. ‘புகத் தகா இடங்கள்’ என்று சொல்லும் பாடலொன்றில் ‘சூதர் கழகம்’ குறிப்பிடப்படுகின்றது.
 
சூதாடுவதற்கு என்று தனியிடம் இருந்திருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இப்படிப் பல. அவை ஒருபக்கம் இருக்கட்டும். எப்பேர்ப்பட்ட நூலும் தம் காலத்தின் மீறல்கள் சிலவற்றையேனும் ஆவணமாக்கியிருக்கும். ஆசாரக்கோவையிலும் அத்தகைய பதிவுகள் உள்ளன. ‘எச்சிலுடன் தீண்டலாகாதவை’, ‘எச்சிலுடன் காணலாகாதவை’, ‘எச்சிலுடன் செய்யத்தகாதவை’ எனச் சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றது. எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர் உச்சந் தலையோடு இவையென்ப யாவரும் திட்பத்தால் தீண்டாப் பொருள். பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை எச்சிலோடு தீண்டலாகாது என்பது இதன் பொருள். எச்சிலுடன் காணத் தகாதவை எவை? எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் நாயிறுநாய் அத்தக வீழ்மீனோடு இவ்வைந்தும் தெற்றென நன்குஅறிவார் நாளும் விரைந்து. புலையர், நிலா, சூரியன், நாய், வீழும் நட்சத்திரம் ஆகியவற்றை எச்சிலோடு காணக்கூடாது என்பது இப்பாடலின் பொருள். எச்சிலோடு ஒன்றனையும் ஓதக் கூடாது, வாயால் ஒன்றனையும் சொல்லக்கூடாது, தூங்கக் கூடாது என்று சொல்லும் பாடல் ஒன்றும் உள்ளது.
இந்தப் பாடல்களில் எல்லாம் எச்சில் என்று சொல்லப்படுபவை எவை? எச்சில் பலவகைப்படும் என்கிறது ஆசாரக்கோவை. அவற்றுள் நான்கு எச்சில்கள் முக்கியம். அவற்றைக் கூறும் செய்யுள்: எச்சில் பலவும் உளமற்று அவற்றுள் இயக்கம் இரண்டு இணைவிழைச்சு வாயில் விழைச்சுஇவை எச்சில்இந் நான்கு. இயக்கம் இரண்டு என்று குறிப்பிடுவது மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை ஆகும். மலம் கழித்த பின்னும் சிறுநீர் கழித்த பின்னும் நீராட வேண்டும். அப்போதுதான் எச்சில் நீங்கும். மலம் கழித்த பின் நீராட சொல்வதேனும் சரி. சிறுநீர் கழித்த பின் நீராட வேண்டும் என்றால் எத்தனை முறை தினம் நீராடுவது? இணைவிழைச்சு என்பது புணர்ச்சி. அதாவது உடலுறவு. உடலுறவு கொண்டால் அது எச்சில். நீராடி எச்சிலை நீக்கலாம். நான்காவதாகச் சொல்லப்படுவது ‘வாயில் விழைச்சு’ என்பதாகும். அது என்ன வாயில் விழைச்சு? இதற்குப் பழையவுரை ‘வாயினால் வழங்கிய விழைச்சு’ என்று குறிப்பிடுகிறது. புன்னைவனநாத முதலியார் எழுதியுள்ள உரையில் அவர் பழையவுரையைப் பின்பற்றி ‘வாயினால் வழங்கிய விழைச்சும்’ என்று எழுதியுள்ளார். கருத்துரையில் ‘பலவகை எச்சில்களில் மலசலங் கழித்தல் புணர்ச்சி அதரபானம் இந்நான்கையும் காக்க’ என்று கூறுகிறார்.
 
சொற்பொருள் தரும்போது ‘இணைவிழைச்சு – புணர்ச்சி’ என்று எழுதுபவர் ‘விழைச்சு – விருப்பம்’ என்று பொருள் தருகிறார். ‘வாயில் விழைச்சு’ என்பதற்குத் தனியாகப் பொருள் எழுதவில்லை. ‘இணைவிழைச்சு’ என்பதற்கு ‘உடலுறவு’ என்று வெளிப்படையாகவும் தெளிவாகவும் பொருள் எழுதுபவர் ‘வாயில் விழைச்சு’ என்பதற்குப் பொருள் தரத் தடுமாறுகிறார். விருப்பம் என்பது எவ்விதம் பொருந்தும்? தமிழ் லெக்சிகன் ‘விழைச்சு’ என்னும் சொல்லுக்குப் ‘புணர்ச்சி’ என்று தெளிவாகப் பொருள் (தொகுதி 6, ப.3724) தருகிறது. விழைச்சு என்பதற்கே புணர்ச்சி என்று பொருள் இருக்கிறது. அப்படியானால் இணைவிழைச்சு, வாயில்விழைச்சு ஆகியவை விழைச்சின் வகைகள் என்று கொள்வதுதான் பொருத்தம். மேலும் இணைவிழைச்சு என்பது போல வாயில்விழைச்சு என்பதையும் ஒற்றைச் சொல்லாகக் கருத வேண்டும். ‘அதரபானம்’ என்றால் எவ்விதம் பொருள் உணர்வது? முத்தம் என்னும் பொருளில் அப்படிச் சொல்கிறாரா? முத்தம் என்றால் தெளிவாக அந்தச் சொல்லையே பயன்படுத்தலாமே. உரையாசியருக்குப் பொருள் புரியாமலில்லை. சொல்லத் தயக்கம். சரி, அகராதிகள் என்ன பொருள் சொல்கின்றன என்று பார்த்தால் பல அகராதிகள் இந்தச் சொல்லையே தலைச்சொல்லாகத் தரவில்லை.
 
சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் சொற்களுக்குப் பொருள்தரும் ‘பாட்டும் தொகையும்’ அகராதியில் இச்சொல்லே இல்லை. தமிழ் லெக்சிகன் ‘வாயில்விழைச்சு – உமிழ்நீர்’ எனப் பொருள் (தொகுதி 6, ப.3602) கொடுத்து அதற்கு உதாரணமாக ஆசாரக்கோவையின் இந்தச் சொல்லையே தந்துள்ளது. உமிழ்நீர் என்பது எவ்வகையில் பாடற்பொருளுக்குப் பொருந்தும்? அகராதியின் பதிப்பாசிரியர் வையாபுரிப்பிள்ளை. அவர் எதையும் மறைக்க வேண்டும் , மாற்ற வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர். அவர் பார்வையில் படாமல் இந்தப் பொருள் கொடுக்கப்பட்டிருக்கக் கூடுமோ? வாயில்விழைச்சு என்பது எல்லாருக்கும் தெரிந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம். ஆசாரக்கோவையின் ஆசிரியருக்கு அந்தத் தயக்கம் இல்லை. வாயில்விழைச்சு என்பது வாய்வழிப் புணர்ச்சி அதாவது வாய்வழி உறவு கொள்ளுதல் ஆகும். பேச்சு வழக்கில் இதைக் குறிக்கும் நேரடிச் சொல் ‘ஊம்புதல்’ என்று நினைக்கிறேன்.
 
வேறு சொல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வாய்வழிப் புணர்ச்சி பழமையானது என்பதற்கு ஆசாரக்கோவையே சான்று. அதைத் தவறென அந்நூல் சுட்டவில்லை. அதை ஏற்றுக்கொள்கிறது. அப்புணர்ச்சியை எச்சிலில் ஒன்றாகச் சுட்டுகிறது. எச்சில் என்பதற்கு இங்கு அசுத்தம் எனப் பொருள் கொள்ள வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொன்னால் தீட்டு என்னும் அசுத்தம் எனக் குறிப்பிடலாம். இத்தகைய அசுத்தத்திற்குப் பரிகாரம் நீராடல். வாயில்விழைச்சு முடிந்ததும் நீராடிவிட்டால் தீட்டு கழிந்துவிடும். முதன்மைத் தீட்டுக்களில் ஒன்றாக வாயில்விழைச்சு கருதப்பட்டுள்ளது என்றால் அவ்வழக்கம் பரவலாக இருந்துள்ளது என்றே பொருள். வாயில்விழைச்சில் ஈடுபட்டோர் யார் என எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருபால் புணர்ச்சி, ஒருபால் புணர்ச்சி ஆகிய இரண்டிலுமே வாயில்விழைச்சு நடந்திருக்க வாய்ப்புண்டு. அதை அக்காலச் சமூகம் ஏற்றுக் கொண்டிருந்தது என்பதையே ஆசாரக்கோவை காட்டுகின்றது. இந்நூலில் இன்னொரு குறிப்பிடத்தக்க பதிவும் காணப்படுகின்றது. யார் யாருடன் தனித்திருக்கக் கூடாது என்று ஒரு பாடல் கூறுகின்றது. வருமாறு: ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும் சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனும் தாங்கற் கரிதாக லான். இதற்குப் பழையவுரைகாரர் ‘தாயுடனாயினும் மகளுடனாயினும் தம் உடன் பிறந்தாளுடனாயினும் சான்றோர் தனித்து உறையார், ஐம்புலன்களையுந் தடுக்கல் அரிதாகலான்’ என்று எழுதுகின்றார்.
 
புன்னைவனநாத முதலியார் கருத்துரையாக ‘ஐம்புலன்களையும் அடக்கி நடத்த லருமையாதலின் தாய் முதலியவர்களுடனும் தனித்திருத்தல் தகாது’ என்று கூறுகின்றார். அவர் ‘உறையற்க’ என்பதற்குத் ‘தங்காதிருக்கக் கடவர்’ என்று பொருள் கூறுகிறார். ‘உரையற்க’ என்பதைப் பாட வேறுபாடாகக் கொள்ளலாம் என்பதும் அவர் எண்ணம். அப்படி எடுத்துக் கொண்டால் எவ்வாறு பொருள் கொள்வது? ‘உரையற்க என்ற பாடங்கொண்டு மேற்குறித்தவர்களுடன் தனித்திருந்து உரையாடாதிருக்க எனலுமாம்’ என்கிறார். இது ஒருவகைச் சமாதானம். அப்படிப் பாடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவரே எடுத்துக் காட்டும் காசிகண்டச் செய்யுளடிகள் ஆசாரக்கோவையின் கருத்தைத் தெளிவுபடுத்துகிறது. அது: நற்றாய் புதல்வியுடன் றோன்றிய நங்கையேனும் உற்றோருழியிற் றனியெய்தியுறை தலாகா. இப்பாடலில் ‘உறைதல்’ எனத் தெளிவாகவே குறிப்பிடப்படுகின்றது. தாயுடன் மகன் தனித்திருக்கக் கூடாது. மகளுடன் தந்தை தனித்திருக்கக் கூடாது. உடன்பிறந்தவளுடன் (அக்கா அல்லது தங்கை) சகோதரன் தனித்திருக்கக் கூடாது.
 
தனித்திருந்தால் என்னவாகி விடும்? ஐந்து புலன்களையும் அடக்கி வைத்தல் அரிது. ஆகவே புணர்ச்சி நிகழ்ந்துவிட வாய்ப்புள்ளது என்பது கருத்து. இப்பாடல் அக்காலத்தில் இருந்த இத்தகைய வழக்கங்களை எதிர்மறையாகப் பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம். தாயுடன் நிகழும் புணர்ச்சியைக் குறிக்கும் வசையாக இன்றைக்கும் பயன்படுவது ‘தாயோலி’ என்பது. அதேபோல சகோதரியோடு நிகழும் புணர்ச்சியைக் குறிக்க ‘ங்கொக்காலோலி’ என்பது பயன்படுகிறது. இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது. இதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவேதான் தனித்திருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஆசாரக்கோவை கூறுகின்றது. இன்றைக்கு அது வசையாக இருப்பதற்கும் அதுதான் காரணம். மனிதன் நாகரிகம் அடையாத காலத்தில் அது வழக்காக இருந்திருக்கலாம். பின்னர் அத்தகைய புணர்ச்சிகள் விலக்கப்பட்டிருக்கின்றன. எனினும் விதிவிலக்காகச் சில நடப்பதுண்டு. அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாகத் தனித்திருக்கக் கூடாது என்பதை ஆசாரக்கோவை வலியுறுத்துகிறது. மகளுக்கும் தந்தைக்குமான புணர்ச்சி பற்றி வசைச்சொல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் அத்தகைய புணர்ச்சிகளும் நடந்திருக்கக் கூடும். இன்றும் அப்படிப்பட்ட செய்திகள் வருகின்றன. மகளைப் புணர்ந்த தந்தையைக் கொன்ற தாய் பற்றிய செய்தியும் உண்டு.
 
அப்படியான தந்தைகளைக் கைது செய்யும் காட்சிகள் ஆண்டுக்கு ஒன்றிரண்டேனும் அரங்கேறுகின்றன. திருமண வயது கடந்தும் மணமாகாமல் முதிர்கன்னியாகிய மகளும் இளம் வயதிலேயே மனைவியை இழந்துவிட்ட தந்தையும் தாம் பார்த்த திரைப்படக் காட்சியின் தூண்டுதலால் உறவு கொள்வதாகக் கதை எழுதிய பிரபலம் இருக்கிறார். இத்தகைய முறையற்ற உறவுகளையே மூலதனமாக்கி எழுதப்படும் ‘காமக்கதைகள்’ இணையத்தில் அநேகம். புத்தகங்களும் பல. இவற்றுக்கெல்லாம் வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. அதற்குரிய பழஞ்சான்றுதான் ஆசாரக்கோவை.
————-
பயன்பட்ட நூல்கள்: 1. பு.சி.புன்னைவனநாத முதலியார் (உ.ஆ.), ஆசாரக்கோவை, 1971, சென்னை, கழக வெளியீடு, மறுபதிப்பு. 2. மர்ரே எஸ்.ராஜம் (ப.ஆ.), பதினெண் கீழ்க்கணக்கு, 1981, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இரண்டாம் பதிப்பு. 3. ச.வையாபுரிப்பிள்ளை, இலக்கியச் சிந்தனைகள், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம் முதல் தொகுதி, 1989, சென்னை, வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம். 4. ச.வையாபுரிப்பிள்ளை (ப.ஆ.), தமிழ் லெக்சிகன் தொகுதி 6, 1981, சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம், இரண்டாம் பதிப்பு.

நன்றி: மணல்வீடு
 
 
நன்றி வல்லினம்

கலைக்கு மரியாதை செய்யத் தெரிந்தவர்கள்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை குறித்து ஷோபா சக்தி எழுதிய கட்டுரை)



கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’  என்ற கதையை எழுதியதற்காக தயாஜி மீது கலாசார போலிஸ்களால் தொடுக்கப்படும் தாக்குதலும் தயாஜியை அவர் பணியாற்றிய அரசு நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்ததும் கடுமையான கண்டனத்திற்குரியது. 
கடவுள் மீதும், பெற்றவர்கள் மீதும், பெற்ற பிள்ளைகள் மீதும் காமுறுவது இலக்கியத்திற்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் புதியதல்ல. இல்லாதவொன்றை தாயாஜி சொல்லிவிடவில்லை. அவ்வாறு இல்லையென்றே வைத்துக்கொண்டாலும் இல்லாததைத் சொல்ல இலக்கியத்தில் அனுமதியுண்டு. சூரியனோடு புணர்ந்தது மகாபாரதம். சிங்கத்தோடு புணர்ந்து கருவுற்றது மகாவம்சம். தாயை மகன் புணர்ந்தது விவிலியம். இந்த மூன்று இலக்கிய நூல்களும் மூன்று மிகப் பெரிய மத நிறுவனங்களின் வேதநூல்கள்.
 
ஒவியர் எம். எப். உசைன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்தது, ‘த டாவின்ஸி கோட்’  நாவலில் ஏசுக் கிறீஸ்துவுக்கு மரிய மதலேனாளோடு உறவிருந்ததாகச் சித்தரித்தது, டென்மார்க் பத்திரிகையொன்று  இஸ்லாத்தின்  இறைவனின் பிரதிமையை வெளியிட்டது, புத்தரின் உருவத்தை சட்டையில் பொறித்தது போன்ற சம்பவங்கள் மத அடிப்படைவாதிகளை மட்டுமே கொதிப்படைய வைத்ததேயல்லாமல் வெகுசனங்களை கலவரப்படுத்தவில்லை. அவர்களிற்கு கலைக்கு மரியாதை செய்யத் தெரியும்.
கடவுளைக் காதலானாகவும் காதலியாகவும் கொண்டாடிய இலக்கிய மரபுதான் நமது. திருவரங்கனை காதலனாக வரித்து நாச்சியார் பல நூற்றாண்டுகளிற்கு முன்பு பாடியதிலிருந்து, இன்றைய கவி வசுமித்ர
‘ஆகச்சிறந்த புணர்ச்சியை நிறைவேற்ற வேண்டுமாயின் காளியைத்தான் புணரவேண்டும் அவளுக்குத்தான் ஆயிரம் கைகள்..’
 
என எழுதியதுவரை ஏராளம் பெறுமதிமிக்க பெட்டகங்கள் நம்மிடமுண்டு.
 
இராமனைத் தெருத்தெருவாகச் செருப்பாலடித்தார் தந்தை பெரியார். கடந்த ஏப்ரல் மாதம் கத்தோலிக்க ஆர்ச் பிஷப் முன்பு திறந்த மார்பகங்களோடு தோன்றிய பெமன் (FEMEN) போராட்டக் குழுப் பெண்கள் ‘இந்தா வாங்கிக்கொள் இயேசுவின் விந்தை’ எனத் தண்ணீரை அவர்மீது ஊற்றினார்கள். இவற்றோடு ஒப்பிடுகையில் தயாஜி செய்தது காளிக்குச் சாதகமானதே. கலவியிலே மானுடற்கு கவலை தீரும் என்றான் பாரதி. காளிக்கும் தீரும்.
 
நமது முன்னோடி ஜி. நாகராஜன் சொன்னதை இங்கு குறிப்பிடலாம்:
‘நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இது  உங்களிற்குப் பிடிக்காதிருந்தால் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால்முழுமையும்தான் சொல்லியாக வேண்டும்.’

-ஷோபா சக்தி

நன்றி வல்லினம்

தயாஜியின் சிறுகதை நிற்கும் – கருணாகரன்.

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து கருணாகரன் எழுதிய கட்டுரை)

தயாஜியின் சிறுகதை – “கழிவழியும் பழிவாங்கும் வழிமுறையும்“ ஒரு நல்ல இலக்கியப்பிரதி. எந்த இலக்கியப்பிரதியும் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதுண்டு. அதன் கலைப்பெறுமானம், கருத்தியல் என்ற இரண்டு பிரதான விசயங்களில் பெரும்பாலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் “ கருத்தியல்ரீதியாக விவாதிக்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது. இதுகூட ஒன்றும் புதியதல்ல. இலக்கியத்திலும் மனித வரலாற்றிலும் இத்தகைய வினைகளுக்கெதிரான மறுப்புகள் இருந்து வந்துள்ளன.
 
இன்று பன்முக வாசிப்பும் அறிவு விசாலிப்பும் தாராளமாக உருவாகிய பின்னும் பினோக்கிய பார்வைகள் இருப்பது கொஞ்சம் நெருடலாதே தவிர, புதியதல்ல. தமிழ்ச்சமூகத்தின் மனதில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் புனிதப்பிம்பங்களின் மீது தயாஜின் கதை உடைப்புகளை நிகழ்த்துகிறது. புனித பிம்பங்களை தமது நம்பிக்கைகளாகக் கொண்டிருப்போருக்கு இது பேரதிர்ச்சியை அளிக்கிறது. ஆனால், இலக்கியத்திலும் சமூகத்திலும் புனிதங்களுக்கெதிரான நிகழ்ச்சிகள் தாராளமாக உண்டு. கடவுளைக் காமுறுவதிலிருந்து இந்தக் கட்டுடைப்பைக் காணலாம்.
 
எம்.வி. வெங்கட்ராம் தன்னுடைய சிறுகதை ஒன்றில் தாய் மிகக் கொடுமைக்காரியாகச் சித்திரிக்கிறார். இந்தக் கதை வந்த காலத்தில் இப்பொழுது தயாஜி எதிர்கொள்ளும் நெருக்கடியைப்போல, கண்டனங்களைப் போல எம்.வி. வியும் நெருக்கடிகளுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதுதான் கடந்த சில ஆண்டுகளுக்க முன்னர் ஓவியர் ஹசேய்னுக்கு நடந்தது. தஸ்லிமா நஸ்ரீன். சல்மான் ருஷ்டி போன்றவர்களுக்கு நிகழ்ந்ததும் இதுதான். அந்தந்தச் சமூகம் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் அது கட்டமைத்திருக்கும் புனிதத்துக்கும் எதிராக கலைப்பைச் செய்யும்போதும் கேள்விகளை உருவாக்கும்போதும் அவற்றின் நம்பிக்கையாளர்கள் கொதிப்புறுகிறார்கள். நம் சமூகத்தில் கடவுளும் மத நம்பிக்கைகளும் மட்டுமல்ல, ஆசிரியர்கள், மதகுருக்கள், தாய், தந்தையர் போன்றவர்களும் மதிப்புக்குரியவர்களே. சமூக யதார்த்தத்தில் எத்தனை ஆசிரியர்கள் மன்னிக்கவே முடியாத தவறுகளைச் செய்கிறார்கள். தங்களில் மதிப்பும் பற்றும் வைத்திருக்கும் மாணவர்களையே பாலியல் ரீதியாக மீறல் செய்திருக்கும் சம்பவங்கள் பலதுண்டு. ஒருவருக்குத் தாயாக இருப்பவர் இன்னொருவரின் வைப்பாட்டியாக இருப்பதுண்டு. நமக்கு அக்காவாக இருப்பவள், இன்னொருத்தரால் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவளாக இருக்கிறாள். தந்தையரால் வன்புணர்வுக்கும் அறியாப்பருவப்புணர்வுக்கும் உள்ளாக்கப்படும் சிறுமிகளின் கதைகள் இன்னும் நீள்கின்றன.
 
இப்படி புனிதப் பாத்திரங்களின் நிஜச் சீரழிவுகள் ஏராளமுண்டு. எனவே எது புனிதம்? என்ற யதார்த்தமான கேள்வியே எப்பொழுதும் ஒவ்வொன்றின் மீதும் எழுப்பப்படுகிறது. எல்லாப் புனிதங்களையும் உருவாக்கிய மனிதர்களாலேயே புனித மீறல்களும் நிகழ்கின்றன. இவற்றைத் தன்பார்வையில் தயாஜி முன்வைக்கிறார். ஆனால், என்னதான் யதார்த்த நிலைமைகள் இருந்தாலும் இந்த மாதிரியான புனிதக்கட்டுடைப்புகளை நிகழ்த்துவது எளியகாரியமில்லை. அதுதான் இங்கே தயாஜிக்கும் அவருடைய கதைக்கும் வல்லினத்திற்கும் நடந்திருக்கிறது. ஆனால், அதை மீறி தயாஜியின் கதை நிற்கும். இந்தக் கதை கலாச்சார ரீதியிலும் உளவியல் ரீதியிலும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்றாக உள்ளது – அது சுட்ட முனையும் வேறுபட்டதன்மைகைளினூடாக.
 
 
-கருணாகரன்
 
நன்றி வல்லினம்

புனிதத்தை உடைக்கலாமா..?

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை குறித்து ம.நவீன் எழுதிய கட்டுரை)
 
புனிதத்தை உடைக்கலாமா?
 
 
கருத்து ரீதியாக வாதிடுதல் என்பது என்ன? உங்களிடம் ஒரு கருத்து உண்டு. அதை முன்வைக்கிறீர்கள். அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் அந்தக் கருத்து நீங்கள் வாதிடும் சூழலில் இதற்கு முன் அக்கருத்து எவ்வாறான விவாதங்களுக்கு உட்பட்டுள்ளது எனும் முன்னறிவு நமக்கு அவசியமாகிறது. அந்த நகர்வின் சாதக பாதகத்தில் நின்றே நாம் அறிவு ரீதியான விவாதத்தைத் தொடர வேண்டியுள்ளது. அடுத்து, உங்கள் கருத்துக்கு வலு சேர்க்க எவ்வாறான ஆராய்ச்சி, உளவியல், அறிவியல், வரலாறு சார்ந்த ஆதாரங்களை இணைக்கப்போகிறீர்கள் என்பது முக்கியமாகிறது. அவ்வாறு எதுவும் இல்லாமல் அது உங்கள் கருத்தாக மட்டுமே இருக்கும் போது அதை நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். ஆனால் அறிவு தளத்தில் அதற்கான இடம் இல்லை. அதை பொருட்படுத்தி விவாதிக்கவும் வேண்டியதில்லை.
 
தயாஜியின் சிறுகதையில் நடந்ததும் இதுதான். ஆளாளுக்கு கருத்து கூறுகிறேன் என தத்தம் முக நூலில் தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்தனர். கொஞ்சம் கூட இலக்கியப் புரிதல் இல்லாமல் விமர்சனம் செய்கிறேன் என மொண்ணையான கருத்துகளை வெளியிட்டனர். இதனால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதிகபட்சம் ஒருவாரத்துக்குப் பிறகு அவையெல்லாம் வெறும் குப்பைகளாக மட்டுமே குவிந்திருக்கும். வருங்கால குப்பைகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்ய முடியும். அதனால் தொடக்கத்திலேயே நிராகரித்துவிட வேண்டியதுதான். இதில் பெரிய நகைச்சுவை, நேருக்கு நேர் நின்று வாதாட முடியாதவர்கள், வாதாடினால் அவர்களின் கல்வி / இலக்கியப் பின்புலம் அனைத்தும் நார் நாராகக் கிழித்து வீசி அறிவையே சந்தேகிக்கும் நிலைக்கு வர நேரிடும் என பயந்து ‘லைக்’ போடுவதும் கோழைத்தனமாக குத்தல் பேசுவதும் என தங்கள் போலி பிம்பத்தைத் தக்க வைத்துக்கொள்கின்றனர். பயந்தவர்களை நோகடிப்பது நமக்கு பழக்கம் இல்லை என்ற படியால் அவர்களை மன்னித்துவிடுவோம்.
 
தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதையில் என்னதான் சிக்கல் என முதலில் பார்ப்போம். கதையின் முதல் பகுதியும் இறுதி பகுதியும்தான் அதிக விமர்சனத்துக்கு!? உள்ளாகியுள்ளது. முதல் பகுதியில் ஒரு சிறுவன் (வயது குறிப்பிடப்படாததால் அவன் மொழி மூலம் சிறுவன் என எடுத்துக்கொள்ளலாம்) தன் தாயார் குளிப்பதைப் பார்க்க நினைக்கிறான். குளியலறையில் இருக்கும் தாயை கழிவறையில் இருந்தபடி நாற்காலி போட்டு எக்கிப்பார்க்க நினைக்கையில் அவன் கண்ணில் தூசு விழுந்துவிடுகிறான். கண்களைத் தேய்தபடி போய்விடுகிறான். வெளியே வந்த அம்மா, கண் சிவந்திருக்கும் மகனைக் கண்டு “என்னடா கண்ணு” எனக் கலங்குகிறாள். கண்களை அவ்வாறு தேய்க்கக்கூடாது என செல்லமாகத் திட்டி செல்கிறாள்.
 
ஒருவேளை இந்த இடத்தில் அந்தச் சிறுவன் தன் தாயின் காலில் விழுந்து “அம்மா… என்னை மன்னித்துவிடு” எனக் கதறியிருந்தால் அனைவருக்கும் கதைப் பிடித்திருக்கும். ஆனால் தயாஜின் கதையில் வரும் சிறுவன் அதைச் செய்யவில்லை. ஒரே நேரத்தில் தன்னை நிர்வாணமாகப் பார்க்க முயன்ற மகனின் காமத்தை அறியாத தாயின் அன்பையும், தப்பித்தப் பின் ஏற்படும் மகனின் பயத்தையும் தயாஜி காட்டியுள்ளார். கதையின் வடிவமைதியில் பல இடங்களில் எனக்கு விமர்சனம் இருந்தாலும் இந்த இடத்தில் தயாஜி சரியாகவே எழுதியுள்ளதாகத் தோன்றுகிறது.
இப்பகுதியைப் படித்தப் பலரும் இது சமுதாயத்தைக் கெடுக்கும் கதை என புலம்பினர். இதுவரை இல்லாத ஓர் விடயத்தை தயாஜி சொல்லிவிட்டது போல கோபப்பட்டனர். ஹீரோவாக ஒரு சந்தர்ப்பம் என ரஜினி வசனமெல்லாம் பேசினர். ஆனால் அறிவு தளத்தில் நின்று ஆராய யாருக்கும் பொறுமையோ தேடலோ இல்லாமல் இருபதுதான் வருத்தம்.
 
ஒடிபெல் சிக்கல் (Oedipal Complex)
பல்கலைக்கழகத்தில் ஓவியத்தை ஒரு பாடமாக பயிலுகையில் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud) குறித்து அறிய நேர்ந்தது. படைப்பாளர்களுக்குச் சிக்மண்ட் பிராய்டின் ‘உளவியல்’ அணுகுமுறைகளின் தேவையை அறிந்தபோது ஓரளவு அவரைத் தேடி வாசித்தேன். தமிழில் ஒரு பேராசிரியரின் முதுகலைப் பட்டத்துக்காக எழுதிய ‘சிக்மண்ட் பிராய்ட் ‘ குறித்த ஆய்வு நூல் மட்டுமே கிடைத்தது. அதுவும் கல்வித்துறை ரீதியானது. ஆங்கிலத்தில் நிறைய கிடைக்கின்றன.
 
Wikipediaவில் ‘ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிக்மண்ட் பிராய்ட் முன்னிறுத்தும் கோட்பாடுகளில் ஒன்று Oedipal Complex. பிராட்டின் கோட்பாட்டின்படி, தனது தந்தையின் இடத்தில் தன்னை வைக்க விரும்பும் சிறுவன் தாயை உடல் மூலமாகவும் உடைமையாக்க விரும்புகிறான். தாயின் அன்புக்குப் போட்டியாக தந்தையைக் கருதுகிறான். உளவியல் – பாலினம் சார்ந்த வளர்ச்சி பிள்ளையின் மூன்று முதல் ஐந்து வயதுக்கு இடையே ஏற்படுகிறது. இந்தப் பருவம் பாலினம் சார்ந்த அடையாளம் உருவாதற்கான முக்கிய காலகட்டமாகத் திகழ்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் ஒடிபெல் சிக்கல் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. ஒடிபெல் சிக்கல் என்பது உள்மனதுக்குள் மறைந்திருக்கும் உணர்வுககளையும் எண்ணங்களையும் சார்ந்த உளப் பகுப்பாய்வுக் கோட்பாடு ஆகும் . உளவியல் துறையில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் இவரின் இந்தக் கூற்று பலருக்கும் அதிருப்தியைக் கொடுக்கலாம். ஆனால் பிராய்டின் இந்த ஆய்வை இன்று பலரும் ஒப்புக்கொண்டே உள்ளனர். அதை மையப்படுத்து ஏராளமான ஆய்வு நூல்களும் வந்த வண்ணம்தான் உள்ளன.
 
நாம் தாய் வழி சமூகம்
 
சரி இதே விடயத்தைக் கொஞ்சம் வரலாறு சார்ந்தும் பார்க்கலாம். நாம் தாய் வழி சமூகத்தினர் என்பது பலரும் அறிந்த விடயம். மனித நாகரீகம் தொடங்கிய காலத்தில் பெண்கள்தான் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். தங்கள் குழந்தைகளைப் பாதுக்காக்க பெண்களே வேட்டையாடுவதில் முதன்மை வகித்தனர். இதை தாய் வழி சமூகம் என்கின்றனர். தாய் வழி சமூகத்தில் பெண்ணே மையம். அவளுக்கு பல ஆண்கள் துணை இருப்பர். தொன்மையான எல்லா கலாச்சாரங்களிலும் ஆரம்பகாலத்தில் தாய் தெய்வங்களே இருந்துள்ளது மற்றுமொரு உதாரணம். இந்த வரலாற்று உண்மையை ஒரு புனைவின் அடிப்படையில் சொல்லிச்செல்லும் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை ராகுல் சாங்கிருத்யாயன் என்பவர் எழுதியுள்ளார். தமிழில் கண .முத்தையா மொழிப்பெயர்த்துள்ளார். அதில் தாய் வழி சமூகத்தின் இயக்கம் குறித்து ஒரு காட்சி வரும்.
ஒரு தாய் (தலைமை தாங்குபவள்) குழந்தையை ஈன்றெடுப்பாள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் . தான் ஈன்ற மகன்களின் வலுவான ஒருவனை தேர்ந்தெடுத்து அவனுடன் தாய் உறவு கொள்வாள். அவர்களுக்கும் குழந்தைகள் பிறக்கும். இது பல்வேறு நிலைகளில் தொடரும். பல்வேறு ஆய்வாளர்களாலும் முக்கியமாகக் கருதப்படும் இந்த நூலை ஆபாசக் குப்பை என தூக்கிப் போட்டுவிடலாமா? வரலாற்றில் ஒரு காலத்தில் இயல்பாக இருந்த விடயம் மற்றொரு சந்தர்ப்பத்தில் அபத்தமாகவும் அருவருப்பானதாகவும் ஆகிவிடுகிறது. இந்த உணர்வை ஏற்படுத்துவது எது? இது மனிதனின் ஆதி உணர்வா? இல்லை ! இது தந்தை வழி சமூகம் ஆனப்பிறகு ஏற்பட்ட பழக்கத்தில் விளைவு மட்டுமே. உறவுகளின் புனிதம் என்பது காலங்களுக்கு ஏற்ப மாறக்கூடியது.
 
உறவு முறைகள்
அவ்வளவு ஏன்? நமது தென்கிழக்காசியாவிலேயே உறவுகள் குறித்த மாற்று முறைமைகள் உள்ளனவே. தாய்லாந்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட சொத்துகளைப் பாதுகாக்க இரத்த உறவுள்ள சகோதரனுக்கும் சகோதரிக்கும் திருமணம் செய்துவைக்கும் முறை இருந்தது. நமது நாட்டில் மலாய்க்காரர்கள் சகோதர உறவு முறை கொண்டவர்களைத் திருமணம் செய்துக்கொள்ளவில்லையா? ஆக! காதல், காமம், திருமணம் என்பதெல்லாம் காலத்துக்கு ஏற்பவும் இனங்களுக்கு ஏற்பவும் பழக்கங்களுக்கு ஏற்பவும் மாறுபடுகிறது.
 
தமிழ் இலக்கியத்தில் தாய்மை
சரி, அப்படியென்ன தயாஜி அப்படியென்ன தமிழ் இலக்கியத்தில் இல்லாததைப் புதிதாகக் கூறிவிட்டார் என ஆராய்ந்தாலும் சொல்லும் அளவுக்கும் விடயம் புதிதில்லை. ஜெயகாந்தனின் ‘ரிஷிமூலம்’ எனும் பாலியல் சிக்கலை மையமாக வைத்த படைப்பு அக்காலத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது. தாய் மீதான பாலியல் சிக்கலை எழுதி 1966 வாக்கில் வெளிவந்த இந்நாவல் எதிர்ப்புகளைச் சந்தித்தது. தாய் மீதான பாலியல் எண்ணங்களால் ஒருவன் அலைக் கழிக்கப்படுகின்றான் என்பதை விளக்குகிறது இவ்வுளவியல் நாவல். அதே போல இன்று தமிழில் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷோபா சக்தியின் ‘ம்’ நாவலும் மகள் – அப்பாவுக்கிடையிலான காதலை, காமத்தைப் பேசுகிறது. மிக அண்மையில் அமைப்பியலில் மிக முன்னோடியாகவும் தமிழின் மிக முக்கிய விமர்சகராகவும் கருதப்படும் தமிழவன் நடத்தும் சிற்றிதழில் ஒரு சிறுகதை இவ்வாறு இருக்கும். தனது தாய் நடித்த நீலப்படத்தைத் தற்செயலாகப் பார்த்து ஓர் இளைஞனுக்கு ஏற்படும் வெறுப்பு பின்னர் காமமாக மாறும்.
முதலில் இது போன்ற சம்பவங்கள் இலக்கியப் பிரதிகள் வெளிவரக் காரணம் என்ன? அவை இந்தச் சமூகத்தில் இருக்கிறது என்பதுதான் முதல் காரணம். நமது நாட்டில்கூட விரும்பத்துடனோ வல்லுறவாகவோ இது போன்ற சம்பவங்கள் நடப்பது பதிவாகியுள்ளன. சில நீதிமன்றம் வரை சென்றுள்ளன. இலக்கியம் ஒரு சமூக நிகழ்வின் ஆழ்மனதைப் படம்பிடித்துக்காட்டுகிறது. மாறாக அது ஒரு தினசரி நாளிதழின் வேலையைச் செய்யவில்லை. தினசரிகள் பெரும்பாலான மக்கள் விரும்பும் தகவல்களை பிரசுரிக்கின்றன. இலக்கியம் யாரின் விருப்பம் பொருட்டும் இயங்குவதில்லை. தினசரிகளுக்கு எதை வெளியிட வேண்டும் / கூடாது என்ற விருப்பு வெறுப்புகள் உண்டு. இலக்கியத்துக்கு அது கிடையாது. இலக்கியத்தின் வேலை சமூகத்தை தூக்கி நிறுத்துவது என நம்பிக்கொண்டிருப்பவர்கள் உலக இலக்கியப் போக்கை கவனிக்கவில்லை எனப் பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை.
 
உளவியல் என்ன செய்கிறதோ அதையே இலக்கியம் தன் வழியில் செய்கிறது. பிராய்ட் சொல்லும் போது ஏற்றுக்கொள்ளும் உலகம் ஓர் இலக்கியவாதி அவ்வாய்வை தனது புனைவில் சுதந்திரம் வழி செய்யும் போது ஏற்பதில்லை என்பதே வருத்தம். ஜெயகாந்தன் தொடங்கி இன்றைய இளம் இலக்கியவாதிவரை பேச முயலும் உளவியலை ஓர் மலேசிய இளைஞன் பேசினால் குற்றமாகிவிடுகிறது.
 
புராணமும் இதிகாசமும்
 
இந்து மத புராணக் கதைகளிலும் இதிகாசங்களிலும் எல்லயற்ற மனித உறவுமுறைகள் பற்றி எக்கச்சக்கமாக எழுதப்பட்டுள்ளன. சொல்லப்போனால் மகாபாரத்தில் இல்லாத கருவோ, கற்பனையோ, கதையோ இல்லை என்றே சொல்லலாம். இன்றைக்குப் புதிய சிந்தனைகளாகவும் போக்குகளாகவும் கொள்ளப்படும் எல்லாமே பாரதக் கதைகளில் உள்ளன. ஆண் பெண்ணாவது, பெண் ஆணாவது, திருமணத்துக்கு முன்பே குழந்தை பெறுவது, பிற ஆண்கள் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்வது, பெண் – ஆண் இருபாலருமே பல தார மணம் புரிவது என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அதைவிட்டு நம் ஒழுக்க சீலர்கள் வருவதில்லை. மகாபாரதத்தை ஒழுக்கக் கேடான நூல் என எரிக்கவும் தயாராக இல்லை. மாறாக இந்து மதத்துக்கு ஒரு அவப்பெயரென்றால் கொதித்து எழுகிறார்கள். இது என்ன நியாயம்?
 
ரிக்வேதத்தில் அண்ணன் தங்கையரான யமன், யமி ஆகியோரைப் பற்றிய கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையின் படி யமி தன் அண்ணன் யமனைத் தன்னுடன் வருமாறு அழைக்கின்றாள். இதற்கு மறுக்கும் யமன்மீது அவள் கோபம் கொள்கிறாள். .. அக்காலத்தில் தந்தை மகளை மணப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. வசிட்டர் தன் மகள் சத்ரூபை பருவமெய்திய போது அவளை மணந்தார். மனு தன் மகள் இளையை மணந்தார். ஜானு தன் மகள் ஜானவியை மணந்தார். சூரியன் தன் மகள் உஷையை மணந்தான். …. தஹா பிரசெத்னியும் அவனுடைய மகன் சோமனும் சோமனின் மகள் மரீஷையைக் கூடினர். … தஷன் தம் மகளைத் தனது தந்தை பிரமனுக்கு மணம் முடித்தான்….” (ரிக்வேதம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து)
 
உலக இலக்கியத்தில்
 
Haruki Murakami என்ற உலகப் பிரபலமான ஜப்பானிய எழுத்தாளர் Kafka on the Shore என்ற நாவலில் ஒரு சிறுவன் தனது தாயையும் சகோதரியையும் புணர்வது பற்றி எழுதியிருப்பார். அந்த நாவல் மில்லியன் கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்டது. ஏராளமான விருதுகளை வென்றது. 2005ல் இந்நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நியூ யார்க் டைம்ஸிஸ் தலைசிறந்த 10 நூல்களில் ஒன்றாக இடம்பெற்றது. அப்படியானால், வாசித்தவர்கள் அனைவரும் ஒழுக்கக் கேடானவர்களா? விருது கொடுத்த அமைப்புகள் ஒழுங்கை நாசப்படுத்த நினைக்கின்றதா?
 
கடவுளும் காதலும்
 
புணர்ச்சியை வெளிப்படையாக காட்சிப்படுத்தும் சிற்பங்கள் கஜுராஹோ,கோனார்க் போன்ற இந்து கோயில்களில் காணக் கிடைக்கின்றன. அது மத்திய பிரதேசத்தில்தானே என நீங்கள் சொல்லலாம். ஆனால், இது மிக முக்கியச் சுற்றுலா தளமாகவும் இந்தியாவில் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. கடவுளை வணங்கச் செல்லும் கோயிலுக்கு வெளிப்புறம் இப்படிப் பல சிற்பங்கள் இருக்கும் போது அதைப் பார்க்கும் இளைஞர்களின் மனம் கெட்டுப்போகாதா என ஏன் யாரும் கேட்பதில்லை. சிற்பத்தில் இருந்தால் அது கலை , எழுத்தில் இருந்தால் அது கொலை என்கிறார்கள்.
நமக்குத் தெரிந்து எல்லா கோயில்களிலும் பல பெண் சிலைகள் அரை நிர்வாணத்தோடுதான் நிர்க்கின்றன. ஏன் அவை ஆபாசம் என்று நாம் யாருமே போர் கொடி பிடிக்கவில்லை. மாறாக மதத்தைப் பற்றி பேசினால் கோபம் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறது. உடனே அவற்றுக்கு அறிவியல் காரணங்கள் கூற தொடங்கிவிடுகிறோம்.
 
இப்படி நம் முன் கோயில்களில் இருக்கும் அரை நிர்வாணச் சிலைகளைப் பார்த்து குழந்தைகளுக்கு ஒரு திகைப்பு வராது என நம்மால் உறுதி கூற முடியுமா? வீட்டில் எதை மறைக்கிறோமோ அதை கோயில்களில் தடையில்லாமல் காட்டுவது நமக்கே முரண்நகையாக இல்லையா? அப்படியானால் நாம் எதை மறைத்து எதை காட்ட நினைக்கிறோம். ஏன் இந்த நடிப்பு? யாருக்காக இந்த வேடம் ?
கடவுள் சிற்பங்களுக்கு நமது கோயில் ஆடை அணிவிக்காமல் கலை என வைத்திருப்பது சரியென்றால், அதைக் கண்டு முதிர்ச்சியடையாத மனம் காமம் கொள்வதும் சரிதான். அவளைக் காதலிப்பதும் சரிதான். ஒருவேளை தயாஜி தன் கதையில் அம்மனுக்குச் சாற்றிய சேலையை நீக்கிப்பார்த்து காமம் கொண்டான் எனச் சொல்லியிருந்தால் மதவாதிகள் கோபப்படலாம். இங்கு அப்படி ஒன்றுமே இல்லை. திறந்த மார்புடன் இருக்கும் காளியின் கவர்ச்சி முதிரா மனம் கொண்ட ஒரு இளைஞனை காமத்தில் குழப்புகிறது.
 
அதோடு, கடவுளின் உடலை வர்ணிப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? அப்படியானால் அந்தக் குற்றத்தை சௌந்தர லஹரியில் ஆதிசங்கரரும் செய்துள்ளார்.
‘மேகலை பொங்க மதாசல கும்பமெ னாமுலை கண்டு இடை சோரா ‘ என்கிறார்.
பொருள் : யானையின் மத்தகத்தைப் போன்ற பெரிய தனங்களைக் (மார்பு)கொண்டு சற்று வணங்கிய வடிவுடையவள்; மெலிந்த இடையையுடையவள்.
காம சக்தியை வசமாக்கிக்கொள்ள ஆதி சங்கரர் அம்மையை வணங்கச் சொல்லும் பாடலெல்லாம் உண்டு. அதற்கான மந்திரங்களும் உண்டு. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். கடவுளின் மேல் காமம் கொள்ளுதல் தமிழ் இலக்கியத்திலும் புதிதில்லை. ஆண்டாளின் பாடல்களை எடுத்துக்கொள்ளலாம்.
அதாவது ஆண்டால் கண்ணனைப் பார்த்து பாடும் பாடல்கள்.
 
‘அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்…’ என்கிறாள். பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள் ஆண்டாள். அப்படியானால், இது ஆபாசம் இல்லையா? மேலும் ஒரு வரியைப் பார்க்கலாம்,
‘சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
ஆண்டாளுக்குதான் என்ன ஆசை . மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்!
உடனே நம்ம ஒழுக்க வாதிகள்..”அட..அவுய்ங்க பக்தியால தடவ சொல்றாங்கப்பா” என இழுக்கலாம். அப்படியானால் இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.
‘பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்…
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ’
 
கடவுளுடன் உடல் உறவு கொள்ள வேண்டுமாம் ஆண்டாளுக்கு. அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று ஆண்டாள் கேட்கிறாள்.
 
தயாஜி, இந்த அளவுக்கெல்லாம் போகவில்லை. பெண் கவி ஆண் கடவுளைப் புணர நினைப்பதை எட்டாம் நூற்றாண்டிலிருந்து பொறுத்துக்கொள்ளும் நாம், ஒரு நவீன எழுத்தாளன் காளியின் மீது காமம் கொள்வதைப் பொறுத்துக்கொள்ள மறுக்கிறோம். துடிக்கிறோம். இது நல்ல நடிப்பு இல்லையா? இப்படித்தானே தான் அறச்சீற்றம் உள்ளவன் என காட்டிக்கொள்ள வசதியாகும். ஆக, ஏற்கனவே உள்ள ஆபசங்களைப் பொறுத்துக்கொண்டு தொழுகிறோம். ஏற்கனவே உள்ள ஆபசங்களை பக்தி என பாடுகிறோம். ஆனால் ஒரு இளம் எழுத்தாளன் எழுதினால் கலாச்சாரம் கெட்டுவிட்டது இல்லையா?
முடிவாக…
 
நான் தயாஜி எழுதியது மலேசியாவில் முக்கியமாக சிறுகதை எனச் சொல்ல வரவில்லை தோழர். கதையில் சில பலவீனங்கள் உண்டு. சில இடங்களில் வடிவமைதி தேவைப்படுகிறது. சில இடங்களில் நாசுக்கான சொல்முறை அவசியமாகிறது. ஆனால், இங்கு அதுவல்ல பிரச்னை. தயாஜி புனைவின் மூலம் ஆராய அல்லது உடைத்துப் பார்க்க நினைக்கும் சில சமூக புனிதங்களைத் தொடாதே எனக்கூற யாருக்கும் உரிமையில்லை. அது குறித்து பேசினால் நான் விவாதிக்கவே செய்வேன். காரணம் அது காலாகாலமாக உலகம் முழுதும் உள்ள பல படைப்பாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டே வந்துள்ளது. ஏன் அது குறித்தெல்லாம் நம் ஒழுக்கவாதிகள் வாய் திறக்கவில்லை. காரணம் அவர்கள் எதையுமே படிப்பதில்லை. இதை மட்டுமல்ல எதையுமே வாசிப்பதில்லை. ஆனால் பெரிய ஆராய்ச்சி மன்னர்கள் போல பிதற்றுவார்கள். ஒரு அடிப்படையான கேள்விக்கு ஓடி ஒளிவார்கள். அப்புறம் வேறு எவனாவது தைரியசாலி இருக்கிறானா எனப்பார்த்து, அவன் பின் நின்று நாக்கை நீட்டுவார்கள். இன்னும் நான் குறிப்பிட ஏராளமாக இலக்கியங்களும் ஆய்வுகளும் தமிழில் உண்டு.
 
மலேசியாவில் இது போன்ற சில முயற்சிகள் தேவை என்றே நான் நினைக்கிறேன். அது முதிராமல் இருந்தாலும் ஒரு தொடக்கத்துக்காகவாவது இது போன்ற இலக்கிய முயற்சிகள் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.
 
- ம.நவீன்
 
நன்றி வல்லினம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்