பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிசம்பர் 18, 2023

இரட்சகன்; நடந்தது என்ன ? - 1

 

‘சார் நீங்க வரலையா?’, ‘ஐயா உங்களை சந்திக்க ஆவலாக வந்தோம்?’, ‘புத்தகத்தில் உங்கள் கையெழுத்து வேண்டும்?’, ‘நீங்கள் ஏன் மாணவர்களின் கதைகளுக்கு அறிமுக உரை எழுதவில்லை?’, ’மகன் உங்களுக்காக பரிசு கொண்டு வந்திருந்தார்’, ’உங்கள் உழைப்பு முக்கியமான ஒன்று’, ‘உங்களால்தான் மகன்/மகள் கதை எழுதவே ஆரம்பித்தார்’ போன்ற அழைப்புகளும் செய்திகளும் வந்தவண்ணம் இருந்தன. 

அதற்கு காரணம்; ‘இரட்சகன்’ மாணவர்களின் குறுங்கதைத் தொகுப்பு வெளியீட்டில் நான் இல்லாததுதான்.

இப்பதிவை நான் தொடர்ந்து எழுதுவதற்கு முன் ‘இரட்சகன்’ குறுங்கதைத் தொகுப்பில் கதைகள் எழுதிய மாணவர்களுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்கிறேன். இந்த யோசனை தொடங்கிய போது நான் வாசித்த, எனக்கு கிடைத்த அறுபதற்கும் அதிகமான கதைகளை எழுதிய  மாணவர்களுக்கும் என் வாழ்த்துகள். இரு தரப்பும் தொடர்ந்து எழுதுங்கள். அதுதான் அவசியம். இம்முறை உங்கள் கதைகள் தேர்வாகவில்லை என்றாலும் அடுத்த முறை நிச்சயம் உங்களால் முடியும் முயலுங்கள்; தொடர்ந்து எழுதுங்கள். 

அதோடு இம்மாணவர்களின் பெற்றோருக்கு; இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கும்  உங்கள் வீட்டிலும் ஓர் எழுத்தாளரை நீங்கள் உருவாக்க ஆசை கொண்டதற்கும் இன்னொரு எழுத்தாளர் என்கிற முறையும் என் அன்பும் நன்றியும்.

தங்கள் பிள்ளைகளை எழுதிய கதைகளை புத்த வடிவில் ஏந்தி மகிழ்ந்திருக்கும் பெற்றோரின் மகிழ்ச்சியை நான் சிதைக்க விரும்பவில்லை. அதற்காக ஒரு தவறான முன்னுதாரணத்தை வளரவிடக்கூடாது அல்லவா?

இதனை நான் எழுதுவதற்கு முன்பாக இக்குறுங்கதை பயிலரங்கில் இதுநாள்வரை நான் பயிற்றுவித்த அனைத்து மாணவர்களையும் ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன். இதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பு வருவதையும் நான் விரும்பவில்லை. அந்த கவனத்துடந்தான் இதனை எழுதுகிறேன். 

ஏனெனில் நான் பயிற்றுவித்த இந்த ஒவ்வொரு மாணவர்களும் என் மாணவர்கள் என் நண்பர்கள் என் எழுத்தாளர்கள். அவர்களை அடைக்காப்பது என் நோக்கமல்ல; அவர்களை யாரும் தங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்ற அக்கறை இல்லாமலில்லை.

ஒரு புத்தகம் இலக்கிய படைப்பாக வந்திருக்கிறதா என்று கேட்பதற்கு முன் அடிப்படையில் அது புத்தகமாக தரமாக வந்திருக்கிறதா என பார்க்க வேண்டும். அதற்கு அடிப்படையில் நேர்மை வேண்டும்!

தொடக்கமாக சில கேள்விகளை மட்டும் இப்போதைக்கு கேட்க நினைக்கிறேன். 

முன்னேமே பேசியபடி; புத்தகத்தில் இருக்க வேண்டிய என் வாழ்த்துரையை ஏன் நிராகரித்தார்கள்? என் வாழ்த்துரையை வேண்டாம் என சொல்ல இவர்கள் யார்? அதன் பின்னணி என்ன?

தொடங்கிய நாளிலிருந்து மாணவர்களோடும் அவர்களின் கதைகளோடும் பயணித்த என்னை ஏன் அழைக்கவில்லை? குறைந்த பட்சம் புத்தக வெளியீட்டு அழைப்பிதழையாவது அனுப்பாதது ஏன்?

எத்தனைக் கதைகளை வாசித்திருப்பேன். எத்தனை முறை திருத்தியிருப்பேன். எத்தனை முறை மாணவர்களுடன் இணையம் வழியும் புலனம் வழியும் உரையாடியிருப்பேன். எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களின் இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளை மீண்டும் ஒருமுறை செறிவாக்கம் செய்யவேண்டும் என சொல்லியிருந்தேன். ஏன் அதனை ஒரு பொருட்டாக சம்பந்தப்பட்டவர்கள் கருதவில்லை.? 

பிப்ரவரி 2022 முதல், தொடங்கிய ‘குறுங்கதை பயிலரங்கம்’ புலனக்குழுவில் 30 அக்டோபர் 2023-ல் “ஏன் வாக்களித்தபடி மாணவர்களின் குறுங்கதை தொகுப்பு இன்னும் தயாராகவில்லை’ என நான் கேட்ட பின்பு, ஒரு மாதத்திற்கும் குறைந்த அவகாசத்தில் அவசர அவசரமாக இந்தத் தொகுப்பை வெளியிட காரணம் என்ன?  

இன்னும் இருக்கின்றன. இப்போதைக்கு இது போதும். சம்பந்தப்பட்டவர்களுக்கும் யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டுமல்லவா ? எடுத்துக்கொள்ளட்டும். 

நட்பையும் நெருக்கத்தையும் தாண்டிதான் நாம் இலக்கியம் பேச வேண்டியுள்ளது. அந்த மனநிலை இல்லாது ஆணவத்தின் அடுக்குகளில் இருந்தால்; அது எத்தனை நாள்கள்தான் தாங்கும்…..


மற்றவை பிறகு….

டிசம்பர் 09, 2023

உமாதேவி வீராசாமியின் ‘நாசி ஆயாம்’

ஆசிரியரும் எழுத்தாளருமான உமாதேவி வீராசாமியை சந்தித்தேன்.  எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களை  சந்தித்து  உரையாடுவது எனக்கு விருப்பமானவற்றில்  ஒன்று. இம்முறை வேலை நிமித்தமாகச் சந்தித்தேன். அதுவும் கூட எழுத்து குறித்து அமைந்திருந்தது.

எழுத்தாளர் உமாதேவி இயல் குழுமம் நடத்திய வெண்பலகை கலந்துரையாடல் மூலம் எனக்கு அறிமுகமானவர். அக்குழுவில் இருந்து ஏறக்குறைய பத்து பதினைந்து சிறுகதைகளை வாசித்து அதுபற்றி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. (அங்கு நான் எதற்காக அழைக்கப்பட்டேன் என்பதும் அதனை நான் எப்படி மடைமாற்றினேன் என்பதும் அதன் பின் நடந்தவை பற்றியும் இன்னொருநாள் பேசலாம்). அதில் சிலரின் கதைகள் செறிவாக்கம் செய்தால் நல்லக்கதைகளாக மாறும் சாத்தியங்கள் இருந்தன. ஆனால் அடிப்படையாக நல்லதொரு கதைக்கருவை ஒவ்வொருவரும் எழுதியிருந்தார்கள்.  

உமாதேவியின் சிறுகதையை வாசித்ததும், அதிலிருக்கும் தனித்தன்மை என்னைக் கவர்ந்தது. அச்சிறுகதையைப் பற்றி விரிவாகப்பேசினேன். வழக்கமான குடும்ப பின்னணிதான் கதைக்கருவாக இருந்தாலும் கதையின் தொடக்கமும் கதையை அவர் கொண்டு சென்ற விதமும் சற்றே கவனிக்கத்தக்கதாக இருந்தது. அதிலிருந்து தொடர்ந்து  அவரை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தேன். அவரும் உற்சாகமாக எழுதத்தொடங்கினார். அவ்வாறு இன்னும் சிலரை சொல்லலாம்.

அக்குழு மூலம் எனக்கு அறிமுகமான பலர்  தொடக்கத்தில் இருந்த ‘எழுத வேண்டும்’ என்கிற பொறியை மெல்லமெல்ல மங்க வைத்துவிட்டார்கள். பின்னர் அந்தப் பொறி வேறொன்றாக மாறத்தொடங்கியது.  எழுத்தின் மீது உண்மையான ஆர்வம் உள்ளவர்களே தொடர்ந்து எழுதினார்கள்.  எழுதியதை குறித்து உரையாடினார்கள். அதுவே கலந்துரையாடலாக மாறி பலரும் பயனடையும் வகையில் அமைந்திருந்தது. நான் எதிர்ப்பார்த்த பல எழுத்தாளர்கள் குறிப்பாக பல இளம் தலைமுறை எழுத்தாளர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அங்கொன்றும் இங்கொன்றுமென சிதறிவிட்டார்கள். சரியான கட்டமைப்பு இருந்திருந்தால் இந்நேரம் அதிலிருந்த பலரின் படைப்புகள் பரவலாக பேசப்பட்டு அவர்களும் நம் நாட்டின் கவனிக்கத்தக்க எழுத்தாளர்கள் என பலரால் பேசப்பட்டிருப்பார்கள்.

தொடக்கமாக ஐந்து எழுத்தாளர்களின் புத்தகங்களை அக்குழு மூலம் வெளியிட்டார்கள். ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு சிறுகதைகளிலும் என் பங்கும் இருந்தது. அதில் சிலர் ரொம்பவும் முக்கியமான கதைகளை எழுதியிருந்தார்கள். அந்தப் புத்தகங்கள் குறித்தும் அந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் குறித்தும் இங்கு அதிகம் பேசப்படவேயில்லை. அதற்கு அப்புத்தகத்தை விமர்சிக்க நினைப்பவர்கள் அதனை வெளியிட்ட பதிப்பகத்திடம் தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என சொல்லியிருந்ததுதான் முதல் காரணம் என நினைக்கிறேன்.

தொடர்ந்து நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்துவதில் அக்குழுவிற்கு இருந்த ஆர்வத்தை, தாங்கள் வெளியிட்ட ஐந்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் மீதான வாசிப்பிற்கும் கலந்துரையாடலுக்கும் பயன்படுத்தியிருக்கலாம். இதில் எனக்கும் ஒரு வருத்தம் இன்றளவுமே இருக்கின்றது. வெறுமனே புத்தகங்களை அச்சடிப்பதும் அதனை பள்ளிக்கூடங்களுக்கு ஏற்ற மாதிரி தயார் செய்வதும் அதனை மாணவர்களிடமும் பள்ளிக்கூடங்களிலும் விற்பனை   செய்வதும் வியாபார யுக்தி என பாரட்டலாமே தவிர; இலக்கியத்தில் நாம் எதிர்ப்பார்த்த  பயனைக் கொடுக்காது.

சிறு உதாரணம் சொல்கிறேன்.

ஐந்து எழுத்தாளர்கள். ஐந்து புத்தகங்கள். மூன்று சிறுகதைத் தொகுப்பு இரண்டு குறுங்கதைத் தொகுப்பு. எழுதியவர்களின் மூன்று பேர் ஆசிரியர்கள் ஒருவர் சமயப்பணிகளில் ஈடுபாடுள்ள அமைப்பை சார்ந்தவர். ஒருவர் இளம் ஆசிரியை.  அவர்களின் சிந்தனை  அவர்களின் எழுத்து எதை நோக்கி அமைந்திருக்கிறது என ஒரு கலந்துரையாடலை நடத்தியிருக்கலாம்.

அவை நல்ல கதைகளா அல்லது நமத்து போன கதைகளா என காலம்தான் சொல்ல வேண்டும் என்று நம்மால் ஒதுங்கிவிட முடியாது. அந்தக் காலத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். காலம் தாழ்த்தி விவாதிக்கப்படும் கதைகள் ஒரு பக்கம் இருந்தாலும் எழுத்தாளர்கள் இருக்கும் போதே அவர்களின் படைப்புகள் பேசப்படுவதும் அவசியம்தானே.

ஒருவேளை பல்வேறு இடங்களில் இந்த ஐந்து புத்தகங்களுக்கான கலந்துரையாடல் நடந்திருந்தால் நிச்சயம் அது இந்நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்கு பயனாக அமைந்திருக்கும். இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். நூல் வெளியீடு என்பதும் நான் சொல்லும் கலந்துரையாடல் என்பது வேவ்வேறு என மீண்டும் மீண்டும் தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. அதைவிட  முக்கியம்  புத்தகம் வெளியிடு  செய்வது மட்டுமே  இலக்கிய செயல்பாடும் ஆகிவிடாது.




இம்முறை எழுத்தாளர் உமாதேவி வீராசாமியை சந்தித்தது, அவரது அடுத்த புத்தகத்திற்கான முதற்கட்ட வேலைக்காக. விரைவில் இரண்டாம் புத்தகமாக சிறுகதைத் தொகுப்பினை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இந்தத் தடவை கதைகளை செறிவாக்கம் செய்யும் வேலையை நான் செய்கிறேன். பலமுறை பல புத்தகங்களுக்கு புனைவை செறிவாக்கும் வேலையை செய்திருந்தாலும் முறையாக கட்டணம் என வாங்கியதில்லை. பல சமயங்களில் அக்கறையில் பெயரிலும்  சில சமயங்களில் சிறு ‘டோக்கனை’ பெற்றுக்கொண்டும் செய்திருக்கிறேன்.

ஆனால் இப்போது அதனை எனக்கான வேலைகளில் ஒன்றாக மாற்றிவிட்டேன். எழுத்தாளர் சொல்ல வந்தக் கதைகள் அவர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்பதில்   தொடங்கி புனைவு ரீதியில் அவரின் படைப்பு எப்படி உள்ளது என கலந்துரையாடுகின்றேன். முடிந்தவரை எழுத்தாளர் எழுதியிருக்கும் மூலத்தைக் கலைக்காமல் அதனை மேலும் தீவிரமாக்குவதுதான் என் வேலை. ஆனாலும் இறுதி முடிவு எழுத்தாளர் கைகளில்தான் இருக்கின்றது. இம்முறை அதற்கான கட்டணத்துடன் இவ்வேலையைச் செய்கிறேன்.

பத்து சிறுகதைகளுடன் எழுத்தாளர் உமாதேவி சந்தித்தார். ஏறக்குறைய அரை நாளில் எங்களால் சில சிறுகதைகளையே செறிவாக்கம் செய்ய முடிந்தது. அவர் இந்தத் தொகுப்பிற்காகவே சில கதைகளையும் எழுதியிருந்தார். அதில் ‘நாசி ஆயாம்’ என்னும் சிறுகதை எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது.

அச்சிறுகதை அவருக்கு நல்ல பெயரை எடுத்து கொடுக்கும் எனவும் அதற்கான காரணங்களையும் அவருக்குச் சொன்னேன்.  அதோடு ஒரு சிறுகதைக்கான கருவை அவர் பகிர்ந்து கொண்டார்.  ஆனால் அக்கதைக்கருவை சிறுகதையாக முடிக்காமல் விரிவாக எழுதினால் குறுநாவலாக மாறும் தன்மை கொண்டிருந்தது. இன்றளவும் உழைப்பே    பிரதானமாக இருக்கும் அவரது தந்தையைப் பற்றிய அவரது சிறுவயது நினைவுகளை  சிறு சிறு பகுதிகளாக அடுக்கி மேலும் சிலவற்றை அவர் இணைத்தால் அது சாத்தியப்படும் என்றேன்.  அவர் கண்களில் அதற்காக ஆர்வம் தெரிந்தது.

இருந்தும் இச்சிறுகதைத் தொகுப்பை முடித்த பின்னரே அடுத்ததில் களம் இறங்கலாம் என்று முடிவெடுத்தோம்.

மீண்டும் ஒரு நாள் இணையம் வழி சந்தித்தோம். புத்தகத்திற்கான கதைகளையும் இன்ன பிற விபரங்களையும் பேசி முடிவெடுத்தோம்.

ஒட்டுமொத்தமாக குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதைகளே அவரிடம் அதிகம் இருந்தன. ஆனால் ஒன்று போல் மற்றொன்று இல்லை என்பது ஆச்சர்யம். புத்தகம் முழுமையடைந்து நம் கைகளுக்கு வந்த பின் அந்தப் புத்தகத்திற்கான கலந்துரையாடலை நாம் ஏற்பாடு செய்யலாம்.

ஆசிரியை, அனுபவசாலி, எழுத்தில் ஆர்வம் கொண்டவர். அவரின் படைப்புகள் அதற்கான கவனிப்பையும் அங்கிகாரத்தையும் விரைவில் அடையும் என எதிர்ப்பார்க்கிறேன்.

-தயாஜி

 

நவம்பர் 30, 2023

வாசகனின் நன்றி

 



எழுத்தாளர் பிரியா மொழிபெயர்த்திருக்கும் 'ஒரு வசீகரமான கைம்பெண்ணின் முகம்' சிறுகதைத் தொகுப்பில் 'ஒரு திடீர் தெரிவு' என்னும் சிறுகதை இடம்பெற்றுள்ளது. இக்கதையை ஜூமா அல்ஃபைரூஸ் என்பவர் எழுதியுள்ளார்.

தொடக்கத்திலேயே இக்கதை ஈர்த்துவிட்டது. அடுத்தடுத்த பத்திகளில் நம்மையும் பதைபதைக்க வைக்கிறது. தலையும் புரியாமல் வாலும் புரியாமல்; ஆனால் அதன் வலியை மட்டும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கதையின் முடிவை நெருங்க நெருங்க சாதக் ஹசன் மண்டோவை ஏதோ ஒரு கதைபோல ஒரு பிம்பத்தைக் கொடுத்தாலும் , இக்கதை நம் மனதிற்கு நெருக்கமாகிவிடுகிறது.

ஏனெனில் அதிகார கரங்களில் சிக்குண்ட சாமாணிய மனிதர்களின் கதைகளை யார்தான் எழுதாமல் இருக்கிறோம். அந்தக் கதைகள் யாரைத்தான் கலங்கடிக்காமல் இருக்கின்றன.

விரைவில் இம்மொழிபெயர்ப்பு புத்தகம் குறித்த என் பார்வையை எழுதுகிறேன். அதுதான் இப்படியாக பல சிறுகதைகளை இத்தொகுப்பிற்காக மொழியாக்கம் செய்திருக்கும் எழுத்தாளர் பிரியாவிற்கு ஒரு வாசகனாய் என் நன்றி...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை #வெள்ளைரோஜா_பதிப்பகம்

விழித்திரு; விழிப்புணர்வாய் இரு

 



இலக்கியம் எந்த அளவு உன்னதமானது என நம்புகின்றோமோ.. சில சமயங்களில்; அதே அளவு அதனை எழுதும் கரங்கள் ரொம்பவும் கீழ்மையானது என நம்ப வைத்துவிடுகிறார்கள். 


இலக்கியம் உன்னதமானது என நம்மை நம்ப வைப்பவர்களேத்தான் அதனையும் எந்த ஒரு குற்றவுணர்ச்சி இன்றி செய்துவிட்டு "இலக்கியம் மனிதனை பக்குவப்படுத்துகிறது .." என பேசவும் செய்கிறார்கள்.


எழுத்தாளர்களே உங்களுக்கு ஒன்றை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன். 


திடீரென ஒருநாள் உங்களுக்கு ஏதோ ஒரு பெண் முகநூல்வழி நட்பாகிறாள். அல்லது வட்சப்வழி மாணவியாகிறாள் என வைத்துக் கொள்வோம். உங்களின் உரையாடல் மெல்ல மெல்ல வளர்கிறது. முகம் பார்க்காமலேயே நீங்களும் அசடு வழிகிறீர்கள் எனவும் வைத்துக்கொள்வோம்.

அது உங்கள் எழுத்தின் மீதான மரியாதையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இனி நீங்கள் எழுதவும் கூடாது பேசவும் கூடாது என்பதற்காகவும் இருக்கலாம்.


ஒருவரின் பலவீனத்தைக் கண்டறிந்து. அதற்கு மேலும் மேலும் தீனி போட்டு, வளர்த்து, அது அந்த மனிதனையே தின்னும் அளவு மாறி, அந்த மனிதன் தன் நிலை மறக்கும் பொழுது அதனையே வீடியோக்களாக புகைப்படங்களாக ஸ்க்ரீன் ஷாட்டுகளாக எடுத்து அந்த மனிதனை பேச விடாமல் எழுத விடாமல் செயல்பட விடாமல் இன்னும் சொல்லப்போனால் இனி இலக்கிய உலகில் முகமே காட்ட முடியாத அளவுகூட செய்ய முடிகிறது எனில் அதனை வெறும் கீழ்மை என மட்டும் அழைக்க முடியாதுதானே.. 


சில ஆண்டுகளுக்கு முன் எனது முகநூலுக்கும் இஸ்தாகிராமிற்கும் அவ்வளவு ஏன் வட்சப்பின் கூட (வட்சப்பில் வந்தது பற்றி ஏற்கனவே பேசியுள்ளேன்) இதே மாதிரி ஒரு பெண் வந்தார் பேசினார் நானும் பேசினேன். பேச்சு அதன் எல்லையைக் கடந்ததும் எனக்கு சரியாகப்படவில்லை. அது என்னை யோசிக்க வைத்தது. நல்லவேளையாக யோசித்தேன். இல்லையென்றால் இப்போதே நானும் கூடத்தான் தலைமறைவாக வாழ வேண்டி வந்திருக்கும்.


அந்தப் பெண்ணின் போலி சமூகவலைத்தளத்தின் பின்னணியில் ஓர் ஆண் இருந்ததையும் . அதுவும் அந்த நபர் எனக்கு  அறிமுகமானவர் என்பதையும் கண்டுபிடித்து (எப்படி கண்டு பிடித்தேன் என்பது கூட சுவாரஷ்யமானதுதான்) சொன்னதும் உடனே அந்தப் பெண் காணாமல் போய்விட்டார்.


ஒவ்வொருவரையும் பேசவிடாமல் செய்ய ஏதோ ஒன்றை ஆயுதமாக எடுக்கின்றார்கள். அல்லது ஒன்றை உருவாக்குகிறார்கள். அவற்றில் இதுவும் ஒன்று.


ஆக.... வெளியுலகுக்கு வந்தால் குறிப்பாக நீங்கள் எழுத வேண்டும் என வந்தால் கூடுதல் விழிப்புணர்வோடு இருங்கள். 


இதனை நான் ரொம்பவும் வருத்தத்துடன்தான் எழுதுகிறேன். எவ்வளவு பெரிய நம்பிக்கையை உங்கள் ஆணவத்தின் பொருட்டு நீங்களே உடைத்துவிடுகிறீர்கள்!!!!

ஏப்ரல் 01, 2023

தீக்‌ஷா - புத்தக வெளியீடு

சமீபத்தில் திரு ஏ.கே.ரமேஷ் அவர்களின் தீக்ஷா புத்தக வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். (அவர் குறித்தும் அவரது புத்தகம் குறித்து முன்னமே எழுதியுள்ளேன்) வழக்கமான புத்தக வெளியீடு போல அல்லாமல், சமய நிகழ்ச்சியாகத் தொடங்கியது. கடவுள் வாழ்த்து, பெரிய புராணப்பாடல்கள் என ரம்மியமான சூழல் நிகழ்ச்சி முழுக்க நிறைந்திருந்தது.

திரு.சுப்பிரமணி சோணையா நூலாய்வை சிறப்பாக வழங்கினார். இன்னும் கூட அவர் பேசியிருக்கலாம் என தோன்றினாலும் தனக்கு கொடுத்த பணியைப் பலரும் கவரும் வண்ணம் செய்திருந்தார். ஒவ்வொரு கதைகளைக் குறித்து ஒரு தீர்க்கமானப் பார்வை அவரிடம் இருந்தது. குறிப்பாக பலருக்கு பிடித்த கதை அவருக்கு உவப்பாக இருக்கவில்லை. சிலரால் கவனிக்காத கதை மீது அவருக்கு நெருக்கமும் இருந்தது.

மலேசிய கல்வி அமைச்சிலிருந்து கவிஞர் சிவா வாழ்த்துரை வழங்கினார். மனதிலிருந்து பேசி பார்வையாளரைக் கவர்ந்தார் என்றே சொல்லலாம்.

இயல் பதிப்பக தோற்றுனர் திருமதி. பொன் கோகிலமும் பேசினார். ஒரு தேர்ந்த பேச்சாளர்க்குரிய பாணியில் பேசியவர், சமயம் சார்ந்தும் இன்றைய தலைமுறைகள் தொலைத்தும் தொலைந்தும் கொண்டிருப்பதைக் குறித்தும் பேசினார். 

நிறைவு உரையாக எழுத்தாளர் திரு. ஏ.கே.ரமேஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார். நன்றியென்னும் சொல்லைக் குறைவாகவும் நன்றிக்குரியவர்களின் பட்டியலை அதிகமாகவும் பேச்சில் சேர்த்திருந்தார்.

நிகழ்ச்சி முடிந்து புறப்படும் சமயம், திருமதி பிருந்தாவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை நேரில் சந்திக்கின்றேன். என் கதைகளைத் தொடர்ந்து வாசிப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சி. எங்களது உரையாடலில் அவர் சமயம் சார்ந்து எடுக்கும் முன்னெடுப்புகளைப் பகிர்ந்தார். உண்மையில் பாராட்டத்தக்கவையாக அவை இருந்தன. குறிப்பாக ஏழு வயது மாணவர்கள் முதல் ஒவ்வொருவரை கதைகளை எழுதச் சொல்லியிருக்கிறார். அவர்களின் கதைகளையும் ஆவலோடு பகிர்ந்து கொண்டார். இளம் வயதிலேயே எழுத்தின் மீது மாணவர்களுக்கு ஆசை வரவைக்கும் யுக்தியல்லவா இது.

 இந்நிகழ்ச்சியில் அடிக்கடி ‘தமிழும் சமயமும் ஒன்றுதான்’ என்ற பேச்சு ஆங்காங்கே எழுந்த வண்ணம் இருந்தது. நாம் சொல்லிக்கொள்வது போல தமிழும் சமயமும் ஒன்றுதான் எனவும் ஒரு கோட்டுக்கு கீழ்தான் உள்ளன எனவும் இலகுவாக எடுத்துக்கொள்ளவோ அதனை எதிர்கொள்ளவோ முடியாது.

அதில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிவரும். வெளியில் இருந்து வரும் சிக்கல்களைச் சொல்லவில்லை. உள்ளுக்குள்ளேயே ஏற்படும் சிக்கல்களை முதலில் நாம் கலைய வேண்டும். இதனையொட்டி அதிகமாக பேசலாம். ஆனால் இப்போது சின்ன உதாரணம் மட்டுமே கொடுக்கிறேன். ஒரு முருகா..! என்பார் இன்னொருவர் ஷண்முகா..! என்பார். இருவரும் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இரண்டையுமே வைத்துக் கொண்டு தமிழும் சமயமும் ஒன்றுதான் என சொல்ல முடியாது. பொங்கலா? புத்தாண்டா? என்ற குழப்பத்தை நான் சொல்லவேண்டுமா என்ன? 

நிறைவாக; நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலும் சமயப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் என தெரிந்து கொண்டேன். சமய நிகழ்ச்சிகளைத் தவிர்ந்து இவர்களை பிற இடங்களில் பார்ப்பது அரிது. இவர்களில் இருந்தும் எழுத்தாளர்கள் வெளிவர வேண்டும். இலக்கியத்தை வாசிக்கவும் எழுதவும் இவர்களும் தயாராகவேண்டும். மற்றவர்களையும் தயார்ப்படுத்த வேண்டும். ஏனெனில் அதுவும் அவர்களின் சமயம் சார்ந்த பங்களிப்பிற்கு அவசியம். 

தமிழுக்குச் சேர்ந்திருக்கும் சிறப்புகளில் ஒன்றுதான் நமக்கு கிடைக்கும் பல இலக்கியங்களில் அதிகம் இருப்பது கடவுவளை பாடியதும் கடவுளின் காதலுக்காக ஏங்கியதுமே. ஆனால் இன்று கடவுளை நோக்கிய புதிய குரல்கள் எழுவதில்லை. ஏனெனில் முன்னமே பாடிய பழைய குரல்களை யாரும் கண்டுக்கொள்வதில்லை. 

இது போன்ற நிகழ்ச்சிகள் வழி அக்குறை நீங்கும் என்ற அக்கறையில் இதனை எழுதுகிறேன்.

அன்புடன் தயாஜி

ஜனவரி 17, 2023

"அப்பறம்.... நாம எப்ப சந்திக்கலாம்...."


சகோதரர் கவிஞர் மு.மணிக்குமாரை சந்தித்தேன். சமீபத்தில் நடந்த 'உளமுற்ற தீ' புதுக்கவிதைகள் புத்தக வெளியீட்டில் கடைசி வரை இருந்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள இயலவில்லை.

ப.இராமு அறக்கட்டளை வெளியீடு செய்திருக்கும் இரண்டாவது தொகுப்பு புத்தகம் இது.  இம்முறை புதுக்கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். இது போன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கது. நன்கு அறியப்பட்ட கவிஞர்களின் கவிதைகள் இதில் இருந்தாலும் பல புதியவர்களுக்கு இலக்கிய முகவரியாகவும் இத்தொகுப்பு அமைந்திருக்கிறது.

இப்புத்தகத்தைத் தவறவிட விரும்பப்பில்லை. முயன்றேன். கவிஞர் மு.மணிக்குமார் உதவினார். வெறுமனே புத்தகத்தைக் கேட்டார்; கொடுத்துவிட்டு செல்வோம் என்று நினைத்திடாமல் எங்கள் சந்திப்பு உரையாடலாகத் தொடர்ந்தது. நல்லவேளையாக கவிஞருக்கு அதற்கான நேரம் கிடைத்திருந்தது.

அடிக்கடி சந்தித்துக்கொள்ளாவிட்டாலும் சந்திக்கும் போதெல்லாம் அன்பு பாரட்டுகின்றவர்களின் கவிஞரும் ஒருவர். பார்த்த உடனே உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மருந்துகளால் உடல் பலவீனமடைந்து வருவதால், இப்போது மருந்துகளைத் தவிர்த்து தியானம் பிரார்த்தை போன்ற அகம்சார்ந்த தேடல்களில் ஈடுபட்டுள்ளதைச் சொல்லி சிரிக்கலானேன். அவரும் சிரித்தார்.  இதனைக் குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம், பலருடனான உரையாடல்கள் சிரித்த முகமாய்த் தொடங்கி வெறுக்கும் முகமாய் முடிந்த கதைகளெல்லாம் நமக்கு தெரியும்தானே.

'உளமுற்ற தீ' கவிதைத் தொகுப்பு குறித்த என் முதற்கட்டப் பார்வையைப் பறிமாறிக்கொண்டேன். நேர்த்தியான வடிவமைப்பு, அழகான முகப்பு, கவிதைகளுடன் கவிஞர்களின் அறிமுக குறிப்பும் புகைப்படங்களும் இருந்தது பாராட்டத்தக்கது. ஏனெனில் பல கவிஞர்களின்/ எழுத்தாளர்களின் குறிப்புகள் (புகைப்படங்கள் உட்பட) ஆவணப்படுத்தப்படாமல் இன்று இல்லாமலேயே போயிருக்கின்றன.



பிறகு புத்தகத்தை வாசித்து என் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்றைய சந்திப்பில் கவிஞருடன் மலேசிய இலக்கியம் குறித்து மேலோட்டமாக பேசினேன். முன்னமே அவர் ஒவ்வொன்றையும் உள்வாங்கியிருந்தது அவரது பேச்சில் தெரிந்தது.

கடந்த ஆண்டு ஐந்து எழுத்தாளர்களின் முதல் புத்தகங்களை வெளியிட காரணமாக இருந்த மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் நிறுவனர் (அகிலம் நீ) பொன் கோகிலம் குறித்தும் பேசினோம். குறுகிய காலத்தில் பல இளம் எழுத்தாளர்களை அவர் அடையாளம் கண்டு ஊக்குவிப்பதில் எங்கள் இருவருக்கும் மாற்று கருத்து இல்லை. 

இதன் வழி தங்களின் எழுத்துலக அடையாளத்தைத் தொடங்கியவர்கள் தொடர்ந்து தங்களின் அடையாளத்தைக் காப்பாற்ற அவர்களின் தொடர்ந்த எழுத்து பயணம் மட்டுமே உதவும் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. பொன் கோகிலத்தின் தலைமைப்பண்பு பற்றி குறிப்பிடும் போது, குறுகிய இடைவெளியில் பலரை முன்னிலைப்படுத்தியிருக்கும் பண்பு பாராட்டக்குரியது என்றார். உண்மைதான் அவர் முகம் மட்டுமே இருக்க வெண்டிய பல இடங்களில் பலரின் முகங்களைக் காண்பதற்கும் தனித்தனி ஆளுமைகளாக அவர்கள் வளர்வதற்கும் அதுதானே தொடக்கப்புள்ளி; இதுதானே அவர்களுக்கு ஏற்ற பள்ளி.

அப்படியே 'வல்லினம்' ம.நவீன் ,  கே.பாலமுருகன் என இன்னும் சிலரின் இலக்கிய செயல்பாடுகள் குறித்து கருத்துகளைப் பறிமாறிக்கொண்டோம். யோசிக்கையில் எப்போதுமில்லாத அளவிற்கு இன்றைய இளைஞர்கள் வாசிப்பிலும் எழுத்திலும் ஈடுபாடு காட்டுவதற்கும் தத்தம் கருத்துகளைப் பொதுவெளியில் வைப்பதற்குமான நகர்வுகளுக்கு இவர்கள் எல்லோரும் முக்கியமான காரணம் என்றும் சொல்லலாம்.

எனது இன்றைய புத்தக விற்பனைத் தொழிலையும் என் கடந்த கால  வனொலி அறிவிப்பாளர் பணியைப் பற்றியும் பேசினோம். என் வாழ்வில் பசுமையான பல நினைவுகளையும் பல துரோகங்களையும் கொண்டதை எப்படி மறப்பது. இப்போது கூட எனக்கான இடம் இன்னமும் எனக்காக இருப்பதாகவே தோன்றுகிறது. 

இன்னும் பலவற்றைப் பேசினோம். இன்றையப் பொழுதை நல்லப் பொழுதாக அவரின் வருகை மாற்றியிருந்தது. வாய்ப்பிருந்தால் சொல்லுங்க அடிக்கடி சந்திக்கலாம் என்றார்; இதைவிட நமக்கு வேறு என்னங்க வேணும்.

எனக்கு அவர் 'உளமுற்ற தீ' புத்தகத்தையும் அவரின் கவிதைத் தொகுப்புகளான 'விரல் நுனியில் விடியல் கனவுகள்', 'எனது இன்னொரு நான்' என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் கொடுத்தார். 

ஒருவரிடமிருந்து புத்தகத்தை பரிசாகப் பெற்றால் அவருக்கும் ஒரு புத்தகத்தைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. நானும்  எனக்கு பிடித்த எழுத்தாளரான அகரமுதல்வனின் இரண்டாம் லெப்ரிணண்ட் சிறுகதைத் தொகுப்பினை அவரிடம் கொடுத்து அதற்கான காரணத்தையும் பகிர்ந்தேன்.

மனதிற்கு பிடித்தவற்றை பிடித்தவர்களோடு உரையாடுவதுதான் எத்துணை இன்பமானது. அப்பறம் நாம எப்ப சந்திக்கலாம்.....

நவம்பர் 21, 2022

ஓட்டு போட்டது ஒரு குத்தமாய்யா ?


கதை எழுத ஆரம்பித்த சமயத்தில் அதிகம் எழுதி அடித்து திருத்தி திரும்ப எழுத நினைப்பேன். ஆனால் செய்ய மாட்டேன். அப்போது கணினியோ தட்டச்சோ கைவசம் இல்லை. கையெழுத்தே சாத்தியம். நான் ஒருமாதிரி எழுதினால் என் கையெழுத்து ஒருமாதிரி போகும்.  

அதனாலேயே கையெழுத்தை மீண்டும் திருத்தி எழுதவோ மாற்றி எழுதவோ சிரமப்படுவேன். ஓரிரு  எழுத்துப்பிழைகளை அழித்திடலாம். இப்பவும் அப்படித்தான். கையெழுத்து அதன் விருப்பத்திற்கு கோணல்மாணலாக இருக்கும். நல்ல வேளையாக கைவசம் கணினி இருப்பதால் தப்பிக்கிறேன்.

அப்படி எழுதியெழுதி திருத்தி, திரும்ப எழுத சோம்பல் பட்ட பல கதைகளை கணினியில் உதவியால் எழுதியிருக்கிறேன். ஆனாலும் சில கதைகள் அந்தந்தக் காலக்கட்டத்தைத் தாண்டிவிட்டால் அதற்கான மதிப்பு இருக்காது. அக்கதை எழுதியது வீண் என நினைத்திருந்தேன். அதனாலேயே குறிப்பு புத்தகத்திலேயே பல கதைகளும் கதைகளுக்கான குறிப்புகளும் உறங்கி கொண்டிருக்கின்றன.

எனது அந்த நினைப்பு தவறு என ரொம்பவும் தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். காலம் தொடர்ந்து புரிய வைத்துக்கொண்டே இருக்கிறது.

அவ்வகையில் நான் எழுதி, நீண்ட நாட்களுக்கு பிறகு (அது மாதக்கணக்காகி வருடக்கணக்காகி விட்டது) திருத்தி எழுதி அதனை இனி அதற்கு மதிப்பில்லை என்ற ஒரு கதை இன்று என் முன் பல்லிளித்து நிற்கிறது.

கதை அப்படியே இருக்கட்டும். அக்கதைக் கருவை சுருக்கமாக சொல்கிறேன்.

அண்ணன் அஜித் ரசிகன். தம்பி விஜய் ரசிகன். ஒருவருக்கும் ஓயாத சண்டை. (கதை நடப்பது 90கள் காலக்கட்டத்தில், சமூக வலைத்தளங்கள் அவ்வளவாக அறிமுகமாகியிருக்கவில்லை) அஜித்தா? விஜய்யா? அல்லது விஜய்யா? அஜித்தா? என்பதைத் தாண்டி அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறெதிலும் அக்கறையோ பொறுப்போ இல்லை. ஒருநாள் நோக்கு வர்மத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மூக்கு மண்டை என உடைத்துக் கொள்ளும்படி ஆனது. மருத்துவமனையில் அண்ணனும் தம்பியும் பக்கத்துப்பக்கத்தில் படுத்திருக்க அம்மா வருகிறார். கையில் நாளிதழ். பிள்ளைகள் முன் நாளிதழ் நடுப்பக்கத்தைத் திறக்கிறார். அதில், அண்ணனும் தம்பியும் யாருக்காக அடித்து மண்டையை ஒடித்துக்கொண்டார்களோ அந்த அஜித்தும் அந்த விஜய்யும் சேர்த்து படம் நடிக்கவுள்ளதாக விளம்பரம் வந்திருந்தது. இருவரும் கைகள் பிடித்தபடி தன் ரசிகர்களுக்கு கைகாட்டிக்கொண்டு நிற்கிறார்கள். அவ்வளவுதான் கதை.

இப்போது இந்தக் கதையை வாசிக்கையில், அஜித்தும் விஜய்யும் தங்களுக்குள் போட்டி இல்ல என்பதாக நிலமை மாறியிருக்கிறது.

ஆனால், இக்கதைக்கு இன்றுவரை மதிப்பிருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது;
நீங்கள் ஒரு கட்சிக்கும் நாங்கள் ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்கிறோம். உங்களையும் உங்கள் கட்சியையும் நாங்கள் கழுவி ஊத்துகிறோம். எங்களையும் எங்கள் கட்சியையும் நீங்கள் கழுவி ஊத்தறீங்க.
நீங்கதான் ஊழல்ன்னு நாங்களும், நாங்கதான் ஊழல்ன்னு நீங்களும் வீடு வீடா போய் நோட்டிஸ் கொடுக்கறோம்.
உங்க கட்சிக்கு நீங்களும், எங்க கட்சிக்கு நாங்களும் ஓட்டு போடறோம்.

கடைசில பார்த்தா நீங்க ஓட்டு போட்டவங்களும் நாங்க ஓட்டு போட்டவங்களும் ஒன்னா சிரிச்சிகிட்டு கைகொடுக்கும் போது நீங்களும் நாங்களும் இவங்களுக்காக அடி வாங்கி மிதி வாங்கி மண்டை வீங்கி கைகால் ஒடிஞ்சி படுத்து கிடக்கப்போறோமோ என்னமோ தெரியல.....

நவம்பர் 02, 2022

தகப்பன்சாமி தந்தவேல் அது கந்தவேல்


எல்லோரிடலும் எல்லாவற்றையும் சொல்லவோ கேட்கவோ என்னால் முடியாது. அதற்கான தகுதியும் வாய்ப்பும் இருந்தாலும் என் மனம் ஒப்புக்கொள்ளாத வரை நான் அதனைச் செய்யமாட்டேன்.

புதியவர்களுடன் 'வாங்க டீ குடிப்போம்' என்பதும், கொஞ்சம் பழகியவர்களிடம் 'பிரியாணி' வாங்கி கொடுங்க என்பதையும் உரையாடலின் தொடக்கமாகவும் நகைச்சுவையாகவும் பயன்படுத்துவேன். அதன் தேநீருக்கு நானும் பிரியாணிக்கு அவர்களும் பணம் கட்டிய நிகழ்வுகளை அதிகமாகவெல்லாம் நான் அனுபவிக்கவில்லை.

ஆனால்,  எழுத்து, கதை, புத்தகம் என வரும் போது, இயல்பாகவே நான் உற்சாகமாகிவிடுகிறேன். அவர்களிடம் நெருக்கமாகிவிடுகிறேன். 

ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ஒரு கதையாவது பகிர்வதற்கு இருக்குமென நம்புகிறேன். அதனை எழுத வைத்துவிட்டால் அடுத்தடுத்த கதைகள் தானாகவே வந்துவிடும். அதற்கு அவர்களும் சிரத்தை எடுக்கவேண்டும் என்பதுதான் எப்போதுமான என் அதார உரையாடல்.

அப்படி எழுத்து மூலமும் சிறுகதை கலந்துரையாடல் மூலமும் புதிய நண்பர்கள் நெருக்கமாகியுள்ளார்கள்/ நெருக்கமாகிக் கொண்டிருக்கிறார்கள். என் அளவுக்கு தவறாத் சட்டையும், தமிழகத்திலிருந்து எனக்கு பிடித்த வண்ணத்தில் அரை கை ஜிப்பாவும், பழங்கள் என இப்படி பலவற்றை சொல்லலாம்.

அதிலொன்றுதான் காக்கும் கந்தனின் கைவேல்.

சமூக/சமய ஆர்வளரும் எழுத்தாளருமாகிய ஏ.கே.ரமேஷ் தன் தமிழகப் பயணத்திலிருந்து நினைவுப்பரிசாகவும் அன்பின் உருவாகவும்  எனக்கு கொடுத்தார்.

"தமிழகத்திலிருந்து உங்களுக்கு என்ன வேணும்..." என கேட்டதும், தயக்கமின்றி வேல் வாங்கிட்டு வாங்க சார் என்றேன். தலையாட்டியவர் தவறாது கந்தவேலை கண்டுபிடித்துவிட்டார். அதிலும் இது கையடக்க கந்தனின் வேல் என்பது கூடுதல் அன்பு. தமிழை நேசிப்பவர்கள் தண்டாயுதபாணியை நேசிக்காமல் இருக்க முடியுமா என யோசிக்கிறேன்.

எதற்கும் அடங்கா கந்தவேலை அவர் தந்தவேளை பக்தனின் கைக்குள் அடக்கமாக கொடுத்ததில் அவ்வேல் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

அவருக்கு என் அன்பு, அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என் விருப்பம்.

அக்டோபர் 09, 2022

- 42 குறுங்கதைகள் -

- 42 குறுங்கதைகள் -

இயல் பதிப்பகத்தின் நூலிழை குழு சந்திப்பின் மூலமாக ஆசிரியர் ப.பத்மநாதனை தெரியும். அவருக்கும் என்னை அப்போதுதான் தெரியும் என நினைக்கிறேன். கதைகள் குறித்த காலந்துரையாடல் வழியும் கதைகள் குறித்து நான் முன்வைக்கும் கருத்துகள் வழியும் இருவரும் நட்பானோம். 

ஒவ்வொரு முறையும் அழைத்து பேசும் போது ஒவ்வொரு கதைகள் குறித்து பேசுவார். கதைகளுக்கான கருவைப் பகிர்ந்துகொள்வார். சிறுகதைகளை எழுதி அது பற்றிய உரையாடலை திறந்த மனதுடன் எதிர்க்கொள்வார். 

இவ்வாண்டு சிறுகதை தொகுப்பு கொண்டுவர திட்டம் வைத்திருந்தார். அதையொட்டிய முன் வேலைப்பாடுகளையும் செய்யத்தொடங்கியிருந்தார். அப்போதுதான் குறுங்கதை பயிலரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதுவரை சிறுகதைகள் குறித்த கலந்துரையாடலில் பங்கெடுத்த நான் குறுங்கதை பயிற்றுனராக ஆனேன். தொடர்ந்து குறுங்கதைகளின் சாத்தியக்கூறுகளை முயல்வதாலும் ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல;101 குறுங்கதைகள்’ என்ற குறுங்கதைத் தொகுப்பை நான் வெளியிட்டிருந்ததும் இதற்கான ஆதாரக்காரணங்கள்.


இவர் மட்டுமின்றி குறுங்கதை பட்டறையில் மேலும் சிலர் பங்கெடுத்துக்கொண்டார்கள். குறிப்பாக ஆசிரியர் உமா தேவியையும் சொல்லலாம்; ஏனெனில் அவரும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட திட்டமிட்டு பின்னர் குறுங்கதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். அவர் குறித்து அடுத்த முறை பேசுகிறேன்.

குறுங்கதைகள் பட்டறையில், குறுங்கதைகள் எழுத பயிற்சி கொடுப்பதற்கு முன்பாக அதிலிருக்கும் சுதந்திரத்தைப்பற்றி பேசினேன். அதோடு முக்கியமான எழுத்தாளர்களின் முக்கியமான குறுங்கதைகள் குறித்தும் அது எந்த இடத்தில் குறுங்கதையாக மாறுகிறது என பேசுவேன். அவை; பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகத்தையும் எழுத வேண்டும் என்ற ஆரவத்தையும் கொடுத்தது.

பலர் எழுதினார்கள். பலவிதமான குறுங்கதைகள் வந்தன. வழக்கம் போலவே ‘கதைகள்’ தவிர்த்து தங்களின் அனுபவங்கள், அறிவுரைகள், சம்பவங்கள் என வந்தன. அதிலிருந்து மெல்ல மெல்ல குறுங்கதைக்குள் அவர்களை அழைத்து வந்தோம். 

குறுங்கதைகளில் இருக்கும் பலமும் பலவீனமும் அது கொடுக்கும் சுதந்திரம்தான். என்னவெல்லாம் எழுதலாம் என்கிற கேள்வியும், என்னவெல்லாம் எழுத முடியும் என்கிற பதிலும் குறுங்கதை எழுத ரொம்பவும் அவசியம். அதற்கு குறுங்கதைகளைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும். ‘சின்ன கதைதானே அதிலென்னத்தை சொல்லிடப் போறாங்க’ என மேம்போக்காக நினைப்பவர்களைக் குறுங்கதைகள் ஏமாற்றிவிடுகின்றன. ஒரு சொல், ஒரு வரி, கதைகள் மீதான முழு பார்வையையும் மாற்றிவிடும் என்பதில் எச்சரிக்கை வேண்டும். அதே போல வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகள் மட்டுமே குறுங்கதைகளைக் காப்பாற்றிவிடாது.

ஆசிரியர் ப.பதமநாதனின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆசிரியர் பணிகளுக்கு இடையே எழுதினார் என்றெல்லாம் அவரை என்னால் பாராட்ட முடியாது. ஆனால் தொடர்ந்து எழுதினார், விமர்சனங்களை எதிர்க்கொண்டார், வாசித்தார். சில சமயங்களில் பின்னிரவுக்கெல்லாம் புலனத்தில் செய்தி வரும். “கதையை அனுப்பியிருக்கேன் வாசிக்கவும்..”. 
கதைகளில் விமர்சனங்கள் வழி நான் கொடுக்கும் சில மாற்றங்களை அவரால் பகுத்துப்பார்த்து ஏற்றுக்கொள்ள முடிந்தது. தன்னை ஓர் ஆசிரியர் என்கிற இடத்தில் வைக்காமல், எழுத்தாளர் என்ற இடத்தில் வைத்து உரையாடுவார். அவரிடம் கேள்விகள் இருந்தன, குழப்பங்கள்  இருந்தன, தேடல்கள் இருந்தன. எல்லாவற்றும் மேலாக “நான் நல்லா எழுதறேனா?” என்கிற பொறுப்பும் இருக்கவே செய்தது.

எழுத்தில் நகைச்சுவைகளைக் கொண்டு வந்து வாசிப்பாவர்களை சிரிக்க வைப்பது அத்தனை எளிதல்ல. தொலைக்காட்சியில் நாம் பார்த்து சிரிக்கும் நகைச்சுவைக் காட்சிகளைப் போல புத்தகத்தில் வாசிப்பின் வழி நம்மை சிரிக்க வைப்பது இயலாது. முன்னதில் காட்சிகள் நகர்கின்றன, பின்னணி இசை, நடிகர்களின் பாவணை என பல அம்சங்கள் உள்ளன.
ப.பத்மநாதனின் குறுங்கதைகளில் நகைச்சுவைகளைப் பல இடங்களில் கையாண்டும் வெற்றியையும் நெருங்கியிருக்கிறார். சில தலைப்புகள் நமக்கு எதிர்ப்ப்பார்ப்பைக் கொடுக்கின்றன. அதோடு நாம் ஏமாந்துவிடாமல் நிற்கின்றன.

இது ப.பத்மநாதனின் ’42 குறுங்கதைகள்’ புத்தகம் குறித்த விமர்சனம் அல்ல; ஓர் எளிய அறிமுகம் மட்டுமே. 

ஏனெனில்;

இன்று (09/10/2022) ஶ்ரீ ஞானானந்த புரம், தெலுக் இந்தானின் அவரது நூல் வெளியீடு உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். அதோடு இயல் பதிப்பகம் வெளியிட்ட ஆசிரியர் ப.பத்மநாதனின் ‘42 குறுங்கதைகள்’, ஆசிரியர் உமாதேவியின் ‘அப்பாவின் கைக்கடிகாரம் – குறுங்கதைத் தொகுப்பு, சமூக & சமய ஆர்வளர் ஏ.கே. ரமேஷின் ‘தீக்ஷா’ சிறுகதைகள், ஆசிரியர் சுமத்ரா அபிமன்னனின் ‘அப்பாவின் அம்மா’ சிறுகதைகள், இளம் எழுத்தாளர் யோகாம்பிகையின் ‘கரு’ சிறுகதைகள் அடங்கிய ஐந்து புத்தகங்களையும் குறைந்த விலையில் வாங்கலாம்.

விரைவில் ஐவரின் புத்தகங்கள் குறித்த என பார்வையையும் பகிர்வேன்; அதற்கு முன் நீங்கள் இவர்களின் படைப்புகளை வாசித்திருந்தால் அது பற்றிய உரையாடலுக்கு அது வழிவகுக்கும்.

இவை நல்ல கதைகளா இல்லையா என்பதை நாம்தான் வாசித்து உரையாடி கண்டுகொள்ள வேண்டும்.

செப்டம்பர் 29, 2022

- நட்ட கல்லும் ஊற்றும் பாலும் –

 

“கல்லுக்கு ஊத்தற பாலை… பசிக்கு அழும் குழந்தைக்குக் கொடுக்கலாமே..?” ரொம்பவும் பழைய பழகிப்போன கேள்வியை இங்கு விடாது கேட்டுக்கொண்டே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். வழக்கமாகத் தைப்பூச தினத்தன்றும் அல்லது இதர விழாக்காலங்களில் மட்டுமே இந்தக் கேள்வி பெருமளவு படையெடுக்கும். மற்ற நாட்களில் அதன் வீரியம் குறைவாகவோ அல்லது பெரிதாக அலட்டிக்கொள்ளாதவாரோ இருக்கும்.

இந்த நாட்களில் மட்டும் ஏன் வறுமையில் சிக்கிய மனிதர்கள் மீது இன்னொரு மனிதனுக்கு அத்துணைப் பெரிய கருணை! மற்ற நாட்களில் அம்மனிதன் வயிறார சாப்பிட்டுக்கொண்டா இருக்கிறான்.

பசி கொண்டவனுக்குப் புசி கொள்ள ஏதும் கொடுக்க நினைப்பதே ஆதார நினைப்பு/தேவை என்றால், நாள் கிழமை பார்த்து பசிக்கு பால் கொடுக்க யாரும் சொல்ல மாட்டார்கள். இங்குச் சிக்கல் பசியும் பசிக்கின்ற மனிதனும் அல்ல. நம்பிக்கை;கொள்கை.

“கல்லுக்கு ஊத்தற பாலை…!” என்று தொடங்கும் அதே வார்த்தையின் சாயலில், “பத்து பேருக்கு மாலையும் பொன்னாடையும் வாங்கிப் போடற காசையும் ஒரு குடும்பத்துக்குச் சாப்பிட கொடுக்கலாமே?”, “இவ்வளவு செலவு செய்து மேடை நிகழ்ச்சி செய்றதுக்குப் பதிலா கஷ்டப்படுற பிள்ளைங்களுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கலாமே?” என யாரும் கேட்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படிக் கேட்கத்தான் வேண்டும் போல. ஏனெனில் இங்கு எல்லோருக்கும் இன்னொரு மனிதன் இடர்பாடுகளில் இருந்து வெளிவர வேண்டும் என்றுதானே எண்ணுகிறோம்.

ஆனால் அதனை ஏன் நேரடியாகச் செய்யாமல் இன்னொருவன் செய்வதில் இருந்து அதற்குப் பதிலாக இதனைச் செய்யவேண்டும் என அவனுக்கு அறிவுரைகளைச் சொல்லிகொண்டிருக்கிறோம். செய்கின்றவன் பேச மாட்டான் ஏனெனில் அவனுக்கு அதற்கான நேரம் இருக்காது; என என் பள்ளி ஆசிரியர் ஒரு முறை சொன்னதை நினைத்துப்பார்க்கிறேன்.

 

“நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’

(சிவ வாக்கியர் பாடல்-5)


கல்லில் என்ன இருக்கிறது எனக் கேட்ட சிவ வாக்கியரை விடவா ஒருவர் கேள்வி எழுப்பிட முடியும். ஆனால் இதனை எப்போதும் பேச்சிற்கிடையில் கொண்டுவர மாட்டார்கள். கொண்டு வந்தால்; ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?’ என்ற கேள்விக்குப் பதில் தரவேண்டிவரும். கல்லும் இல்லை கடவுளும் (நாதனும்) இல்லை என்ற கொள்கை உள்ளவர்களுக்குச் சிவ வாக்கியர் எப்படி உதவுவார்.

உண்மையில் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களாலேயே சிவ வாக்கியரின் கேள்வியை ஆழந்து யோசித்துப் பதில் காண முடியவில்லையே. இதனைப் புரிந்து கொண்டிருந்தால் கோவில்களில் நடக்கும் உள்ளரசியல் இல்லாமலேயே இருந்திருக்கும். வீட்டுக்கு ஒரு கோவில் அதற்கொரு தலைவர் என்கிற குழப்பங்கள் இருந்திருக்காது. மரங்களுக்கு மத்தியிலும், தகரக் கொட்டகைக்குள், அடுத்தவர் நிலத்தில் எனத் தோன்றும் கடவுள்கள் யாரும் உள்ளிருக்கும் நாதனாய் உருமாற முடியவில்லையே.

ஒரு முறை இயல் பதிப்பக நிகழ்ச்சியில் மீதமான உணவு பொட்டலங்களை யாருக்காவது கொடுக்கலாம் எனப் புக்கிட் பிந்தாங் வட்டாரத்திற்கு வண்டியை விட்டோம். வெளியில் இருந்து பார்க்க பணக்காரர்கள் அதிகம் உலாவும் இடமாகத் தெரியும். ஆனால் அன்று நான் பார்த்தது இன்று கூட நினைவில் இருக்கிறது. மலாய்க்காரர், சீனர், இந்தியர், வெளிநாட்டவர் என எந்தப் பாகுபாடும் இன்றியும் கடையோரங்களிலும் சாலையோரங்களிலும் அட்டைப்பெட்டியைப் போட்டு அதில் படுத்திருக்கிறார்கள். சிலருக்கு அதுகூட இல்லை. வெறும் சிமெண்டு தரையில் நாளிதழ்களை விரித்துப் படுத்திருக்கிறார்கள்.

நாங்கள் எங்கள் வண்டியை நிறுத்தி உணவு பொட்டலங்களை வெளியில் எடுக்கவும், பசியில் ஒவ்வொருவரும் ஓடி வந்ததைப் பார்க்கையில் மனம் உடைந்துவிட்டது. உணவு பொட்டலங்கள் முடிந்து வண்டியில் ஏறும் சமயத்தில் ஒரு பாட்டி தாமதமாக வந்து சாப்பிட ஏதும் இருக்கா எனக் கேட்டார். அந்தக் கண்கள் பசியில் பெரிய எதிர்ப்பார்ர்ப்புடன் இருந்தது. சட்டெனப் பாக்கெட்டில் இருந்த பத்துவெள்ளியை எடுத்து கொடுத்துவிட்டு அவர் முகத்தை மேற்கொண்டு பார்க்க இயலாமல் வண்டியில் ஏறிவிட்டேன். ஏதோ ஒரு மன உளைச்சல் கொஞ்ச நேரம் என்னை அமைதியாக வைத்திருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் நான் நண்பர்களுடன் இணைந்து பள்ளிகளுக்கான புத்தக விற்பனையைச் செய்தேன். அப்போதுதான் ஆரம்பித்தோம் என்பதால் எதிர்கால வருமானத்தைக் கணக்கில் கொண்டு எனக்கான சம்பளத்தைக் குறைவாகவே பெற்றுக்கொண்டேன். அப்போதும் கடன்களைக் கட்டுவதற்கும் குடும்பச் செலவுக்குமே அது கைகடிக்கும்படி இருக்கும். ஒரு ரொட்டி துண்டையும் ஒரு பாட்டிலில் தண்ணீரையும் பிடித்துக் கொண்டு வேலைக்குக் கிளம்புவேன். அந்த ரொட்டியை இரண்டு வேலையாகப் பிரித்துக் காலை உணவாகவும் நண்பகல் உணவாகவும் சாப்பிட்டுக்கொள்வேன்.

அப்போதுதான் நண்பர் மூலமாகச் சாய் பாபா செண்டர் குறித்துத் தெரிய வந்தது. தினமும் அங்கு உணவு இருக்கும். யார் வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம் என்றார். அதுவரையில் எனக்கு அது தோன்றவில்லை. அவ்வப்போது சாய் பாபா செண்டருக்கு சென்றாலும் அங்குள்ள உணவை கவனிக்கவில்லை. அப்போது அது எனக்கு தேவையாகவும் இல்லை.

பின்னர் தொடர்ந்து, என் வீட்டிற்கு அருகில் இருக்கும் சாய் பாபா செண்டரில் சாப்பிட ஆரம்பித்தேன். வேலை முடிந்ததும் நேராக அங்குச் சென்று பாபாவிற்கு ஒரு வணக்கத்தைக் போட்டுவிட்டு வயிறார சாப்பிட்டு கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்துவிட்டுதான் திரும்புவேன்.

யாரோ ஒருவர் கொடுக்கும் அரிசியிலும் காய்கறிகளிலும் அவருக்கு நேரடியாகத் தொடர்பில்லாத எனக்குத் தினமும் உணவு கிடைத்தது. இப்போது கூட நான் அங்குச் சென்று சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் என் கையிருப்புக்கு தகுந்த மாதிரி சில காய்கறிகளையோ அரிசி பைகளையோ வாங்கிகொண்டு சாய் பாபா செண்டரில் கொடுக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் இப்போது ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணையப் புத்தக அங்காடியை நடத்தி வருகிறேன். என்னிடம் புத்தகம் வாங்குகின்றவர்களின் மூலம் எனக்குக் கிடைக்கும் வருவாயில் ஒரு சிறு பகுதியில் அதனைச் செய்து வருகிறேன்.

யாரோ ஒருவரின் பிரார்த்தனையிலும் நம்பிக்கையிலும் என் வயிறு நிறைந்தது போல, என்னால் முடிந்ததை நான் செய்யும் போது அது இன்னொரு மனிதனின் வயிறை நிறைக்கிறது என்பது எனக்குள் சக மனிதன் மீதான அன்பை அதிகப்படுத்துவதாகப் பார்க்கிறேன்.

சிலர் தெருவோரங்களில் இருப்பவர்களுக்கு உணவுகளைத் தினமும் கொடுக்கிறார்கள். ஆதரவற்ற கால்நடைகளுக்கு மருத்துவம் முதல் உணவுகள் வரை பல தொண்டூழியர்கள் கொடுத்துக்கொண்டும் செய்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே ‘உள்ளிருக்கும் நாதனை’ உணவுகள் கொடுப்பதன் மூலமாகக் கண்டுகொள்கிறார்கள் தானே.

அது கடவுள் ! அது கல் ! என்கிற சண்டைகளுக்கு மத்தியில் அந்த மனிதன் பசியோடு இருக்கிறான், கல்வி இன்றி இருக்கிறான்… என்பதே முதலில் பதிலளிக்க வேண்டிய கேள்வி.

செப்டம்பர் 21, 2022

- இளையராஜாக்களும் அனிருத்களும் -

 



காலையிலேயே அழைத்திருந்தார். “என்ன ப்ரோ…” என்றுதான் தொடங்குவார். சமீபத்தில் ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக சந்தித்தோம்.  அங்கிருந்து திரும்ப வந்து, பிறகு மீண்டும் தமிழகப்பயணமும் சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார். ஆனால் அந்த சிறகுள்ள மனிதரை பார்ப்பதற்கு என்னால் முடியாமல் போனதைச் சொல்லி கொஞ்சம் திட்டவும் செய்தார் போதாக்குறைக்கு கொஞ்சமாக சலித்தும் கொண்டார்.

எனக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது. நம்முடன் பள்ளியில் படித்த நண்பனொருவர் கையாலும் பாணியை அப்படியே கையாண்டார். கண்களைப் மூடிக்கொண்டு கேட்டால் எனது பள்ளி நண்பானின் ஒருவனாகத் தெரிந்தார். இதன் பிறகும் சந்திப்பை தாமதப்படுத்தினால் வீட்டிற்கே வந்து கழுத்தைப் பிடித்து “ஏன் ப்ரோ என்னைய பார்க்க வரல..?” என கேட்டுவிடுவார் என பயந்துவிட்டேன். “இன்னும் மூணு மணிநேரத்தில் பார்க்கலாம் ப்ரோ…” எனறவாறு உடனடியாக வீட்டில் செய்ய வேண்டிய சில வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்தேன்.

திடீரேன்ற பொறுப்பை இல்லாள் யூகித்துவிட்டார். அவராகவே என்னிடம் “சரி எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவீங்க..?” என கேட்டதிலிருந்து அதனை தெரிந்துகொண்டேன். வாழ்க்கை இப்படித்தான். ரொம்ப கடினமான காரியங்கள் அரைநொடியில் நடந்து முடிந்துவிடும். ரொம்பவும் சாதாரணமான காரியங்களுக்கு மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டிருப்போம்.

நமது புத்தகக்கடையில் ப்ரோ ஆடர் செய்திருந்த புத்தகங்களுடன் அவரைப் பார்க்கச் சென்றேன்.

எனக்கு முன்னமே எங்களின் வழக்கமான உணவக கடைசி நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து உணவகம் முழுவதும் ஒரு சுற்று பார்க்க முடியும். அவரின் எதிரில் அமர்ந்தேன். என்னால் அவர் முகத்தையும் அவருக்கு பின்னால் இருக்கும் மரம் செடி கொடிகளைத்தான் பார்க்க முடிந்தது. எவ்வளவு ப்ளான் பார்த்தீங்களா!

நான் அவருக்கு புத்தகங்களைக் கொடுக்க, அவர் எனக்கு சிங்கப்பூர் மிட்டாய்களையும் ரவாங்கில் பிரபாலமான பால்கோவாவையும் கொடுத்தார்.

என்ன சாப்டறீங்க என்று ஆரம்பித்து மட்டன் குழம்பு கண்ணைக் கவர்ந்ததாகச் சொன்னார். உடனே ‘ரொட்டி சானாய்க்கும்’ மட்டன் குழம்புக்கும் ஆடர் கொடுத்தோம். அந்த ஒரு வட்ட மங்கின் மட்டன் குழம்பிற்கு பதிமூன்று வெள்ளி வருமென எங்கள் இருவருக்கும் அப்போது தெரியாது.

‘என்ன படிக்கறோம் என்ன எழுதறோம்’ என எங்கள் பேச்சு, பழக்க வழக்கத்திற்கு வந்தது. அப்போதுதான் வாசித்து முடித்த ஜெயமோகன் அவர்களின் ஏழாம் உலகம் நாவல் குறித்து பேசினேன். சமீபத்தில் உள்ளூர் சினிமாவிற்கு சில எழுத்து வேலைகளைச் செய்துவருவதையும் நண்பர்களின் கதைகளை வாசித்து செறிவாக்கம் செய்து வருவதையும் சொன்னேன்.

அவரும் சமீபத்தில் வெளிவந்த அவரது சிறுகதைகள் குறித்தும் இனி தான் எழுதவிருக்கும் சிறுகதைகள் குறித்தும் பேசினார். மலேசியாவில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் சிலர் மட்டுமே தனித்தன்மையை எழுத்தில் காட்டக்கூடியவர்கள். அந்த வகையில் இவரையும் சொல்லலாம். ரொம்பவும்  தாமதமாக எழுத வந்துவிட்டதாக சொல்லியவரிடம் சொன்னேன்; “இப்போது அதற்கு எந்த ஒரு குறையும் இல்லை.. வழக்கம் போல தொடர்ந்து எழுதுங்கள். சீக்கிரமே உங்கள் சிறுகதைகளை புத்தகமாக்குங்கள். தனித்தனியாக வாசிக்கும் சிறுகதைக்கும் ஒரு எழுத்தாளரின் சிறுகதைகளைத் தொகுப்பாக வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கு. உங்கள் புத்தகம்தான் உங்களை இன்னும் பரவலாக அடையாளப்படும்..” என்றேன்.

அப்படி சொல்லும் போதெல்லாம், தவறாது ஒரு பதிலை அவர் கொடுப்பார். “நல்ல கதைகளை எழுதி அறியப்படும் எழுத்தாளராக மாறிவிட்டு அப்பறமா புத்தகம் போடலாம்னு இருக்கேன்..” நான் சிரித்துக்கொண்டே அவரின் கதைகளை இப்போதைக்கு தேர்வு செய்து வைக்கச்சொன்னேன்.

பிறகு எங்கள் பேச்சு இளமை ததும்பும் பக்கம் போனது. அது எப்பவும் போகும். ஒவ்வொரு முறையும் “ஆமா உங்களுக்கு என்ன வயசு…? ” என  கேட்டுக்கொள்வார். நானும் வயதைச் சொல்லி நானும் பெரிய பையன் தான் ப்ரோ என்றதும் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வார். இம்முறை அவரின் இளமை காலத்தில் அவருக்கு கிடைத்த கிளுகிளுப்பான புத்தகங்களைச் சொல்லி சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றேன். மாறாக எங்களுக்கு வீடியோ பிறகு வீசீடி அதன் பிறகு கம்பியூட்டர் கடை என வரிசைப்படுத்தினேன். ஆனால் இன்றையப் பிள்ளைகளுக்கு அப்படியல்ல, கையிலேயே நவீன கைப்பேசி இருக்கிறது. நம்மைக் காட்டிலும் சீக்கிரமாக ‘எல்லாவற்றையும்’ அறிந்து கொள்ளும் வாய்ப்பு அபாயமும் ஒருங்கே அமைந்துவிட்டதைப் பேசினோம்.

கடந்த வாரம் இங்குள்ள ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உரை நிகழ்த்த சென்றிருந்தேன். ‘அகிலம் நீ’ என்னும் யுவதிகள் அமைப்பின் வழி அழைக்கப்பட்டிருந்தேன். ஆண் மாணவர்களுக்கு நானும் பெண் மாணவர்களுக்கு ‘அகிலம் நீ’ யுவதிகள் அமைப்பின் நிறுவனர் தோழர் பொன் கோகிலமும் பேசினார்.

அங்கு நான் சந்தித்த மாணவர்கள் குறித்தும் அவர்களின் நடவடிக்கை குறித்தும் பேசினேன். மாணவர்களுக்கு பணம் குறித்த விழிப்புணர்வையும் கொடுக்க வேண்டிய அவசியம் பற்றி எங்கள் உரையாடல் சென்றது. உண்மைதான், ஒழுக்கும் கல்வி என பலவற்றில் நாம் அக்கரை காட்டினாலும் மாணவர்களின் பார்வையில் பொருளாதார விழிப்புணர்வின் அவசியம் குறித்து நாம் பெரிதாக பேசுவதில்லை. அவர்கள் என்ன வேலையா செய்கிறார்கள் பணத்தைப் பற்றி பேசுவதற்கு என யாரும் கேட்கலாம். ஆனால் எந்த ஒருவனின் கையில் பணம் இருக்கிறதோ அதன் மூலம் பொருளோ (மிட்டாயோ) வாங்கலாம் என நம்புகின்றானோ அவனுக்கு பொருளாதார விழிப்புணர்வு அவசியம். இன்னும் சொல்லப்போனால் பணத்தின் அருமை தெரிவது கட்டாயம்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு வயதானவர் தூரமான நாற்காலியில் அமர்ந்தார். நம்ம ப்ரோ கொஞ்சம் நேரம் அவரைப் பார்த்துவிட்டு, “கொஞ்ச நேரம்..” என சொல்லிவிட்டு அந்த வயதானவரைப் பார்க்க சென்றார். ஒருவேலை இவருக்கு படித்துக் கொடுத்த ஆசிரியராக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். திரும்பி வந்ததும் ப்ரோ சொன்னார் அவரது பள்ளி நண்பராம். ப்ரோவின் இளமையின் ரகசியத்தை என்றாவது கண்டுபிடிக்க வேண்டும்.

இப்போது கூட இளையராஜாவைப் பற்றிய முகநூல் பதிவில் ப்ரோ கமெண்ட் போட நானும் அவரது கமெண்டுக்கு கீழ இவரை அனிருத் ரசிகர் என்று நினைத்ததாகக் கூறினேன். அந்த இளமையும் துடிப்பும் அதற்கான காரணம் என்று நினைத்தேன். ஆனால் நம்ம ப்ரோ இளையராஜாவின் ‘அந்திமழை பொழிகிறது.. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது..’ என்ற பாடலை விடவா இளமை துள்ள முடியும் என்றார். அவரின் இளமையின் ரகசியம் ஓரளவு பிடிபட்டது.

தொடர்ந்து சில இணைய இதழ்களுக்கு சிறுகதைகளை அனுப்புவதை சொல்லி அதன் மூலம் அவரின் மன ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார். உண்மையில் இது பலரின் மன ஆதங்களில் ஒன்றுதான்.

இணைய இதழுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு அவர்கள் தரும் பதிலுக்கு காத்திருப்பது குறித்த மாற்று கருத்து இல்லை. ஆனால் நாம் அனுப்பிய படைப்புகள் எற்றுக்கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்று கூடவா சொல்வதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். சில இணைய இதழ்கள் தங்களுக்கு படைப்புகள் கிடைத்துவிட்டன என்பதைக் கூட எழுத்தாளர்களுக்கு சொல்லுவதில்லை. இங்கு காத்திருப்பது சிக்கல் இல்லை, ஆனால் இதில் மறைந்திருக்கும் அலட்சியம்தான் சில சமயங்களில் நமக்கு மன வருத்தத்தைக் கொடுக்கிறது.

எங்கள் உரையாடலுக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். அடுத்து இன்னும் நிறைய பேசுவோம் என்ற நம்பிக்கையுடன் விடைபெற்றோம். என்னைவிடவும் வேகமாய் நடந்து அவரது வாகனத்தை நெருங்கிகொண்டிருந்தார். சொல்ல மறந்துவிட்டேன் நம்ம ப்ரோவின் பெயர் ஶ்ரீ ராமுலு, ஶ்ரீகாந்தன் என்ற பெயரின் எழுதிக்கொண்டிருக்கிறார்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                


செப்டம்பர் 17, 2022

'மகரந்தம்' ஏற்றமா ஏமாற்றமா?

சமீபத்தில் உள்ளூர் தனியார் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோ விண்மீனில் ‘மகரந்தம்’ என்னும் தொடர் நாடகம் ஒளியேறியது. உங்களில் சிலர் அதனைப் பார்த்திருப்பீர்கள். உங்களில் சிலர் உள்ளூர் நாடகம்தானே எதுக்கு பார்த்துகிட்டு என நினைத்திருப்பீர்கள். என்னதான் தரமான படைப்புகளை நம் கலைஞர்கள் கொடுத்தாலும் வெளிநாட்டு குப்பைகளுக்கு கொடுக்கும் கவனத்தில் பாதியைக் கூட பலரால் உள்ளூர் படைப்புகளுக்குக் கொடுக்க முடிவதில்லை. கொடுக்கவும் அவர்கள் விரும்புவதில்லை. 

இங்கு கலைஞர்களே சக கலைஞர்களின் படைப்புகளைக் குறித்து பேசுகிறார்களா இல்லையா என ஆராய்வதிலிருந்து சிலவற்றைக் கண்டுகொள்ளலாம்  அதையொட்டியப் பார்வைதான் இது. இவர்களுக்குள் என்ன போட்டியா இருக்கிறது? போட்டி யாருக்கிடையில் ஏற்படுகிறது என யோசியுங்கள். இரண்டு பலசாலிகளிடம்தானே. ஆக போட்டி போடுவதற்கு பலசாலிகள் வேண்டும் அவர்களிடம் பலமும் வேண்டும். அங்கு நடப்பதுதான் போட்டி. “ஒன்னு நீ.. இல்ல நானு” என சொல்லு இடம் அது. 

ஆனால் நம் நாட்டு கலையுலக சூழலில் இது சாத்தியமா? சாத்தியமா என கேட்பதைவிட அவசியமா என கேட்கும்படிதான் நிலைமை இருக்கிறது. இன்றும் கூட நம் நாட்டு திரைப்படங்களுக்கு தினம் தினம் கூவிக்கூவி டிக்கட் விற்றுக்கொண்டிருக்கிறோம். டிக்கட்டுகளுக்கு ஸ்பான்சர் வாங்கிக்கொண்டிருக்கிறோம். 

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுத்து மக்களிடம் நம்பிக்கையை வாங்கி அதனை காப்பாற்றுவதற்குள் அந்த நம்பிக்கையை இன்னொரு திரைப்படம் மூலம் உடைத்து விடுகிறார்கள். “என்னமா படம் எடுத்திருக்காங்க..!” என பிரமிக்கும் அதே நேரத்தில் “என்னா படம் எடுத்திருக்காங்க..?” என கோவக்கேள்வியையும் கேட்கிறோம்  இரண்டுக்குமான கால இடைவெளிதான் மக்களிடம் உள்ளூர் கலைபடைப்புகள் மீதான ஐயத்திற்கு காரணம்.

சரி இனி தொடர்ந்து உள்ளூர் தொடர் நாடகமான மகரந்தம் என்னும் தொடர் குறித்து என் பார்வையைப் பகிர்கிறேன். இந்நாடகம் என்னை ஈர்ப்பதற்கான காரணங்களில் முதற்காரணம் அதன் தலைப்புதான். இரண்டாவது காரணம் இந்நாடகத்தின் அடிநாதத்தை தலைப்பிலேயே சொல்லிவிட்டார்கள். மகரந்தம் என்பதை தாவரங்களின் இனப்பெருக்கத்தை மகரந்த சேர்க்கை என சொல்கிறோம். அதன் செயல்முறையைப் பேசினால் கூட அவ்வளவு அழகாக இருக்கும். அதனை சுருக்கமாக இப்படி புரிந்து கொள்ளலாம் இரு தரப்பின் சேர்க்கை. இந்நாடகத்திற்கு அது ரொம்பவும் பொருந்தி வந்துள்ளது.

மகரந்தம் தொடர் நாடகத்தின் கதையைச் சுருங்க பார்க்கலாம். மனமுறிவு பெற்ற ஆணும் பெண்ணும் அவர்களின் பெற்றோர்/உறவுகள் மூலம் மறுமணத்தில் இணைகிறார்கள். எற்கனவே மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறுமணத்தில் இணைய முடியவில்லை. அவர்கள் அந்தச் சிக்கலை எப்படி எதிர்க்கொள்கிறார்கள். மறுமணத்தில் மனம் மீண்டும் காதல்வயப்படும் போது முன்னாள் காதலியும் (காதலனும்) வாழ்க்கைக்குள் வருகிறார்கள். மீண்டும் பழைய வாழ்க்கையைப் போலவே சிக்கல்களை இவ்வாழ்விலும் எதிர்க்கொள்கிறார்கள். ஆரம்பத்தில் செய்த அதே முடிவை (விவாகரத்தை) மீண்டும் எடுக்க நினைக்கிறார்கள். பிறகு உண்மை தெரிகிறது. தவறுகளைத் திருத்திக்கொள்கிறார்கள். புதிய காதல் அவர்கள் வாழ்க்கையை வசந்தமாக்குகிறது. அந்த சமயத்தில்தான் மனைவியின் முன்னாள் காதலன் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கிறான். 

ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கான கதாப்பாத்திரத் தேவையை இயல்பாகவே பூர்த்தி செய்திருக்கிறார்கள். நாயகனும் நாயகியும் தவிர மற்ற கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவையும் குடும்ப சிக்கலும் அவசர முடிவும் நல்ல நட்பும் என எல்லாவிதப் பார்வையாளர்களையும் திருப்திபடுத்த முயன்று அதனை சாதித்தும் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

மனமுறிவு பெற்றவர்கள் மீதும், மறுமணம் செய்பவர்கள் மீதும் சமூகம் ஒரு தவறானப் பார்வையையே வைத்திருக்கிறது. எடுத்தவுடன் அவர்கள் மீது விமர்சனத்தை வைப்போமே தவிர அவர்களின் பின்னணி குறித்து அறிந்து கொள்ள விரும்ப மாட்டோம். அதே சமயம் யாரோ ஒருவர் குற்றவாளியாகத்தான் இருக்க முடியும் என முன்முடிவு எடுத்துக்கொள்கிறோம். அடுத்தவர் வாழ்க்கையில் நமக்கான எல்லை எதுவென நமக்கு எந்த ஒரு அறிதலும் இருப்பதில்லை. மாறாக நாம் எவ்வளவு நல்லவர்கள் என காட்டுவதற்கு யாரோ ஒருவர் மோசமானவர் என காட்டி காட்டி பழகிவிட்டோம்.

மகரந்தம் தொடர் நாடகம் அதன் பார்வையாளர்களுக்கு சொல்ல வந்த விடயங்கள் ரொம்ப முக்கியமானது. வாழ்க்கை அதன் போக்கில் நமக்கு ஒரு செய்தி சொல்வதாக நான் நம்புகிறேன். அது இன்று நமக்கு புரியாவிட்டாலும் நாளை நமக்கு ஒரு சிறு புரிதலைக் கொடுக்கும்.  


தன்னால் எந்தப் பெண்ணையும் உடலளவில் திருப்தி படுத்த முடியாது என தெரிந்தும் ஒரு பெண்ணை திருமணம் செய்து தனது குறையை மறைக்க மனைவி மீது சந்தேகம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தும் நாயகியின் முன்னாள் கணவன்.  உண்மையில் இது கவனிக்க வேண்டிய ஒன்றாகவே பார்க்கிறேன். திருமணத்திற்கு கண்ணுக்குத் தெரியாத கிரகங்களின் நிலவரங்களை பார்க்கத்தெரிந்த நமக்கு கண்ணுக்கு தெரிந்த உடற்கூறுகள் பற்றிய மருத்துவ பரிசோதனை மீது அக்கறை இருப்பதில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒரு சமயத்தில் திருமணத்திற்கு முன் ஆண் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்ட பெண் பற்றிய குறும்படம் வெளிவந்திருந்தது. ஏய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு குறும்படம் அது. மகரந்தம் என்னும் நாடகத்தில் இயல்பாகவே ஒரு சிக்கலுக்கான விழிப்புணர்வைக் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு இத்தொடரின் கதையும் கை கொடுத்திருக்கிறது.

மனமுறிவுக்கு பின்னர் வாழ்க்கை இருப்பதைக் காட்டும் கதையம்சம் கொண்ட மகரந்தம் என்னும் தொடர் நாடகம், மனமுறிவுக்கு அவசரப்படவேண்டாம் எனவும் சொல்கிறது. அதுதான் இந்நாடகத்தைக் குறித்து என்னை எழுதவும் வைத்திருக்கிறது. அதோடு இன்னொன்றும் இருக்கவே செய்கிறது. மனமுறிவு பெற்ற பின் மறுமணம் செய்துக்கொள்பவர்களின் வாழ்க்கையில் முன்னாள் மனைவியோ முன்னாள் கணவனோ மீண்டும் வருவதற்கான சாத்தியங்களின் பின் விளைவுகளையும் இக்கதையின் மேலடுக்கில் காட்டியுள்ளது.


நல்ல கதை. கதையைச் சிதைக்காத திரைக்கதை. திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வசனங்கள். வசனங்களுக்கு உயிர்கொடுக்கும் நடிகர்கள். நடிகர்களை அழகாகவும் எதார்த்தமாகவும் காட்டிய இயக்குனர், என ஒன்றின் பின் ஒன்றாக தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றி பார்வையாளர்களின் மனதில் குறிப்பிட்ட இடத்தை அடைந்துவிட்டது மகரந்தம்.

மகரந்தம் தொடர் நாடகத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குனர்க்கும் கதை/திரைக்கதை/வசனம் எழுதியவர்க்கும் நடிகர்களுக்கும் வாழ்த்துகள்.

செப்டம்பர் 16, 2022

மாணவர்களுடன் ஒரு நாள் சந்திப்பு

- மாணவர்களுடன் ஒரு நாள் சந்திப்பு -


சமீபத்தில் செர்டாங் ஆரம்பநிலை தமிழ்ப்பள்ளிக்கு தோழர் பொன் கோகிலத்துடன் சென்றிருந்தேன். அவ்வப்போது இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு இப்படி செல்வது வழக்கம். ஆரம்பநிலை பள்ளி மாணவர்களிடம் பதின்ம வயதை எதிர்க்கொள்வதும் குறித்தும் ‘நல்ல தொடுதல் கெட்ட தொடுதல்’ குறித்தும்  உரையாடுவோம். 


மாணவிகளுக்கு தோழர் பொன் கோகிலமும் மாணவர்களுக்கு நானும் தனித்தனி குழுவாக பிரித்து மாணவர்களுடன் உரையாடுவோம்.
என்னைக் குறித்த அறிமுகத்தை பொறுப்பாசிரியர் சொன்னதும் நான் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்களின் குறும்புகள் ரசிக்கும்படி இருந்தன. 

பத்தாண்டுகளுக்கு முந்தைய மாணவர்கள் வாழ்ந்த சூழலையும் இன்று மாணவர்கள் வாழும் சூழல் அதன் வழி அவர்கள் எதிர்நோக்கும் மறைமுக சிக்கல்களைக் குறித்து பேசினேன். 


மாணவர்கள் நமது பேச்சைக் கேட்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் கவனத்தை நம் பக்கம் இழுக்க வேண்டும், அதோடு நமது பேச்சின் மீதான அவர்களின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அவற்றுடன் மணவர்களுக்கு சில பரிசு பொருட்களையும் எடுத்து வைத்திருந்தேன். என் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுத்து மற்ற மாணவர்களையும் உற்சாகப்படுத்தினேன்.


உடல் சுத்தம். சுற்றுப்புற தூய்மை. பெற்றோரை மதித்தல். கல்வியில் கவனம் செலுத்துதல். நல்ல நட்பு. பெண் தோழிகளில் நட்பும் அவர்களுக்கான மரியாதையும். லட்சியத்தை அடைவதற்கான அடிப்படைகள். சமூக ஊடகங்களின் மோகம் எப்படி நம்மை தொந்தரவு செய்கிறது போன்றவற்றைக் குறித்து பேசினேன்.

என்னதான் தினமும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சொல்லிக்கொண்டிருக்கும் விடயங்கள்தான் என்றாலும் புதிதாக ஒருவர் நன்கு அறிமுகமான ஒருவர் மாணவர்களுடன் பேசும்போது மாணவர்களுக்கு அது கொஞ்சம் நெருக்கமாக அமைகிறது.
மாணவர்களுடன் கலந்து பேசும் வாய்ப்பை எங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த செர்டாங் ஆரம்பப்பள்ளிக்கும் தலைமையாசிரியர்க்கும் பொறுப்பாசிரியர்களுக்கு அன்பும் நன்றியும்.

செப்டம்பர் 06, 2022

காற்றிலே மிதக்கலாம்


உயரம் என்றால் உள்ளூர பயம். அது உள்ளே ஊறும் சமயம் உடம்பு வியர்த்து கொட்டும். ஏணியின் ஏறி நிற்பதற்கு முன்னமே உடல் உரோமங்கள் எல்லாம் நின்றுவிடும். இது போதாதென்று ஒரு முறை தலையில் அடிபட்டதால் உயரம் ஏறுதல் எனக்கு கூடுதல் பயத்தையும் மயக்கத்தையும் கொடுக்க ஆரம்பித்து விட்டது. 

ஆனால், எனக்கு உயரம் ஏறுவது சிறுவயதில் இருந்து மிகவும் பிடித்த ஒன்று. ஆரம்பத்தில் நண்பர்களுடன் எங்கள் தோட்டபுற வீடுகளுக்கு அருகில் இருக்கும் காடு மலைகளில் ஓடிப்பிடித்து விளையாடுவோம். மலைகளில் ஆளுக்கு ஒரு பக்கமாக பாறைகளை பிடித்து ஏறி நிற்போம். மரத்தின் உச்சியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்போம்.


 நாளாக நாளாக இன்னும் சொல்லப்போனால் நாளை என்ன நடக்கும் என்ற எண்ணம் தோன்றியதும் பல பயங்கள் வந்து சேர்ந்து கொண்டன. மலையில் சறுக்கி விழுந்தால் என்ன ஆகும்? மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்தால் என்ன ஆகும்? வீட்டில் தெரிந்தால் இன்னொரு காலையும் ஒடித்துவிடுவார்களே எப்படி நொண்டிக்காலுடன் பள்ளிக்கூடம் போவது? போன்ற அடிப்படையற்ற குழப்பங்களுக்கு பதில் கிடைக்காது பயம்தான் எங்களுக்கு கிடைத்தது.

ஆனால், எது நமக்கு பயம் காட்டுகிறதோ அதுதான் நம்மை வளரவும் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், நம்மை பயங்காட்டுவதை நாம் பயம் காட்ட வேண்டும். எதுவெல்லாம் என்னை பயமூட்டுகிறதோ அதனை ஒவ்வொன்றாக நேருக்கு நேர் சந்தித்து வருகிறேன். ஆனால் சொல்வது போல எளிமையாக அதனை சாத்தியப்படுத்த முடியாது. 

உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் வீடியோக்களாக இருக்கட்டும், கயிறை பிடித்துக்கொண்டு மலைகளில் இருந்து விழுவதாக இருக்கட்டும், வான்குடையுடன் குதித்து பறப்பதாக இருக்கட்டும் எனக்கு சட்டென ஒரு புல்லரிப்பை ஏற்படுத்திவிடும். ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் நானும் இப்படி காற்றில் பறந்து காட்டுகிறேன் என்று இல்லாளிடம் பேசினேன். எப்போதோ பேசியதை சமயம் பார்த்து நிறைவேற்றும் வாய்ப்பை இல்லாள் ஏற்பாடு செய்திருந்தார். ‘WINDLAB INDOOR SKYDIVING’  மூலமாக காற்றில் பறப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தாள். 


இல்லாளின் தோழிக்கு அவரது வேலையிடத்தில் கிடைத்த வாய்ப்பை அவரது நண்பர்களுக்கு அவர் பயன்படுத்த; இல்லாள் அதனை எனக்காக பயன்படுத்தினாள்.

குறிப்பிட்ட இடத்திற்கு சீக்கிரமே சென்றுவிட்டோம். உடலில் உற்சாகம் இருந்தாலும், அங்கு எங்களுக்கு முன்னே காற்றில் மிதப்பவர்களைப் பார்க்க வயிற்றில் ஏதோ சுழன்றது. அடுத்த நாள் பார்க்கலாம் என மனதில் நினைத்து என்ன சொல்லி சமாளிக்கலாம் என நினைத்தேன். அப்போதுதான் தோழியின் உறவினர்கள் பிள்ளைகளுடன் வந்தார்கள். எல்லோரும் ஜாலியாக பறக்கலாம் என்றுதான் வந்தார்கள். 

ஆனால் அங்கு வந்ததும் ஆளுக்கு ஆள் பயம் தொற்றிக்கொண்டது. அவர்களுடன் சுவர் காற்றாடியின் காற்றுக்கே பறக்கக்கூடிய பையன் ஒருவனும் வந்திருந்தான். ஒருமுறை குழு புகைப்படம் எடுக்கும் போது அந்தப்பையன் சரியாக நிற்காததால், இடது கையினாலேயே அந்தப்பையனைத் தூக்கி எனது வலது பக்கத்தில் நிற்க வைத்துவிட்டேன். இன்று அவனும் இருந்ததால் என் மானத்தைக் காப்பாற்றும் கட்டாயம் வேறு வந்துவிட்டது. மனதில் தைரியத்தை வரவைத்துக்கொண்டேன்.


குழுவாக பேசி உற்சாகத்தை ஏற்படுத்திக்கோண்டோம். எங்களுக்கான நேரம் வந்தது. பறப்பதற்கு ஏற்ற ஆடைகளை அவர்களே கொடுத்தார்கள். தலைக்கவசம், காதுக்குள் வைக்க வேண்டிய தக்கை, கண்ணாடி போன்றவற்றை உடலில் பொருத்திக்கொண்டோம்.


 பதினைந்து நிமிடத்திற்கு எங்களுக்கு வகுப்பும் நடந்தது. முக்கியமாக காற்றில் மிதக்கும் போது கால்கள் மூலம் எப்படி மேலே போவது கீழே வருவது, கைகளைப் பயன்படுத்தி எப்படி வலது இடது பக்கங்களுக்கு திரும்புவது என தெரியப்படுத்தினார்கள். உள்ளே பேச முடியாது என்பதால், முக்கியமான கை கால் அசைவுகளை எப்படி செய்ய வேண்டும் என்கிற குறியீட்டு மொழிகளைக் கற்றுக்கொடுத்தார்கள். என்ன ஒன்று, சொல்லிக் கொடுத்து பறக்க தயாரான உற்சாகத்தில் குறியீடுகள் மறந்துவிட்டன. நல்லவேளையே உள்ளே அதனை ஓவியமாக ஒட்டி வைத்திருந்தார்கள்.


எங்கள் முறை வந்தது. பெயர்களை வரிசையாக அழைக்கத்தொடங்கினர். ஒவ்வொருவராக சென்றோம்.

பெரிய குழாய் வடிவிலான அறை. கீழே ராட்ச்சச காற்றாடி, உள்ளே ஓர் உதவியாளர். குழாயின் கதவு திறந்ததும் கைகளைத் தூக்கிகொண்டு அப்படியே சாய வேண்டும். நாம் சாய்வதை காற்றோடு இணைந்து உதவியாளரும் நம்மை தாங்கி பறக்கவிடுவார். நம்மால் நம் கை கால்களை கட்டுப்பாட்டில் வைத்து காற்றில் பறக்க முடியும் என அவர் நம்பினால் அவர் விலகுவார். இல்லையெனின் ஒரு கை எப்போதும் நம் மேல் இருக்கும். 

முதல் சுற்றில் என்னால் எதனையும் சரிவர செய்ய முடியவில்லை. ஆனால் கற்றுக்கொள்ள முடிந்தது. புதிய அனுபவம். ஆனால் இரண்டாம் முறை கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தினேன். உடல் எடை அற்ற மனிதனாய் காற்றில் அப்படியே சுற்றுச்சுற்றி பறந்தேன். வித்தியாசமான அனுபவமாகவும் அது அமைந்தது. ஒரு தியானம் போல சுற்றி நடப்பது, சுற்றி இருப்பவர் என எதுவும் கண்களுக்கு தெரியவில்லை. பறவை போல முழு சுதந்திரமாக பறந்து கொண்டிருந்தேன். 
அதிக செலவில்லை, ஆனால் அளவிட முடியாத அனுபவமாய் அது அமைந்தது. வாய்ப்புள்ளவர்களும் ஒரு நாள் பறவை போல காற்றில் மிதந்து பாருங்களேன். விவரிக்க முடியாத அனுபவமாக அது அமையும்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்