பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2014

வாயில் விழைச்சு - பெருமாள் முருகன்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதை, சிலரால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டபோது படித்த கட்டுரை. இக்கதை குறித்த கேள்விகளுக்கும் இது போன்ற புனைவுகளுக்கும் ஏற்றதாய் அமையும் என்று இக்கட்டுரையை இங்கே மீண்டும் பதிகிறேன்.)


ஒவ்வோர் ஆண்டும் பெரும் நிறுவனங்களில் ஜனவரி தொடங்கி மார்ச் வரை நிதிக் கணக்குகள் முடிக்கப்படும் காலம் என்பதால் முசுவாக இருப்பார்கள். அதுபோலக் கல்வி நிறுவனங்களில் இது கருத்தரங்கக் காலம். முன்பு பல்கலைக்கழகங்களில்தான் கருத்தரங்குகள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடைபெறும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பல பயிலரங்குகளுக்கும் கருத்தரங்குகளுக்கும் நிதி உதவி செய்வதால் கல்லூரிகளிலும் இன்று ஆய்வுகள் பெருகிவிட்டன. ஆகவே எங்கு நோக்கினும் கருத்தரங்க ஆரவாரங்கள். 
 
இப்போதெல்லாம் கல்வி நிறுவனங்களில் நவீன இலக்கியம் பற்றிய பேச்சுகள் நடப்பது அரிது. எப்போதுமே அப்படித்தான் என்பது நம் வரலாறு என்றாலும் இப்போது சுத்தமாக இல்லை. தொல்காப்பியம் தொடங்கி ஆறாம் நூற்றாண்டு வரையான பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கே அந்நிறுவனம் நிதி உதவி செய்கிறது. ஆகவே எல்லா ஆய்வாளர்களும் பழந்தமிழ் இலக்கிய விற்பன்னர்களாகி வருகின்றனர். நானும்கூட. சமீபத்தில் நான் கவனம் எடுத்துக்கொண்டு வாசித்த நூல் ‘ஆசாரக்கோவை.’ இந்நூல் பற்றிக் கவனம் உருவாக இரண்டு நண்பர்கள் காரணம். திருச்சி, ஈவெரா அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராரசிரியராகப் பணியாற்றும் முனைவர் க.காசிமாரியப்பன் ஒருவர்.
 
சென்னை, நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் இரா.இராமன் மற்றொருவர். இருவரும் ஆசாரக்கோவை பற்றி வெவ்வேறு கோணங்களில் கட்டுரை எழுதியுள்ளனர். அவர்களது கோணம் பற்றி இப்போது விவாதிக்கப் போவதில்லை. ஆசாரக்கோவையில் நமக்குத் தேவையான செய்திகள் சில உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை. பன்னிரண்டு நீதிநூல்களுள் ஒன்றாக ஆசாரக்கோவையையும் சேர்க்கிறார்கள். ஆனால் நீதி சொல்லும் நூலல்ல இது. ஆசாரம் என்னும் சொல்லுக்குப் பல பொருள்களை அகராதிகள் தருகின்றன. தமிழ் லெக்சிகன் தரும் பொருள்களுள் சில: சாஸ்திர முறைப்படி ஒழுகுகை, நன்னடை, வழக்கம், தூய்மை ஆகியன. இன்றைய வழக்கிலும் ஆசாரம் பயன்படுகிறது. ‘அவுங்க ரொம்ப ஆசாரமானவிங்க’ என்றும் ‘அது ஆசாரமான குடும்பம்’ என்றும் சொல்லும் வழக்கம் இருக்கிறது. பழமைப் பிடிப்பு அல்லது பழைய முறைகளைக் கடைபிடிப்பவர்கள் என்னும் அர்த்தம் இங்கு வருகிறது. நம் அன்றாட நடவடிக்கைகளை சாஸ்திர முறைப்படி அமைத்துக்கொள்வதற்குப் பெயரே ஆசாரம். சாஸ்திரம் என்றால் எது? சமஸ்கிருதத்தில் பலவகைச் சாஸ்திரங்கள் இருக்கின்றன என்று அறிகிறோம். தமிழிலும் ‘சைவ சித்தாந்த சாத்திரங்கள்’ உள்ளன.
 
சாஸ்திரம் என்பது குறிப்பிட்ட விஷயம் பற்றிய விதிமுறைகளைத் தரும் நூல். தினசரி வாழ்வில் உடலைத் தூய்மையாக வைத்திருப்பது தொடங்கி பல்வேறு ஒழுங்கு முறைகளின் தொகுப்புக்கு ஆசாரம் என்று பெயர். ‘ஆசாரக்கோவை என்னும் தொடர்க்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம்’ என்று மர்ரே ராஜம் பதிப்பின் முன்னுரை கூறுகின்றது. அது ஆசாரக்கோவையின் பொருள் பற்றிக் கூறுவதாவது: பொதுவகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டும் கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார். அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகளும் பலவாம். வைகறைத் துயில் எழுதல் முதல் காலைக்கடன் கழித்தல், நீராடல், உடுத்தல், உண்ணல், உறங்குதல் முதலிய பல நிகழ்ச்சிகளிலும் ஒழுகும் நெறிகள் வற்புறுத்தப்படுகின்றன. மேற்கொள்ளத் தக்கன இவை, விலக்கத்தக்கன இவை எனச் சில ஆசாரங்களை விதித்தும் சிலவற்றை விலக்கியும் செல்லும் முறை கவனிக்கத்தக்கது. (ப.273) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலேயே காலத்தால் பிற்பட்டது ஆசாரக்கோவை. சமஸ்கிருத சாஸ்திரங்கள் சிலவற்றின் கருத்துத் தாக்கங்கள் இதில் இருக்கின்றன என்றும் இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்றும் கூறுவோர் உள்ளனர். சுக்ரஸ்மிருதிக் கருத்துக்களின் தொகுப்பே ஆசாரக்கோவை என்பது செல்வகேசவராய முதலியாரின் கருத்து. ‘இந்நூல் வடமொழி நூலின் வழித் தோன்றியது என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை’ என்பார் வையாபுரிப்பிள்ளை.
 
இவற்றைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் இன்னும் நடைபெறவில்லை என்றே சொல்லலாம். நீராடல், பல் துலக்குதல் உள்ளிட்டவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்றெல்லாம் இந்நூல் கூறுகின்றது. எந்தெந்தச் சமயங்களில் நீராட வேண்டும்? தெய்வ வழிபாடு, தீக்கனா காணல், தூய்மை குன்றல், வாந்தி எடுத்தல், மயிர் களைதல், உண்ணல், அதிக நேரம் தூங்கல், உடல் உறவு, கீழ்மக்களைத் தீண்டல், மலசலம் கழித்தல் ஆகிய பத்துச் சந்தர்ப்பங்களிலும் அவசியம் நீராட வேண்டும். அம்மணமாக நீராடக் கூடாது. ஓராடை உடுத்தே நீராட வேண்டும். ஈராடை அணிந்தே உண்ண வேண்டும். உடுத்த ஆடையை நீருள் பிழியக் கூடாது. ஓராடையோடு அவைக்குச் செல்லக்கூடாது என்றெல்லாம் ஆடை உடுப்பது பற்றிச் சொல்கிறது. இப்படிப் பல ஆசாரங்கள். அவற்றைக் கடைபிடித்தவர் ஒருகாலத்தில் இருந்திருக்கக்கூடும். இன்றும் அப்படியான ஆசார சீலர்கள் இருக்கலாம். சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இத்தகைய ஒழுங்கு முறைகள் பொருந்தலாம். அல்லது நாள் முழுக்க இவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பின்பற்றுவது எளிதாகலாம்.
 
அடிப்படைத் தேவைகளுக்கே அல்லாடுபவர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட இயலாது. கீழ்மக்கள், புலையர் ஆகியோரைத் தீண்டக் கூடாது என்பது பற்றிச் சொல்வதோடு பார்ப்பாரின் உயர்வுகளைத் தொடர்ந்து பேசுவதையும் காணலாம். சுவாரசியமான பல பதிவுகளும் அக்காலச் சமூகப் படிநிலைகள் பற்றிய பதிவுகளும் காணப்படும் நூல் இது. எத்தகைய இடத்தில் வசிக்கலாம்? இதற்குப் பதிலை எதிர்மறையாக இந்நூல் சொல்கிறது. ‘வண்ண மகளிர் இடத்தொடு தம்மிடம் இடங்கொள்ளார் ஒள்ளியம் என்பார்’ என்பது பாடல். அறிவுடையவர்கள் ‘தன் மேனி மினுக்குதல்’ செய்து அலங்கரித்துக்கொள்ளும் ‘வண்ண மகளிராகிய’ விலைமகளிர் வசிக்கும் பகுதியில் தம் வாழிடத்தை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார் என்பது பொருள். ஏற்படுத்திக் கொண்டால் ஆணுக்குச் சபலம் தோன்றிவிடுமா? அப்படித் தோன்றுவதைப் பற்றித் தவறில்லை. விலைமகளிரோடு கூடியிருத்தலை ஆணுக்கு முழுமையாக அனுமதித்த சமூகம் நமது. ஆகவே பெண்ணுக்குச் சபலம் ஏற்பட்டுவிட்டால் என்னாவது? ‘பெண்டிர்க்கு உவப்பன வேறாய் விடும்’ என்கிறது கோவை. விலைமகளிரைப் பார்த்து அலங்காரத்திலும் மேனி மினுக்குதலிலும் குடும்பப் பெண்களுக்கும் ஆசை தோன்றிவிடும். அவற்றிற்காகக் குடும்பப் பெண்ணும் சோரம் போக விருப்பம் கொள்வாள் என்பது அதன் உட்கருத்து. ‘புகத் தகா இடங்கள்’ என்று சொல்லும் பாடலொன்றில் ‘சூதர் கழகம்’ குறிப்பிடப்படுகின்றது.
 
சூதாடுவதற்கு என்று தனியிடம் இருந்திருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இப்படிப் பல. அவை ஒருபக்கம் இருக்கட்டும். எப்பேர்ப்பட்ட நூலும் தம் காலத்தின் மீறல்கள் சிலவற்றையேனும் ஆவணமாக்கியிருக்கும். ஆசாரக்கோவையிலும் அத்தகைய பதிவுகள் உள்ளன. ‘எச்சிலுடன் தீண்டலாகாதவை’, ‘எச்சிலுடன் காணலாகாதவை’, ‘எச்சிலுடன் செய்யத்தகாதவை’ எனச் சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றது. எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர் உச்சந் தலையோடு இவையென்ப யாவரும் திட்பத்தால் தீண்டாப் பொருள். பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை எச்சிலோடு தீண்டலாகாது என்பது இதன் பொருள். எச்சிலுடன் காணத் தகாதவை எவை? எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் நாயிறுநாய் அத்தக வீழ்மீனோடு இவ்வைந்தும் தெற்றென நன்குஅறிவார் நாளும் விரைந்து. புலையர், நிலா, சூரியன், நாய், வீழும் நட்சத்திரம் ஆகியவற்றை எச்சிலோடு காணக்கூடாது என்பது இப்பாடலின் பொருள். எச்சிலோடு ஒன்றனையும் ஓதக் கூடாது, வாயால் ஒன்றனையும் சொல்லக்கூடாது, தூங்கக் கூடாது என்று சொல்லும் பாடல் ஒன்றும் உள்ளது.
இந்தப் பாடல்களில் எல்லாம் எச்சில் என்று சொல்லப்படுபவை எவை? எச்சில் பலவகைப்படும் என்கிறது ஆசாரக்கோவை. அவற்றுள் நான்கு எச்சில்கள் முக்கியம். அவற்றைக் கூறும் செய்யுள்: எச்சில் பலவும் உளமற்று அவற்றுள் இயக்கம் இரண்டு இணைவிழைச்சு வாயில் விழைச்சுஇவை எச்சில்இந் நான்கு. இயக்கம் இரண்டு என்று குறிப்பிடுவது மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை ஆகும். மலம் கழித்த பின்னும் சிறுநீர் கழித்த பின்னும் நீராட வேண்டும். அப்போதுதான் எச்சில் நீங்கும். மலம் கழித்த பின் நீராட சொல்வதேனும் சரி. சிறுநீர் கழித்த பின் நீராட வேண்டும் என்றால் எத்தனை முறை தினம் நீராடுவது? இணைவிழைச்சு என்பது புணர்ச்சி. அதாவது உடலுறவு. உடலுறவு கொண்டால் அது எச்சில். நீராடி எச்சிலை நீக்கலாம். நான்காவதாகச் சொல்லப்படுவது ‘வாயில் விழைச்சு’ என்பதாகும். அது என்ன வாயில் விழைச்சு? இதற்குப் பழையவுரை ‘வாயினால் வழங்கிய விழைச்சு’ என்று குறிப்பிடுகிறது. புன்னைவனநாத முதலியார் எழுதியுள்ள உரையில் அவர் பழையவுரையைப் பின்பற்றி ‘வாயினால் வழங்கிய விழைச்சும்’ என்று எழுதியுள்ளார். கருத்துரையில் ‘பலவகை எச்சில்களில் மலசலங் கழித்தல் புணர்ச்சி அதரபானம் இந்நான்கையும் காக்க’ என்று கூறுகிறார்.
 
சொற்பொருள் தரும்போது ‘இணைவிழைச்சு – புணர்ச்சி’ என்று எழுதுபவர் ‘விழைச்சு – விருப்பம்’ என்று பொருள் தருகிறார். ‘வாயில் விழைச்சு’ என்பதற்குத் தனியாகப் பொருள் எழுதவில்லை. ‘இணைவிழைச்சு’ என்பதற்கு ‘உடலுறவு’ என்று வெளிப்படையாகவும் தெளிவாகவும் பொருள் எழுதுபவர் ‘வாயில் விழைச்சு’ என்பதற்குப் பொருள் தரத் தடுமாறுகிறார். விருப்பம் என்பது எவ்விதம் பொருந்தும்? தமிழ் லெக்சிகன் ‘விழைச்சு’ என்னும் சொல்லுக்குப் ‘புணர்ச்சி’ என்று தெளிவாகப் பொருள் (தொகுதி 6, ப.3724) தருகிறது. விழைச்சு என்பதற்கே புணர்ச்சி என்று பொருள் இருக்கிறது. அப்படியானால் இணைவிழைச்சு, வாயில்விழைச்சு ஆகியவை விழைச்சின் வகைகள் என்று கொள்வதுதான் பொருத்தம். மேலும் இணைவிழைச்சு என்பது போல வாயில்விழைச்சு என்பதையும் ஒற்றைச் சொல்லாகக் கருத வேண்டும். ‘அதரபானம்’ என்றால் எவ்விதம் பொருள் உணர்வது? முத்தம் என்னும் பொருளில் அப்படிச் சொல்கிறாரா? முத்தம் என்றால் தெளிவாக அந்தச் சொல்லையே பயன்படுத்தலாமே. உரையாசியருக்குப் பொருள் புரியாமலில்லை. சொல்லத் தயக்கம். சரி, அகராதிகள் என்ன பொருள் சொல்கின்றன என்று பார்த்தால் பல அகராதிகள் இந்தச் சொல்லையே தலைச்சொல்லாகத் தரவில்லை.
 
சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் சொற்களுக்குப் பொருள்தரும் ‘பாட்டும் தொகையும்’ அகராதியில் இச்சொல்லே இல்லை. தமிழ் லெக்சிகன் ‘வாயில்விழைச்சு – உமிழ்நீர்’ எனப் பொருள் (தொகுதி 6, ப.3602) கொடுத்து அதற்கு உதாரணமாக ஆசாரக்கோவையின் இந்தச் சொல்லையே தந்துள்ளது. உமிழ்நீர் என்பது எவ்வகையில் பாடற்பொருளுக்குப் பொருந்தும்? அகராதியின் பதிப்பாசிரியர் வையாபுரிப்பிள்ளை. அவர் எதையும் மறைக்க வேண்டும் , மாற்ற வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர். அவர் பார்வையில் படாமல் இந்தப் பொருள் கொடுக்கப்பட்டிருக்கக் கூடுமோ? வாயில்விழைச்சு என்பது எல்லாருக்கும் தெரிந்தாலும் அதை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம். ஆசாரக்கோவையின் ஆசிரியருக்கு அந்தத் தயக்கம் இல்லை. வாயில்விழைச்சு என்பது வாய்வழிப் புணர்ச்சி அதாவது வாய்வழி உறவு கொள்ளுதல் ஆகும். பேச்சு வழக்கில் இதைக் குறிக்கும் நேரடிச் சொல் ‘ஊம்புதல்’ என்று நினைக்கிறேன்.
 
வேறு சொல் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வாய்வழிப் புணர்ச்சி பழமையானது என்பதற்கு ஆசாரக்கோவையே சான்று. அதைத் தவறென அந்நூல் சுட்டவில்லை. அதை ஏற்றுக்கொள்கிறது. அப்புணர்ச்சியை எச்சிலில் ஒன்றாகச் சுட்டுகிறது. எச்சில் என்பதற்கு இங்கு அசுத்தம் எனப் பொருள் கொள்ள வேண்டும். இன்னும் குறிப்பாகச் சொன்னால் தீட்டு என்னும் அசுத்தம் எனக் குறிப்பிடலாம். இத்தகைய அசுத்தத்திற்குப் பரிகாரம் நீராடல். வாயில்விழைச்சு முடிந்ததும் நீராடிவிட்டால் தீட்டு கழிந்துவிடும். முதன்மைத் தீட்டுக்களில் ஒன்றாக வாயில்விழைச்சு கருதப்பட்டுள்ளது என்றால் அவ்வழக்கம் பரவலாக இருந்துள்ளது என்றே பொருள். வாயில்விழைச்சில் ஈடுபட்டோர் யார் என எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருபால் புணர்ச்சி, ஒருபால் புணர்ச்சி ஆகிய இரண்டிலுமே வாயில்விழைச்சு நடந்திருக்க வாய்ப்புண்டு. அதை அக்காலச் சமூகம் ஏற்றுக் கொண்டிருந்தது என்பதையே ஆசாரக்கோவை காட்டுகின்றது. இந்நூலில் இன்னொரு குறிப்பிடத்தக்க பதிவும் காணப்படுகின்றது. யார் யாருடன் தனித்திருக்கக் கூடாது என்று ஒரு பாடல் கூறுகின்றது. வருமாறு: ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும் சான்றார் தமித்தா உறையற்க ஐம்புலனும் தாங்கற் கரிதாக லான். இதற்குப் பழையவுரைகாரர் ‘தாயுடனாயினும் மகளுடனாயினும் தம் உடன் பிறந்தாளுடனாயினும் சான்றோர் தனித்து உறையார், ஐம்புலன்களையுந் தடுக்கல் அரிதாகலான்’ என்று எழுதுகின்றார்.
 
புன்னைவனநாத முதலியார் கருத்துரையாக ‘ஐம்புலன்களையும் அடக்கி நடத்த லருமையாதலின் தாய் முதலியவர்களுடனும் தனித்திருத்தல் தகாது’ என்று கூறுகின்றார். அவர் ‘உறையற்க’ என்பதற்குத் ‘தங்காதிருக்கக் கடவர்’ என்று பொருள் கூறுகிறார். ‘உரையற்க’ என்பதைப் பாட வேறுபாடாகக் கொள்ளலாம் என்பதும் அவர் எண்ணம். அப்படி எடுத்துக் கொண்டால் எவ்வாறு பொருள் கொள்வது? ‘உரையற்க என்ற பாடங்கொண்டு மேற்குறித்தவர்களுடன் தனித்திருந்து உரையாடாதிருக்க எனலுமாம்’ என்கிறார். இது ஒருவகைச் சமாதானம். அப்படிப் பாடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவரே எடுத்துக் காட்டும் காசிகண்டச் செய்யுளடிகள் ஆசாரக்கோவையின் கருத்தைத் தெளிவுபடுத்துகிறது. அது: நற்றாய் புதல்வியுடன் றோன்றிய நங்கையேனும் உற்றோருழியிற் றனியெய்தியுறை தலாகா. இப்பாடலில் ‘உறைதல்’ எனத் தெளிவாகவே குறிப்பிடப்படுகின்றது. தாயுடன் மகன் தனித்திருக்கக் கூடாது. மகளுடன் தந்தை தனித்திருக்கக் கூடாது. உடன்பிறந்தவளுடன் (அக்கா அல்லது தங்கை) சகோதரன் தனித்திருக்கக் கூடாது.
 
தனித்திருந்தால் என்னவாகி விடும்? ஐந்து புலன்களையும் அடக்கி வைத்தல் அரிது. ஆகவே புணர்ச்சி நிகழ்ந்துவிட வாய்ப்புள்ளது என்பது கருத்து. இப்பாடல் அக்காலத்தில் இருந்த இத்தகைய வழக்கங்களை எதிர்மறையாகப் பதிவு செய்திருக்கிறது என்று கொள்ளலாம். தாயுடன் நிகழும் புணர்ச்சியைக் குறிக்கும் வசையாக இன்றைக்கும் பயன்படுவது ‘தாயோலி’ என்பது. அதேபோல சகோதரியோடு நிகழும் புணர்ச்சியைக் குறிக்க ‘ங்கொக்காலோலி’ என்பது பயன்படுகிறது. இத்தகைய வழக்கங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது. இதைச் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவேதான் தனித்திருக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும் என்று ஆசாரக்கோவை கூறுகின்றது. இன்றைக்கு அது வசையாக இருப்பதற்கும் அதுதான் காரணம். மனிதன் நாகரிகம் அடையாத காலத்தில் அது வழக்காக இருந்திருக்கலாம். பின்னர் அத்தகைய புணர்ச்சிகள் விலக்கப்பட்டிருக்கின்றன. எனினும் விதிவிலக்காகச் சில நடப்பதுண்டு. அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாகத் தனித்திருக்கக் கூடாது என்பதை ஆசாரக்கோவை வலியுறுத்துகிறது. மகளுக்கும் தந்தைக்குமான புணர்ச்சி பற்றி வசைச்சொல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் அத்தகைய புணர்ச்சிகளும் நடந்திருக்கக் கூடும். இன்றும் அப்படிப்பட்ட செய்திகள் வருகின்றன. மகளைப் புணர்ந்த தந்தையைக் கொன்ற தாய் பற்றிய செய்தியும் உண்டு.
 
அப்படியான தந்தைகளைக் கைது செய்யும் காட்சிகள் ஆண்டுக்கு ஒன்றிரண்டேனும் அரங்கேறுகின்றன. திருமண வயது கடந்தும் மணமாகாமல் முதிர்கன்னியாகிய மகளும் இளம் வயதிலேயே மனைவியை இழந்துவிட்ட தந்தையும் தாம் பார்த்த திரைப்படக் காட்சியின் தூண்டுதலால் உறவு கொள்வதாகக் கதை எழுதிய பிரபலம் இருக்கிறார். இத்தகைய முறையற்ற உறவுகளையே மூலதனமாக்கி எழுதப்படும் ‘காமக்கதைகள்’ இணையத்தில் அநேகம். புத்தகங்களும் பல. இவற்றுக்கெல்லாம் வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. அதற்குரிய பழஞ்சான்றுதான் ஆசாரக்கோவை.
————-
பயன்பட்ட நூல்கள்: 1. பு.சி.புன்னைவனநாத முதலியார் (உ.ஆ.), ஆசாரக்கோவை, 1971, சென்னை, கழக வெளியீடு, மறுபதிப்பு. 2. மர்ரே எஸ்.ராஜம் (ப.ஆ.), பதினெண் கீழ்க்கணக்கு, 1981, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இரண்டாம் பதிப்பு. 3. ச.வையாபுரிப்பிள்ளை, இலக்கியச் சிந்தனைகள், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம் முதல் தொகுதி, 1989, சென்னை, வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம். 4. ச.வையாபுரிப்பிள்ளை (ப.ஆ.), தமிழ் லெக்சிகன் தொகுதி 6, 1981, சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம், இரண்டாம் பதிப்பு.

நன்றி: மணல்வீடு
 
 
நன்றி வல்லினம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்