பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2014

படைப்பாளி தண்டிக்கப்படலாகாது


(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் சிறுகதை குறித்து ஸ்ரீவிஜயா எழுதியிருக்கும் கட்டுரை)


கடந்த சில வாரங்களாக, தமிழ் பத்திரிகைகளை அலங்கரித்த வல்லினத்தின் சிறுகதை ஒன்றின் கண்டன எழுத்துகளை அனைவரும் அறிந்ததுதான். கதையில் என்ன உள்ளது என்கிற விலாவரியான விளக்கங்களையெல்லாம் பலர் சொல்லியாகிவிட்டது. புதிதாக விமர்சனம் என்கிற பெயரில் அதை மீண்டும் நான் கிழித்துத்தொங்கப் போடுவதால் சீர்கெட்ட சமூதாயம் திருந்தி நல்லவர்களாக மாறிவிடப்போவதில்லை.
 
ஒரு சிந்தனை எழுத்து வடிவம் பெறுகிறபோது அது வாசிப்போரை கலவரமடையச்செய்யும் என்பதனைப் பல பிரபல எழுத்தாளர்கள் சொல்லியிருந்ததை வாசித்துள்ளேன். இருப்பினும், அதை இன்று உணர்கிறேன்.
 
பாதிப்புகள் வரும் என்பதால் பாதித்த விஷயத்தைத் தொட்டு ஒரு படைப்பாளி எழுதக்கூடாதா என்ன? உண்மையைச் சொல்வதில்தான் ஓர் படைப்பு வெற்றியடைய முடியும். உண்மைக்கு அரிதாரம் பூசி நாசுக்காகச் சொல்லாமல் அதை அப்படியே சொல்லிச்சென்றவிதம் பலரை பதற்றங்கொள்ளவைத்துள்ளது. சமூதாயத்தில் நடக்காத அவலமா இது? எங்கோ ஒரு மூளையில் எவனோ ஒருவன் செய்தான் என்பதனை இனி யாரும் இதுபோல் செய்துவிடக்கூடாது என்கிற சிந்தனையில் எழுதப்படுகிற பாடம்தான் இலக்கியப்பணி. இன்னமும் ஒழுக்கச்சீல பாடம் நடத்துவதற்கு இலக்கியத்துறை ஒன்றும் பாலர் பாடசலையல்ல. அந்த நோக்கோடு நாம் இந்தச் சிறுகதையை நோக்கியிருந்தோமென்றால் இவ்வளவு பதட்டநிலை வந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த எழுத்துப்பாணி தமிழ்நாட்டு பிரபல எழுத்தாளர்களின் பாணி. அந்த பாணியை இலக்கியத்தில் குறைந்த ஞானமுள்ள ஓர் இளைஞன் கையாள்கிறபோது இதுபோன்ற இக்கட்டான சூழல் வருவது சகஜமே. வாசகர்களை விடுங்கள். பத்திரிகை ஆசிரியர்கள் என்கிற முறையில் பரந்த வாசிப்பு அனுபவம் இருக்கின்ற பட்சத்தில், இதுபோன்ற படைப்புகள் உலக அளவில் ஆங்கிலம் தமிழ் மலாய் என பல மொழிகளில் அதிக அளவில் வந்துள்ளதை உணராமல், உலகத்தில் யாருமே இப்படிச்சொல்லவில்லை என்கிற ரீதியில் தனிநபர் தாக்குதல் நடத்துவது சரியா? இந்தச் சமூதாயத்தின் பார்வை எந்த அளவிற்கு கேவலமாக உள்ளது பார்த்தீர்களா?
 
நான் எழுதினேன். எனது சிந்தனை சரியில்லை. எனக்கு எழுதுவதற்கு தடை என்று எதாவதொரு சட்டதிட்டங்களைக் கொண்டுவாருங்களேன். அதை விடுத்து வேலை இடத்தில் வேட்டு வைக்கப்பட்டு, அதையும் கருத்தில் கொண்டு ஒரு நிறுவனம் அவனின் வேலையைப் பறிக்கின்ற பணியை செம்மையாகச் செய்துள்ளார்களே… ஓர் இலக்கியப் படைப்பை இலக்கியப்படைப்பாகவே விமர்சித்து கருத்து மோதல்களைச் செய்வதைவிடுத்து, அதை எழுதியவருக்கு வேலை போகின்ற அளவிற்கா செயல்படுவது!
 
ஓர் இலக்கியப் படைப்பாகப்பட்டது களிமண் போன்றது. எழுதுகிறவர் என்ன சொல்லி எந்த சிந்தனையில் எழுதினாலும் வாசகன் என்பவன் அதை நல்ல நோக்கோடு நல்ல சிந்தனையோடு வாசித்துப் பழகவேண்டும். சிலவேளைகளில் படைப்பில் சொல்லப்பட்ட விஷயம் நம் வாழ்வோடு எப்படி பின்னிப்பிணைந்துள்ளது என்று வாசகனாகப்பட்டவன் யோசிக்கவேண்டும். சினிமா பார்க்கின்றோம், நல்லதை ஏற்போம் கெட்டதை விட்டுவிடுவோம் என்கிற ரீதியில்தானே திரையறங்குகளிலோ அல்லது தொலைக்காட்சியின் முன்னிலையிலோ அமர்கிறோம். குலுக்கல் நடனமோ அல்லது முதலிரவு காட்சிகள் வருகின்றபோது கண்களையா மூடிக்கொள்கிறோம்! சரி சினிமாவை விடுங்கள், பத்திரிகைகளில் வரும் அந்தரங்கம் என்கிற கேள்விபதில் அங்கத்தில் (எல்லா பத்திரிகைகளிலும் பெரும்பாலும் இந்த அங்கம் இருக்கும்) சில கேள்விகளை சென்சார் செய்கிறேன் என்று சொல்லிய பின்பும் வரும் சில கிளுகிளுப்பு விஷயங்கள், அப்போது மட்டும் எழுத்துகளையும் கருத்துகளையும் மனோத்தத்துவ ரீதியில் நோக்கவேண்டும் என்று வாசனுக்கு அறிவிப்பு செய்கின்ற பத்திரிகை ஆசிரியர்கள் தனி ஒரு எழுத்தாளரின் படைப்புகளை மட்டும் ஏன் இவ்வளவு கொடூரமாக ஆட்களைத் திரட்டி விமர்சித்து கொண்டிருக்கிறது என்கிற வினாவிற்குத்தான் பதில் இல்லை.
நல்ல விஷயங்கள் எவ்வளவோ எழுதியுள்ளோம். ஒருவர் வாசித்திருக்கமாட்டார். விமர்சனம் என்று வரும்போது, வருகிறவர்கள் போகிறவருகிறவர்கள், அறவே இலக்கிய வாசிப்பில் பரிச்சயம் இல்லாதவர்கள் கூட கருத்து சொல்கிறேன் பேர்வழி என புழுதிவாரிக்கொண்டிருப்பது இந்த சமூதாயத்தின் சாபக்கேடு.
 
`நீ எத்தனை முறை நல்ல எழுத்துகளை நல்லமுறையில் வாசித்து விமர்சித்துள்ளாய்? இப்போது மட்டும் மோசமான எழுத்து என்று உன் கருத்தைக் கூறவந்துவிட்டாய்? என்று பத்திரிகை ஆசிரியர்களே அந்த கடிதத்தின் கீழ் சூடுகொடுப்பதைப்போல் ஓரிருவரிகள் எழுதி, கருத்து எழுதியவரை கேள்விகேட்டால்தான், அறவே இலக்கிய வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் கருத்துச்சொல்ல வந்துள்ளேன், என்று இலக்கிய வட்டத்திற்குள் மூக்கை நுழைக்க முன்வரமாட்டார்கள். எல்லோரும் இஷடம்போல் கருத்து கூறுவதால்தான் நமது சமூகத்தில் நல்ல படைப்புகள் இன்னமும் வரவில்லை. இனியும் வராது. தி.ஜா எழுதிய `அம்மா வந்தாள்’ என்கிற நாவலை வாசித்தவர்கள், தாய்மை களங்கப்படுத்தப்பட்டது என்கிற வெட்டி வியாக்கியானமெல்லாம் செய்துகொண்டிருக்கமாட்டார்கள்.
எழுத்தாளன் மனப்பிறழ்வு நிலையில் படைப்புகளைக் கொடுப்பான். வாசகன் தான் சீர்தூக்கிப்பார்த்து வாசித்து சல்லடை செய்துகொள்ளல் வேண்டும்.
 
எழுத்தாளர்களுக்கு சமூதாயத்தின் மூலமாக எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஓர் எழுத்தாளனை இவ்வளவு மோசமான நிலைக்குத்தள்ளுவதற்கு இந்த சமூதாயமும் பத்திரிகையும் துணைபோனதை நினைத்து மனம் வேதனைப்படுகிறது.
 
இலக்கியத்தால் வாழ்ந்தான் என்பதைவிட இலக்கியத்தால் வீழ்ந்தான் என்கிற சரித்திரத்தை நம் நாட்டு வருங்கால இலக்கியம் சொல்லும்.
 
வானொலி தொலைக்காட்சிகளைப்பற்றிய விமர்சனங்கள் ஒன்று இரண்டல்ல, அப்போதெல்லாம் எந்த அறிவிப்பாளரும் பணி இடைநீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் வானொலிக்கே சம்பந்தமில்லாத ஓர் விஷயத்தால் அங்கே பணிபுரியும் அறிவிப்பாளருக்குப் பணி நீக்கம்.! காரணம் அவர் எழுத்தாளர். எழுத்தாளர் என்றால் இச்சமூகத்திற்கு இளக்காரம்.
 
இலக்கியத்தில் எவ்வளவோ போராட்டங்கள் வந்திருப்பினும் சம்பந்தமேயில்லாமல் வேலை நீக்கம் ஏற்பட்டதாக இதுவரையிலும் கேள்விப்படவில்லை. அந்தப் படைப்பாளியின் வேலைக்கு பிரச்சனை வரவேண்டிய அளவிற்கு என்ன அவமானம் நிகழ்ந்துவிட்ட்தென்றுதான் இன்னமும் புரியாத புதிர். செவிசாய்க்கவேண்டிய விவரங்களுக்குப் பாராமுகமாக இருந்துவிட்டு, எங்கேயோ தேள்கொட்டினால் எங்கேயோ நெரிகட்டிக்கொள்ளும் என்பதைப்போல கேழ்விரகில் நெய்வடிகிறதென்று மதிகெட்ட நிலையில் எடுக்கப்பட்ட முடிவை நினைத்து நிலைகுலைந்துபோனேன்.
இலக்கியம் – போதிப்பது சித்தாந்தம் சொல்வது அல்ல. அது வாசிக்கப்படுகிற தனிமனிதனை சிலநொடி சிந்திக்கவைப்பது.
 
ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற வறைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்களால் ஒரு போதும் சிறந்த படைப்புகளைக் கொடுக்கமுடியாது.
 
அதற்காக தயாஜி எழுதியது சிறப்பான சிறுகதை என்று நான் சொல்லமாட்டேன். அம்மாதிரியான கருவைத்தொட்டு எழுதுவதற்கு `தில்’ வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பித்த விதம் கவர்கிறது,சொல்லப்பட்ட அவலம் நெருடுகிறது.
 
ஒரு வாசகன் எந்நிலையில் இப்படைப்பினை ஏற்பான், எப்படி இப்படைப்பாகப்பட்டது மனித அவலங்களை அகற்றி வாசகனின் அக இருளைப்போக்கும், என்கிற ரீதியில் மிக மிகத்தெளிவாக படைப்பினை நகர்த்திச்செல்வது ஒரு படைப்பாளியின் கடமை. அதாவது, படைப்பு போதனையாகவும் இல்லாமல், அனுபவித்ததை அக்கு அக்காக மனதில் அல்லாடும் ஆசைகளோடும் இச்சைகளோடும் சொல்வது போலவும் இல்லாமல் கவனமாகப் பார்த்து நகர்த்துவது படைப்பாளியின் புத்திகூர்மையில் இருக்கின்றது.
 
எல்லா எழுத்தாளர்களாலும்… அதாவது எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பேர்போடுபவர்களாலும் இதுபோன்ற கருவைத்தொட்டு அவ்வளவு எளிதாக எழுதிவிடமுடியாது. அதற்கென்று சில கோட்பாடுகள் தெரிந்தவர்கள், கொள்கைப் பிடிப்பாளர்களால் மட்டுமே எழுதி அவலங்களை வெளியே சொல்ல முடியும். அதில் ரசனையும் ஊடாட வேண்டும்?
ஒரு படைப்பாளி இக்கருவை கையில் எடுக்கின்றபோது, படைப்பாளியின் பார்வையாகப் பட்டது, முதிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அந்த முதிர்ச்சி தயாஜியின் படைப்பில் இல்லை. முதிர்ச்சி என்றால்? என்று கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம்.
 
இலக்கியம் படைப்பது சுலபமானதல்ல என்கிற சிந்தனை நம்மைக் குடைந்துகொண்டே இருப்பது அவசியம்.
படைப்பு விமர்சனத்திற்கு உட்பட்டதுதான். இருப்பினும் படைப்பாளி தண்டிக்கப்படலாகாது.
 
-ஸ்ரீவிஜயா
 
நன்றி வல்லினம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்