பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

சனி, 12 நவம்பர், 2011

ஏழாம் அறிவும் எட்டி நிற்கும் தமிழர்களும்


7-ம் அறிவு படத்தைப் பார்த்தப் பிறகு, “நான் தமிழன்னு சொல்லி பெருமையா காலரைத் தூக்கிவிட்டுக்கறேன்”என சொல்லுகின்றவர்களை நினைக்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது.

இவர்களுக்கும், வேலாயுதம் படத்தைப் பார்த்தப் பிறகு “எனக்குள்ள இருக்கிற வேலாயுதம் வெளியே வருவாண்டா” என சொல்லுகின்றவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்க முடியும். யோசிக்கிறே. விளைவு இந்த பதிவு.

இது, சூர்யாவின் ‘7-ம் அறிவு குறித்தோ விஜய்யின் ‘வேலாயுதம்’ குறித்தோ அல்ல. தற்காலிகமாக தமிழண்டா என பெருமைபடுகின்றவர்கள் குறித்து.

பணி நிமித்தமாக வெளியூர் சென்றதால் நேற்றுதான் 7-ம் அறிவு படத்தைப் பார்த்தேன். அதற்கு முன் அப்படம் குறித்த விளம்பரங்களையும் எதிர்ப்பார்ப்பு வாசகங்களையும் கண்டு எதிர்ப்பார்த்து இருந்தவர்களில் நானும் ஒருவன்.

மீண்டும் சின்ன நினைவுருத்தல்; இது வேலாயுதம் குறித்தோ, 7-ம் அறிவு, படங்கள் குறித்த விமர்சனம் அல்ல. இதனை மீண்டும் சொல்ல காரணம் இருக்கிறது. உணர்ச்சிவசப்படுதல். தமிழர்களுக்கு மிகவும் நெருங்கிய ஒன்று.

இப்படி ஒரு பத்தியை எழுதப் போகிறேன் என, என் முகநூலில் பதிவு செய்தேன். அதனை முழுமையாகப் படிக்காமல் சற்று நேரத்தில் தோழியின் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பு என்பதை விட எச்சரிக்கை என்பதே பொருந்தும். சமாதானம் செய்ய நேரமானது. அது குறித்து

பின்னர் பார்க்கலாம்.

அதற்கு முன்;

7-ம் அறிவு திரைப்படக் குழுவினர்க்கு முதலில் பாராட்டுகள். படம் எடுத்ததற்காக அல்ல எந்த அளவுக்கு நாம் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப் பட்டிருக்கின்றோம் என்பதை காட்டியதற்காக.

இப்படத்தை பார்த்து தான் தமிழன் என மார்தட்டிக் கொண்டவர்களின் அடுத்த வேலை..?

சூர்யாவின் அடுத்த படம்...

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம்..

அல்லது சுருதிஹாசன். எதுதான் அந்த மார்தட்டிய தமிழனின் அடுத்த கட்டம்.

போதி தர்மர் பற்றி - கொஞ்சம் அதிகம்தான் விட்டுவிடுவோம். மஞ்சள் மருத்துவம், சானம் மகத்துவம் என்பதெல்லாம் நம் தமிழர்க்கு என்ன அப்படியொரு புது தகவல்களா..? படத்தில் சொன்னதாலா.. சூர்யா சொன்னதாலா..?

இத்தனை நாளாய் நாம் செய்து வந்தவைகளையெல்லாம் என்னவாக பார்த்தீர்கள்.

முடிந்த கதையை விடுங்கள். ஒரு திரைப்படம் இத்தனை காலமாய் வெறும் தமிழர்களாய் இருந்த உங்களை மார்தட்டும் தமிழர்களாக உருவாக்கியதில் சராசரி தமிழானாய் மகிழ்ச்சி. இனி நீங்கள்?.

போதி தர்மரும், மஞ்சள், உடன் சானமும் போதுமா..? வேறு வழி இல்லை. இருக்காது. நீங்கள்தான் அடுத்த படத்திற்கு முன்பதிவு செய்துவிட்டீர்களே.

திருக்குறளையும் இன்னும் கொஞ்ச காலத்தில் நாம் சொல்லபோகிறோம் “திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் ஒரு தமிழர். ”

இதுவரை நாம் மறந்தவற்றையும்; துறந்தவற்றையும் தேடுவது மட்டுமே நீங்கள் மார்த்தட்டிக் கொள்ளும் 7-ம் அறிவு படத்திற்கு வெற்றி. இல்லையேல்; இன்று இதைப் பார்த்து மார்தட்டுவது போல நாளை வேறு ஒன்றைப் பார்த்து மூக்கு நோண்டுவீர்கள். வியப்பில்லை.!

மீண்டும் ‘பாரதி’ திரைப்படத்தை எடுக்க வேண்டும். அதில் சூர்யாவோ விஜய்யோ நடிக்க வேண்டும் அப்போதுதான் பாரதி என்கிறவரைக் குறித்து உங்களுக்கு தெரியும் என்றால் ; நீங்கள் யார்.? எந்த வகை தமிழர்.?

இன்னும் எத்தனை காலம்தான் சினிமா மோகத்தாலும் உணர்ச்சிக் கொதிப்பாலும் கர்ஜிக்கப் போகிறோம்?.

மார்தட்டியத் தமிழர்களுக்கு மீண்டும் ஒரு கேள்வி; சீரியலைப் பார்த்துக் குமுறும் தாய்மார்களுக்கும், குடித்து போதையில் தள்ளாடும் தந்தைமார்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாய் நினைக்கிறீர்கள்?.

தொடக்கத்தில் எச்சரித்த தோழி சொன்னாள் ; “எது எப்படியோ தமிழ் பேச வெட்கப்படும் தமிழர்கள் கூட இந்த 7-ம் அறிவை பற்றி பேசாறாங்க தெரியுமா. அதுக்காவது நன்றி சொல்லனும்”

அதற்கு என் பதில்

“ எப்படி, திருட்டுப்பசங்க இருக்கறதால காவல் துறையினர் இருக்காங்க. அதுக்குன்னு திருட்டுப் பசங்களுக்கு நன்றி சொல்லலாமா...?”

மீண்டும் இந்த பதிவு, 7-ம் அறிவு குறித்த விமர்சனம் அல்ல. மார்தட்டும் தற்காலிக தமிழர்களுக்கு கேள்வி அவ்வளவே....

இது யாரையும் புண்படுத்தினால், புண்படுத்தினால்தான் நல்லதுதான் அப்போதாவது நாம் பண்படுவோம். உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து நம்மை நாமே தாழ்த்தி தலைகுனிவதை விடுத்து. புதைந்த புதயல்களை மீட்டெடுப்போம்.

அதற்குள் அடுத்த படத்திற்கு கிளம்பிவிடாதீர்கள்.

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்