பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புதன், 2 நவம்பர், 2011

பேனாக்காரன்
பேனாக்காரன்

25.10.2011-ல் படிக்கத்தொடங்கி 31.10.2011-ல் படித்து முடித்த புத்தகம் பிரபஞ்சன் எழுதிய ‘தாழப் பறக்காத பரத்தையர் கொடி’ என்கிற கட்டுரை தொகுப்பு. உயிர்மை வெளியீடு. 2008லிருந்து 2009 வரையிலான பிரபஞ்சனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.16 தலைப்புகளில் கட்டுரைகள் இதில் உள்ளன.

எனக்கு அறிமுகமான பிரபஞ்சனின் முதல் பிம்பம் தவறாகவே இருந்தது. அவரின் சந்திப்பிற்கு பிறகும்; அவரின் நேற்று மனிதர்கள் என்ற சிறுகதை தொகுப்பும் பிம்பத்தைத் தாண்டி பிரபஞ்சனை வெளிக்கொணர்ந்தன. அது குறித்து வல்லினம் அகப்பக்கத்தில் எனது ‘பயணிப்பவனின் பக்கம்’ என்ற தொடரில் எழுதியுள்ளேன்.

( http://www.vallinam.com.my/issue28/thayaji.html வெள்ளைக் காகிதங்கள் என்ற தலைப்பில் அந்த கட்டுரை. படிக்கவும்.)

தாழப் பறக்காத பரத்தையர் கொடி –யை படிக்க ஆரம்பித்தேன். சில கட்டுரைகளைப் படிக்கும் போது கடினம் போல தோன்றியது. இருந்தும் மறுவாசிப்பில் புரிதல் ஏற்பட்டது.

குமுதம் வார இதழில் வேலைக்கு சேர்ந்தது முதல் தன் அனுமதி இல்லாமலேயே தனது நாடகத்தை புத்தகம் போட்டு விற்ற பதிப்பகம் வரையில் பிரபஞசன் இந்த கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார்.

கடினமான ஒன்றைக்கூட தனது எளிய மொழி நடையால் மனதிலுள் செலுத்துகிறார். தான் சொல்ல வந்தவற்றின் பின்புலம் குறித்து இவர் நினைவுக்கூர்ந்து சொல்வது அவருக்கே உரிய சிறப்பாவே எனக்கு படுகிறது. தன் அனுபவத்தை சொல்லும் வேளையில் அதன் நேர்மை நமக்கு புரிகிறது.

‘பானு உன் புத்தகப்பை அண்ணனிடம் இருக்கிறது’ என்ற கட்டுரையைப் படிக்கையில்; அதன் ஊடே செல்லச்செல்ல மனம் கணக்கிறது. பிரபஞ்சன் , அவரின் தங்கை பானு, தம்பி மூர்த்தி ஆகியோரின் பால்யம் குறித்த பதிவு. ‘எங்கள் மூவரின் விளையாட்டின் போது நாலாவதாய் ஒருவர் விளையாடுவதை நான் அறிந்திருக்கவில்லை. நாங்கள் ஒளிந்து விளையாடும் போது மரணமும் எங்களோடு ஒளிந்திருந்தது எனக்குத் தெரியாது.’- இப்படி பிரபஞ்சனின் வாக்கியங்கள் முன்னமே முடிவை சொல்ல நினைத்திருந்தாலும்; படிக்கப் படிக்க.. கண் கலங்குகிறது.

‘தாய்ப்பாலும் தென்னம்பாலும்’ என்ற கட்டுரையில் காலங்காலமா நமது தாத்தா பாட்டி நம் குடும்பம் குறித்து சொல்லிவரும் புனைவுகளைப் பதிகிறார். நெஞ்சு ‘பகிர்’ ஆகிறது.

‘இரண்டு பிரஞ்சுப் பெண்கள்’ என்ற கட்டுரை. இரண்டு பிரஞ்சு பெண்கள் குறித்த கட்டுரை. இதில் பின்னோக்கி சொல்லியிருக்கும் வரலாற்றுக் குறிப்பு பிரம்மிப்பை ஏற்படுத்தினாலும் என்னால் அவர்களை முழைமையாக உள்வாங்க முடியவில்லை. தொடக்கம் முதலே வரலாற்றுப் பாடங்கள் எனக்கு ஒரு தடவையில் புரிந்தது இல்லை.

‘அதிகாரத்துக்கு எதிரான சில குரல்கள்’ , ‘உலக தமிழ் மாநாடு செய்ய வேண்டியது என்ன்..?’ மற்றும் ‘4 பேராசிரியர்களும் ஒரு பதிப்பகமும்-இலட்சியக் கூட்டணி’ என்ற மூன்று கட்டுரைகளும் எனக்கு, நண்பர் நவினை நினைவுப்படுத்தியது. நவின் தன் வலைத்தளத்திலும் சமீபத்தில் வல்லினம் அகப்பக்கத்திலும் மலேசிய எழுத்தாளர் சங்கம் குறித்த எழுதிய கட்டுரைகளுக்கும் பிரபஞ்சனின் இந்த மூன்று கட்டுரைகளுக்கும் மெல்லியதொரு ஒற்றுமை இருக்கிறது.

‘ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்’ என்ற கட்டுரையில் பிரியா பாபு எழுதியிருக்கும் ‘மூன்றாம் பாலின் முகம்’ என்ற நாவல் குறித்து பேசுகிறார். வெறுமனே இந்த நாவலை மட்டுமே சுற்றிவராமல்; தான் சேர்த்த அனுபவத்தை வார்த்தைகளால் கோர்க்கிறார். தமிழ் இலக்கணங்களான தொல்காப்பியமும் நன்னூலிலும் திருநங்கைகள் குறித்து சொல்லுவதை பட்டியலிடுகிறார். அடுத்து கிரேக்கர்கள் குறித்தும் அவர்களின் ஓரின சேர்க்கைக் குறித்த கதைகள் குறித்தும் எழுதியிருப்பது பிறமொழி இலக்கியம் பற்றி சிந்திக்க வைக்கிறது. ஒரு வாக்கியத்தை இப்படி சொல்கிறார்; “காலம் காலமாகப் பெண்களின் பிறப்புறுப்புகளுக்கு ஆக கனமான பூட்டுகளை போட்டு, சாவியைத் தம் இடுப்பில் சொருகிக் கொண்டு அலைந்தார்கள் கிரேக்க ஆண்கள்”. இந்த வாக்கியம் எனக்கு ஏற்கனவே டாக்டர் ஷாலினி எழுதிய ‘பொண்களின் மறுபக்கம்’ எனற உளவியல் புத்தகத்தில் அறிமுகமாயின.(இந்த புத்தகத்தை இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை.)

‘மனதில் புகுந்தது மா மத யானை’ கட்டுரையில் தெருக்களைப் பற்றிப் பேசுவது, தமிழர்களின் தொடக்க வாழ்க்கை நினைத்து தலை நிமிரச் செய்தது. தமிழர்களின் வீடு தெருவில் இருந்து தொடங்குகிறது என்ற தகவல் வாசல் அழகின் முக்கியத்துவத்தைச் சொல்கிறது.

‘அபாயகரமானது கவிதை’ என்ற கட்டுரையில் ‘திசையெல்லாம் தமிழ்க் கவிதை’ என்னும் புத்தகத்தை பற்றி பேசுகிறார். புலம் பெயர்ந்தவர்களின் கவிதைத் தொகுப்பு இந்த புத்தகம். சில கவிதைகளை மேற்கோல் காட்டுகிறார். அதில் ஒன்று

‘மூக்கு சிந்துவதற்காக
எங்கள் மார்புக் கச்சைகளை
அவிழ்த்துக் கொள்பவர்கள்’ - இப்படியாக அமைகிறது.
கட்டுரையின் முடிவில் சொல்கிறார்; பாப்லோ நெருடா மரணப் படுக்கையில் இருந்த ஒரு நாள் , எதிர்ப்புரட்சி ராணூவம் அவர் வீட்டைச் சோதனை இட வந்தது. அவரைக் கைது செய்யவும்தான். நெருடா சொன்னார் “நாலா பக்கமும் பாருங்கள். உங்களுக்கு அபாயபரமான ஒரே ஒரு பொருள்தான் இங்கு இருக்கிறது. அதாவது கவிதை”.

நிறைவானக் கட்டுரையாக ‘தாழப் பறக்காத பரத்தையர் கொடி’ என்ற தலைப்பில் கட்டுரை வருகிறது. அதன் தொடக்கம் இவ்வாரு; ‘ஒரு பெண்ணைச் சிட்டி அவள் பரத்தை அல்லது விபச்சாரி என்று சமூகம் விதிக்குமானால், அந்த பெண்ணின் மீது இரண்டாயிரம் வருஷ்த்து அபவாதங்கள் சுமத்தப்படுகிறது என்று பொருளாகும்.’ - இதனை படிப்பதால் மட்டுமே ஒவ்வொருவரும் உள்வாங்க முடியும். புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன்.

படித்து முடித்த பின்னரும் பிரபஞ்சனின் விரல்வழி வந்த வார்த்தைகள் என்னுள் சுற்றிக்கொண்டிருப்பதன் அடையாளமாய் இந்த பத்தியைக் கருதுகிறேன்.

இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் சுந்தர ராமசாமியின் ‘இறந்த காலம் பெற்ற உயிர்’ என்ற புத்தகம். 1995 முதல் 2003 வரை சு.ரா எழுதிய கட்டுரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள், விவாதங்கள், அஞ்சலிகள், வாசகர் கடிதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இப்போதுதான் நான்காவது கட்டுரையைப் படிக்கப் போகிறேன் அதற்குள்

http://tayagvellairoja.blogspot.com/2011/11/blog-post.html


என் தறுதலை புத்தி என்ற பதிவை எழுதிவிட்டேன். இன்னும் இதில் படிக்க வேண்டிய கட்டுரைகளும் காத்திருக்கும் புத்தகங்களும் அழைக்கும் சத்தம் கேட்கிறது. சென்று படிக்கிறேன். நிறைய எழுத வேண்டியிள்ளது.

இப்படிக்கு தயாஜி.

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்