பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 01, 2022

'உப்புரொட்டி சிதம்பரம்' செய்தது நியாயமா..?

(உள்ளூர் நாடகம் குறித்தப்பார்வை)


-உப்புரொட்டி சிதம்பரம் செய்தது நியாயமா ? -
-----------------------------------------------------------

கதையில் ஏமாற்றம் இருக்கலாம் ஆனால் கதையே ஏமாற்றமாக இருக்கலாமா?     கதை என்பது என்ன என்பதிலேயே பலருக்கு குழப்பங்கள் இருக்கின்றன. சினிமா, சின்னத்திரை, மேடை நாடகம், வானொலி நாடகம், கதை, சிறுகதை, குறுங்கதை, நாவல் என்ன எல்லா வகையையும் எடுத்துக் கொண்டாலும் அதன் ஆதாரம் அதன் கதைதான்.

சொல்கிற முறையில் காட்டுகிற காட்சியில் கோர்த்துவிடுகிற சம்பவங்களில் வசீகரிக்கும் வார்த்தை ஜாலங்களில் என என்னதான் அதன் வடிவத்தை உயர்த்திப்பிடித்தாலும் கதை என்கிற அஸ்த்திவாரம் சரியாக இல்லையென்றால் அது தோல்வியைத்தான் தழுவி நிற்கும்.

‘கதை’ என்பதை எப்படி புரிந்து கொள்ளலாம். இதற்கு பல படிநிலைகளில் பல பதில்கள் நம்மை மேம்படுத்த உதவுகின்றன. ஆனால் இப்போதைக்கு மிக எளிமையாகச் சொல்வதென்றால் ‘முழுமை’ என புரிந்துகொள்ளலாம். கற்பனையில் தோன்றிய கருவோ, நேரடி அனுபவமோ, கேட்டு பார்த்த சம்பவங்களோ இப்படி ஏதோ ஒரு தீப்பொறியில் தோன்றி ஒரு முழுமையான வடிவத்தில் வந்தமர்வது கதை. முழுமையான வடிவத்தில் வந்து அமர்வது மட்டுமல்ல, அந்த வடிவத்தை முழுமையாக்குவதே அந்தக்கதைதான். அதனால்தான் கதை என்றால் முழுமை என இப்போதைக்கு புரிந்து கொள்ளலாம் என்கிறேன்.

ஓர் உதாரணம் தரவா ?

ரஜினிகாந்தின் முத்து திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். (ஜப்பான்லயே பார்த்துட்டாங்கலாம்) அதையே கொஞ்சம் நிகழ்லாமக மாற்றிக்கொள்வோம்.

திரையரங்கில் இருக்கின்றோம். சூப்பர் ஸ்டாருக்கு கைத்தட்டி, அவரது ஸ்டைல்களுக்கு விசில் அடித்து, மீனாவின் அழகில் மயங்குகிறோம், செந்தில் வடிவேலு செய்யும் நகைச்சுவைகளுக்கு சிரித்து, யாரந்த சாமியார் ரஜினி என யோசித்து, ராதாரவியைக் கண்டு அச்சப்படுகிறோம். இப்படியே இடைவேளை வரை வந்துவிட்டோம். இப்போது இடைவேளை காட்சியைச் சொல்கிறேன்.

எஜமான் தன் மீது உயிரினும் மேலான விசுவாசத்தை வைத்திருந்த ரஜினியை அடித்துகொண்டிருக்கிறார். மற்ற வேலைக்காரர்கள் அழுகிறார்கள். ரஜினி அழுததும் நாமும் அழுகிறோம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நம்மை ஆழத்திற்கு கொண்டுப்போகின்றார். இரத்தக்காயங்களுடன் என்ன நடக்கிறது என தெரியாத முகத்துடனும் துணியை வாயில் வைத்து அழுகையை முடிந்தவரை அடுக்கிக்கொண்டு ரஜினி வீட்டை விட்டு வெளியேறுகிறார். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலில் நாமும் நம் இருக்கையில் அசைந்து அமர்கிறோம். இனிதான் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கப்போகிறது. மீனா யாரை திருமணம் செய்வார். யாரந்த சாமியார் ரஜினி, எஜமானனின் அம்மா ஏன் ரஜினிமீது பாசமாக இருக்கிறார், ராதாரவியின் சூழ்ச்சிக்கு என்ன பதிலடி என பல கேள்விகளும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் எகிறிக்கொண்டுருக்க……..

திரை கறுப்பாகிறது, திரையரங்கம் வெளிச்சமாகிறது. அத்துடன் முத்து திரைப்படம் முடிந்துவிட்டதென அதன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வழக்கமான வணக்கத்துடன் வந்து நின்று சிரிக்கின்றார்.

இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? இதுவரை நல்ல படத்தைப் பார்த்துவிட்டோம் என்ற  எண்ணமா ? அதான் நகைச்சுவைகளுக்குச்  சிரிச்சிட்டோமே என்ற மன நிறைவா ? கொடுத்த காசுக்கான மனநிறைவு கிடைச்சாச்சி ? என எது உங்களுக்கு இப்போது தோன்றுகிறது? இதற்கான முடிவை நீங்கதான் சொல்ல வேண்டும்.

மேற்சொன்ன திரைப்படம் எப்படி முழுமையற்று நம்மை ஏமாற்றியதோ அதே போலதான் நமது உள்நாட்டு நாடகமான ‘உப்புரொட்டி சிதம்பரம்’ தொடரும் நம்மை ஏமாற்றியதோடு முட்டாளாக்கியும் உள்ளது. கடினமான சொல்லாக இருந்தால் மன்னிக்கவும். ஆனால் கதை மீதான இத்தனை பெரிய அலட்சியத்தை என்னால் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேற்கொண்டு பேசுவதற்கு முன்பாக எனக்கொரு ஐயம்! சமீபகாலமாக ஆஸ்ட்ரோவில் பல நல்லநல்ல தொடர் நாடகங்களையும் புதிய முயற்சிகளையும் நாம் பார்த்தோம். நானும் அவற்றை குறித்து எழுதியும் இருந்தேன். அவ்வகையில் எல்லா நாடகங்களும் நான் அறிந்தவரை இருபத்து இரண்டு தொடர்கள்தான் இருந்தன. அதன் பொருட்டே சில நல்ல கதையம்சம் கொண்ட தொடர்கள் 22-வது தொடரில் வேறு வழியின்றி அவசர அவசரமாக முடிந்தன. நல்ல வேளையாக அந்தக்கதைகள் தன் வரையில் முழுமையடைந்தன.

ஆனால் உப்புரொட்டி சிதம்பரம் தொடர் மட்டும் எப்படி 35-தொடர்கள் வரை வந்தன. வழக்கமானத் தொடர்களைக் காட்டிலும் பதிமூன்று தொடர்கள் கூடுதலாக கிடைப்பதற்கு என்ன காரணம். அப்படி கூடுதலாகக் கிடைத்தும் முழுமை அடையாத கதையை எப்படி ஏற்றுக்கொண்டார்கள். இந்த நாடகத்தை ஏற்றுக்கொள்ள வைத்த அம்சங்கள் எதுவென விளக்கினால் அல்லது சிறு குறிப்புகள் கொடுத்தாலும் கூட புதிய இயக்குனர்களுக்கும் அதற்காக உழைப்பவர்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும் என்பதால் கேட்டுக்கொள்கிறேன்.

இதே வேளையில் இன்னொன்றையும் யோசிக்க வேண்டியுள்ளது.

“அதான் அடுத்த சீசன் வருமே… உப்புரொட்டி சிதம்பரம் பாகம் இரண்டு.. அதுல கதையை முழுசா தெரிஞ்சிக்கலாம்” என யாராவது ஒருவர் வரப்போகிறார் என்பதால் அவருக்கும் சேர்த்து ஒரு பதிலை இங்கே கொடுத்துவிடலாம் என நினைக்கிறேன்.

இந்நாடகத்தில் இருக்கும் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து கடைசியாக ஒரு எதிர்ப்பார்ப்பில் அல்லது ஒரு சுபத்தில் முடிந்து, மீண்டும் இதே குடும்பத்தில் தோன்றும் புதிய முடிச்சிகளும் அதனை அவிழ்க்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் சந்திக்கும் சோதனைகளும்தான் பாகம் இரண்டிற்கான கதையாக அமையுமே தவிர இப்படி முழுமையற்ற ஏமாற்று வேலை அல்ல.

அதென்ன ஏமாற்று வேலை எனதானே கேட்க தோன்றுகிறது. 35-வது தொடரில் அடைப்புக்குறியில் கடைசி அத்தியாயம் என முன்னெச்சரிக்கையாக போடாமல் இருந்திருந்தால் இந்நாடகத்தின் இடைவேளைக்கான உச்சம் தொடும் பாகமாக இத்தொடர் இருந்திருக்கும். முத்து படத்தில் எஜமானனிடம் அடிவாங்கிய ரஜினி அரண்மனையை விட்டு வெளியேறுகிறார் பின்னணியில் ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ என பாடல் இசைக்க, திரையில் கே.எஸ்.ரவிக்குமார் தோன்றி நன்றி வணக்கம் சொல்வதற்கு இணையானததைதான் இவர்கள் நமக்கு  நடத்தியிருக்கிறார்கள்.

இன்னொரு சந்தேகமும் இல்லாமலில்லை, முன்னமே இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்பு உறுதியாகிவிட்டதால் என்னவோ முதல் பாகத்தில் முழுமையைக் காட்ட விரும்பவில்லையோ, அதான் அடுத்த சீசன்ல சொல்லப்போறோமே அதுக்கு என்ன அவசரம்!!!!!!

மற்றபடி நம்பிக்கையான இயக்குனர், நல்ல நடிகர்கள், ரசிக்க வைக்கும் பாடல், உறவுகளின் பொறாமை, காழ்ப்புணர்ச்சி, அன்பிற்காக எல்லாவற்றையும் சுமக்கும் பெண், பேச்சு எடுபடாத அப்பா, நட்பு என பல உள்ளன. பாராட்ட வேண்டிய நடிப்பை பலர் கொடுத்திருந்தார்கள், சிரிக்க வைத்தார்கள் ரசிக்க வைத்தார்கள்.

இந்நாடக முடிவைத் தெரிந்துகொண்டு இவற்றையெல்லாம்தான் எழுத எண்ணியிருந்தேன். ஆனால் நாடகத்தின்  முடிவு அதற்கு கொஞ்சமும் வழிவிடாதது என் தவறாக இருக்க முடியாதுதானே.

#தயாஜி


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்