புத்தகவாசிப்பு_2022_7_நிலவழி
தலைப்பு – நிலவழி
எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன்
வகை – கட்டுரை
வெளியீடு – தேசாந்திரி பதிப்பகம்
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)
மாத இதழொன்றில் தொடராக வந்தபோது வாசித்தது. இப்போது புத்தகமாக மீள்வாசிப்பு செய்வதில் மகிழ்ச்சி. எஸ்.ராவின் மூலம் பல எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் தொடர்ந்து பலருக்கு அறிமுகமாகிக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. இந்தத் புத்தகமும் அவ்வாறுதான், புத்தக முடிவில் எஸ்.ரா சொல்லியிருக்கும் செய்தி மிக முக்கியமானது.
சர்வதேச இலக்கியங்கள் நமக்கு அறிமுகமாகியிருக்கும் அளவிற்கு இந்திய இலக்கியம் அறிமுகமாகியிருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலத்தின் வழி ரஷ்ய இலக்கியங்களும் ஐரோப்பிய இலக்கியங்களும் எளிதாக வாசிக்கக் கிடைகின்றன. குறைந்தது அதன் எழுத்தாளர் அப்படைப்பாக்கத்தின் உள்ளீடு என்கிற விபரங்களையாவது தெரிந்து வைத்திருப்போம். ஆனால் இந்திய இலக்கியங்கள் என அறியப்படும் மராத்தியிலோ, வங்காளத்திலோ, பஞ்சாபியிலோ எழுதப்பட்ட இலக்கியப்படைப்புகள் தமிழில் எதிர்ப்பார்க்கும்படிக்கு வாசிக்கக் கிடைப்பதில்லை. மொழிபெயர்ப்பாளர்களின் தேவை இந்தத் தேக்கத்தை தீர்ப்பது எத்துணை அவசியம் என புலப்படுகிறது.
அவ்வகையில் எஸ்.ரா எழுதியிருக்கும் ‘நிலவழி’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் போக்கினையும் கவனப்படுத்துகிறது என சொல்லலாம். மொத்தம் பத்து கட்டுரைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. ஆனால், பல படைப்பாளர்கள் , அவர்களின் முக்கியமானப் படைப்புகள் என அதிகமாகவே இக்கட்டுரைகளில் நமக்கு கிடைக்கின்றன. உதாரணமாக ஒரு மொழியில் இருக்கும் படைப்பாளியைப் பற்று பேசும்பொழுது அவருக்கு முந்தைய படைப்பாளர்களையும் அவர்கள் எவ்வாறு மாற்றத்திற்கு காரணமாக இருந்தார்கள் எனென்ன சிக்கல்களை எதிர்க்கொண்டார்கள் எனவும் பேசுகிறார். இன்றையப் படைப்பு தொடர்ச்சியை நாம் விட்டுவிடாதபடிக்கு அது நமக்கு உதவவும் செய்கிறது.
மலேசியாவில் இருக்கும் எங்களுக்கும் இவ்வாறான சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. இங்கு எழுதப்படும் மலாய் சீன படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்து பெரிதாக பலருக்கு அறிமுகம் இருப்பதில்லை. மலாய் மொழி எங்கள் நாட்டின் தேசிய மொழி, நாங்கள் எல்லோரும் தமிழ்மொழி போலவே மலாய் மொழியையும் கற்றுக்கொண்டே வளர்கிறோம். மலாய் இலக்கியம் குறித்தும் படைப்புகள் குறித்தும் எங்களால் நேரடியாக வாசிக்கவும் அது குறித்து உரையாடவும் முடிகிறது. ஆனால் சீன மொழி இலக்கியம் அப்படியல்ல. அங்கு இலக்கிய முன்னெடுப்பாக என்ன நடக்கிறது. என்ன எழுதுகிறார்கள் என்கிற கேள்வியே எஞ்சி நிற்கிறது. ஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன் வழி அம்மொழியில் புழங்கும் மக்களின் பண்பாட்டு அறிவுத் தளத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மலாய் மொழி பலருக்கு பரிச்சயம் என்றாலும் அதன் இலக்கிய முன்னெடுப்புகளை பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை. ஆனால் மலாய் மொழியில் மட்டும் எழுதி மலாய்க்காரர்களுக்கு நன்கு அறிமுகமான தமிழ் எழுத்தாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். தனிக்குழுவாக தொடர்ந்து மலாய் இலக்கியம் படைத்து வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் அ.பாண்டியன் ‘அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ என்று புத்தகம் எழுதினார். வல்லினம் பதிப்பகமும் (மலேசியா) சந்தியா பதிப்பகமும் இணைத்து இப்புத்தகத்தை வெளியிட்டார்கள். மலேசிய மலாய் இலக்கியம் குறித்த அறிமுகத்தையும் படைப்புகளின் போக்கையும் அப்புத்தகம் கொடுக்கும். அவ்வாறே சீன இலக்கியம் குறித்தும் தமிழில் புத்தகம் வரவிருந்தது; சில காரணங்களால் அம்முயற்சி தாமதமாகிக்கொண்டே இருப்பது கொஞ்சம் வருத்தம்தான்.
எஸ்.ரா எழுதியிருக்கும் ‘நிலவழி’ வாசிக்க வாசிக்க நாம் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்களின் பெயர் பட்டியல் நிறையவே செய்கின்றன. நேரடியாக அவற்றை வாசிக்க இயலாவிட்டாலும் அதன் சாரத்தை, எப்படி அது முக்கியமான படைப்பாக அறியப்படுகிறது போன்றவற்றை இப்புத்தகம் வழி நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
- தயாஜி
(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)
0 comments:
கருத்துரையிடுக