ஜனவரி 25, 2023
ஜனவரி 24, 2023
'தலைவர்' - புத்தகவாசிப்பு 3 (2023)
‘தலைவர்’– புத்தகவாசிப்பு 3 (2023)
தலைப்பு – தலைவர்
எழுத்து – எம்.பிரபு
வகை – சிறுகதைகள்
சொல்லித்தான் ஆகவேண்டுமா? என எனக்கு நானே சிலசமயங்களில் கேட்டுக்கொள்வது உண்டு. ஏனெனில் நாம் ஆசைப்பட்டு எதிர்ப்பார்த்து சொல்லுவதும் எழுதுவதும் நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இருந்தும் ஏன் சொல்லத் தோன்றுகிறது, ஏன் எழுதத் தோன்றுகிறது என்றால் நாம் நம் சொல்லின் மீதும் எழுத்தின் மீதும் வைத்திருக்கும் நேர்மையும் அதன் விளைவுகள் கொடுக்கும் பலன்கள் மீதான நம்பிக்கையும்தான் காரணம்.
கடந்த ஆண்டு வாசித்த புத்தகப்பட்டியலை மீண்டும் ஒரு கண்ணோட்டமிடுகையில் என் சொந்த மண்ணின் (மலேசியா) எழுத்தாக்கங்களை (புத்தகங்களை) வாசித்தது குறைவாக இருந்தது தெரிந்தது. இவ்வருடம் தொடங்கி மாதம் ஒரு மலேசிய புத்தகத்தைக் குறித்து புத்தகவாசிப்பு பகுதியில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
அந்த வகையில் தொடக்கமாக மலேசிய எழுத்தாளர் எம்.பிரபுவின் தலைவர் சிறுகதைத் தொகுப்பு குறித்து என் வாசிப்பனுபவத்தை எழுதுகிறேன்.
மலாய் மொழியில் குறிப்பிடும்படியான சிறுகதைகளை எழுதி அறியப்பட்ட எழுத்தாளர். ‘கருப்பைய்யா’ என்ற தலைப்பில் மலாய்ச் சிறுகதைத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார். ‘தலைவர்’ இவரது முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பு.
இத்தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் நான் ஏழு சிறுகதைகளை மட்டுமே வாசித்துள்ளேன். பாதிக்குப்பாதி சிறுகதைகளை மட்டுமே வாசித்து இதனை எழுதுவதற்கு நான் மட்டும் பொறுப்பல்ல. அந்த எழுத்தாளரும்தான்.
பதிப்பகங்களை அணுகாமல் நாமே சொந்தமாக புத்தகங்களை பதிப்பிப்பதற்கான வாய்ப்புகள் இப்போது எங்கும் உண்டு. நாமே கதையை எழுதி நாமே அதனைத் திருத்தி நாமே அதனை நேர்படுத்தி நாமே அதற்கு பக்கங்களை அடுக்கி நாமே அதனை அச்சகத்துக்கு அனுப்பி நாமே அங்கும் பிழைத்திருத்தம் பார்த்து புத்தகத்தை அச்சடித்து கையில் பெற்றுக்கொள்ளலாம். கொஞ்சமாய் உழைப்பும் கூடுதலாய் பணமும் இதற்கு போதுமானது. ஆனால் இதன் வழி கையில் கிடைத்திருக்கும் புத்தகத்தின் தரம் கேள்விக்குறியாகிறது. புத்தகத்தின் தரமே கேள்விக்குறிக்குள்ளாகிறது என்றால் புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து யோசிக்கத்தானே வேண்டும்.
ஒருபக்கம் பதிப்பகங்களால் உண்டாகும் நம்பிக்கை ராயல்டி போன்ற சிக்கல், இன்னொரு பக்கம் நானே செய்துக்கொள்கிறேன் என்பதில் ஏற்படும் குளறுபடி. கடைசியில் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கி வாசிக்கும் வாசகனை யார் கவனிக்கிறார்கள். வாசகனுக்காகத்தான் செய்கிறோம் என்கிறார்கள் ஆனால் அவனை கொஞ்சமும் பொருட்படுத்துவதில்லை.
இவ்வளவும் பேசுவதற்கு காரணம் இந்தச் சிறுகதைத் தொகுப்பும் ‘செல்ப் பப்ளிஷிங்’ என்றழைக்கப்படும் எழுத்தாளரே புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறார்.
எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் இடையில் செறிவாக்கம் செய்வதற்கு ஒருவர் வேண்டும் என்பதை நான் எப்பவும் வழியுறுத்துகிறேன். சில எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் தனது படைப்பு வாசகனிடம் செல்வதற்கு முன்பாக எடிட்டரிடம் செல்வது தனக்கு ஏற்படும் அவமானமாகப் பார்க்கிறார்கள். தனது படைப்பை எடிட்டர்கள் சிதைத்துவிடுவதாகப் பார்க்கிறார்கள். இவர்களின் எழுத்தால் வாசகர்கள் சிதைந்துபோவதை விட அதற்கு முன்னமே அந்தப் படைப்பு சிதைவது ஒன்றும் பெரிய குற்றமில்லைதான். குறைந்த பட்சம் பிழைத்திருத்தக்கூட இவர்கள் யாரையும் அணுகுவதில்லை.
தலைவர் சிறுகதைத் தொகுப்பை முழுமையாக வாசிக்க விடாதது அதிலிருக்கும் எழுத்துப்பிழைகள். என்னதான் மேய்ப்பு பார்த்தாலும் எப்படியாவது சில எழுத்துப்பிழைகள் புத்தகத்தில் வந்துவிடுகிறதே என்கிற வருத்தம் எல்லா எழுத்தாளர்களுக்கும் உண்டு. ஆனால் வரிக்கு வரி எழுத்துப்பிழைகள் தென்படும் போது தொடர் வாசிப்பை அது தடை செய்கிறது. முதல் வரியில் எழுத்துப்பிழையாய் இருக்கும் சொல் இரண்டாவது வரியிலேயே பிழையின்றி இருக்கிறது. இப்படி பல இடங்களின் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. எழுத்தாளர் கூடுதல் கவனத்தை இதற்குத்தானே கொடுத்திருக்க வேண்டும். அதிலும் எளிய சொற்கள் கூட பிழையாக அச்சேறியிருப்பது வாசகனாய் எனக்கு வேதனையைக் கொடுக்கிறது.
இப்படி சொல்லி எழுத்தாளரை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எழுத்தாளர் என்கிற பொறுப்பிற்கு அவர் மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
முதல் கதை, ‘இரு உலகம்’. ரொம்பவும் நன்றாக வரவேண்டியக் கதை. நிஜ உலகத்திற்கும் (இன்னொரு) நிழல் உலகத்திற்கும் சென்றுச்சென்று திரும்பி போராடும் பெண் இறுதியாய் மருத்துவமனையில் இருக்கிறாள்; இதுதான் கதை. உளவியலை அழகாய் பயன்படுத்த வேண்டியக் கதை. ஆனால் இரு உலகங்களின் என்ன நடக்கிறது என்று சொல்லுவதிலேயே எழுத்தாளர் ஆர்வத்தைக் காட்டி கதையை முடித்துவிட்டார். யோசிக்கையில் இரு உலகங்களை இடப்பக்கம் ஒரு புள்ளியாகவும் வலப்பக்கம் ஒரு புள்ளியாகவும் மருத்துவ உலகத்தை ஒரு புள்ளியாகவும் வைத்து முக்கோணத்தில் ஒரு உளவியல் கதையை அபாரமாக கையாண்டிருக்கலாம். தவறவிட்டுவிட்டார்.
‘ஆ யீக்கு வந்த ஆசை’ என்ற சிறுகதை தலைப்பில் இருந்த ஈர்ப்பு கதையில் இல்லை. திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ விரும்பும் இளைஞன் காதலியுடன் சேர்ந்து வாழந்து காதலி கர்ப்பமாகிறாள், காதலன் விபத்தில் இறந்து போகிறான். சீன சமூகத்தில் நடக்கும் கதையாக காட்டி எழுத நினைத்து அதனையும் முழுமையாக்கவில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து இக்கதையை வாசிக்கும் ஒருவருக்கு சீன சமூகத்தைப்பற்றி நாயகி நாயகனின் பெயரளவில் மட்டுமே தெரிந்து கொள்வார்கள். அதைத்தாண்டி இக்கதையில் அவை பயன்படவில்லை. இதனை ஒரே வரியில் பத்திரிகைச் செய்தியாக்கிடலாம். இளைஞர்களின் இந்த திருமணம் மீதான வெறுப்பிற்கு என்ன காரணம், ஏன் அவர்களால் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ரொம்பவும் மேலோட்டமாக சொல்லிச்சென்றுவிடுகிறார். அவ்வளவே என கதை முடிந்து விடுகிறது. யாருக்கோ என்னமோ நடந்துவிட்டது என்ற எண்ணமே கதையை வாசித்து முடிக்கையில் தோன்றுகிறதே தவிற அதைத்தாண்டி வாசகனிடம் எதையும் சொல்லவில்லை.
‘புது முதலாளி’ என்னும் கதையும் அப்படித்தான். அப்பா இறந்த பின் அவரது வியாபாரத்தை தொடரும் மகன் பணத்தின் மீது குறியாக இருக்கிறான். அவனுக்கு பணம் மீதும் பெரிய வீடு கார் போன்றவற்றின் மீதும் ஈர்ப்பு இருக்கிறது. பலரிடம் வெறுப்பை சம்பாதித்தாலும் பொருட்களின் விலையைக் குறைக்க விரும்பவில்லை. திடீரென இறந்த அப்பா அவனது கனவில் தோன்றி கண்டிக்கின்றார்; அவன் திருந்திவிடுகிறான். இதனைத்தான் 12 பக்கங்களில் சம்பவங்களாக எழுதியிருக்கிறார். ஆனால் இக்கதையின் தொடக்கம் நன்றாக அமைந்திருந்தது. எடுத்த உடனேயே கதைக்குள் இழுத்துவிட்டது. இருந்தும் என்ன செய்ய.
‘குப்பாய்க்கிழவி’ என்னும் கதையில் கிழவி தன் இயலாமையையும் தன் கடந்த காலத்தையும் சொல்லி புலம்புகிறாள். அதற்கான மொழி முழுமையாக இக்கதையில் கைவரவில்லை. மிகப்பெரிய வரலாற்று பின்னணியைச் சொல்ல இடமுள்ள சிறுகதை.
‘ஒரு கொலைகாரனுக்குப் பின்னால்’. ஒரு சைக்கோ எப்படி உருவாகிறான் என்பதை எந்த களப்பணியும் செய்யாமல் சினிமா இத்தனை நாட்களாய் காட்டியுள்ளதையே திரும்ப கதையாக்க முயன்றுள்ளார். இம்மாதிரியான மனித மனதின் சிக்கல்களைச் சொல்லும் கதைகளுக்கு தேவை இருக்கிறது. ஆனால் அதற்கு எழுத்தாளர் உழைக்க வேண்டும். அத்தேவையை வெறும் சம்பவங்களைக் கொண்டே நகர்த்தியுள்ளார்.
‘நீ நான் மனம்’, காதலில் ஏமாற்றமடைந்த காதலன் தன்னையும் தன் மனதையும் பிரித்து அதனுடன் உரையாடுகிறான்; சுவாரஷ்யமாக இருக்கிறா? ஆனால் கதை அப்படி அமையவில்லை. அப்படி அமைவதாக ஆரம்பித்து கதை வழக்கமான திடீர் திருப்பத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. இக்கதைக்கு பயன்படுத்தப்பட்ட யுக்தி கவனிக்கத்தக்கது. கூடுதல் கவனம் கொண்டிருந்தால் எழுத்தாளரின் முக்கியமான கதையாக வந்திருக்கும்.
இன்னும் ஒரே கதையை மட்டும் வாசிக்கலாம் என்கிற முடிவில், தலைப்பு சிறுகதையான ‘தலைவர்’ சிறுகதையை வாசித்தேன். சமகால அரசியல் சூழல்களையும் அதன் சூழ்ச்சிகளையும் சொல்ல முயற்சிக்கும் கதை. ரொம்பவும் மேம்போக்காகவே கதையை நகர்ந்தி சென்றுவிட்டார். இதுவும் முக்கியமான கதையாக வரவேண்டிய கதைதான்.
நிறைவாக, எழுத்தாளரிடம் சொல்வதற்கான கதைக்கருக்கள் இருக்கின்றன. ஆனால் அதனை கதையாக்குவதற்கு தேவையான கூடுதல் உழைப்பும் கலந்துரையாடலும் நிகழாமல் போனதே இத்தகைய பலவீனங்களுக்கு காரணமாக இருக்கலாம்.
அது ஒன்றும் கலையவே முடியாத ஒன்றல்ல. நினைத்தால் சீக்கிரமே அடுத்தடுத்து நல்ல கதைகளை எழுத்தாளரால் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை இம்முதல் தொகுப்பு கொடுத்திருக்கிறது. இவரின் பெயர் சொல்லும் வகையான சிறுகதையை இவர் எழுத வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பிலேயே இதனை எழுதியிருக்கிறேன்.
பின்குறிப்பு; எழுத்தாளருக்கு நெருக்கமாக இருப்பதாக நினைப்பவர்கள் யாரும் “என்ன இப்படியெல்லாம் எழுதியிருக்கு?” என்று கோவப்பட்டாலும் எழுத்தாளரிடம் புகார் செய்தாலும் உங்களிடம் சிறு வேண்டுகோல், உங்கள் அக்கறையை இச்சிறுகதைத் தொகுப்பை முழுமையாக வாசித்து ஒரு கட்டுரை மூலமாக காட்டுங்கள். நன்றி.
ஜனவரி 23, 2023
'தண்ணீர்ச் சிறகுகள்' புத்தகவாசிப்பு 2 (2023)
தலைப்பு – தண்ணீர்ச் சிறகுகள்
எழுத்து – கலாப்ரியா
வகை – கவிதை
வெளியீடு – சந்தியா பதிப்பகம்
புத்தகம் வாங்க - +60164734794 புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை (மலேசியா)
இவ்வாண்டில் வாசித்து முடித்த இரண்டாவது புத்தகம். முதல் கவிதை புத்தகமும் கூட. கவிஞர் கலாப்ரியாவின் ‘தண்ணீர் சிறகுகள்’
கவிதை வாசிப்பை நான் கால இயந்திரத்துடன் ஒப்பிட்டே பேசுவேன். அது ஒரு டைம் மிஷின்; சொல்லப்போனால் காலக்கடத்தியும் கூட. கவிதை எந்தக் காலத்தைக் குறித்து எழுதியிருந்தாலும் அது தன்னை நிகழ்காலத்திலேயே நிறுத்தியிருக்கும். அப்படியே, கவிதைகள் தன்னை வாசிக்கின்றவர்களை காலத்தின் முன்னோக்கியும் பின்னோக்கியும் அழைத்துச் சென்று விளையாட்டு காட்டிவிடும். எத்துணை நகைமுரண் இது.
இப்புத்தகத் தொடக்கத்தில் கவிஞர் கலாப்ரியா சில கவிதைகள் பிறந்த கதையைச் சொல்லியிருப்பார். அவரின் அனுபவங்களுடன் அக்கவிதைகளை வாசிக்கும் போதும், பின் ஒவ்வொரு கவிதைகளாக வாசிக்கும் போதும் வாசகர்களுக்கு இருவேறு பரிணாமங்களை அவை கொடுக்கின்றன. அதனால்தான் என்னவோ கவிஞர்கள் ஏதோ ஒன்றை கவிதையாக்குகிறார்கள் வாசகர்கள் அதில் தங்களுக்கான ஏதேதே இருப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
மானின் ரத்தம்
புலி மடுவில்ப்
பாலாய்
என்கிற கவிதையைத் திரும்ப திரும்ப வாசிக்கின்றேன். மூன்றே வரிகள்தான். ஆனால் அது தன்னகத்தே சுமந்திருக்கும் மாயத்திற்கு நாம் பக்கம் பக்கமாக எழுதலாம். பாவத்தையும் புண்ணியத்தையும் கவிஞர் ஒரே கோட்டில் இணைத்துவிட்டார். இரண்டுக்குமே சம பங்கையும் கொடுத்துவிட்டார். இதில் ஒன்றைக்கூட்டி மற்றொன்றைக் குறைத்தால்; என்ன குறைத்தால்? அப்படி குறைக்கவே முடியாது என்பதுதானே கவிஞர் போட்டிருக்கும் கோடு. அது அப்படியேத்தான் இருக்கும். அது இயற்கை. அந்தச் சுழல் அப்படித்தான் இயங்க வெண்டியுள்ளது.
உன் நினைவை
மீட்டுக் கொடுத்தான்
உன் காதலன்
என்கிறார். காதலன் என்று முடியும் இடத்தில் காதலி என்று மாற்றி வாசிக்கும் சுதந்திரத்தை அதன் முதல் இரண்டு வரிகளே ஒப்புதல் கொடுக்கின்றன. இதில் ஒரு காவியச் சோகம் தெரியவில்லையா. உண்மையில் நினைவுகள் என்பது வலி நிவாரணியும் வலியில் காரண கர்த்தாவாகவும் ஆகிவிடுகின்றன. அவள் நினைவையோ அவன் நினைவையோ மீட்டுக்கொள்கிறோம் என்பதுவரை மனம் லேசாகிறது. நினைவுகள் இனிக்கின்றன. ஆனால் யார் மூலம் அது சாத்தியமாகிறது என தெரிந்து கொள்ளும் இடத்தில் மனம் கனக்கிறது, கூடவே நினைவுகள் கசக்கச் செய்கின்றன.
குழந்தைகள் குறித்த நம் கவிஞரின் கவிதைகள் எப்போதும் கவனிக்கத்தக்கவை. இத்தொகுப்பிலும் அவ்வாறு சில கவிதைகள் இருக்கின்றன. அதிலொன்று;
குழந்தை
வரைந்தது
பறவைகளை மட்டுமே
வானம்
தானாக உருவானது
எத்தனை அழகாக ஆழமானப் பார்வை. வானத்தை எப்படி வரைவது. ஒரு பக்கத்தாளில் நீலமடித்து வானம் வரையலாம்தான். பெரியவர்கள் அப்படித்தானே யோசிக்கிறோம். நீலம் நிறைந்திருந்தால்தான் அது வானம். குழந்தைகள் அப்படி நினைப்பதில்லை. வெள்ளைக் காகிதத்தில் இரு வாளைந்த கோடுகளை இணைத்து அவற்றைப் பறக்கும் பறவைகள் ஆக்கிவிடுகிறார்கள். பிறகென்ன வானம் தானாக உருவாகிவிடுகிறது. குழந்தைகள் மனம் அத்தகையதுதானே.
ஒரு குழந்தை இப்படியென்றால் இன்னொரு குழந்தை மீன் நீந்த தண்ணீரை வரைகிறது அவசர அவசரமாக,
மீன் வரைந்ததும்
முனையொடிந்த
பென்சிலை அவசரமாய்ச்
சீவுகிறது குழந்தை
தண்ணீர்க் கோடுகள்
தீற்ற
இப்படி குழந்தைகளின் இருவேறு மனநிலைகளைக் கவிஞனால்தானே உள்வாங்க முடிகிறது. கோடு போட்டு வானம் காட்டிய குழந்தையால் மீனை வரைந்து அது கடலென்று காட்ட முடியாதா என்ன?
பல சமயங்களில் கவிஞனின் கேள்வியில் இருந்தும் கவிதைகள் பிறக்கின்றன. அதற்கு ஓர் உதாரணம்தான் கவிஞரின்;
கனவுகள் ஏதும்
வந்ததா
கண்ணப்ப நாயனாருக்கு
கண் மூடிக்
கண் தோண்டிக்
கண் தைக்கும்
நேரத்தில்
அற்புதங்களும் அதிசயங்களும் எப்போதும் யாருக்கும் நடக்கலாம் என்பதைத்தான் காட்டுகிறாரோ ?
தன் குறிப்பின்
அழகான கையெழுத்தைத்
தானே வியந்து
தள்ளி வைத்தான்
தற்கொலையை
தள்ளி வைத்தத் தற்கொலை இனி அவனுக்கு தேவையிருக்காது என்றே கவிஞர் நம்ப வைக்கிறார். இப்படி ஏதாவது ஒரு அதியத்தை நாம் கண்டுபிடிக்கத்தான் வேண்டும் வாழ்வதற்கு, அது வெளியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்குள்ளேயே இருக்கலாம். பாலோ கொயிலோவின் ரசவாதி நாவலின் நாயகன் புதையல் தேடி தேசம் கடந்து பயணம் போவான். பல அனுபவங்களைப் பெறுவான். கடைசியில் அவன் தேடி வந்த புதையல் அவன் பயணம் தொடங்கிய இடத்தின் காலுக்கு அடியில்தான் இருக்கும். காலுக்கு அடையில் இருந்தாலும் அதனை அடைய அதற்கான அனுபவம் தேவையென்று எழுதியிருந்தால் அவன் என்ன செய்வான்; பாவம். இக்கவிதை எனக்கு அந்நாவலின் நாயகன் சாண்டியாகோவை நினைக்க வைக்கிறது.
கவிஞரின் பார்வை எப்படி ஒன்றைப் பார்க்கிறது என்பது கவிதையை மேலும் அழகூட்டுவதாக அமைந்துவிடுவிறது. அதற்கு சான்றாக கவிஞரின் இன்னொரு கவிதை;
தன்னைப் பற்றியும்
பாடச் சொல்லி
தண்ணீர் முத்துக்கள்
சூடியிருக்கிறது
தாமரையிலை
தன்னிடம் அதிகாரம் இருப்பதையே இங்கு பலர் விரும்புகிறோம். எவ்வளவு நெருக்கம் கொண்டிருந்தாலும் அன்பு பாராட்டினாலும் உள்ளுக்குள்ளே உள்ளத்தின் ஓரத்தில் பிறர் மீது அதிகாரம் செலுத்தவே பலரும் பிரயாசைப் படுகின்றோம். ஒருவேளை இதைத்தான் கவிஞர்,
சின்னவளைச் சேர்த்து
விளையாடு என்றால்
பெரியவள் தேர்ந்தெடுப்பது
டீச்சர் விளையாட்டு
விளையாடவும் வேண்டும் தன் கையில் அதிகாரமும் வேண்டும் என ஆசைப்படும் அந்தப் பெரியவளை நாம் எத்தனை இடங்களில் பார்த்திருக்கிறோம்.
தவம் செய்கிற புத்தனைப்
பார்த்துப் பார்த்துப்
பயந்தபடியே
உண்ணுகிறது
ஒரு கனிந்த
அரசம் பழத்தை
அணில் ஒன்று
என்கிறார் கவிஞர். எனக்கென்னவோ, அந்த அணில் புத்தனைப் பார்த்து பயப்படவில்லை. புத்தனின் பெயரிலும் அவனது போர்வையிலும் மனிதர்கள் செய்யும் அட்டூழியங்களைக் கண்டே அணில் அஞ்சியதாகப் படுகிறது. அணில் மட்டுமா அஞ்சுகிறது. நீங்களும் நானும்தானே அஞ்ச ஆரம்பித்திருக்கிறோம்.
கதை எழுத ஆர்வம் உள்ளவர்களுடன் உரையாடும் போதெல்லாம் கவிதைகளையும் வாசிக்க வழியுறுத்துவேன். அது அவர்களுக்கு வார்த்தைகள் வழியாகவும் கவிஞனின் பார்வை வழியாகவும் உதவக்கூடும் என சொல்லுவேன். ஒரு கவிதை ஒரு சிறுகதைக்கான பொறியையும் போட்டுவிடக்கூடியது.
திடீரெனப்
பெயர் அழைக்கப்பட்டுத்
திரும்ப நேரும் போதெல்லாம்
கண்களில்
ஏன் இவ்வளவு
இறந்த காலம்
இக்கவிதையை வாசித்து முடிக்கவும் சிறுகதைக்கான அழகான தொடக்கமும் மனதில் தொற்றிக்கொண்டது. கவிஞரின் கேள்விக்கு பதில் தேடி தொடர்ந்தால் ஓர் அழகான சிறுகதையை எழுதிவிடலாம்.
கவிஞர் கலாப்ரியாவின் ‘தண்ணீர்ச் சிறகுகள்’ கவிதைத் தொகுப்பினைக் குறித்தும் இக்கவிதைகள் குறித்தும் இன்னும் எழுதவே தோன்றுகிறது. அதற்கான அத்தனைக் கவிதைகளையும் இத்தொகுப்பு கொண்டிருக்கிறதுதான். எல்லாவற்றையும் சொல்லிவிடுவதை விட சொல்லாமல் விட்டவைதான் இதன் மீது அதிக ஈர்ப்பு கொடுக்கும் என்பதால் கவிஞரின் கவிதையொன்றையே நிறைவுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன்.
நல்ல நடன நிகழ்ச்சி
பார்த்து விட்டு வருகையில்
களவி முடித்த
களைப்பு
- கவிஞர் கலாப்ரியா (தண்ணீர்ச் சிறகுகள்)
#தயாஜி
ஜனவரி 08, 2023
2022-ல் வாசித்தவை
மார்ச் 12, 2022
புத்தகவாசிப்பு_2022_8_திமிரி
தலைப்பு – திமிரி
எழுத்து
– ஐ.கிருத்திகா
வகை
– சிறுகதைத் தொகுப்பு
வெளியீடு
– எழுத்து பிரசுரம்
நூல்
வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)
எழுத்தாளர் ஐ.கிருத்திகாவை முகநூல் வழி அறிந்துகொண்டேன். அவ்வப்போது அவரது படைப்புகள் இணைய இதழ்களில் வாசிக்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில் அதிகமாகவே அவரது படைப்புகள் கண்ணில் பட ஆரம்பித்தன. அவ்வப்போது அவரது படைப்புகளை வாசித்துப் பேசியிருந்தாலும். புத்தகமாக வாசித்துப் பேசுவதில் ஒரு திருப்தி இருக்கிறது.
‘திமிரி’ , எழுத்தாளர் ஐ.கிருத்திகாவின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. இதற்கு முன், உப்புச்சுமை, நாய்சார் என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘திமிரி’ மொத்தம் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
ஒவ்வொரு சிறுகதையும் பெண்ணில் உலகத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. அவளின் அக உலகத்தையும் புற உலகத்தையும் இக்கதைகள் வழி நாம் நெருக்கமாக உணரலாம். அதோடு பெண்கள் மீது ஆண்களும் சமூகமும் வைக்கும் கட்டுப்பாடுகளையும் அதிகாரத்தையும் பேசுகிறது.
சிறுகதைகளுக்கு எழுத்தாளர் வைத்திருக்கும் தலைப்புகள் வசிகரித்தன. கதைகளை வாசிப்பதற்கு முன்னமே அத்தலைப்பிற்கான அர்த்தத்தைத் தேடவ வைக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு கதையாக வரிசையாக வாசித்துப்பழகிய எனக்கு ஒவ்வொரு தலைப்பாகத் தேர்ந்தெடுத்த வாசிக்க வைத்ததும் அதுதான்.
வாசித்த சில கதைகள்,வழக்கமான கதைகளாகவே தெரிந்தன. அக்கதைகளைப் பலரும் பலவாறாகச் சொல்லியுள்ளார்கள். அதைவிட நன்றாகவும் சொல்லக்கூடிய கதைகள் எனவும் தோன்றியது. ஆனால் அடுத்தடுத்த கதைகளை வாசிக்கையில் எழுத்தாளர் தன்னையும் தேர்ந்த எழுத்தாளர் இடத்தில் நிறுத்திக்கொண்டார். அவரால் எப்படி இக்கதைகளை எழுத முடிந்தது என வாசித்தப்பின் யோசிக்கவும் வைத்துவிட்டார்.
‘இருட்டில் ஒளிரும் ஆயிரம் கண்கள்’ கதையில் அம்மா தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் மகளுக்கும் ஏற்படக் கூடாது என நினைக்கிறார்.
‘எரி நட்சத்திரம்’ என்ற கதையில் காலாகாலத்தில் கல்யாணம் ஆகாத பெண்ணின் வாழ்க்கையைச் சொல்கிறார்.
‘கணை’ சிறுகதையில் திருமணத்திற்குப் பிறகு பெண் கர்ப்பவதி ஆகவேண்டுமென்று எதிர்ப்பார்த்து அதனையே அப்பெண்ணுக்கு ஒரு அவப்பேராகச் சுமத்த காத்திருக்கும் சமூகத்தைச் சொல்கிறார்.
‘கணல்’ சிறுகதையில் இன்றும்கூடப் பெண்ணுக்கு காதலிக்க இருக்கும் சுதந்திரம் காதலித்தவனையே திருமணம் செய்வதில் இல்லாததையும் ஜாதி அங்கொரு பெரும்தடையாக இருப்பதைக் காட்டுகிறார்.
‘கனவு’ சிறுகதையில் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெண்கள் இழப்பது கொஞ்சநஞ்சமல்ல எனச் சொல்கிறார்.
‘கொண்டலாத்தி’ சிறுகதையில் பெண்ணின் மனம் எத்துணை விசித்திரமானது எனக் காட்டவும் தவறவில்லை.
‘சம்வாதம்’ என்னும் கதையில் வெளியூரில் வேலை செய்யும் பெண்ணைப் பற்றிப் பேசுகிறார். இத்தனை காலம் ஆண்கள் மட்டுமே வெளியூர் வேலைகளில் சிதைகிறார்கள் என வாசித்தும் கேட்டும் பழகியவர்களுக்கு இக்கதை பெண் சந்திக்கும் சிக்கலை எடுத்து சொல்லும். தன் உணர்வுக்கும் தன் பொறுப்பிற்கும் இடையில் சில பெண்கள் சிக்கி மூச்சு திணறுவதையை நன்றாகவே கதையாக்கியுள்ளார்.
‘திமிரி’ சிறுகதையில் கணவனை விட்டு பிரிந்து வாழும் பெண்ணைப் பற்றிச் சொல்கிறார். என்னதான் அவளது குடும்பம் அவளை ஏற்றுக்கொண்டாலும் அவள் கணவனிடம் அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயத்தைச் சொல்லவும் செய்கிறது. ஒரு பெண் அவளாக இருக்கவும், அவளுக்கான முடிவுகளை எடுக்கவும் யாரோ ஒருவர் சம்மதிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதைக் காட்டுகிறார்.
‘புருஷாமிருகம்’. இக்கதையில் தலைப்பே கதையைச் சொல்லிவிட்டாலும், தனது கதை சொல்லும் பாணியில் இச்சிறுகதையை எழுத்தாளர் வாசிக்க வைக்கத் தவறவில்லை. குடும்பத்தில் வாழும் பெண் சந்திக்கும் உடல் உளவியல் சிக்கலை பேசும் கதை. உண்மையில் யார்தான் அவள். பெண்ணா, உடலா, மனமா, மனுசியா எனகிற பல கேள்விகளை வாசகர் முன் வைக்கிறார்.
‘பெரீம்மா’ இச்சிறுகதை, எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ‘முள்’ என்ற சிறுகதையை நினைக்க வைத்தது. பெரீம்மாவின் மரணமும் அதைச்சுற்றியும் நடப்பதுதான் கதைக்களம். ஆனால் இக்கதையின் கடைசிப் பத்தி முழுக் கதையையும் வேறொரு இடத்திற்குக் கொண்டு சென்று ஜீரணிக்க முடியாத இடத்தில் வாசகனைக் கொண்டு நிறுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கடைசிப் பத்திவரை கதை ஒரு பரிணாமத்தையும், கடைசிப் பத்தி அதற்கு நேர்மாறான இன்னொரு பரிணாமத்தையும் கொடுக்கிறது. இக்கதையை நிராகரிக்க வேண்டிய இடத்திலும் இருக்கிறது அதே சமயத்தில் நிராகரிக்க முடியாத இடத்திலும் தன்னை நிறுத்திக் கொள்கிறது.
‘போக்கு’ இக்கதை என் தூக்கத்தைக் கெடுத்த கதை. ஒரு பெண்ணைத்தவிர வேறு யாரால் இக்கதையைச் சொல்லிவிட முடியும் எனத் தெரியவில்லை. மறைந்த மலேசிய அளுமையான எம்.ஏ.இளஞ்செல்வனின் ‘பாக்கி’ என்ற சிறுகதை இங்குப் பிரபலம். பல இடங்களில் அச்சிறுகதை மேற்கோள் காட்டப்பட்டது. பெண் தனது எல்லா வேலையையும் முடித்து அசந்து உறங்கத்தாயாராகும் சமயம் கணவன் தன் காலை மனைவி மீது போடுகிறான், இன்னும் இது பாக்கி இருப்பதாக மனைவி சொல்வதோடு கதை முடிந்துவிடும். இக்கதை எழுதப்பட்ட சமயத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கேள்விபட்டுள்ளேன். அதன் பிறகு கணவன் மனைவி உளவியில் சிக்கலை பேசும் பல கதைகள் வந்துவிட்டாலும் இக்கதை இன்னமும் பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
மனைவி என்பவள் ஆணுக்கு எப்போது தன் உடலைத் தருவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்கிற ஆண்களின் மனப்போக்கை பல கதைகளில் நாம் வாசித்திருப்போம். அது எப்படி முடியும் அவள் உடல் அவள் உரிமை எனப் பலர் முழக்கங்களையும் செய்கிறார்கள். இன்றளவும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.கிருத்திகாவும் அந்த இடத்தில் கதையைக் கொண்டு செல்கிறார். ஆனால் அவர் கதையைச் சொல்வதற்கு எடுத்துக்கொண்ட களம் முக்கியமான ஒன்று. மாதவிடாய் சிக்கலையும் அது தரும் உடல் வலியையும் மன உளைச்சலையும் ஆழமாகச் சொல்லியுள்ளார். அப்படிச் சொல்லிருந்ததால்தான் கணவன் கடைசியில் கேட்கும் ‘ரொம்ப நாளாச்சுடி’ என்ற வார்த்தை வாசகனுக்கும் கோவத்தைக் கொடுக்கிறது.
‘வெற்றிடம்’ கணவனின் வருகைக்கும் காத்திருக்கும் மனைவியின் கதை.
‘கூடடைதல்’ என்னும் கதை இன்றைய குடும்பச்சிக்கலை பேசியிருக்கும் கதை. ரொம்பவும் முக்கியமான கதையும் கூட. நடுத்தர வயதைத் தாண்டி குழந்தைகளுடன் வாழும் பெற்றோர் பற்றிய கதை. கத்தி மேல் நடப்பது மாதிரியான கரு என்றும் சொல்லலாம். நல்லவேளையாக அந்தப்பெண் தப்பித்தால் என வாசகனுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும் கதை. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதை என நான் நினைப்பதால் மேற்கொண்டு இக்கதை நான் சொல்வதைவிடவும் நீங்கள் வாசிப்பதே அவசியம்.
‘தாயக்கட்டைகள்’ யாரும் யாரையும் அவர்களாக மகிழ்ச்சியில் இருக்க விடுவதில்லை என நினைக்க வைத்த கதை.
‘தடம்’ கணவனை இழந்த கர்ப்பவதி மனைவியின் வாழ்க்கையைச் சொல்லும் கதை.
ஐ.கிருத்திகாவின் கதைகளை நகர்த்திச்செல்வது நம்மை ஆழ்ந்து வாசிக்க வைக்கிறது. தன்னைச்சுற்றி நடப்பதை ஆழ்ந்து அவதாணித்துக் கதைகளில் கொண்டு வந்துள்ளார். கதையினைச் சொல்லும் யுக்தியும் கவர்கிறது. பேசவேண்டிய விடயங்களைக் கதைகளாக மாற்றி வாசிக்க வைத்து அதிலிருந்து ஓர் உரையாடலுக்கு வழி வகுக்கின்றார். இச்சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்ததும் சிலரிடம் சில கதைகள் குறித்துப் பேசினேன். என்னுடைய தோழிகளுக்கு இவரின் கதைகளில் இவர் எடுத்துச் செல்லும் சிக்கலையும் இவரின் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் குறித்துப் பேசினேன். குறிப்பாக ‘கூடடைதல்’, ‘போக்கு’ கதைகளைக் கண்டிப்பாக வாசிக்கவும் சொல்லியுள்ளேன். இப்படியான சிறுகதைகளைக் கொடுத்த எழுத்தாளருக்கு அதுதான் எனது நன்றி.
இனி
வாசிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஐ.கிருத்திகாவையும் இணைத்துவிட்டேன்.
- தயாஜி
(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)