புத்தகசவாசிப்பு_2022_5 ' மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்'
மிஸ்டர் ஜூல்ஸுடன்
ஒரு நாள்
தலைப்பு – மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்
எழுத்து – டயான் ப்ரோகோவன்
தமிழாக்கம் – ஆனந்த்
வகை – குறுநாவல்
வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை
016 – 473 4794 (மலேசியா)
டயான் ப்ரோகோவன், ஃப்ளெமிஷ் எழுத்தாளர். அவரின் ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ என்னும் நாவல் உலகின் பல மொழிகளில் மொழியாக்கம் கண்டு அதிக வரவேற்பையும் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஜெர்மன் மொழியில் மட்டும் இந்நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.
வித்தியாசமான கதைக்களன் கொண்ட நாவல். இறந்துவிட்ட மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாளை கழிக்கிறார் அவர் மனைவி. எதிர்ப்பாராத மரணத்தை எதிர்க்கொள்வது என்பது தனிமையில் இருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல. என்னதான் அறிவார்ந்தவர்களாக இருந்தாலும் உடனடியாக ஒருவரின் இறப்பை ஏற்றுக்கொள்வது சிரமம்தான். அச்சிரமம் இந்நாவல் முழுவதும் வருகிறது. ஒரு கட்டத்தில் இருவர் இருக்கும் வீட்டில் நாமும் ஒரு நபராக நுழைந்துவிடுகிறோம்.
கணவரின் உடலை வீட்டில் வைத்தவாரே அவருடனான நினைவுகளில் அன்றைய நாளை கழிக்கிறார் மனைவி. அவை நல்ல நினைவுகள் மட்டுமல்ல, மனதை ரணப்படுத்தும் நினைவுகளும் வருகின்றன.
இறந்த மனிதனின் வீட்டில் எப்போதும் போல வருகிறான் டேவிட். டேவிட் ஆட்டிஸம் குறைபாடு உள்ள மாணவன். மிஸ்டர் ஜூல்ஸுடன் வழக்கம் போல சதுரங்கம் விளையாட வருகிறான். அவனால் அசைவற்று இருக்கும் மனிதரை புரிந்து கொள்ள முடியுமா, இறந்த கணவரின் உடலை என்னவென்று காட்டுவார் மனைவி என்கிற கேள்விகளுக்கு எதிர்ப்பாராத விதத்தில் பதிலை சொல்லிவிடுகிறார் எழுத்தாளர்.
நான் வாசித்து தமிழில் ஆட்டிஸம் குறைபாடு பற்றிய கதைகள் குறைவே (இல்லையென்றே தோன்றுகிறது). கவிதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. சினிமாவாக கார்ட்டூன்களாக கட்டுரைகளாக வந்திருக்கின்றன. ஆனால் புனைவு வெளிகளில் இன்னும் ஆழமாக அக்குறைபாடு பற்றிய அறிதல் கொடுக்கக்கூடிய கதைகள் இல்லை என்பது இந்நேரம் எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.
மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள், 71 பக்கங்களே கொண்ட குறுநாவல்தான். எளிதாக வாசித்து விடலாம் என்ற எண்ணமே இந்நாவலை எடுக்க வைத்தது. ஆனால் அதன் அடர்த்தியும் அதன் நகர்தலும் வாசிப்பைத் தாமதப்படுத்தியது. சில சமயம் என்ன கதை இது வெறுமனே உயிரற்ற உடலுடன் எத்தனை மணிநேரத்தை கடத்துவார் என யோசிக்க வைக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மனைவியின் துக்கம் நம்மையும் சூழ்ந்து கொள்கிறது.
‘அவள் யாரிடமும் சொல்லாதவரையில் அவர் இன்னும் இறந்து போகவில்லை’ என்று நாவலில் ஒரு வரியை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அதற்குள் இம்முழு நாவலையும் அடக்கிவிடலாம். சொல்லிவிடுவதற்கும் சொல்ல தயங்குவதற்கும் ஊடாக இருக்கும் மனப்போராட்டத்தை மனைவியின் மூலமாக வாசகர்களுக்கு ஏற்றிவிடுகிறார் நாவலாசிரியர்.
சில ஆண்டுகளுக்கு முன், ‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படம் வந்திருந்தது. காதலி இறந்துவிடுகிறாள். காதலன் மன அழுத்தம் தாங்காது அவள் உயிருடன் இருப்பதாக நினைத்து பிணத்தை தன் உடலில் கட்டிக்கொண்டு வாழ்வதற்கு ஓடுவான். காதலனின் பார்வையில் காதலி உயிரோடு இருப்பதாகவே தெரியும். இக்கதை அத்திரைப்படத்தை நினைக்க வைத்தது. ஆனால் இரண்டு மணி நேரத்தில் திரைப்படத்தைப் பார்த்து கடத்துவது போல. எளிதாக இந்நாவலை வாசித்து கடத்த இயலாது. அதுதான் இந்நாவலின் தனித்தன்மை. மனித மனங்களில் மாய வித்தையை அறிந்துள்ள எழுத்தாளரின் எழுத்தில் இந்நாவலை வாசிப்பது நமக்கு பயிற்சியாகவும் பயனாகவும் அமையும் என நம்புகிறேன்.
எந்த மனிதனும் இன்னொரு மனிதன் தனக்களித்த நினைவுகளை, தான் சாகும் வரையில் சுமந்திருக்கிறான். அதுவே அவனுக்கு, மீத வாழ்க்கையை வாழ்வதற்கான வேகத்தையும் அழுகையையும் கொடுக்கிறது.
- தயாஜி
(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)
0 comments:
கருத்துரையிடுக