அடையாளம் காணுதல்
என் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்னை சிதைக்க முயன்றவர்களிடமிருந்தும் என்னைச் செதுக்க கற்றுக்கொள்வதற்கு அதுதான் காரணம்.
எல்லாவற்றையும் எழுதி கடக்க முயன்றே எழுதிக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் பெரிய ஆறுதல் நீங்கள் என் எழுத்தை வாசிப்பதுதான். யாரோ ஒருவருக்கு ஒற்றைத்துளி நம்பிக்கையை அது விதைக்குமெனில் எனக்கு வேறென்ன வேண்டும்.
பொதுவாக இல்லாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் அழைப்பும் புலனச்செய்திகளும், என் எழுத்துகள் கண்டறிந்த வலியினை பலர் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த நியாயத்தின் மௌனத்தை அவர்கள் என் எழுத்தில் கண்டதாக சொல்கிறார்கள். யாரோ ஒருவரால் அந்த மௌனத்தின் பின்னனியை உணர முடிந்ததைச் சொல்லி கலங்கவும் செய்வார்கள்.
உங்களுக்கும் எனக்குமான இடைவெளியை எழுத்துகளால் நிரப்பிட முயன்று கொண்டே இருக்கிறேன்.
சிலர் மீது கோவம் இருக்கும் அதே சமயத்தில் அவர்கள் மீதான மரியாதையையும் வைத்திருப்பேன். சிலர் என்னதான் சீண்டிக்கொண்டிருந்தாலும் அவர்களைக் கண்டுக்கொள்ளவே மாட்டேன். சிலரை யாருக்காவும் விட்டுக்கொடுக்க முடியாது. சிலருடன் ஒட்டி உறவாட முடியாது.
எழுத்தில் எனக்கு அறிமுகமாகி எனக்கு மிகவும் நெருக்கமானவர். அண்ணன் என உரிமையுடன் அழைப்பவர்களில் ஒருவர் அண்ணன் ஸ்ரீதர் ரங்கராஜன். முக்கியமான மொழிபெயர்ப்பாளர். ஹருகி முரகாமியை நான் கண்டுகொண்டது இவரின் மொழியாக்கத்தில்தான். என் வாழ்வில் ஏற்பட்ட மனஉளைச்சலின் ஆதாரப்புள்ளியை அடையாளம் காட்டியப் படைப்பாளி. 'தொ பாரு தம்பி..' என அவர் ஆரம்பிக்கும் போது நான் கற்றுக்கொள்ள தயாராகிவிடுவேன்.
வல்லினம் பதிப்பகம் வெளியீடு செய்த எனது முதல் புத்தகமான 'ஒளி புகா இடங்களில் ஒளி' புத்தகத்தை செறிவாக்கம் செய்த இருவரில் தோழர் ம.நவீனும் அண்ணன் ஸ்ரீதரும் அடங்குவர். அப்புத்தகத்தை எனது பெற்றோர் வெளியீடு செய்ய ஸ்ரீதர் அண்ணன் தான் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
நூல் அறிமுகத்தையும் செய்தவர் அவர்தான்.
யாருக்கும் இதுவரை முழுமையாய் சொல்லாத விடயம் ஒன்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மனமொடிந்து வாழ்வை முடித்துக்கொள்ள நினைத்து கடைசி வார்த்தைகளை அவருக்குத்தான் அனுப்பினேன். உடனே என்னை அழைத்துப் பேசி, என் மனநிலையில் மாற்றத்தைக் கொடுத்து என் வாழ்வின் வழியை மடை மாற்றிவிட்டார்.
"தம்பி எல்லோரும் எழுதுவதையே நீயும் எழுதுவதாய் இருந்தால், நீ எழுத வேண்டாம். இன்னொருவர் எழுத முடியாத அனுபவமும் தேடலும் இருந்து நீ எழுதினால்தான் அது உனக்கான அடையாளமாய் மாறும். மறந்துவிடாதே"
என் அவர் சொல்லிய ஆலோசனையை ஒவ்வொரு முறையும் எழுதும் போதும் நினைத்துக்கொள்வேன்.
சமீபத்தில் வெள்ளைரோஜா பதிப்பகத்தை தொடங்கினேன். எங்கள் பதிப்பகத்தின் முதல் புத்தகமும் எனது இரண்டாவது புத்தகமுமான 'அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல - 101 குறுங்கதைகள்' புத்தகத்தை அவருக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தேன். பின்னர் அவரின் ஆலோசனையில் அடுத்த புத்தகத்திற்கான வேலையையும் தொடங்கினேன். அதுதான் எனது மூன்றாவது புத்தகமும் முதல் கவிதைத் தொகுப்புமான 'பொம்மி'.
சில நாட்களுக்கு முன் அண்ணன் ஸ்ரீதரை சந்தித்து 'பொம்மி' புத்தகத்தைக் கொடுத்தேன்.
அதோடு பலவற்றைப் பேசினோம். அதன் மையம் நாவல் எழுதுவது குறித்து அமைந்தது. நாவலுக்கு ஏற்றார்ப்போல என்னிடம் உள்ளவற்றை மெல்ல வெளி கொணர்ந்தார். எனக்கும் கூட அது ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சரி செய்திடலாம் என்கிற நம்பிக்கையும் வந்துள்ளது.
அவரைப் பற்றி இன்னும் கூட சொல்லலாம். அத்துணை முக்கியமானவர். இப்போது நம் அருகில் இருக்கிறார். பயன்படுத்திக்கொள்ளலாம். அவரின் மொழியாக்கங்களை வாங்கி வாசிக்கலாம்.
இதனை வாசிக்கும் நீங்கள் கூட என் வாழ்வில் ஏதாவதோர் பங்கினை செய்பவர்களாகத்தான் இருப்பீர்கள் என நம்புகிறேன். விரைவில் அதுபற்றியும் எழுதுவேன்.
0 comments:
கருத்துரையிடுக