பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புத்தகவாசிப்பு_2022 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகவாசிப்பு_2022 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் 12, 2022

புத்தகவாசிப்பு_2022_8_திமிரி


தலைப்பு – திமிரி

எழுத்து – ஐ.கிருத்திகா

வகை – சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு – எழுத்து பிரசுரம்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

 

எழுத்தாளர் ஐ.கிருத்திகாவை முகநூல் வழி அறிந்துகொண்டேன். அவ்வப்போது அவரது படைப்புகள் இணைய இதழ்களில் வாசிக்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில் அதிகமாகவே அவரது படைப்புகள் கண்ணில் பட ஆரம்பித்தன. அவ்வப்போது அவரது படைப்புகளை வாசித்துப் பேசியிருந்தாலும். புத்தகமாக வாசித்துப் பேசுவதில் ஒரு திருப்தி இருக்கிறது.

‘திமிரி’ , எழுத்தாளர் ஐ.கிருத்திகாவின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. இதற்கு முன், உப்புச்சுமை, நாய்சார் என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘திமிரி’ மொத்தம் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

ஒவ்வொரு சிறுகதையும் பெண்ணில் உலகத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. அவளின் அக உலகத்தையும் புற உலகத்தையும் இக்கதைகள் வழி நாம் நெருக்கமாக உணரலாம். அதோடு பெண்கள் மீது ஆண்களும் சமூகமும் வைக்கும் கட்டுப்பாடுகளையும் அதிகாரத்தையும் பேசுகிறது.

சிறுகதைகளுக்கு எழுத்தாளர் வைத்திருக்கும் தலைப்புகள் வசிகரித்தன. கதைகளை வாசிப்பதற்கு முன்னமே அத்தலைப்பிற்கான அர்த்தத்தைத் தேடவ வைக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு கதையாக வரிசையாக வாசித்துப்பழகிய எனக்கு ஒவ்வொரு தலைப்பாகத் தேர்ந்தெடுத்த வாசிக்க வைத்ததும் அதுதான்.

வாசித்த சில கதைகள்,வழக்கமான கதைகளாகவே தெரிந்தன. அக்கதைகளைப் பலரும் பலவாறாகச் சொல்லியுள்ளார்கள். அதைவிட நன்றாகவும் சொல்லக்கூடிய கதைகள் எனவும் தோன்றியது. ஆனால் அடுத்தடுத்த கதைகளை வாசிக்கையில் எழுத்தாளர் தன்னையும் தேர்ந்த எழுத்தாளர் இடத்தில் நிறுத்திக்கொண்டார். அவரால் எப்படி இக்கதைகளை எழுத முடிந்தது என வாசித்தப்பின் யோசிக்கவும் வைத்துவிட்டார்.

‘இருட்டில் ஒளிரும் ஆயிரம் கண்கள்’ கதையில் அம்மா தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் மகளுக்கும் ஏற்படக் கூடாது என நினைக்கிறார்.

‘எரி நட்சத்திரம்’ என்ற கதையில் காலாகாலத்தில் கல்யாணம் ஆகாத பெண்ணின் வாழ்க்கையைச் சொல்கிறார்.

‘கணை’ சிறுகதையில் திருமணத்திற்குப் பிறகு பெண் கர்ப்பவதி ஆகவேண்டுமென்று எதிர்ப்பார்த்து அதனையே அப்பெண்ணுக்கு ஒரு அவப்பேராகச் சுமத்த காத்திருக்கும் சமூகத்தைச் சொல்கிறார்.

‘கணல்’ சிறுகதையில் இன்றும்கூடப் பெண்ணுக்கு காதலிக்க இருக்கும் சுதந்திரம் காதலித்தவனையே திருமணம் செய்வதில் இல்லாததையும் ஜாதி அங்கொரு பெரும்தடையாக இருப்பதைக் காட்டுகிறார்.

‘கனவு’ சிறுகதையில் பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெண்கள் இழப்பது கொஞ்சநஞ்சமல்ல எனச் சொல்கிறார்.

‘கொண்டலாத்தி’ சிறுகதையில் பெண்ணின் மனம் எத்துணை விசித்திரமானது எனக் காட்டவும் தவறவில்லை.

‘சம்வாதம்’ என்னும் கதையில் வெளியூரில் வேலை செய்யும் பெண்ணைப் பற்றிப் பேசுகிறார். இத்தனை காலம் ஆண்கள் மட்டுமே வெளியூர் வேலைகளில் சிதைகிறார்கள் என வாசித்தும் கேட்டும் பழகியவர்களுக்கு இக்கதை பெண் சந்திக்கும் சிக்கலை எடுத்து சொல்லும். தன் உணர்வுக்கும் தன் பொறுப்பிற்கும் இடையில் சில பெண்கள் சிக்கி மூச்சு திணறுவதையை நன்றாகவே கதையாக்கியுள்ளார்.

‘திமிரி’ சிறுகதையில் கணவனை விட்டு பிரிந்து வாழும் பெண்ணைப் பற்றிச் சொல்கிறார். என்னதான் அவளது குடும்பம் அவளை ஏற்றுக்கொண்டாலும் அவள் கணவனிடம் அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயத்தைச் சொல்லவும் செய்கிறது. ஒரு பெண் அவளாக இருக்கவும், அவளுக்கான முடிவுகளை எடுக்கவும் யாரோ ஒருவர் சம்மதிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதைக் காட்டுகிறார்.

‘புருஷாமிருகம்’. இக்கதையில் தலைப்பே கதையைச் சொல்லிவிட்டாலும், தனது கதை சொல்லும் பாணியில் இச்சிறுகதையை எழுத்தாளர் வாசிக்க வைக்கத் தவறவில்லை. குடும்பத்தில் வாழும் பெண் சந்திக்கும் உடல் உளவியல் சிக்கலை பேசும் கதை. உண்மையில் யார்தான் அவள். பெண்ணா, உடலா, மனமா, மனுசியா எனகிற பல கேள்விகளை வாசகர் முன் வைக்கிறார்.

‘பெரீம்மா’ இச்சிறுகதை, எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் ‘முள்’ என்ற சிறுகதையை நினைக்க வைத்தது. பெரீம்மாவின் மரணமும் அதைச்சுற்றியும் நடப்பதுதான் கதைக்களம். ஆனால் இக்கதையின் கடைசிப் பத்தி முழுக் கதையையும் வேறொரு இடத்திற்குக் கொண்டு சென்று ஜீரணிக்க முடியாத இடத்தில் வாசகனைக் கொண்டு நிறுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கடைசிப் பத்திவரை கதை ஒரு பரிணாமத்தையும், கடைசிப் பத்தி அதற்கு நேர்மாறான இன்னொரு பரிணாமத்தையும் கொடுக்கிறது. இக்கதையை நிராகரிக்க வேண்டிய இடத்திலும் இருக்கிறது அதே சமயத்தில் நிராகரிக்க முடியாத இடத்திலும் தன்னை நிறுத்திக் கொள்கிறது.

‘போக்கு’ இக்கதை என் தூக்கத்தைக் கெடுத்த கதை. ஒரு பெண்ணைத்தவிர வேறு யாரால் இக்கதையைச் சொல்லிவிட முடியும் எனத் தெரியவில்லை. மறைந்த மலேசிய அளுமையான எம்.ஏ.இளஞ்செல்வனின் ‘பாக்கி’ என்ற சிறுகதை இங்குப் பிரபலம். பல இடங்களில் அச்சிறுகதை மேற்கோள் காட்டப்பட்டது. பெண் தனது எல்லா வேலையையும் முடித்து அசந்து உறங்கத்தாயாராகும் சமயம் கணவன் தன் காலை மனைவி மீது போடுகிறான், இன்னும் இது பாக்கி இருப்பதாக மனைவி சொல்வதோடு கதை முடிந்துவிடும். இக்கதை எழுதப்பட்ட சமயத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கேள்விபட்டுள்ளேன். அதன் பிறகு கணவன் மனைவி உளவியில் சிக்கலை பேசும் பல கதைகள் வந்துவிட்டாலும் இக்கதை இன்னமும் பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

மனைவி என்பவள் ஆணுக்கு எப்போது தன் உடலைத் தருவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்கிற ஆண்களின் மனப்போக்கை பல கதைகளில் நாம் வாசித்திருப்போம். அது எப்படி முடியும் அவள் உடல் அவள் உரிமை எனப் பலர் முழக்கங்களையும் செய்கிறார்கள். இன்றளவும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஐ.கிருத்திகாவும் அந்த இடத்தில் கதையைக் கொண்டு செல்கிறார். ஆனால் அவர் கதையைச் சொல்வதற்கு எடுத்துக்கொண்ட களம் முக்கியமான ஒன்று. மாதவிடாய் சிக்கலையும் அது தரும் உடல் வலியையும் மன உளைச்சலையும் ஆழமாகச் சொல்லியுள்ளார். அப்படிச் சொல்லிருந்ததால்தான் கணவன் கடைசியில் கேட்கும் ‘ரொம்ப நாளாச்சுடி’ என்ற வார்த்தை வாசகனுக்கும் கோவத்தைக் கொடுக்கிறது.

‘வெற்றிடம்’ கணவனின் வருகைக்கும் காத்திருக்கும் மனைவியின் கதை.

‘கூடடைதல்’ என்னும் கதை இன்றைய குடும்பச்சிக்கலை பேசியிருக்கும் கதை. ரொம்பவும் முக்கியமான கதையும் கூட. நடுத்தர வயதைத் தாண்டி குழந்தைகளுடன் வாழும் பெற்றோர் பற்றிய கதை. கத்தி மேல் நடப்பது மாதிரியான கரு என்றும் சொல்லலாம். நல்லவேளையாக அந்தப்பெண் தப்பித்தால் என வாசகனுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும் கதை. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதை என நான் நினைப்பதால் மேற்கொண்டு இக்கதை நான் சொல்வதைவிடவும் நீங்கள் வாசிப்பதே அவசியம்.

‘தாயக்கட்டைகள்’ யாரும் யாரையும் அவர்களாக மகிழ்ச்சியில் இருக்க விடுவதில்லை என நினைக்க வைத்த கதை.

‘தடம்’ கணவனை இழந்த கர்ப்பவதி மனைவியின் வாழ்க்கையைச் சொல்லும் கதை.

ஐ.கிருத்திகாவின் கதைகளை நகர்த்திச்செல்வது நம்மை ஆழ்ந்து வாசிக்க வைக்கிறது. தன்னைச்சுற்றி நடப்பதை ஆழ்ந்து அவதாணித்துக் கதைகளில் கொண்டு வந்துள்ளார். கதையினைச் சொல்லும் யுக்தியும் கவர்கிறது. பேசவேண்டிய விடயங்களைக் கதைகளாக மாற்றி வாசிக்க வைத்து அதிலிருந்து ஓர் உரையாடலுக்கு வழி வகுக்கின்றார். இச்சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்ததும் சிலரிடம் சில கதைகள் குறித்துப் பேசினேன். என்னுடைய தோழிகளுக்கு இவரின் கதைகளில் இவர் எடுத்துச் செல்லும் சிக்கலையும் இவரின் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் குறித்துப் பேசினேன். குறிப்பாக ‘கூடடைதல்’, ‘போக்கு’ கதைகளைக் கண்டிப்பாக வாசிக்கவும் சொல்லியுள்ளேன். இப்படியான சிறுகதைகளைக் கொடுத்த எழுத்தாளருக்கு அதுதான் எனது நன்றி.

இனி வாசிக்க வேண்டியவர்கள் பட்டியலில் ஐ.கிருத்திகாவையும் இணைத்துவிட்டேன்.


- தயாஜி

 

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

பிப்ரவரி 10, 2022

புத்தகவாசிப்பு_2022_6 'பா.வெங்கடேசன் கதையும் புனைவும்'

பா.வெங்கடேசன் கதையும் புனைவும்
தலைப்பு – பா.வெங்கடேசன் கதையும் புனைவும் (புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்)
எழுத்து – த.ராஜன், பா.வெங்கடேசன்
நேர்காணல் – த.ராஜன்
வகை – நேர்காணல்
வெளியீடு – எதிர் வெளியீடு
நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)


    புத்தகம் குறித்து பேசுவதற்கு முன்பாக சிலவற்றை தெளிவுபடுத்த வேண்டுமென நினைக்கிறேன். ஏனெனில் இந்த புத்தகத்தைப் பற்றியும் பா.வெங்கடேசன் பற்றியும் சிலருடன் பேசும் பொழுது வேள்பாரியை படித்தது குறித்து பேசினார்கள். எழுத்தாளரின் பெயரில் ஏற்பட்ட குழப்பமாக மட்டுமே இதனைப் பார்க்க முடியவில்லை. புத்தகங்களை வாசிக்காமல் யார்யாரோ சொல்வதை அரைகுறையாகக் கேட்டுப்பேசுவதால் ஏற்பட்ட சிக்கலாகவும் பார்க்கிறேன்.
 
    அதற்காகவேணும் பா.வெங்கடேசன் குறித்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
 
    பா.வெங்கடேசன், முக்கியமானத் தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை என்று பல தளங்களில் செயலாற்றுபவர். ‘ராஜன் மகள்’, ‘தாண்டவாரயன் கதை’, ‘பாகீரதியின் மதியம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
 
    ஒரிஜினல் நியூஸ் ரீல் சிறுகதைகள் இவரின் சிறுகதைத் தொகுப்பு. 1996-ஆம் ஆண்டுவாக்கில் வெளிவந்தது. பல ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இவ்வாண்டு (2022) அச்சில் வந்துள்ளது.
 
    இன்னும் சில வீடுகள், எட்டிப்பார்க்கும் கடவுள், நீளா ஆகியவை   இவரின் கவிதைத்தொகுப்புகள்.
 
    ராஜன் மகள், பகீரதியின் மதியம், வாரணாசி, தாண்டவராயன் கதை போன்றவை இவரின் புதினங்கள் ஆகும்.
 
    பா.வெங்கடேசனின் எழுத்து பற்றி சொல்லும் போது; தான் எடுத்துக்கொண்ட  புனைவுப் பரப்பைத் தன்னுடைய அசாத்தியமான கற்பனையாலும் தீவிரமான சொல்முறையாலும் பிரம்மாண்டமாக்கும் கதைசொல்லி.
இனி புத்தக பற்றிய வாசிப்பு அனுபத்திற்கு செல்வோம்.
 
    சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் என்னை சிரமத்தில் ஆழ்த்திய புத்தகம். எடுத்த வேகத்தில் வாசிக்க முயன்றும், பல இடங்களில் தடுமாறவே செய்தேன். தொடர்ந்து புனைவுகளை வாசித்தும் எழுதியும் பேசியும் வருவதால் அ-புனைவைச் சட்டென உள்வாங்க முடியவில்லை. ஆனால், மெல்ல மெல்ல இலக்கிய வாசிப்பு குறித்த வேறொரு பார்வையை இந்நூல் கொடுத்தது.
 
    கெட்டி அட்டையில் 150 பக்கங்களில் நேர்த்தியாக இந்நூலை எதிர் வெளியீடு , வெளியிட்டுள்ளார்கள். முழுக்கவும் பா.வெங்கடேசனின் நேர்காணல். மூன்று பகுதிகளாக நூலின் பகுதிகளைப் பிரித்திருக்கிறார்கள்.
 
    முதல் பகுதியை புனைவும் கற்பனையும் என்றும், இரண்டாவது பகுதியை புனைவாக்கச் செயல்பாடு என்றும் மூன்றாவது பகுதியை வாசிப்பும் அரசியலும் என்று பிரித்திருக்கிறார்கள்.
 
    த.ராஜன் எழுதியிருக்கும் முன்னுரையில் இப்புத்தகத்தின் அவசியமும் அதற்கான உழைப்பையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ‘சில வார்த்தைகள்’ என்ற தலைப்பில் நேர்காணலுக்கு முன்பாக பா.வெங்கடேசன் சிலவற்றை எழுதியுள்ளார். அவ்வுரை இப்புத்தகத்தை வாசிப்பதற்கு நம்மை தயார் செய்கிறது. ‘இங்கே உரையாடலுக்கு எடுத்துக்கொண்டிருப்பது புனைவாக்கத் தொழில்நுட்பத்தின் கருத்தாக்கரீதியான பின்புலத்தைப் புரிந்துகொள்ளும் சில வழிமுறைகளை மட்டும்தான்’ என்று அவர் கூறுவதிலிருந்து இதனை நாம் புரிந்துகொள்ளலாம்.
 
    பா.வெங்கடேசனின் எழுத்துகளை இதுவரையில் வாசிக்காததும் இந்நூலை வாசிப்பதில் எனக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு ஒரு வகையில் காரணம்தான். ஆனால் வாசிக்க வேண்டிய முக்கிய புனைவாளர் என்பதில் மாற்று கருத்து இல்லை என்பதே இந்த அ-புனைவு நமக்கு நினைவூட்டுகிறது.  
 
    த.ராஜனின் கேள்விகளுக்கு பா.வெங்கடேசன் கொடுக்கும் பதில்கள் சில இடங்களின் நமக்கு குழப்பத்தைத் தருகின்றன. எப்படி தெளிவு பெறலாம் என யோசித்து தொடர்ந்து வாசிக்கையில், அடுத்த கேள்வியை நம் ஐயத்தைப் பற்றியதாகத்தான் கேட்டிருக்கிறார் த.ராஜன். ஒரு வாசகனுக்கு எவ்விடத்தில் குழப்பம் ஏற்படும், எவ்விடத்தில் வாசகனுக்கு மேலதிக விளக்கம் வேண்டும் என்பதை நன்கு அறிந்து இந்த நேர்காணல் தொகுக்கப்பட்டிருக்கிறது.
 
    எது கற்பனை அது எப்படி புனைவாக மாறுகிறது என விளக்கும் பா.வெங்கடேசனின் பதில் நம்மையும் யோசிக்கத்தான் வைக்கிறது. அதனை சுருக்கமாக ‘ கதை நாம் எப்படி இருக்கிறோம் என்பதைச் சொல்கிறதென்றால் ஒரு ‘புனைவு’ நாம் எப்படியெல்லாம் இருக்க சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை உணரவைக்கிறது’ என்கிறார்.
 
    நாம் வாசிக்கும் பிரதியில், எழுத்தாளரின் பேனா மையில் யார் கதை சொல்கிறார் என்பதை கண்டறிவது அரசியல் வாசிப்பின் நோக்கம் என்கிறார். வாசிப்பும் அரசியலும் என்கிற மூன்றாவது பகுதியில் இது பற்றி விரிவாக உரையாடியுள்ளார்கள்.
 
    மேற்கொண்டு நாம் புரிந்து கொள்வதற்காக இதர படைப்பாளிகளின் படைப்புகளையும் நமக்கு அறிமுகம் செய்து தேடலை ஏற்படுத்துக்கிறார். குறிப்பாக, ஜெயகாந்தனின் சிறுகதையான  ‘அக்கினிப் பிரவேசம்’ பிற்பாடு விரிந்து அவரே எழுதிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவலாக எப்படி மாறியிருக்கிறது என சொல்லுமிடம் நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.
 
    புனைவு குறித்த உங்களது அபிப்பராயங்களை மறுபரிசீலிக்கவும் ; உங்களது வாசிப்பையும் எழுத்தையும் மெருகூட்டவும் இந்தப் புத்தகம் கொஞ்சமேனும் உதவும் என்கிறார் நேர்காணல் கண்ட த.ராஜன். அவர் சொல்வது உண்மைதான் ஆனால் அது கொஞ்சமல்ல என்பது வாசித்து முடித்ததும் தோன்றுகிறது.
 
    ஒற்றை  வாசிப்பில் பெற்றதைவிட மீள் வாசிப்பில் இன்னும் பலவற்றை அறிந்து கொள்ளும் அனைத்து சாத்தியங்களைக் கொண்ட புத்தகமாக ‘பா.வெங்கடேசன் கதையும் புனைவும்’ புனைவாக்கம் குறித்து ஓர் உரையாடல்) என்பதில் சந்தேகமில்லை.
 
- தயாஜி
 
(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

பிப்ரவரி 03, 2022

புத்தகசவாசிப்பு_2022_5 ' மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்'

மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்

தலைப்பு – மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்

எழுத்து – டயான் ப்ரோகோவன்

தமிழாக்கம் – ஆனந்த்

வகை – குறுநாவல்

வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

 

டயான் ப்ரோகோவன், ஃப்ளெமிஷ் எழுத்தாளர். அவரின் ‘மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள்’ என்னும் நாவல் உலகின் பல மொழிகளில் மொழியாக்கம் கண்டு அதிக வரவேற்பையும் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. ஜெர்மன் மொழியில் மட்டும் இந்நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

வித்தியாசமான கதைக்களன் கொண்ட நாவல்.  இறந்துவிட்ட மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாளை கழிக்கிறார் அவர் மனைவி. எதிர்ப்பாராத மரணத்தை எதிர்க்கொள்வது என்பது தனிமையில் இருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல. என்னதான் அறிவார்ந்தவர்களாக இருந்தாலும் உடனடியாக ஒருவரின் இறப்பை ஏற்றுக்கொள்வது சிரமம்தான். அச்சிரமம் இந்நாவல் முழுவதும் வருகிறது. ஒரு கட்டத்தில் இருவர் இருக்கும் வீட்டில் நாமும் ஒரு நபராக நுழைந்துவிடுகிறோம்.

கணவரின் உடலை வீட்டில் வைத்தவாரே அவருடனான நினைவுகளில் அன்றைய நாளை கழிக்கிறார் மனைவி. அவை நல்ல நினைவுகள் மட்டுமல்ல, மனதை ரணப்படுத்தும் நினைவுகளும் வருகின்றன.

இறந்த மனிதனின் வீட்டில் எப்போதும் போல வருகிறான் டேவிட். டேவிட் ஆட்டிஸம் குறைபாடு உள்ள மாணவன். மிஸ்டர் ஜூல்ஸுடன் வழக்கம் போல சதுரங்கம் விளையாட வருகிறான். அவனால் அசைவற்று இருக்கும் மனிதரை புரிந்து கொள்ள முடியுமா, இறந்த கணவரின் உடலை என்னவென்று காட்டுவார் மனைவி என்கிற கேள்விகளுக்கு எதிர்ப்பாராத விதத்தில் பதிலை சொல்லிவிடுகிறார் எழுத்தாளர்.

நான் வாசித்து தமிழில் ஆட்டிஸம் குறைபாடு பற்றிய கதைகள் குறைவே (இல்லையென்றே தோன்றுகிறது). கவிதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. சினிமாவாக கார்ட்டூன்களாக கட்டுரைகளாக வந்திருக்கின்றன. ஆனால் புனைவு வெளிகளில் இன்னும் ஆழமாக அக்குறைபாடு பற்றிய அறிதல் கொடுக்கக்கூடிய கதைகள் இல்லை என்பது இந்நேரம் எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.

மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள், 71 பக்கங்களே கொண்ட குறுநாவல்தான். எளிதாக வாசித்து விடலாம் என்ற எண்ணமே இந்நாவலை எடுக்க வைத்தது. ஆனால் அதன் அடர்த்தியும் அதன் நகர்தலும் வாசிப்பைத் தாமதப்படுத்தியது. சில சமயம் என்ன கதை இது வெறுமனே உயிரற்ற உடலுடன் எத்தனை மணிநேரத்தை கடத்துவார் என யோசிக்க வைக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் அந்த மனைவியின் துக்கம் நம்மையும் சூழ்ந்து கொள்கிறது.

‘அவள்  யாரிடமும் சொல்லாதவரையில் அவர் இன்னும் இறந்து போகவில்லை’ என்று நாவலில் ஒரு  வரியை எழுதியிருக்கிறார் ஆசிரியர். அதற்குள் இம்முழு நாவலையும் அடக்கிவிடலாம். சொல்லிவிடுவதற்கும் சொல்ல தயங்குவதற்கும் ஊடாக இருக்கும் மனப்போராட்டத்தை மனைவியின் மூலமாக வாசகர்களுக்கு ஏற்றிவிடுகிறார் நாவலாசிரியர்.

          சில ஆண்டுகளுக்கு முன், ‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படம் வந்திருந்தது. காதலி இறந்துவிடுகிறாள். காதலன் மன அழுத்தம் தாங்காது அவள் உயிருடன் இருப்பதாக நினைத்து பிணத்தை தன் உடலில் கட்டிக்கொண்டு வாழ்வதற்கு ஓடுவான். காதலனின் பார்வையில் காதலி உயிரோடு இருப்பதாகவே தெரியும். இக்கதை அத்திரைப்படத்தை நினைக்க வைத்தது. ஆனால் இரண்டு மணி நேரத்தில் திரைப்படத்தைப் பார்த்து கடத்துவது போல. எளிதாக இந்நாவலை வாசித்து கடத்த இயலாது. அதுதான் இந்நாவலின் தனித்தன்மை. மனித மனங்களில் மாய வித்தையை அறிந்துள்ள எழுத்தாளரின் எழுத்தில் இந்நாவலை வாசிப்பது நமக்கு பயிற்சியாகவும் பயனாகவும் அமையும் என நம்புகிறேன்.

எந்த மனிதனும் இன்னொரு மனிதன் தனக்களித்த நினைவுகளை, தான் சாகும் வரையில் சுமந்திருக்கிறான். அதுவே அவனுக்கு, மீத வாழ்க்கையை வாழ்வதற்கான வேகத்தையும் அழுகையையும் கொடுக்கிறது.  

- தயாஜி


(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

ஜனவரி 14, 2022

புத்தகவாசிப்பு 2022_3 அகரமுதல்வனின் முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு

முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு

தலைப்பு – முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு

எழுத்து – அகரமுதல்வன்

வகை – சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)


விரும்பி யாரும் மன உளைச்சலை நாடுவார்களா? இயலாமையின் பைத்தியத்திற்கு மிக அருகில் சென்று திரும்பதான் யாரும் தயாராவார்களா? இவ்வளவு ஏன் மனிதர்கள் எத்துணை மோசமானவர்கள் என தேடித்தேடி அறிந்து கொண்டு வருந்தி வீழ முயல்வார்களா? அப்படித்தான் இருக்கிறது அகரமுதல்வனின் கதைகள்.

சிலர் என்னிடம் அவர்களின் சிறுகதைகளை வாசிக்கச்சொல்லிக் கேட்பார்கள். வாசித்து  சொல்லும்  பொழுது அவை வெறும் சம்பவங்கள்தான் கதைகளாக  மாறவில்லை என்பேன். அதன்  பிறகே  இது  என்  பக்கத்து வீட்டில் நடந்த கதை,  எதிர்த்த வீட்டில் நடந்த கதை என சொல்வார்கள். இப்படி நாம் கேட்டும் பார்த்தும் உணரும் சம்பவங்களைக் கதைகளாக்குவது  எளிதல்ல என்பது நமக்கு தெரியும்.  அப்படி தன் கண் முன்னே சிதைந்த நம்மினத்தின் வரலாற்றின் இரத்தக்குருதியைக்  கதைகளில் எழுதி  ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்லும் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார் அகரமுதல்வன்.

கதைகளில் வாதையினை எழுத சிரமப்படும் கைகளுக்கு மத்தியில் நம்மினத்தின் ஒட்டுமொத்த வாதையையும் சிதைவுகளையும் சின்னாபின்னங்களையும் தொடர்ந்து எழுதிவரும் அகரமுதல்வனின் கைகளுக்கு என் கண்ணீர்த்துளிகளை படரவிடுகிறேன். நான் எவ்வளவு பலவீனமானவன் என்பதை, அழவே மாட்டேன் என்கிற கட்டுகளை இவரின் கதைகள் உடைத்துவிடுகின்றன. கண்முன்னே வாதைகளை நடத்திக் காட்டுகின்றன. வாசகனையும் அதில் ஒருவனாக மாற்றிவிட்டு கதையை முடிகின்றன. அவர் எழுதி முடித்த கதையின் கடைசி வாக்கியத்தில் இருந்து அக்கதை நம் மனதில் விரிந்து செல்கிறது.

எழுத்தாளர் அகரமுதல்வனை  அவரின் முதல்  சிறுகதைத் தொகுப்பான ‘இரண்டாம் லெப்ரிணன்ட்’ புத்தகம் மூலமாக வாசித்து அறிந்து கொண்டேன். அச்சிறுகதைகள் பற்றி எழுதிய என் வாசிப்பு அனுபவத்தில் இதுவரையில் இல்லாத வாக்கியக் குழப்பங்கள், பிழைகள் என இருப்பதை கண்டேன். அதனாலேயே  அதிக நேரம் எடுத்து அந்த கட்டுரையைப் பகிர்ந்தேன். ஏனெனின் அக்கதைகள் என்னை என் இயல்பிலிருந்தும் என் இருத்தலில் இருந்தும் இடம் பெயர்த்துவிட்டன.  மீண்டு வர அதிக நேரம் எடுத்தது. வீட்டில் அச்சிறுகதைகளைப் பற்றி பேசிப்பேசியே என் மன உளைச்சலில் இருந்து மீண்டேன்.

ஏன் “இப்படி எழுதறீங்க?” என வழக்கமான பொது வாசிப்பில் இருந்து வரும் கேள்விகளைப் புறக்கணித்து, எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறோம் என்கிற ஆவணங்களாக இதனை அடுத்த தலைமுறைக்கு (இத்தலைமுறைக்குக் கூட முழுமையாக புரிந்ததா என தெரியவில்லை), அடுத்த தலைமுறைக்காவது கொண்டு செல்ல வேண்டும். எப்படி இருந்தோம் தெரியுமா என்கிற பழம் பெறுமையின் குளிர்ச்சியில் இருந்து, எப்படியெல்லாம் வதைக்கப்பட்டோம் என்கிற இரத்தச்சூட்டை காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு அகரமுதல்வனின் எழுத்துகள் நம்மை தள்ளிவிடுகின்றன.

இப்படியெல்லாம் இருந்தும் கூட ஏன் மீண்டும் அகரமுதல்வனை வாசிக்க வேண்டும். ஏன் அவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பையும் வாசிக்க வேண்டும் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். பதில் தெரியவில்லை. ஒருவேளை ஒவ்வொரு கதையிலும் வந்து போகும் மனிதனுக்காக சில நிமிடங்கள் மௌன அஞ்சலியையும் சில கண்ணீர் துளிகளையும் கொடுப்பதற்காக இருக்கலாம்.

அகரமுதல்வனின் படைப்புகள் குறித்தும் பொதுவாகவே இலங்கை படைப்பாளிகள் மீதான மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் மறுத்துப்பேசவும் புறக்கணித்து ஓடவும் முடியாத எழுத்துகள் அகரமுதல்வனுடையது.

‘முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு’ சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள் என்றழைக்க வேண்டிய  பெரும் வதைகள் அடங்கியுள்ளன.

 

1.   மரணத்தின் சுற்றிவளைப்பு

‘நான் என்ன செய்யப்போகிறேன் என்று எண்ணுவதை விடுத்து என்னை என்ன செய்யப்போகிறார்கள் என யோசிக்கும் ஒரு காலத்தில் உயிர்வாழ்வது அவமானம்’ என்னும் வரி இக்கதையில் வருகிறது. போர்க்களத்தில் தொலைந்த, உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்ற நிலையில் இருக்கும் காதலி நித்திலாவிற்கு அன்பு எழுதும் கடிதம். ஒரு காதல் கடிதத்தில் என்னவெல்லாம் இருக்கும் என நாம் அறிந்ததிலிருந்து இன்னொன்றைச் சொல்கிறார் ஆசிரியர்.

2.   திருவளர் ஞானசம்பதன் 

எல்லாவற்றையும் இழந்த பின் முகாமில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம் சாவதற்குக்கூட அதிஷ்டம் அற்றவர்கள் என சொல்லும் கதை.

3.   சர்வ வியாபகம் 

போராளியின் வாழ்வின் ஒருவர் எதிர்க்கொள்ளும் சிக்கலைச் சொல்லும் கதை. நம்பிக்கை என்பதும் எதார்த்தம் என்பதும் வேறு வேறானவை என ஆசிரியர் சொல்வதற்கு காரணம் இல்லாமலில்லை

4.   கிழவி 

முகாமில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ப்படுகிறார்கள் பாட்டியும் (கிழவி) பேத்தியும் அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார்கள். இதற்கிடையில் அவர்களும் மற்றவர் போல இறந்துவிட்டார்கள் என சொல்லிவிட்டு கதையை மேற்கொண்டு நகர்த்திக்காட்டுகிறார் ஆசிரியர். அவர்கள் இறந்தார்களா இல்லையா என்பதைவிட அவர்கள் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என நம்மையும் எதிர்ப்பார்க்க வைக்கிறார்.

 இக்கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். பாட்டியும் பேத்தியும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்றே நினைக்க வைக்கிறது. அவர்கள் தப்பிக்க நினைப்பது எதிலிருந்து? மருத்துவமனையில் இருந்தா, இராணுவத்திடமிருந்தா இல்லை இந்த உயிரில்  ஒட்டிக்கொண்டிருக்கும் உடலில் இருந்துதான்  என்கிற அவலத்தை எப்படி மறுப்பது.

5.   நிலமதி 

என்னை அழவைத்தக் கதை. ஒரு நாள் முழுக்க என்னை தூங்கவிடாமல் செய்த கதை. போருக்கு செல்லும் அரசன் தன்  அரசிக்கு கடைசியாக சில வார்த்தைகள் சொல்லும் கதைகளை யாரோ சொல்லி கேட்டிருப்போம். இந்நவீன சூழ்ச்சிகள் நிறைந்த உலகில் அதுவே தன்னை மீள் உருவாக்கம் செய்கிறது. போருக்கும் மரணத்திற்கு ஒப்புக்கொடுத்த உயிரிலும் உடலிலில் இருக்கும் இதயம் சுமக்கும் காதல் கதை.  அதிகமான இடங்களைக் கோடிட்டு வாசித்த கதை இதுதான். வேன்ற காதலும் தோற்ற காதலும் காவியங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் மறக்கவேக் கூடாத போராளிகளின் காதை கதை இது.

 6.   முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு 

யார் இந்த முதஸ்தபா, ஏன் சுட்டுக்கொல்கிறார்கள். என்னதான் நடந்தது என சொல்லும் கதை. முஸ்தபாவை எப்போதும் சுமந்து கொண்டிருப்பவனே, முஸ்தபாவிற்கு ஏதுமென்றால் துடித்துப்போகிறவனே முஸ்தபாவைக் கொல்ல என்ன காரணம். இங்கு முஸ்தபா என்றழைக்கப்படுவதற்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம். யாரோ போடும் வெடிகுண்டால் சிதறிச்சாவதற்காகா வாழ்கிறார்கள்.

7.   பிரேதங்கள் களைத்து அழுகின்றன 

இனிமையும் இளமையும் கொண்ட இரு காதலர்களின் கட்டிலில் தொடங்கிய கதை, போராளிகளான அக்கா மாமாவின் தற்கொலையில் முடிகிறது.

8.   பிட்டிப் பூசை 

யுத்த மண்ணில் தன்னை ஏதோ நம்பிக்கையில் பிடித்துக் கொள்ளும் காதல் கதை.

9.   பெய்துக்கொண்டிருக்கும் மழை 

யுத்தம் மீதும் போராளிகள் மீதும் மாற்றுக்கருத்துகள் இல்லாமலில்லை. தன் கதைகளை அதனையும் இணைத்தே ஆவணம் செய்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர். இதுவும் காதல் கதைதான் ஆனால் காதலை மட்டுமே பேசவில்லை.

    10.     தேடியலையும் நள்ளிரவு

கதையின் முடிவு முழு கதையின் போக்கையும் மாற்றிக்காட்டுகிறது. காணாமல் போகும் மனப்பிறழ்வானன் ஏன் கல்லறையில் கண்ணுறங்குகிறான் என்கிற கேள்வி கதையை வாசித்து முடித்தும் கூட விடைக்காகத் தேடிக்கொண்டிருக்கிறது.

     நிறைவாக; போர் பற்றிய பல ஆவணங்கள் போலவே, போருக்கு பிந்திய வேதனைகளையும் ஆவணங்களாக்க வேண்டும் என்கிற முனைப்பு அகரமுதல்வனின் எழுத்தில் இருக்கின்றன. ‘போராளிகள் இப்போது முகாம்களில் மறுவாழ்விற்காக காத்திருக்கிறார்கள்’ என்று சொல்லி எல்லாவற்றையும் மூடி மறைக்கும் அரசியல் பிரச்சார பீரங்கிகள் மீது தத்தம் சீழ்பிடித்த மரணத்தை தூக்கியடிக்க வேண்டிய கட்டாயத்தை எற்படுத்துகின்ற இக்கதைகள்.

 - தயாஜி

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்

 

 

ஜனவரி 07, 2022

புத்தகவாசிப்பு 2022_2 அசோகமித்திரனின் 'அமானுஷ்ய நினைவுகள்'

அமானுஷ்ய நினைவுகள்

தலைப்பு – அமானுஷ்ய நினைவுகள்

எழுத்து – அசோகமித்திரன்

வகை – சிறுகதைத் தொகுப்பு

வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம்

நூல் வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016 – 473 4794 (மலேசியா)

 

அசோகமித்திரன் எனக்கு பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர்.  அவரின் ‘பிரயாணம்’ சிறுகதையை இன்றும் பல கோணங்களில் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்களிடம் விவாதித்துக் கொண்டும் இருக்கிறேன். முடிவற்ற முடிவை அச்சிறுகதை தன்னகத்தே போத்தியிருப்பதாகவே எப்போதும் தோன்றும்.

‘அமானுஷ்ய நினைவுகள்’. அசோகமித்திரன் எழுதிய கடைசிக் கதைகள் இவை என இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த சொல்லாடலில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. ஏனெனில் ஆளுமைக் கொண்ட எழுத்தாளரின் படைப்பானது காலமாற்றம் காணக்காண தன்னைத்தானே பல சாத்தியங்கள் கொண்ட கதைகளாக மாற்றிக் கொள்கின்றன என நம்புகிறவன் நான். அதுவே புதிய தலைமுறை வாசிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களும் கூட அப்படைப்புகளைத் தேடி வாசித்து அது குறித்த உரையாடலை மேற்கொள்ள வைக்கிறது. இந்தத் தொகுப்பில் மொத்தம் ஏழு சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஏழும் ஏழு வகையான கதையாக இருக்கிறது.  விஷால் ராஜாவின் முன்னுரையும் அசோகமித்திரன் படைப்புகள் எதை நோக்குகின்றன என கோடிட்டுக் காட்டுகிறது.

1.    ஒரு மாஜி இளவரசனின் கவிதை வேட்கை

    தலைப்பில் இருந்தே இக்கதை தொடங்குவதாக தோன்றியது. தலைப்பை மறந்து இக்கதையை வாசிப்பது சிரமம்தான் போலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.  யார் அந்த மாஜி இளவரசன் ஏன் கவிதை எழுத வேட்கை கொள்கிறான் என சொல்லப்படும் கதையில் உண்மையில் அந்த மாஜி இளவரசன் நம்முள்தான் இருக்கிறானோ என யோசிக்க வைக்கும்படிக்கு கதையை முடித்திருக்கிறார்.

2.    அமானுஷ்ய நினைவுகள்

அப்பாவை இழந்த இளைஞனின் வாழ்க்கை.  அப்பா  எப்போது தேவைப்படுகின்றார்  என யோசிக்க வைக்கிறது. நாம் ஒவ்வொருவருக்கும் அமானுஷ்ய அனுபவம் ஏதோ ஒரு வயதில் ஏற்பட்டிருக்கும். பேயோ பிசாசோ அது எப்படித்தான் இருக்கும் என பேசியும் இருப்போம். இச்சிறுகதை அக்களத்தைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.

3.    துரோகங்கள்

    எனக்கு மிகவும் பிடித்துவிட்ட கதை. துரோகங்கள் என்பது நாம் ஒருவருக்கு நேரடியாக செய்வது மட்டுமல்ல என சொல்லும் கதை. நாம் நம்பும் ஒன்று கூட நாம் நேசிப்பவர்களுக்கு பெரியத் துரோகமாக மாறிவிட வாய்ப்புள்ளதை நினைவுப்படுத்துகிறது. காலேஜ் வயதில் காணாமல் போகும் அல்லது  தான்  தொலைத்தக் காதலியை தன் அறுபதாவது வயதைக் கடக்கும் பொழுது  கண்டு பிடிக்கிறார் நீலகண்டன். அப்போது அவருக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். அந்த பெண்ணோ தன் காதலின் நினைவாகவே இத்தனைக்காலம் வாழ்ந்திருக்கிறார். ‘சீதை ஒரு வருடம் ராமனுக்குக் காத்திருந்தாள்: ரஞ்சினி நாற்பது வருடங்கள் காத்திருக்கிறாள்’ என ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார் அசோகமித்திரன். இக்கதை அந்த வாக்கியத்தின் நீட்சிதான். 

    ஆனாலும் நீலகண்டன் மீது நமக்கு கோவம் வரவில்லை.  காதலிக்கும் பெண்ணின் அப்பா சொன்ன வார்த்தையை நம்பியப் பாவத்தின் சம்பளம்தான் மிகப்பெரிய துரோகியாக்கியிருக்கிறது.  ஆனால் ரஞ்சினிக்கு அப்படியல்ல. “உன் மகன், மகள், பெரியவங்க. அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க. நீ உன் பொண்டாட்டியை அழைத்துக்கிட்டு இங்க வந்திடு” என   ரஞ்சினி நீலகண்டனை தன்  வீட்டிற்கே அழைக்கும் இடத்தில் ஒரு பெண்ணால் எப்படி எப்பவும் வலியை ஒதுக்கி வைத்துவிட்டு பேச முடுகிறது என யோசிக்க வைக்கிறது. இக்கதையை  அசோகமித்திரன் முடித்திருக்கும் விதம் மனதை மேலும் கணக்க வைக்கிறது. வாசித்து முடித்ததும் கதையின் முடிவில் ‘பாபநாசம்’ திரைப்படத்தில் கையெடுத்து வணங்கி கமல்ஹாசன் போலிசிடம் பேசும் கடைசி வசனம் போல நீலகண்டனை நான் நினைக்கலானேன்.

4.    நிழலும் அசலும்

    நம்மில் பாலர் நிழலைத்தான் சுமந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய அசலை நம்மால்     கூட  ஜீரணிக்க முடியாத துக்கத்தைச் சொல்லும் கதை.

5.    ஆட்டுக்கு வால்

    எல்லா காலத்திலும் இப்படியானத் துயரத்தை மகளைப் பெற்ற அப்பாக்களில் சிலர் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மருமகன் தன் மகளை ஒதுக்கிவிட்டு இன்னொரு பொண்ணை திருமணம் செய்துக் கொண்டதாகக் கேள்விபட்டதும் அப்பாவும் அம்மாவும் மகளை சந்திக்கச் செல்கிறார்கள். மகள் நிலையைக் கண்டதும் உடைந்து அழும் அப்பா யார் யாரையோ கண்முன் கொண்டுவருகிறார்.

6.    நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு காப்டன் ஆன வரலாறு

    தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என அடுக்கிக்கொண்டு போகிறார் கதை சொல்லி. ஆனால் கடைசியில் அவர் மீதே நமக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் அவர்தான் காரணமாக இருப்பாரோ?

7.    பாட்டு வாத்தியார் ஆழ்வார்

    கலையை மதிப்பவர்கள் போல கலையை வியாபாரம் ஆக்குபவர்களும் இருக்கிறார்கள். இரண்டாமவர்களுக்கே சமூகத்தில் மரியாதை கிடைப்பதை நாம் பார்த்திருப்போம். எனக்குத் தெரிந்த ஒருவர் ‘எழுதி காசு சம்பாதிக்க முடிஞ்சா எழுது, எதை எழுதினா இவனுங்க வாங்குவானுங்கனு எனக்கு தெரியும்… நான் எழுதி விக்கறேன் அவனுங்க வாங்கி படிக்கறானுங்க’ என சொல்லவும் எனக்கும் அவருக்கும் பெரிய வாக்குவாதமே வந்துவிட்டது. ஆனால் சிலர் அவரைத்தான் இலக்கியத்தைக் காப்பாற்ற வந்தவர்     போல புகழ்ந்து கொண்டிருப்பதை இக்கதை நினைக்க வைத்தது. இக்கதையை வாசிக்க உங்களுக்கும் அப்படியான அனுபவம் இருந்தால் நினைக்கவைக்கும் அந்த வலி புரியும்.

நிறைவாக; அசோகமித்திரன் கதைகளுக்கு ஆயுள் அதிகம். அதற்கான திறப்புகளும் அதிகம் என்ற நம்பிக்கைக்கு வலு சேர்த்திருக்கிறது இத்தொகுப்பு. அவரின் சிறுகதைகளை வாசித்துப் பேசியது போல அவரது கட்டுரைகள் பக்கம் நான் அதிகம் செல்லவில்லை என்கிற குற்றவுணர்ச்சி தோன்றிவிட்டது. அதனை விரைவில் போக்க வேண்டும்.

- தயாஜி

 

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

 

ஜனவரி 04, 2022

புத்தகவாசிப்பு_2022_1 - பணக்காரராவது உங்களது உரிமை



    பணக்காரராவது உங்களது உரிமை புத்தாண்டை தொடக்கி வைத்த புத்தகம். டாக்டர் ஜோசப் மர்ஃபியின் ‘பணக்காரராவது உங்களது உரிமை’. ‘Riches are Your Rights’, புத்தகத்தைத் தமிழாக்கத்தில் ‘பணக்காரராவது……’ என குறிப்பிட்டிருந்தாலும் புத்தகத்தில் பணத்தைக் குறித்து தெரிந்து கொள்வதை விடவும் செல்வ செழிப்பைக் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. இந்நூலில் மேலும் இரண்டு நூல்களின் இணைப்புகள் உள்ளன. அவை ‘வளமடைவது எப்படி’, ‘வெற்றிக்கான மூன்று வழிகள்’ ஆகும். 

    டாக்டர் ஜோசப் மர்ஃபியை முதன் முதலாக நான் அறிந்து கொண்டது ‘ஆழ்மனதின் அற்புத சக்தி’ (The Power of Subconscious Mind) என்ற புத்தகத்தின் மூலமாகத்தான். விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்த போது, மனைவியிடம் வாசிக்க புத்தகத்தை எடுத்து வர சொல்லியிருந்தேன். என் புத்தக அலமாரியில் இருந்து அவர் கைக்கு எட்டிய புத்தகமாக அந்த புத்தகத்தை எடுத்து வந்தார். சரி வாசிக்கலாமே என ஆரம்பித்தேன். அப்போதைய என் மன நிலையிலும் உடல் நிலையிலும் ஏற்பட்ட சிக்கலைப் போக்குவதற்கு அந்நூல் பெரிதும் உதவியாக அமைந்தது. இன்னொரு நாள் அந்நூலைக் குறித்து கட்டாயம் எழுதுகிறேன். 

    இப்போது ‘பணக்காரராவது உங்கள் உரிமை’ புத்தகத்திற்கு வருவோம். கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறையில் இருந்து தனிமனிதனின் வாழ்வில் எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற அடிப்படையில் இந்நூலை எழுதியிருக்கிறார். பல வேத வசனங்களை மையமாகக் கொண்டு அதிலிருந்து சமகாலத்தில் எப்படி நம் பிரார்த்தனைகளை அமைத்துக் கொள்வது. நம் வேண்டுதல்களை எப்படி முறையிடுவது என்ற வகையில் மிகத்தெளிவாக இந்நூலை எழுதியிருக்கிறார். 

    அப்படியெனில் இது மதத்தைப் பிரச்சாரம் செய்யும் நூலா என்கிற கேள்வி எழுவதை புரிந்துகொள்ள முடிகிறது. முதல் சில பக்கங்களில் எனக்கும் அவ்வாறு தோன்றியது. ஆனால் அப்படியில்லை என அடுத்தடுத்தப் பக்கங்களின் வழி தெளிவுப்படுத்தியுள்ளார். 

    பைபிளை வாசிக்கும் கிறிஸ்துவர்களுக்கு அவர்களின் ஸ்தோத்திரங்கள்/பிரார்த்தனைகள் எப்படி அமைகிறது எப்படி செயல்படுகிறது என அறியலாம். ஆனால் எனக்கு தெரிந்த சில கிறிஸ்துவ நண்பர்களிடம் இந்நூலைக் குறித்து பேசும் போது, அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு இது ஒரு பொருட்டாகவே அமையவில்லை. அதோடில்லாமல் இலக்கியம் மீது பெரிய ஈடுபாடோ மதிப்போ உள்ளதாகவும் தெரியவில்லை. டால்ஸ்டாய் மற்றும் தஸ்தயொவஸ்கி போன்ற பெரும் ஆளுமைகளைக் குறித்து பேசிப்பார்த்தாலும் அதனால் என்ன? என்கிற கேள்வியே எஞ்சியிருந்தது. 

    ஆனால் இன்னொரு கிறிஸ்துவ நண்பரிடம் இந்நூல் குறித்து பேசும்போது அவரும் உற்சாகம் ஆகிவிட்டார், அவர் வாழ்வில் நடந்த சில அற்புதங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஏறக்குறைய அது எப்படி நடந்தது, நடக்கிறது என்பதற்கு இந்நூல் சில உதாரணங்களைக் கொடுக்கிறது. இந்த வழிமுறையைத்தான் பல தன்முனைப்பாளர்கள் பேச்சாகவும் எழுத்தாகவும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால் ‘ரோண்டா பைர்ன்’ எழுதிய ‘ரகசியம்’ தொகுதி புத்தகங்கள் இவ்வழிமுறைகளின் நீட்சியாக பார்க்க முடிகிறது. 

    மதம் ஒரு சிக்கலாக ஆகிவிடாது என்கிற தெளிவு உள்ளவர்களுக்கு இந்நூல் நிச்சயம் பயன் தரும். தன்னுடைய அன்றாட வாழ்க்கை பிரார்த்தனையில் தங்களின் வேண்டுதல்களை/பிரார்த்தனைகளை இயற்கையின் மீதோ பிரபஞ்சத்தின் மீதோ இறைவன் மீதோ முன் வைக்கலாம்.

 - தயாஜி 

(இந்நூலை வாங்க விரும்புகிறவர்கள் புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை 016-4734794 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்)

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்