பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 07, 2021

தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' - இரண்டாவது கட்டுரையை முன்வைத்து

(இரண்டாவது கட்டுரையை முன்வைத்து)

    தற்போது சு.வேணுகோபால் அவர்கள் எழுதிய 'தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி' புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் 13 படைப்பாளர்களின் படைப்புகளையும் அதன் உள் வெளி பரப்புகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
    இரண்டாவது கட்டுரையாக 'கு.ப.ராஜகோபாலன்: கொதித்து அடங்கிய உள்ளம்' என்கிற கட்டுரை இடம்பெற்றுள்ளது.
    கு.ப.ரா தனது கதை உலகத்தை அதிகமும் அகப் பிரச்சனையிலிருந்து உருவாக்குகிறார் என கட்டுரையை ஆரம்பிக்கின்றார்.
    இக்கட்டுரையை வாசிக்கத் தொடங்கும் பொது, இதுவரையில் நான் வாசித்த கு.ப.ராவின் கதைகளில் எதுவெல்லாம் நினைவில் நிற்கின்றது என யோசிக்கலானேன். ஓரளவே அவர் குறித்த அறிதல் எனக்கிருந்தது. அவரின் கதைகளில் எதும் தற்போதைய நினைவில் இருக்கவில்லை. அதற்கான காரணத்தை தேடும் வகையாகவும் இக்கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தேன்.
    '...வாழ்வின் அக நெருக்கடியைச் சொல்லிவிட்டு இறுதி பகுதியில் முடிவுகளை நம்பிக்கையூட்டும் வகையில் மரபான வாழ்க்கைக்குச் சாதகமாக முடிக்கிறார்' என இவரின் கதைகளில் காணப்படும் பலவீனத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.
    மேலும் புரிவதற்காக புதுமைப்பித்தன் கதைகளை இவ்விடத்தில் கு.ப.ராவின் கதைகளோடு ஒப்பிடுகிறார். அதனை 'புதுமைப்பித்தன் காவிய காலத்து மேன்மைகளைத் தனது கதைகளின் முடிவுகளாக முடிச்சு போடாததால் இன்றளவும் அவரின் சாதாரண கதைகள் கூட படிக்கப் புதுசாக இருக்கின்றன' என்கிறார்.
    அதோடு கட்டுரையாளர் நின்றுவிடவில்லை. இன்று எழுதப்பட்டு வரும் முற்போக்குக் கதைகளைவிட இந்த கதைகளில் சில நல்ல முற்போக்கு அம்சத்தை வெளிப்படுத்தும் கதைகளாக இருக்கின்றன என அவரின் கதைகளான தாயாரின் திருப்தி, ஸ்டூடியோ கதை, வாழ்க்கை காட்சி, தாய், மன்னிப்பு, அடி மறத்தால் ஆழம், முன்தலை முறை என்ற கதைகளை முன்மொழிகின்றார்.
கு.ப.ராவின் கதையுலகை ஆசிரியர் நான்கு தளங்களில் வகுக்கின்றார்.
1. குடும்ப உறவுகளில் ஏற்படும் முரண்களில் உரசல்களில் அவர்களின் ஆசாபாசங்களை வெளிப்படுத்திவிடுகிற தருணங்கள்.
2. காமமும் காதலும் ஆண்களிடமும் பெண்களிடமும் உள்ளே கிடந்து அழுத்தம் பெறப்பெற அதன் உச்சத்தில் வெளிப்படும் விசித்திர தருணங்கள்.
3. பொய்மைக்கும் அதிகாரத்திற்கும் எதிரான உண்மைக்கும் நேசத்திற்கும் தடம் சமைக்கிற பார்வைகள்.
4. மாந்தர்களின் தனித்துவமான வெளிப்பாடுகளை எட்ட நின்று கண்ட விவசாயக்குடிகளின் உழைப்பின் வாசனைகளைக் கதைகளாக்கியிருக்கிறார்.
    கு.ப.ரா பெண்ணின் உச்சபட்சமான மூர்க்கத்தையும் உச்சபட்சமான காதலையும் உச்சபட்சமான வேதனையையும் சொல்லிச்சென்ற கதைகள் என வீரம்மாளின் காளை, நூருன்னிஸா, சிறிது வெளிச்சம், முதலிய கதைகளைச் சொல்கிறார்.
    'தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் முதன்முதல் சுயத்துவம் மிக்க பெண்களின் குரல்களை கு.ப.ராவின் கதைகளில் காணமுடிகிறது' என சொல்லும் ஆசிரியர் நிச்சயம் வாசித்தாக வேண்டிய கதைகள் பட்டியலில் கு.ப.ராவையும் இணைத்துவிடுகிறார்.
    எழுத்தாளர் தன்னை மறந்து கரைந்து எழுதிய கதைகளில் எல்லாம் கவிமனம் பொங்கி ததும்புவதாக சொல்லும் ஆசிரியர் அதனை தான் குறித்து வைத்திருப்பதாகவும் மேற்கொண்டு வாசகர்கள் தானே வாசித்து கண்டடைய வேண்டும் என்கிறார்.
    ஆசிரியர் குறிப்பிட்டுருக்கும் கு.ப.ராவின் ஒவ்வொரு கதைகளையும் வாசிக்க வேண்டிய காரணத்தை ஆர்வத்தையும் கட்டுரையில் சொல்லியுள்ளார். இன்றைய தலைமுறைக்கு ஏற்றதொரு அறிமுகமாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்