பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 06, 2012

விடைபெறும் கேள்வி ?

              விடைபெறும் கேள்வி ?

     வணக்கம் தோழி. நான் நலம். நீ இங்கு நலமாக இருக்க உன்னைப் போல் நானும்  இறைவனை வேண்டுகின்றேன். பார், அன்று நீ சொல்லிக் கொடுத்தது போலவே கடிதத்தைத் தொடங்கிவிட்டேன் என நினைக்கின்றேன். உனக்கு மகிழ்ச்சிதானே? அப்படியென்றால் அந்த மகிழ்ச்சியை தொடர முடியாததற்கும் நான்தான் காரணம். என்னை மன்னித்துவிடு. ஓ.........  உனக்கு மன்னிப்பு என்றால் பிடிக்காதுதானே. மறந்துவிட்டேன் மன்னித்திடு. ச்சே; பாரேன் நான் திருந்தவே இல்லை.
    ‘திருந்தவே இல்லை’ இந்த வார்த்தைதானே என் வாழ்க்கையையே  இந்த நிலைமைக்கு மாற்றி அமைத்தது. ஆமாம்.......   நான் திருந்துவேன்னு யார்தான் நினைச்சிப் பார்த்த சொல்லு, உன்னைத் தவிர. உன்னால் மட்டும் என்னை எப்படி நம்பிக்கை வைக்க முடிந்தது. எத்தனையோ  பேர் சொல்லியும். இவ்வளவு ஏன், என் வீட்டில் உள்ளவங்க எல்லாரும் சொன்ன பிறகும் கூட நீ ஒருத்திதான் என் மேல் நம்பிக்கை வைத்து கைகொடுத்தாய். அதோடில்லாமல் உன்னுடன் தங்குவதற்கு இடம் கொடுத்து இன்றுவரை எனக்கு பக்கபலமாகவும் ஆலோசகராகவும் இருந்த உனக்கு என்னால் முடிந்த சிறிய நன்றி இது என நினைத்துக் கொள். இப்போ ஏன் இந்த நன்றி கடிதம் என நீ யோசிப்பாய் என நான் நன்கு அறிவேன் தோழி. எல்லாம் நன்மைக்கே என நீ கற்றுக் கொடுத்த பாடத்தின் விளைவு இது. இன்னும் நினைவில் இருக்கிறது விளைவு என்பது தீமையைக் குறிக்கும் சொல் அல்ல. ஒரு செயலில் விளைவைக் கொடுக்கும் சொல். தோழி; சரிதானே......
       எனக்கு 16 வயது இருக்கும்னு நினைக்கிறேன்;  அப்பாவும் அம்மாவும் வேலைக்கு போன பிறகு வீட்டில் யாரும் இருக்கமாட்டாங்க... நீயே யோசிச்சி பாரு; முன்பு தோட்டத்து வீட்டில் இருக்கும்போது எப்படியெல்லாம் இருந்தோம். அம்மா அப்பா இல்லாட்டியும் பக்கத்துவீட்டுக்காரங்க  நம்ம மீது அக்கறை வச்சி நம்மையும் கவனிச்சி வந்தாங்க. இப்போ அப்படியா..? பத்து வருசம் இருந்தாதும் பக்கத்து வீட்டில் யார் இருக்கான்னு தெரியாமதானே வாழ்றாங்க. அதனால்தான் என்னவோ நான் தனியா இருந்தப்போ என் வீட்டுக்கு வந்த தோழிகளைப் பற்றி பக்கத்தில் உள்ளவங்க கண்டுக்கல. கண்டுகிட்டா மட்டும் எப்படி என் அப்பா அம்மாகிட்ட சொல்லுவாங்க. இவங்க ரெண்டு பேரும்தான் எப்பவும் பகலில் வீட்டில் இருக்கறதே இல்லையே.
     அவங்களையெல்லாம் தோழிங்கன்னு சொல்றதுக்கே அருவருப்பா இருக்கு. ம்... பாவம் அவங்களும் என்னதான் செய்வாங்க.நாங்க என்ன இப்படியெல்லாம் ஆகும்னு நினைச்சாப் பார்த்தோம். இப்போ அவங்க எல்லாம் எங்க இருக்காங்கலோ தெரியலை தோழி. பாவம்தான் அவங்களும். எனக்கு பரவாயில்லை. நீ கிடைச்ச. ஆனால் அவங்களோட நிலை. கஷ்டமாதான் இருக்கு. ரஞ்சினியை பத்தி கேள்விபட்ட வரைக்கும் இன்னமும் ‘புக்கிட் பிந்தாங்’-லதான் இருக்காலாம்..               
      தொடக்கத்தில் இருநூறா இருந்த அவளோட மதிப்பு இப்போதெல்லாம் நூறு வெள்ளிகூட தாண்டறதே கஷ்டமா இருக்காம். இருக்காதா ஆரம்பத்தில் சின்ன வயசுக்காரியா அவ மட்டும்தானே அங்க இருந்தா. எல்லார்க்கும் அவளைத்தான் தெரியும். இப்போ பார்த்தா அவளைவிடவும் சின்னச்சின்ன பொண்ணுங்க வந்து சேருதுங்க. பாரு பெத்தவங்களை நம்பாம எவனையோ நம்பி வீட்டைவிட்டு வந்திடுதுங்க. இங்க வந்தா சேர்ந்த பிறகு வந்தவன் கூடயும் வாழ முடியாம வீட்டுக்கும் போக முடியாம இதுங்க அந்த சீன தவுகேகிட்ட நல்லா மாட்டிக்குதுங்க. எனக்கு எப்படி இந்த ரஞ்சினி பத்தி தெரியும்னுதானே யோசிக்கற.? மோகன்தான் சொன்னான். ஆமா; அதே கஞ்சா மோகன்தான். இல்லை இல்லை நான் சாப்டலை. என் கிட்ட விற்க மருந்து கொண்டு வந்தான். இனி அந்த மருந்து எனக்கு வேண்டாம்; நான் திருந்திட்டேன்னு சொல்லி அவனை விரட்டிட்டேன்.
(பொய்தான் சொல்கிறேன் மன்னித்துவிடு)
       சும்மா.... சாப்பிட்டா ஒன்னும் ஆகாது என சொல்லி கொடுத்த பொருளில் இத்தனை இன்பமா என அதிலேயே நிலைக்க நினைத்திருந்தேன். யாரும் இல்லாத நேரத்தில் வந்த தோழிகள் முதலில் இலவசமாக என் நட்பின் அடையாளமாகத்தான் மருந்தைக் கொடுத்தார்கள். நாளாக நாளாக ஆரம்பத்தில் கொடுத்ததற்கெல்லாம் சேர்த்தே பின்னாளில் நான் பணம் செலுத்த வேண்டியதாயிற்று. உனக்கு தெரியாது தோழி; யாருமே இல்லைன்னு நான் நினைச்சப்போ அந்த தோழிங்கதான் எனக்கு எல்லாமா இருந்தாங்க. உனக்கு தெரியுமா..?; நான் வயசுக்கு வந்ததைக்கூட அவங்கதான் கண்டுபிடிச்சி சொன்னாங்க. அதுக்கப்பறம் என்ன செய்யனும் எப்படி நடக்கனும் எல்லாம் அவங்கதான் கத்துக் கொடுத்தாங்க. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்பவும் வேலைவேலைதான் இதில் எங்கிருந்து நான் இதையெல்லாம் அவங்ககிட்ட சொல்றது. பணத்தைப் பொருத்தவரைக்கும் எனக்கு வீட்டி குறையே இல்லை. ஒவ்வொரு நாளும் தேவைக்கு அதிகமாகவே கிடைத்தது.
     என் தோழிங்க  மூலம்தான் எனக்கு மோகன் அறிமுகமானான். அவன்கிட்டதான் எப்போ வேணும்னாலும்  நமக்கு மருத்து கிடைக்கும். ரொம்ப நல்ல பையன். என்கிட்ட இருந்துகூட சில சமயம் காசு குறையாதான் வாங்கியிருக்கான். கருப்பா குள்ளமா இருப்பான். அவன் இருக்கற இடம் யாருக்கும் தெரியாது. அவனே அங்க திடிர் திடிர்னுதான் வருவான். பல முறை நாங்க அவனுக்காக காத்திருந்திருக்கின்றோம் தெரியுமா. அவனையும் அவனோட அப்பா அம்மா வீட்டை விட்டு விரட்டிட்டாங்காலம். சொல்லி அழுவான். அதான் சொன்னேன் “உன்னை இன்னும் தலை முழுகலைடா, அதுவரைக்கும் சந்தோஷப்படு”. அப்பறம்தான் கொஞ்சம் அழுகையை நிறுத்தினான். அந்த சாக்கில நான் ரெண்டு பாக்கேட் எடுத்து வைச்சிகிட்டேன்.
    வழக்கமா மோகன் இருக்கிற இடத்தில் அன்னிக்குன்னு பார்த்து போலிஸ் வந்துடுச்சி, நாங்கெல்லாம் ஓடிப் போய்ட்டோம். எப்படியோ என்னைப் பத்தி என் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சிப்போச்சி, அதும் பாரேன் இந்த சம்பவம் முடிஞ்சி ஒரு வாரம் ஆனபிறகுதான் வீட்டில் என்னை விசாரிச்சாங்க. பெரிசா ஒன்னும் கேட்கலை. அப்பா அம்மாவையும்  அம்மா அப்பாவையும்தான் மாத்திமாத்தி குத்தம் சொன்னாங்க. கொஞ்ச நாள் ஆன பிறகு எனக்கு என்ன ஆச்சின்னு தெரியலை, உடம்பு ஒரு மாதிரி செய்தது. மயக்கம் போட்டு விழுந்தேனாம். பிறகு நானும் தோழிங்களும் (ஸ்...யாருக்கும் தெரியாமல்தான்) கிளினிக் போனோம்.
        சத்தியமா சொல்றேன் தோழி; என் வயித்தில் குழந்தை இருக்குன்னு டாக்டர் சொல்லிதான் எனக்கே தெரியும். அன்னிக்கு என் வீட்டில் நடந்ததும். என்னை தலைமுழுகி விரட்டனதும் அன்னிக்கே உன்கிட்ட சொல்லிட்டேன். ஒரு பொம்பளை பிள்ளை இப்படி சொந்த வீட்டிலேயே  திருடினதுகூட பரவாலை.... ஆனா அப்படி  ஒரு அசிங்கமான வீடியோ  படத்தில் என்னை பார்த்தும் எப்படிதான் வீட்டில் வச்சிருப்பாங்க. நீயே சொல்லு.? வயித்தில் உள்ள குழந்தையைப் போலவே அந்த வீடியோ படமும் எனக்கு எப்படின்னு தெரியவேயில்லை தோழி.
    வேற வழி இல்லைன்னு முடிவான பிறகுதான் ; என் தோழிங்க ஒரு அக்கா வீட்டுக்கு கூட்டி வந்தாங்க. தொடக்கத்தில் அந்த அக்கா என்னை நல்லா அன்பாதான் பார்த்துகிட்டாங்க. என் உடம்புக்கு நல்லதுன்னு சொல்லி ஏதேதோ மாத்திரியை சாப்ட சொன்னாங்க. அது என்ன மாத்திரைன்னு எனக்குத்தான் தெரியுமே. ஆனாலும் சாப்டேன். நான் மயக்கத்தில் இருக்கும் போது என்னை வச்சி அந்த அக்கா சம்பாதிச்சது கொஞ்ச நாள் கழிச்சி; அதும்  அப்பன் இல்லாத குழந்தை வயித்திலேயே செத்துப் போனபிறகுதான் தெரிஞ்சது. கொஞ்ச நாள் ஆஸ்பித்திரில இருந்தேன். அங்க  அவங்க டாக்டருங்க கொடுத்த மருத்துல என்னால தெளிவா நாலு வார்த்தையைப் பேச முடிஞ்சது.
   அங்கதான் நாம சந்திச்சோம். ஏன்னு தெரியலை உங்க ஆதரவு கிடைச்சி இப்போ உங்க வீட்டில் இருக்கேன். நீங்ககூட கேட்டிங்க வீட்டுக்கு அனுப்பவான்னு. வேணாம்னு சொல்லியும் நீங்க விடலை. பாருங்க என்னால உங்களுக்குதான் அவமானம். அந்த அவமானமே போதும்னுதான் என் வாயாலும் இதோ என் எழுத்தாலும் உங்கள் பெயரைச் சொல்லி கூப்டவோ எழுதவோ முடியலை. நல்லா யோசிச்சுப் பாருங்க உங்களுக்கு கிடைச்ச அப்பா அம்மா மாதிரி எனக்கும் கிடைச்சிருந்தா எனக்கு இந்த நிலை வந்திருக்காதுதானே தோழி. அப்படியும் சொல்லமுடியாது. எனக்குன்னு  சொந்த அறிவுன்னு ஒன்னு இருக்கே. யாருமே கூட சேர்க்காத பழகாதவங்ககிட்ட நான் நட்பா இருக்க ஆசைப்பட்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். இப்போ அதையேத்தானே நீங்களும் செய்து இருக்கிங்க; பாருங்க எல்லாரும் ஒதுக்கிய எனக்கு நீங்க அடைக்களம் கொடுத்திருக்கிங்க. ஆனால் நானும் உங்களை முட்டாளாக்கிட்டேன். இனியும் என்னால உங்களுக்கு எந்த பாதிப்பும் வந்திடக்கூடாதுன்னுதான் கவலையா இருக்கு. இனி அந்த கவலைக்கு இடம் இல்லை.
    அதனாலதான் நான் இந்த வீட்டை விட்டு போறேன் தோழி. மறுபடியும் என் வாழ்க்கை எப்படி அமையப் போகுதுன்னு கவலையெல்லாம் எனக்கு இல்லை. சரியா வளர்க்கப்படாத பிள்ளைகளுக்கும் முறையற்ற நண்பர்கள் கூட பழகிறவங்களும் அதற்கான பாதிப்பை அடைஞ்சேதானே ஆகனும். நான் உங்க வீட்டில் இருக்கிறதால உங்களுக்கும் கெட்ட பேரு வந்தா....... அந்த பாவம் பெரிய பாவம் இல்லையா..?
    எங்கே போவது என தெரியவில்லை. ஆனாலும் போகிறேன். பதினாறு வயது என்னை படிதாண்ட வைத்தது. பெற்றவர்களே அவமானத்தால் என்னை தலைமுழுகினார்கள். தவறான நட்பால் ஒழுக்கம் இழந்தேன். பார்ப்பவரெல்லாம் படுக்கைக்கு அழைக்கும்படி வீடியோவால் விளம்பரமானேன். தந்தை தெரியாமல் தாயாகி யாருமற்ற அனாதையானேன். இப்போது பாரேன் இருபத்தைந்து வயதுகூட ஆகவில்லை ; அதற்குள் என் நிலையை.
      தோழி எனக்கனெ நீ செய்த உதவிகள் எல்லாம் போதும். இருந்தும் கடைசியாக ஒரு உதவி செய்யேன். நான் உனக்கு எழுதும் இந்த கடிதத்தை கிழித்திடாதே. உன் நண்பர்கள் உறவினர்கள் என எல்லோரையும் படிக்கச் சொல். அதில் சிலர் திருந்தக்கூடும் இன்னும் சிலர் என்னை படுக்கைக்கு  அழைத்ததற்கு வருந்தக்கூடும் ! . இனி எங்கே உன்னை சந்திப்பேன் எனத் தெரியவில்லை தோழி. ஏன் உன்னை மீண்டும் சந்திக்க வேண்டும் தொழி.?
    அன்று நீ சொல்லிக் கொடுத்தது போல் கடிதம் எழுதத் தெரிந்த எனக்கு அதனை எப்படி முடிப்பது எனத் தெரியவில்லை. எப்படியாவது முடிக்கனுமே. வழக்கம் போல செய்ய வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் செய்துவிட்டேன். சமையல் வேலை எல்லாம் முடித்துவிட்டேன். சாப்பிட்டு. என் கடைசி சமையல். எந்த பொருளையும் என்னுடன் எடுத்துச் செல்லவில்லை என்பதை ‘நீயும்’ உறுதிசெய்து கொள். ம்... இன்னும் உன் கணவர் வீட்டிற்கு வரவில்லை; உன் கணவர் வருவதற்குள் செல்வதால் நீயே அவரிடம் சொல்லிவிடு. விடைபெறுகின்றேன் பல கேள்விகளுடன் உன் தோழி.

நன்றி வணக்கம்.
  



(பின்குறிப்பு; தோழி உனக்கு மட்டும்)
    தோழி, பதினாறு வயதில் பாதை மாறிய எனக்கு உதவ முன் வந்தாய். அதே போல நீ செய்யும் சமூக சேவையையும் பாராட்டவே வேண்டும். உன்னிடம் ஒரே ஒர் உதவி பெறவே விருபுகின்றேன். இனி நாம் சந்திப்பது உறுதியல்ல. ஆதலால் இதுவே என் கடைசி வேண்டுகோலாக் கூட இருக்கலாம். உன் சமூக அக்கறை நல்லதுதான். ஆனால் உன்  வீட்டில் உனக்கென உன் கணவர் இருக்கின்றார். உங்களுக்கு என ஒரு குழந்தை வேண்டாமா தோழி...?
   சமூகமும் சமூகம் சார்ந்தவர்களும் உனக்கு பெரிதாகத் தெரிந்ததால் உனக்காக வீட்டில்  கணவர் இருக்கின்றார் என்பதை நீ பல சமயங்களில் மறந்துவிட்டாய். இனியும் நீ அப்படி இருக்க வேண்டாமே.
    ‘தோழியாகவே’ விடைபெறுகின்றேன். இப்படிக்கு நான்.
   
 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்