பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

திங்கள், 21 செப்டம்பர், 2009

ஞானப்பார்வை

சூரியன் விழிப்பதற்குள், விழிப்பவர்களால் பல காரியங்கள் சாதிக்க முடியும் என்பதை ஏதோ புத்தகத்திலிருந்து படித்து........
கவனிக்க..! படித்துதான் தெரிந்துக்கொண்டேன்.

இது என் தந்தையின் பழக்கம், இன்று என்னால் புத்தகத்தை அனைக்காமலும் படிக்காமலும் துங்குவது இயலாத காரியம்.
இயன்ற காரியம் கைத்தொலைபேசியை கண்டுக்கொள்ளாமல் இருப்பது இல்லையேல் என் புத்தகக்காதலிகள் கோவம் வந்துவிடும்.
அப்புறம் திருப்பும் பக்கமெல்லாம் புரியாத மொழிகளைக் காணநேரும்.

இப்போதெல்லாம் இரவில் மூக்கடைப்பு பிரச்சனை இருப்பதால், சுவாசத்தை சீராக்கும் முயற்சிக்குப் பின் துங்க மணி இரண்டுக்கு மேல் ஆகும். புத்தகக்காதலிகள் இதற்கு பேருதவி புரிகின்றார்கள்.

அப்படி ஒரு நாள் விடிந்து விட்டதென அறியாமல் தூங்கிய என்னை, அதிரடியாக எழ வைத்தது ஒரு குறுஞ்செய்தி (கடுஞ்செய்தி..!)

‘இன்று அலுவலகச் சந்திப்பில் அனைவரும் 9.00க்கு வந்திவிடவேண்டும், சில முக்கிய முடிவுகள் எடுக்க................’

அதை தொடர்ந்து படிக்க நேரமில்லை, இன்னும் எஞ்சி இருப்பது முப்பது நிமிடம் மட்டும். சாதாரணமாக எப்படியும் இருபது நிமிடப்பயணம். பத்து நிமிடத்தில் தயாராக வேண்டும்..!

சாத்தியமா..?
யோசிக்காமல் அதீத வேகத்தில் புரப்பட ஆயுத்தமானேன்.

எடுக்க வேண்டிய பொருட்கள்பற்றி கவலையில்லாமல் மோட்டாரில் பயணிக்கத் தொடங்கினேன்

(ஏனோ என் வாழ்க்கை பயணம் நிறைந்ததாகவே இருக்கின்றது)

வீட்டிலிருந்து ஐந்தாவது நிமிட தூரத்தில் இருக்கும் அந்த பெரிய மரம் என் தலையில் விழ்ப்போவது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியாத ஒன்றுதான்....

இதோ இன்னும் ஐந்து வினாடியில் அச்சம்பவம் அரங்கேற்றம் காணப்போகின்றது. இன்னும் மூன்று வினாடிகள்....
........................................................................................................சில தினங்களுக்கு முன்பு,

“அத்தை கதை தெரியுமா..?”
“என்ன கதை...? ஆரம்பிச்சிட்டியா..!”

அத்தைக்கு எப்பவும் நான் பேச ஆரம்பிச்சா கொஞ்சம் பயம் தானாகவே வந்துவிடும். அதும் அவங்களோட நம்பிக்கையைப் பற்றி பேசிட்டா...... அவ்வளவுதான்.
அவங்களும் என்னதான் செய்வாங்க.., ஆரம்ப காலத்திலிருந்தே ஊறிப்போன நம்பிக்கைகள். சடங்கு சம்பிரதாயம் , காணிக்கை... இன்னும் சிலர் அவங்க ஏமாற அவங்களே பணம் தரும் சின்னப்பிள்ளைத்தனம். இப்படி அடிக்கிக்கிட்டே போகலாம்.

எதைக் கேட்டாலும் ஒரே பதில்...'.எல்லாம் அவன் செயல்’
இங்கு எல்லாம் ‘அவனவன் செயல்’ என்பதை எப்போ புரிந்துக்கப் போறாங்க...

கடவுளே....! பாருங்க அவங்களோட பழக்கம் எனக்கும் தொத்திக்கிச்சு. எல்லாத்திக்கும் ஆகாயத்தைக் காட்டி தன் மேல் தப்பில்லைங்க.. கோழைத்தனம். வேற என்ன சொல்ல..?
அங்கப் பாருங்க எங்க அத்தையை அவங்களோட குரு படத்துக்கு பூஜை போடப்போறாங்க..!

ஒரு கூட்டம் கடவுள்னு சுத்துது.. மற்றது இப்படி மனுஷங்க பின்னை குருன்னு சுத்துது.

பள்ளியில் ஆரம்பக்கல்வியை கத்துக் கொடுத்த ஆசானை தெரியாது, எங்கயோ ஒரு மூலையிலெ இருக்கிற கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத மனுஷனுக்கு இங்க இருக்கறவங்க செய்ற வேலை இருக்கே,, கேட்டா சேவையாம்....

அன்னிக்கு அப்படித்தான் வேலை முடிஞ்சி வரும்போது ஒரு விபத்து. நானும் யாரா இருக்கும்னு பார்க்கபோனேன். ரத்தவெள்ளத்தில் துடிக்கிறவனுக்கு தூக்கிவிட ஒருத்தர்தான் முயற்சி செய்தாரு.

மத்தவங்கெல்லாம் அங்க பேசின வார்த்தை என்ன தெரியுமா.. அந்த பையன் அந்த ரோட்டிலே வேகமா மோட்டரை ஒட்டிகிட்டே இருப்பானாம் , அங்கவுள்ளவங்க கொடுத்த சாபம்தான் இப்படி பலிச்சிருச்சாம். இதே உயிர் பொயிட்ட சொல்லுவாங்களா சாபம் பலிச்சிருச்சி தான்தான் சாபம் கொடுத்தேன்னு ஒப்புக்குவாங்களா...?
சாமி பேரை சொல்லி உயிரை பலி கொடுக்கும் இவங்களைப் பொருத்தவரை...இதெல்லாம் சாதாரணம்.. காச்சள் வந்தா கண்ணாரு.. வீடு எரிஞ்சா செய்வினை.. காணாபோனா வெத்தலை பார்த்து தேடறது..

“அத்தை நீங்க குரு..குருன்னு சொன்றிங்களே..அவரைப்பத்தத இனையத்துல ஒருத்தர் எழுதியிருக்காரு”

“ம்...அப்படியா என்ன எழுதியிருக்காரு.... அவரோ சீடரா..?”

“ஆரம்பிச்சுட்டிங்களா..? முழுசா கேளுங்க அப்புறம் தெரியும் அவர் சீடரா.. நல்ல மனுசனான்னு”

“புரியும்படியே நீ பேசமாட்டியா..? எப்பப்பாரு ஏதோ சாமியாரு மாதிரி பேசர..!!”

“அத்தை என்னை அந்த பட்டியலில் சேர்த்துடாதுங்க.. சரி சொல்றேன் கேளுங்க, உங்க குரு கையில் விபூதி எடுக்கிறது மோதிரம்... தங்க சங்கிலி.. எடுக்கிறது எல்லாம் எப்படி தெரியுமா..? ”

“அது அவங்க.. செய்த தவத்துக்கு கடவுள் தந்த அருள்.. மறந்துட்டியா உங்க மாமா சாவபொழைக்க இருந்தாரு அவரை குணமாக்கினது அந்த குரு கொடுத்த விபூதிதான்.. ”

“மருந்து கொடுத்த டாக்டரை மறந்துட்டிம்க்களே.. அத்தை..?”

“உன்கிட்ட பேசமுடியாது..”

“நல்லது ,! அப்போ கேளுங்க. சில ஒரு மூலிகை வேர் இருக்கு அதை அரச்சி கையில் பூசி காயவைச்சா... அது கையில் இருக்கிறது கண்ணுக்குத் தெரியாது.. ஆனா... அதை தடவனப்பிறது ரெண்டு கையையும் உரசினா.. விபூதி வரும்..!!”

“அப்படின்னா... அவரு செய்றது கண்கட்டு வித்தைன்னு சொல்றயா..? நான் நம்பலை”

“எப்பதான் நம்பறிங்க..? அடுத்ததா இன்னொன்னு சொல்றேன்.. சொல்றேன் என்ன காட்டுறேன் பாருங்க.. அந்த குரு செய்ற வேலையை..”

அத்தையிடம், எனது மடிக்கனினியில் நண்பன் அனுப்பியுள்ள வீடியோப் படத்தைக் காட்டினேன். அதில் ஒருவர் காவியுடையுடன் மக்களுக்கு ஆசி வழங்கியப்பின் ஒருவருக்கு தன் கையில் தங்ககிலியை வரவைத்துக் கொடுத்தார்.... பொருமை இழந்த அத்தை.

“இது எப்பவும் நடக்கிறது தானே இதில் என்ன இருக்கு,,?
அவருக்கு கிடைக்கனும்னு விதி இருக்கு..”

“விதி இருக்கா,..? இதெல்லாம் சதி அத்தை சதி..! நல்லாப் பாருங்க.. ஒருத்தர் இவர் கையில் தட்டை கொடுக்கறாரா..?”

“ம்”

“இவரும் தட்டை வாங்கி நிக்கிறாரா..?”
“ம்”

“நல்லா பாருங்க.. அத்தை அந்த தட்டின் கீழ் இருந்துதான் ஏற்கனவே ஒட்டி வைச்சிருந்த சங்கிலையை இவர் எடுத்து கையில் வச்சி..... கொஞ்ச நேரம் ஏதோ பேசி திடிர்னு சங்கிலி வந்த மாதிரி வந்தவருக்கு கொடுக்கிறாரு தெரியுதா..?”

“அப்படின்னா....???!!!”

“அதான் தெரியுதே இதெல்லாம் ஏமாத்து வேலைன்னு .. இப்பவாவது நம்பறிங்களா..?”

“எது எப்படியோ , எல்லாத்திற்கும் காரணம் இருக்கும் குரு இப்படி செய்றானுன்னா.. கண்டிப்பா காரணம் இருக்கு உனக்கு தெரியலை அவ்வளவுதான்..”

“உங்களுக்கு தெரியுதா..?”

“நான் நம்பறேன் அவரை. அதனால அதைப் பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லை”

“ஆமா அத்தை காரணம் இருக்குதான் உங்களையெல்லாம் ஏமாற்ற...........அதோ அங்க பாருங்க அந்த பயித்தியக்காரனை...! எப்பவும் இந்த ரோடிலேதான் சுத்துது அதுக்கும் ஏதும் காரணம் இருக்குமா...?”
எங்கள் பேச்சை முற்றவிடாமல் மாமா வந்ததால் பேச்சை அத்தோடு நிறுந்தினோம்.
.....................................................................................................


இன்னும் இருப்பது இரண்டு வினாடிதான். வேகாமாக மோட்டாரில் சென்றுக் கொண்டடிருந்த சமயம் சட்டென்று அந்த பயித்தியக்காரன் குறுக்கே வந்து தடுத்தான்..!!!

அவனை மோதாமல் இருக்க மோட்டாரை நிறுத்த அதும் கொஞ்சம் இழுத்தவாரு அவனருகில் நின்றது. அப்போது அவனுக்கு பின்னால் அந்த பெரிய மரம் விழுந்தது..!

இன்னும் நான் இரண்டு அடி முன்பு சென்றிருந்தால் நிச்சயம் அந்த மரம் என் தலையில் விழுந்திருக்கும்.
இவனுக்கு எப்படித் தெரியும்..? யாரிவன் பயித்தியம்தானே..?

ஒரு வேலை அத்தை சொல்வது போல அனைத்திற்கும் எதாவது காரணம் இருக்குமா..?
அதை எப்படித் தெரிந்துக் கொள்வது..?


...................தயாஜி வெள்ளைரோஜா....................

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்