பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 20, 2012

பயணிப்பவனின் பக்கம் 2

ஒரு உருது கவிஞனும் நெடியத் தேடலும்





    சிலருட‌னான சந்திப்புகளில் பல மொழிக‌ளிலும் புழங்கும் இலக்கியங்களைப் ப‌ற்றி பேச கேட்டிருக்கின்றேன். இன்றுவரை ஒருவரையும் கேட்டதில்லை 'நீங்கள் அதனை எந்த மொழியில் படித்தீர்கள்' என. ஒரு ச‌ம‌ய‌ம் என‌க்கும் அவ்வாறு வேற்றுமொழி இல‌க்கிய‌த்தை தேடிச்செல்லும் சூழ‌ல் ஏற்ப‌ட்ட‌து.

     ‘முகத்தை எப்போதும் மூடிக்கொள்ளாதே எனது நெஞ்சத்தில் முள்ளாய் குத்தாதே’

இந்தப் பாடலைக் கேட்டவகளுக்கு அடுத்த வரி பழக்கப்பட்டதுதான்.

‘உருது கவிஞன் உமர்கய்யாமின் கவிதையா..?’

     அது யாருப்பா புதுசா ஒருத்தன். உருது கவிஞன். உமர் கய்யாம்? உள்ள கவிஞர்களுக்கே பதில் சொல்ல போதும் போதும்னு ஆகுது. புது கவிஞன். யோசித்தேன்; இவன் புதுக் கவிஞனோ புரட்சிக் கவிஞனோ தெரியவில்லை ஆனால் என்னை குழப்பியக் கவிஞன். மேற்சொன்ன பாடலுக்கு பிறகு உமர் கய்யாம் கவிதைகள் எப்ப‌டி இருக்கும். உருது மொழி தெரிந்த யாரால் அந்தக் கவிஞன் தமிழில் அறியப்பட்டான் என குழம்பினேன். தெரிந்தவர்களிடம் கேட்கத் தெரிந்தது; கேட்டவர்களுக்கு பதில் தெரியவில்லை. எப்ப‌டியாவ‌து அக்க‌விஞ‌னை தேடி அடைய வேண்டும் என புத்த‌க‌க் க‌டைக‌ளில் தேடிக்கொண்டிருந்த‌போது தைப்பூசம் வ‌ந்த‌து.

     சுங்கைப் பட்டாணி ஸ்ரீ சுப்பரமணியம் ஆலயத்தின் எதிர்ப்புறம் புத்தகக்கடைகள் போனால் போகிற‌தென தோன்றின. புத்தகங்களை விடவும் புத்தகங்கள் அல்லாதவை அதிகம் இருந்தன. ஆனால் முக‌ப்பில் குறிப்பிட்டிருந்தது என்னமோ புத்தகக்கடைதான். மிகுந்த ஏமாற்ற‌த்தில் இருக்கையில் சில மாதம் கழித்து, அதே முருகன் கோவில் புதிய மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது ஒவ்வொரு வருடமும் தவறாமல் வரும் காய்ச்சல் போல. பலமுறை செல்ல நினைத்தும் பணமில்லாததால் தவிர்த்தேன், இந்த முறை வேலைக்குச் சேர்ந்த காரணமும் சம்பள நாள் காரணமும் கைகூடியது.

     வாசலில் பணம் கட்டவேண்டிய மேஜை இருந்தது; அருகில் பூஜைக்கு வைத்த பிள்ளையாராய் ஒருவர். வேண்டுமென்றே அந்தப் பூஜைக்கு வைத்த பிள்ளையாரிடம் சில பெயர்களைச் சொல்லி, இந்த புத்தகங்கள் எல்லாம் இருக்கா என விசாரித்தேன். எல்லா புத்தகமும் உள்ளே இருக்கு தேடினா கிடைக்கும்னு சொன்னார். அது தெரியாமலா இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னு மனதில் நினைத்தேன். புத்தகங்கள் விற்பன‌ர்கள் புத்தகத்தை மதியாவிட்டாலும் பரவாயில்லை; சில பெயர்களையாவது மதியில் பதிக்கலாமே? எதைக் கேட்டாலும் சொல்லும் பதில் ‘இருக்கும்’ என்பதுதான்; வாசிக்கின்றவர்கள் நேசிக்கும் வார்த்தை ‘இருக்கின்றது’ என்பதைதானே.

     புதிதாய் பிறந்த புத்தகம் முதல் கிழிந்த புத்தகம் வரை இஷ்டப்படி அடுக்கியிருந்தார்கள். பெரும்பாலும் ஆங்கில மலாய் புத்தகங்கள் நல்ல அட்டையில் இருந்தன. கை படாததாலா இல்லை காசு கொடுத்து வாங்கிச் செல்வதாலா தெரியவில்லை. மண்டபத்தை மூன்றாவது முறையாக சுற்றிவரும்போதுதான் கண்ணில்பட்டது கவிதை புத்தகம். “உருது கவிஞன் உமர் கய்யாம் கவிதைகள்” மொழிபெயர்த்தவரின் பெயர் நினைவில் இல்லை. ரொம்ப பழைய புத்தகம். முதல் பக்கத்தையும் முடியும் பக்கத்தை மடக்கினால் உடைந்து அல்லது உதிர்ந்துவிடும் போல இருந்தது.

     பார்த்ததும் விரிந்த கண்கள், பக்கங்களைத் திருப்பியதும் சுருங்கியது. எதுகை மோனையோடு எழுதப்பட்டு இருந்தது அந்தக் கவிதைகள். உருது கவிஞனது க‌விதையை இப்படியா மொழிபெயர்ப்பது? புரியவில்லை? அப்படி எதுகை தேவை மோனை தேவை சந்தம் தேவை என்றால்; எனக்கு உருது கவிஞன் உமர் கய்யாம் எதற்கு? நம் நாட்டில்தான் அப்படி பல கவிஞர்கள் & கய்யாம்கள் இருக்கின்றார்களே...? உருது மொழி க‌விதைக்குள் அதை புகுத்தியிருக்க வேண்டாம். அதன் சாராம்சத்தை சொல்லிய பிறகு தங்களில் திறமைகளில் எதுகைக்கும் மோனைக்கும் இடம் தந்திருக்கலாம். அதை செய்யாமல் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் இப்படிச் செய்திருப்பது எப்படி உருது கவிதையைப் பற்றி எனக்கு சொல்லும்?

     ‘உமர் கய்யாம்’ புத்தகம் என்னை ஏமாற்றிய‌ப் பிற‌கு கைக்கொடுத்தது நான் வாங்கிய மலையாள மொழிபெயர்ப்பு சிறுகதைகள்தான். பிற மொழி இலக்கியங்களைத் தெரிந்து கொள்வதன் மூலம் நம் மொழி இலக்கியத்தின் தூரத்தையும் தரத்தையும் ஓர‌ள‌வு தெரிந்துகொள்ள முடிகின்ற‌து. ‘மாத்தனின் கதை’ என்ற த‌லைப்பில் மலையாளச் சிறுகதைகள் அப்புத்த‌க‌த்தில் தொகுக்க‌ப்ப‌ட்டிருந்தன. கேரள எழுத்தாளர்களின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருந்தார் சாரா. இவர் 75 நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறாராம். தொடக்கத்தில் சக்கரியா என்ற எழுத்தாளரின் ‘சத்திய வாக்குமூலம்’ கதையைப் படித்தேன்.

“நீ சத்திய வாக்குமூலம் அளிக்கனும், அப்படித்தானே..?”

“ஆமாம் தோழரே..!”

     இப்படியாகத் தொடங்குகின்றது கதை. இரண்டு கதாப்பாத்திரங்களின் உரையாடல்தான் கதையை நகர்த்துகிறது. அரசியல் பிரமுகர்கள் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒருவர் பதில் சொல்லிக் கொண்டே வருகின்றார். கேள்வி கேட்டவரின் அடுத்த கேள்வி ‘சத்தியமா..?’ என வருகின்றது. அதற்கு பதிலாக “சத்தியம்” என்றே பதில் வருகின்றது. ஒவ்வொரு பிரமுகர்களின் பெயர்களையும் சொல்லி; புகழ்ந்து; சத்தியமா என கேட்க, சத்தியம்தான் என பதில் கிடைக்கிறது.

     இதுதான் கதையா...? இப்படித்தான் கதை முழுக்கப் போய்க்கொண்டே இருந்தது. எனக்கோ கதை பிடிபடவில்லை (பிடிக்காமலில்லை). எல்லாம் உண்மைதானே அப்போ எதுக்கு இந்த கதை. ஆனால்; கதையின் முடிவில்தான் சுளீர் என்றது. அதுதான் ‘சத்திய வாக்குமூலம்’.

“நாம் கடவுள்மீது நம்பிக்கை வைக்கலாமா..?”

“வைக்கக் கூடாது”

“நீ கடவுளை நம்பலை..?”

“நம்பலை”

“சத்தியமா..?”

“கடவுள் மேல சத்தியமா...”

“ஆமேன்”

      இதனோடு கதை முடிகின்றது. இதுவரை சத்தியம்; சத்தியம் என சொன்னவர் முடிக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லையாம். அதற்கு ஆமேன் என. ஆக இதுவரையில் சத்திய வாக்குமூலமாக இவர் சொன்னதெல்லாம் அரசியல் சூழல் குறித்த கேலியோ என யோசிக்க கைக்கிறது. இப்படியும் சமகால அரசியலை பேசலாமோ. ‘கண்ணைத் திறந்தேன் அப்போதுதான் தெரிந்தது அது கனவென்று’ என்று கதையை முடிபவர்கள் இதையெல்லாம் கொஞ்சமேனும் கவனிக்கலாம்.

      இவ்வாறான கதை குறித்த ஆராய்ச்சியெல்லாம் நமது கோலாலம்பூர் இளைஞர்களுக்கு இல்லை. அவர்கள் சொல்லாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அண்மையில் நான் சந்தித்த ஒரு இளைஞர் குழு மனுஷி... பொம்பள... பொண்ணு... இந்த மூன்று வார்த்தைகளையும் புது அர்த்தத்துடன் மொழிபெயர்த்திருக்கின்றார்கள்.

மனுஷி – கல்யாணம் ஆகி சில ஆண்டுகள் ஆனவங்க.

பொம்பள – கல்யாணம் ஆகி பல ஆண்டுகள் ஆனவங்க.

பொண்ணு - கல்யாணப்பேச்சை இனிமேல்தான் ஆரம்பிக்கனும்.

        இதை கேட்ட எனக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் இதற்காவது மூளையைப் பயன்படுத்துகிறார்களே என ஆறுதல் படுத்திக்கொண்டேன். ஆறுதல் படுத்திக்கொள்வதால் மட்டுமே இப்போதைக்கு கொஞ்சம் நிம்மதியாகவாவது தூங்க முடியும்... துர்கனவுகளின் தொல்லை இல்லாமல்.


நன்றி
இதழ் 26
பிப்ரவரி 2011

பயணிப்பவனின் பக்கம் 1

   (ம.நவினை ஆசிரியராகக் கொண்ட 'வல்லினம்' அகப்பக்கத்தில் வந்துக் கோண்டிருக்கும் எனது தொடர் - பயணிப்பவனின் பக்கம் )


பயணிப்பவனின் பக்கம் 1


         யார் நான்...? தோட்டப்புற இளைஞன். குடும்பத்தில் இரண்டாவது மகன். ஒரு புறம் தம்பி மறுபுறம் அண்ணன். நண்பன். இனிக்க இனிக்க பேசி பெண்களை கவர்கின்றவன். செய்தத் தவறுகளையும் செய்துக் கொண்டிருக்கும் தப்புகளையும் நாசுக்காக மறைப்பவன். நம்பிப் பழகினாலும் சுயநலம் கொண்டவன். சிரித்த முகமாய் அனல் விடுபவன். கையில் கிடைத்ததை தூக்கி வீசும் கோபம் கொண்டவன். சொந்த அண்ணனைக் குத்த கத்தி எடுத்தவன். புத்தகங்களை நேசிப்பவன். பிடித்த வார்த்தைகளுக்கு அடிக்கோடிடுபவன். பிடிக்காத நபர்களுக்கு புள்ளி வைப்பவன். வானொலி அறிவிப்பாளன். பலகுரல் கலைஞன். ஏமாற்றுகாரன். சிடுமூஞ்சி. அப்பாவி. அடப்பாவி. சுஜாதா பிரியன். இந்திரா சௌந்தரராஜனின் வாசகன். Dr. ஜெயபாரதியில் ரசிகன். ஆவிகள் குறித்து வெட்டியாய் தகவல் சேகரிப்பவன். சில கடவுள்களுக்கு உறவானவன் சில கடவுள்களுக்கு முரணானவன். வளரும் எழுத்தாளன். திமிர் பிடித்தவன்.

       இப்படி பலராலும் பலவாறாகப் பார்க்கப்படுபவன் தான் இந்த ‘நான்’. பார்வை மீதும் தவறில்லை ஏனெனில் அது அவர்களின் பார்வைக்கு; நான் பிறருக்குத் தெரிவதை பொருத்தது. தெரிவது நான் தான் என்பதால் அவர்கள் சொல்வதில் 50 சதவிதம் உண்மை இருக்கின்றது. மீதி 50 சதவிதம் எங்கே என்ற கேள்வி எனக்குள் தொடங்கி பல நாட்கள் ஆகின்றது. அந்த கேள்விக்கான பதில்தான் ‘பயணம்’. நான் பேசும் புத்தகங்களும் என்னுடனான சிலரின் சந்திப்புகளும்தான் இந்தப் பயணத்திற்கான பயணச்சீட்டு.

      இங்குதான் செல்கின்றோம் என்ற தீர்கமான முடிவுடன் செல்பவர்கள் ஒரு வகை. இது நம் இலக்கில்லை என்று தெரிந்தும் செல்வது மறுவகை. இது நமக்கான இலக்காக இருக்குமோ என்று சந்தர்பங்களாலும் சந்தேகங்களாலும் செல்வது தனிவகை. மேற்சொன்ன எனது மீதி 50 சதவிதம் ‘நான்’ ஒருவேளை எழுத்தில் இருக்கலாம் என்ற தனிவகைப் பயணத்தைச் சார்ந்தது.

     ‘முத்து’ திரைப்படத்தில் முக்கிய ஒரு காட்சி வரும். ரங்கநாயகியை அரண்மனைக்கு அழைத்து வருகின்றார் முத்து. தன் காதலை ஏற்றுக்கொண்டுதான் அவள் வருகின்றாள் என நினைக்கின்றார் முத்துவின் நண்பன். ரங்கநாயகி வாசலை நோக்கிச் செல்கின்றாள். அவளுக்கு பின்னால்; வலது புறம் முத்துவும் இடது புறம் முத்துவின் நண்பனும் தெரிகின்றார்கள். அதே நேரத்தில் எங்கோ ஒரு தூரத்தில் இருக்கும் அந்த அரண்மனைக்கு உரிமையாளரான தற்போதைய சாமியாருக்கு சிரிப்பு வருகின்றது. இடைவேளை அங்குதான் ஆரம்பிக்கின்றது.

       முத்துவுக்கு ஒரு காரணம்; முத்துவின் நண்பனுக்கு ஒரு காரணம். அதை தொடர்ந்து வரும் காட்சிகளின் தங்களின் இருவேறு காரணங்களுக்காக இருவரும் செயல்படுகின்றனர். இரு செயல்களுக்கும் ஒரு காரணம்தான் இருக்கின்றது; ரங்கநாயகி. அந்த இரு காரணங்களில் ஒன்றுதான் நிறைவேறும். அதைக் கண்டு சிரிக்கும் அந்த மூன்றாம் நபர் ஆதி அந்தமில்லாத ஒன்றாக இருக்கட்டும். வல்லினத்திற்காக வந்திருக்கும் இந்த ‘பயணிப்பவனின் பக்கத்திற்கும்’ அப்படி ஏதாவது இருக்கலாம்.

      சமீபத்தில் பழைய புத்தக்கடைக்குச் சென்றிருந்தேன். புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படிருக்கும் அடுக்குகளில் பல புத்தகங்கள் நிஜம் அற்ற நிறத்தில் இருந்தன. யோசிக்கையில் இதுதான் என முதல் அனுபவமாக இருக்கும். பழைய புத்தகங்களின் வாசனையில் இருக்கும் உன்னதத்தன்மையை வார்த்தையில் விளக்குவதை விட மூக்கால் தெரிந்து கொள்வதே சிறப்பு.

       ஒவ்வொரு புத்தக்கத்தையும் ரசித்தவாறு நகர்த்திக் கொண்டிருந்தேன். எம். எஸ். உதயமூர்த்தியின் புத்தகங்கள் குழந்தை வளர்ப்பு, கைத்தொழில், சமயக் கேள்வி பதிகள் குறித்த பல புத்தகங்கள் கைப்படுவார் யாருமின்றி பரிதாப நிலையில் இருந்தன. கரத்தில் பட்டால்தானே கருத்தில் பதியும். இன்றைய மலேசியத் தமிழர்கள் நிலைக்கு இதுவும் காரணம் என்றால் மறுப்பார்; நிச்சயம் இருப்பார். என் தந்தையி‎ன் அலமாரியிலும் பல புத்தக்கடைகளிலும் பார்த்துப் பழகி கவிஞர் ஒருவரின் புத்தகத்தை அந்த பழைய புத்தக இருப்பிடத்தில் பார்த்தேன்.

      இன்று பலரின் மறதிக்கு ஆளான கவிஞர் மூ. மேத்தாவின் ‘அவர்கள் வருகிறார்கள்’. மங்கிய ஏடுகள் கொண்ட புத்தகத்தை எடுத்துக் கடைக்காரரிடம் கொடுத்தேன். என்னையும் புத்தகத்தையும் பார்த்தக் கடைக்காரர் “ஒரு வெள்ளி கொடுங்க தம்பி போதும்” என்றார். ஐந்து வெள்ளி கொடுத்து மீதம் வேண்டாம் என்றேன். அவர் என்னை என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நானும் கேட்கவில்லை. அதனுடன் வார மாத இதழ்கள் சிலவற்றை வாங்கினேன்.

      அலுவலகம் வந்ததும்; என்னிடமிருந்த ‘அவர்கள் வருகிறார்கள்’ புத்தகத்தை தோழி ஒருத்தி இரவல் கேட்டாள். என்னை நான் வாங்கியிருக்கும் மற்ற புத்தகங்களை படிக்கும்படி கட்டளையிட்டாள். நான் படிக்காத புத்தகங்களை யாருக்கும் கொடுக்க மாட்டேன். அன்று அவளுக்கு நல்ல நேரம். எனக்கு...?

      இரண்டு நாள்கள் கழித்து, புத்தகத்தை திரும்ப கொடுத்தாள். வழக்கம் போல் அவளிடமும் அந்த புத்தகத்தில் பிடித்தது குறித்தும் அவள் ரசித்தது குறித்தும் விசாரித்தேன். கேட்காமலிருந்திருக்கலாம். மிகவும் நன்றாக ரசிக்கும்படி இருந்தது; அதிலும் சமுகப்பிரச்சனையை கையில் எடுத்திருப்பது நன்று என்றாள். சின்ன இடைவேளை விட்டு, ஆனால் ஒரு கவிதைதான் புரியவில்லை என்றாள். நானும் எல்லாம் தெரிந்த நினைவில் அந்தக் கவிதையைப் படிக்கச் சொன்னேன். தயாராக திறந்து வைத்திருந்த கவிதையைப் படிக்கத் தொடங்கினாள்.

நெடுஞ்சாண் கிடையாய்
நிலத்தில் விழுந்த
பக்தனின் முன்னே
பரமன் தோன்றினான்
பக்தன் –
என் மனதில் வந்து
இரு... இரு....
என்று
கதறித் துடித்துக்
கண்ணீர் வடித்தான்
பரமன் உடனே
பறந்தான்;
பக்தனின் செருப்புகள்
கிடந்த வாயிற்
படிக்கட்டை நோக்கி.....

     கவிதையை முடித்தாள். எனக்கும் பிடிபடவில்லை. நாளை சொல்வதாக சமாளித்தேன். தப்பித்தேன்.

     ‘என் மனதில் வந்து இரு என்கிறான் பக்தன்; கடவுளோ காலணி இருக்கும் இடத்தை நோக்கி செல்கிறார்’. தூக்கத்துக்கு பதில் இந்த வார்த்தைகள்தான் வந்துவந்து போனது. அதைத் தொடர்ந்து ஏதேதோ எண்ணங்களும் சந்திப்புகளும் வரத்தொடங்கின. தூக்கம் மட்டும் என் விலாசத்தை மறந்துவிட்டது.

     காலையில் என்னை வழி மறைத்து விளக்கம் கேட்டாள் தோழி. கவிதையை மீண்டும் சொல்லச் சொன்னேன். சொன்னாள். சட்டென மூளையில் ‘டிங்’ என்ற சத்தம். பதில் சொல்லத் தொடங்கினேன்.

      ‘கழட்டி வைத்த செருப்பு நினைவாக இருக்கின்றான் பக்தன். நினைவு இருக்கும் இடத்தில்தானே மனதும் இருக்கும். கடவுளைக் கண்ட பின்னும் தன் செருப்பின் மீது நினைவை வைத்திருக்கும் பக்தனின் மனதை நாடவேண்டியது கடவுளின் வேலைதானே. இப்படித்தான் நம்மில் பலர் இருக்கின்றார்கள். முன்னுக்கும் பின்னுக்கும் தொடர்பில்லாமல்... எனச் சொல்லி முடித்தேன்.

அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளால் மட்டுமா....?

இதழ் 25
ஜனவரி 2011

ஜூன் 19, 2012

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்






    அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.
    படித்தும் வேலை இல்லாதவன் எங்கும் வேலை செய்வான் தானே. நானும் அப்படித்தான். ஒருவேளை நான் படித்தவன் என்பதால் கூட வேலையில்லாதவனாக இருக்கலாம்.  ஆனால் வேலை அவசியம். என் நிலை அப்படி. முன்பெல்லாம் கேள்விகளுக்கு பதில் சொன்னால்தானே வேலை கொடுப்பார்கள். இப்போதும் அப்படித்தான் என்கிறீர்களா. சரி சொல்லுங்கள் ஆக கடைசியாக நீங்கள் எப்போது வேலை கேட்டீர்கள். அதான் நேர்முகத் தேர்வுக்கு சென்றீர்கள். ஓராண்டுக்கு முன்பு? ஈராண்டுக்கு முன்பு? ஐந்தாண்டுக்கு முன்? இருக்கலாம். எப்படியும் ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும் இருக்கலாம். சரியா. என்னமோ நேற்று வேலைக்கு சென்று, பதிகளைச் சொல்லி, வேலை கிடைத்ததும், இன்று வேலைக்கு கிளம்பும் தோணியில் நீங்கள் பதில் சொல்லியிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
   நான் இன்றைய நாளோடு இரண்டாவது ஆண்டாக நேர்முகத் தேர்வுக்கு செல்கிறேன். எப்படி அவ்வளவு துல்லியக் கணக்கு என்கிறீர்களா..? யோசிக்கிறீர்களா..? காலையில்தான் அப்பா பஜனை பாடினார். “இன்னையோடு ரெண்டு வருசமா தண்டச்சோறு சாப்டறடா..” என்றார். பதில் ஏதும் பேசவில்லை. கேள்வி மட்டும் கேட்க நினைத்தேன். வேலை இல்லாதவன் என்ற ஒரு காரணத்துக்காக, வாசலில் யாரும் வந்திருந்தால் நான் தான் போய் பார்க்கனும். தபாலைக் கூட நான் தான் வாங்கனும். கூரைக்கு கீழ் சுற்று காத்தாடி முதல், தரை மேல் தூசியிருந்தாலும் நான் தான் வசைப் பாடப்படுவேன்.
அப்பா,
“ஏண்டா சும்மாதானே இருக்கே , அந்தா காத்தாடியை சுத்தம் செய்யேன்”
அம்மா;
“ஐய்யா இப்பதான் பார்த்தேன், மிளகாய் முடிஞ்சிருச்சி.. பக்கத்து கடைக்கு போய் வாங்கிட்டு வந்திடறயா..? சமைக்கனும்... சீக்கிரம்ம் வந்திடு..” (பக்கத்து கடை என்பது, வீட்டில் இருந்து அரை மணிநேரம் நடக்கவேண்டும் அதிலும் நான் நடந்தே போகவேண்டும்)
அண்ணன்;
“இந்த இந்த சட்டையை அயன் செய்திடு, அன்னிக்கு மாதிரி அங்கொன்னும் இங்கொன்னும் மாதிரி செய்துடாத.. எனக்கு வேலைக்கு மணியாகுது..”
    இந்த அண்ணன்களே இப்படித்தான். அதிலும் எங்க அண்ணன் ஒரு படிமேல. எல்லாரும் ஏமாந்த மொளகா அரைப்பாங்கன்னுதானே  சொல்லுவாங்க, எங்க அண்ணன் மொளகா.. பருப்பு... காய்கறி... இப்படி எதுஎதையோ அரைச்சிடும். அப்படியே நங்கென தலையில் கொட்டதான் ஆசை. முடியாது. வேலை கிடைக்கும்வரைதான் அப்பு உனக்கு மரியாதை. வேலை மட்டும் கிடைக்கட்டும் அப்பு உனக்குதான் முதல் ஆப்பு. அடுத்த ஆப்பு எங்க அப்பாவுக்கு. என்னடா இவன் ஆப்பு கீப்புன்னு அசிங்கமா பேசரானேன்னு நெனைச்சிடாதிங்க. இதுக்கு என் மனசாட்சி. யார் மனசாட்சிதான் நாகரிகமா பேசியிருக்க சொல்லுங்க.
      இன்றும் வேலைக்கு சென்றேன். வேலைக்கு என்றால் வேலைக்கு அல்ல, வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு. எப்படியும் வேலை கிடைச்சிடும். எப்படின்னு கேட்கறிங்கலா? எல்லாமே நம்பிக்கைதான். இதை வச்சித்தானே தன்முனைப்பு அந்த முனைப்புன்னு நாட்டுல நிறைஅய் பேரு வேலை செய்ஞ்சு சம்பாதிக்கறாங்க. உடனே கோவப்பட்டு போய்டாதிங்க மீதி கதையை யார் படிப்பா..?
    வழக்கமான நடைபாதையில்தான் அன்றும் சென்றுக் கோண்டிருந்தேன். பாதைதான் பழையது. இங்கு காலை வேலையில் வந்தும் பறந்து இருக்கும் பறவைகள் ஒவ்வொன்றும் புதியவை. ஏன் முதல் பார்த்த பறகைளை மறுநாள் பார்க்க இயலவில்லை. ஒரு வெலை மனிதர்களை ஏமாற்ற பறவைகளும் மாறுநாள்களில் மாறுவேடம் போட்டு உலாவுகிறதோ. இருக்காது, பறவைகள் எல்லாம் நம்ம அளவுக்கு இல்லை. அவை இன்னமும் நல்லவையாகத்தான் இருக்கும் @ இருக்கனும். பறவைகள் என்றது ,எப்போதோ படித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருவர் மற்றொருவரைக் கேட்கிறார்,
“இந்த வேடந்தாங்களுக்கு வரக்கூடிய பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருது தெரியுமா..?”
“தெரியலையே..”
“இதுகூடவா தெரியலை, வேடந்தாங்களுக்கு வரக்கூடிய பறவைகள் மட்டும் இல்லை, எல்லா பறவைகளும் முட்டையில் இருந்தான் வருகின்றன...”
   படித்ததும் சிரிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. ஆனாலும் நான் சிரித்து வைத்தேன். இல்லாவிட்டால் வேலையில்லாதர்கள் எப்போதுதான் சிரிப்பது. வீட்டில் சிரிக்கவிட்டால்தானே.
    புதிது புதியாய் வந்திருக்கும் பறவைகளை பார்த்துக் கொண்டே நடப்பதில்தான் எத்தனை சுகம். ஆனால் இன்று பார்வைக்கு அந்த சுகம் முழுமையாகக் கிடைக்கவில்லை.
     ஏதோ காகிதத்துண்டு என் காலடியில் விழுந்ததை எப்படித்தான் பார்த்தேன். தெரிடவில்லை. ஆனால் பார்த்தேன். கையில் எடுக்கும் முன் என் கையில் வைத்திருக்கும் என வண்ணவண்ண சான்றிழ்தல்களை இருக்கமாக பிடித்துக் கொண்டேன். நான் கீழே குணியும் போது என் சான்றிதழ்கள் எதிர்பாராவிதமாய் பறக்கவும், அதை எடுக்கவும், எனக்கு ஒரு பெண்ணின் உதவி கிடைக்கவும், நான் இளிக்கவும், பதிலுக்கு அவளும் சிரிக்கவும், எங்கள் காதல் முழைக்கவும் இப்படியெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் . ஒருவேளை என் போன்ற அழகான வாட்ட சாட்ட வாலிபனுக்கும் நடக்கலாம்தானே. அதான் ஒரு முன்னெச்சிரிக்கை. வேலை கிடைக்கும்வரை காதலும் வேண்டாம்... மோதலும் வேண்டாம்.
    நல்லவேலையாக என் சான்றிதழ்களை பிலாஸ்டிக்கில் கோப்பில் வைத்திருந்தேன். இல்லையென்றால் எப்போதோ என்  விரல் வியர்வை, சான்றிதழ்களை வீணாக்கியிருக்கும்.
   காலில் பட்ட காகித்தை எடுத்துப் பார்த்த்தில் இன்ப அதிர்ச்சி. ‘வேலைக்கு ஆள் தேவை’ எனும் விளம்பரம். யாரோ வெட்டியிருக்கிறார்கள் . ஆனால் தவறவிட்டுவிட்டார்களே. ஒருவேளை எனக்காகக் கூட வெட்டியவர்கள் இதனை தவறவிட்டிருக்கலாம்.
   என்ன வேலை, அட அறிவியல் கூடத்தில் வேலையா..? உடல் முழுக்க வெள்ளை அங்கியை போட்டுக் கொண்டு ஒரு மூக்கு கண்ணாடியை மாட்டிக் கொண்டு இரண்டு கைகளையும் கால்சட்டைப் பாக்கேட்டுக்குள் விட்டுக் கொண்டு கூன் விழுந்த மாதிரி வேலை செய்யவேண்டுமே. கண்ணாடியென்றது இன்னொரு ஜோக் நினைவுக்கு வருகிறது.
   ஒருத்தருக்கு காதை வெட்டினா கண்ணு தெரியாதாம் அது என்ன? தெரியலையா.. அதாங்க விடையை முதல்லயே சொல்லிட்டேனே.. நீங்க போய் முதல்ல எழுதன தலைப்படி படிச்சி அதான் விடைன்னு புரிஞ்சிக்காதிங்க. அவ்வளவௌ மேல எல்லாம் போக வேண்டாம். இந்து ஜோக்குக்கு மேல போய்  மூக்கு கண்ணாடின்னு இருக்கும் பாருங்க அதை படிச்சிட்டு வாங்க. அதான் விடை. அதுசரி இது என்ன விடுகதையா நகைச்சுவையா? தெரியலை வேலையில்லாததால எதுஎதையோ படிச்சி சிரிக்கும்படி என் நிலமை ஆகிடுச்சி பார்த்திங்கலா. இனியும் அது தொடராது. ஏன்னா எனக்குத்தான் வேலை கிடைக்கப் போகுதே. ஆனா அந்த வெள்ளை அங்கியும் மூக்கு கண்ணாடியும் இருக்கே.....
    அதிலும் எனக்கு வெள்ளையங்கியும் பழைய தாத்தா காலத்து மூக்கு கண்ணாடியையும் கொடுத்தால், பொறுத்தமாக இருக்கும்மோ இருக்காதோ.
     ஒன்னு செய்யலாம். அறிவியல்காரர்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. இவர்கள் ஜீன்ஸ் டீ-சர்ட் எல்லாம் போட்டுக் கொண்டும் ஏன் பணியன் கூட போட்டு கொண்டு வேலை செய்யலாம் என புரட்சி செய்திடவேண்டியதுதான். என்ன ஒன்னு தனியா செய்தா எடுபடாது. கூடாவே ஐந்து பேரை சேர்த்துக்குவோம். அப்பறம் ஆளுக்கு ஒரு கட்சியா, என்ன சொன்னேன் ஆளுக்கு ஒரு கட்சியா சொன்னே..! அதை மறந்திடுங்க. ஆளுக்கு ஒரு காட்சியா பிரிஞ்சி போய்ருவாங்க. நேய் வருவதற்கு முன்பே பூனை ஒடிஞ்ச கதைதான். ஆமா பூனையா சொன்னேன் இல்லையில்லை, பூனையில்லை ஒடிஞ்சது பானை.
     அறிவியல் கூடத்தில் வேலை செய்வதில் சம்பளத்தையும் தாண்டிய லாபமும் இருக்கிறது. எனக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த நோய் வந்தாலும் நானே மருந்து கொண்டுவந்து கொடுத்திடுவேன். அதிலும் எங்க அண்ணனுக்கும் எங்க அப்பாவுக்கும் வாயே திறக்க முடியாத அளவுக்கு ஏதாவது மருந்து இருக்கா பார்க்கனும். எனக்கும்கூட அடிக்கடி சளி பிடிச்சி ஒழுகுது . மூக்கு சளியை பற்றிகூட ஒரு ஜோக் படிச்சிருக்கேன். சொல்லவா..? வேணாம்ங்க. பாவம் நீங்க. ரொம்பதான் பாடாய் படுத்தறேன் போல. சரி ஜோக்கை விடுங்க. வேலைக்கு வருவோம். சாதாரண வேலையா இது; அறிவியல் கூடத்தில் வேலை.
    ஒருவேளை அறிவியல் கூடத்தில், குப்பை அள்ளும் வேலையோ...? ச்செ ச்சே அதெல்லாம் இருக்காது. இருந்துட்டா என்ன செய்றது? எங்க வேலைன்னு மட்டும் சொல்லுவோம். என்ன வேலைன்னு சும்மா எதையாவது சொல்லிவைப்போம். வந்து பாக்கவா போறாங்க. நாட்டுல அவங்கவுங்களுக்க அவுங்கவுங்க வேலை. அதுவும் இப்போ அங்கயும் இங்கயும் மாறிமாறி கூட்டம் போடறாங்க.. அதுவும் ஒரு வேலையாகிப் போச்சி இப்போ. அதுக்கும் பணமெல்லாம் கொடுக்கறாங்களாமே..? எனக்குத் தெரியலை.
      எப்படியும் இந்த வேலை எனக்குத்தான் என நான் முடிவு செய்துவிட்டேன். கடந்த இரண்டாண்டுகளும் ஒவ்வொரு நேர்முகத் தேர்வுக்கு இப்படித்தான் நினைத்துக் கொண்டு சென்றேன்.கிடைக்கவில்லை. இப்போது மட்டும் எப்படி கிடைக்கும் என நான் இப்படி நம்புகிறேன். ஏதாவது காரணம் இருக்குமோ?
    இருக்குமோ இருக்காதோ... நாம் முயலத்தானே வேணும்.
    அய்யோ, எங்கே இந்த கடித்தில் தொலைபேசி எண்களைக் காணவில்லையே. ஹப்பாடா.. இருக்கிறது ஆ... என்ன இது ஒரு எண் குறைகிறதே. ஏன்யா இந்த விளம்பரத்தை வெட்டின மூதேவி, ஒரு கடித்தையே உன்னால ஒழுங்கா வெட்ட முடியலையே, உன்னையெல்லாம் அறிவியல் கூடத்தில வேலை சேர்த்தா என்ன ஆகுமோ..  அதான் கடவுளா பார்த்து, இல்லையில்லை கடவுளைப் பற்றி பேசக்கூடாது. அறிவியலைப் பொருதவரை எதுவும் அவன் செயல் இல்லை, எல்லாமே அவனவன் செயல்தான்.
   யோசிப்போம்.
    அட ஆமாம்ல்ல, கடைசி எண்தானே இல்லை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை இருப்பதே ஒன்பது எண்கள்தானே . ஒவ்வொரு எண்ணையும் கடைசி எண்னாக வைத்து அழைத்துப் பார்க்கலாமே. யோசிக்கிறீர்கள்தானே ஒன்றில் இருந்து ஒன்பது வரை ஒன்பது எண்கள் இருந்தாலும், கடைசியாக இருக்கும் பூஜ்ஜியத்தையும் சேர்க்கவேண்டுமே. என்ன..? பூஜ்ஜியமா..! தமிழ்த்தாயே ஐ ம் சாரி, பூஜ்ஜியம் என சொல்லிவிட்டேன். நியாயமாக சுழியம் என்றுதானே சொல்லியிருக்கவேண்டும். ஒன்ஸ் எகைன், ஐ சாரி மை டியர் தமிழ்த்தாயே. 
   எப்படியும் உடனே அழைத்துப் பேச வேண்டும். வேலை கிடைப்பது என்ன சும்மாவா. அதுவும் அறிவியல் கூடத்தில் வேலை. இப்போதே கற்பழிக்காத பொது தொலைபேசியைத் தேடவேண்டும்.
    இவ்வளவு பேசறவன்கிட்ட போன் இல்லையான்னு யோசிக்காதிங்க. பழைய மோடல் நோக்கிய போன். இருக்கு. அதாங்க தரையில் விழுந்தாலும் தரையை சிமண்டை உடைத்து , அப்படியே இருக்குமே அந்த போன்தான். என்ன போனிருக்கு, பணமில்லை. வேலைவெட்டி இல்லதவனுக்கு சோறும் போனுமே தண்டம் எதுக்கு போன்ல காசு என சொல்லித்தான் போனை கொடுத்தார் அப்பா. அவர்கள்தான் தேவையென்றால் என்னை கூப்பிடுவார்கள். நான் யாரைக் கூப்பிட்டு வேலை சொல்வது..? என் பேச்சைத்தான் கேட்பார் யாருமில்லையே.
    கையில் இருக்கும் சில்லறைக் காசுகளை பயபத்திரமாக பயன்படுத்த நினைத்தேன்.
    அதிஸ்டம்தான் இரண்டாவது அழைப்பே கிடைத்துவிட்டது.
“ஹல்லோ”
    பெண்குரல் கேட்டது. பெண்ணாகவும் இருக்கலாம். சார் எனவும் கூப்பிடாமல் மேடம் எனவும் கூப்பிடாமல் சமாளிப்பது சிரமம்தான். குரலைக் கேட்டாலே தெரிந்திடுமே என்கிறீர்கள்தானே. அது சரி நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள். இப்போதெல்லாம் குரலுக்கும் உடலுக்கு சம்பந்தமில்லை. இதை வைத்துக் கூட நிறைய பட ஜோக்குகள் வருகின்றன. எனக்கு எழுதத் தெரிந்த அளவுக்கு படம் வரையத் தெரியாது. அதனால் அந்த பட ஜோக்கை உங்களுக்கு காட்ட இயலவில்லை.
    நாளைக்கே நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டுமாம். அவர்களே காரை அனுப்பிவைப்பார்களாம். மீண்டும் அவர்களே கொண்டு வந்து வீட்டில் இறக்கிவிடுவார்களாம். வேலை கிடைத்தாலும் வேலை கிடைக்காவிட்டாலும் இப்படி செய்வார்களா என கேட்டுத் தெளிந்துக் கொண்டேன். இல்லையென்றால், யார் நடந்து வருவார்கள். அவர்கள் சொல்ன்ன முகவரியே எனக்கு புதிதாக இருக்கிறது. எவ்வளவு தூரமோ என்னமோ.
    மறுநாள் காலை, மடிப்பான சட்டையின்றைப் போட்டுக் கொண்டேன். குறுக்கும் நெடுக்கும் வீட்டு வரவேற்பறையில் நடந்துக் கொண்டிருந்தேன்.
அம்மா;
“எங்கய்யா காலையிலேயே...?”
“வேலைக்கு”
அப்பா;
“எங்கடா..?”
“வேலைக்கு...”
அண்ணன்;
“என்ன சார் காலையிலேயே கலக்கலா இருக்கிங்க...”
“வேலைக்கு...”
    வேலைக்கு என்ற ஒன்றைத் தவிர வேறேதும் சொல்லத் தெரியவில்லை. சொல்லவும் தோணவில்லை.
   சொன்ன நேரத்தில் கார் வந்தது. எதிர்ப்பார்க்கவில்லை. உயர் ரக கார். வீட்டில் எல்லோரும் என்னையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். கம்பீரமா நடந்து காரின் பின் சீட்டில் ஏறினேன். அப்பதானே நமக்கு கௌரவம். நல்லவேலை டிரைவர் ஒன்னும் சொல்லவில்லை. வீட்டாரின் விரிந்த கண்களை இதுநாள் வரை நான் கவனித்திருக்கவே இல்லை. ஆமாம், அவர்களின் முகம் பார்த்து பேசினால்தானே கண்ணை பார்க்க முடியும். கார் சென்று மறையும் வரை அவர்களின் விரிந்தக் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய கண்கள்தான். ஒன்னு தெரியுமா, நான் போட்டிருக்கும் சட்டை, என் அண்ணனுடையது. காலையில் நான் கொடுத்த அதிர்ச்சியில் அண்ணன் அதை கவனிக்கவில்லை. இதை கணித்திருந்தால் அவனுடைய கால்சட்டையையும் போட்டிருப்பேன். ஏமார்ந்தேன்.
     காரில் நான் மட்டும் இருப்பதை இப்போதுதான் உணர்ந்தேன். டிரைவர் எந்த ஒரு அசைவோ பேச்சோ இல்லாமல் காரை ஓட்டிக் கோண்டிருந்தான்.
     என்ன இது , டிரைவர் அல்ல இது டிரைவி.!
     பெண்தான் காரை ஓட்டுகிறாள். நல்லவேலையாக அவள் சட்டை பட்டன் திறந்திருந்ததைப் பார்த்துத் தெரிந்துக் கொண்டேன். அவளின் மூக்கை போலவே கண்ணும் கூர்மைதான். இல்லையென்றால் கண்ணாடியைப் பார்த்தே தன் சட்டையை சரி செய்துக் கொண்டாள்.
     ச்சே என்னை, என்ன நினைப்பாள் அவள். முதல் சந்திப்பிலேயே இப்படியே நடப்பது. இதில் என் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஆமாம். எனக்கு நீல வண்ணம் மிகவும் பிடித்தமான ஒன்று. யார் அவளை அந்த வண்ணத்தில் உள்சட்டை போடச் சொன்னது. அதான் வண்ணம் என்னை இழுத்துவிட்டது.
     அது சரி, ஏன் பெண்னை அனுப்பியிருக்கிறார்கள். ஒருவேளை ஒழுக்கத்தை பரிசோதிக்கவா? இந்த பெண் இதை சொன்னால் எனக்கு அந்த அறிவியல் கூடத்தில் வேலை கிடைக்காமல் போய்விடுமே. என்ன செய்வது.  முதல் சோதனையிலேயே தோல்வியா எனக்கு. இந்த வேலையும் எனக்கு கிடைக்காதா.
    வேலை மட்டும் கிடைக்கவில்லையென்றால், இனி திரும்பி வீட்டிற்கு செல்லவேக் கூடாது.
     கார் அதன் வேகத்தை குறைக்காமல் சென்றவண்ணமே இருக்கிறது. அவள் சட்டையை சரி செய்ததோடு சரி, வேறெதையும் சட்டை செய்யவில்லை. அவள் என்ன இயந்திரமா..? ச்சே இது என்ன சுஜாதா கதையா, இயந்திர மனிதர்கள் வந்து போக.
    கார் நின்றது. அறிவியல் கூடமா இல்லை ஆவிகள் கூடமா எனத் தெரியவில்லை. தனியாக ஒரு தொழிற்சாலை. பக்கத்தில் வேறேதும் இல்லை. மருத்துக்கு மரங்கள் மட்டுமே. மரங்களா எனவும் என்னால் அதை உறுதியாக சொல்ல முடியவில்லை. மரங்கள் ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தன.
    இந்த இடம் குறித்து கேட்கலாம் என்றுதான் காரோட்டிய பெண்ணைத் தேடினேன். இல்லை. வந்திரங்கிய உயர் ரக கார். இல்லை. அதற்குள் எப்படி புறப்பட்டிருக்க முடியும். தெரியவில்லை. புரியவுமில்லை. தொழிற்சாலையின் நடைபாதை தெரிய நானாகவே நடந்துச் சென்றுக் கொண்டிருந்தேன். முழுவும் விளக்குகள். வெளியில் இருப்பதைவிட உள்ளே அதிக வெளிச்சமாக இருந்தது.
     அறைக்கதவின் மூன் வருசையின் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு இளைஞன் மட்டும் உட்கார்ந்திருந்தான். அந்த நிசப்தத்தில் என காலடி ஓசை சத்தமாகக்  கேட்டது. அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. நிமிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தவாறு இருந்தான். எனக்கு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது.
    ஆனால் அவன் இப்படி நிமிர்ந்து நிமிர்ந்து உட்காரவேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவனாக இதனை வேண்டுமென்று செய்வது போல உணர்கிறேன். அதான் சொல்லுவார்களே இம்மாதிரி நேர்முகத் தேர்வுக்கு செல்கிறவர்கள், நேரான பார்வையும் நிமிர்ந்து உட்காரும் பாணியும் அவர்களின் ஆளுமையைக் காட்டுமென; அதாகக் கூட இருக்கலாம். ஏன் இவன் அதையே இப்படி கோமாளித்தனமாகச் செய்கிறான்.
      அந்த நாற்காலிக்கு அருகில் இருக்கும் கதவை பற்றி ஏதும் சொன்னெனா..? இல்லையென்றால் இப்போது சொல்கிறேன். அந்த நாற்காலி அருகில் கதவு இருக்கின்றது. கதவின் மேல் கருப்பாய் ஏதோ பூச்சி இருக்கிறதே, என்ன பூச்சி அது. பல்லி இப்படி இருக்காதே, பட்டாம்பூச்சிக்கு சிறகு இருக்குமே.. அட இது சிலந்தி. உயிரோடு இருக்கிறதா இல்லையா. ஒருவேளை ஒட்டிகையோ.
     மணிசத்தம் கேட்டது. நிமிர்ந்து நிமிந்து உட்கார்ந்த மனிதன், அதான் அந்த கோமாளி மனிதன் உள்ளே சென்றான். அதில் பாருங்கள். மணி அடித்ததும் அவனாக எழாமல், யாரோ தள்ளியது போல முன்னோக்கி எழுந்தான்.
      தூரத்தில் மீன் தொட்டி இருப்பதை இப்போதுதான் பார்த்தேன். சரி வெறுமனே உடார்ந்திருக்காமல், எழுந்து அந்த மீன்களை பார்க்கலாம் என நடக்கத் தொடங்கினேன். அந்த இளைஞன் உடார்ந்திருந்த நாற்காலையைத் தாண்டித்தான் செல்லவேண்டும். ஆனால் செல்லவில்லை. நின்றுவிட்டேன். அடுத்த அடியை என்னால் வைக்க முடியவில்லை.
     சொன்னால் நம்புவீர்களாக் கூட தெரியவில்லை. நாற்காலி நடுவுல் குழியாக இருக்கிறது. இல்லை , இல்லை. இது குழியல்ல ஏதோ நூலால் மட்டுமே தைத்தது போல இருக்கிறதே. அதுவும் இல்லை இது சிலந்தி வலை. இந்த சிலந்தி வலை எப்படி அந்த இளைஞனின் பாரத்தைத் தாங்கியது.
     காரணமின்றியே கையை வைத்து அழுத்தினேன். ம்... தொடுதல் சிலந்தி வலையைப் போலத்தான் இருக்கிறது. ஆனால் வலை கிழியவில்லையே. எப்படி. இந்த வலை என் கை அழுத்தத்தை தாங்குவது ஆச்சர்யமா இருக்கிறதே. ஐயோ..! என்ன இது என்னால் என் கையை எக்க முடியவில்லையே. விரல்கள் வலையில் ஒட்டிக் கொண்டதே. ம்...ம்..... வரமாட்டேன் என்கிறதே. என்ன செய்ய..?
     அந்த இளைஞன் எப்படி உட்கார்ந்திருந்தான். ஒருவேளை இதில் மாட்டிக் கோண்டுதான் பல முறை எழ முயன்றானோ? அதே வரிசையில் இருக்கும் என்னிடம் கூட அவன் உதவி கேட்கவில்லையே?
    அப்பா.....ஒருவழியாக கையை எழுத்து விட்டேன். கையில் அந்த சிலந்தி வலையில் அச்சி அப்படியே இருந்தது. சில அடிகள் முன் வைத்து மீன் தொட்டிக்கு சென்ற எனக்கு இன்னொரு ஆச்சர்யம். அந்த மீன் தொட்டியில் மீனுக்கு பதில் சில சிலந்திகள் இருக்கின்றன. மீன் தொட்டிகளில் எலி வளர்த்த காலம் மாறி இப்போ சிலந்திகளையெல்லாம் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்களா.
   ஆனால், ஆனால், ,ஆனால். இந்த சிலந்திகளின் முகம் மனித முகம் போல இருக்கின்றன. இது என்ன பைப் துவாரத்தில் இருந்து புதிய சிலந்தி ஒன்று வந்து விழுகிறதே. அது, அது, அது அந்த புது சிலந்தியின் முகத்தைப் பாருங்களேன். எனக்கு நன்றாய் தெரிந்த முகம் போல இருக்கிறது. எப்போது பார்த்தேன் தெரியவில்லையே... எப்போது, எப்போது, எப்போது....? ஆம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. முன்பு பார்த்த இளைஞனின் முகம் இது. அதான் நிமிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தானே அதே இளைஞன்.
     இந்த அறிவியல் கூடத்தில் தவறாக ஏதோ நடக்கிறது. அப்படித்தான் என் உள் மனது சொல்கிறது. ஒருவேளை, வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் செய்து, இவங்களே கூட்டி போகிறார்கள், யாருக்கும் இடம் தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நானும் இப்படி ஒர் சிலந்தியாகிடுவேன்.
    கூடாது. என்னால் இப்படி சிலந்தியாகி, மீன் தொட்டியில் எல்லாம் இருக்க முடியாது.
   அய்யோ! மீண்டும் மணி சத்தம் கேட்கிறது. அந்த கதவு திறக்கப்படுகிறது. இனி ஓட வேண்டும். ஓடத் தொடங்கினேன். ஓடும்போது திறந்திருக்கும் கதவை எட்டிப்பார்த்தேன். எப்படி சொல்வதென தெரியவில்லை. ஒரு மாதிரி நிழல்போல பெரிய என்னமோ ஒன்று நின்றுக் கோண்டிருந்தது. இனியும் தாமதிக்க கூடாது.
    ஆசைபட்ட வேலையும் கோவிந்தா.
    இனியும் எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் ஒன்று, எனக்கு கிடைத்த இந்த வேலை அனுபவத்தை ஒரு கதையாக எழுதலாம்னு நினைக்கறேன். கதை எழுதலாம்னு சொல்லும் போது இன்னொரு நகைச்சுவையும் நினைவுக்கு வருகிறது. சொல்லவா...
     இது சிரிக்க மட்டும், தவறியும் சிந்திச்சிங்கன்னா என் மேல கோவப்படுவிங்க. அப்பறம் என்னை பற்றிய புகார்களை தேடுவிங்க. அதனாலதான் சொல்றேன். இது சிரிக்க மட்டும். இருவர் இப்படி பேசுகிறார்கள்;
“அண்ணே நானும் எழுத்தாளராகனும். அதுக்கு நான் என்ன அண்ணே செய்யனும்”
“ஓ, அதுக்கு நிறைய வாசிக்கனும், பலரில் எழுத்தாளுமையை புரிஞ்சிக்கனும்”
“அண்ணே, நிறைய வாசிக்காமலும், யாருடைய எழுத்துகளையும் படிக்காமலும் , எழுத்தாளராக முடியாதா..?”
“ஏன் முடியாது. நிச்சயமா முடியும்”
“ஹையா... அண்ணே அதை சொல்லுங்கன்னே. நானும் எழுத்தாளராகிடறேன்”
“உங்க முடிவுல உறுதியா இருக்கிங்கலா தம்பி”
“கண்டிப்பா”
“அப்படின்னா. இருக்கற ஏதாவது ஏதாவது எழுத்தாளர் சங்கத்துல மெம்மராகிடுங்க.”
“நெஜமாவா”
“பின்ன, பொய்யா சொல்றேன்”
“அண்ணே, என்னை வச்சி காமிடி கீமிடி செய்யலையே..?”
“அவ்வ்வ்வ்வ்வ்”

     சரி, என்னோட கதையின் முதல் வரியை சொல்லவா; அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.

          
                                          - தயாஜி -

ஜூன் 12, 2012

தற்போதைய வாசிப்பில், ஆல்பெர் காம்யு--வின் 'அந்நியன்'




8.6.2012 இன்றோடு;

ரெ.கார்த்திகேசு எழுதிய ‘அந்திம காலம்’ நாவலை படித்து, வாசித்த அனுபவம் குறித்து எழுதியாகிவிட்ட்து (பிரசுரம் ஆகும் போது சொல்கிறேன் & அதன் லிங்க் கொடுக்கிறேன்)
தற்போதைய வாசிப்பில் அடுத்த நாவலாக வருவது; ஆல்பெர் காம்யு எழுதிய ‘அந்நியன்’ (THE STRANGER)
இது ஆல்பெர் காம்யு எழுதிய முதல் நாவல். 1942-ல் எழுதப்பட்டது.
இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சனைகளைத் தெளிவான நேர்மையுடன் விளக்கியிருக்கும் இவரது இலக்கிய படைப்புகளுக்காக இர்வருக்கு 1957-ம் ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.
நாவலை எனக்கு முன் மொழிந்தவர் நண்பர் மா.நவின்.
..................................................................
இந்த உலகில் ஒரு இலக்கியவாதிக்கு மிஞ்சப்போவது என்ன தெரியுமா? ஒரு சின்ன உண்மையை எழுதிவிட்ட தாளும் , அந்த ஒரு பக்கத்தை உணர்ந்து படிக்கிற வாசகனும்தான்.... அந்த ஒரு பக்கத்தை எழுதுவதற்கு ஒவ்வொரு இலக்கியவாதியும் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருக்கிறது - என்கிறார் நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு இலக்கியவாதி ‘ஆல்பெர் காம்யு’
.....................................................

8.6.2012
இன்றோடு ஆல்பர் காம்யு-வின் ‘அந்நியன்’ நாவலின் மூன்றாம் அத்தியாயத்தை இப்போதுதான் படித்து முடித்தேன்.
ஆல்பேர் காம்யு-வே கதை சொல்லியாக நாவலில் சொல்லிச் செல்கிறார். நாவலில் முதல் வாக்கியமே இப்படி ஆரம்பமாகிறது.
“இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது”
தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் , நாயகனின் செயல்களும் சிந்தனைகளும் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஒருவேளை நாவலை தொடர்ந்து படிப்பதன் மூலமும் , ஆல்பெர் காம்யு -வின் கோட்பாடுகள் குறிந்தும் அறிந்து கொள்வதின் மூலமும் இநாவல் எனக்கு புரிதலை ஏற்படுத்தலாம்.
.......................................................................
10.6.2012
இன்றுவரை இந்நாவலின் 4 பாகம் வரை படித்துவிட்டேன்.(60-ம் பக்கம் வரை)
என் குழப்பம் கூடிக்கொண்டுதான் போகிறது. இத்தனை குழப்பம் கொடுக்கும் நாவலை நான் படிப்பதின் அவசியம் என்ன என்றுகூட எனக்கு தெரியவில்லை. இன்றுதான் நாவலை ஆல்பெர் காம்யு , ‘மெர்சோ’ சொல்லிக் கொண்டுச் செல்வதாக எழுதியிருக்கிறார் என எனக்கு தெரிந்தது. தொடக்க அத்தியாயங்களில் ஆல்பெர் காம்யு-வே சொல்லி செல்வதாக நினைத்து படித்து வந்தேன். இப்போது எனக்கும் முன்பின் அறிமுகமில்லாத ஒருவன் - மெர்சோ கதையை சொல்லிச் செல்கிறான்.
  என் வரையில், வலது கையில் உண்பதையும் இடது கையில் உண்பதையும் நாயகன் வித்திசாயமாகப் பார்ப்பதில்லை. அவனுக்கு வலதும் ஒன்றுதான் இடது ஒன்றுதான்.
   என்னால் இதை நினைக்கவும் முடியவில்லை. வலது கையை அதற்கான வேலையை செய்வதற்கும் இடது கையை அதற்கான வேலை செய்வதற்கும் மட்டுமே பழக்கப்படுத்தியிருக்கிறேன். எனக்கு இரண்டும் ஒன்றல்ல. இது வேறு அது வேறு.
    நாயகன் ‘மெர்சோ’ அவனை விரும்பும் ஒரு பெண் தன்னை திருமணம் செய்வாயா என கேட்டதற்குக் கூட, அவள் வ் விருப்பம் அதுவென்றால் செய்ய தயார் என்றே சொல்கிறான். திருமணம் செய்து பழகுவது, திருமணம் செய்யாமல் பழகுவது அவனுக்கு ஒன்றாகவேப் படுகிறது.
    தேவையில்லாமால், உணவு விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணின் செயல்களை  சிரத்தை எடுத்தும்க் கொண்டு கவனிக்கிறான். அது விசித்திரமாக இருக்கவே (விசித்திரம் என சொல்வது சரியா என்று கூட எனக்குத் தெரியவில்லை.) அவளை பின் தொடர்கிறான். அதைகூட நாயகனான் முழுமையாகச் செய்ய முடியவில்லை. கொஞ்ச தூரம் சென்ற அவள் காணாதது குறித்து எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் திரும்புகிறான்.
    எந்த ஒரு காரண காரியம் இன்றி நண்பன் ஒருவனுக்கு உதவுகிறான். உதவாமல் இருப்பதும் உதவி செய்வது அவனுக்கு ஒன்றுதான்.
   ஆனால் உதவி என்பது அப்படிப்பட்ட ஒன்றா என்ன..? உதவி செய்வது செய்யாமல் இருப்பதும் ஒன்றே என நினைக்கும் ஒருவன் எப்படிபட்ட மனிதன். மூளைக் கோளாறு உள்ளவனா இல்லை அவன்தான் தெளிவானவனா..?
இனி அடுத்தடுத்த அத்தியாங்களை படித்து எழுதுகிறேன்.


...........................................................................

11.6.2012

    இன்றோடு 'அந்நியன்' நாவலின் முதல் பாகத்தை படித்தேன். தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் முதல் அத்தியாயத்தையும் படித்திருந்தேன்.

     முதல் பாகத்தின் முடிவில் காரணமோ எந்த முன்பகையோ இன்றி அரேபியன் ஒருவனை துப்பாக்கியால் சுடுகிறான் நாயகன். அதோடு விடவில்லை, இறந்தவனின் உடலை மீதமிருக்கும் நான்கு குண்டுகளால் சுடுகிறான்.

     இப்படியாக முதல் பாகம் முடிகிறது; 'அதுவே நான் என் துரதிஷ்டத்தின் வாயிற்கதவை நான்கு முறை தட்டியது போல் இருந்தது' என.

    இரண்டாம் பாகத்தில் விசாரிக்கப்படுகிறான். அவம் வழக்கில் நீதிபதிக்கு ஆர்வம் ஏற்படுகிறது. தனக்கென்று ஒரு வழக்கறிஞர் இல்லாத பட்சத்தில் அரசாங்கமே ஒரு வழக்கறிஞரை நியமிக்கும் என்கிறார் நீதிபதி. அது சிறப்பான ஒன்றாக நாயகன் கருத்து தெரிவிக்கிறான்.
  
     தன்னை சந்திக்க வரும் அரசாங்க வழக்கறிஞர் நாயகன் பேசுவதை கேட்டு வியப்படைகிறார் உடன் கோவப்படுகிறார். தன் தாயின் மரணத்தில் கூட அழாமல் இருந்ததன் காரணம் என்ன என்று வினவ பதில் இல்லையென வெறுமையாய் சொல்கிறான் நாயகன்.
    
    தாயின் இறுதி ஊர்வலத்தில் இருந்த அவன் எந்தவித பாதிப்பையும் காட்டாமல் இருந்தது தெரிந்ததும் வழக்கறிஞர் மேலும் விரக்தியடைகிறார். மேற்கொண்டு, நாயகனின் பேச்சு வழக்கறிஞருக்கு வழக்கில் வெற்றிபெற வாய்ப்பு குறைந்துக் கொண்டு வருவதை உணர்ந்துகிறது.


மேலும் படித்த பிறகு எழுதுகிறேன்.
.....................................................


           17.6.2012 - சில நாட்கள் இடைவேளிக்கு பிறகு மீண்டும் ஆல்பெர் காம்யு எழுதிய 'அந்நியன்' நாவலை படிக்கிறேன்.
வாசிப்பின் இடைவேளிக்கு நான் பொறுப்பல்ல; நாவலைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட 'வெறுமை' அல்லது 'பெயர் குறிப்பிட இயலாத' ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன். அதனை அனுபவிக்கவே, வாசிப்பின் இந்த இடைவேளி........




......................................................................................................


     இருபதாவது  நாளாக 'அந்நியன்' நாவலைப் படித்து முடித்தேன்.  மலையேறிய அனுபவத்தை எனக்கு கொடுத்தது ஆல்பெர் காம்யு-வின் எழுத்துகளும் ; அந்நியன் கதாநாயன் மெர்சே-வும்.
..........................................................................................................


2.7.2012

அந்நியன் - இவனும் சக மனிதன்தான்
     வாசித்த புத்தகங்கள் குறித்து மனதில் தோன்றியவற்றை எழுதுவது வழக்கம். சில புத்தகங்களுக்கு சில வரிகளில் அனுபவத்தை சொல்லிவிடுவேன். இன்னும் சில புத்தகங்களுக்கு பக்கங்கள் நிறைய எழுதுவேன். சில புத்தகங்களுக்கு எதுவும் எழுத எண்ணியிருக்கவில்லை.
   இதில் அந்நியன் நாவலை எந்த இடத்தில் வைப்பது என முடிவாகத் தெரியவில்லை.
   சமீபகாலமாக தொடர்ந்து நாவல்களைப் படித்து வருகிறேன். அந்த வகையில் வந்ததுதான் அந்நியன் நாவல். இலக்கிய துறையில் எனக்கு முன்னோடியாகவும் நண்பராகவும் நான் நினைப்பது ம.நவின்-ஐ. அவர் அறிமுகம் செய்ததுதான், ஆல்பெர் காம்யு-வின் அந்நியன் நாவல்.  மற்றபடி என் வாசிப்பு அனுபவங்களை என் வலைப்பூவில் எழுதிவந்திருக்கிறேன்.
    வாங்கிய சில மாதங்கள் கழிந்த பின்னரே அந்நியனை படிக்க எடுத்தேன். அதற்கு முன் ‘இருத்தலியல்’ குறித்தோ ‘அபத்தம்’ குறித்தோ எந்த ஒரு புரிதலும் என்னிடம் இருக்கவில்லை. இப்போதுகூட என்னால் முழுமையாக அந்த கோட்பாடுகளை புரிந்துக் கொள்ள முடியவில்லை.
    இப்போது எழுதுவது கூட, எழுத வேண்டும் என எண்ணுகிறேன் அதனால் எழுதுகிறேன். எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் ஒன்றாகவே இருப்பது போல நினைக்கிறேன்.
    அந்நியன் நாவலின் தலைப்பை போலவே சமூகத்திடம் இருந்து அந்நியப்படுத்தப்படுகிறான் நாயகன். அவன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்விகளை அவனிடம் நம்மால் முன்வைக்க முடியவில்லை. தன் மனதுக்கு ஏற்றவாரு மிக இயல்பாக எந்த ஒரு உணர்ச்சிக்கும் அடிமையாகதவன் அவன். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்கிறான் என்றே சொல்லத் தோன்றுகிறது.
    நாவலில் தொடக்கமே; தாயின் மரணத்தில் இருந்து தொடங்குகிறது. மரணம் நாயகனை பாதிக்கவில்லை. அதுவும் தன்னை ஈன்ற தாயின் மரணம். எப்படி சாத்தியம்..!
    நாவலில் அந்த தாயில் மரணத்தை கடந்து வாசிக்கும் போது, முதன் முதலாக நான் கலந்துக் கொண்ட மரண நிகழ்வை நினைக்கத் தொடங்கினேன்.
    என் வயது நினைவில் இல்லை. ஒருவேளை எட்டு முதல் பத்துவரை இருக்கலாம். பெரிய குடும்பம் ஒன்றில் மூத்தவரான அம்மா இறந்துவிட்டார். என் வீட்டில் இருந்து எல்லாரும், சொகம் நிறைந்த முகத்துடன் சென்றோம். மரண வீட்டில் அந்த அம்மாவின் (பாட்டி வயது) வெளியே வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் இடத்தை அடையவும் அம்மாவின் உடலை அகற்றவும் சரியாக இருந்தது.
    உறவுகள் எல்லாம் கதறி அழத்தொடங்கின. சம்பந்தமே இல்லாத எனக்கும் அழுகை வந்தது அவர்களில் அழுகையால்.
    உடலை எடுத்துச் சென்ற கொஞ்ச நேரத்தில், அழுதவர்கள் எல்லாம், வீட்டைக் கழுவினர். நாற்காலிகளை அடுக்கினர். சமையலைத் தொடங்கினர். தேநீரெல்லாம் தயார் செய்துக் கொடுத்தனர். இந்த முறை, அவர்கள் கண்கள் கலங்கியிருக்கவில்லை. முன்பு அழுது வடிந்திருந்த முகங்கள் இப்போது வழக்கத்திற்கு திரும்பியிருந்தன.
   அரை மணி நேரத்துக்கு முன் ஒரு முகம், அரை மணிநேரத்துக்கு பின் ஒரு முகம். இதில் எதுதான் நிஜம்.
    ஆனால் அந்நியனின் வரும் நாயகன் அப்படி அல்ல. முன்னதில் அழுது பின்னதில் பிரகாசிக்க அவன் விரும்பவில்லை. எப்போதும் இயல்பாகவே இருக்கிறான்.  அழாதக் காரணமே கூட இவனுக்கு எதிராக சாட்சிப்படுத்தப்படுகிறது.
    மரணம் என்பது இயல்பானது என புரிந்துக் கொண்டு தற்காலிகத் தீர்வாக, அழுவதை விரும்பாத நாயகன், தனக்கு வரும் வெளிநாடு செல்லும் வாய்ப்பைக் கூட வேண்டாம் என்கிறான். அங்கு சென்றால், மகிழ்ச்சியாக இருக்கலாம் என  சொல்லும் மேலதிகாரியிடம் கூட, தற்போது இருப்பதே மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்கிறான். மேலதிகாரியால் அதனை சரிவர புரிந்துக் கொள்ள முடியவில்லை.
    அம்மாவின் மரணத்திற்கு பிறகு, தன் காதலியுடன் கடலில் குளிக்கிறான். உல்லாசமாக இருக்கிறான். அவள் வரையில் அவன் காதலன். அவன் வரையில் அவள் காதலியாக் இருந்தாலும்; காதலியாக இல்லாமல் இருந்தாலும் ஒன்றுதான். அவளுக்குத் தோன்றுவதை ஏற்கிறான். அவளுடன் வாதம் செய்யவோ, தன்னை பற்றிய புரிதல் ஏற்படுத்தவொ அவன் முயற்சிக்கவில்லை, விரும்பவும். நம்மிடம் கூட இதனை எழுதிய ஆல்பெர் காம்யு, தன் நாயகன் குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. மாறாக அந்த நாயகனின் வாழ்க்கையைக் காட்டுகிறார்.
   நாயகன் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவன் என சொல்ல முடியவில்லை. ஆனால் எதற்கும், அவன் உணர்ச்சிவசப்படவில்லை. அதே சமயம் அவன் உணர்வற்றவனும் இல்லை.
    ஜன்னல் வழியே , கடந்து போகும் ஒவ்வொருவரையும் கவனிக்கிறான். பெரிதாய் ஏதும் எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல், தினம் தினம் வீடு திரும்புகிறான். அரட்டை அடிக்க பெரிதாய் நண்பர்கள் யாரும் இல்லை. இருப்பவர்களும் ஒருவர் இருவர்தான். அதுகூட ஓரளவுக்கு இவனை சார்ந்தவர்கள்தான்.
     முதல் பாகம் முழுக்க நாயகனின் உணர்ச்சியற்ற வாழ்க்கைமுறையே சொல்லப்படுகிறது. இறுதியில் கொலைகாரனாகிறான். முன்விரோதமோ பகையோ கோவமோ காரணமல்ல, அந்த சூழல், வெயில் என்றே சொல்லலாம்.
    மனம் நம்மை இயக்குகிறது என சொல்வதைவிட, இதன் வழி புற சூழல்தான் நம்மை இயக்கிக் கொண்டுவருகிறது என நினைக்கத் தோன்றுகிறது. பகையும் பலிவாங்கும் உணர்ச்சியும் மனதில்தானே தோன்றுகிறது. வெயிலும் அதன் உஷ்ணமும் உடலில்தானே உணரமுடிகிறது. நாயகனுக்கு அப்படித்தான் போலும்.
   இரண்டாம் பாகம் முழுவதும் கைதியாகவே வருகிறான். கொலைக் குற்றத்திற்காக விசாரிக்கப்படுகிறவன் பின்னர் தன் விசித்திர குணத்திற்காக விசாரிக்கப்படுகிறான் கவனிக்கப்படுகிறான்.
    நமது ஒவ்வொரு செயலும் நமது அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவதை நாயகனின் வாழ்க்கை காட்டுவதாகப் படுகிறது. இதற்கிடையில் மன்னிப்புகளுக்கும் கடவுள்களுக்கு வேலை இல்லாத்தையே நாயகன் காட்டுகிறான்.
   இந்நாவலில் வாசிப்பு எனக்கு புது அனுபவத்தையேக் கொடுத்தது. இதுவரை படித்திருந்த நாவல்கள் எல்லாம் உணர்ச்சிகளையும் கேள்விகளையும்தான் முன்வைத்தன. அந்நியன் நாவல் எனக்குள் கேள்வியினை முன்வைத்தது.
    புரிந்துக் கொண்டது இதுதான், சமுதாயத்தில் பொதுபுத்தி சார்ந்தே நாம்  செயல்படவேண்டியுள்ளது. மீறி எதனையும் கேள்வி கேட்டால் நாம் அந்நியமாக்கப்படுகிறோம். அதற்கான காரணங்களை பொதுபுத்திகள் இலகுவாக சொல்லிவிடுகிறார்கள்.
மரணத்தில் அவர்கள் அழுதால் நாமும் அழவேண்டும்.
நட்பு என்றும் காதல் என்றும் அவர்கள் கொண்டாடினால், நாமும் கொண்டாடவேண்டும்
தவறுகள் செய்த பிறகு, பாவமன்னுப்பு கேட்டால் நாமும் அப்படித்தான் கேட்கவேண்டும். ஏனெனில் நம் செயலுக்கு நாமே பொறுப்பேற்க கூடாது.
தனித்து செயல்படக்கூடாது.
அதைத்தான் நாம் வாழும் இந்த பொழுதுபுத்தி சமூகம் எதிர்ப்பார்க்கிறது என்றால்; நம்மால் அதை ஈடுகட்ட முடியாதென்றால் நாம் கூட அந்நியன்கள்தான். ஆனால் கவிஞர்களாக நொடிகளையும் அனுபவித்து வாழ்வோம்.

தயாஜி
   

ஜூன் 01, 2012

வேணாம் அழுதுடுவேன்


இது சிரிக்க மட்டும். தவறியும் நீங்க சிந்திச்சிங்கன்னா என் மேல கோவப்படுவிங்க. அதனாலதான் சொல்றேன் இது சிரிக்க மட்டும் O.K.



முக நூலில் , முகத்தருகலும்
சிலர் கேட்கிறார்கள்,

"அண்ணே நானும் எழுத்தாளராகனும். என்ன செய்யட்டும்"

"நிறைய படிக்கனும், தொடர்ந்து எழுதனும்.."

"ஓ, அண்ணே நிறைய வாசிக்காம எழுத முடியாதா..?"

"முடியுமே.."

"ஓ, அண்ணே அப்பறம் தொடர்ந்து எழுதாம எழுத்தாளர் ஆக முடியாதா..?"

"ஏன் முடியாது. முடுயுமே.."

"அப்போ அந்த வழியை எனக்கு கத்துக் கொடுக்கண்ணே...  வாசிக்காமலும் எழுதாமலும் நானும் எழுத்தாளராகிடறேன்... PLS"

"அப்படியா.."

"ஆமாம் அண்ணே.."

"உங்க முடிவில் மாற்றம் இல்லையா..?"

"இல்லை அண்ணே இதுதான் என் நிலையான முடிவு."

"எங்க , உங்க முடிவை மீண்டும் சொல்லுங்க கேட்போம்.."

"வாசிக்காமலும் எழுதாமலும் நானும் எழுத்தாளராகிடறேன்... PLS"

"அப்போ, எழுத்தாளர் சங்கத்துல மெம்மர் ஆகிடுங்க. அது போதும்"

"அண்ணே, என்னை வச்சி காமிடி கீமிடி செய்யலையே..."

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

ந.பிச்சமூர்த்தி - 'வெறும் செருப்பு'




    தொடர்ந்து நாவல்களை படித்து, கொஞ்சம் இடைவேளி/ஓய்வு கருதி சிறுகதை ஒன்றை படிக்கலாம் என புத்தக அலமாரியைத் திறந்தேன். ஜனவரியில் வாங்கியிருந்த மாதாந்திர நாவல் புத்தகத்தில் சிறப்பாக பாரதியார், புதுமைப் பித்தன், அறிஞர் அண்ணா, கு.ப.ராஜகோபாலன், கல்கி, ந.பிச்சமூர்த்தி மற்றும் லா.சா.ராமாமிருதம் ஆகியோர் எழுதிய ஒவ்வொரு சிறுகதையையும் ஒன்றாக பிரசுரித்திருந்தார்கள்.

   நண்பர் நவினால் அறிமுகம் செய்யப்பட்டு, சுந்தர ராமசாமியின் எழுத்துகளை தீவிரமாக வாசித்துவந்தேன். சு.ரா-வின் ‘நா.பிச்சமூர்த்தியின் கலை - மரபும் மனித நேயமும்’ என்ற புத்தகத்தை படித்த போதுதான் நா. பிச்சமூர்த்தி குறித்தும் அவரது எழுத்து குறித்தும் தெரிந்துக் கொண்டேன். ஆனால் அவரின் கவிதைகளோ, சிறுகதைகளோ கிடைப்பது அரிதாக இருந்தது. இருந்தும் சு.ரா இந்த புத்தகத்தில் ந.பிச்சமூர்த்தியின் கதைகள், கவிதைகள், அவரது வாழ்க்கை குறித்து ஆழ்ந்தும் அற்புதமாகவும் எழுதியிருக்கிறார். இதுவரை நான் படித்த புத்தகங்கள்லேயே அதிக அளவு கோடிட்டும், சிறு சிறு குறிப்பும் எழுதி படித்த புத்தகம் இதுதான். கவிஞன் என்பவன் யார் என்கிற தெளிவும் கூட எனக்கு கிடைத்தது. வெறும் சந்தத்திலும் எதுகையிலும் மோலையிலும் , அழகுகளை மீறிய ஆழ்மன அழுக்குகளையும் ஆதங்கங்களையும் ஆன்மிக தேடல்களையும் இவர் சொல்லியிருக்கும் விதம் அபாரம் என்றே சொல்லத் தோன்றுகிறது. மீண்டும் அந்த புத்தகத்தை படித்து, இன்னும் அதிகமாக எழுத விரும்புகிறேன்.

சரி இப்போது,
    நான் அந்த நாவலை வாங்கியது கூட ந.பிச்சமூர்த்தியின் கதையை படிக்கத்தான். படித்தேன்.
தலைப்பு ‘வெறும் செருப்பு’.
 
   வெறும் செருப்பில் இருந்து வாழ்வின் உன்னத தத்துவமான ‘நிலையின்மையை’ சொல்லியிருக்கிறார் ந.பிச்சமூர்த்தி. அறுந்துபோன செருப்பை ஒதுக்கி புது செருப்புடன் நடக்கிறார்; கதை அங்கே தொடங்குகிறது. செருப்பை மிக கவனமாக உபயோகிக்கிறார், அதிக அக்கறை காட்டுகிறார். பின் நண்பரின் மரண செய்தி. ரயில் பயணாமாய் இறப்பு வீட்டிற்கு செல்கிறார். செல்லும் வழியில் தனது சிந்தனை முழுவதையும் ஆகிரமித்திருந்த செருப்பை திடீரென உணர்கிறார். அங்கே நிலையாமை புலப்படுகிறது. நண்பரின் மரணமும், தனது மனம் முழுக்க பரவியிருக்கும் புது செருப்பும் எதையோ இவருக்கு நினைவூட்டுகிறது.

    மரண வீட்டிற்கு செல்லும் போது காலில் செருப்பு இல்லை. நண்பர் ஒருவர் விசாரிக்க , இப்படி பதில் கொடுக்கிறார்,    

 “ ஆமாம். இந்த உடம்பும் செருப்புத்தான். இயிரென்னும் வழிபோக்கன் எப்போதும் எந்த நிலையிலும் இதைக் கழட்டி எறிலயாம். யாரால் தடுக்க முடியும் ”
   
   நேரம்/வாய்ப்பு இருப்பின் படித்து பாருங்களேன். நா.பிச்சமூர்த்தியின் ‘வெறும் செருப்பு’ .


 இப்படிக்கு தயாஜி.

மே 01, 2012

ஜெ.மோ-வின் விசும்பு (அறிவியல் புனைக்கதை)

30.4.2012.

ஜெயமோகனின் எழுத்துகளின் , 'நிழல்வெளிக் கதைகள்' என்ற பேய்க்கதைகள் தொகுப்பை படித்து முடித்த கையோடு, இப்போது படிக்கத் தொடங்கியிருப்பது, ஜெயமோகனின் 'விசும்பு' எனும் அறிவியல் புனைகதை தொகுப்பு

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்