'மராம்பு' - புத்தகவாசிப்பு 4 (2023)
‘மராம்பு – புத்தகவாசிப்பு 4 (2023)
தலைப்பு - மராம்பு
எழுத்து - நசீமா ரசாக்
வகை - குறுநாவல்
வெளியீடு - யாவரும் பதிப்பகம்
புத்தகம் வாங்க - +60164734794 புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை (மலேசியா)
மராம்பு என்பது பாலைவனத்தில் பூக்கும் ஒருவித பூ. அதுவே தலைப்பாகிவிட்டது. ஆனால் இந்தப் பூக்கள் வேறொரு நிலத்திலிருந்து பிழைக்க வழியற்று அல்லது கூடுதல் வருமானத்திற்கு துபாய் வந்து சேரும் மனிதர்களைக் குறிப்பிடுவதாய்ப் பார்க்கிறேன். அப்பூக்கள் மலர்கின்றவனா மிதிபட்டு மடிகின்றனவா என்பது யாரும் முன் யூகிக்காத ரகசியம்.
சொல்லப்போனால் துபாய் என்று சொன்னாலே அடுத்த வார்த்தையாக பாலைவனம் என வந்து விழுந்துவிடும். ஆமாம், ‘துபாய் பாலைவனம்’ என சேர்த்துச் சொல்லிப் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். இப்போது யோசிக்கையில் துபாய் என்ற வார்த்தைக்கும் பாலைவனம் என்ற வார்த்தைக்கும் எவ்வளவு பெரிய இடைவெளியைக் காலமும் உழைப்பும் அம்மண்ணின் வழங்கியிருக்கிறது எனப் புலப்படுகிறது.
‘மராம்பு’ எழுத்தாளர் நசீமா ரசாக் எழுதியிருக்கும் இரண்டாவது நாவல்; குறுநாவல். தற்போது துபாயில் வசிக்கிறார் என்று அறிகிறேன்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது காலா காலமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சொந்த மண்ணைவிட்டு பிழைப்பிற்காகவும் உயிர் பிழைத்திருப்பதற்காகவும் ஓடி வாழ்கின்றவர்களிலும் ஓடியே போனவர்களிலும் நமக்கு ஒரு சிலரையாவது தெரிந்திருக்கும். நாமே கூட அப்படியானவர்களாக இருக்கலாம். நானும் கெடா மாநிலத்தில் பிறந்து வளர்ந்து இன்று தலைநகர் கோலாலும்பூரில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இரண்டும் மலேசியாவிற்குள்தான் என்றாலும் சொந்த மண்ணும் அம்மண்ணின் மக்களுக்கும் ஈடாக எதையுமே என்னால் இங்கு உணர முடியவில்லை. சொந்த நாட்டில் ஐந்து ஆறு பயண இடைவெளியே என்றாலும் என்னால் ஒரு நெருக்கத்தை உணரமுடியாத போது நாடு விட்டு நாடு பிழைப்பிற்காகக் கிளம்பு போகிறவர்களை நினைத்தால் மனம் ரொம்பவும் சங்கடப்படுகிறது.
எங்கள் நாட்டு உணவகங்களிலும் பிற கடைகளிலும் வேலை செய்யும் வெளிநாட்டுக்காரர்களை யாரும் திட்டும் போதும் அடிக்கும் போதும் இப்படித்தானே எங்கள் நாட்டிலிருந்து வெளியூர் வேலைக்குச் சென்ற ஏதோ ஒரு இளைஞனுக்கும் நடந்து கொண்டிருக்கும் என நினைத்துக் கொள்வதுண்டு.
வெளிநாட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்படும் நாயகி வள்ளி. ஏமாற்றப்படுகின்றாள். தனக்கு ரொம்பவும் அந்நியமான நிலத்தில் அவள், இனி என்ன செய்வாள் எப்படி சொந்த ஊருக்குத் திரும்புவாளா என்பதுதான் இக்குறுநாவலின் மையக்கரு.
இதே கதைக்கருவில் நமக்கு பல கதைகள் பத்திரிகை செய்திகள் சினிமா படங்கள் அறிமுகமாகியிருக்கின்றன. அதிலிருந்து எப்படி ‘மராம்பு’ தனித்திருக்கிறது என்பதில்தான் எழுத்தாளரின் உழைப்பும் வெற்றியும் இருக்கிறது.
புத்தகத்தைக் கையில் எடுத்ததும் அதன் பின்னொட்டைக் குறிப்புகள் வழியில் முன்னமே எனக்குத் தெரிந்த இதன் அறிமுகத்தை வைத்து துபாய்க்கு வேலைக்குச் சென்று அங்குச் சிக்கல் மாட்டிக்கொள்ளும் பெண்களின் கதை எனப் புரிந்து கொண்டேன். வழக்கமாக ஆண்களையே இது போன்ற கதைகளுக்கு மையப்பாத்திரமாக வைப்பார்கள். இக்குறுங்கதைகள் பெண்கள் எதிர்நோக்கிய; அதுவும் துபாய்க்குச் சென்ற பெண்கள் எதிர்நோக்கும் சிக்கலைப் பற்றித் தெரிந்துகொள்ளப்போவதாக முன்முடிவுடன் நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். என் முன்முடிவை ஓரளவிற்கு எழுத்தாளர் பூர்த்தி செய்தார் என்றே சொல்லலாம்.
ஆனால் இக்கதைக்களம் துபாயாக இல்லாமல் வேறொரு நாடாக இருந்தாலும் கதையில் அது எந்த மாற்றத்தையும் கொடுக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில் இக்கதையின் கதைக்களமாக இருக்கும் துபாய் சில இடங்களைத் தவிர பிற இடங்களில் துபாயில்தான் கதை நடப்பதற்கான எந்த அடையாளமும் இருக்கவில்லை.
‘வள்ளி பால்கனியில் நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்களுக்கு புரூஜ் கலீபா என்ற உலகத்திலே உயரமான கட்டிடம் தெரிந்தது. அங்கு இருப்பவர்கள் தங்களை போன்ற எந்த போராட்டமும் இன்றி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பார்களா? என்று நினைத்தாள்.’ என எழுத்தாளர் சொல்கிறார். கதை நடக்கும் நிலமும் அக்கதையும் இப்படி ஒன்ற கலந்த ரசவாதத்தை பிற இடங்களில் கவனிக்க முடியவில்லை. இந்த உவமை துபாய் தவிர பிற நாட்டில் நடப்பதாக எழுதினால் செல்லுபடியாகாதுதானே.
இக்குறுநாவலில் ரயில் நிலையங்கள், தங்கும் விடுதி, விடுதிக்கு அருகில் இருக்கும் சாலையும் கடையும் தவிர துபாய் என்பதற்கான பிற கவனிக்கத்தக்க அடையாளம் இருக்கவில்லை. இவ்வளவு ஏன் துபாய் வாழ் மனிதர்களும் அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையும் பெரிதாகப் பதிவாகவில்லை.
தமிழகத்திலிருந்து விமான நிலையத்தில் திக்குமுக்காடி நிற்கும் வள்ளி, விமானத்தில் ஏறி துபாய்க்கு இறங்கும் வரை எழுத்தாளர் கண்முன்னே நிகழ்வது போல மிக துல்லியமாக எழுதியிருப்பார். அதனை வாசிக்கையில் நாமே விமான நிலையத்தில் நிற்பதாகவும் எங்கே என் கடவுச்சீட்டு எனவும் தேட வைத்துவிடுகிறார்.
இவை கொடுத்த அதிகப்படியா ஆர்வமும் எதிர்பார்ப்பும் துபாய்க்குச் சென்ற பிறகு குறைந்துவிட்டது. ஒரு வேளை நாயகி வள்ளியின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருந்தால் இத்தனைக் கேள்விகளுக்கு இடமிருக்காது. எழுத்தாளரின் குரல் நாவல் முழுக்க தனியாக ஒளித்து கொண்டிருக்கும் போது இத்தகைய கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எழுவது இயல்புதானே.
ஒரு வேளை எழுத்தாளர் தான் வள்ளியின் சார்பாக வள்ளியைப் பற்றி எழுத நினைத்திருந்தாரோ என்னவோ.
துபாய்ச் செல்லும் வள்ளி; தனது ஏஜென்டால் ஏமாற்றப்படுகிறாள். அவள் தங்க வேண்டிய விடுதியில் இருக்கும் நான்கு பெண்களும் இவளில் நிலையைப் புரிந்துகொண்டு உதவுகிறார்கள். வள்ளிக்கு வேலையை ஏற்பாடு செய்கிறார்கள். முதல் மூன்று மாதங்களுக்கு அவளக்கு விடுதி வாடகை ஏஜென்டால் (கொஞ்சம் நல்ல ஏஜென்ட்தான் போல) செலுத்தப்பட்டுவிட்டதால், தங்குவதில் சிக்கல் இல்லை. ஆனால் சாப்பாடு செலவுக்கும் வீட்டுக்கு அனுப்பவேண்டிய பணத்திற்கும் தமிழகத்தில் தன் தாயின் பொறுப்பில் இருக்கும் பிள்ளைகளிடம் கைப்பேசியில் உரையாடவும் பணமும் அதற்குத் தகுந்த வேலையும் வேண்டும்.
வள்ளி சந்திக்கும் நான்கு பெண்களும் நான்கு வாழ்க்கை பின்புலத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆளுக்கொரு சிக்கலைச் சந்திக்கின்றார்கள். வாசகர்கள் இவற்றை இக்குறுநாவலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இப்போது நான் சொல்லிவிட்டால் அதன் சுவாரசியம் குறைந்துவிடும்.
இந்நாவலில் நான் ரொம்பவும் ரசித்த இடம் ஒன்று உள்ளது. ரசிக்க மட்டுமல்ல. யோசிக்கவும் வைத்தது. அடிக்கடி ஜானு வள்ளிக்காகக் கர்த்தரிடம் பிரார்த்தனைச் செய்வதாகச் சொல்லுவாள்.
சொல்லுவதோடு மட்டுமல்லாமல் வள்ளிக்கு ஏற்ற வேலையையும் தேட செய்வாள். நான்கு பெண்களில் ஒருத்தி விபத்தில் இறந்துவிடுகிறாள். அவளது அண்ணனுக்குத் தகவலைச் சொல்கிறார்கள். அவரால் துபாய்க்கு வரவும் முடியாது இறந்த தங்கையைத் தாய் நாட்டிற்கு கோண்டு வரவும் முடியாது. இதுவரை உழைத்தவள் அனாதையாக அடக்கம் செய்யப்படப்போகிறாள். அண்ணனோ அவளுக்காகப் பிரார்த்தனை மட்டுமே தன்னால் செய்ய முடியும் என்று சொல்லி தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டார். இரு மனிதர்கள் பிரார்த்திப்பதாகச் சொல்கிறார்கள். ஒருவார்த்தையில் மட்டுமே ஒரு சத்தியம் இருந்தது அது ஒரு பெண்ணிற்கு அவளைக் காப்பாற்றிக் கொள்ள வேலையைத் தேடி கொடுக்க வைத்தது. இன்னொரு பிரார்த்தனை தனது இயலாமையின் மீது கழிவிரக்கமாக்கப் பயன்படுத்தப்பட்டது.
நிறைவாக;
100 பக்கங்களில் இக்குறுநாவலை எழுத்தாளர் முடித்திருக்கிறார். இன்னும் மெனெக்கெட்டிருந்தால் ஐந்து பெண்களில் வாழ்க்கையை அதிகமாகச் சொல்லி நம்மைக் கலங்கடித்திருக்க முடியும். பாதகமில்லை. இப்போது இந்நாவல் கொடுக்கும் வாசிப்பு அனுபவம் முக்கியமானதுதான். வாழ்க்கை ஒரு கதவை அடைத்தால் நம்பிக்கை ஒரு கதவைத் திறப்பதற்குக் கற்றுக்கொடுக்கும் என சொல்கிறது ‘மராம்பு’.
எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.
- தயாஜி
0 comments:
கருத்துரையிடுக