பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பத்தி25 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்தி25 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிசம்பர் 31, 2025

4:4:4


நடுகல்.காம் மின்னிதழுக்கு என் படைப்புகளாக சிறுகதைகள், குறுங்கதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதுவதோடு 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' என்ற மாதாந்திர தொடரையும் எழுதிவருகிறேன். இவ்வாண்டு ஜனவரி தொடங்கி டிசம்பரில் ஒரு டஜன் புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளேன்.

அவை 4 சிறுகதை தொகுப்புகள், 4 நாவல்கள், 4 கவிதை தொகுப்புகள்என அமைந்துவிட்டது ஆச்சர்யம்தான்.

அடுத்த ஆண்டும் இத்தொடரை தொடர்ந்து எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது. நடுகல்.காம் குழுவினர்க்கும் அதன் ஆசிரியர் வா.மு.கோமுவிற்கும் என் அன்பும் நன்றியும்.

நான் வாசித்த மலேசிய புத்தகங்கள் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை நீங்கள் வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

அதற்கான இணைப்பு 👉https://share.google/6VgmDrTXWVYLFcbck


வாசிப்பை கொண்டாடுவோம்...


இந்த ஆண்டில் வாசித்த புத்தகங்கள்; இதுவரை வாசித்தவையில் இருந்து சற்றே அதிக எண்ணிக்கையில் இருப்பதாகத் தோன்றுகிறது.

வழக்கமாக ஒரு பெட்டியில்தான் இருக்கும். இம்முறை இன்னொரு பெட்டியும் சேர்ந்திருக்கிறது. எல்லாவற்றையும் எடுத்து மீண்டும் அலமாரியில் அடுக்க வேண்டும். அதற்கு முன் அவற்றை பட்டியலிட வேண்டும். சில குறிப்புகள் எழுத வேண்டும்.

அதற்கு பின்னர்தான் புத்தாண்டு தொடக்கம் வாசிக்க வேண்டியதை மீண்டும் காலி பெட்டியில் வைத்து நிரப்ப வேண்டும்.

ஒரு புத்தகத்தை வாசித்தபடி புத்தாண்டை கொண்டாட வேண்டும்..
வாசிப்பை நேசிக்கிறவர்களுக்கு இதுதானே புத்தாண்டு கொண்டாட்டம்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை


டிசம்பர் 27, 2025

- முன்மாதிரியும் பின்மாதிரியும் -

நாம் யாரை பின்தொடர்கின்றோமோ அவர்களுக்கு சாதகமான எல்லாவற்றையும் செய்து நல்லப்பெயரை வாங்குவதைவிடவும்
முக்கியமான ஒன்று உள்ளது.

அவர்கள் சொல்வதைவிட, செய்வதை கவனிப்பது. அவர்கள் செய்வதை நாமும் செய்வது.
அப்படி அதை நாம் செய்யும் போது அவர்களுக்கு எரிச்சல் வந்தால் அவர்களை பின்தொடர்வதை நாம் மறுபரிசீலனைச் செய்யவேண்டும்.

அவர்கள் சொல்வதை அவர்களே செயல்படுத்தாமல் முரணாக இருந்து கொண்டு காலம் தன்னை இழுத்துவிட்டு கோலம் போட்டுவிட்டதாக சொல்கிறவர்கள்
சொல்லட்டும். நம்மால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவகையில் காலம் பலவற்றை ஆரோக்கியமாக மாற்றிவிடத்தான் செய்கிறது. வரவேற்போம்.

ஆனால் அதே காலம் நமக்கு வரும்போது அவர்கள் அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள். ஏன் நம்மை எதிரியாகப் பார்க்க ஆரம்பிக்கின்றார்கள், என கேட்க தொடங்காதவரை நமக்கு எதுஎதுவு மாறப்போவதில்லை.

அவர்கள் சொல்வதை அவர்களே பின்பற்றாத போதும் நாம் அவர்களையே முன்மாதிரி கொண்டு பின்மாதிரி! ஆக விரும்பினாலும் நண்பர்களே உண்மையில் அவர்களைவிடவும் நாம்தான் ஆபத்தானவர்கள்.

டிசம்பர் 16, 2025

- அந்த 7 முத்தகங்கள் -



இந்தப் புத்தகங்கள், இந்த ஆண்டின் என் வாசிப்பு பட்டியலை முடித்து வைக்க காத்திருக்கும் புத்தகங்கள்.

ஆண்டு தொடக்கத்திலேயே, இந்த ஆண்டு வாசிக்க வேண்டிய புத்தகங்களைப் பட்டியல் போட்டு பெட்டியில் அடுக்கினேன்.

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒருமுறை, அந்தப் பெட்டியில் உள்ள அனைத்து புத்தகங்களையும் மீண்டும் பார்வையிட்டு கையிலெடுத்து புரட்டி, தொடர்ந்து வாசிப்பு பெட்டியில் வைக்கவும் சிலவற்றை மீண்டும் புத்தக அலமாரியில் அடுக்கி வைக்கவும் செய்தேன்.

வாசிக்க வேண்டிய புத்தகப் பட்டியலிலும் அதற்கு ஏற்றார்ப்போல சில புத்தகங்களை இணைத்துக் கொண்டே வந்தேன்.

அப்படியும் இப்படியும் என ஆகிப்போன கணக்கில் இந்த ஆண்டின் வாசிப்பை நிறைவு செய்யக்கூடிய புத்தகங்களாக இவை கையில் எஞ்சியுள்ளன.

வழக்கமான என வாசிப்பு கணக்கில் (அப்படியொரு கணக்கு என்னிடம் உள்ளது. ஒருநாள் அதுபற்றியும் பகிர்ந்து கொள்கிறென்) இவை ஏழு புத்தகங்கள் எழுநூற்று ஐம்பது பக்கங்கள். புத்தாண்டு பிறக்க இன்னும் 15 நாட்கள் உள்ளன.

அதற்குள் இவற்றை வாசித்து முடித்துவிட்டால் இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் போட்ட திட்டமிடல் எனக்கும் மனநிறைவைக் கொடுக்கும்.

ஒருவேளை அதிகம் வாசிக்க வாய்ப்பு கிடைத்தால்; கொஞ்சமாய்க் கொண்டாடிக்கொள்வேன்.

இந்தப் பதினைந்து நாட்களில் இவற்றில் எது வாசிப்பில் கரையேறுகிறதோ; அல்லது புத்தக அலமாரிக்கு செல்கிறதோ; புதிதாக எதுவும் இணைகிறதோ;
என என்னால் யூகிக்கவே முடியாது. அதற்கு சில புறவய காரணங்களும்
என் உடல்நிலை காரணங்களும்
இருக்கவே செய்கின்றன.

சின்ன சின்ன வெற்றிகளைக் கொண்டாடி மகிழ்வோம். நமது பெரிய பெரிய காயங்களையும் இழப்புகளையும் கொஞ்ச நேரம் மறந்திருக்கச்செய்யும்.

டிசம்பர் 13, 2025

- இன்றைய வாசிப்பில் -


'காதல் பால் போன்றது. நேரம் ஆக ஆகப் புளித்துப்போகும், திரிந்துபோகும், விஷமாகிவிடும். மாதவன் எனக்கு அந்த விஷத்தைக் கொடுத்தான். நான் சாகவில்லை, அதற்கு பதிலாக அவனைக் கொன்றுவிட்டேன்.............'

வாசிப்பில் கே.ஆர்.மீராவின் 'மீராசாது'. மோ.செந்தில்குமாரின் தமிழாக்கம்.
இன்றைய இரவு இந்த மீராசாதுவிற்கானது.....

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

டிசம்பர் 12, 2025

எந்தப் புத்தகத்தில் ஆரம்பிப்பீர்கள் ?



2026-ம் ஆண்டு ஜனவரி முதல்நாள், என்ன புத்தகம் வாசிக்கவுள்ளீர்கள்.

அதனை ரொம்பவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டியுள்ளது. ஒருவேளை தவறான புத்தகத்தை வாசிக்க எடுத்துவிட்டோம் என்றால் அது ஓராண்டு முழுக்க நம்மை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். சிலர் தங்களின் தவறான முதல் தேர்ந்தெடுப்பில் இருந்து சிக்கிரமே தப்பித்துவிடுவார்கள்.

ஆனால் எல்லோருக்கும் அது அத்தனை எளிதாக கடந்துவிடக் கூடியதாக இருக்கப் போவதில்லை.
தவறான முதல் வாசிப்பே நமது அடுத்தடுத்த வாசிப்புகளுக்கு சோம்பலைக் கொடுத்துவிடும். தடையாகி நின்றுவிடும்.

ஆகவே, அடுத்த ஆண்டு நீங்கள் வாசிக்கவுள்ள முதல் புத்தகம் எதுவென இப்போதே தேடலைத் தொடங்கிவிடுங்கள்.

நானும் அதனைத் தொடங்கிவிட்டேன். ஏனெனில் எனது அடுத்த  ஆண்டிற்கான வாசிப்பு உத்வேகத்தைக் கொடுக்கக் கூடிய புத்தகம் அதுவாகத்தான் இருக்கும்.

ஒரு வாசகன் அதை ஒருபோதும் தவறவிட மாட்டான்...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

அக்டோபர் 25, 2025

தீபாவளி 2025 - புத்தகங்கள்


தீபாவளி 2025 - புத்தகங்கள்

இது பொம்மியின் இரண்டு வயது தீபாவளி. பொம்மி, இல்லாள், நான் என மூவரும் வழக்கம் போல
தீபாவளிக்கும் என் பிறந்தகம் சென்றிருந்தோம்.

ஏறக்குறைய பத்தாண்டுகளாய் கோலாலும்பூரில் இருந்தாலும் நான்
பிறந்து வளர்ந்த கெடா, சுங்கைப்பட்டாணி எப்போதும் என் பசுமையான நினைவுகளில் இருக்கிறது. அதனால்தான் என்னவோ வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் வீட்டை விட்டு வெளியே செல்வதை விரும்ப மாட்டேன். காரணமே இல்லாமல் வீடு முழுக்க நடந்து கொண்டிருப்பேன்.

இத்தனைக்கும் அந்த வீட்டில் நான் சில ஆண்டிகளே இருந்தேன். அதற்கு முன் ஆறுமுகம்பிள்ளை தோட்டம் என்று அழைக்கப்படும் யு.பி தோட்டத்தில்தான் எனது 20 ஆண்டுகள் கடந்து சென்றன.
அந்த சமயத்திலேயே நான் எழுத தொடங்கியிருந்ததால், பத்திரிகைகளில் என் படைப்புகளில் வரும் என் பெயருக்கு பின்னால் யு.பி தோட்டம் என் இருக்கும்.

அங்கு நான் பார்த்த கதைகளும் என்னைப் பார்த்த கதைகளும் அதனை சுமந்திருந்த மனிதர்கள் ஏராளம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமும் அதற்கு இணையாக சூழ்ச்சியும் கொண்டது.
என்றாவது ஒரு நாள் நான் நாவல் எழுதினால் அவர்களில் சிலரேனும் வந்து சேர்வார்கள் என நம்புகிறேன். அந்த வடிவத்திலேயே அவர்களை என்னால் முழுமையாக சொல்ல முடியும்.

சில அரசியல் காரணங்களால் அந்த தோட்டத்தை காலி செய்ய வேண்டி வந்தது. அதன் பின்னரே இப்போது இருக்கும் 'ஆமான் ஜயா'விற்கு வந்தோம். அங்கிருந்து சில ஆண்டுகளிலேயே நான் கோலாலம்பூருக்கு வந்துவிட்டேன்.

அங்கு நான் சந்தித்தவற்றை என் நாவலின் இரண்டாம் பகுதியாக எழுதினால் நீங்கள் கட்டாயம் வாசித்துப் பாருங்கள். நினைத்துப்பார்க்கவே முடியாத என் கடந்த காலத்தை எழுதி பார்ப்பதற்கு எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை என்ன செய்ய.

பொம்மிக்கு இரண்டு வயது என்பதால் அவளால் வீடே கொண்டாட்டம் ஆனது. பாட்டி தாத்தாவுடன் நெருக்கமாகிவிட்டாள். பயமின்றி பட்டாசு சத்தங்களை இரசித்தாள். மத்தாப்புகளை கொழுத்தி விளையாடினாள்.

தீபாவளி முடிந்த இரண்டாம் நாள், எனக்கு மருத்துவமனை சந்திப்பு உள்ளதால் சீக்கிரமே கோலாலும்பூர் திரும்பிவிட்டோம்.

வரும்போது அப்பாவின் புத்தக அலமாரியில் இருந்து எனக்கு தேவையான சில புத்தகங்களை அவரிடம் கேட்டு எடுத்து வந்தேன்.

எனது சின்ன வயதில் அப்பாதான் எனக்கு எப்போதும் புத்தகங்கள் வாங்கி கொடுப்பார். புத்தகம் வாங்கவும் அழைத்துச் செல்வார். அவர் கொடுத்த பழக்கத்திலேயே எனக்கு புத்தகங்கள் பழக்கமாகின. இன்று நான் அவருக்கு அவ்வப்போது புத்தகங்கள் வாங்கி கொடுக்கிறேன்.

நாமே ஒரு புத்தகக்கடை நடத்தினாலும், அதிலிருந்து வெளியாகும் புத்தகங்களுக்கு கணக்கு காட்டவேண்டுமே. அதற்காகவே அப்பா பெயரில் பில் எழுதி நான் கட்டுவேன். எவ்வளவுதான் பணம் கட்டினாலும் எனது சின்ன வயதில் அப்பா வாங்கி கொடுத்த புத்தகங்களுக்கு ஈடாகாது. அன்றையக் குடும்ப சூழலில் புத்தகங்களுக்கு அப்பா செலவழித்த பணம் இன்றும் எனக்கு பிரமிப்பை கொடுக்கின்றன.

இம்முறை அப்பாவின் அலமாரியில் இருந்து அதிகம் மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களை எடுத்தேன். ஒவ்வொரு மாதமும் ஒரு மலேசிய புத்தகம் குறித்து கட்டுரை எழுதுவதற்கு உதவும். என்னைவிட அதிகம் வயதான புத்தகங்களில் சில இன்றும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன.

இதில் சில புத்தகங்கள், அந்த வீட்டில் இருக்கும் போது அப்பா எனக்கு வாங்கி கொடுத்தவை.

அடுத்த என்ன வாசிப்போம், என்பதில் இருக்கும் மர்மம் எனக்கு விருப்பமானது. வாசித்ததும் அதனை எழுதுகிறேன்.

என் அப்பா எனக்கு சேர்த்து வைத்த சொத்துகளில் முதன்மையானது அவரின் புத்தகங்கள்தான், முடிந்தால் நம் பிள்ளைகளுக்கும் அப்படி கொஞ்சம் சொத்தை சேர்த்து வைப்போம். அதற்கு முன் புத்தகங்களும் சொத்துகள்தான் என கொண்டாடும் மனநிலையை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுப்போம்.


அக்டோபர் 12, 2025

- பத்து லட்சம் பட்டங்கள் -



வாசிப்பில், பத்து லட்சம் பட்டங்கள்.
(காசா குழந்தைகளின் வாக்குமூலங்களும் கவிதைகளும் 2023-2024)

புத்தகத்தைத் திறப்பதாக நினைத்தை பெருந்துயரத்தை திறந்துவிட்டேன்.
நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதனை இப்புத்தகம் சில பக்களிலேயே நமக்கு அடையாளம் காட்டிவிடுகிறது.

வாசிக்க வாசிக்க குழந்தைகளின் விசும்பலும் அலறலும் கேட்க ஆரம்பித்துவிடுகிறது.
பிஞ்சுகளின் பெருந்துயரின் பேரிழப்பின் முன் நம் துயரமெல்லாம் தூசுகளாகி வெட்கி தலைகுனித்துவிடுகின்றன.

வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியாத வயதில் அவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்விகள் நம் மனதை உடைத்துவிடுகின்றன.

இதனை எழுதும்போதும் அந்தக் கண்ணீர் வழிந்தபடியேதான் இருக்கின்றன.

மஹ்முத் என்னும் 11 வயது குழந்தையொன்று இப்படி எழுதியிருக்கிறது.

'பயணஞ் செல்ல வேண்டும்.
பயணஞ் செய்து மருத்துவமனைக்குச் செல்ல
வேண்டும்.
செயற்கைக் கைகள் பொருத்துவதற்காக.
அப்பொழுதுதான் பந்துகளை ஏந்தி விளையாட முடியும்.
எழுத முடியும்.
சாப்பிட முடியும்.

பத்து வயது குழந்தையொன்று 'ஏன் அழுகின்றாய்?' என கேட்டதற்கு;

'என் உணவுத் தட்டினை எங்கோ தொலைத்துவிட்டேன்.
அதனால் எனக்கு உணவு கிடைக்கவில்லை.'

என்கிறது. போரில் இருந்து உயிரோடு தப்பித்து வந்தக் குழந்தைகளின் வயிறு முழுக்க பசியின் கோரத்தாண்டவம். தனக்கு ஏன் உணவு கிடைக்கவில்லை என்கிற கேள்விக்கே விடை தெரியாத குழந்தைகளை எப்படி நம்ம கடந்து வர முடியும்.

இப்படி புத்தகம் முழுக்க காசா குழந்தைகளின் வாக்குமூலங்களும் கவிதைகளும் இருக்கின்றன. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் மீதான நமது இயலாமையை இம்சிக்கிறது.

எதார்த்தம் புனைவுகளைவிட மோசமானவை என்பதில் மாற்றுக்கருத்தி இல்லை. இந்த எதார்த்தம் பலவித புனைவுகளை நம்முள் இருந்து தோண்டி எடுக்கின்றது. உயிரை அசைக்கும் அந்த வேலை என் காதுகளுக்கு அருகில் துப்பாக்கி சூடுகளையும் குண்டு வெடிப்புகளையும் குழந்தைகளின் அலறலையும் மீளுருவாக்கம் செய்கிறது.


ஆங்கிலத்தில் இருந்தும் அரபு மொழியில் இருந்தும் இந்தக் கவிதைகளை தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். விடியல் பதிப்பகம் வெளியீடு செய்திருக்கிறார்கள்.

இந்தப் புத்தக விற்பனையில் பெறப்படும் பணம், காசா குழைந்தைகளின் நிவாரண நிதிக்கு அளிக்கபடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அது என் கண்ணீரைக் கொஞ்சம் துடைத்தது. விடியல் பதிப்பகத்திற்கும் , தொகுப்பும் மொழியாக்கமும் செய்த லெய்லா பொகரிமிற்கும் படங்களையும் வடிவமைப்பையும் செய்த ஆசஃப் லுசானுக்கும் இவற்றை தமிழாக்கம் செய்த க.வி.இலக்கியாவிற்கும் என் அன்பு.

உலகில் துயருரும் குழந்தைகளுக்கு என் கண்ணீரும் பிரார்த்தனைகளும்....

அக்டோபர் 05, 2025

- 2025-ல் நான்கில் மூன்று -


- 2025-இன் நான்கில் மூன்று -
 
2025-ஆம் ஆண்டின் நான்கின் இரண்டாம் பகுதியைக் கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் நமக்கு கொடுக்கப்பட்ட நாட்களில் நான்கில் மூன்று பகுதிகள் செப்டம்பரில் முடிந்தன. வந்ததும் தெரியாமல் போனதும் சொல்லாமல் என்று நம்மை புலம்ப வைத்து; இயற்கை அதனதன் வேலைகளை எந்தத் தடையும் இன்றி யாருக்கான காத்திருப்புக்கும் நில்லாமல் செய்துக்கொண்டே இருக்கின்றன.

இவ்வாண்டின் வாசிப்பிற்கான திட்டமிடலாக, 12 மாதங்களையும் முறையே மூன்று மூன்று மாதங்களாக பிரித்தேன் நான்கு பகுதிகளாக பிரித்தேன்.. ஜனவரி முதல் மார்ச் வரை, ஏப்ரல் முதல் ஜூன் வரை, ஜூலை முதல் செப்டம்பர் வரை. முதல் இரண்டு பிரிவுகளில் வாசித்ததை எழுதிவிட்டேன். அவை மொத்தம் 27 புத்தகங்களாய் அமைந்தன. 

இந்தப் பட்டியலில் மாதம் ஒரு நாவல் வாசிக்கலாம் என இன்னொரு திட்டத்தையும் இணைத்திருந்தேன். ஒன்பது நாவல்கள் வரவேண்டிய இடத்தில் ஏழு நாவல்களே சாத்தியமாகின. கடந்த இரண்டு மாதங்களாக உடல் நலமில்லை. நினைவில் வைத்துக்கொண்டு நாவலைத் தொடர்ந்து வாசிக்கும் சூழல் அமையவில்லை. அதனை கவிதை புத்தகங்கள் நிரப்பின.

இனி ஜூலை முதல் ஆகஸ்ட் வரை வாசித்த புத்தகங்களைப் பார்க்கலாம்;

நாவல்

28. சோளகர் தொட்டி
- ச.பாலமுருகன் நாவல்
- நாவல் பல இடங்களில் மனதை கலங்கடித்ததும், ஜீரணிக்க சிரமத்தைக் கொடுக்கும் மனிதர்களின் வாழ்க்கை.

கவிதைகள்

29. இறகிசைப் பிரவாகம்
- கவிதைத் தொகுப்பு
- 130 கவிஞர்களின் பறவைகள் குறித்த கவிதைகள் அடங்கியவை.
- மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய புத்தகமாய் இதனை சேர்த்துக்கொண்டேன்

30. கவிதைக் கென்ன வேலி
- இந்தியப் பிறமொழி கவிதைகள்
- கவிஞர் புவிரசுவின் தமிழாக்கம்
- குறிப்பாக கன்னடம் மற்றும் தெலுங்கு கவிதைகளின் மொழியாக்கம் இரசிக்கும்படியும் ஆச்சர்யத்தைக் கொடுக்கும்படியும் அமைந்தன.

31. அவிழும் சொற்கள்.
- கவிஞர் ரவிக்குமார் கவிதைகள்
- அங்கொன்றும்  இங்கொன்றுமாக வாசித்தவரின் கவிதைகளை புத்தகத்தில் வாசித்து மகிழ்ந்தேன்.
- இருவரிகளில் கூட ஆழமான கவிதைகளைக் கொடுத்திருக்கின்றார்.

32. நீரின்றி அமையாது உலகு.
- கவிஞர் மாலதி மைத்ரி கவிதைகள்
- 2013-ஆம் ஆண்டு, கவிஞர் பூங்குழலி இந்தத் தொகுப்பை எனக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்தார். 
- இந்தத் தொகுப்பு கவிஞரின் கவிதைகள் மீது ஆர்வத்தைக் கொடுத்தது. 
- கவிஞரின் பிற கவிதைப் புத்தகங்களையும் வாங்கிவிட்டேன்.

33. உடலாடும் நதி
-  கவிஞர் லதா அருணாச்சலம் கவிதைகள்
- எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வாசித்தேன். 
- அலட்டிக்கொள்ளாத கவிதைகள்; தனித்து இரசிக்கும்படியும் பல நினைவுகளை நினைக்கவும் வைக்கும் கவிதைகள்

34. நாளை பிறந்து இன்று வளர்ந்தவள்
- கவிஞர் மாதங்கி கவிதைகள் (சிங்கப்பூர்)
- சிங்கப்பூர் கவிஞரின் கவிதைகள் என்பதால் சில கவிதைகளோடு நேரடி  தொடர்பை உணர முடிந்தது.

35. கருநீல முக்காடிட்ட புகைப்படம்
- கவிஞர்  மனுஷி கவிதைகள்
- மாயாவை வட்டமிடும் கவிதைகளில் நம்மை உடன் அழைத்துச் செல்கிறார் கவிஞர்.

36. தூவிகளின் நிகண்டு
- இனிதி கவிதைகள்
- அன்றாடங்களை எளிமையாக கவிதைகளில் புகுத்த முயல்கிறார் கவிஞர். 
- சில இடங்களில் இரசிக்கும்படியும் சில இடங்களில் வெறுமனே கடந்து போகும்படி ஆகின்றன.

37. என்றுதானே சொன்னார்கள்
- கவிஞர் சாம்ராஜ் கவிதைகள்
- ரொம்ப நாளாய்த் தேடிய தொகுப்பு இது.
- கவிஞரின் பல முக்கியமான கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. 
- அவை வாசித்து கடக்க முடியாத அவஸ்தைகள் கொடுக்கின்றன.

கதைகள்/சிறுகதைகள்/குறுங்கதைகள்

38. அசைவற்று மிதக்கும் நிழல்
- உதயசங்கர் குறுங்கதைகள்
- குறுங்கதைகள் எழுதவும் சரி வாசிக்கவும் சரி; பெரிய உழைப்பு தேவைப்படும் என சொல்லும் தொகுப்பு.
- குறுங்கதைகள் சோம்பேறிகளின் வேலை எனச் சொல்லி சும்மா  இருப்பவர்கள் கட்டாயம் இந்தத் தொகுப்பை வாசித்துவிடுங்கள்
- உங்கள் முடிவை மாற்ற சிறந்து புத்தகம் இது.

39. சூஃபி ஆகும் கலை
- நஸீமா ரஸாக் எழுதியது.
- 50 கதைகள் கொண்ட தொகுப்பு
- வாசிக்க மட்டுமல்லாது மாணவர்களுக்கு நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய கதைகள்

40. மக்தூப்
- பாலோ கொயலோவின் எழுத்து
- ரசவாதி என்னும் நாவலுக்கான துணை நூலாகச் சொல்லப்படுகிறது.
- 200 கதைகள் கொண்ட தொகுப்பு
- முன்னமே நாம் வாசித்த் கேள்விபட்ட கதைகளை பாலோ கொயலோ அவரது பாணியில் சொல்லியிருக்கிறார்.

41. நான் யார் ? – தேடலும் வீடுபேறு அடைதலும்
- who Am I ? என்ற புத்தகத்தின் தமிழாக்கம்.
- 173 ஜென் கதைகள் கொண்ட புத்தகம்.

42. ரூமியின் வாழ்வில் ஞானக் கதைகள் நூறு
- எழுத்து இத்ரீஸ் ஷாஹ்
- ரமீஸ் பிலாலியின் தமிழாக்கம்.
- ஆன்மீக சிந்தனைக்கு ஏற்ற ரூமியின் கதைகள்

இதர வாசிப்பு

43. கவிஞனும் கவிதையும்
- எழுத்து எஸ்.ராமகிருஷ்ணன்
- கவிதைகள் பற்றிய கட்டுரைகள்
- கவிதைகளை வாசிக்கவும் எழுதவும் விரும்புகின்றவர்களுக்கு ஏற்ற புத்தகங்களில் ஒன்று.

44. ஜென் தத்துவமும் மகிழ்ச்சியான வாழ்க்கையும்
- ஜென் மீதான புரிதலுக்கு உதவும்.

45. ஜென் – எளிமையாக வாழும் கலை
- 100 நாட்களுக்கு தினமும் வாசிக்க ஏற்ற புத்தகம்.
- நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரும்பத்திரும்ப வாசிக்கலாம்.

46.  வாபி சாபி – கச்சிதமின்மையிலுள்ள ஞானம்
- ஒவ்வொன்றும் அதற்கே உரிய தனித்தன்மையில்தான் இயங்குகிறது என்பதைச் சொல்லும் புத்தகம்.

47. நேரத்தை வெற்றி கொள்.
- 14 வியாபார ஆளுமைகளின் நேரம் குறித்தான பார்வையும் அவர்கள் நேரத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

48. விமானத்தின் பயணத்திட்டம் 
- பிரையன் டிரேசி 
- விமானப்பயணத்திற்கு இணையாக தன்முனைப்பைச் சொல்லும் புத்தகம்.

49. ஆல்ஃபா அப்பா’ ஒமேகா அம்மா
- எழுத்து நியாண்டர் செல்வன்
- வாசிக்க ரொம்பவும் சுவாரஸ்யமான புத்தகம்
- எதார்த்த சூழலுக்கு ஏற்றபடி கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும்

50. As a Man Thinketh
- Book by James Allen
- Help to understand our basic thought
 

அடுத்து நடுகல்.காம் இணைய இதழுக்கு எழுதிக்கொண்டிருக்கும் 'மாதம் ஒரு மலேசிய புத்தகம்' தொடருக்காக வாசித்தவை (மூன்றும் மீள்வாசிப்பு)

51. கையறு 
- கோ.புண்ணியவானின் நாவல்

52. நிலங்களின் நெடுங்கணக்கு
- மதியழகனின் நாவல்

53. நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்
- கவிஞர் பூங்குழலி வீரனின் கவிதைகள்
 
இந்த மூன்று புத்தகங்கள் குறித்தும் விரிவான அறிமுகத்தை நடுகல்.காமில் எழுதியுள்ளேன். நண்பர்கள் அங்கு சென்று வாசிக்கலாம்.

இந்த ஆண்டின் மூன்றாம் பகுதியை முடித்து நான்காம் பகுதிக்குள் நுழைகின்றோம். அடுத்ததாய் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வாசிப்பு என்னவாக அமைகிறது என பின்னர்தான் தெரியவரும். வாசிப்போம்.

அதற்கான முன்னெடுப்பாக; வீட்டு நூலகத்தை நேற்று இரவு முழுக்க ஆராய்ந்தும் சுத்தமும் செய்துக்கொண்டிருந்தேன். அடுத்த மூன்று மாதத்தில் வாசிக்கலாம் என தோன்றும் ஒவ்வொரு புத்தகத்தையும் எடுத்து பெட்டியில் அடுக்கினேன்.

காலை விடிந்ததும்; பேட்டி நிறைய புத்தகங்களாக இருந்ததைக் கண்டேன். நான் தூங்கி எழுந்த பின்னும் என்னுள் தூங்கும் புத்தகப்பிசாசு இன்னும் கண்விழிக்கவில்லை. அதனால் கொஞ்சம் அதிர்ச்சி கொஞ்சம் குழப்பம்.

இனி பெட்டியில் உள்ளவற்றை எடுத்து வாசிக்கலாம். அல்லது வழக்கம் போல பெட்டியில் சேராமல் நேராக கைக்கு கிட்டும் புத்தகங்களை வாசிக்கலாம்.  வாசிப்போம் நண்பர்களே…

உங்களுக்கு எப்போதும் என் அன்பு..

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்