பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 12, 2025

- பத்து லட்சம் பட்டங்கள் -



வாசிப்பில், பத்து லட்சம் பட்டங்கள்.
(காசா குழந்தைகளின் வாக்குமூலங்களும் கவிதைகளும் 2023-2024)

புத்தகத்தைத் திறப்பதாக நினைத்தை பெருந்துயரத்தை திறந்துவிட்டேன்.
நாம் எவ்வளவு பலவீனமானவர்கள் என்பதனை இப்புத்தகம் சில பக்களிலேயே நமக்கு அடையாளம் காட்டிவிடுகிறது.

வாசிக்க வாசிக்க குழந்தைகளின் விசும்பலும் அலறலும் கேட்க ஆரம்பித்துவிடுகிறது.
பிஞ்சுகளின் பெருந்துயரின் பேரிழப்பின் முன் நம் துயரமெல்லாம் தூசுகளாகி வெட்கி தலைகுனித்துவிடுகின்றன.

வாழ்க்கை என்றால் என்னவென்றே புரியாத வயதில் அவர்கள் நம்மிடம் கேட்கும் கேள்விகள் நம் மனதை உடைத்துவிடுகின்றன.

இதனை எழுதும்போதும் அந்தக் கண்ணீர் வழிந்தபடியேதான் இருக்கின்றன.

மஹ்முத் என்னும் 11 வயது குழந்தையொன்று இப்படி எழுதியிருக்கிறது.

'பயணஞ் செல்ல வேண்டும்.
பயணஞ் செய்து மருத்துவமனைக்குச் செல்ல
வேண்டும்.
செயற்கைக் கைகள் பொருத்துவதற்காக.
அப்பொழுதுதான் பந்துகளை ஏந்தி விளையாட முடியும்.
எழுத முடியும்.
சாப்பிட முடியும்.

பத்து வயது குழந்தையொன்று 'ஏன் அழுகின்றாய்?' என கேட்டதற்கு;

'என் உணவுத் தட்டினை எங்கோ தொலைத்துவிட்டேன்.
அதனால் எனக்கு உணவு கிடைக்கவில்லை.'

என்கிறது. போரில் இருந்து உயிரோடு தப்பித்து வந்தக் குழந்தைகளின் வயிறு முழுக்க பசியின் கோரத்தாண்டவம். தனக்கு ஏன் உணவு கிடைக்கவில்லை என்கிற கேள்விக்கே விடை தெரியாத குழந்தைகளை எப்படி நம்ம கடந்து வர முடியும்.

இப்படி புத்தகம் முழுக்க காசா குழந்தைகளின் வாக்குமூலங்களும் கவிதைகளும் இருக்கின்றன. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் மீதான நமது இயலாமையை இம்சிக்கிறது.

எதார்த்தம் புனைவுகளைவிட மோசமானவை என்பதில் மாற்றுக்கருத்தி இல்லை. இந்த எதார்த்தம் பலவித புனைவுகளை நம்முள் இருந்து தோண்டி எடுக்கின்றது. உயிரை அசைக்கும் அந்த வேலை என் காதுகளுக்கு அருகில் துப்பாக்கி சூடுகளையும் குண்டு வெடிப்புகளையும் குழந்தைகளின் அலறலையும் மீளுருவாக்கம் செய்கிறது.


ஆங்கிலத்தில் இருந்தும் அரபு மொழியில் இருந்தும் இந்தக் கவிதைகளை தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். விடியல் பதிப்பகம் வெளியீடு செய்திருக்கிறார்கள்.

இந்தப் புத்தக விற்பனையில் பெறப்படும் பணம், காசா குழைந்தைகளின் நிவாரண நிதிக்கு அளிக்கபடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அது என் கண்ணீரைக் கொஞ்சம் துடைத்தது. விடியல் பதிப்பகத்திற்கும் , தொகுப்பும் மொழியாக்கமும் செய்த லெய்லா பொகரிமிற்கும் படங்களையும் வடிவமைப்பையும் செய்த ஆசஃப் லுசானுக்கும் இவற்றை தமிழாக்கம் செய்த க.வி.இலக்கியாவிற்கும் என் அன்பு.

உலகில் துயருரும் குழந்தைகளுக்கு என் கண்ணீரும் பிரார்த்தனைகளும்....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்