பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 29, 2025

- மனமலர் -


- மனமலர் -

நீண்ட நாட்களுக்கு பிறகான மலர்தல்.
சிறுசிறு விதைகளாய் விழுந்ததில் இருந்து தான் மட்டும் தப்பிப் பிழைத்ததில்  ஒன்று இந்த நித்திய கல்யாணி. 

அதன் மலர் போல அவள் பெயரும் அழகானது. வசீகரமானது. முதலில் இவளை நித்திய கன்னி என்றே புரிந்து கொண்டிருந்தேன்.  வயதின் காரணமாகவும் அது கொடுக்கும் கிளர்ச்சியின் காரணமாகவும் இருக்கலாம். இனி இல்லை, ஏனெனில் நாங்கள் வளர்ந்துவிட்டோம். 

முதல் பூ என்பதால் மட்டுமே, அவள் மலர்த்தும்வரை காத்திருந்து அந்த மலரை பார்க்கிறேன். இந்த இரவில் மெல்லிய மழையில் நிலவற்ற குறையைத் தீர்க்கிறாள்.

ஏதாவது ஓர் உயிரை நம் வாழ்நாள் முழுக்க உடன் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். மனம் துவண்டழும் போதெல்லாம் ஆறுதலுக்கு அவை முன் வந்து நிற்கும்.

என்னைப் பார்க்காத போதெல்லாம் வாடி வதங்கும் செடிகளைவிட்டு, எனக்காக மலர்விடும் அரும்புகளைவிட்டு, என்னைப் பார்த்து தலையசைக்கும் அதன் குறும்புகளைவிட்டு, என்னால் எப்படி போக முடியும். நீங்கள் வெறும் செடிகளா என்ன?
என் சகாக்கள் அல்லவா...

ஏனோ எனக்கு நண்பர்கள் அதிகமில்லை. ஆனால் எந்த / எதன் நட்பில் இருந்தும் நான்  ஒருபோதும் தனித்துவிடப்படவில்லை.

மண்படும் எல்லாமும், காற்றணைக்கும் ஒவ்வொன்றும் என்னை அதனதன் சகாவாகவே பார்க்கின்றன...

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

- பொய்யென பெய்யா மழை -

இதென்ன மழை !

மூத்திரம் போல

வந்ததும் தெரியல

போனதும் தெரியல


என

வீட்டில் அமர்ந்து

புலம்பிகொண்டிருக்கும்

அதே சமயத்தில்


ஏதோ ஒரு மூலையில்

பசியுடன்

பிச்சையெடுப்பவனின்

நெழிந்த டம்ளர்

நிறைந்து வழிந்த

தீர்த்தம்

அவன் தாகத்தைத் தீர்த்தது...

ஜூன் 23, 2025

- மரியாதைக் குறைப்போர் -


- மரியாதைக் குறைப்போர் -

நம்மை
மரியாதைக் குறைவாய்
நடத்துகின்றவர்களை 
இரண்டு வகையாய்ப்
பிரிக்கலாம்

முதலாவது
நம்மை 
முன் பின் தெரியாதவர்கள்

இரண்டாவது
நம்மை 
நன்றாய்த் தெரிந்தவர்கள்

மூன்றாவது வகையும் உண்டு
நாம் 
யாரென்று யாருக்கும்
தெரியக்கூடாது என 
சிரத்தையோடு இருப்பவர்கள்

#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 16, 2025

- அடச்சீ.... -


"அடச்சீ... இங்கு
எல்லா தெய்வங்களுமே
ஒன்னுதான்..."
என்பவர்கள் கூட

அந்த ஒன்றில்
வைக்கச் சொல்வது
அவர்கள்
வணங்குவதைதான்...


ஜூன் 12, 2025

- நூற்றாண்டு பிரார்த்தனை -


பொம்மிக்கு,

நீ எங்கள்
பிரார்த்தனையின் பலன்
என்கிறார்கள்

எப்படி தெரியும்
அவர்களுக்கு

எங்கள்
ஆன்மாவின்
நூற்றாண்டு கால
பிரார்த்தனையே நீதானே....

#பொம்மி #தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

ஜூன் 09, 2025

- மூதாதையின் முத்தம் -

- மூதாதையின் முத்தம் -


ஏதோ ஒன்று

எல்லாவற்றையும் தாண்டி

நம் கண்கள் கலங்காதபடிக்கு

நம் குரல்கள் நடுங்காதபடிக்கு

நம் கால்கள் இடறாதபடிக்கு

நம் வாழ்வு சிதறாதபடிக்கு


நம்மை ரொம்பவும்

ஆழமாக

தாங்கி பிடித்துக்கொண்டிருக்கலாம்


அது

நாம் எழுதிக்கொண்டிருக்கும்

வாழ்வின் பொன்சாய் மரமாகவும்

இருக்கலாம்


அது

ஆதாம் ஏவாள் காலத்து

நம் மூதாதையின் முத்தமாகவும்

இருக்கலாம்



அதுவே

நம் உள்ளங்கையைக் கூட

முழுதாய் மூடமுடியாதபடிக்கு

தவித்துக்கொண்டிருக்கும்

அந்தக் கடவுளின் கரங்களாகவும் இருக்கலாம்




ஜூன் 01, 2025

- நினைவின் துகள் -



எங்கெங்கிருந்தோ வந்திருந்த
இசை
என் அனுமதியின்றி
காதுகளில் மெல்ல மெல்ல
நுழைந்தபடி என்னை
இம்சிக்கிறது

பாழடைந்த
பழம் நினைவுகளுக்கு
அவை ஆங்காரமாய்
அலாரம் வைத்துவிடுகின்றன

புழுதிகள்போல
புரட்ட விரும்பாத பக்கங்களின்
நினைவுகள்
மேலெழுந்த சுழலாய்ச்
சூறாவளியாய்

என்
எல்லாப் பக்கங்களின்
துக்கத்திலும்
இடியைக் கொட்டிவிடுகின்றன


ஆங்காரமாய் எழுந்த
நினைவுத்தூசிகளின்
கண்ணாடித் துகள்
என் கண்களை அரிக்கின்றன

அழுதழுது வெளியேற்றிய
கண்ணீரில் கலந்திருக்கும்
நினைவுகள்

மாய மந்திரம் போல
மீண்டுமென் இதயத்தையே
வந்தடைகின்றன

நினைவுகளை அழிக்க
நினைவுகளாலேயும் முடிவதில்லை
நீங்களும் நானும்
எம்மாத்திரம்

நினைவுகள்
ரொம்பச் சுலபமாய் நம்மை
ஏமாற்றிவிடும்

நாமும் ஏமாறுகிறோம் தினம் !

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்