பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மே 27, 2020

வெறும் நாய்தான்...


   தீ வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. மின்சார கம்பிகள் வெடித்தன. பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஏதோ சத்தம் கேட்டு ஓடி வந்தார்கள். தீயணைப்புப் படையினர்க்கு அழைத்தார்கள்.

   ஆயினும் காத்திருக்கக் கூடாது என்பதை புரிந்திருந்தார்கள். வெளியில் சென்றிருந்த மேரிக்கு அழைத்தார்கள். அவளில் வீடு எப்படியோ தீப்பிடித்து எரிவதைச் சொல்லவும் செய்தார்கள்.

   வெளியில் இருந்தவர்கள் முடிந்தவரை வாலிகளில் தண்ணீர் நிரப்பி,  தீயை அணைக்க முயல்கிறார்கள்.

   நல்லவேளை வீட்டில் யாருமில்லை. தப்பு. வீட்டிலிருந்து ஏதோ சத்தம் கேட்கிறது. வீட்டில் எரியும் தீக்கு  நடுவில் யாரோ மாட்டிக்கொண்டார்கள். வெளியில் அதற்கு ஆதாரமாய் சத்தம் கேட்கின்றன.

   மேரியும் அலறிக்கொண்டே வந்துச் சேர்கிறாள். அக்கம் பக்கத்தினர் அவளிடம் விசாரிக்கிறார்கள். 
உள்ளே அவளது நாய்க்குட்டி இருப்பதைச் சொல்லி அழுகிறவள் உள்ளேச் செல்லப் பார்க்கிறாள். யாரும் அவளை அனுமதிக்கவில்லை.

   தொடர்ந்து அருகில் வசிப்பவர்கள் ஒரு சேர  தீயை அணைக்க முயல்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தீயணைப்புப் படையினர் வந்துவிடுவார்கள். அதற்கான அபாய ஒலி கேட்கத் தொடங்கியது.

    உள்ளே இருக்கும் நாய்க்குட்டியின் சத்தம் அதிகமாகிறது. மேரிக்கு எங்கிருந்து வந்த வேகமோ தெரியவில்லை. எல்லோரையும் தள்ளிவிட்டு வீட்டு வாசலை நோக்கி ஓடுகிறாள். அருகில் இருந்த பூ ஜாடியை எடுக்கிறாள். ஜன்னலில் வீசுகிறாள். மெல்லிய கம்பிகள் அப்படியே பிய்ந்து பின்னால் விழுந்தன.

   யோசிக்காது உள்ளே குதிக்கிறாள். வீடு முழுக்க புகையாகவும் அனலாகவும் இருந்தது. தீயின் எரிச்சல் அவள் உடலை சுட்டது. எப்படியோ அவளது நாய்க்குட்டியைக் கண்டுபிடித்துவிட்டாள்.

   வெண்ணிற பஞ்சு நாய், இப்போது ரோமங்கள் பொசுங்கி பீதியுடன் துடித்துக் கொண்டிருந்தது. தன்னைக் காப்பாற்றிய தோழியின் முகத்தை ஈரப்படுத்த முயன்ற குட்டியை மேரி கட்டியணைத்துக் கொண்டாள்.

   அவள் வந்த வழி இப்போது தீயினால் சூழ்ந்துவிட்டது. எப்படியோ வாசல் கதவை திறக்க முயல்கிறாள். பாதி கதவு மட்டும் உடைந்து விழுகிறது.

   உள்ளே, தீ எல்லாவற்றையும் விழுங்க ஆரம்பித்து விட்டது. வேறு வழி தெரியவில்லை. பாதி உடைந்த கதவின் வழியே தனது குட்டியை முதலில் தூக்கி வீசுகிறாள். அது அங்கிருந்து வெளியே புல் தரையில் உருண்டுபோய் விழுகிறது.

    உள்ளே  வெடிப்பு. மேரி மீது ஏதோ பலம் கொண்டு மோதுகிறது. அலறுகிறாள். 

  வெளியில் விழுந்த, குட்டி தன் தோழியின் அலறல் சத்தம் கேட்டு, வெளியேறிய வேகத்தைக் காட்டிலும் அதிக வேகமாக மீண்டும் பாதி உடைந்த கதவின் வழி உள்ளே குதிக்கிறது.

     மீண்டும் பெரிய வெடிப்பு ஏற்பட அருகில் இருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடுகிறார்கள்.

#தயாஜி

2 comments:

Unknown சொன்னது…

சாதாரண கதை என்றாலும் பிராணிகள் மீது பிரியம் உள்ளவர்களுக்கு புரியும் இந்த கதையின் ஆழம்.நான் முதல் முதலில் பிரியமாக வளர்த்த ஒரு ஜீவனின் பிரிவு எனக்கு தந்த வலி எனக்கு புதிய உணர்வை கொடுத்த நாளை மறக்க முடியாது

Unknown சொன்னது…

சாதாரண கதை தான் ஆனால் பிராணிகள் பிரியர்களுக்கு இந்த கதை எத்தகைய வலியை தரும் என்று நான் 5 வருடத்திற்கு முன் உணர்ந்து இருக்கிறேன். மனிதர்களை தவிர்த்து முதல் முறையாக எனக்கும் ரோமியோ என்ற ப்ப்பிக்கும் ஏற்பட்ட நட்பு வித்தியாசமான அனுபவத்தை தந்த நாட்கள் அவை.துயரத்தின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் எனக்கு ரோமியோ ஒரு ஆறுதலாக இருந்தது. எனக்கு அப்போது pet therapy பற்றியெல்லாம் அறிமுகம் இல்லை.ரோமியோவிடம் நிறைய உரையாடி இருக்கிறேன். அன்பும் கோபமும் அக்கறையும் அதன் மீது காட்டி இருக்கிறேன். திடீரென்று அது மாயமாக மறைந்து விட்டது.அதன் பிறகு நிறைய வாயில்லா ஜீவன்களிடம் உரையாடி கொண்டே இருக்கிறேன்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்