புத்தகவாசிப்பு_2020_8 ‘நீலலோகிதம்’
நாம் வாசிப்பதற்கான கதைகளை நாமே தேர்ந்தெடுக்கின்றோம்.
இது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு, கதைகளையும் அதற்கான வாசகர்களைத் தேர்ந்தெடுத்துவிடுகின்றன.
நாம் வாசிக்கின்ற கதைகள் நமக்கு பிடிக்கின்றதா இல்லையா என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதில் முதன்மையாக நான் நினைப்பது ரசனை. எப்போது நாம் வாசித்து நமக்கு பிடிக்காமல் போன,
நமக்கு புரியாமல் போன பல கதைகள் இன்று நமக்கு பிடிக்கின்றன புரிகின்றன. காரணம் குறிப்பிட்ட
இடைவேளி நம்மையும் நமது ரசனையையும் வளர்த்திருக்கிறது.
இப்படி
என் நூலகத்தில் பல புத்தகங்கள் பாதி படித்த நிலையில் அப்படியே இருக்கின்றன. அதில் சிலவற்றை
இப்போது வாசிக்கையில் ‘அட…இது அப்போது புரியாமல் போயிற்றே..’ என என்னை நானே நினைத்துச்
சிரித்துக் கொள்கிறேன். ஆனால், முதல் வாசிப்பில் எனக்கு கிடைத்த அனுபவத்தை மிகவும்
சுறுக்கமாக புத்தகத்தில் குறிப்புகளாக எழுதி வைத்திருப்பேன். இனி அவ்வாறான முதல் வாசிப்புக்
கொடுக்கும் அனுபவத்தையும் எனது வலைப்பூவிலும்
முழுமையாக புரிந்தவரை எழுதலாம் என நினைக்கிறேன். இதனை வாசிக்கின்ற இதர நண்பர்கள் இதைப்பற்றி
மேற்கொண்டு உரையாடவும் அது ஏதுவாக என் புரிதலுக்கு உதவியாக இருக்கும். ஒரு இடைவெளி கடந்தப்பின் மீண்டும் வாசிக்கும் போது
அதனை எழுதுகையில் இரண்டு இரசனைக்கும் உள்ள வித்தியாசத்தை நானும் நீங்கள் அறிந்துக்
கொள்ளலாம்.
சில
நாட்களுக்கு முன்பாக ஷீபா இ.கே-வின் ‘நீலலோகிதம்’ மலையாளச் சிறுகதை புத்தகத்தை வாசித்தேன்.
கவிஞர் யூமா வாசுகி மொழிப்பெயர்த்திருந்தார். இதுவரை ஷீபா இ.கே குறித்து எனக்கு எந்த
அறிதலும் இருக்கவில்லை. ஆதலால் எந்த முன் முடிவுகளும் இல்லாமல் சிறுகதைகளை வாசிக்க
எத்தனித்தேன்.
மொத்தம் 23 சிறுகதைகள் இருந்தன. முழு தொகுப்பையும்
படிக்கும் மனநிலையில் வரவில்லை. முதல் இரண்டு கதைகளில் ஏதோ குறைவதாக தோன்றியது. மேலும்
மூன்று கதைகளை வாசித்தேன். இப்போதைக்கு இது போதும் என தோன்றிவிட்டது.
முதல் கதை ‘ஆட்டோகிராப்’. பிரிந்துவிட்ட காதலர்கள்
ஆளுக்கொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். காதலனுக்கு
தாம்பத்தியம் நினைத்தது போல இருக்கவில்லை. காதலிக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன்.
மேற்படிப்பு படிக்கும் மகளை அழைத்துச் செல்ல காதலி வரவேண்டியுள்ளது. காதலனுக்கு தெரிவிக்கிறார்.
இருவரும் அங்கு ஒரு விடுதியில் தங்குகிறார்கள். என் அனுமதி இன்றி என்னை தொடாதே என்று
காதலி சொல்லிவிடுகிறாள். அறையில் கட்டிலும் இரண்டாக இருக்கிறது. அவள் திரும்பி படுத்திருக்கிறாள்.
இருவரும் உள்ளுக்குள் ஏதும் நடந்துவிடாதா என்கிற எதிர்ப்பார்ப்பில் மனம் கணக்கிறார்கள்.
விடிகிறது காதலி மகளை அழைத்துப்போக புறப்படுகிறாள். பேருந்து நிலையத்தில் காதலன் அமர்ந்திருக்கிறான்.
ஏமாற்றத்தின் கரையான்கள் மிச்சப்பட்ட காதல் தாளையும் அரித்துத் தின்னத் தொடங்கியிருக்கின்றன என சொல்லி கதையை முடிக்கின்றார்.
வெறும் சம்பவங்களாகவே இக்கதை தொடங்கி முடிந்துவிட்டது. சமீபத்தில் திரைகண்ட 96 திரைப்படத்தின்
காட்சி போல இக்கதை அமைந்திருக்கும். ஆனால் இக்கதைதான் முதலில் வந்தது. ஏன் அவர்கள்
ஆளுக்கொரு கட்டிலிலேயே அன்று உறங்கிவிட்டார்கள் என வாசகர்களை கதாசிரியர் தேட வைக்கிறாரோ
என்னவோ.
இரண்டாவது கதை, ‘சேஷம் சிந்த்யம்’ 60 வயதை கொண்டாட
தயாராகிக்கொண்டிருக்கிறார் லஷ்மியம்மா. கணவர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் தன்
பேரழகிக்கு ஷஷ்சிப்தப் பூர்த்தியாடா என சொல்லியிருக்கலாம். வழக்கம் போல ஆற்றுக்கு குளிக்கச்
செல்கிறார். ஆற்றிலிருந்த லஷ்மியம்மாவை ஒரு
பையன் பிடித்து இழுக்கிறான். தன் கழுத்து நகைக்குத்தான் அவன் இழுக்கிறான் என நினைக்கிறார்.
கழட்டிக் கொடுக்கிறார். அந்த பையன் அதனை உதறிவிடுகிறான். வன்கலவி செய்யத் தொடங்குகிறான். அடுத்த கொடுமையாக லஷ்மியம்மாவின்
கழுத்தை அழுத்திக் கொல்கிறான். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தயாரான வீடு மரண ஓலத்தைக்
கேட்கப்போகிறது.
சுருங்கச்சொன்னால், 60 வயது மூதாட்டியை ஒரு பையன் வன்கலவி செய்கிறான்.
அவன் கையால் சாவதற்கு முன்பாக அந்த பாட்டி என்னென்ன நினைக்கிறார் என்பது கூட சரியாக
சொல்லப்படவில்லை. கதையில் தொடக்கத்தில் கடவுள் லஷ்மியம்மாவின் கதையை எழுதுவதாகத் தொடங்கி
அவரே முடிவையும் எழுதிக்கொண்டிருப்பதாக கதாசிரியர் கதையை முடிக்கின்றார். இப்படியான
ஒரு செய்தியை நானும் கேட்டிருக்கிறேன். தனியாக இருந்த ஒரு மூதாட்டியிடன் கொள்ளையடித்த
இரு இளைஞர்கள், பதினெட்டு இருபது வயதுள்ளவர்கள், அந்த மூதாட்டியை வன்கலவியும் செய்திருக்கிறார்கள்.
இது வெறும் செய்திதானே இதில் என்னத்தை நாம் சொல்லிவிட முடியும். இலக்கியம் என்பது உள்ளதை
அப்படியே சொல்வதா அல்லது அதன் உளவியலையும் காரணத்தையும் சொல்வதா என்கிற கேள்வி இங்கு
எழுகிறது. இக்கதையில் அந்த பையனின் செயலுக்கான காரணத்தையும் அதன் பின்னனியையும் சொல்லியிருந்தால்
இது முக்கிய கதையாக மாறியிருக்கும். ஆனால், அந்த ஆறு பகுதியில் கள்ளும் கஞ்சாவும் குடிக்கும்
ஒரு தலைமுறை இருக்கிறது என்கிறார். இதுமட்டும் போதுமானது என நினைத்துவிட்டாரோ. கதைகளுக்கு
வைக்கும் தலைப்பு மிக முக்கியமானது. இக்கதையின் தலைப்பு ‘சேஷம் சிந்த்யம்’, அதன் அர்த்தம்,
பிறகானது சிந்திக்க வேண்டியது. கதையை வாசித்து முடித்ததும் பிறகானது என்னவென்று வாசகரை
சிந்திக்க வைத்து இக்கதையில் கதாசிரியர் சொல்லாமல் விட்டுவிட்டதாக நாம் குறைபட்டுக்கொள்ளும்
எல்லாவற்றையும் நம்மையே தேட வைக்கிறார்.
மூன்றாவது கதை ‘விடுமுறைக் காலம்’ . தான் சிறுவயதில்
செய்த ஒன்று எத்தனை வேதனையைக் கொடுக்கிறது என்பது கதை. உண்மையில் நல்ல கதை நல்ல கரு. பால்யத்தில் நடந்த
அர்த்தம் புரியாத சம்பவங்களுக்கு பிறகொருநாள் நமக்கு பதில் கிடைக்கும். அந்த சமயம்
நாம் அர்த்தம் புரியாமல் செய்துவிட்ட காரியத்தின் விஸ்வரூபம் எடுத்து நின்று நம்மை
பயமூட்டும்.
நான்காவது கதை ‘ராதாமோகனன்’. அதற்கு ‘ராதையை
வசீகரிப்பவன்’ என்று பொருள். விரக்தியும் வாழ்வில் பெரிய பிடிமானம் இல்லாமல் இருக்கும்
ராதாவை காகம் வசீகரிக்கிறது. கனவுகளாக கேள்விகளாக அவளும் காகத்தை தேடுகின்றாள். ஆனால்
சொல்லவந்ததை முழுமைபடுத்தவில்லை. அவசரமாக கதையைத் தொடங்கி அவசரமாக கதையை முடித்துவிட்டதாக
தோன்றுகிறது.
இத்தொகுப்பில் நிறைவாக நான் வாசித்தது ‘நீலலோகிதம்’
என்னும் புத்தகத்தின் தலைப்புக் கதை. லோகிதாவிற்கு விவாகரத்து ஆகியிருந்தது. அவளின்
அதீத பாலுறவு அவளின் விவாகாரத்திற்கு காரணமாகிறது. அதன் பிறகு, மனைவி பிள்ளைகள் இருக்கின்ற
லோகிதாவிற்கும் நஜீமிற்கும் தொடர்பு ஏற்படுகிறது.
மனைவி பிள்ளைகள் வீட்டில் இல்லாத சமயங்களில் இருவரும்
கூடி மகிழ்கின்றனர். நண்பன் மூலமாக, மாணவர்கள் ஆபாசப்படங்களை கைபேசியில் வைத்துக் கொள்வதையும்
அதனை தன் கடையில் வந்து பதிவிரக்கம் செய்வதையும் தெரிந்துக் கொள்கிறான். ஏனோ லோகிதாவையும்
அவ்வாறு கைபேசி கட்டத்திற்குள் அடைத்து நண்பர்களுடன் பகிர நினைக்கிறான்.
கட்டிலின் மேலே கேமராவை வைக்கிறான். அவளின் நிர்வாண மேனி கேமராவில் புகுந்து கைபேசிகளுக்கு பரவ தொடங்குகிறது.
தன் வீட்டிற்கு சகோதரியின் பதின்மூன்று வயது
மகன் வருகிறான். அவனிடம் இருந்த மெமரி கார்டை எடுத்து பாடல்களை ஏதும் உண்டா என பார்க்கும்
நேரத்தில், அவளையே அவள் முழு நிர்வாணமாக பார்த்து அதிர்ந்துப்போகிறாள்.
தன் வாழ்வை நினைத்து அழுகிறாள். ஆனாலும் நஜீமின்
மீது அவளுக்கு இருக்கும் காதலை புரிந்துக்கொள்கிறாள். மேலும் அவனை நேசிக்க ஆரம்பிக்கின்றாள்.
அவனை மீண்டும் அவன் வீட்டு கட்டிலுக்கு தன்னை அழைக்க ஏற்பாடுகள் செய்கிறாள். அவ்வாறே
வீட்டில் யாருமில்லாத சமயம் அவளை அழைக்கிறான். அவளும் ஆசையுடனும் கையில் பழக்கூடையுடனும்
வருகிறாள்.
இருவரும் இன்பத்தில் மூழுகுகிறார்கள். உடல்
தாகம் தீர்ந்தப்பின் பழக்கூடையில் இருந்த கத்தியை எடுக்கிறாள். நஜீம் அலறுகிறான். அவனை
லோகிதா சமாதானம் செய்கிறாள். ‘நீ வாழ வேண்டும்.. வாழ்ந்தே ஆக வேண்டும்’ என சொல்கிறாள்.
அதோடு ஆம்புலன்ஸ்கு அழைக்கிறாள்.
அவனுடைய ஆண்மையுடன் ரத்தத்துடனே நடந்துச் செல்கிறாள்.
இதனை வாசித்து முடிந்தததும்
எனக்கு மாலினி பாளையங்கோட்டை என்கிற திரைப்படம் நினைவிற்கு வந்தது. முதலில் மலையாளத்திலும்
பிறகு தமிழ்லிலும் வெளிவந்தது. தன்னையும் மற்ற பெண்களை ஏமாற்றியது போல ஏமாற்றிய காதலனின்
ஆண்குறியை நாயகி வெட்டி எடுத்து அங்கே தையல் போட்டுவிடுவாள். அக்கதைப்படி அப்பாவி பெண்ணொருத்தி
எடுத்திருக்கும் அடுத்தகட்ட அவதாரமாக அமைந்திருக்கும். வெறுமனே அப்படி வெட்டி எடுத்து
தையல் போட முடியாது என்று தர்க்கம் செய்தாலும, கதையில் அதன் முடிவு அப்பெண்ணிற்கு கிடைத்த
நீதியாகவே தெரிந்தது.
ஆனால் லோகிதா அப்படியில்லையே. அவளுக்கு அதீத பாலுறவு
வேட்கை இருப்பதாக சொல்லி கணவன் விவாகாரத்து வாங்குகிறான். அவளி அழகில் மயங்கி அவளை
வசீகரிக்கிறான் நஜீம். நஜீமிற்கு மனைவி பிள்ளைகள் உண்டு. இருந்தும், அவனுடன் குற்றவுணர்வின்றி
தொடர்பு கொள்ளும் நாயகி தனக்கு துரோகம் செய்தவிட்ட நஜீமின் ஆண்மையை வெட்டுகிறாள். நஜீமின்
மனைவிக்கு லோகிதா செய்த துரோகத்திற்கு என்ன தண்டனை பெறப்போகிறாள் என்கிற கேள்வி எழாமல்
இல்லை. இரண்டு திருடர்களில் ஒருவருக்கு மட்டும் ஒரு திருடன் தண்டனைக் கொடுத்து தான்
மீண்டும் எப்போதாவது திருடலாம் என புறப்பட்டால் எப்படியிருக்கும். இக்கதையை இன்னமும்
நன்றாக சொல்லியிருந்தால் எந்த கேள்விகளுக்கும் இடமில்லாமல் போயிருக்கும். ஆனால் கதையில்
கதாப்பாத்திரங்கள் சரியாக சொல்லப்படாதது கதையை பலவீனமாக்கிவிட்டது என தோன்றுகிறது.
இப்புத்தகம் வாசித்தவரை போதும் என நினைக்கிறேன்.
மீண்டும் இக்கதையை சிறிய இடைவேளி விட்டு படிக்கலாம். நண்பர்கள் யாரும் இப்புத்தகத்தை
வாசித்திருந்தீர்கள் என்றால் மேற்கொண்டு இக்கதைகளைக் குறித்து நாம் பேசலாம். இக்கதைகளை
நீங்கள் வாசிக்கையில் உங்களுக்கு வேறு கருத்துகள் இருக்கலாம். ரசனை என்பது அதுதானே.
நாம் உரையாடலாம்.
- தயாஜி
-
0 comments:
கருத்துரையிடுக