பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 01, 2020

புத்தகவாசிப்பு_2020_ 2 'கதை மழை'




         உலகச்சிறுகதைகளா உள்ளூர் சிறுகதைகளா எது ஒசத்தி என ஆளுக்கு ஆள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதைப்படித்தவர் அதுதான் சிறந்தது என நின்றுவிடுகிறார். அங்கு வராதவர்களை ஏளனமாகப் பார்க்கிறார். இதைப் படித்தவர் இதிலென்ன குறையென நினைத்து வேறேதும் சொல்லாமல் கடந்துவிடுகிறார். இருவேறு மனநிலைகளைக் கடந்து உண்மையான வாசகன் தனக்கான பிரதி எங்கிருந்தாலும் கண்டுக் கொண்டு கணக்கில் எடுத்துக் கொள்கிறான்.

          இன்னும் சிலரே ஒரு படி மேல் சென்று, சரியானதைக் கண்டு அடுத்தவர் வாசிப்பிற்கு வழிகாட்டுகிறார்கள். இவ்வழிகாட்டல் பெரிய அளவில் நமக்கு நேரமிச்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. சிறந்த எழுத்தாளர்களின் தவறான கதைகளை வாசித்து, இதெல்லாம் ஒரு கதையா என புத்தகத்தையும் அந்த எழுத்தாளரையும் மூடி வைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒருவரின் பத்து சிறுகதைகளை வாசித்து அதிலுள்ள ஒன்றிரண்டு நல்ல கதைகளைவிட மோசமான கதைகளால் நாம் பாதிப்பிற்குள்ளாவதை தடுக்கவேண்டும். முதல் அனுபவமே அந்த எழுத்தாளர் மீதான  சரியில்லாத கண்ணோட்டத்தைக் கொடுக்கும்படியால், நல்ல எழுத்தாளரை, அவரது முக்கியமான கதைகளைத் தவறவிடுவது நமக்குத்தான் இழப்பு.

        முன்மொழியும் படைப்புகள் கூடத்தான் சமயங்களில் நம்மை ஏமாற்றி விடுகின்றன. ஆமாம். ஆனால் தவிர்ப்பதற்கில்லாமலில்லை. யார் , எதன் பொருட்டு கதையையோ எழுத்தாளரையோ முன்மொழிகிறார் என்கிற அடிப்படை கேள்விகளை முன்வைக்கலாம்.

      வழக்கமாக என்னிடம் யாரும் கதைகளை முன்மொழியும் போது, மேலும் அக்கதை குறித்து அந்த உரையாடலை தொடர்வேன். அதன் வழி அக்கதை நமக்குள்ளும் ஒரு பொறியைத் தட்டிவிடும். அதனை அப்படியே உள்வாங்கி எனக்கான கண்ணோட்டத்தில் அக்கதையை வாசிக்க முற்படுவேன். அப்போது அக்கதை நமக்கு முற்றிலும் வேறான கண்ணோட்டத்தைக் கொடுக்கலாம், முன்மொழிந்தவர் கண்டிடாத தரிசனத்தையும்கூட நாம் கண்டுக்கொள்ளலாம்.

       தமிழ் எழுத்துலகில் பல முக்கியமான எழுத்தாளர்கள் காலந்தோரும் பலவகையானப் படைப்புகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்தபடியேதான் இருக்கிறார்கள். கூடுதலாக அவற்றில் பெரும்பாலான படைப்புகளை இணையத்தின் மூலமாகவே நாம் வாசித்துவிடலாம்.

     பிரபஞ்சனின் ‘கதை மழை’. நற்றிணை பதிப்பகத்தின் வெளியீடு. உலகச்சிறுகதைகளுக்கு ஈடாக தான் கருதும் தமிழ்ச்சிறுகதைகளை நம்முடன் அவர் பகிர்ந்துக்கொள்கிறார்.

      புத்தகத்தின்  கதை மழை என்கிற தலைப்பில் சிறுகதைகளைக் குறித்தும் , ‘நிரந்தரமான போராளி!’ , ‘ஓய்வு பெற்றபோது..’, ‘சொல்வலை வேட்டுவர்’, ‘செல்லம்மாள்’ மற்றும் ‘வீழ்ச்சிகளை எதிர்க்கும் மேன்மை’ என்கிற தலைப்புகளில் சிறுகதைகளூடே தனது அனுபவத்தையும் பகிர்ந்திருக்கின்றார்.

        ஆண்டன் செகாவின் ‘ஒரு குமாஸ்தாவின் மரணம்’ என்கிற சிறுகதையை ஒத்த அம்சத்தைக் கொண்ட ஜெயந்தனின் ‘முனுசாமி’ சிறுகதையைச் சொல்லியிருப்பது தொடக்கத்திலேயே ஆர்வத்தைத் தூண்டுகிறது. இரண்டு கதைகளும் சொல்லப்பட்டுள்ள அடிமைத்தன வாழ்வை ஒரே கோட்டிற்குள் கொண்டு வந்து சேர்த்துள்ளார். தொடர்ந்து திருடன் மணியம்பிள்ளை நாவல் பற்றி குறைந்த அளவில் கூறிவிட்டு கா.நா.சு மொழிப்பெயர்த்த ‘ரோல்ட் டால்’  எழுதிய திருடன் கதையை அதன் சுவாரஷ்யம் குறையாமல் சொல்கிறார். அடுத்தபடியாக புதுமைப்பித்தன் எழுதிய சங்குத்தேவன் என்கிற கதையில் வரும் திருடனின் குணத்தை சிலாகிக்கிறார்.

        கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் தப்புத்தவறுகளுக்கு சங்க காலம் தொட்டே மனைவி மீதுதான் பழிகள் குறிப்பாக பெண்களே  குற்றவாளிகள் ஆக்கப்படுவதை  ஆண்டன் செகாவ் எழுதிய ‘ நடிகை’ சிறுகதை மூலம் சொல்லிவிட்டு அங்கிருந்து கண்ணகிக்கு சென்றுள்ளார். சொல்லப்போனான் ‘நடிகை’ கதை மனதை குடையத்தான் செய்கிறது.

       அடுத்தடுத்து, ந.சிதம்பர சுப்ரமணியத்தின் ‘இதயநாதம்’ தி.ஜானகிராமனின் ‘மோக முள்’, வைக்கம் முகமது பஷீரின் ‘இளம் பருவத்து தோழி’, ‘மதில்கள்’, ‘எங்கள் தாத்தாவுக்கு  ஒரு யானை இருந்தது’, ‘தேன் மாம்பழம்’, லா.சா.ராவின் ’அபூர்வ ராகம்’. புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’ ‘சாபவிமோசனம்’  ‘காஞ்சனை’ ‘கடவுளும் கந்தசாமிபிள்ளையும்’, சார்வாகனின் ‘சின்னூரில் கொடியேற்றம்’ ‘தபால்க்கார வடிவேலு’ அதோடு ‘அமரப்பண்டிதர்’ என்னும் குறுநாவல் குறித்தும் சொல்லி, வாசிக்கும் ஆர்வத்தை வாசகர்களிடம் பற்ற வைக்கிறார்.

நிறைவாக;

      எதைப் படிப்பது எப்படிப் படிப்பது போன்ற பெரிய வார்த்தைகளைச் சொல்லாமல், தனது வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ளும்வகையில் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்ட கதைகளில் பெரும்பாலானவற்றை முன்னமே வாசித்திருந்தாலும் மீண்டும் மீள்வாசிப்புச் செய்ய இப்புத்தம் ஆவலைத் தூண்டுகிறது. நல்ல கதைகளை வாசிக்க விரும்பம் உள்ளவர்களுக்கு இப்புத்தம் நல்லதொரு தொடக்கத்தைக் கொடுக்கும். அத்தொடக்கம் தொடர்வதும் அவ்வழியே நின்று கையசைப்பதும் வாசிப்பவர்கள் கைகளில் இருக்கிறது.  

- தயாஜி

  


1 comments:

Yarlpavanan சொன்னது…

நல்ல அறிமுகம்
பாராட்டுகள்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்