கவிதை வாசிப்பு - ஓர் அறிமுகம்
மிக அற்புதமான வழி. ஆனால் குறுக்கு வழி. இதில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். எந்தத் துரும்பையும் பற்றிக்கொண்டு போரிடலாம். எத்தனை பெரிய இரும்பையும் தின்றுத்தீர்த்து சிரிக்கலாம். ஒரு வரியில் அழுதுவிடலாம். மறு வரியில் வாழ்வை புரிந்துக்கொள்ளலாம்.
எங்கோ ஓர் மூலையில் நம்மை போலவே வலித்தவன் ஒருவன் இருக்கிறான். ஆதலால் நான் தனியல்ல என அரை வாய் புன்னகிக்கலாம்.
நேரம் எடுத்து நாள் கணக்கில் வாசித்து முடித்து மனம் கொண்ட வெறுமைத் தீயை சில வரிகளில் வாழ்ந்து முடித்துவிடலாம்.
நிச்சயம். கவிதைகள் மனித உணர்வின் குறுக்குவழிதான்.
ஆனால் அவை நம்மை அதிகம் பேசவிடாது. அங்கு கற்றது; நாம் பேசவும் கூடாது. மாபெரும் யுத்தத்தின் வழியனுப்புதலில் கையசைத்து சிரிக்கும் குழந்தையும் அதுதான். யோசிக்கையில் அந்த மாபெரும் யுத்தமும் அதுதான். பக்கங்களில் எஞ்சிய இடங்களில் கவிதை கொண்டு நிரப்பினாலும் அது காலம் கடந்து சிரஞ்சீவியாக நின்று நம்மை கொண்டாடும்.
"உன் கவிதை புரியல" இன்னமும் கேட்கும் ஒரே கேள்வி. புரியாமல் நிற்பது கவிதையா? புரிய முடியாமல் தவிப்பது மனமா ? என யோசிக்காதவரை கவிதை நம்மை நிற்கவைத்து கேலிப்பார்வை பார்க்கத்தான் செய்யும்.
எது கவிதை எது கவிதை இல்லை என அடித்துக்கொள்கிறோம் கடித்துக் கொள்கிறோம். ஆனால் ஏன் கவிதை நம்மிடம் வந்து நிற்கிறது என யோசிப்பதில்லை. எப்படி அதனால் காலத்தைக் கடக்க முடிகிறது என நினைக்க நேரமில்லை. ஆனால் சொல்கிறோம் 'கவிதை புரியல'.
முதலில் ஏன் கவிதை புரிய வேண்டும் என நினைக்கிறோம்? அதனை வென்றுவிட நினைக்கிறோமா? வந்து வந்து கால் தொட்டு செல்லும் அலைகளென்பதால் கடல் அறிந்தவர்களா நாம். அறியத்தான் முடியுமா நம்மால்.
ஆனால் தொட்டுச் செல்லும் அவ்வலைகள் நம்மில் விட்டுச்செல்லும் நினைவுகள்தான் எத்தனையெத்தனை. அவைதான் நம்மை இயக்குகின்றன.
வரைபடத்தைக் கொண்டு வழியின் அழகை காற்றின் குளிரை பறவைகளின் அழைப்பை மிருகங்களின் பசியை சொல்லிவிட முடியுமா என்ன?
ஆனால் அவ்வழி ஆடு மேய்ப்பவன் போதுமே ஆட்டுக் கழுத்து மணி அசைப்புச்சத்தம், பசிக்கு புல் தின்னும் சத்தமா அல்லது ருசிக்க நரி வந்த சத்தமா என தெரியப்படுத்த.
காலந்தோரும் கவிதைகள் தன்னை மானுட மனங்களில் ஏற்றிக்கொள்ளத்தான் போகின்றன. மனித நினைவுகளை தூண்டிவிடதான் போகின்றன. அழுத கண்ணீரை துடைத்துவிடதான் போகின்றன. நம்மை அழ வைக்கத்தான் போகின்றன.
தன் தீரா துயரங்களில் இருந்தும் கலை படைப்பவந்தான் கலைஞனாக இருக்க முடியும் என நம்புகின்றவன் நான்.
என் வழியெங்கும் வார்த்தைகளாய் பலரின் துக்க துயரங்களும் சந்தோஷ குவியல்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஏதோ ஒரு வார்த்தையின் வழி அதனை மீள்ப்பதிவு செய்யத் தவறுவதில்லை.
அப்படியான குறுக்குவழியில் கவிதைகளைத் தேடிச்செல்லும் மேய்ப்பவனாய் என் காதில் கேட்கும் மணியோசை என்னவென்று பகிரும் முயற்சிதான் இந்த #கவிதை_வாசிப்பு பயண தூரம் தெரியவில்லை. மடியில் சேர்த்துள்ள ரொட்டித்துண்டுகள் தீர்ந்ததும் ஆடுகளுடன் வீடு செல்வேன். ரொட்டித்துண்டுகளின் எண்ணிக்கைகள்; நான் நம்பி பயணிக்கும் பிரபஞ்சத்திற்கே வெளிச்சம்....
#தயாஜி
0 comments:
கருத்துரையிடுக