பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 21, 2020

மனம் நிரம்ப நிறம் மாறும்


 யோசிக்கையில் மனம் எத்தனை விசித்திரமானது. வேண்டுதல் வேண்டாமை எல்லாவற்றையும் ஒரு சேர மனதில் வைத்து எப்படியெல்லாம் சமாளித்து வாழ்வை நகர்த்துகிறோம். 

    பதிமூன்று வயது. இடைநிலைப் பள்ளி பருவம். வீட்டிற்கு அதிக தூரமில்லை என்பதால் மிதிவண்டியிலேயே பள்ளிக்குச் செல்லலாம். போக்குவரத்து பேருந்து செலவு இல்லை. ஆனால் அதற்கு மிதிவண்டி வாங்க வேண்டுமே. இன்னும் சில தினங்களில் பள்ளிக்கு போக வேண்டும். அதற்குள் மிதிவண்டி வேண்டும். இப்போது போல் அல்ல, மிதிவண்டிக்கு கூட எங்காவது கடன் வாங்கக் கிடைக்குமா ? மாதாந்திர கட்டணத்தில் கிடைக்குமா என அப்பா தேடினார். எப்படியோ ஏற்பாடு செய்துவிட்டார். ஆனால் வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. அம்மாவைத் தவிர. அம்மாக்களை மீறி அப்பாக்களால் ரகசியங்களைக் காப்பாற்ற முடியுமா என்ன?  ஆனாலும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஜேம்ஸ் பாண்ட் அப்பாக்கள். அவர்களுக்குத் தெரியாது அம்மாக்களும் ஜேம்ஸ் பாண்டுகள்தான்.

  ஞாயிறு. வீட்டில் தடபுடலான சமையல். கோழிக்கறியும் முட்டைகோஸ் பிரட்டலும். அப்போதெல்லாம் சம்பள நாளில் வரும் முதல் ஞாயிறுதான் எங்கள் தோட்ட மக்களுக்கு மாதாந்திர தீபாவளி.

  சாப்பிட்டு தொலைக்காட்சி இரண்டில் பலமுறை போட்டுக் காட்டிய, ஏதோ ஒரு தமிழ்ப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பாவும் அம்மாவும் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டார்கள். வழக்கமாக அவர்கள் ரகசியம் பேசினால் எங்கள் காதுகளை மூடச் சொல்லுவார்கள். நாங்களும் மூடிக்கொள்வோம். ஆனால் அவர்கள் பேசுவது எங்களுக்கு விளங்கும். அது அவர்களுக்கும் தெரியும். இம்முறை ஏதோ தவறு. பொத்திப்பிடித்த காதுக்குள்ளே எந்த சத்தமும் கேட்கவில்லை. என்ன பேசினார்கள் எங்கே கிளம்புகிறார்கள் என கண்டுபிடிக்க முடியவில்லை.

  பேசி முடித்தவர்கள். மோட்டாரில் கிளம்பினார்கள். நானும் தங்கையும் ஆளுக்கு ஆள் பார்த்துக்கொண்டோம். கவனித்தேன் அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டாள். அவளுக்கு ஏதோ ஒன்று தெரிந்திருக்கிறது. ஆக அவளும் எங்கள் வீட்டில் ஒரு ஜேம்ஸ் பாண்ட் என்பதை அப்போதுதான் தெரிந்துக்கொண்டேன். அண்ணன் இருக்கும் அறையை எட்டிப்பார்த்தேன். ஏதோ புத்தகத்தை பிடித்துக்கொண்டு தூங்கிப்போனார். தூங்கியவரை எழுப்பி அல்ல, விழித்திருக்கும் போது கூட அவரிடம் கேட்டால் 'தெரியல' என சொல்லிவிடுவார்.

 அப்பா அம்மா வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். மாலை மணி ஐந்து. அப்பாவின் மோட்டார் சத்தம் கேட்டது. ஆர்வ மிகுதியால் வாசல் சாலை வரை ஓடினேன். அதிர்ச்சியானேன். அப்பாவின் மோட்டார்க்கு அருகில் மிதிவண்டி வந்துக்கொண்டிருந்தது. ஆனால் அதன் சக்கரங்கள் சுழலவில்லை. அவை தரையிலும் படவில்லை. ஒன்றும் புரியவில்லை. அரை நொடி குழம்பினேன். 

 பின் புரிந்தது. அப்பா மோட்டாரை ஓட்டிவர, பின்னால் அமர்ந்திருக்கும் அம்மா மிதிவண்டியை ஒரு கையில் தூக்கிப்பிடித்துக் கொண்டிருந்தார். கிராப்பிக்ஸில் குழந்தையைத் தாங்கிப்பிடித்த ராஜமாதாவை கொண்டாடத்தெரிந்த நமக்கு, நம் வீட்டு ராஜமாதாக்களை கொண்டாட தெரியாதது வருத்தம்தாம்.  அன்று மிதிவண்டியை தாங்கிப்பிடுத்த அம்மாதான் இன்றுவரை என்னையும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

  நினைவில் அந்த ஊதா வண்ண மிதிவண்டி இன்னும் இருக்கிறது. இடைநிலைப்பள்ளி படித்து முடிக்கும் வரை அந்த மிதிவண்டி எனக்கு உற்ற துணையாக இருந்தது. ஒரு காலக்கட்டத்தில் நாம் பயன்படுத்திய பொருட்கள், நமக்கு உதவியாக இருந்தவைகள் என பலவற்றை நாம் நம் வாழ்நாள் முழுக்க உடன் கொண்டு வர முடியாது. ஆனால் அதற்கான, அதற்கே உரிய நன்றியையும் அன்பையும் மனம் முழுக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சுமந்துச் செல்லலாம். 

 ஏதாவது ஒரு தனிமையில் அந்நினைவுகள் நம்மருகில் அமர்ந்துக்கொள்ளும். நம்மோடு உரையாடும். அந்நினைவுகளை சுமக்கும் நமக்கு நினைவுகள் சொல்லும் நன்றி அதுதான். 

 பொருள்களுக்கு மட்டுமல்ல, உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இது பொருந்தும். எங்குதான் ஏமாற்றுகள் இல்லை துரோகங்கள் இல்லை சுயநலங்கள் இல்லை. நாமும் செய்திருக்கிறோம்தானே. ஆனால் முடிந்தவரை குறைக்கத்தானே அரும்பாடு படுகிறோம். எத்தனை நாள் இப்படி பாடுபட போகிறோம். எதுவரை தோல்விகளையும் துரோகளையும் நினைத்து பயந்து நடுங்கப்போகிறோம். எல்லாவற்றிலும் இருந்து நம்மை ஒதுக்கிக் கொள்ளப்போகிறோம். 

  மனம் முழுக்க சுமந்துக் கொண்டிருக்கும் நினைவுகளில் நல்லவற்றை அதிகப்படுத்தி அதனையே அதிகமாய் கவர்ந்து இழுத்து வைத்துக்கொள்வோம். அழுக்கு நீர் நிரம்பிய பாட்டிலில் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமான நீரை உற்றுவதால் விரைவில் பாட்டில் முழுவதும் தூய்மையான நீர் தன்னை நிருவிக்கொள்ளும். பல முறை துரோகம் செய்தவர் ஒரு முறை கூடவா நமக்கு நல்லது செய்திருக்க மாட்டார். பல முறை நம் முதுகில் குத்திய கைகள் ஒரு முறை கூடவா நம் முன்னேற்றத்திற்கு கைத்தட்டியிருக்காது.

  எல்லாவற்றிலும் கொஞ்ச கொஞ்சமாக இருக்கும் நல்லவற்றை நாம் நம் மனதில் எண்ணத்தில் புகுத்தி அதனை நிரப்பிக்கொள்வோம்.

  இவ்வேளை நான் எழுதிய கவிதையை நினைவுப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன்.

###########

ஒருவரின் எல்லா
துரோகங்களுக்கும்
ஏமாற்றுகளுக்கும்
கைக்கூப்பி 
வணங்கி 
மன்னித்து 
அமைதியாகி
விடைபெறுவதை விடவா
பெரிய தண்டனையைக் 
கொடுத்து விட முடியும்...

#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்