பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

#கவிதை_வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#கவிதை_வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏப்ரல் 10, 2021

புத்தகவாசிப்பு_2021 ஆரண்யம்

புத்தகவாசிப்பு_2021 ஆரண்யம்

தலைப்பு – ஆரண்யம்

வகை – கவிதை 

எழுத்து – கவிஞர் கயல்


   சமீபத்தில் வாசித்த கவிதை தொகுப்பு. ஆரண்யம். எழுத்து கவிஞர் கயல். மிகவும் ரசித்த கவிதை தொகுப்பு. ஆரண்யம் என்றால் வனம். காடு. இந்த புத்தகத்தின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு ஏற்ற தலைப்பு. வாசிக்கையில் கவிஞர் நம் கையைப் பற்றிக்கொண்டு வனத்திற்கு அழைத்துச் செல்வதாகவே தோன்றியது.

   எல்லோருக்கும் தங்களின் பால்யம் குறித்த நீங்காத நினைவுகள் இருக்கவே செய்யும். அதில் காடும் காடு சார்ந்த அனுபவங்களும் குறைவின்றியே இருக்கும். இக்கவிதைகள் காடு மீதான எனது நினைவுகளை மீள் செய்துள்ளது. காடு என்பது வெறும் காடு அல்ல என திரும்பத் திரும்பச் சொல்கிறது.

   கவிஞர் வனத்தை தாய்மை கொண்டு அணுகுகின்றார். குழந்தைபோல ரசிக்கிறார். தன்னை வண்ணத்துப்பூச்சியாக்குகிறார். தன்னை நதியாக்குகிறார். தன்னை மரமாக்குகிறார். நிறைவாக தன்னையே வனமாக மாற்றிக் காட்டுகின்றார்.

   அது வனம் மட்டுமல்ல நம் வாழ்வு. இயற்கையின் அன்னை. அதுவே இறைவன். இறைவனுக்கும் காதலுக்கும் இடைபட்ட இடைவெளியை வனம் நிரப்புவதை எழுதுகின்றார்.

   வனத்தைச் சொல்லும் போது யானையை மறக்க முடியுமா? இத்தெகுப்பில் யானை பற்றிய கவிதைகள் சில உள்ளன.

தன்னை அண்ணாந்து

பார்க்கும் சிறுமி,

தவறவிட்ட தன் குட்டியை நினைவூட்ட

சுரக்கும் பால் மடி கனக்கத்

தள்ளாடியபடி ஆசீர்வதிக்கும்

கோயில் யானை

   என்ற கவிதையை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியவில்லை. எனக்கு யானை பிடிக்கும் என்பதால் மட்டுமல்ல. யானையை கவிஞர் காட்டிய தருணத்தினால். நமக்கு தெரிந்ததெல்லாம் யானை மட்டுமே. அது யானைமட்டுமல்ல அதுவும் தாய்தான்.  

   எத்தனை பறவைகளின் பெயர்களை மறந்துவிட்டோம் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. கவிஞர் சொல்லும் ஒவ்வொரு பறவையின் பெயரும் குற்றவுணர்ச்சியைக் கொடுக்கிறது.

சாவுக்குருவி,

சாத்தான் குருவியென

வசவுகள் வாங்கி

சகுனத்துக்கு

ஏவல் பலிக்குப்

போக எஞ்சியவை மட்டுமே

வாழ்கிறோமென

நள்ளிரவில்

கதறும் ஆந்தைக் குரலை

உற்றுக் கேட்கையில்

ஒலிக்குமொரு கேள்வி

“இதில் , யார்

சாத்தான்?” என்று.

   இனி ஆந்தையின் அலறல் சத்தம் அபசகுணமாய் அல்ல நம் மனசாட்சியின் குரலாகவே ஒலிக்க வைக்கிறார் கவிஞர்.

   மனிதனின் சுயநலம் எத்தனையோ இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு இலாபம் கிடைக்க தான் முன்னேறி நடக்க எதனையும் செய்ய துணிந்துவிட்ட மனிதனிடம் இல்லாத குற்றவுணர்ச்சியை தேடவைக்கும் கவிதையாகவே,

தளும்பிச் சிரிக்கும் ஆறு

கிறங்கி நீந்தும் கூழாங்கற்கள்

வரவேற்கும் மரங்கள்

வனத்தின் குரலாய்ப்

புள்ளினத்தின் பாடல்

என

இருந்தன காடுகள்

மனிதன் கோடரி

செய்யக் கற்கும் வரை

   என்கிற கவிதையைச் சொல்லலாம். இக்கவிதைக்கு சற்றும் குறைவில்லாத வகையில் இன்னொரு கவிதையும் உண்டு. அது மனிதனின் சுயநலத்தில் தனக்கும் பங்குண்டு என மரங்கள் அழும் கவிதை. அது;

ஆதிக் கோடரிக்

கிளையொன்றின்

பாவந்த் தீர்க்க

இன்னும் எத்தனை

சிலுவை

எனக் கேவியழுகிறது

ஒவ்வொரு மரமும்

வெட்டுருகையில்.

போதும்….

   தன்னை முழுவதுமாய் இன்னொன்றாய் ஆக்கிவிட மனிதர்களால் முடிகிறது.  ஆனால் கவிஞர்களால் மட்டுமே அதனை முழு உணர்வுப்பிரக்ஞையுடன் செய்ய  முடிகிறது. தன்னை மரமாக மாற்றிக் காட்டும் கவிஞர் அதன்  வலியை இப்படிச் சொல்கிறார்.

என் உயிரைக் கொல்கிறது

நம்பிக்கையில்லாத் தீர்மானமாய்

எம் பக்கத்து மரங்களிலெல்லாம் பறவைகள்

வந்தமராதிருப்பது…

   மரத்திற்கு மட்டுமல்ல நமக்கும் கூட புறக்கணிப்பின் வலியை இக்கவிதை நினைவுப்படுத்துகிறது.

   மேலும் ஒரு கவிதையில் மரத்தைப் பற்றி சொல்கிறார் ஆறு வரி கவிதையில் ஆறுவரிகளுமே கவிதைகளாக பரிணமிக்கும் அதிசயத்தை காண முடிகின்றது, அது

-மரம்-

இறைமகளின் தரைச் சிங்காதனம்

தாக வேரின் மழைத் தூது

வனமங்கை இடையாடும் மரகதச் சீலை

எவர் அடியும் பணியாத் தலை

புவியில் பொன்வண்ணப் பூ விசிறி

பறவை ஒலியில் பேசுந் தெய்வம்

   மீண்டும் ஒரு முறை இந்த ஒவ்வொரு வரியும் என்னை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. ஒரு புகைப்படம் போல, ஒரு அமானுஷ்யம் போல, ஒரு தேவதை போல, ஒரு வரம் போல.

   இத்தொகுப்பில் இன்னும் பல கவிதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் புதிதான உலகை நமக்கு காட்ட முற்படுகின்றது. ஆனால் அவ்வுலகில்தான் நாம் வாடகை கட்டாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் நியாபகப்படுத்துகின்றது.

எதிர்ப்பட்ட பின்

கடப்பது கடினம்

காதல்,

கடவுள்,

காடு

   என்னும் இக்கவிதை, இத்தொகுப்பை சுருக்கிச் சொல்வதாகவேப் படுகிறது. ஒரு முறை இக்கவிதைகளை வாசித்த பின், அது கொடுக்கும் நினைவலைகளை சாதாரணமாய் கடந்துவிட முடியாது. அவ்வகையில் கவிஞருக்கு என் நன்றியும் அன்பும்….

அன்புடன் #தயாஜி

மார்ச் 29, 2020

கவிதை வாசிப்பு - 1




சல்மாவின் கவிதைகள். காலச்சுவடு மார்ச் 2020-ல் வந்திருந்தது. தனியாக கவிதைக்கு தலைப்பு ஏதும் வைக்கவில்லை. மூன்று கவிதைகள். முதல் கவிதையில் ஒரு பகுதி வருகிறது.

///காற்றில் துடிக்கிறது
குருதியில் நனைந்த சிறுமிகளின்
குரல்///

வாசித்ததில் இருந்து மனதை நெருடுகிக் கொண்டிருக்கிறது.

கவிதைக்கு பயன்படுத்தியிருந்த 'வாரிஸ் டயர்'-ரின் ஓவியம் கவிதையை மேலும் புரிந்துக்கொள்ள வைத்தது. இவர் குறித்தும் இவரின் நாவலான 'பாலைவனப்பூ'  குறித்தும் ஓரளவு தெரிந்திருந்ததும் அதற்கான காரணமாக இருக்கலாம். கவிதையின் கடைசி வரியும் முக்கியம். யாரிந்த சகோதரிகள் , இன்னமும் எங்கோ இருக்கிறார்கள் என்பதுதான் மனதில் வலியைக் கொடுத்தது.

பெண்களை அவள் தன்மையில் இருந்து விலக்கி தங்களின் ஆதாயத்திற்கும் தங்களின் கௌரவத்திற்கும் பங்கம் வராதபடி பாவிக்கும் சமூகம் இன்னமும் உயிரோடும் துடிப்போடும் இருப்பது வேதனைதான். 

எத்தனை நாட்களுக்குத்தான் பெண்ணின் கால்களின் நடுவை வைத்து அரசியல் செய்யப்போகிறார்கள். என்ற கேள்வியை எழவைத்த கவிதை.

வரிகளில் வேதனையை வைத்து எழுதப்பட்ட கவிதை. மனதை. இன்னும் நெருடச்செய்கிறது.

-தயாஜி

பிப்ரவரி 29, 2020

கவிதை வாசிப்பு - ஓர் அறிமுகம்




     மிக அற்புதமான வழி. ஆனால் குறுக்கு வழி. இதில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். எந்தத் துரும்பையும் பற்றிக்கொண்டு போரிடலாம். எத்தனை பெரிய இரும்பையும் தின்றுத்தீர்த்து சிரிக்கலாம். ஒரு வரியில் அழுதுவிடலாம். மறு வரியில் வாழ்வை புரிந்துக்கொள்ளலாம்.
   எங்கோ ஓர் மூலையில் நம்மை போலவே வலித்தவன் ஒருவன் இருக்கிறான். ஆதலால் நான் தனியல்ல என அரை வாய் புன்னகிக்கலாம்.

    நேரம் எடுத்து நாள் கணக்கில் வாசித்து முடித்து மனம் கொண்ட வெறுமைத் தீயை சில வரிகளில் வாழ்ந்து முடித்துவிடலாம்.

நிச்சயம். கவிதைகள் மனித உணர்வின் குறுக்குவழிதான்.

   ஆனால் அவை நம்மை அதிகம் பேசவிடாது. அங்கு கற்றது; நாம் பேசவும் கூடாது. மாபெரும் யுத்தத்தின் வழியனுப்புதலில் கையசைத்து சிரிக்கும் குழந்தையும் அதுதான். யோசிக்கையில் அந்த மாபெரும் யுத்தமும் அதுதான். பக்கங்களில் எஞ்சிய இடங்களில் கவிதை கொண்டு நிரப்பினாலும் அது காலம் கடந்து சிரஞ்சீவியாக நின்று நம்மை கொண்டாடும்.

    "உன் கவிதை புரியல" இன்னமும் கேட்கும் ஒரே கேள்வி. புரியாமல் நிற்பது கவிதையா?  புரிய முடியாமல் தவிப்பது மனமா ? என யோசிக்காதவரை கவிதை நம்மை நிற்கவைத்து கேலிப்பார்வை பார்க்கத்தான் செய்யும்.

  எது கவிதை எது கவிதை இல்லை என அடித்துக்கொள்கிறோம் கடித்துக் கொள்கிறோம். ஆனால் ஏன் கவிதை நம்மிடம் வந்து நிற்கிறது என யோசிப்பதில்லை. எப்படி அதனால் காலத்தைக் கடக்க முடிகிறது என நினைக்க நேரமில்லை. ஆனால் சொல்கிறோம் 'கவிதை புரியல'.

    முதலில் ஏன் கவிதை புரிய வேண்டும் என நினைக்கிறோம்? அதனை வென்றுவிட நினைக்கிறோமா? வந்து வந்து கால் தொட்டு செல்லும் அலைகளென்பதால் கடல் அறிந்தவர்களா நாம். அறியத்தான் முடியுமா நம்மால்.

   ஆனால் தொட்டுச் செல்லும் அவ்வலைகள் நம்மில் விட்டுச்செல்லும் நினைவுகள்தான் எத்தனையெத்தனை. அவைதான் நம்மை இயக்குகின்றன.

   வரைபடத்தைக் கொண்டு வழியின் அழகை காற்றின் குளிரை பறவைகளின் அழைப்பை மிருகங்களின் பசியை சொல்லிவிட முடியுமா என்ன?
   ஆனால் அவ்வழி ஆடு மேய்ப்பவன் போதுமே ஆட்டுக் கழுத்து மணி அசைப்புச்சத்தம்,  பசிக்கு புல் தின்னும் சத்தமா அல்லது ருசிக்க நரி வந்த சத்தமா என தெரியப்படுத்த.

   காலந்தோரும் கவிதைகள் தன்னை மானுட மனங்களில் ஏற்றிக்கொள்ளத்தான் போகின்றன. மனித நினைவுகளை தூண்டிவிடதான் போகின்றன. அழுத கண்ணீரை துடைத்துவிடதான் போகின்றன. நம்மை அழ வைக்கத்தான் போகின்றன.

  தன் தீரா துயரங்களில் இருந்தும் கலை படைப்பவந்தான் கலைஞனாக இருக்க முடியும் என நம்புகின்றவன் நான்.

   என் வழியெங்கும் வார்த்தைகளாய் பலரின் துக்க துயரங்களும் சந்தோஷ குவியல்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஏதோ ஒரு வார்த்தையின் வழி அதனை மீள்ப்பதிவு செய்யத் தவறுவதில்லை.

    அப்படியான குறுக்குவழியில் கவிதைகளைத் தேடிச்செல்லும் மேய்ப்பவனாய் என் காதில் கேட்கும் மணியோசை என்னவென்று பகிரும் முயற்சிதான் இந்த #கவிதை_வாசிப்பு   பயண தூரம் தெரியவில்லை. மடியில் சேர்த்துள்ள ரொட்டித்துண்டுகள் தீர்ந்ததும் ஆடுகளுடன் வீடு செல்வேன். ரொட்டித்துண்டுகளின் எண்ணிக்கைகள்; நான் நம்பி பயணிக்கும் பிரபஞ்சத்திற்கே வெளிச்சம்....



#தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்