பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 21, 2020

அத்தையின் வெங்காய சட்னி




   காலை. வழக்கம் போலவே அத்தையை கிண்டல் செய்துக் கொண்டிருந்தேன். வேலை வெட்டிக்கு போகாமல் இருப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை அது குறைக்கிறது. இன்னுமா வேலைக்கு போகல ? என கேட்காதிங்க மறுபடியும் முதல்ல இருந்தான்னு கேட்பேன் !

    தினமும் அத்தை என்ன சமைக்கலாம் என கேட்டுக்கொள்வார். நானும் நன்றாக யோசித்துப் பசிக்க பசிக்க என்ன சமைக்கலாம் என சொல்லுவேன். சொல்லும் போதே என் நாவில் எச்சில் ஊறும். நான் சொல்வதற்கு நேர்மாறாகதான் சமைப்பார். அதற்கு ஏன் என்னை கேட்டார் என யோசிக்கும் போதுதான் காலையில் நான் செய்யும் கிண்டல்களுக்கு பதில் கிண்டல் இதுவென புரியும். ஆனால், சும்மா சொல்வதற்கில்லை அத்தையின் சமையல் ருசியாகவும் இருந்துவிடும்.

   ரசமும் மீன் சம்பலும் எனக்கு பிடிக்கும். இன்று அதையே சமைக்கலாம் என்றேன். நேற்றுதான் இரவு சந்தையில் அத்தை சொல்லிய சமையல் பொருட்களை வாங்கி வந்தோம். நான் கேட்டதற்கும் கூடுதலாகவே அத்தை சமைப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அத்தை மெல்ல காது கடித்தார். நேற்று, முக்கியமான ஒன்றை அத்தை சொல்ல மறந்துவிட்டார். ரசம் வைக்க புளி முடிந்துவிட்டது. ஆஹா.. இன்றும் நாம் கேட்டது கிடைக்காது என நினைத்தேன். புளி வாங்க ஐந்து மாடி இறங்கி மீண்டும் ஐந்து மாடி ஏறிவர வேண்டும். நாக்கு ருசியா கால் வலியா என ஆழ்ந்து யோசிக்கையில் கால்களுக்கு என் வாக்குகளைக் கொடுத்துவிட்டேன்.

 இன்று நான் பலியாடாவதற்கு விரும்பவில்லை. வேறொரு ஆடு சிக்கும் என சொல்லிவிட்டு இருவரும் சிரித்தோம். பின் ஆளுக்கு ஆள் அவர்கள் வேலையை செய்ய ஆரம்பித்தோம்.

  மாமாவும் அத்தை மகளும் சாப்பிட வருன் நேரம். சட்டென ஏதோ யோசனை வந்தவராய் அத்தை என்னை சமையல் அறைக்கு அழைத்தார். பேர் கூட தெரியாதவற்றை கொடுத்து மிக்ஸியில் அரைக்கச்சொன்னார். அப்படியே வெட்டி வைத்த காய்கறிகளை கழுவச் சொன்னார். சமையலில் அவர் கொஞ்சம் அலுவலாக இருந்தார். வீட்டில் சும்மா இருந்தது ஒரு குத்தமாயா?

  மாமாவும் மகளும் வீட்டுக் கதவை தட்டினார்கள். நான் சென்று கதவை திறந்தேன். திறந்த வாசலில் ஏதோ ஒன்று அவர்களை அடித்திருக்க வேண்டும். இருவரின் பீரங்கி மூக்கு பெரிதாகி சுருங்கியது.

  "என்ன சமையல்..?" என கேட்டுக்கொண்டே அத்தை மகள் சமையல் அறைக்குச் சென்றார். சத்தியமாக சொல்கிறேன். என் மூக்கிற்கு அப்போதுதான் உரைத்தது. வாசனை நன்றாகத்தான் இருந்து.

  எல்லோரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தோம். சோறு, தக்காளி ரசம், கடுகுக்கீறை பிரட்டியிருந்தார். கூடவே இன்றைய ஸ்பெஸலாக ஒன்று இருந்தது. வெங்காயம் தக்காளி பூண்டு  போன்றவற்றை சேர்த்து ஒன்றாக வாட்டு வதக்கி சம்பலாக ஏதோ செய்திருந்தார். அதற்கு வெங்காய சட்னி என்ற பெயரைச் சொன்னார்.

  சும்மா சொல்லக்கூடாது, வெங்காய சட்னி புது ருசியாகதான் இருந்தது.  மாமாவும் மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கை கழுவுவதற்கு சமையல் அறை சென்றேன். அத்தை சமையல் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். மெல்ல அவர் தோள் தட்டினேன். பார்த்தார்.

 "சொல்லாம கொள்ளாம எப்படி வெங்காய சட்னி வச்சீங்க...?"என கேட்டேன்.

  முதலில் ரசம் வைத்து மீன் சம்பல் வைக்கத்தான் நினைத்திருக்கிறார். ரசத்திற்கு தேவையான புளி இல்லாததால், இருப்பதைக் கொண்டு ஏதோ செய்திருக்கிறார். பரிமாறும் போது மாமா கேட்கவும், அப்போதுதான் அதற்கு  'வெங்காய சட்னி' என அத்தை பெயர் வைத்திருக்கிறார். 

  இருவரும் பெரிய சாதனை செய்து விட்டதாய் நினைத்துச் சிரிக்கலானோம். காரணம் மாமாவையும் மாமா மகளையும் ஏமாற்றுவது அத்தனை எளிதல்ல.

  சமயங்களில் நமக்கு நடக்கவேண்டிய நன்மைகள் நடக்காமல் போகலாம். கிடைக்கவேண்டியவை கிடைக்காமல் போகலாம். அந்த நேரத்தில் சோர்ந்து நிற்காமல் அடுத்து என்ன என யோசித்து செயல்படுவதுதான் முக்கியம். அப்படி செயல்பட தொடங்கும் போது நாமே அறிந்திடாத நம் திறன் வெளிப்படுகிறது. காத்திருப்பவர்கள் காத்திருக்கிறார்கள். அடுத்து என்ன என செயல்படுகிறவர்கள் சாதனை செய்கிறார்கள்.

  இன்றைய 'வெங்காய சட்னி' மூலம் அத்தை அதைத்தான் கற்றுக்கொண்டு கற்றுக்கொடுத்திருக்கிறார். நானும் ருசித்துக் கற்றுக்கொண்டேன்.

-தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்