பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

வெள்ளி, 26 ஜூலை, 2013

என் இனிய மர்லின் மன்றோ - பகுதி 2

தியானிக்க முயல்கிறேன்

தீயென பற்றிக்கொள்கிறாள்

மர்லின்

அழைப்பேயுன்றி

அத்துமீறி

பிரவேசிக்கிறாள்

மர்லின்

தேகமெல்லாம் வியர்க்க

விரல் வழி வழிகிறாள்

மர்லின்

போதாதென காதில்

காற்றூதி கரைக்கிறாள்

மர்லின்

இனியென்ன தியானம்

நீயே போதுமென

எழுந்தேன் தீயென

எதிரே

கண்மூடி

கால் மடக்கி

புத்தகம் ஒன்றில்

மூழ்கி

தியானிக்கிறாள்

சஞ்சலமின்றி

என் மர்லின் மன்றோ


  என்ன மர்லில், இந்த வார்த்தைகளை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறாயா.  என் புத்தகங்களை அன்று நீ படித்து முடித்த பக்கத்தில் உனக்காக வைத்திருந்த கவிதைதான் இது. நீ படித்திருந்த புத்தகங்களை நான் அப்படியே வைத்திருக்கிறேன். எத்தனை முறை மூடிமூடி திறந்தாலும் உன் வாசம், புத்தகங்கள் முழுவதும்.  என் புத்தகங்களை யாருக்கும் நான் இரவல் கொடுப்பதில்லை. ஏற்கனவே, நான் இரவல் வாங்கிய புத்தகங்கள் சில அப்படியே தங்கிவிட்டதால், என் புத்தகங்கள் எங்கும் தங்கிடவேண்டாமே என்பதுதான் காரணம். இப்போது இன்னொரு காரணமும் வந்துவிட்டது.

நீ

மர்லின்

நீதான் காரணம்.
உன் வாசத்தினை மற்ற முகங்களின் மூக்குகள் சுவாசிக்கக்கூடாது மர்லின். அந்த என் சுவாசத்தை நிறுத்திவிடுமே. சொல்ல வந்ததை சொல்லாமல் உன்னை பற்றியே பேசுகிறேன் என்கிறாயா..?

சரி,சரி மர்லீன் அந்த ஆசிரியர் பற்றி சொல்கிறேன் கோவிக்காதே.

புதிதாக வந்த ஆசிரியருக்கும், ஏற்கனவே இருந்த ஆசிரியர்களுக்கும் வித்தியாசங்கள் இருந்தன. இவர் எப்போதும் சிரித்த முகமாய் இருப்பார். தினம் ஒரு வண்ணத்தில் உடுத்தியிருப்பார். முகம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இத்தனைக்கு மேலாக அவர் மீது வாசிக்கும். இதை சொல்லும் போது மட்டும், எனக்கு லேசாக புல்லரிக்கிறது.

இப்போதைய என் கையெழுத்தை படிக்கவே நீ சிரமப்படுகிறாயே, அப்போது , அந்த வயது என் கையெழுத்து எப்படி இருந்திருக்கும் என கொஞ்சம் யோசித்துக் கொள்ளேன். வகுப்புக்கு வரும் ஆசிரியர்கள் எல்லோரும் என் கையெழுத்தை வகுப்பில் காட்டி, “இப்படியெல்லாம் எழுதினா சரஸ்வதியே ஓடிப்போய்டும்... ” என் சொல்வதை வழக்கமாகியிருந்தார்கள். கட்டுரையை எழுத சொல்லிவிட்டு, அருகில் என் எழுத்தை குறித்த நேரடி நிலவரங்களை வகுப்பில் சொல்வதில், ஒவ்வொரு ஆசிரியருக்கு ஒவ்வொரு பாணி இருந்தது.

ஓர் ஆசிரியர், பக்கத்தில் நின்றுக் கொண்டே சொல்லுவார்.

ஓர் ஆசிரியர் நாற்காலியை பக்கத்தில் போட்டு அமர்ந்துக் கொண்டு சொல்லுவார்.

ஓர் ஆசிரியர் அவரது மேஜைக்கு அருகில் என்னௌ உட்கார வைத்துத்துச் சொல்லுவார்.

ஓர் ஆரிசியை, என் காதை திருவிக் கொண்டே சொல்லுவார்.

ஓர் ஆசிரியை தலையில் ஒவ்வொரு வார்த்தைக்கும் கொட்டுவார்.

எல்லோருக்கும் என் எழுத்து, சுவாரஸ்ய பேச்சுக்கு தேவைப்பட்டதே தவிர யாரும் என் எழுத்தை திருந்த , கையெழுத்தை அழகாக்காக நினைக்கவில்லை. எப்படி ஆளுக்கொரு பாணி இருக்கிறதோ அவ்வாரே ஆளுக்கு ஒரு வாடையும் இருந்தது;

ஓர் ஆசிரியருக்கு, பழைய ஆப்பில் வாடை இருக்கும்.

ஓர் ஆசிரியருக்கு , ஏதோ எரிந்துபோனதுதான் வாடை இருக்கும்.

ஓர் ஆசிரியருக்கு , தங்காளி வாசனை இருக்கும்.

ஓர் ஆசிரியைக்கு , அடையாளம் தெரியாத வாடை இருக்கும்.

ஓர் ஆசிரியைக்கு , கவுச்சி வாடை இருக்கும்.


அலங்கோல எழுத்துகளுக்கு நான் அடிவாங்கியதை விட, அருகில் நிற்கும் இவர்களின் உடல் வாடையை தெரியாததுபோல இருந்ததுதான் எனக்கு கஷ்டமா இருந்தது. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாங்கள் அந்தந்த ஆசிரியர்களை அவர்களின் பிரித்தியேக வாடையையே அடைமொழியா வைத்து பேசுவோம்.

ஓர் ஆசிரியர்க்கு; ஆப்பிள் கடை அழகுராசா..

ஓர் ஆசிரியர்க்கு, தீய்ஞ்ச வடை

ஓர் ஆசிரியர்க்கு, ஊழ தக்காளி

ஓர் ஆசிரியைக்கு; மாயக்கா

ஓர் ஆசிரியைக்கு , மீன் வண்டி


இப்படி வைத்த பெயர்களில் இருந்து தப்பித்தவர்கள், எங்களுக்கு பாடம் எடுக்காத ஆசிரியர்கள்தான்.

என் கையெழுத்தை கேள்விப்பட்டுதான். கொஞ்சம் பொறு.. கேள்விப்பட்டு என்பது எங்கேயே சொல்லி எப்போதெ கேட்டு தற்சமயம் நினைவுக்கு வருவதாக நீ நினைத்துக் கொள்ளாதே மர்லின். இந்த கேள்விப்பட்டு என்பது வேறு மாதிரியானது. தன் பாட நேரம் முடிந்ததும், வெளியில் காத்திருக்கும் அடுத்த பாட ஆசிரியரிடம், என் கையெழுத்து குறித்து பேசிவிட்டுதான் போவார்கள். அப்படிதான் ஒரு நாள் புதிய ஆசிரியரிடம், எங்கள் ஆப்பிள் கடை அழுகுராசா என் கையெழுத்தை புகழ்ந்துவிட்டு சென்றார்.புதிய ஆசிரியர்

அன்றுதான் அவர் எங்களுக்கு அவர் புதிதாக வந்திருந்தார். அழகானவர். அவர்தான் இனி எங்களுக்கு வகுப்பு ஆசிரியர் என்பது எங்களுக்கு தனி குஷியைக் கொடுத்தது.

“எல்லோருக்கும் வணக்கம்... நான் புனிதவதி. இனிமேல் நான் தான் உங்க வகுப்பு ஆசிரியர். ஒவ்வொருத்தரா முன்னுக்கு வந்து உங்களை அறிமுகம்  செய்துக்கோங்க.. அப்பதான் உங்களை பத்தி எனக்கு தெரியும். முன்னுக்கு வந்து உங்க பேரை மட்டும் சொல்லாம.. உங்க பேரு, உங்க குடும்பத்துல எத்தனை பேரு , உங்க எதிர்கால ஆசை என்ன, இந்த மாதிரி ஏதாவது சொல்லுங்க.. சரியா..”

அவரின் குரல் கூட எங்களுக்கு இனிமையாய் இருந்தது. ஒவ்வொருவராக எழுந்து முன்னே சென்று, தங்களை அறிமுகம் செய்துக் கொண்டோம். இப்போது நான் முன்னே சென்றேன்,

“வணக்கம் டீச்சர்... என் பேரு”

“தெரியும். மணிதானே நீ.. உன்னை பத்திதான் எல்லா டீச்சரும் சொல்லறாங்களே.. நீ வேற என்ன சொல்ல போற.. போய் உட்காரு போ...”

புனிதவதி டீச்சரின் அந்த பேச்சு, எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. என் வகுப்பினர் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். எனக்கு அழுகை வருதாய் உணர்ந்த நான், கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றையொன்று இருக்க அழுத்திக் கொண்டேன். அதில் ஏற்பட்ட வலியால் அந்த அவமானத்தை சரிகட்டலாம் என்று தோன்றியது. கொஞ்சம் சரிகட்டவும் முடிந்தது. தலையை குணிந்துக் கொண்டு என் இடத்திற்கு செல்லும் போதும், ஆசிரியர் என்னை அழைத்தார்;

“மணி.. எங்க போற ... நான் உன்கிட்ட இன்னும் பேசியே முடிக்கலையே... வா வா..”

வகுப்பினர் சிரித்தனர். இப்போது இடது கை கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றையொன்று அழுத்திக் கொண்டேன். ஆனால், அந்த விரல்களில் சுரணை குறைவாகத்தான் இருந்தது. ஆகவே, அழுத்ததை அதிகம் கொடுத்தேன்.

மர்லீன் அங்கேதான் திடீரென ஒரு யோசனை வந்தது; முதல் அவமனாத்தை சரிகட்ட வலது கையை பயன்படுத்தியாகிவிட்டது. இரண்டாவது அவமானத்தைச் சரிகட்ட இடது கையை பயன்படுத்துகிறேன். மூன்றாவது அவமானம் ஏதும் அடுத்தாக வந்தால், என்ன செய்வது என பீதி பற்றியது. ஆனால் அது அவசியமற்றதானது.

“சொல்லு மணி உன்னோட எதிர்கால லட்சியம் என்ன..?”

புனிதவதி டீச்சர் என்னிடம் கேள்வி கேட்டது, எனக்கு கௌரவத்தைக் கொடுத்தது. ஒருவேளை நான் வகுப்பினர் முன் மற்ற மாணவர்களை போல பேசாமல் இருந்திருந்தால், நண்பர்கள் அடுத்த ஆண்டுவரை இதையே சொல்லி காட்டுவார்கள்.

“இந்த பாடம் கூடவா உனக்கு தெரியல..?”

“ஆமா, தெரியல இப்ப அதுக்கு என்ன... நீயும்தான் அன்னிக்கு புனிதவதி டீச்சர் வந்தப்போ முன்னுக்கு போய் எதுவுமே பேசாம வந்த...”


“டே, நீ என்கிட்ட ஐம்பது காசு வாங்கினயே.. மறந்துட்டயா..?”

“அதெப்படி மணி மறப்பேன், அன்னிக்குத்தானே கிளாஸ் முன்னுக்கு நீ வந்து எதுவுமே பேசாம போய் உட்கார்ந்தே... நாங்க கூட சிரிச்சோமே.. நல்லா ஞாபகம் இருக்கே..?”


“இரு இரு எங்க அப்பாகிட்ட சொல்றேன்..?”

“சொல்லு இப்ப யாரு வேணாம்ன்னா.. அப்படியே அன்னிக்கு கிளாஸ்ல எல்லோரு முன்னாடியும் புனிதா டீச்சர்கிட்ட வாங்கி கட்டினியே அதியும் சேர்த்தே சொல்லு போ..”


ஐயோ மர்லீன் இப்படித்தான், இப்படியேத்தான் என்னை படுத்தி எடுத்தியிருப்பார்கள். நல்லவேளை எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது.

“படம் நடிக்க போகனும் டீச்சர்...”

“ஓ... அப்படியா என்ன படம் நடிக்க போகப்போற..?”

“தமிழ்ப்படம் அப்பறம் இங்கிலிஷ் படம்”


மர்லின் உண்மையில் இங்கிலிஷ் படம் என நான் சொன்னது, என் கௌரவத்தைக் காப்பாற்றத்தான். என் அப்பா அடிக்கடி ஆங்கில பட வீடியோக்களை கொண்டுவருவார். முதல் இரண்டு நாளில் அந்த வீடியோ அவரது அலமாரியில் இருக்கும். மூன்றாவது நாளாக டி.வி பக்கத்தில் வைப்பார். அப்போதுதான் அந்த படத்தை நாங்கள் பார்க்க முடியும். சில சமயம் அவர் அலமாரியில் இருந்து அந்த வீடியோ , டி.வி பக்கம் வராமல் கூட போயிருக்கிறது. அப்போது நான் பார்த்த படங்களில் பேசிய ஆங்கிலம் புரியாததால். அந்த படத்தின் காட்சிகளை வைத்து நண்பர்களிடம் நானே ஒரு கதையை உருவாக்கிச் சொல்லுவேன்.


மர்லின் இன்னொன்று சொல்லுவேன், ஆனால் நீ சிரிக்கக் கூடாது. பல முறை ஆங்கிலப்படங்களில் பெயரை கூட நான் எனக்கு தோன்றிய விதத்தில் சொல்லியிருக்கிறேன்.


‘அசிக்கோ மசி’, ‘லிக்கானோ லிக்கிமா’, ‘குசாப்பி’ , ‘ஜிங்கல்லோ’ , இதெல்லாம் நான் பார்த்த படங்களுக்கு நான் வைத்த பெயர். படக்கதையை நான் சொல்லும் போது நண்பர்களில் யாராவது அந்த படத்தை பார்த்ததாக சொன்னாலோ அந்த தலைப்பை திருத்தினாலோ நான் சொல்வது ஒன்றுதான், “நீ பார்த்த படம் இல்ல இது, அந்த படம்னுதான் நானும் நினைச்சேன்.. ஆனா இது வேற படம்..” என சொல்லி சட்டென கதையை மாற்றி எனக்கு தோன்றியதை சொல்லுவேன்.


“நல்லா நடிப்பியா...”


“நடிப்பேன் டீச்சர்..”


“ஓ.. அப்போ நடிச்சி காட்டு பாக்கலாம்... பிள்ளைங்களா.. இப்போ மணி நடிக்கிறதை நாம எல்லாம் பார்த்து ரசிக்கப்போறோம்...”


வகுப்பின் சிரிப்பொலி என் மண்டையில் டங்கென்றது.


“என்ன நடிக்கனும் டீச்சர்...”


“என்ன நடிக்கனுமா... நீதானே சொன்ன நடிக்கனும்னு... நடிக்க சொன்னா... என்ன நடிக்கனும்னு என்னையே கேட்கறயே..”


“ஓக்கே டீச்சர்... நான் நம்பியார் மாதிரி நடிக்கட்டா..”


“ம்..”


இரண்டு கைகளையும் ஒன்றின் மேல் ஒன்றாக பிசைந்தேன்.  ஒரு கண்ணை சுருக்கி, மறுகண்ணின் புருவத்தை உயர்த்தினேன். கீழ் வாயைக் கொஞ்சம் கோணலாக்கினேன். பேசத்தொடங்கினேன்.


“ஹஹஹஹ.... எல்லோரும் எப்படி இருக்கிங்க.. நான் தான் நம்பியாரு பேசறேன்... எம்.ஜி.ஆரு எப்படி இருக்காரு... அவரை கேட்டதா சொல்லுங்க.. ஹஹஹ...”


புனிதவதி டீச்சர் முதற்கொண்டு வகுப்பில் எல்லோருமே கைதட்டினார்கள்.


“நல்லா பேசற மணி... எங்க கத்துகிட்ட..”


“தெரியல டீச்சர்.. சும்மா பேசிப்பார்த்தேன் வந்திருச்சி...”


“பரவாலையே...திறமைசாலிதான் நீ.. மணி, இதை இப்படியே விட்டுடாத.. அப்படியே மத்த மத்த குரலிலும் பேசக் கத்துக்கோ... ஏன்னா எல்லோராலும் இப்படி பல குரலில் பேசிட முடியாது..”


“பல குரலா...?” வகுப்பில் யாரோ ஆண் குரல்.


“ஆமா பிள்ளைங்களா... இப்படி பேசறதுக்கு பெயர்தான் பல குரல், சீக்கிரமே நம்ம மணி நிறைய குரல்ல பேசப்போறாரு...”


மாணவர்கள் சிரித்தனர். இந்த சிரிப்பு எனக்கு சில்லென்று இருந்தது. மர்லின்  அதிலும் ‘மணி பேசப்போறாரு’ என ஆசிரியர் மரியாதையாய் சொன்னது இன்னும் சில்லானது.


புனிதவதி ஆசிரியரின் பாடம் முடிந்தது. முதல் நாள் என்பதால் எங்களை குறித்த அறிமுகத்திலேயே பாடம் முடிந்துவிட்டது. என்ன செய்வது மர்லீன், கடிகாரம் என்னும் சாத்தான்தான், பிடித்த நேரத்தை பிடிங்கிக் கொண்டு பிடிக்காத நேரத்தை வாரி வழங்குமே.
கடிகார சாத்தான்.புரியவில்லையா மரிலீன். விளக்கமாக சொல்கிறேனே.. பாட நேரம் முடிந்ததும், புனிதவதி டீச்சர் அடுத்தாக ஆசிரியருக்கு காத்திருக்கக்கூட முயலவில்லை. அதற்குல் வந்துவிட்டார். ஆங்கில ஆசிரியர் மோகனகாந்த. சிரிக்காதே மரிலீன் உண்மையிலேயே அவர் பெயர் மோகனகாந்த்துதான். மோகனாத் என்ற பெயரையா அடையாளம் தெரியாமல் இருக்க இப்படி மாற்றி சொல்கிறேன். உன்னிடம் உண்மையைப் பேசிக் கொண்டிருக்கும் நேரம் மர்லீன் இது.


“என்ன டீச்சர், பசங்க எல்லாம் என்ன சொல்றாங்க...இந்த ஸ்கூலு ஓக்கே வா.. ”


“ஓக்கே சார், பசங்க எல்லாம் நல்லா பேசறாங்க.. மணி பையன் கூட பல நம்பியார் மாதிரியெல்லாம் பேசினான்...”


“எது, மணி பேசினானா...எங்க கேட்டுப் பாப்போம்...?”


மோகனகாந்த் ஆசிரியரின் பார்வை என் மீது திரும்பியது. இடது கையை காட்டி என்னை அழைத்தார். வலது கையில் புத்தகமும் ரோத்தானும் இருந்தன.  என் இடத்தில் இருந்து வாசலுக்கு அந்த இருவரையும் நோக்கி நடக்கும் போதே எப்படி பேசலாம் என்ன பேசலாம்...  என எனக்கு நானே ஒத்திகைப் பார்த்துக் கொண்டேன்.


“என்ன மணி நம்பியார் மாதிரியெல்லாம் பேசினியாம்.. ”


“உங்களுக்கு நிஜமாவே தெரியாதுங்களா சார்.. நல்ல திறமை சார் பையனுக்கு..” என்றார் புனிதவதி ஆசிரியர்


“ம் நல்ல திறமைதான்.. எங்க மணி சொல்லு...”


“நம்பியார் மாதிரி என்ன சார் சொல்லட்டும்..” என்றேன்..


“நம்பியார் மாதிர் வேணாம் , முதல்ல பிஸ்னஸ்க்கு ஸ்பெலிங் சொல்லு...”


“பி...பி.... ”


“என்ன டா பி, அதுக்கு அப்பறம் என்ன வரும்..”


“பி.. ஸ்..ன...ஸ்..”


“ஓ.. பிஸ்னஸ்க்கு ஸ்பெல்லிங் வந்து பி..ஸ்..ன..ஸ்... ஆ.... ”


வலது கையில் இருந்த ரோத்தானின் எதிர்பகுதி, என் தலையில் டக் டக் டக் என்றது.


“ஏண்டா பிஸ்னஸ்க்கு ஸ்பெலிங்... தெரியல.. நம்பியாரு மாதிரி பேசறயா நீ.. அவனுங்கதான் பணம் வாங்கிட்டு நடிச்சிட்டு போறானுங்க.. அவ்வளவு படம் பைத்தியமா நீ...”


புனிதவதி ஆசிரியரார் இந்த சம்பவத்தை யூகித்திருக்கக்கூட மாட்டார். தலையில் வாங்கிய ஒவ்வொரு அடிக்கும். என்னை விட அவர் முகம் கோணி வருந்தினார்.


“சார்..”  என அவர் ஆரம்பிக்க;


“விடுங்க டீச்சர், இவனுக்கெல்லாம், ரோத்தான்லயே போட்டு உரிச்சாதான் புத்தி வரும்.. படிக்க சொன்னா வலிக்குது நம்பியாரு மாதிரி பேசறானா...”


மேற்கொண்டு எதை பேசினாலும் எனக்குத்தான அடி விழும் என்பதை தாமதமாக புரிந்துக் கொண்ட ஆசிரியை , அடுத்த வகுப்பிற்கு போகவாத சொல்லி புறப்பட்டார். நடந்து போகிறவர் ஒரு முறை திரும்பி என்னை பார்த்தார். அவரது முகத்தில் கரிசனம் தெரிந்தது.


அன்றைய பாட நேரம் மூழுவதும், எல்லா கேள்விகளுக்கும் நானே முதலில் பதில் சொல்ல அழைக்கப்பட்டேன். மர்லின் அழைக்கப்பட்டேன் என்பதா அடிக்கப்பட்டேன் என்பதா தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் நிற்கும் கறும்பலகை அருகில் சென்று அடிவாங்கி மறுபடியும் வந்து என் இடத்தில் உட்கார்ந்துக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் அவரிடம் அடிவாங்கி, திரும்ப வந்து நாற்காலியில் அமரும் போது, கடிகார சாத்தான் நகர்ந்திருக்காமல் என்னை பார்த்து பல்லிளிப்பது போல இருந்தது.வாசனையின் இருப்பிடம்


மறுநாள், வகுப்பாசிரியர் புனிடவதி தன் கையில் மிட்டாய் பொட்டலத்தோடு வந்தார்.


“வணக்கம் ஆசிரியை”


“வணக்கம் உட்காருங்க..”


நேற்று அவரால் நான் வாங்கிய அடிகளுக்கு என்னை சமாதானம் செய்யவா, இத்தனை மிட்டாய்களை வாங்கி வந்திருக்கிறார் என நினைத்தேன்.


“ பசங்களா... நேற்றுதான் உங்க வகுப்புக்கு முதன் முதலா வந்ததால.. ஒன்னும் கொடுக்க முடியல.. இந்தாங்க ஆளுக்கு ஒரு மிட்டாய் எடுத்துக்கோங்க... இதே போல அழகா வர மாணவருக்கு, நல்லா படிக்கற மாணவருக்கு, விடுமுறை எடுக்காம வர மாணவருக்கு , பரிட்சையில் பாஸ் பண்ற மாணவருக்கு, கையெழுத்து அழகா இருக்கற மாணவருக்கு , மிட்டாய் கொடுக்கப் போறேன்.”


ஆமாம் மர்லின் அவர் எங்களுக்கு வகுப்பு ஆசிரியர் என்று சொல்லிவிட்டேன். என்ன பாடமென்று சொன்னேனா.. பாரேன் மரிலின் உன்னிடம் பேசும் ஆர்வத்தில் ஏதேதோ சொல்லி முக்கியமானதை மறந்துவிட்டேன். அவர்தான் எங்களுக்கு தமிழ் மற்றும் விளையாட்டு ஆசிரியர்.

விளையாட்டு திடல்


காலை பொழுதுன் முதல் பாடம். உடற்கல்வி. தெளிவாக கேள் மர்லின் நான் சொன்னது உடற்கல்வி , உடல் கலவி அல்ல. ஆனாலும் நமது மறக்க முடியாத கலவிகளில் ஒன்று இன்னமும் மனதில் இருக்கிறதே.. சொல்லவா....?


தொடரும்...

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்